மறு நாள் அலுவலகம் அதன் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தீ்க்ஷனா வராததில் அவரவர் வேலையில் கவனம் வைத்திருந்தனர்.
சஞ்சையுடன் ஒரு மணி நேரம் அமர்ந்து டெண்டருக்கான மிச்ச சொச்ச விபரங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தாள். அவளே செய்துவிட்டு அவனுக்கு அனுப்பி சரி பார்த்திருக்க முடியும். என்னவோ, சஞ்சையும் உடனிருந்து செய்ய அழைத்திருந்தான். ஒரு வேளை இந்தக் கம்பனியில் இது அவள் முதல் டெண்டர் அனுபவம் என்பதால் உடனிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள்.
அலுவலக விஷயம் தாண்டி அவளிடம் பொதுவாக எதாவது பேச முயன்று என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவன் தவிப்பது கண்ணில் படவில்லை ஜெயந்திக்கு.
வேலை முடியவும் அவள் எழுந்துகொண்டாள். “ரைட். ஃபைல் ஃபைனான்ஸ் சர்வர்ல லோட் பண்ணிட்டு பாஸ்வர்ட் எனக்கும் மோகனுக்கும் அனுப்பிடுங்க. அவனும் ஒரு தரம் பார்த்துட்டா, நைட் நாங்க அனுப்பிக்கறோம் ஜெயந்தி.”
அந்த ஃபைனான்ஸ் சர்வர் வெகு சிலர் மட்டுமே உபயோகப்படுத்து முடியும். அதில் பதிவேற்றம் இறக்கம் செய்யப்படும் ஃபைல்கள், லாகின் செய்தது முதல் வெளியேறும் வரை என்னவெல்லாம் செய்தார்கள் என்று எல்லாம் பதிவாகிடும். இது போன்ற முக்கிய ரகசியமாக வைக்கப்பட வேண்டிய கோப்புகள் இதில்தான் சேமித்து வைப்பார்கள்.
மதியத்திற்கு மேல் சஞ்சய் கிளம்பிவிட, அன்று முழுதுமே மோகன் வரவில்லை. சஞ்சய் சொன்னதை செய்துவிட்டு அன்று மாலை நேரத்திற்கு கிளம்பிவிட்டாள் ஜெயந்தி. வீட்டிற்குள் வந்தவுடனேயே குருபரன் குரல் தந்துவிட்டார்.
“என்ன சார்…இரண்டு நாளா உங்களைக் காணமேன்னு நினைச்சேன்”, என்று சோஃபாவில் அமர்ந்தாள்.
“ம்ம்..கொஞ்சம் வேலை மா. நீ வேணா முகம் கழுவிட்டு வரியா? நான் காத்திருக்கேன்.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை சர். நீங்க சொல்லுங்க. என்ன பிசி? உங்க தமையா மேடம் பிடிச்சி வெச்சிக்கிட்டாங்களா?” சிரிப்போடு கலாய்த்தாள்.
“அட அவளையுமே பார்க்கலைமா. உன்னைப் பார்த்துட்டு அடுத்து அவளைப் பார்க்க போகணும். அவளும் திட்டுவா”, பாவமாகக் கூறியவரைக் கேட்டு ஜெயந்திக்கு இன்னுமே சிரிப்பு வந்தது.
“அட அப்ப அங்க போகாம இங்க ஏன் வந்தீங்க? “
“விஷயமாத்தான். வந்து.. நான் சொல்ல வரதை நீ சரியா புரிஞ்சுக்கணும் ஜெயந்தி”, பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“வந்து… சஞ்சய் இப்ப ஒரு டெண்டர் போடப்போறான் இல்லையா. அதுக்குத்தானே இரண்டு நாளா வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்க?”
“ஆமாம்.”, புருவம் சுருக்கினாள் ஜெயந்தி.
“அது எவ்வளவுமா கொடேஷன் போட்டிருக்க?”
“அது ரகசியம் சார். அதை நீங்க தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?”
கண்களை உருட்டியவர், “அதேதான் நான் தெரிஞ்சுக்கறதுல என்னம்மா? சொல்லேன். காரணமாத்தான் கேட்கறேன்.”
