அத்தியாயம் 11

வேலை மும்மரத்தில் இருந்தவளை, வாட்சப் குறுஞ்செய்தி வந்த ஒலி கலைத்தது. வழக்கமாக சைலன்ட்டில் போடுவாள், இன்று மறந்துவிட்டாள் போலும். எடுத்துப் பார்க்கையில்,

“ஹை ஜெயந்தி, ஐ அம் ரஞ்சித்” என்ற அறிமுக செய்தி இருந்தது. புருவம் சுருக்கியவள், ‘யாருடா என்  நம்பர் தெரிஞ்சு மெசேஜ் பண்றது?’, என்று யோசிக்க, “அம்மா உங்க நம்பர் தந்தாங்க. காஃபிக்கு பார்க்க முடியுமா?” என்று அடுத்து வர,  ஓஹ்… ரமா சித்தி சொன்ன வரன் பார்ட்டி என்று விளங்கியது.

ஹலோ என்று பதில் அனுப்பியவள், எங்கே எப்போது என்று மேலும் சில நிமிடம் சாட் செய்ய,

“பாருடா, அதிசயத்திலும் அதிசயம். ஆஃபீஸ் டைம்ல மெசேஜ் பண்ணிட்டு இருக்காங்கப்பா ஜெயாக்கா”, ரஞ்சனி கலாய்க்க, புன்னகையுடன் நிமிர்ந்தாள், “அடடா, நீயுமா ரஞ்சனி? “

“மஞ்சு உனக்கு சின்சியர் சிகாமணின்னு பேரு வெச்சது சரிங்கற மாதிரிதான் நீயும் வேலை பார்க்கற? போகுது, அப்படி என்ன மெசேஜ், யார்கிட்டருந்து?”, ஆர்வமாகக் கேட்டாள்.

“நீ நினைக்கற மாதிரி எதுவுமில்லை. சித்தி ஒரு வரன் வந்திருக்கு பார்த்து பேசுன்னு சொல்லியிருந்தாங்க. அவர்தான் காஃபிக்கு பார்க்கலாமான்னு கேட்டு அனுப்பவும் மெசேஜ் பண்ணேன்.”

ஜெயந்தியின் விளக்கம் கேட்டு , “ஹேய்… யாரு வரன்? போட்டோ எதாவது இருக்கா? பிடிச்சிருக்கா?” ரஞ்சனி கேள்விகளாய் அடுக்க, கைகாட்டி நிறுத்தினாள்.

“ரொம்ப எக்சைட் ஆகாதே. ரமா சித்திக்காகத்தான் பார்க்கறதுக்கு சரின்னு சொன்னேன். பிடிக்கலைன்னுதான் சொல்லப்போறேன்.”

ஆனாலும் ரஞ்சனி நம்பவில்லை. “அந்த மௌன ராகம் படத்துல வர மாதிரி, நோ சொல்ல போயிட்டு அந்த மனுஷன் பேசறதுல இம்ப்ரெஸ் ஆகி யெஸ் சொல்லிட்டு வரப்போற நீ. பார்த்துகிட்டே இரு. சரி எப்ப மீட் பண்ற?”

 “நாளைக்கு சாயந்திரம். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். மோகன்கிட்ட சொல்லணும்.”

மறு நாள் காலை மோகன் எதோ கேட்க அவள் மேசைக்கு வரவும், “மோகன், இன்னிக்கு டூ அவர்ஸ் பெர்மிஷன் வேணும்.  ஒரு நாலரை மணிக்கு போக வேண்டியிருக்கு. ஓகேவா?”

வேலைக்கு சேர்ந்தது முதல் எப்போதுமே கேட்டிராதவள், இன்று கேட்கவும், “ஷூர் ஜெயந்தி. இன்னிக்கு  முழுசும் நான் ஆஃபீஸ்லதான். நீங்க போயிக்கங்க”, என்று சம்மதம் கூறினான்.

அருகிலிருந்த ரஞ்சனி, “ஏன்னு கேளுங்க மோகன். மேடம் ஒரு முக்கியமான மீட்டிங்க்கு.. சேச்சே…டேட்டிங்க்கு போறாங்க”, என்று எடுத்துக் கொடுக்கவும், ஆச்சரியமாகப் பார்த்தான்.

