கார்ப்பரேட் அலுவலகம் என்பதற்கான சர்வ லட்சணங்களும் பொருந்தியிருந்த அந்த குளிரூட்டப்பட்ட விரிந்து பரந்த அறை, அனேகமாக காலியாக இருந்தது. மதிய உணவு நேரம் என்பதால் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று பலதரப்பட்ட மொழிகளின் இரைச்சல் இல்லாது, அமைதியை தத்தெடுத்திருந்தது.
ஒரு புறம் இருந்த கண்ணாடி அறைக்குள் லாப் டாப்பை தவிர்த்து இன்னும் இரண்டு மானிட்டர்களையும் இணைத்து, மூன்றிலும் வெவ்வேறு மென்பொருள்கள் திரையில் பல வித எண்கள், வரைபடம் என்று காட்டிக்கொண்டிருந்தது. அவற்றை தன் ஆளுகையில் வைத்து சரிபார்த்து, ஒழுங்கு படுத்தி, தரவுகள் தரும் செய்தியை எளிமையாக்கி பவர் பாயிண்ட்டில் சேகரித்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி.
உயர் ரக கார் கம்பனியின் தமிழ் நாட்டு தலைமை அலுவலகம் அது. சென்ற வருடத்தின் வரவு செலவு கணக்குகளைத்தான் தொகுத்துக்கொண்டிருந்தாள். இயற்கையாக அமைந்திருந்த சுருட்டை முடியை கிளிப்பிற்குள் அடக்கியிருந்தாள். ஒரு பெரிய திராட்சை கொத்துபோல முதுகில் படர்ந்திருந்தது. சற்றே மா நிறம், திருத்தமான முகம். அதில் ரிம்லெஸ் கண்ணாடி. வேறொருத்தியாக இருந்தால் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருப்பாள். ஆனால் ஜெயந்திக்கு அதற்கெல்லாம் பொறுமை கிடையாது. கண்ணாடி போட்ட முகம் பிடிக்கலைன்னா பார்க்காதே, நீ பார்க்கறதுக்காக நான் லென்ஸ்சோட மெனக்கெட முடியாது என்ற கொள்கைவாதி!
கூரான மூக்கிற்கு அந்தக் கண்ணாடியும் எடுப்பாகத்தான் இருந்தது. கூடவே நான் ரொம்ப ஸ்ட்ரிக்டாக்கும் என்ற தோரணையும் தந்தது. இருபத்தியெட்டு வயதில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டிருக்கும் யுவதி. பெற்றவர்களுக்கு ஒற்றைப் பிள்ளையாய் பிறந்தவள், பதின்ம வயதில் தந்தையை இழந்து, இருபத்திமூன்று வயதில் தாயை கோவிட்டிற்கு பறிகொடுத்துவிட்டு ஒற்றையாய் நின்றுவிட்டாள்.
தீவிர வேலையில் இருந்தவளை கண்ணாடிக் கதவில் நாசூக்காய் தட்டி திறந்து கவனத்தைக் கலைத்து புண்ணியம் தேடிக்கொண்டாள் அஞ்சலி.
“இதுதான் நீ போய் ஆரம்பி, நான் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்ற லட்சணமா ஜெய்?”, இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.
மணியைப் பார்த்த ஜெயந்தி, “ஓஹ்… சாரிடா, தோ தோன்னு இழுத்துடுச்சு. நீ வெயிட் பண்ணாம சாப்பிட்டல்ல?”
“ஹ்ம்ம்… ஆச்சு. அப்பறம் பண்ணிக்கலாம் வா” என்ற அஞ்சலியை கெஞ்சலாகப் பார்த்தவள், “ஒரு பத்து நிமிஷம். முடிச்சுட்டேன்னா ஃப்ரீயா சாப்பிடுவேன்டி. ப்ளீஸ்”, என்று மீண்டும் கணினித் திரையில் பார்வையை திருப்பினாள் ஜெயந்தி.