அவர் அழுத்திக் கேட்கவும், “இல்லை சார் அது தப்பு. என்ன காரணம்னு முதல்ல சொல்லுங்க.”, மறுத்தாள். இப்படித்தான் கூறுவாள் என்று தெரிந்தும் கேட்டதை எண்ணி தலையில் அடித்துக் கொண்டதை நல்ல வேளை ஜெயந்தி பார்க்கவில்லை.
அவரின் பெருமூச்சு சத்தம் மட்டும் கேட்டது. “சரி. நீ சொல்ல வேணாம். ஆனால் நான் சொல்ற தொகையை விட கூடவா குறைச்சலான்னு மட்டுமாவது சொல்லேன்.”
“சஞ்சய்க்கு இந்த டெண்டர் கிடைச்சா நல்லதுன்னு சொன்னானில்லையா? அதுதான்”, என்றவர் ஒரு தொகையைக் கூறி, “இதுக்குக் கம்மியா போடணும்மா. போட்டா கிடைச்சிடும்.”
அதைக் கேட்டு திகைத்தவள், “சார். இது எப்படி உங்களுக்குத் தெரியும்? இது தப்பு. இன்னிக்கு நைட் டெண்டர் க்ளோசானப்பறம்தானே பிரிக்கவே செய்வாங்க?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை. எனக்குத் தெரிய வந்துச்சு, அந்த ஆஃபீஸ்லதான் இரண்டு நாளா இருந்தேன். இது ஒன்னும் கவர்ண்மென்ட் டெண்டரில்லையேமா. ஆன்லைன்ல போடுறத, அவங்க சீனியர் ஆளுங்க பார்த்துடறாங்க. இது வரைக்கும் நாலு வந்திருக்கு. உங்களோடதுக்குத்தான் காத்திருக்காங்க. அதனாலதான் சொல்றேன்.”
தலையில் கைவைத்து அமர்ந்தவள், “சார், இது என்ன இக்கட்டுல மாட்டிவிடறீங்க? இந்த தகவல் தெரிஞ்சுட்டு வந்து எங்கிட்ட சொன்னதே தப்பு. அப்படியே இருந்தாலும், இப்ப என்னன்னு சொல்லி நான் கொடேஷனை மாத்த முடியும்? ஃபைல் அவங்களுக்கு சாயந்திரமே அனுப்பிட்டேன்.”
‘அட ஆண்டவா…. இப்படி பொண்ணுங்க மத்தியில என்னை மாட்டிவிட்டு சோதிக்கறியே’, என்று புலம்பியபடியே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவர்,
“ஜெயந்தி. வாத்தியாரா பதினைஞ்சு வருஷம் இருந்தவன், சரியா தப்பான்னு எனக்குத் தெரியாதா? உனக்குத் தெரியாத விஷயம் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. சஞ்சய் அந்த தீக்ஷனா அப்பாகிட்ட அவர் பொண்ணை கட்டிக்க விருப்பமில்லைன்னு உடைச்சே சொல்லிட்டான். அந்தக் கோவத்துலதான் அந்த பொண்ணு கேரளா போயிடுச்சு.”
“ஓ…” கன்னத்தில் கைவைத்துக் கதை கேட்டாள்.
“அடுத்து என்ன நடக்கும்னு நினைக்கற? அவ அப்பன் கம்பனியில என் பங்கைக் குடுன்னு கேட்பான். சஞ்சய்க்கு உடனே அவ்வளவு டாலரை குடுக்க முடியாது. இப்ப வந்த புது அமெரிக்க கான்ட்ராக்டோட, இந்த மாதிரி இன்னும் நாலஞ்சு கையில் இருந்தா இந்த வருஷம் லாபம் காட்டி அவனால கொஞ்சம் தள்ளிப் போட முடியும். இங்க நம்ம நாட்டுல நிறைய வேலைங்க எடுத்து பண்ணாதான் ஒரு வேளை அவர் அமெரிக்க ஆஃபீசை எடுத்துக்கிட்டாலும் சஞ்சையால சமாளிக்க முடியும்.”
