“உங்க சர்ப்பரைஸ் புரியுது”, அவள் முழிப்பதை தப்பர்த்தம் செய்து கொண்டவன், “ஆனாலும், இப்ப ஸ்ரீதர் அங்கிளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியலை. இன் கேஸ் அவர் பார்ட்னர்ஷிப் விலகறதா சொன்னா, என்ன பே பண்ண வேண்டியிருக்கும். நம்ம ரிசோர்ஸ் என்ன, இருக்கற ப்ராஜெக்ட்ஸ்ல என்ன பாதிப்பு இருக்கும்னு அசெஸ் பண்ணி ரெடியா இருக்கணும் ஜெயந்தி.”
அவன் கூறியதைக் கேட்டு தெளிந்தவள், “ஓஹ்….ஓகே சஞ்சய். நாளைக்கு உங்க அக்ரீமென்ட் காப்பி படிச்சிட்டு என்ன டெர்ம்ஸ்னு பார்த்துட்டு, ரெடி பண்றேன். ஆனா உங்க டெசிஷன்…தீக்ஷனாவோட பேசினப்பறம்…”, இழுத்தாள்.
“அவளோட பேசினா மாறும்னு நினைக்கறீங்களா? நான் எடுக்கறது சரியான முடிவா இல்லையான்னு நீங்க சொல்லுங்களேன்?“, அவள் எண்ணம் என்ன என்று புரிந்து கொள்ளக் கேட்டான்.
“அது.. நான் எப்படி சொல்றது சஞ்சய். இது உங்க பர்சனல்…”
உதடு கடித்தவள், “ஆன் பேப்பர் இரண்டு பேருக்கும்மே நல்ல ஜோடிப் பொருத்தம், கம்பனியும் அவங்க மூலமா உங்களுக்கு வரும்…”, அவள் கூறுவதைக் கேட்டு வந்த கோவத்தை முயன்று கட்டுப்படுத்தினான்.
“சோ…காசுக்காக என்னை வித்திடலாமா?”
“அச்சோ…அப்படி சொல்லலை சஞ்சய். குணத்துல அவங்க உங்களுக்குக் கொஞ்சம் கூட செட் ஆகமாட்டாங்க. ஆனா கல்யாணம்னு வரும்போது உங்க இரண்டு பேருக்கும் உள்ள எதிர்பார்ப்பு, அன்பு இதெல்லாம் பார்த்துதான் முடிவு செய்யணும். இதுல மூணாவதா யாரும் கருத்து கேட்கவும் கூடாது, சொல்லவும் கூடாது.”, வேகமாக சமாதானப் படுத்தியவளைக் கண்டு அவனும் சற்று அமைதியானான்.
“ஹ்ம்ம்… அவகிட்ட பேசி விலகிட்டுதான் என் வாழ்க்கை பத்தி மேல டிசைட் பண்ணனும் ஜெயந்தி.”, தன் முடிவில் மாற்றமில்லை என்று உணர்த்தினான்.
தலையை சரி என்பதாக ஆட்டியவள், “நீங்க கேட்ட டீட்டெய்ல்ஸ் நாளைக்கு ரெடி பண்ணிடறேன் சஞ்சய்”, என்று சொல்லவும்,
“சரி… நீங்க சீக்கிரம் போகணும் இல்லையா? கிளம்புங்க.”, என்று விடை கொடுத்தான்.
அந்த உயர்தர மாலில் இருந்த காஃபி ஷாப்பும் நேர்த்தியான உட்புற அலங்காரங்களுடன் பின் மாலை வேளையில் மிதமான ஆட்கள் நிறைந்திருக்க லேசான பேச்சும் சிரிப்புமாக இருந்தது. ஜெயந்தி உள்ளே நுழைந்து காலியாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்தாள். கடிகாரம் ஐந்தைத் தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் காட்டியது. சஞ்சய் சொன்னதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தாள். தன்னால்தான் ஸ்ரீதர் சர் கேட்டாரா என்பதை அவனிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல், அவன் கேட்ட விவரங்களைத் தருவதாக கூறிவிட்டு ஓடி வந்திருந்துதாள். அவனாகக் கூற மாட்டான் என்றும் தோன்றியது.
ஐந்து மணிக்கு சற்றே பரபரப்பாக நெடியவன் ஒருவன் உள்ளே வர நிமிர்ந்து பார்த்தாள். அவளைக் கண்டு கொண்டவன், ஒரு அறிமுக புன்னகையுடன் அவளை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து வர, லேசாக தடுக்கி, இடக்கையிலிருந்த போனை தவறவிட்டு, தடுமாறி அவள் அமர்ந்திருந்த மேசையைப் பற்றி ஒரு வழியாக நிதானித்து நின்றான்.