திருப்திகரமாக செய்திகளை பவர் பாயிண்ட்டில் கடத்தி, நகாசு வேலைகள் சேர்த்து முடித்து சேவ் செய்து நிமிரவும், இடுப்பு, தோள், கழுத்து, மணிக்கட்டு என்று ஒவ்வொரு உறுப்பாக எதிர்ப்பினைக் காட்டின. எழுந்து இடுப்பை நீவி, தோளை குலுக்கி, கழுத்தை இரு புறமும் திருப்பி என்று தாஜா செய்துகொண்டே அந்த சிறிய அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஃபோகஸ் ரூம் என்று ஒரு ஆள் அமர்ந்து வேலை பார்க்கும் அளவிற்கு சிறிதான அறை. சற்றே ரகசியமாக பேச வேண்டிய ஜூம் கால் அல்லது செய்ய வேண்டிய வேலை என்றால் இதில் அமர்ந்து செய்வது வழக்கம். வழக்கமான வேலைகளை அவளது பாதி தடுக்கப்பட்ட காபினில் அமர்ந்து செய்வாள். எவரும் எட்டிப் பார்த்தால் பெரிய கணிணித்திரை தெரியும். இது கணக்கு வழக்கென்பதால் தனியே வந்தாள்.
வெளியே வர, அலுவலகத்திற்குள் சிரித்துக்கொண்டே வந்தான் நிரஞ்சன். அழகன். டிசைனர் தாடி, அலுவலக ஃபார்மல் உடை, வசீகரிக்கும் புன்னகை, அமெரிக்க எம்.பி.ஏ, நுனி நாக்கு ஆங்கிலம் என்று பலரின் கனவில் வருபவன். உடன் அவன் அடியொட்டி பார்த்திபன். ஜால்ரா.
“ஹேய் ஜெய். ப்ரெசன்டேஷன் எப்ப ரெடியாகும் ? உனக்காகத்தான் ஈவினிங் ஃப்ரீ பண்ணி வெச்சிருக்கேன்”, லேசான தெற்றுப்பல் சிரிப்பும், சற்றே சுருக்கி அவளை நோக்கிய கண்களும் பார்த்தவள், லேசான தலையசைப்போடு ஒரு சின்ன சிரிப்பை சிந்தி, “முடிச்சிட்டேன். ஒரு த்ரீ தர்ட்டி போல ரிவ்யூ பண்ணுவோமா?” என்றாள்.
“இப்பவே ரிவ்யூ பண்ணிட்டா, சர் அவர் வேலையை ஹோல்ட் பண்ண வேணாம்மில்ல ஜெயந்தி. இல்ல இன்னும் முடிக்க எதானும் பாக்கி இருக்கா?”, பார்த்தியின் இளிப்பும் தொனியும் பசியோடு இருந்தவளை ஏகத்திற்கும் எரிச்சலாக்கியது. மறைக்காமல் அதை முகத்தில் காட்டியவள், நிரஞ்சன் புறம் திரும்பி, “இனிதான் லஞ்சுக்கே போகணும். வந்து ரிவ்யூ பண்ணலாமா?” என்றதும் பதறி, “காஷ்! யூ கோ கேர்ள்! இப்பவே டூ தர்ட்டி ஆச்சு. மத்ததெல்லாம் அப்பறம்”, என்று அனுப்பி வைத்ததில் குளிர்ந்தவள், சாப்பாட்டு டப்பாவை எடுக்க தன் காபினுக்குச் சென்றாள்.
உணவு அருந்தும் அறைக்குச் சென்று அங்கிருந்த மைக்ரோவேவில் காலையில் கிளறிய எலுமிச்சை சாதத்தையும் நேற்று இரவு செய்திருந்த காலிப்ஃபளர் பொறியலையும் சூடாக்கிக்கொண்டு மேசையில் அமர, அஞ்சலி பிரசன்னமானாள்.
“எப்பதான் இந்த மஞ்சா சோறு சாப்பிடறதை விடுவ ஜெய்? “
“கண்ட குப்பையை வாங்கி சாப்பிடறதுக்கு இது எவ்வளவோ தேவலாம். விட்டமின் சி”, அஞ்சலி விரும்பிச் சாப்பிடும் பர்கரையும் பிட்சாவையும் குப்பையாக்கியதில் “நாக்கு ருசி தெரியாதவங்களுக்கு அதெல்லாம் குப்பைதான். அதை விடு. இன்னிக்கு உன் பாஸ், அவன் தொடுப்பு இரண்டு பேரும் கிளையன்ட் லன்ச்சுன்னு இரண்டு மணி நேரம் ஜாலி பண்ணிட்டு வந்திருக்காங்க தெரியுமா? அந்த ஜால்ராவுக்கு பதிலா உன்னை கூட்டிட்டு போயிருக்கலாமில்ல?”