அவர் பேசிக்கொண்டே போகவும் திகைத்த பார்வையோடு கேட்டுக்கொண்டிருந்தாள். சஞ்சய்யோ, மோகனோ எதைப்பற்றியும் காட்டிக்கொள்ளவில்லை.
அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர், “இப்ப நீ போன் பேசி அமௌண்ட்டை கம்மி பண்ணச் சொல்லு. டெண்டர் கிடைச்சதும் உன்னாலதான்னு பேர் வரும். அந்த தீக்ஷனா பொண்ணு உன்னை மட்டம் தட்ட பார்த்தா இல்லையா? இப்ப அவ திரும்ப வரும்போது, விஷயம் தெரிஞ்சு இன்னும் கொஞ்சம் தீஞ்சு காஞ்சு போகட்டும். அவ கொட்டம் அடங்கும்”, என்று தூபம் போட்டார்.
“ம்ப்ச்…அவ என்ன நினைச்சா என்ன சார்? அவள்ல்லாம் ஒரு ஆளா?”
‘ஐயோ…என்ன சொல்லி இவளை வழிக்கு கொண்டுவரது’, என்று இல்லாத முடியை பிய்த்துக்கொண்டவர், அடுத்த முயற்சியாக,
“அன்னிக்கு கிளையன்ட் டின்னர்லர்ந்து நீ கோபமா வந்ததும், உன் கூடவே சஞ்சய் வந்ததுதான் தீக்ஷனா அப்பா ஸ்ரீதர் பேசவே காரணம். இவ அவங்கப்பாகிட்ட அழ அவர் மறு நாள் சஞ்சயை கூப்பிட்டு சத்தம் போட்டார். இவன் பேசும்போதே உங்க பொண்ணை கட்றதா இல்லைங்கவும், ஜெயந்தியாலையான்னு கேட்டிருக்கார். தீக்ஷனா சொல்லாமலா அவர் கேட்டிருப்பார்? அதனால இப்ப சஞ்சய் இந்த திடீர் முடிவெடுக்க ஒரு வகையில் நீயும்தான் காரணம்.”
“அச்சோ சார், என்ன இப்படி சொல்றீங்க?” அதிர்ச்சியாகக் கேட்டாள்.
அடுத்து பத்து நிமிடம் குருபரன் கரையாய் கரைத்ததில் அரைமனதாக ஒத்துக்கொண்டு சஞ்சய்க்கு அழைத்தாள்.
இதை எதிர்பார்க்காதவன், “இன்னும் இல்லை. ஏன்? என்னாச்சு?”
“அது….ம்ம்… தப்பா நினைக்காதீங்க. வேல்யூல ஒரு ஐம்பதாயிரம் கம்மியா போடலாமா?”, தயங்கியபடியே கேட்டாள்.
“… என்ன திடீர்னு?”
சின்ன சிரிப்பொன்றை உதிர்த்தவள், “அது… ஒரு கட் ஃபீல் (உள்ளுணர்வு). பெருசா ப்ராப்ளம் இல்லைன்னா குறைக்கலாமேன்னு தோணவும் கேட்டேன்.”
அதில் சுவாரசியமானவன், “ம்ம்… இப்படி அடிக்கடி தோணுமா உங்களுக்கு? வொர்க் ஆகியிருக்கா முன்னாடி?”
அதில் கண்களை உருட்டியவள், “எப்பவாவதுதான் தோணும். சில நேரம் வொர்க் ஆகியிருக்கு. என்னவோ வீட்டுக்கு வந்ததிலிருந்து தோணிகிட்டே இருந்தது. சரி கூப்பிட்டு உங்ககிட்ட சொல்லிடுவோம் கூப்பிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம். நான் ஃப்ரீ ஆகிடுவேன்”, என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவன், “சரி. அம்பதாயிரம் தானா? ஷூரா? அது என்ன கணக்கு?”
“அப்படியில்லை. என்னவோ” என்று ஒரு தொகையை சொல்லி, “அதுக்குக் கீழ இருந்தா பெட்டர்னு தோணுச்சு.”
“ஓஹ்… இந்த பேட்டா ரேட் 399.99 மாதிரியா?” என்று கிண்டல் செய்ய, ஜெயந்தி சிரித்தாள்.
