“வசந்த். ஸ்லைட்ஸ் ப்ரிப்பேர்ட்னு என் பேர்தான போட்டிருந்துச்சு? நல்லா தெரியுமா அதுல ஜெயந்தி பேர் இல்லைன்னு?”, சற்றே குழப்பமாக ஜெயந்தி கேட்க, அவன் கையில் இருந்த பவர்பாயின்ட்டின் முதல் இரு பக்கத்தை காட்டினான்.
முதல் பக்கத்தில் கம்பனி லோகோ, தலைப்பு, நாள் நேரம் என்று அவள் அமைத்திருந்தபடிதான் இருந்தது. செய்தவர் என்பதில் அவள் பெயரும், ப்ரெசென்டர் என்பதில் பேச்சாளராக நிரஞ்சன் என்று போட்டிருந்தாள். அதுதான் இப்போது பிரப்பேர்ட் அண்ட் ப்ரெசன்டட் என்று நிரஞ்சன் பெயர் தாங்கி நின்றது.
அக்மார்க் உழைப்புச் சுரண்டல். ஸ்தம்பித்து நின்றவளை அஞ்சலி தனியாக அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு வசந்திற்கு விடைகொடுத்துவிட்டு வந்தாள்.
“தண்ணி குடி ஜெய்”
அமைதியாக எடுத்துக் குடித்தாள். “அடி முட்டாளாக்கியிருக்கான் இல்லே?”
“அழகா பேசி கவரப் பண்ணிருவான் ஜெய். அவன் செய்த மாதிரியே கழுத்தறுக்கணும்”
“என்ன சொல்ற?”
“ம்ம்.. மாசக் கடைசில குவார்ட்டர்லி ரிப்போர்ட் நீதான செய்து தருவ? இந்த முறை உனக்கு டெங்கு வரப்போவுது. இரண்டு வாரம் நீ பெட் ரெஸ்ட்ல இருக்கணும். உனக்கு உடம்பு பூரா வலி. அதுவும் மூட்டு வலிக்குது. வீட்டிலர்ந்து கூட வேலை பார்க்க முடியாது. ட்ரிப்ஸ் போட்டிருக்காங்க. உன் சித்தி வந்து பார்த்துக்கறாங்க. பார்த்தியை வெச்சு பண்ணிக்க சொல்லப் போற.”
அஞ்சலி விவரிக்க “அடிப்பாவி! என்ன ஒரு கிரிமினல் மூளை உனக்கு? பார்த்தி சொதப்பிடுவாண்டி”
“அதனாலென்ன? சூப்பர் ஹீரோ சொடக்கு போடற நேரத்துல சரி பண்ணிடுவார். நீ இப்ப எதையும் காட்டிக்காத. மனுஷங்களை புரிஞ்சிக்கோ. அவன் மேல உனக்கிருக்க க்ரஷ்ஷை நிரஞ்சன் நல்லா யூஸ் பண்ணிக்கறான்.”
அஞ்சலி சொன்னதும் தன் மடத்தனத்தை எண்ணி அவமானமாக உணர்ந்தவள், முகத்தை மூடி, “கேவலமா நினைச்சிருப்பானோ? அப்பட்டமா தெரிஞ்சுதா? எல்லாருக்கும் தெரியுமா என்ன?” என்றவள் விரலிடுக்கில் தோழியைப் பார்த்து சற்றே பயத்தோடு கேட்டாள்.
“அப்படில்லாம் தெரியலை ஜெய். எனக்கும் அவனுக்கும் தவிர வேற யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஆனா, கண்டிப்பா அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அந்த வீக்னெஸ் வெச்சு அவன் பேர் வாங்கிக்கறான். அதை உடைக்கணும்.”
மதியம் மூன்று மணி போல படு உற்சாகமாக வந்தான் நிரஞ்சன். அவளிடம் வந்து கூசாமல் பொய்களாக அளந்தான்.