சற்றே சங்கடமாக ரஞ்சனியைப் பார்த்து முறைத்த ஜெயந்தி, “அது… சித்தி ஒரு வரன் வந்திருக்குன்னு பார்த்து பேசச் சொன்னாங்க. ஒரு காஃபி மீட்.” என்று மோகனிடம் விளக்கினாள். அலுவலகத்திற்கு வந்திருந்த குருபரனுக்கும் அப்போதுதான் இந்தச் செய்தி தெரிய வர, அவருக்குமே அதிர்ச்சி.

ரஞ்சனி எதோ கலாய்க்கிறாள் என்று நினைத்தவன், ஜெயந்தியின் பதிலைக் கேட்டு திகைத்து, “யூ மீன் கல்யாணத்துக்கா..?”, என்று கேட்டு வைக்க,

இதுக்கு இவர் ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகிறார் என்று யோசனையுடன் ஜெயந்தி பார்க்க, அதற்குள் ரஞ்சனியே,

“இதென்ன கேள்வி? வரன் கல்யாணத்துக்குத்தான மோகன் பார்ப்பாங்க?”, ரஞ்சனி பதிலில் தன்னை சமாளித்துக்கொண்டவன்,

“ஓ எல்லாம் ஓகே ஆகிடுச்சா?”, என்று ஜெயந்தியைக் கேட்டான்.

“இல்ல… இப்பதான் முதல் தரம் மீட் பண்ணப் போறோம். சித்தி கம்பெல்ஷன்”, என்ற ஜெயந்தியின் பதிலில்,

“ஹ்ம்ம்… எதுவும் அவசரப்பட்டு முடிவு சொல்லிடாதீங்க ஜெயந்தி.”,  மோகன் இப்படி சொல்லவும், அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் ஜெயந்தி.

“ஏன் ?”

“அது…ம்ம்… ஒரு மீட்டிங்ல என்ன தெரிஞ்சிடும்? யார் என்ன விவரம்னு சொன்னீங்கன்னா, ஒரு பாக்ரவுண்ட் செக் பண்ணிடலாம். இப்பல்லாம் என்னென்னவோ ஃப்ராடு நடக்குது. அதுக்கு சொன்னேன்”, சமாளிப்பாகக் கூறியவன், ஜெயந்தி தலையாட்டவும்,  அங்கிருந்து நடையைக் கட்டினான்.

தன் அறைக்குச் சென்ற மோகன், உடனே சஞ்சயை அழைத்தான்.

“டேய்..எங்க இருக்க?”

“மீட்டிங் முடிஞ்சுது. இப்பதான் கிளம்பினேன் டா. என்ன?” சஞ்சய் பதிலில்,

“மச்சி… ஜெயந்திகிட்ட உன் விருப்பம் பத்தி பேசினியாடா? ஒரு ஹின்ட்டாவது குடுத்தியா?”

திடீரென்று நண்பன் இப்படிக் கேட்ட, “இன்னும் இல்லைடா. தீக்ஷனாகிட்ட பேசி முடிச்சிட்டு அப்பறமா ஜெயந்திகிட்ட பேசலாம்னு இருக்கேன். ஏன் திடீர்னு கேட்கற?”

பல்லைக் கடித்த மோகன், “ம்ப்ச்… இதை எதுக்குடா கம்பைன் பண்ற? உனக்கு ஜெயந்தியை பிடிச்சிருக்குன்னா, அதை அவளுக்கு தெரியப்படுத்தணுமில்ல? அதுக்கு ஏன் வெயிட் பண்ற?”

மோகனின் அவசரம் புரியவில்லை சஞ்சய்க்கு. “இப்ப அதுக்கு என்னடா அவசரம்?”

“ம்ம்… ஜெயந்தி இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் போகணும்னு பர்மிஷன் கேட்டா. எதுக்குன்னு கேட்டதுக்கு, அவங்க சித்தி மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம். அவனைப் பார்த்து பேசப் போறாளாம். நீ மீன மேஷம் பார்த்துகிட்டு இரு. அவ இன்விட்டேஷன் கொண்டு வந்து நீட்டுவா!” எரிந்து விழுந்தான்.

வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டான் சஞ்சய். “டேய்… என்ன சொல்ற?”