“அப்படியும் வெச்சிக்கலாம்.”
“சரி… உங்க லாஜிக்கோ, இன்ட்டியூஷனோ எதுவாயிருந்தாலும், செக் பண்ணிருவோம்”, என்றவன் மாற்றிவிட்டு அனுப்புவதாக வாக்களித்துவிட்டே இணைப்பை துண்டித்தான்.
பெருமூச்சொன்றை விடுத்தவள், “சார். இருக்கீங்களா? செய்யறதா ஒத்துக்கிட்டார். ஆனாலும் டெண்டர் கிடைச்சு என்னை பாராட்டினா எனக்குத்தான் சங்கடமா இருக்கப்போகுது.”
சற்றே நிம்மதியான குருபரன், “உன்னால அவனுக்கு ஒரு சங்கடம் வந்தபோது அவன் சமாளிக்கலையாமா? பாராட்டினா வாங்கிக்கோ. இதுல என்ன? நீ நல்லா வேலை செஞ்சப்போ கிடைக்காத பாராட்டுக்கு ஈடா இப்ப கிடைக்குதுன்னு நினைச்சுக்கோயேன்.”
தன் காரியம் முடிந்ததில் திருப்தியானவர் என்னவோ உருட்டினார். “நான் கிளம்பறேன் மா. நீ ரெஸ்ட் எடு”, என்று சொல்லிவிட்டு ‘இன்னும் தமையாவை சமாளிக்கணும்’ என்று மனதோடு முனகிக்கொண்டே சென்றார்.
இரவு உணவை முடித்து படுக்கைக்கு செல்லும் நேரம் வாட்சப்பில் அமௌண்ட் மாற்றிவிட்டதை உறுதி செய்து சஞ்சை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
“ஆல் தி பெஸ்ட்”, என்று வாழ்த்தி ஒரு பூங்கொத்தை பதிலுக்கு அனுப்பினாள்.
“இந்த டெண்டர் வின் பண்ணா உங்களுக்கு டின்னர் ட்ரீட்”, என்று சஞ்சய் அனுப்பு,
“அட அதெல்லாம் வேணாம்” என்று கூறி ஒரு சிரிக்கும் எமோஜியும் சேர்த்து அனுப்பினாள்.
“நோ நோ…ஓரு வேளை வின் பண்ணலைன்னா, நீங்க டின்னர் கூட்டிட்டு போய் ஆறுதல் சொல்லணும்!”
அவனின் பதிலில் சிரித்தவள், “அப்போ சரி. இட்ஸ் அ டீல்” என்று அனுப்பிவிட்டு குறு நகையோடு படுக்கச் சென்றாள்.
எண்ணங்கள் சஞ்சய், தீக்ஷனா, அன்று நடந்தவை என்று சுற்றி வந்தது. என்ன இருந்தாலும் அந்த ஜாலக்காரியிடம் சிக்காமல் சஞ்சய் மறுத்துவிட்டது நல்லது என்றே பட்டது. மனம் மகிழ்ந்தது. நல்ல மனிதன். இயல்பாக, எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் பழகுகிறான். ஏதோ இரண்டு வருடம் அமெரிக்காவில் படித்துவிட்டு வந்ததற்கே என்ன அலட்டல் அலட்டுவான் நிரஞ்சன். எதற்கெடுத்தாலும் ‘டால்’ வாலுன்னு என்ன பேச்சு? இவ்வளவு திறமை இருந்தும், எதுவும் காட்டிக்காம அடுத்தவங்களை எவ்வளவு மரியாதையோட நடத்துறாரு சஞ்சய்.
எண்ணங்கள் சுழன்று கொண்டே தூக்கத்திற்கு இழுத்துச் சொல்லும் நேரம், தீக்ஷனாவை சஞ்சய் வேணாம்னு சொன்னதுக்கு எதுக்கு எனக்கு இவ்வளவு சந்தோஷம் என்று தோன்ற, மேலும் யோசிக்கும் முன் உறங்கியிருந்தாள், அதைப் பற்றி மறந்துமிருந்தாள்.