அவள் பொறுமலைக் கண்டு புன்னகைத்தவள், “ம்ப்ச்…இந்த வெட்டி பேச்சுக்கெல்லாம் நான் ஆள் இல்லை அஞ்சலி. இரண்டு மணி நேரமும் இழுத்து வெச்சு சிரிச்சு..போர்” என்று அடுத்த கவளத்தை உண்டாள்.
“ஆமாம்…இப்படியே சொல்லிக்கோ! இராத்திரில தண்ணி போடுவாங்கன்னு போக மாட்ட, அட்லீஸ்ட் லன்ச் பார்ட்டிக்காவது போகலாமில்ல ?உழைக்கறது நீ, அனுபவிக்கறது அந்த ஜால்ரா பார்த்தி.”
“ஹேய்… இல்லடி. ப்ரசென்டேஷன்ல என் பேர்தான் இருக்கு. நாந்தான் எல்லாம் ரெடி பண்றேன்றதை கண்டிப்பா ஹைலைட் பண்றதா சொல்லிருக்கார் நிரஞ்சன்”
சற்றே அவ நம்பிக்கையாகப் பார்த்த அஞ்சலியை மடை மாற்றி வேறு பேசினாள். கால் மணி நேரத்தில் உண்டு முடித்து, தன் இருக்கைக்கு திரும்பப் போனவளை தடுத்து, “நீ இப்ப திரும்ப போனா, வேற வேலை லைன்ல நிக்கும். மால் போய் வெட்டியாவாச்சம் ஒரு அரை மணி நேரம் நடந்துட்டு வா!” துரத்திவிட்டுத்தான் மறு வேலை பார்க்கச் சென்றாள் அஞ்சலி.
அடுத்த நாள் காலை எட்டரை மணிக்கே நிரஞ்சனின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் ஜெயந்தி. கடைசி நேர சந்தேகங்கள், கேட்கப்படக் கூடிய வேறு உபரித் தகவல்கள் கொண்ட கோப்பில் எளிதாக புரியும் வகையில் இருந்த தாள்களை ஒரு முறை அவனுக்குக் காட்டி விவரம் கூறிக்கொண்டிருந்தாள். அன்று போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங். தமிழக விற்பனை, வருவாய் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுகள், கடன் விகிதாச்சாரங்கள், விற்பனையின் போக்கு, கள நிலவரம் என்று பலதரப்பட்ட தகவல்களின் தொகுப்பை கவனமாகக் கேட்டுக்கொண்டான். “யூ ஆர் அ ஜெம் ஜெய். என்னைவிட நீயே அழகா ப்ரெசென்ட் பண்ணிடுவ போல?” என்றவனின் மயக்கும் சிரிப்பில் சற்றே சரிந்த மனதை இழுத்துப் பிடித்து, “ஆல் த பெஸ்ட் நிரஞ்சன். ரீஜன் ஃபினான்ஸ் ஹெட் பேசறதை கேட்கத்தான் காத்திருக்காங்க” என்றாள் சிறு புன்முறுவலுடன்.
“தாங்க்ஸ். யூ ஆர் அ டால். எதுவும் டேட்டா திடீர்னு தேவைபட்டா டெக்ஸ்ட் பண்றேன். வாட்சப்ல ஒரு கண் வை ஓகே?”
அர்மானி வாசனை திரவியமும், அர்மானி சூட்டுமாக அவளைக் கடந்து சென்றான் நிரஞ்சன்.
திருப்தியாக வேலையில் மூழ்கியிருந்தவளை கோப முகத்தோடு வந்த அஞ்சலி கலைத்துவிட்டாள்.
“என்ன அஞ்சலி? யார் மேல கோவம்?”
