அத்தியாயம் – 12

வீட்டிற்குள் நுழைந்தவள், “குரு சார்… கண்டிப்பா என் கூடவேதான் வந்திருப்பீங்க. இருக்கீங்களா?”, கைப்பையை சோஃபாவின் மூலையில் போட்டுவிட்டு தானும் அமர்ந்து கொண்டு எதிர்புறம் அவர் வழக்கமாக அமரும் ஒற்றை சோஃபாவை நோக்கினாள்.

“இருக்கேன்மா”, அமைதியான குரலில் பதில் வந்தது.

“ஏன்… ஏன் இப்படி வந்து கலாட்டா செஞ்சீங்க? எங்க இருக்கோம்னு நானும் ஒரு  நிமிஷம் மறந்துட்டு அவர் எதிர்க்கவே பேசிட்டேன். என்னத்த சொல்லி சமாளிக்க?” அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே ரமா சித்தியிடமிருந்து அழைப்பு வந்தது.

கைப்பேசியை எடுத்து தொடர்பில் இணைந்தவள், “சொல்லு சித்தி”, என்றாள்.

“நீதானடி சொல்லணும். இரஞ்சித்தை பார்த்து பேசினியா? பிடிச்சுதா?”, ஆர்வமாக குரல் வர குருபரனும் கேட்கட்டும் என்று , ஸ்பீக்கரில் போட்டாள்.

“பார்த்தேன், ஆனா அதிகம் பேசலை சித்தி. இது தேறாது.”, என்றாள் சுருக்கமாக.

“என்னடி… நான் ஆசஆசையா இருந்தேனே”, சித்தியின் குரல் இறங்கிவிட்டது.

“சித்தி… அவன் வரும்போதே விழுந்தடிச்சு வந்து உட்கார்ந்தான். மெனு எடுக்கறேன்னு ஃபளவர் வேஸ் கீழ தள்ளி உடைச்சான். பாத்ரூம் போயிட்டு வரேன்னு போனான். திரும்ப வந்துட்டு ஏங்க எதாவது பாட்டு கேட்டுச்சா இப்போங்கறான். அதான் ஸ்பீக்கர்ல பாட்டு ஓடுதேன்னா, இல்லைங்க தப்பிச்சு ஓடிடுங்கற மாதிரின்னான். கடுப்பாகி அவனுக்கு பக்கத்துல இருக்க சேரைப் பார்த்து, சார் நீங்களா…இருக்கீங்களான்னு சும்மா கேட்டேன். அதோட ஓடிப்போயிட்டான். இப்ப சொல்லு, வேலைக்காகும்ங்கற?”

“…”

“சித்தி… இருக்கியா?”

“ம்ம்…இருக்கேன். முதல்ல எதோ கொஞ்சம் தடுமாற்றம்னு நினைச்சாலும், இதென்னடி தப்பிச்சு ஓடுன்னு பாட்டு கேட்டுச்சாங்கறான்?”, யோசனையாக சித்தி கேட்க,

“அதேதான். சித்தி… நீ என்னைத் தேடி வந்த வரன் விசாரிக்க போன் பண்ணி பங்கமானது பத்தாதுன்னு, இப்ப அடுத்து வந்த வரனை நான் போய் மாப்பிள்ளை பார்த்து பல்பு வாங்கினேன். இந்த வரன் பார்க்கறதை ஒரு ஆறு மாசம் ஆறப்போடு ப்ளீஸ்.”, வாய்தா வாங்க முயன்றாள்.

‘ஏன் துர்க்கை இப்படி சோதிக்கறா?’, என்று வருந்திய ரமாதேவி, “வரன் பார்க்கறதுன்னு ஆரம்பிச்சா, இப்படி சிலபல சேதாரம் வரத்தான் செய்யும் கண்ணு. அதெல்லாம் பார்த்தா முடியுமா? அடுத்த வாட்டி, மாப்பிள்ளைகிட்டவும் நானே ஒரு தரம் பேசிட்டு அப்பறமா நீ பார்க்கறதைப் பத்தி யோசிக்கலாம். சரியா?”