“அந்த ட்ரென்ட் சார்ட் செம்ம ஹிட் ஜெய். என் அசிஸ்டென்ட் தான் செய்தாங்கன்னு உன்னைப் பத்தி சொன்னேன். சீஃப், இந்த ஃபார்மேட் மத்த ரீஜன்ஸ் கூட செய்யலாமேன்னு சொல்லியிருக்கார். உனக்கு இது ஒரு கோல்டன் வாய்ப்பு ஜெய். நீ ஒரு டெம்ப்ளேட் மாதிரி ரெடி பண்ணு” என்று ஆர்பரித்தவனை, ஒரு புன்னகையுடன்,
“என்னையும் லன்ச்சுக்கு கூட்டிட்டு போய் அவருக்கு இன்ட்ரோ குடுத்திருக்கலாமே சர். டைரக்டர் லெவல்ல நீ உன் பேர் பதிய வெக்கணும், அப்பதான் அடுத்து வளரமுடியும்னு நீங்க தானே சொல்லிட்டு இருப்பீங்க?” என்று மடக்கினாள்.
“ஓஹ்? நீ வர இஷ்டப்பட மாட்டேன்னு நினைச்சிட்டேன் ஜெய். யா, ம்ப்ச்… நீ சொல்றது ரைட். கூட்டிட்டு போயிருக்கணும். பட் உன் பேர் கண்டிப்பா பதிஞ்சிருக்கு ஜெய். அது பிரச்சனையில்லை. ம்ம்.. டெல் யூ வாட்? நாம அதே ஹோட்டல் போகலாம். என் ட்ரீட் ஓகே?”, வசீகரப் புன்னகை இப்போது அவளை அசரடிக்கவில்லை.
“அட..சாப்பிட நானே எப்ப வேணாலும் போவேனே. பரவாயில்லை சர். பட், இப்ப இரண்டு மணி நேரம் பெர்மிஷன் எடுத்துக்கவா? தலை வலி கொஞ்சம் அதிகமா இருக்கு. காலையிலயும் சீக்கிரமே வந்துட்டேன்”, என்றவளை,
“யா யா… ஷூர். நீ போய் ரெஸ்ட் எடு ஜெய். அதான் முகம் ஒரு மாதிரி வாடி போயிருக்கா. யூ கோ. மத்ததெல்லாம் நாளைக்கு பார்த்துக்கோ”, என்று அக்கறையாக அனுப்பி வைத்தான்.
இந்தக் கபட நாடகம் பார்த்து நிஜமாகவே தலை விண்ணென்று தெரித்தது. மெட்ரோ எடுத்து முக்கால் மணி நேரத்தில் அவளது அப்பார்ட்மென்ட் வளாகத்தை அடைந்துவிட்டிருந்தாள் ஜெயந்தி. இந்த வசதிக்காகவே குடுக்கும் விலைக்கு சற்றே அளவில் சிறியதானாலும் இங்கே ஃபளாட்டை வாங்கியிருந்தாள்.
கதவைத் திறந்து பக்கவாட்டு மேசையில் இருந்த கண்ணாடிக் குவளையில் சாவியை போட்டு, செருப்பை அதற்கான மர அலமாரியில் வைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் திரும்பியவள் திகைத்து நின்றாள்.
ஒற்றை சோஃபாவில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். வெள்ளை வேட்டி சட்டை, நடு மண்டை சொட்டை போக அதை சுற்றி வெண்ணிற முடி. அவளை ஆர்வமாகப் பார்த்திருந்தார்.
“யா…யார் நீங்க? எப்படி உள்ள வந்தீங்க?”, திணறலாகக் கேட்டாள் ஜெயந்தி. ஒரடி பின்னால் நகர்ந்து கதவருகே சென்றாள்.
“பயப்படாதேம்மா. வெளிய ரொம்ப நேரம் நிக்க முடியலை. அதான் உள்ள வந்தேன். கதவை நீ சரியா சாத்தலை போலருக்கு. நாந்தான் சாத்திட்டு உட்கார்ந்தேன்.”
கூறியவரை புதிராகப் பார்த்தவள் மீண்டும் கதவை நோக்கினாள். தானியங்கிக் கதவு. ‘காலையில் அவசரமாகச் சென்றதில் பூட்டிக்கொள்ளவில்லையோ?’ என்று யோசித்தவள், “கீழ வாட்ச் மேன் பார்த்தேனே. அவர் எதுவும் சொல்லலையே?”
