Advertisement

நான் உன் நிறையன்றோ!..

8

வருடங்கள் கடந்தது..

கபாலி இப்போது ஒரு மீட்டிங் என சென்னையில் இருக்கிறான். இந்த வருடங்களில் அவனிற்கு என இடம் எடுத்துக் கொண்டான் தொழிலில். ‘*** க்ரனைட்ஸ், கபாலி’ என்றால் தெரியாதவர்கள் அந்த பீல்ட்டில் யாருமில்லை. அவனின் உழைப்பு அவ்வளவு பெரியது. 

வீடு வராமல்.. சரியாக உண்ணாமல்.. வயதிற்கு உண்டான எந்த நடவடிக்கையும் இல்லாமல்.. கபாலி சுற்றி சுழன்று கற்றான் வேலையை. வாரத்தில் மூன்று நாட்கள் குவாரியில்தான் இருந்தான்.. அங்கேயே தங்கிக் கொண்டான். கற்கள் எப்படி எடுக்கின்றனர்.. தரம் பிரிக்கின்றனர்.. என தானாகவே கற்றுக்கொண்டான். அடுத்த இரண்டு நாட்கள் டவுன் அலுவலகத்தில் இருப்பான்.. அப்போது அந்த இரண்டுநாள்தான்  வீடு வருவான். அடுத்த இரண்டு நாட்கள் வெளியூர்  செல்வான்.. தங்களுடைய பையர்களை பார்த்து நேரில் சென்று மார்க்கெட்டிங் செய்தான்.. தொழிலை பெருக்கினான்.

முதல் இரண்டு வருடம் குமரன் அங்கே உள்ளூரில் இல்லை. ஆனால், அதன்பிறகு.. மீண்டும் வந்து சேர்ந்தான் தொழிலுக்கு. தனியாக டையில்ஸ் கடை வைத்திருக்கிறான். அப்படியே ஆடிட்டர்.. மேனேஜர்.. எல்லோரும் ஆங்காங்கே.. கண்ணில் பட்டனர், தொழில்முறையில். கபாலி எப்போதும் அவர்கள்மேல் ஒருகண் வைத்திருந்தான்.

நாட்கள் இயல்பாக சென்றது. கபாலி தன் வேலையை பார்த்தான்.. அசோசியேஷன் பக்கம் அவன் செல்லுவதேயில்லை. அங்கே, ஆதிகேசவன் கைதான் ஓங்கி இருக்கும் அதனால், இவன் சங்கம் பக்கம் போவதில்லை. போகும் அளவிற்கு, எந்த விஷயமும் இவனின் கைமீறி நடக்கவில்லை.. எல்லாவற்றையும் இவனே சமாளித்துக் கொள்கிறான். இவனிற்கென, ஒருகூட்டம்.. இருக்கவே செய்கிறது.

!@!@!@!@!@!@!@!@!@!@!

ஜெயந்தினியின் பிறந்தநாள்  அன்று..

கபாலியை, அன்னை முயன்று வீடு வர வைத்திருந்தார். காலையிலேயே, அருகிலிருந்த கோவிலில் அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தார். எனவே, பூஜைக்கு பெண்ணோடு சென்று வழிபட்டு வந்தார்.

கபாலி, எப்போதும் போல இந்த வருடமும் அக்காவின் பிறந்தநாள் மறந்து போனது. அன்னை அழைத்து சொல்லவும்.. அலட்டிக் கொள்ளவில்லை.. “முடிந்தால் வரேன் ம்மா..” என்றுவிட்டான்.

மகேஸ்வரி “இல்ல, உனக்கு வீட்டு ஞாபகமே இல்லை.. உனக்கு அக்கா அவ, அவளுக்கு கல்யாணம் செய்யணும்.. உனக்கு தெரியுமா தெரியாதா.. நீதான் பேசணும் கண்டிப்பா வரனும் நீ” என்றார்.