“ஹ்ம்ம் உன் மேலதான்… எழுந்து வா என்னோட”, கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
“போன வருஷம் வரை அந்த இராமமூர்த்தி கிழம்தான் மீட்டிங் மினிட்ஸ் எடுக்கும். அது ரிட்டையாராகி போனதும் இந்த முறை வசந்த் போறான்னு தெரிஞ்சது. அவன் கிட்ட உள்ள நடக்கறதை வந்து சொல்லுன்னு சொல்லியிருந்தேன்.”
பல்லிடுக்கில் பேசிக்கொண்டே லிஃப்ட்டை நோக்கி ஜெயந்தியை இழுத்துக்கொண்டு சென்றாள்.
“ஹேய்…அது கான்ஃபிடென்ஷியல். நீ எதுக்கு கேட்கற? அது எப்படி வசந்த் சொல்லலாம்?” என்ற ஜெயந்தியை அற்பமாகப் பார்த்தாள் அஞ்சலி.
அடுத்த தளத்தில் கேன்டீன் பக்கம் சென்றவள் அங்கே காத்திருந்த வசந்தை அருகில் அழைத்தாள்.
“ஹேய் அஞ்சலி”, என்று அவளுக்கென்றே பிரத்யேகமான புன்னகையோடு வந்தவன், ஜெயந்தியைப் பார்த்து ஒரு அறிமுகப் புன்னகையை சிந்தினான்.
“மிஸ்டர் வசந்த். உள்ள பேசின எதுவும் நீங்க வெளிய சொல்லக்கூடாதுன்னு தெரியுமா?”, என்று முறைப்பாகக் கேட்கவும், வசந்தும் அவளை பார்த்து லேசாக முறைத்து, “கம்பனி பத்தின விஷயம் எதுவும் சொல்லலை. அஞ்சலியும் அதை கேட்க மாட்டா. நானும் சொல்ல மாட்டேன். எனக்கும் எதிக்ஸ் இருக்கு”, என்றவள், இது தேவையா என்பது போல அஞ்சலியைப் பார்த்தான்.
“ஷ்… ஜெய்..”, என்று அவளை அடக்கியவள், “நீ சொல்லு வசந்த்” என்றாள்.
“ஆமாம். பிரசென்டேஷனுக்கு நிறையவே பாராட்டு வந்துச்சு, அந்த ட்ரென்டிங் சார்ட்க்கு நல்ல வரவேற்பு. நிரஞ்சன் சர் அதிகம் பேச தேவையே இல்லை. உங்க ஸ்லைட்ஸ் பேசுது நிரஞ்சன் வெரி குட் எஃபர்ட்னு சீஃப் பாராட்டினார்.” வசந்த் சொல்லவும் அவளது வேலைக்கான அங்கீகாரம் என்று ஜெயந்தியின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி தெரிந்தது.
“ஓஹ்…அதெல்லாம் யார் ரெடி பண்ணதுன்னு சொன்னாரா?” அஞ்சலியின் கேள்வியில் முகம் சுருக்கிய வசந்த், “ஸ்லைட்ல அவர் பேர்தான் போட்டிருந்தது. பாராட்டெல்லாம் அவர்தான் வாங்கிகிட்டார். அவர்தான பிரிப்பேர் பண்ணது? ஐ மீன் அது பின்னாடி இருக்க மூளை அவரோடதுதானே? அவர் சொன்னபடி அவர் ஸ்டாஃப் ரெடி பண்ணிருப்பாங்க?”,வசந்தின் கேள்வியில் ஜெயந்தியின் முகம் திகைப்பைக் காட்டியது.
“ஓ… எல்லாம் அவர் ஐடியான்னு சொல்லிகிட்டாரா? எங்கேயும் ஜெயந்தி பேர் வரலையா?” அஞ்சலி அழுத்திக் கேட்க, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவன், “இல்லை. இந்த ஃபார்மேட் மத்த ரீஜன்ஸ்கிட்டயும் சொல்லி ரெடி பண்ணச் சொல்லணும்னு சீஃப் சொன்னபோது கூட, அதுக்கென்ன, பண்ணிடலாம் சர்னு நிரஞ்சன் சொன்னாரே. அவர்தான பண்ணது?” மீண்டும் கேட்டான்.