ரமாவின் பதிலில் ஜெயந்தி ஒரு பக்கம் நெற்றியை பிடித்துக் கொண்டால், குருபரனோ நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டார். ‘இந்தம்மாகிட்டல்லாம் பேச வேணாம்டி, ஜெயந்திட்டயே பேசியே சம்மதிக்க வைக்கலாம்னு தமையாகிட்ட தலைப்பாடா அடிச்சிகிட்டேன், கேட்டாளா? ஒரேதா பிடிவாதம் பிடிச்சா. இப்ப எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு பாரு?’

ரமாதேவியிடம் ஒரு வழியாக விடைபெற்று போனை வைத்தவள், “என்ன குரு சார்? அடுத்த மாப்பிள்ளையை என்ன செய்யப்போறீங்க? அந்த இரஞ்சித் அவன் பைத்தியமா இல்லை நான் பைத்தியமான்னு இன்னேரம் யோசிச்சு மண்டை காஞ்சிகிட்டு இருப்பான். நீங்க அடிச்ச ஸ்டன்ட்ல அடுத்து தனியா ஒரு பொண்ணை பார்க்க போவானான்னே தெரியலை…”

அவள் கோவத்தில் பேசினாலும் நடந்ததை நினைத்து புன்முறுவல் வந்து ஒட்டிக்கொண்டது.

குருபரனுமே அவள் பேச்சில் சிரித்துவிட்டார்.

“சிரிக்காதீங்க சார். என்ன சொன்னீங்க அவங்கிட்ட? பாத்ரூம்லர்ந்து வரும்போதே கொஞ்சம் வெளிறிப்போய்தான் வந்தான்.”, லேசாய் கடிந்தாள்.

அவன் காதருகில் பாடியதையும் மிரட்டியதையும் சொல்ல, இரஞ்சித் நிலைமையை நினைத்து அவளையும் மீறி சிரித்துவிட்டாள்.

“ஏன் குரு சார் இப்படி பண்ணீங்க? பாவமில்லையா அவன்?”

“ஜெயந்திமா? இரஞ்சித் பத்தி நீ ஏன் எனக்கு முன்னாடியே சொல்லலை?”, அவர் பாயிண்ட்டை பிடிக்கவும், சற்று சங்கடமாகப் பார்த்தவள்,

“தெரிஞ்சா உடனே உங்க தமையா பிள்ளையை கட்டிக்கச் சொல்லி கேட்பீங்க”, உண்மையை ஒத்துக்கொண்டாள்.

“யாரோ தெரியாதவனை கன்சிடர் பண்ணுவ, ஆனா தமையா மகன் வேணாமா, பார்க்கக்கூட மாட்டியாமா?”, வருத்தமாய் வந்தது குருபரனின் குரல்.

“ம்ப்ச்… அப்படியில்லை சார். யார் எவருன்னே தெரியாம, என்னன்னு நான் அறிமுகம் செய்துக்கமுடியும்? அப்படியும் என் சித்தி ஏஜென்சில அவங்க போன் நம்பர் வாங்கி பேசினாங்க”, என்றவள் மாட்டு கதையைக் கூற,

“ஹஹாஹா…அடப் பாவமே”, என்று சிரித்தார். ‘சஞ்சய் அவ நம்பர் கான்சல் பண்ணிருப்பான்னு யோசிக்காம போயிட்டமே’, என்று தலையில் தட்டிக்கொண்டார்.

“சரி… அதைவிடு. சஞ்சய் எப்படி? அவனை கல்யாணம் பண்ற எண்ணம் இருக்கா?”, நேரடியாகக் கேட்டுவிட்டார்.

ஒரு நொடி அவர் ட்ராக் மாறியதில் தடுமாறியவள், “ச…சஞ்சய் நல்லவர்தான் ஆனா என் பாஸ் குரு சார். ஏற்கனவே பாஸ் மேல க்ரஷ் வந்து  நான் அசிங்கப்பட்டது போறாதா? மறுபடியுமா?”

“சைய்…. நிரஞ்சனைப்போய் சஞ்சய் கூட கம்பேர் பண்றியா?”

“இல்லல்ல… அவர் தீக்ஷனாவை..”

“அதுதான் இல்லைன்னு சொல்லிட்டானே. உங்கிட்டவும் இன்னிக்கு சொன்னானே…எதுக்குன்னு நினைக்கிற?”