கபாலிக்கு வருடத்தில் வரும் முக்கியமான நாட்கள் நினைவில் இருப்பதில்லை இப்போதெல்லாம். தன்னுடைய பிறந்தநாளை கூட.. அவன் நினைவில் கொள்வதில்லை. அன்னையும் அக்காவும் அழைத்து வாழ்த்து சொல்லும் போது.. கேட்டுக் கொள்வான். மற்றபடி கோவிலுக்கு கூட செல்லுவதில்லை. அன்னை, இனிப்பு செய்து வைத்துக்கொண்டு.. காத்திருப்பார்.. சிலநேரம் இரவுதான் வருவான். இப்படி தொழிலை தவிர, எதிலும் கவனமில்லாமல் பற்றிலாமல் இருந்தான், கபாலி.

இப்போது அக்காவின் திருமணம் என அன்னை சொல்லவும்  சற்று நிதானப்பட்டான்.. ‘ம்.. ஆமாமில்ல..’ என தனக்குள் எண்ணிக் கொண்டு ”என்ன ம்மா, ஏதாவது இடம் வந்திருக்கா” என்றான் பொறுப்பாக.

அன்னை “சொந்தத்தில் கேட்ப்பாங்க போலடா.. இரண்டு வரன் இருக்கு.. இப்போது எக்ஸாம் ரிசல்ட் வந்திடுச்சி.. அவளுக்கு. ஜெயந்தி வேலைக்கு போகணும்ன்னு சொல்றா.. முதலில் கல்யாணம் செய்துக்கட்டும்.. அப்பா இருந்திருந்தால், இவ்வளவுநாள்.. இப்படி அவள் விருப்படி விட்டிருக்கமாட்டார் டா.. நீ வா..பேசணும்” என்றார்.

கபாலி யோசனையோடு கிளம்பிவிட்டான் வீட்டிற்கு. அன்னையே எதிர்பார்க்கவில்லை, அவ்வளவு சீக்கிரத்தில் மகனை.

கபாலி, அக்காவிற்கு என iphone வாங்கி வந்திருந்தான். அன்னை அக்கா இருவரும் வியந்துதான் போக்கினர். ஜெயந்தினி “தம்பி.. எதிர்பார்க்கல டா” என அவனின் பரிசை வாங்கிக் கொண்டாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு.. கபாலி இயல்பாக வீட்டில் இருந்தான். உண்டு முடித்து அன்னை மகளிடம் திருமணம் பற்றி பேச்செடுக்க.. கபாலி பொறுமையாக பார்த்திருந்தான்.. அக்கா என்ன சொல்லுகிறாள்  என கேட்க தயாராகினான்.

ஜெயந்தினி எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் “யோசிக்கிறேன் ம்மா.. உடனே வேண்டாமே” என்றாள்.

மகேஸ்வரி “என்ன நாளைக்கேவா.. கல்யாணம், இப்போ ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும்.. இதில் யோசிக்க என்ன இருக்கு.. உனக்கு தொழில் செய்யற மாப்பிள்ளை வேணுமா.. இல்லை, வேலைக்கு போறவங்களா பார்க்கலாமா.. அதை சொல்லு.. வெளிநாடு பார்க்கவா..” என சிலபல கேள்விகளை கேட்டார்.

ஜெயந்தினி எதும் பேசாமல் தனதறைக்கு சென்றுவிட்டாள்.

கபாலிக்கு இதெல்லாம் புரியவில்லை.. அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அக்கா பேசாமல் செல்லவும் “ஏன் ம்மா, என்ன அவசரம்.. கொஞ்ச நாள் ஆகட்டுமே.. முழுமனதோடு அவள் திருமணம் செய்துக்க வேண்டாமா” என்றான்.

அன்னை “டேய் வயது என்ன ஆகுது.. இந்த வயதில் அவள் எனக்கு பிறந்தேவிட்டாள். நான் பார்க்கதான் போறேன், சொல்லிடு அவகிட்ட” என்றார், கோவமாக.

இப்போது கபாலிக்கு, போனில் அழைப்பு வரவும்.. அலுவலகம் கிளம்பிவிட்டான்.

