Advertisement

காலை 6.30 மணி அளவில் இலஞ்சி சிற்றூரில் சூரியன் தனது தங்க கதிர்களை வீசி இருளை விலக்கிக் கொண்டிருக்க, கதிரவனின் வரவை குயில்கள் கீதம் பாடி வரவேற்க, தென்றலின் இசையில் பச்சை பட்டாடை உடுத்திய வயல்கள் அசைந்தாட, வாய்க்கால் நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது.

[இலஞ்சி – “Triplet City” என்று சிலரால் அழைக்கப்படும் இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பசுமை நிறைந்த எழில் பொருந்திய சிற்றூர்.

முக்கோணத்தின் மையக் கோட்டுச் சந்தியைப் போல் இலஞ்சி  தென்காசி, குற்றாலம் மற்றும் செங்கோட்டையின் மையக் கோட்டுச் சந்தியாக அமைந்திருக்கிறது. இந்த சிற்றூரை சுற்றி ‘சிற்றார்’ மற்றும் ‘வடக்காறு’ என்னும் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. விவசாயம், மரத்தொழில் மற்றும் மண்பாண்டத் தொழில்களே இலஞ்சியின் முக்கிய தொழில்கள்.]

வழக்கம் போல் இலஞ்சியின் காலை பொழுதின் அழகை ரசித்தப்படியே தனது நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தான் சேகர்.

வீட்டின் வராண்டாவில் அமர்ந்து சேகர் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்த போது காபியுடன் வந்த அவனது அன்னை சாந்தி அவனிடம் காபியை கொடுத்துவிட்டு, கண்ணா இன்னைக்கு சாய்ந்ரம் சீகரம் வந்துரு” என்றார். 

அன்னை தந்த காபியை ரசித்துக் குடித்தபடி, எதுக்கு மா? யாரும் என்னை மாப்பிள்ளை பார்க்க வராங்களா?” என்று கேட்டு கண்சிமிட்டினான்.

சாந்தி மென்னகையுடன் மகனை லேசாக அடித்தபடி,  போக்கிரி” என்றார். 

ச! என் பிஞ்சு நெஞ்சை இப்படி ஏமாத்திட்டியே மா!” 

டேய் விளையாடினது போதும்..  இன்னைக்கு யார் வராங்கன்னு நிஜமாவே மறந்துட்டியா?”

சிறிது யோசித்த சேகர், அண்ணா அடுத்த வாரம் தான் வரான்.. ஸோ அண்ணா இல்லை.. ஹ்ம்ம்..ஹும்.. எனக்கு தெரியலை.. நீயே சொல்லு மா.. யாரு வரா?”

அவர் செல்ல முறைப்புடன், ரெண்டு நாள் முன்னாடி சொன்னது மறந்து போச்சு.. நீயெல்லாம் எப்படி தான் ஒரு ஸ்கூல் நடத்துறியோ!” என்றார்.

அம்மா.. உனக்கே தெரியும், ISO இன்ஸ்பெக்சன்னு ஒரு வாரமா எவ்ளோ பிஸியா இருந்தேன்! அந்த நேரத்தில் நீ எதையாது சொல்லியிருப்ப” 

ஆமாடா.. உன் அப்பா அவனுக்கு இத்தனை  லோட் அனுப்பனும் இவனுக்கு இத்தனை லோட் அனுப்பனும்னு மரத்தை கட்டி அழுறாரு..
அந்த ப்ரொஜெக்ட் இந்த ப்ரொஜெக்ட்னு ராஜாவும் கவிதாவும் கம்ப்யூட்டரை கட்டி அழுறாங்க,
நீ உன் ஸ்கூலை கட்டி அழு..
நான் தனியா இந்த வீட்டை கட்டி அழுறேன்” 

சேகர் எழுந்து அன்னையின் இரு தோள்களையும் பற்றி, என் செல்ல அம்மாக்கு கூட இவ்ளோ கோபம் வருமா!” என்று கொஞ்ச, சாந்தி முகத்தை திருப்பினார்.

எல்லாம் அவளுக்கு சப்போர்ட்க்கு ஆள் வர தைரியம்டா” என்று கூறியபடி கணேசன் வந்தார்.

யாரு ப்பா வரா? நீங்களாது சொல்லுங்க”

கணேசன், எல்லாம் உனக்கும் வேண்டியவங்க தான்” என்றார். 

இப்பலாம்  ஹீரோயினுக்கு கூட இவ்ளோ பில்ட்-அப் கொடுக்கிறது இல்லை.. உங்க ரெண்டு பேர் அலம்பல் தாங்கலை.. நான் சாயிங்காலம் மெதுவா வந்தே பார்த்துக்கிறேன்” என்று கூறி தன் அறையை நோக்கி சென்றான்.