“அங்கதான் இருந்தீங்களா?”

“வேற எப்படி நீ இரஞ்சித்தை எங்க எப்ப பார்க்கப்போறன்னு நான் தெரிஞ்சிக்கறதாம்?” என்ற அவர் பதிலில் உதட்டை சுழித்தாள்.

“அதுதான் விளக்கம் சொன்னாரே. நீங்க சொன்ன மாதிரிதான், ஒரு வேளை ஸ்ரீதர் சர் பார்ட்னர்ஷிப் பிரியணும்னா எவ்வளவு தரணும், தர முடியுமான்னு ரிப்போர்ட் கேட்டார்.”

“சரி. அதை நீ மாப்பிள்ளை பார்க்கப் போறதுக்கு முன்னாடி கூப்பிட்டு ஏன் சொல்லணும். அவன் ஸ்ரீதர்கிட்ட வேணாம்னு சொல்லி நாலஞ்சு நாள் ஆகுதே, இப்ப என்ன அவசரம்?”

குருபரனின் கேள்வியில் புருவம் சுருக்கியவள், தோளைக் குலுக்கி, “தெரியலையே? இந்த டெண்டர் வேலையில பிசியா இருக்கவும், அது முடியட்டும்னு காத்திருந்தாரோ என்னவோ?”

‘ஐயோ…ஐயோ… இப்படி தத்தியா இருந்தா எப்படிமா?’ , என்று நொந்துபோனார். ‘இவ ஒரு பக்கம், தமையா ஒரு பக்கம், பத்தாததுக்கு அந்த ரமாதேவி வேற… இவங்க மத்தியில மாட்டிட்டு முழிக்கறதுக்கு பதிலா பேசாம எதாவது ஒரு புளியமரமா பார்த்து தலை கீழா தொங்கலாம்’, என்று தீவிரமாக சிந்தனையில் இருந்தார்.

“என்ன சார்… பதிலையே காணோம்?”, ஜெயந்தியின் கேள்வியில் சிந்தனை கலைந்தவர்,

“ம்ம்ம்…. எதாவது ஒரு புளியமரத்துல போய் தலை கீழா தொங்கி மிச்சம் இருக்கற காலத்தை கிருஷ்ணா இராமான்னு ஓட்டலாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்”, காரமாக வந்தது பதில்.

ஆச்சரியமாக விழிகளை உயர்த்தியவள், “உங்க தமையா கோச்சிப்பாங்களே சார். இல்லை அவங்களையும் கூட்டிட்டு போறீங்களா? ஏன் தலை கீழாத்தான் தொங்கணுமா? நேரா எதாவது கிளையில் உட்காரக்கூடாதா சர்?”

“அட நிறுத்துமா…” சலித்துக்கொண்டார். “சஞ்சய் மேட்டருக்கு வருவோம். அவனை பிடிக்குமா பிடிக்காதா. அதை சொல்லு.”

“அட என்ன சார்? நல்ல மனுஷர். இயல்பா பேசறார் பழகறார். தப்பான பேச்சோ, பார்வையோ கிடையாது. செம்ம டாலன்ட். யாருக்குத்தான் பிடிக்காது?”

“சரி… தமையா பிள்ளைதான் சஞ்சய்ன்னா அவனை கல்யாணம் செய்துக்க ஒத்துக்குவியா?”

சட்டென்று குருபரன் விஷயத்தைப் போட்டு உடைத்ததில் ஸ்தம்பித்துப் பார்த்தாள் ஜெயந்தி.

“என்ன…என்ன சொன்னீங்க?”, என்று கேட்டாலுமே, சஞ்சய் அவன் பெற்றோர் தவறிவிட்டனர், உறவுகளை தள்ளி வைத்தேன் என்று கூறியதெல்லாம், குருபரன் முன்பு தமையா மகனைப் பற்றி சொன்னதுடன் ஒத்துப்போனது இப்போது புரிந்தது.

“நான் சொன்ன வரனும், உன் பாஸும் ஒரே ஆளுன்னு சொன்னேன்.”

“ஏன் சார் என்னை ஏமாத்தினீங்க?”, அவள் குரலின் பேதம் உணர்ந்தவர்,

“என்னம்மா சொல்ற?”