தனதறையில் இருந்த, ஜெயந்தினிக்கு இதெல்லாம் காதில் விழத்தான் செய்தது. உள்ளுக்குள் பயம் பிடித்துக்கொண்டது. ஆக, அன்னைக்கு  எதோ தெரிந்திருக்கிறது.. என புரிந்துவிட்டது பெண்ணுக்கு.

தனது அறையின் கதவை சாற்றிக் கொண்டாள் சத்தமில்லாமல். வசீகரனுக்கு அழைத்து பேசவேண்டும் போல இருந்தது. ஆனால், அவன் இது போன்று.. வேலை நேரங்களில், பொதுவாக அவளிடம் பேசமாட்டான். அப்படியும் இவள் அழைத்தால் எடுக்கமாட்டான். எனவே, அழைக்காமல் அமர்ந்துக் கொண்டாள். 

ஜெய்ந்தினிக்கு கண்ணிலிருந்து நீர் கொட்டியது.. ‘திட்டம் போட்டு எப்படியோ என்னை கவர்ந்துக் கொண்டான்.. இப்போது, அவனா வீட்டில் சொல்லுவான்..  போடா.. நான் என்ன பண்ணுவேன்’ என அழுகையாக வந்தது.. தன் கழுத்தில்.. அவன் வாங்கிக் கொடுத்த ஒரு பென்டன்ட் போட்டிருந்தாள்.. அதை பிடித்துக் கொண்டாள் இப்போது.

சரியாக அந்த நேரம்.. வசீகரன் அழைத்தான் போனில். நெகிழ்ந்து போனாள் பெண்.. “ஹெலோ” என்றாள் திக்கி திக்கி.

வசீகரன் “என்ன டாம்மா.. குரலே சரியில்ல” என்றான்  குழந்தையிடம் கேட்பது போல.

ஜெயந்தினி “க்கும்…க்கும்.. அ..” என அழத்  தொடங்கினாள்.

வசீகரன் “ஹேய்.. ஜெயந்த், என்ன டா, என்ன ஆச்சு.. எங்க இருக்க.. “ என பதறினான்.

ஜெயந்தி “எ..எதுக்கு கூப்பிடீங்க” என்றாள் கரகரப்பான குரலில்..

வசி “இன்னிக்கு சீக்கரம் வந்துட்டேன்.. மயூராவோட அரங்கேற்றம். ஞாபகமிருக்கா.. அதுக்கு போகணும். அதான் மதியமே வந்துட்டேன். நீ, எங்க இருக்க.. வெளிய வரமுடியுமா?.. பார்க்கலாம்ன்னு சொல்ல கூப்பிட்டேன்.. உன் பர்த்டேல.. பார்க்கணுமே டா.. அதற்கு கோவமா? அதான் இந்த அழுகையா” என்றான் கனிவான குரலில், அவள் தன்னை தேடித்தான் அழுகிறாள் என எண்ணினான்.

ஜெயந்தினிக்கு இன்னும் இன்னும் காதல் பொங்கியது.. எப்போதும் இந்த நேரத்தில் அழைக்காதவன்.. எதோ டெலிபதி போல.. தான் வருந்தும் போது, அழைத்ததே அவ்வளவு இன்பம்.. இப்போதும் கனிவாக அழுதியா! என கேட்கவும் இன்னும் காதல்தான் பொங்கியது, பெண்ணுக்கு.

ஜெயந்தினி கொஞ்சம் தன்னை சமாதனாப்படுத்திக் கொண்டாள் ‘ம்.. இன்னிக்கு, அவன் தங்கையின் அரங்கேற்றம். மறந்துட்டேன்.’ என நினைவு வந்தது இப்போது. அதனால், இப்போது எப்படி சொல்லுவது, இந்த செய்தியை.. சொன்னால் கஷ்ட்டபடுவானே.. நாளைக்கு சொல்லிக் கொள்ளலாம்’ என எண்ணினாள்.

ஜெயந்தினியின் அமைதி பார்த்து “என்ன டா.. எதுக்கு அழுத..”என்றான் மீண்டும் காதலாக.

ஜெயந்தினி “இல்ல..ஒண்ணுமில்ல” என்றாள் அமைதிப்படுத்திக்   கொண்ட குரலில்.