“மெதுவா..மெதுவா… அவசரம் இல்லை. உடகாருங்க”, என்று ஜெயந்தி கூற, சற்றே அசட்டு சிரிப்புடன், “சாரி…உங்களைப் பார்த்துட்டே வந்ததுல எதுவோ தடுக்கிடுச்சு”, என்று கீழே விழுந்த போனை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
என்ன தடுக்கியது என்று திரும்பிப் பார்த்தவனுக்கு, காலியாக இருந்த டைல்ஸ் தரை தெரியவும் புருவம் சுருங்கியது. காலில் எதோ தடுக்கியது போலத்தான் இருந்தது. தோளை குலுக்கியவன், “ரொம்ப நேரமா காத்துட்டிருக்கீங்களா ஜெயந்தி?” என்று சம்பிரதாயமாக விசாரித்தான்.
இல்லை என்று அவள் பதிலளிக்க, மேசையிலிருந்த மெனுவில் ஒன்றை அவள் புறம் தள்ளியவன் அடுத்ததை எடுத்து திறந்தபடியே, “முதல்ல ஆர்டர்… ஓஹ்!”
மேசையின் ஒரு புறம் இருந்த பீங்கான் பூஜாடி சிலீரென்ற சத்தத்துடன் விழுந்து உடைந்தது. ஒரு நொடி அமைதியான அந்த காபி ஷாப்பில் இருந்தவர்களின் பார்வை அவர்கள் மேசையை வட்டமடித்தது.
“ஷிட்…சாரி”, என்று மீண்டும் ரஞ்சித் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு வெயிட்டர் ஓடி வந்து உடைந்த சில்லுகளை அகற்ற குனிந்தான்.
தலையைக் கோதிய ரஞ்சித் தன் படபடப்பை அடக்க, “ஒரு டூ மினிட்ஸ் இருங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்”, என்று இந்த முறை கவனமாக நடந்து வெளியேறினான்.
“ஏன் டா இப்படி சொதப்பற? அவ என்ன நினைப்பா?”, என்று முனகிக்கொண்டே ஆண்கள் என்று போட்டிருந்த அந்த ஓய்வறையை திறக்க, “ஓடிடுடா கைப்புள்ள, தப்பிச்சு ஓடிடு”, என்று அருகே ஒரு குரல் கேட்டது.
திடுக்கிட்டவன் சுற்று முற்றும் பார்க்க யாரும் இல்லை. பாதி மூடியிருந்த இரண்டு ஸ்டால்களிலும் ஆட்கள் யாருமில்லை என்று புரிந்தது. எதிர்புறம் இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து திருதிருத்தவன், ‘என்ன நடக்குது?’ என்று தலையை உலுக்கினான்.
“டேய்… ஒரு தடவை சொன்னாப் புரியாது? ஓடிடு”, சற்றே மிரட்டும் குரல் மீண்டும் கேட்க, ஓய்வறையை விட்டு வெளியே ஓடிவந்தான். கையில் போன் இல்லாததை உணர்ந்து, தலையை தட்டிக்கொண்டவன், “ரிலாக்ஸ்டா. எதோ பிரம்மை”, என்று சமாளித்தவாறு மீண்டும் ஜெயந்தியை சந்திக்க உள்ளே சென்றான்.
பொறுமையாக அமர்ந்திருந்தவளைப் பார்த்து புன்னகைத்தவன், தோளை குலுக்கி, “சாரிங்க…என்னவோ டிஸ்டர்பன்ஸ். ஆர்டர் குடுத்திட்டீங்களா?”, என்று சமாளித்துக் கேட்டான்.
“இல்லை. உங்களுக்காதத்தான் வெயிட் பண்ணேன்”, என்று சொல்ல, மீண்டும் ரஞ்சித்தின் காதருகே, “உயிரே…உயிரே தப்பிச்சு ஓடிரு” என்று கேவலமாகப் பாடியது. விலுக்கென்று நிமிர்ந்தவன் முகத்தில் லேசாய் வியர்வை பூத்தது.
“ம்ம்.. அதுதான் ஸ்பீக்கர்ல பாடிகிட்டு இருக்கே. அதுதானே?”, என்றவளைப் பார்த்து முழித்தான் ரஞ்சித். மெனுவில் கவனம் வைத்திருந்தவள் காதுக்கு பாட்டு எட்டவில்லை.
“இ.இல்ல…அது யாரோ தப்பிச்சு ஓடிருன்னு பாடின மாதிரி இருந்துச்சு…உங்களுக்குக் கேட்டுச்சா?”, என்று வாயைத் துடைத்தான் இரஞ்சித்.
“குரு சார்… உங்க வேலையா?“, என்று அவன் அருகிலிருந்த நாற்காலியைப் பார்த்து ஜெயந்தி கேட்க அதிர்ந்து அவன் அருகில் இருந்த காலி இருக்கையையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.
அமைதியாக இருக்கவும், “குரு சார்…இருக்கீங்களா?”, என்று கேட்டு இரஞ்சித்தைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் செய்தது புரிந்தது.
“அச்சோ…”, என்று நெற்றியில் கைவைத்தவள், “அது இரஞ்சித்…”, என்று கூற வர,
“யாரு…யார்கிட்ட பேசறீங்க?” என்றவனின் கண்கள் பயந்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.
என்ன சொல்வாள்? என்ன சொல்ல முடியும்? “இல்ல…அது… யாருமில்லை. சும்மா”, என்று புன்னகைக்க முயன்றாள்.