கணேசன் மர்ம புன்னகையுடன், யாரு கண்டா! வரது உன் ஹீரோயினாக் கூட இருக்கலாம்!”

சட்டென்று திரும்பி பார்த்த சேகர், அம்மா யாரு வராங்கனு சொல்லப் போறியா இல்லையா!”

சாந்தி முகமலர்ச்சியுடன், சண்முகம் அண்ணா, அமுதா அண்ணி, கீர்த்தி வராங்கடா கண்ணா”

வாய்விட்டு சிரித்த சேகர் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிப்பின் நடுவே, ஐயோ ஐயோ! அந்த கீரிபிள்ளைக்கா இவ்வளவு பில்ட்-அப்! 

அந்த குரங்கு என் ஹீரோயினா! ஐயோ ஐயோ.. போங்க ப்பா..” என்று கூறி தனது அறைக்கு சென்றுவிட்டான்.

சாந்தி சிறு கலக்கத்துடன், என்னங்க இப்படி சொல்லிட்டு போறான்”

கணேசன் புன்னகையுடன், அவனும் கீர்த்தியும் ஒருத்தரை ஒருத்தர் வாறுரதென்ன புதுசா! விடு பார்த்துக்கலாம்”

இல்லங்க……….” 

கவலைப் படாத சாந்தி.. எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்.. அப்புறம் இதை பற்றி கீர்த்தி கிட்ட பேசிராத.. சண்முகம்  கீர்த்தி கிட்ட இதை பத்தி இன்னும் பேசலை.. இன்னொரு முக்கியமான விஷயம் மறந்தும் கூட………..” என்றவரின் பேச்சை இடையிட்ட, 

ஹ்ம்ம்.. ஞாபகம் இருக்குங்க..” என்றார். 

அம்மா சோப்பு எடுத்துட்டு வர மறந்துட்டேன்.. ப்ளீஸ் மா.. கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்” என்ற சேகரின் சத்தம் குளியலறையில் இருந்து வரவும் சாந்தி உள்ளே சென்றார்.

 

 

அதே நேரத்தில்  சென்னையில் இருந்து புறப்பட்ட சண்முகம் குடுப்பம் காரில் இலஞ்சியை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள். சண்முகம் காரை ஓட்ட, அவர் அருகில் அவரது மகள் கீர்தன்யா அமர்ந்திருக்க, அவரது மனைவி அமுதா பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

FM ரேடியோவில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றி  கொண்டிருந்த கீர்தன்யா ஒரு கட்டத்தில் அதை அனைத்துவிட்டு, அப்பா கொஞ்சம் காரை நிறுத்துங்க.. நான் பின்னாடி போறேன்” என்றாள்.

சண்முகம் வண்டியை நிறுத்தியதும், பின்னால் சென்ற கீர்தன்யா அன்னை மடியில் தலை வைத்து  கண்மூடி படுத்துக் கொண்டாள்.

அமுதா மெளனமாக மகளின் தலையை வருட, சண்முகம் மெளனமாக வண்டியை கிளப்பினார். அமுதா  மெளனமாக இருந்தாலும் அவரின் மனம் மூன்று நாட்கள் பின்னோக்கி சென்றது.

 

ரவு 8 மணி அளவில், கீர்தன்யாவும் அமுதாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, கீர்தன்யா ச்ச்” என்ற சலிப்புடன் எழுந்துக் கொள்ள,

அமுதா, என்ன கீர்த்தி?”

ஒரே போர் மா.. நான் சிஸ்டம் பார்க்கப் போறேன்”

அப்பா வர நேரம் தான்.. சாப்டுட்டு போய் சிஸ்டம்ல உட்காரு” 

ச்ச்.. என்னமா நீ…………” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்த சண்முகம்,

என்னாச்சு! அம்மாக்கும் பொண்ணுக்கும் என்ன விவாதம்?”  என்று கேட்டார்.

அமுதா, ஒரு விவாதமும் இல்லை.. சாப்டுட்டு சிஸ்டம்ல உட்காருனு சொல்லிட்டு இருந்தேன்” என்றார்.

மகள் முகத்தைப் பார்த்த சண்முகம்,வீட்டுக்கு வரும் போதே எனக்கு ஒரே பசி.. உங்க அம்மா வேற வந்ததும் வராததுமா வாசலிலேயே நிக்க வச்சு அதை வாங்கிட்டு வாங்க, இதை வாங்கிட்டு வாங்கனு அனுப்பிட்டா..