அவளின் மனம் புரிந்தனுக்கா.. குரலின் ஓசை புரியாது. வசி “இல்லையே.. குரல் சரியில்லை.. நீ பேசும் விதமும் சரியில்லை.. என்ன விஷயம்.. சொல்லிட்டா, நான் நிம்மதியா யோசிப்பேன் இல்லை, வேலையை பார்ப்பேன்.. இப்படி மறைச்சா.. டென்ஷன் ஆகுது. சொல்லு ஜெய்..” என்றான், கொஞ்சல் எல்லாம் விட்டு.. விசாரிக்கத் தொடங்கினான்.

ஜெயந்தி அதன்பின் வீட்டில் தன் அம்மா பேசியதை சொல்லினாள். அதன்பின் அழத் தொடங்கினாள் சத்தமில்லாமல் ”பயமா இருக்கு வசி..” என்றாள்.

வசீகரனுக்கு அதிர்ச்சிதான் முதலில். தன் வீட்டில் வயதாகிறது திருமணத்திற்கு பார்க்கலாம் என்றபோதெல்லாம்.. இந்த இயர் வேண்டாமே.. இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்.. எனக்கு இன்னும்  பிஸினெஸ் பிடிபடல ம்மா.. செட்டிலாகல.. நான் இன்னும் லைஃப்’ப என்ஜாய் பன்னால ம்மா..’ என பலவாறு பேசி வருடங்களை கடத்திருந்தான்.  இப்போது சந்தோஷம்..  பயம்.. இரண்டும் சேர்ந்தே வந்தது, அவனுள்.

ஆனாலும், இந்த நாட்களை அவன் ஆவலோடு எதிர்பார்த்துதான் இருந்தான். எனவே பொறுமையாக, வசி “ஓ.. ஜெய்ம்மா.. அவ்வளவுதானே.. இனிமேல்தான் நம்ம வொர்த் என்னான்னு காட்டானும். தைரியமா இரு.. நான், எங்கள் வீட்டில் பேசறேன். கொஞ்சம் கஷ்ட்டம்தான்.. ஆனாலும் பேசிடலாம்.” என்றான் நிறைவான குரலில்.

ஜெயந்தினி “ஏன், இன்னமும் வேண்டான்னு சொல்லுவாங்களா.. எங்க அப்பாவை தெரியாதா உங்கள் வீட்டுக்கு.. சீக்கிரம் வந்து எங்கள் வீட்டில் பேசுங்க. எனக்கு தம்பிக்கிட்ட சொல்ல கஷ்ட்டமா இருக்கு.. அம்மாக்கு எதோ தெரிஞ்சிடுச்சு.. நானே சொல்லனும்ன்னு நினைக்கிறாங்க போல. எப்படி சொல்றது. நீங்க வீட்டில் சீக்கரம் பேசுங்க.. ப்ளீஸ்.” என்றாள்.

வசி “ஹேய்.. ரெண்டுநாள் போகட்டும்.. பேசிடுறேன். அதற்கு முன், வா.. கண்டிப்பா உன்னை இன்னிக்கு பார்க்கணும்.. வா..” என்றான் ஆழ்ந்த குரலில்.

ஜெயந்தினி “இல்ல.. நீங்க மயூரா பாங்க்ஷ்ன் போங்க.. நாளைக்கு பார்கலாம்.” என்றாள்.

வசி “இல்ல டா, ம்கூம்.. இன்னிக்கு ஸ்பெஷல் டே.. ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து, பார்க்கணும். உனக்கு ஒரு கிப்ஃட் வைச்சிருக்கேன்.. எப்போதும் போல, அந்த ஹைவே.. ஹோட்டல். நான் கார் அனுப்பறேன்.. உன் இன்சிடியூட்டில் இரு.. பை” என்றவன் போனை வைத்தான்.

வசிக்கு, அமைதி வந்தது. அவனிற்கு தெரியுமே.. தங்கள் வீட்டில் எவ்வளவு போராட வேண்டும் என. எனவே, போராட தயாராகினான். அவளையும் தயாராக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

 

Advertisement