“நான் வரும்போது வாட்ச்மேன் யாரும் பார்க்கலையே? பயப்படாதேமா. வந்து உட்காரு. தண்ணி எதுவும் குடிக்கறதானா குடி. நான் காத்திருக்கேன்.”
உடலை அசைக்காமல் பேசியது ஜெயந்திக்கு சற்றே வினோதமாகப் பட்டது.
“பரவாயில்லை. நீங்க யார் என்னன்னு விபரம் சொன்னா நல்லாயிருக்கும் சர்”, நின்ற இடத்திலிருந்து நகராமல் கேட்டாள் ஜெயந்தி.
“நான் குருபரன் மா. இயற்பியல் வாத்தியாரா இருந்து ரிடையாரிகிட்டேன். வந்து உன் ஜாதகம் கல்யாணத்துக்குன்னு வந்திருந்தது. அதுதான் நேர்ல பார்த்துட்டு போகலாம்னு…”
“என் ஜாதகமா? நான் எந்த ஜாதகமும் எங்கேயும் பதிவு பண்ணலை சார். நீங்க தப்பா வந்திருக்கீங்க”
“ நீ ஜெயந்தி தான மா? “ என்றவர் அவள் வேலை, படிப்பு என்று அடுக்க, ‘ஒரு வேளை சித்தியோட வேலையா இருக்குமோ?’, என் நினைத்து, “வீட்டு அட்ரெஸ் எல்லாமா போட்டிருந்தாங்க?” என்று மீண்டும் வினவினாள்.
“ரமாதேவின்றது ?”
“ஆங்…என் சித்திதான்.”
புன்னகைத்தவர், “அவங்கதான் ..” எனவும், ‘சித்தி…’ என்று பல்லைக் கடித்தவள், “அவங்க எனக்கு எதுவும் தகவல் தரலை சர். தெரிஞ்சிருந்தா, எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொல்லியிருப்பேன்.”
“ஏம்மா?”
“வேலையில பிரமோஷன் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன், அதுக்கப்பறம்தான்” என்று வாயில் வந்த பொய்யைக் கூறினாள்.
“பிரமோஷன் வேணும்னா இப்ப நீ இருக்க வேலையில கிடைக்காதேமா. வேற வேலைக்குத்தான் ட்ரை பண்ணனும்.”
சர்வ சாதாரணமாகக் கூறவும், மீண்டும் அதிர்ச்சியில், “உங்களுக்கு எப்படி சார் தெரியும்?” என்று கேட்டபடியே சோஃபா அருகில் வந்தாள்.
“அங்க ஒரு ஆள் தெரியும் எனக்கு. விசாரிச்சேன். உன் பாஸ் நிரஞ்சன் சரியில்லை ஜெயந்தி.“
‘அப்போ ஆஃபீஸ் மொத்தமும் நான் ஏமாளின்னு தெரிஞ்சிருக்கோ?’, என்ற நினைப்பில் மீண்டும் தலை வலித்தது. கண்ணீல் லேசாக நீர் வேறு கோர்த்துத் தொலைத்தது.
“நான் பார்த்துக்கறேன் சர். நீங்க கிளம்புங்க. எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்.”, என்று நிமிர்ந்தவள் அவரைப் பார்க்க, அவர் உருவம் ஆங்காங்கே மறைந்தது போலிருந்தது,
கண்ணை அழுத்தி மூடி கையால் நீரை துடைத்தவள் மீண்டும் பார்க்க, நிஜமாகவே அவரின் இடப் பக்க தோளைக் காணவில்லை. அவள் பார்க்கப் பார்க்க வயிற்றுப் பகுதி மறைந்து மீண்டும் தோன்றியது.
கத்த வாயெடுத்தவள் கண்கள் தெறிக்க மீண்டும் பார்க்க, “பயப்படாத ஜெயந்தி”, என்று பெரியவர் சொல்லும்போதே மோவாய் மூக்கு என்று மறைய, அதிர்ச்சியில் மூர்ச்சையானாள்.
“குரு…இன்னும் பயிற்சி பத்தலை போலருக்கேடா. பத்து நிமிஷம் கூட தாக்குபிடிக்க முடியலையே”, என்ற உருவம் மொத்தமாக மறைந்து அசரீரியாக ஒலித்த குரல் ஜெயந்தியின் காதில் விழவேயில்லை.