இப்போ வைத்துக்குள்ள பையர் இஞ்சின்னே ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இப்போ நீ சிஸ்டம்ல உட்கார்ந்துட்ட! நீ வரும்வரை சாப்பாடு போட மாட்டா.. ப்ளீஸ்டா.. அப்பா மேல் கருணை காட்டு..” என்றார்.

அமுதா இடையில் கையை வைத்துக் கொண்டு, “ஹ்ம்ம்.. வரும் போதே வாங்காம வந்தது உங்க தப்பு.. அப்புறம்.. எப்படி எப்படி! வாசலிலேயே நிக்க வச்சு அனுப்புனேனா! ஒரு மணி நேரம் போராடி அனுபிருக்கேன்”

கீர்தன்யா, சாப்பிடலாம் ப்பா”

அமுதா மகளை முறைக்க,

கீர்தன்யா இதழில் மிக சிறு புன்னகையுடன், “என்ன மா? வரலை சொன்னாலும் முறைக்குற.. வரேன்னு சொன்னாலும் முறைக்குற”

சண்முகம், அது ஒன்றுமில்லைடா.. அவ சொன்னப்ப நீ வரலையாம் அதான் இந்த முறைப்பு”

அப்பாவும் மகளும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா!………….” ஏதோ சொல்ல வந்த அமுதா கஷ்டப்பட்டு அதை நிறுத்தி, வாங்க சாப்பிடலாம்” என்று கூறி உணவறைக்கு சென்றார்.

என்ன தான் அமுதா கவனமாக நிறுத்தினாலும், அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை துல்லியமாக அறிந்த கீர்தன்யாவின் இதழில் இருந்த மிக சிறு புன்னகை கூட மறைந்தது.

சண்முகம்  சத்தமின்றி பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு, மகளில் தோளை தட்டி இயல்பான குரலில், வாடா சாப்பிடலாம்.. (உணவறை பக்கம் பார்வை செலுத்திவிட்டு) அம்மா ஏதோ புதுசா ட்ரை பண்ணியிருக்காளாம்.. அதை சூடா சாப்பிடுறது பெட்டெர்.. இல்லாட்டி ரொம்ப கஷ்டமா போய்டும்” என்று கூறி புன்னகைத்தார்.

பதிலுக்கு புன்னகைக்க முயற்சித்து தோற்றுப் போனாள் கீர்தன்யா. தன் முயற்சி தோல்வியடைந்ததை உணர்ந்த சண்முகம், மகளின் முயற்சியை அறிந்தும் அறியாதவர் போல், அன்று தன் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி பேசியபடி உணவறைக்கு சென்றார்.

உறங்கும் முன் சண்முகம், கீர்த்தி நாளைல இருந்து அப்பாக்கு வெகேஷன் லீவ் ஸ்டார்ட் ஆகுது..” என்றவர் இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு, இந்த வெகேஷனுக்கு நாம இலஞ்சி போகலாம்னு பிளான் பண்ணிருக்கிறேன்” என்றார்.

கீர்தன்யா ஒன்றும் பேசாமல் வெறுமையாக தந்தையைப் பார்த்தாள்.

கணவரின் அறிவிப்பில் சிறு பதற்றத்துடன் மகளையும் கணவரையும் மாற்றி மாற்றி பார்த்தார் அமுதா.

சண்முகம், நாளானைக்கு காலைல கார்ல கிளம்பலாம்னு யோசிக்குறேன்.. நீ என்ன சொல்றடா?” என்று கேட்டார்.

நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க”

உன்னை தனியா விட்டுட்டு……………”

நான் வரலை”

ஏன்?”

கண்ணில் வலியுடன் தந்தையைப் பார்த்தாள் கீர்தன்யா.

அமுதா ஏதோ கூறவர, சண்முகம் பார்த்த பார்வையில் அமைதியானார்.

சண்முகம், கீர்த்தி சந்துரு போன கஷ்டம் எங்களுக்கு மட்டும் இல்லையா! அதை ஏத்துகிட்டு வாழ பழகனும்.. இன்னும் எத்தனை நாள் போனவனையே நினைத்து உன்னையும் கஷ்டபடுத்தி, எங்களையும் கஷ்டபடுத்தப் போற?

உன்னுடைய பழைய குறும்பையும் துள்ளலையும் பார்க்க நானும் அம்மாவும் ஏங்கிட்டு இருக்கோம்..”

கீர்தன்யா, முடியலையே பா!” என்று இயலாமையுடன் கூறினாள்.

அமுதா மெளனமாக கண்ணீர் சிந்தினார்.