“கல்யாணம் வேணாம்னு சொல்லவும், வால்ட்ல வேலைக்கு அப்ளை பண்ணச் சொல்லி, என் மேல அக்கறை இருக்கறதா காமிக்க நிரஞ்சனை பழிவாங்கி… எல்லாமே உங்க எண்ணம் நிறைவேற போட்ட பிளானா? நான் என்ன பகடைக்காயா?”, கொஞ்சம் கொஞ்சமாய் ஜெயந்தியின் குரலில் கோபம் ஏறியது.

“ஜெயந்தி!”, அதட்டலாய் வந்தது குருபரனின் குரல்.

“என்ன? என்ன ஜெயந்தி…”, என்றவள் நெற்றியை ஓங்கி தட்டிக்கொண்டு…”சே எவ்வளவு தத்தியா இருந்திருக்கேன்? நீங்க சொன்னதை அப்படியே நம்பினேன். எத்தனைவாட்டி கேட்டிருப்பேன் தமையா பிள்ளைக்கு வேற வரன் பார்த்தீங்களான்னு? அப்ப கூட எங்கிட்ட நீங்க சொல்லலைன்னா, வேணும்னுதானே மறைச்சீங்க?”

“நீ இதுக்காகவே முரண்டு பிடிப்பன்னுதான் சொல்லலை. வேலைக்கு சேர்ந்தப்பறமும், உனக்கா அவன் மேல பிடித்தம் வரட்டுமேன்னு நினைச்சுதான் எதுவும் சொல்லலை. இப்ப நீ வேற வரன் பார்க்கப் போகவும்தான் சொல்லிட்டேன்.”, விளக்கமளித்தவர் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவரும் எரிச்சலோடு பேசுவதை உணர்ந்து சற்றே நிதானித்தாள்.

ஆனாலும் வருத்தம் மேலோங்கியது. “நீங்களும் அந்த நிரஞ்சன் மாதிரி உங்க தேவைக்கு என்னை உபயோகப்படுத்திக்கத்தானே சார் பார்த்தீங்க? மறுபடியும் நான் தான்  ஏமாளி மாதிரி….”

“அர்த்தமில்லாம யோசிக்காதே!”, இடைவெட்டினார் குருபரன்.  “நிரஞ்சனை அவமானப்படுத்தினதோ, வால்ட்ல சேரச் சொன்னதோ, உனக்காகத்தான். ஒரு வேளை சஞ்சய்க்கு உன்னையும், உனக்கு அவனையும் பிடிச்சா, அதுவும் நல்லதுன்னு யோசிச்சேன ஓழிய, உன்னை வெச்சு எந்த கேமும் நான் ஆடலை. சஞ்சய்க்கு உன்னைப் பத்தி எண்ணமே இல்லாம இருந்தா, இல்லை வேற யாரையும், அட தீக்ஷனாவைத்தான் பிடிச்சிருந்தா என்ன செஞ்சிருக்க முடியும் என்னால?”

“இப்பவும் சஞ்சய்க்கு என்னை பிடிக்கும்னு இல்லையே? ஐ மீன், கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு பிடிக்குமான்னு தெரியாதே. நீங்க என்ன சொன்னாலும் நானா போய் கேட்கவும் மாட்டேன்.”, தர்க்கம் புரிபவளிடம் இதற்கு மேல் பேச முடியாது என்றெண்ணி,

“நீ அதெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம். இரஞ்சித்துக்கு நோ சொல்லிட்டன்னு அவனுக்கு தெரியப்படுத்து. அது போதும். உன்னை பிடிச்சிருந்தா அவனே வந்து சொல்லட்டும். ஆனா எப்படியாவது உன் சித்தியை நீ கேட்ட மாதிரி ஒரு ஆறு மாசம் தயவு செஞ்சு சும்மா இருக்கச் சொல்லு. நீ மாப்பிள்ளை பார்க்கப் போறன்னு தெரிஞ்சு, தமையா என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டா. அவளுக்குள்ள இப்படி ஒரு இராட்சசி இருக்கான்னு இன்னிக்குத்தன் தெரிஞ்சுது”, குருபரன் பேசிக்கொண்டே போக, அவர் சொன்னதில் பக்கென்று சிரித்துவிட்டாள் ஜெயந்தி.