Advertisement

நான் உன் நிறையன்றோ!..

5

குமரனின் மாமனாரிடம், குமரன் மனைவியின் எண்.. அவர் எங்கே தங்கி இருக்கிறார்கள்.. என வாங்கிக் கொண்டான் கபாலி. 

உடனே “ஆனந்த், உங்களுக்கு நம்பிக்கையான ஆளுங்க யாராவது இருந்தால் சொல்லுங்க கேரளா வரை போகனும்..” என்றான்.

ஆனந்த் “வேணாம் தம்பி, நா.. தம்பின்னு சொல்ல்லாம்மில்ல” என்றார்.

கபாலி “ஐயோ,அதுதான் இப்போ பிரச்சனை பாருங்க.. உங்ககிட்ட ஆட்கள் இருக்கா.. இல்லை, நான் என் ப்ரெண்ட்ஸ் மூலம் பார்த்துக்கிறேன்”என்றான்.

ஆனந்த் “தம்பி, வீட்டு பெண்களை இதில் இழுக்க வேண்டாமே, நம்ம தராதறத்திற்கு நல்லதில்லையே” என்றார்.

கபாலி “என் தரமே இங்க என்னான்னு தெரியலை.. இப்போ போய் பாவ புண்ணியம் பார்த்துகிட்டு.. சீக்கிரம் அனுப்புங்க.. காலையில் அவங்க இங்க இருக்கணும்..குமரன் கிட்ட என்ன இருக்குன்னே தெரியலை.. எனக்கு ஏதும் புரியலை.. வரட்டும்” என்றான் குழப்பமான குரலில்.

மேலும் இந்த ஆடிட்டர்.. அவரை நெருங்கவே முடியவில்லை. அவரை பற்றி, எதுவுமே தெரியவில்லை.. இவனுக்கு. எனவே, டிடக்டிவ் வேண்டும் என எண்ணினான். ஆனால், அர்த்தராத்திரியில் ஒன்றும் செய்ய முடியவில்லை.. எப்படி கண்டுபிடிப்பது என யோசித்துக் கொண்டிருந்தான்.

இப்போது, குமரன், தனக்கு கீழ் வேலை செய்யும் தனக்கு கொஞ்சம் உதவ கூடுமென எண்ணும் நபர்களுக்கு அழைத்தான். எல்லோரும் எடுத்தனர்.. ‘எங்கிருக்கீங்க சர், எப்போ வருவீங்க சர்..’ என எல்லோரும் அமைதியாக கோவமாக.. கபாலி சர் பாவம்.. ஆனந்த் கூட இருக்காப்பல.. பேசுங்க..’ என பல தகவல்களை கொடுத்தனர். எனவே, கபாலி என்ன நிலையில் இருக்கிறான் என அறிய குமரன், ஆனந்த் எண்ணுக்கு அழைத்தான். 

ஆனந்த் “சர், எ..எனக்கு கூப்பிடுறார்  குமரன்..” என்றார் பதறியவராக. அதை கேட்டதும் கபாலிக்கு இன்னும் கோவம் வந்தது. ஆனந்த் எடுக்கவா.. வேண்டாமா.. என்பது போல பார்த்துக் கொண்டே இருந்தார். கபாலி நடையின் வேகத்தை குறைக்காமல், ஆனந்தையும் பார்க்காமல் நடந்துக் கொண்டே இருந்தான். போன் அழைப்பு வந்துக்கொண்டே இருந்தது ஆனந்த் எண்ணுக்கு.

கபாலி, அதை கேட்டுக் கொண்டே இருந்தான். எடு.. எடுக்க வேண்டாம்.. என, எந்த ஜாடையும் காட்டவில்லை.. கபாலி. அதனால், ஆனந்த் அமைதியாக இருந்தார். ஆனந்துக்கு வரும் ஒவ்வொரு அழைப்பிற்கும்.. கோவம் ஏறிக் கொண்டே இருந்தது, கபாலிக்கு.

அழைப்பு ஓயவில்லை.. பசி எல்லோருக்கும். கபாலிக்கு பசி தாகம் ஏதும் தெரியவில்லை போல.. ஆனந்த் “சர், கபில் சர்.. எல்லோருக்கும் பசிக்கும்” என்றார்.

கபாலி ஒன்றும் சொல்லவில்லை.. ”சாப்பிட்டு வாங்க..” என்றவன், கையில் காசு கொடுத்தான்.