சண்முகம், நீ இப்படி வாடிய முகத்துடன் இருந்தா சந்துருக்கு பிடிக்குமா?” என்று கேட்டார்.

கீர்தன்யா வேதனையுடன் கண்களை மூடினாள். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் சந்துரு அவள் மனகண்ணில் வந்தான். எப்பொழுதாவது அவளது முகம் சிறிது வாடினாலும் அவளையே சுற்றி சுற்றி வந்து அவளை கொஞ்சி சிரிக்க வைக்கும் சந்துருவின் நினைவை தன் சிந்தனையில் இருந்து அகற்ற முடியாமல் தவித்தாள்.

சண்முகம் மகள் அருகே அமர்ந்து அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு இதமாக பேசத் தொடங்கினார்.

கஷ்டமா தான்டா இருக்கும்.. நீ இப்படி இருக்கிறதை பார்க்க பார்க்க எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா.. எப்போதும் அதையே நினைச்சுட்டு இருக்க கூடாது.. உனக்காக தானே சென்னை வந்தோம்…………..”

இங்கேயே இருக்க வேண்டியது தானே! எதுக்கு இப்போ இலஞ்சி போனும்னு சொல்றீங்க? அப்படி வெகேஷன் போனும்னா வேற எங்கேயாது போகலாம் ப்பா.. இலஞ்சி வேண்டாம்”

மகளில் தலையை வருடியபடி, கீர்த்தி நாம இலஞ்சிக்கு மட்டும் தான் போக போ……………...”

தெரியும்.. இருந்தாலும் வேணாம்..”

கீர்த்தி அப்பா சொல்லி முடிச்சுக்குறேன்.. அப்புறம் நீ பதில் சொல்லு.. நம்ம இலஞ்சி வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு…………….”

அதை கணேசன் மாமாவை பார்க்க சொல்லுங்க”

கீர்த்தி.. நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு.. இலஞ்சி வீடு பழசா ஆகிருச்சு.. பட்டாசல்(ஹால்), அரவீட்டு(ஸ்டோர் ரூம்) சீலிங் இறங்கிட்டு வருது.. உடனே சரி செய்யலை சீலிங்கு முழுவதும் டமேஜ் ஆகிரும்.. மாடிக் கதவு துருபிடிக்க ஆரம்ச்சு இருக்குது.. அதை மாத்தனும்..

கணேசன் மாமா பார்த்துப்பான் தான் பட் இன்னொரு வேலையும் இருக்குது.. ரைஸ் மில் விக்குறதுக்கு பார்த்துட்டு இருந்தது உனக்கே தெரியும்.. இப்போ ஒரு பார்ட்டி செட் ஆகி வரது போல இருக்குது.. ஸோ இந்த வெகேஷன்ல போனா எல்லா வேலையையும் முடிச்சுரலாம்..

நான் மட்டும் போனா போதாதானு நீ நினைக்கலாம்.. பட்.. ஏற்கனவே கணேசன் மாமா ரொம்ப நாளா கூப்டுட்டு இருக்கிறான்.. நாம போகவே இல்லை..

சபரி கல்யாணத்துக்கும் போகலை.. அதான் இப்போ எல்லாரும் போகலாம்னு சொல்றேன்..

ஸோ வேண்டாம்னு சொல்லாத டா..” என்று சிறு கெஞ்சலும், பெரும் எதிர்பார்ப்புமாக முடித்தார்.

சிறிது நேரம் யோசித்த கீர்தன்யா, எனக்கு அங்க போர் அடிக்கும் பா” என்றாள்.

கீர்தன்யாவின் இந்த பதிலில் இருந்தே அவள் மனம் இலஞ்சி செல்ல ஒத்துக் கொள்ள தொடங்கிவிட்டதை சண்முகம் புரிந்துக் கொண்டார். அவரது மனம் மகிழ்ந்தது, ஏனெனில் இலஞ்சி செல்ல அவர் முடிவெடுத்த முக்கியமான காரணம் வேறு.

தன் நெருங்கிய நண்பன் கணேசனின் இரண்டாவது மகன் சேகருக்கும் கீர்தன்யாவுக்கும் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த முக்கியமான காரணம்.

சண்முகம், நீ வேணும்னா சேகர் கூட ஸ்கூலுக்கு போ.. அங்க போய் பேன்டிங் அண்ட் கரப்ட்  கிளாஸ் எடு” என்றார்.