“டென்ஷன் ஆகாத. இதுதான் முதல் மீட்டிங்காம். சித்தி கம்பல்ஷன்னு சொன்னா. உடனே சம்மதம் சொல்லிடாதீங்க, யாரு என்னன்னு பாக்கிரவுண்ட் செக் பண்ணுவோம்னு ஒரு மாதிரி சொல்லி வெச்சிருக்கேன்.”, சஞ்சயின் அதிர்வில் மோகன் அவனை சற்று சமாதானப் படுத்தினான்.

ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் இவர்கள் பேசுவதை மோகனுடன் அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த குருபரன், “ஐயைய்யோ… தமையாக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடுமே”, என்று பயப்பட, மகனுடனே காரில் இருந்த தமையாவிற்கும் ப்ளூ டூத் புண்ணியத்தில் கேட்டுவிட்டது.

குருபரன் எங்கிருக்கிறார், அவரை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது என்று தெரியாமல் ஒரு புறம் தவிப்பும், மறுபுறம் கோவமுமாக நிலைகொள்ளாமலிருந்தார்.

“சரி…நான் ஆஃபீஸ் வரேண்டா”, சஞ்சய் காரை வேகமாக செலுத்தினான். எண்ணங்கள் அதற்கும் மேல் வேகமாக சுழன்றது. ‘சித்தி சொன்னாங்கன்னு போய் பார்க்கறான்னா, அப்ப என் மேல அவளுக்கு எண்ணமே இல்லையா? அவளை நான் சலனப்படுத்தவே இல்லையா?, என்று யோசனை ஓடியது.

தொடர்பில் இருந்த மோகனோ, “டேய்… தீக்ஷனாவை நீ வேணாம்னு சொன்னது அவளுக்குத் தெரியாதேடா. உன் இன்ட்ரெஸ்ட்டும் தெரியாது. ஜெயந்தி பொறுத்தவரை நீ தீக்ஷனாவை கல்யாணம் செய்துப்பன்னுதான ஆஃபீஸ்ல எல்லாரையும் மாதிரி நினைச்சிருப்பா?”

“ம்ம்… பாசிபிள். அவ கிளம்பறதுக்கு முன்னாடி, அதை மட்டுமாவது சொல்லிடணும். நீ வைடா.  நேர பார்ப்போம்.”

குருபரனுக்கோ, “ஜெயந்திக்கு  நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே. இது தெரிஞ்சும் அந்தப் பொண்ணு  வரன் பார்க்க ஓகே சொல்லியிருக்கு. அதையும் எங்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கு. அப்ப சஞ்சயை பிடிக்கலையா?”, நினைத்து கிலி பிடித்தது.

அரை மணி நேரத்தில் கண்ணீரில் கரைந்தபடியே மகனோடு அலுவலகம் வந்த தமையா, மோகன் அறையில் அவன் நுழையவும், குருபரனைக் கண்டு அவரிடம் ஓடியவர், “என்னய்யா செஞ்சு வெச்சிருக்க? என் புள்ளையை விட்டுட்டு அந்தப் பொம்பளை எப்படி வேற வரன் பார்க்க ஆரம்பிச்சிருக்கு?”, என்று அடிக்கவே தொடங்கிவிட்டார்.

“ஏய்…ஏய்… இருமா…எனக்கும் இவ மோகன்கிட்ட சொல்ற வரைக்கும் தெரியாது.“, தமையாவை அடக்க முயன்றார்.

திமிறிக்கொண்டே தமயந்தி, “என்னவாச்சம் செய்து இதை கலைச்சு விடுங்க. என் புள்ளை வருத்தப்படறான்”, என்று எகிற, “சரி சரி…அமைதியா இரு. என்னன்னு முதல்ல விவரம் கேட்போம்”, என்று விலகினார்.

இந்த அக்கப்போர் எதுவும் தெரியாத நண்பர்கள் இருவரும் அவர்கள் பேச்சில் மூழ்கியிருந்தனர்.

“எப்பவும் போலதான் ட்ரெஸ் பண்ணிருக்கா. வேலை பார்த்துகிட்டு இருக்கா. பெருசா எந்த ஆர்வமும் தெரியலையே?”, சஞ்சய் சொல்லவும், ஒரு சிரிப்புடன் அவனைப் பார்த்த மோகன்,

“உள்ள வரதுக்கான பத்து செகன்ட்ல இத்தனையும் நோட் பண்ணியா? ரொம்பவே முத்திப்போச்சு போல?”, கலாய்த்து சஞ்சயின் முறைப்பை வாங்கிக்கொண்டான்.