இருவர் உடனிருக்க, ஆனந்த் மற்றவர்களோடு.. கிளம்பினார் உண்பதற்கு. ஒருமணி நேரம் சென்று.. தாங்களும் உண்டு, மற்றவர்களுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு வந்தார்.

கிட்ட தட்ட இரண்டு மணி நேரமாக ஆனந்துக்கு அழைத்து ஓய்ந்து.. அவர் எடுக்கவில்லை எனவும் கபாலிக்கு அழைத்தார், குமரன்.

கபாலி போனை கையில் வைத்துக் கொண்டு வெறித்துக் கொண்டிருந்தான்.. தொடர்ந்து அரை மணி நேரம் அழைத்த பிறகுதான் எடுத்தான் கபாலி. மனது முழுவதும் ஆற்ற முடியாத.. சினம். பொறுமையான சினம் எனலாம். காலையிலிருந்து தேடி அலைந்து பொறுமை காத்து, இப்போதுதான் அவனின் போனில் அவன் தேடிய வழி கிடைத்திருக்கிறது.. இந்த அழைப்பின் மூலம். எனவே, அந்த சினம், கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலையை அடைய வேண்டுமே..  அதனால், உடனே எடுக்கவில்லை, அழைப்பை. பொறுத்தான்.

குமரன் முறையான இடைவெளியில் அழைத்துக் கொண்டிருந்தான், கபாலியை. ஏன் இன்னும் தன் அழைப்பை எடுக்கவில்லை என அவனுக்கும் கோவம். குமரனுக்கு, கபாலி, தன் குடும்பத்தை தேடுவான்..  பணியாளர்களை தேடுவான்.. என எண்ணினான். அதைவிட, அவனுக்கு தான் கொடுக்கும் பிரச்சனை.. கடை செயல்படாததாகதான் இருக்கும்.. அதனால், மற்றதை யோசிக்க முடியாது என குமரன் ஒரு கணக்கு போடான்.

ஆனால், கபாலி கடை முடியிருந்தாலும் பரவாயில்லை.. தனக்கு விடை தெரிய வேண்டும் என விரட்டினான் எல்லோரையும்.

கபாலி, இப்போது விடாமல் அலறிக் கொண்டிருந்த குமரனின் அழைப்பை ஏற்று “சொல்லுங்க குமரன்.. எப்படி இருக்கீங்க..” என்றான்  நிதான குரலில்.. எப்படி இந்த பொறுமை அவன் குரலில் வந்தது என்றே தெரியவில்லை. 

குமரன் இன்னும் கோவமானான் ”என்ன நக்கல் கபில்.. உனக்கும் எனக்கும்தான் பிரச்சனை.. அந்த வயதானவரை ஏன் இப்படி.. இப்படி “ என தடுமாறினான். என்ன சொல்லுவது என தெரியாமல்.

கபாலி அமைதியாக இருந்தான்.

மீண்டும் குமரன் “என்ன வேண்டும் சொல்லு” என்றார் பல்லை கடித்துக் கொண்டு.

கபாலிக்கும் சினம்தான் “நான் எதுக்கு சொல்லணும்.. நேரில் வா” என்றான்.

குமரன் வேறு எதோ பேசவர.. வைத்துவிட்டான் கபாலி.

குமரன் சென்னையில் இருந்தான்.. மாமனார் இப்படி காரில்  கிளம்பி காணாமல் போகிட்டார்.. போலீசுக்கு போகலமா.. உங்கபேர் சொல்லித்தான் கூட்டி போனாங்க..’ என தன் மைத்துனர் சொன்னதுமே.. கிளம்பிவிட்டான். எனவே, பாதி தூரம் வந்துவிட்டான். இப்போது கபாலி போனை வைத்ததும்.. தான் இதுவரை வீரம் என நினைத்து செய்தது எல்லாம்.. வலிமையிழந்ததாக உணர்ந்தான் கபாலியின் முன். அது, இன்னும் இன்னும் வெறியை கொடுத்து குமரனுக்கு. குமரனோடு, சூப்பெர்வைசர்.. இன்சார்ஜ் என மூவரும் தப்பி சென்ற காரிலேயே.. வந்துக் கொண்டிருந்தனர், இங்கு. 