சட்டென்று நிமிர்ந்த கீர்தன்யா, அந்த ஸ்னேக் ஸ்னேகா கூட நான் போறதா? சும்மாவே பீத்துவான்.. இதுல அவன் கூட அவன் ஸ்கூலுக்கு போய் நான் கிளாஸ் எடுத்தா! சொல்லவே வேணாம்.. என்னவோ அவன் கிட்ட நான் சம்பளம் வாங்குற மாதிரி காலரை தூக்கிவிட்டுக்கும் அந்த குரங்கு”

இரண்டு வருடங்கள் கழித்து மகளின் துள்ளல் சிறிது எட்டிப் பார்க்கவும் சண்முகமும் அமுதாவும் அகமும் முகமும் மலர்ந்தனர். சண்முகம் தன் முடிவு சரி என்று நினைத்தார்.

சண்முகம், பேன்டிங் அண்ட் கரப்ட் கிளாஸ் பத்து நாள் லீவ்னு  நாளைக்கு மறக்காம அனௌன்ஸ் பண்ணிடுடா”

“10டேஸ் ஆ”

ஓகே ஒன் வீக்”

அப்பா 3 டேஸ்ல வந்துரலாம் ப்பா ப்ளீஸ்”

நீ பத்து நாள்னு அனௌன்ஸ் பண்ணுடா.. அங்க போர் அடிச்சுதுனா நீயும் அம்மாவும் 3டேஸ்ல கிளம்பி வந்துருங்க.. சரியா?”

கீர்தன்யா அரை மனதுடன் சரி என்று தலையை ஆட்டினாள்.

சண்முகம், ரொம்ப நாளா கேட்கணும் நினைச்சேன்.. சேகருக்கு எதுக்குடா ஸ்னேக் ஸ்னேகானு பெயர் வச்ச?”

இத்தனை வருஷமா உங்களுக்கு தெரியாதா! நம்ப முடியலையே!”

சண்முகத்திற்கு காரணம் தெரியும் என்றாலும் தன்  மகளின் பழைய குறும்புத்தனத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக இந்த கேள்வியைக் கேட்டார்.

அவன் உன்னை கீரிபிள்ளைனு சொன்னதால் ஸ்னேக்னு கூப்பிடுவனு தெரியும்.. பட் ஸ்னேகா பெயர் காரணம் தெரியாது”

கீர்தன்யா சிறு புன்னகையுடன், அது பெருசா ஒன்றுமில்லை ப்பா.. அவன் டென்த் படிக்கும் போது ID கார்டுல அவன் நேம் snekar னு பிரிண்ட் ஆகிருச்சு.. அதுல இருந்து.. ஸ்னேக் சேகர்   ஸ்னேக் ஸ்னேகானு மாறிடுச்சு” என்றாள்.

சண்முகம் புன்னகைத்தார்.

அமுதா முகமலர்ச்சியுடன் இருவருக்கும் பால் அருந்த கொடுத்தார்.

 

கீர்தன்யா உறங்கிய பின், தங்கள் அறையில் அமுதா, எதுக்காக இப்போ இலஞ்சி போகணும்னு சொல்றீங்க?” என்று கேட்டார்.

நான் சொன்னதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த!”

உங்க வாய் சொன்னதை கேட்டுட்டு தான் இருந்தேன்.. மனசு சொன்னதை கேட்கலை”

சண்முகம் புன்னகையுடன், கணேசன், சேகருக்கு நம்ம கீர்த்தியைப் பொண்ணு கேட்கிறான்.

அமுதாவிற்கு சந்தோஷமும் கவலையும் ஒன்று சேர்ந்து வந்தது.

சந்தோஷமாக, எப்போங்க அண்ணா கேட்டாங்க?” என்று கேட்டவர், உடனே முகம் வாட கவலையுடன், இதுக்கு கீர்த்தி ஒத்துக்கணுமே!” என்றார். 

ஒத்துப்பா.. இந்த பத்து நாள் நல்ல பழகட்டும்…………..”

என்னங்க நீங்க! என்னமோ சேகரும் கீர்த்தியும் புதுசா பழகனும் போல பேசுறீங்க!”

ரெண்டு பேரும் எப்போதும் விளையாட்டா சண்டை போட்டு பழகிக்குறது வேறு.. கல்யாணம் பண்ற எண்ணத்துடன் பழகுறது வேறு”

ஹ்ம்ம்.. இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியா நடந்தா திருசெந்தூர் முருகனுக்கு பால் குடம் எடுத்து, தங்க தேர் இழுக்கனும்ங்க”

சண்முகம் புன்னகைத்தார்.

 

சாலையில் எதிரே வந்த வாகன ஒலியில் நிகழ் காலத்திற்கு திரும்பினார் அமுதா.

குறிப்பு: சிந்தனை 2 அரை மணி நேரத்தில் பதிவிடுறேன் தோழமைகளே..

Advertisement