“மச்சி பேசாம அவங்க சித்திகிட்ட உன் ப்ரோஃபைல் குடுத்து உன்னையும் ஒரு வரனா கன்சிடர் பண்ண சொல்லலாமா?”, மோகனின் பேச்சில்,

“டேய்… சும்மா பேசி வெறுப்பேத்தாத. எப்ப போகணும்னு சொன்னா?”

“நாலரைக்கு கிளம்பறா.”

மணி பார்த்தவன், இன்னும் ஒரு மணி நேரம் இருப்பது தெரிந்து, “சரி, நான் ஸ்ரீதர் அங்கிள்கிட்ட பேசினதை அவகிட்ட சொல்லிடறேன். என்ன ரியாக்ஷன் பார்க்கலாம்.”

“உஷ்..”, என்று காற்றை வெளியேற்றியவன், தன் அறைக்குத் திரும்பும் முன் ஜெயந்தியிடன் சென்று, “ஒரு நிமிஷம் காபினுக்கு வாங்க ஜெயந்தி”, என்று கூறிவிட்டு சென்றான்.

உள்ளே வந்தவளை அமர வைக்க, இவர்கள் பேசப் போவதை இரண்டு ஆத்மாக்கள் ஆவலுடன் கேட்கக் காத்திருந்தன.

“சொல்லுங்க சஞ்சய்”, என்று கேட்டவளை ஊடுருவிப் பார்த்தான், “சீக்கிரம் கிளம்பணும். கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்?”

சற்றே புருவம் தூக்கி வியப்பைக் காட்டியவள், “மோகன் சொன்னாரா?” என்று மறு கேள்வி கேட்டாள்.

“ம்ம்… இன்டர்வ்யூல கங்கா மாமாகிட்ட இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு சொன்னீங்க?”

“ம்ம்.. சித்தி கல்யாணத்துக்கு புஷ் பண்றாங்கன்னு கார்ல வெச்சு உங்ககிட்ட கூட சொன்னேனே? இது அவங்க கம்பல்ஷனுக்காக ஓகே சொன்னதுதான். வேலையை ரிசைன் பண்ணிடுவேன்னு நினைச்சு கேட்கறீங்கன்னா, டோன்ட் வொர்ரி சஞ்சய். அப்படியெல்லாம் ஒரு எண்ணமே இல்லை”, புன்னகைத்தாள்.

அதற்கு மேல் என்ன சொல்வது என்று சஞ்சய்க்கு தெரியவில்லை. கல்யாணத்திற்காக ஒருவனை காணச் செல்கிறாள் என்பதே ஒப்பவில்லை. ஆனால் இந்த நேரம் எப்படி அவன் விருப்பத்தை தெரிவிப்பது?

“ம்ம்.. ஒரு விஷயம் சொல்லணும். அதான் கூப்பிட்டேன். தீக்ஷனா அப்பாதான் அமெரிக்கால நம்ம கம்பனிக்கு இன்வெஸ்ட் பண்ணார். அவரும் ஒரு பார்ட்னர்னு தெரியும் இல்லையா?” அவள் தெரியும் என்பதாக தலையாட்ட,

“தீக்ஷனாவை நான் கல்யாணம் செய்துக்கணும்னு விருப்பப்பட்டார். தீக்ஷனாவுக்கும் அதில் சம்மதம்தான்.”

இப்போது என்னிடம் ஏன் இதைக் கூறுகிறார். குரு சர், இதை ப்ரேக் பண்ணிட்டதாதான சொன்னார்? என்று யோசனை சென்றாலும் முகத்தில் எதுவும் காட்டாது அமைதியாக இருந்தாள்.

“ஆனா, எனக்கு இஷ்டம் இல்லைன்னு ஸ்ரீதர் அங்கிள்கிட்ட சொல்லிட்டேன். தீக்ஷனா கேரளாலர்ந்து திரும்பி வந்ததும் அவகிட்டையும் பேசி எக்ஸ்ப்ளேய்ன் பண்ணனும்”, அவள் கண்டிப்பாக ஆர்பாட்டம் செய்வாள் என்று தெரிந்து முகம் லேசாக அசூயை காட்டியது.

அவன் சொன்னதில் அதிர்ச்சி இல்லாவிடினும், எதற்கு என்னை அழைத்துக் கூறுகிறார் என்று முழித்தாள்.