காரில் பேச்சு அனல் பறந்தது. எல்லாம் கபாலியை பற்றிதான். சிறுபையனிடம் இப்படி தோற்றுவிட்டோமே என ஆறவேயில்லை அவர்களுக்கு. ஆனாலும், கபாலியினால் ஒன்றும் செய்ய முடியாது என தான் எல்லோரின் எண்ணமும்.. எப்படியேனும் என் மாமனாரை மீட்டு விட்டால் போதும்.. அதன்பின் அவன் பிடி என் கையில். என பலவகையாகத் திட்டம் போட்டுக் கொண்டுதான் வந்து சேர்ந்தனர்.

மேனேஜர் தானே முக்கியம்.. அவர் ஆடிட்டர் பொறுப்பில் இருக்கிறார். அதனால், இவர்கள் மட்டும் வந்தனர்.

இங்கு, கபாலி இப்போதுதான் உண்ணத் தொடங்கினான்.  கொஞ்சம் அவனின் மனம் சமன்பட்டது.

மதியத்திலிருந்து கபாலிக்கு வீட்டிலிருந்து போன் வந்துக் கொண்டேயிருந்தது. அதனால், அக்காக்கு மெசேஜ் செய்தான்.. ‘வேலைக்கா.. குவாரி போயிட்டு, பெங்களூர் போறேன்..  நாளைதான் வருவேன்’ என செய்தி அனுப்பி இருந்தான்.

ஆனால், ஜெயந்தினிக்கு மாலையில்.. தன் நண்பன் வசீகரன் மூலமாக வந்த செய்தி.. என்ன என்னமோ சொல்லியது. பயம் பற்றிக்கொண்டது அவளை. ’என்னது கடை திறக்கலையா.. வேலை பார்ப்பவர்கள்.. வெளியே நின்றனறா.. இன்னமும் கடை திறக்கவில்லையா..’ என பதறிக் கொண்டே, தம்பியை அழைத்துக் கொண்டிருந்தாள் மாலையிலிருந்து.

சிலநேரம் அவனின் அழைப்பு செகண்ட் காலில் போகிற்று.. ஆனாலும், மீண்டும் அழைக்கவில்லை.. தம்பி.  இந்தமுறை, ஏதும் மெசேஜ் செய்யவுமில்லை. தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தாள். ஆனால், கபாலி, அந்த அழைப்பு தொந்திரவாக இருக்க.. தன் அக்கா எண்ணை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டான். ஜெயந்தினி விழித்திருந்தாள் விடை தெரியாமல்.

நடுநிசிக்கு மேல்.. குமரன் வந்து சேர்ந்தார் கபாலியின் கடைக்கு.  

வெட்டவெளியில்.. அமர்ந்திருந்தனர் கபாலியும் ஆனந்தும். ஆட்கள் இருவரும் உறங்க.. மற்றவர்கள் எல்லோரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழித்திருந்தனர். இப்போது ஆட்கள் பத்து நபர்களுக்கு மேல் வந்திருந்தனர்.

குமரன், ஐம்பது வயதை நெருங்கும் மனிதர். பேராசை அதிகம். அதிலும் கூட்டு சேரும் போது எதையும் செய்யும் தைரியம் தன்போல் வந்துவிடுகிறது. கூட்டு சேர்த்துக் கொண்டார். சூப்பெர்வைசர், இன்சார்ஜ், ஆடிட்டர் என எல்லோரையும் சேர்ப்பது ஈசியாக இருந்தது, ரமணனுக்கு நலமில்லை எனும் போது. 

இவர்களை நம்பி பொறுப்பை கொடுத்த ரமணன் ஓய்வில் இருந்தார்.. குவாரி செல்லாமல்..  வீட்டிலிருந்தார். அதையும் மீறி பலநாட்கள் வந்தாலும்.. வரவு செலவு மட்டும் பார்த்தார். அந்த ஆறுமாதம்தான்.. இவர்களுக்கு துளிர் விட்டு போனது. ரமணனின் எல்லா பைய்ர்ஸிடமும், அவர் பெயர் சொல்லி.. வரவு செலவுகளை குமரன் தனியாக செய்ய தொடங்கினார், அவர் குவாரியிலிருந்துக் கொண்டே. கடைசி ஆறு மாதத்தில்.. குமரன் ஆலோசனைப்படி.. கம்பெனியின் பொறுப்பை மட்டும்.. மேனேஜர் பெயருக்கு மாற்றினார். அடுத்த இரண்டு மாதத்திற்கு. அவ்வளவுதான். ரமணனும், சுதாரிப்பாகதான் செய்தார். ஆனாலும், குமரனை நம்பினார்.

பெரும்பாலும், இவர்களின் கஸ்டமர்ஸ் எல்லோரும் வெளிமாநிலங்கள்தான். குமரன் கட்டுப்பாட்டில் அந்த கம்பெனியே நடந்ததால்.. பலரிடம், ரமணன் தனக்கு கம்பெனியை விற்றுவிட்டார். இனி நான்தான் இங்கு பார்க்கிறேன்.. உங்களுக்கு சாதகமாக வேண்டியதை செய்து தருவேன்.. அதனால், என்ன வேண்டுமோ கேட்க்கலாம் என கொஞ்சம் கொஞ்சமாக பேசி எல்லோரையும், தன் இல்லீகல் விற்பனைக்கு பயன்படுத்திக் கொண்டார். குவாரியிலிருந்து எடுக்கபடும் கற்கள்.. கணக்கில் கட்டுவது சொற்பமானது.. குமரன் கணக்கில், வரவு வைப்பது அதிகமானது. இரவு பகலாக குவாரியில் வேலை நடந்தது. அதற்கு எல்லோருக்கும் பங்கு. மேனேஜர், ஆடிட்டர் பங்கும் வேறுவிதம். ஆக, பையர்ஸ்.. பெரிய கஸ்ட்டமர்ஸ் எல்லோரும் இந்த ஏழு எட்டு மாதத்தில் குமரன் வசம். பிஸினெஸ் என்பது கன்டாக்ட்ஸ்(contacts) கொண்டு நடப்பதுதானே. அத்தோடு, உண்மையான பத்திரம்.. அந்த பவர் பத்திரம்.. என்ன நடந்தது என குமரன் சொன்னால்தான் கபாலிக்கே முழுதாக தெரியும். ஆக, குமரன் சொல்லுவது போல.. கபாலியின் பிடி அவரிடம்தான் இருக்கிறது. 

இப்போது, குமரன் கபாலியை கண்டதும்.. ஒருநிமிடம் ஸ்தம்பித்து போனான். நேற்று வரை இருந்த, சிறுபையன்.. இல்லை இவன். இந்த ஒருநாளில் உயர்ந்து தெரிந்தான்.. நெற்றி நீண்டு.. கண்கள் வெறி கொண்ட வேங்கையென மின்ன.. திமிரும் பொறுமையும் சேர்ந்து.. அமர்ந்திருந்தான், அந்த வெட்டவெளியில் சூரியனாக.

ஆனந்த் எழுந்து நின்றான், குமரனை பார்த்து. கபாலி அமைதியாக இருந்தான். ஆனந்த் கண்ணசைக்க.. மூன்று சேர் வந்தது. அமர்ந்தனர் மூவரும். 

கபாலி, குமரனை பார்த்துக் கொண்டே இருந்தான். ‘எத்தனை நம்பினேன்.. இந்த மனிதரை..’ என முதலில் நொந்தான்.

ஆனால், அடுத்த ஷணம் ‘எப்படி என் அப்பாவை ஏமாற்றி இருப்பான்.. தைரியமாக.. மார்கெட் பிளேஸ்சில் இருக்கிற கடையை மூடிவைத்திருக்கிறான்.. எது கொடுத்திருக்கும் இந்த தைரியத்தை.. அப்போ, எதோ இவனிடம் இருக்கு..’ என யோசித்தான்.

குமரன் “கபாலி.. அவரை விடு  முதலில்.. அதான், நா.. நாங்கள் வந்துட்டோமே, பேசிக்கலாம்..” என்றான்.

கபாலி சிரித்தான்.. “ம்.. விட்டுடுவோம்.. நான் என்ன பன்னபோறேன் அவரை வைச்சு.. சரி, சொல்லுங்க வேற என்னவெல்லாம்  நான் பண்ணனும்” என்றான்.

சூப்பெர்வைசர் “கபில்.. என்னப்பா.. பேசிக்கலாம்” என்றான்.

கபாலி, ப்பா.. எரிப்பது போல முறைத்தான் “யார் கபில்.. மரியாதை மரியாதை வேணும்.. ம். ரமேஷ், இவங்களை அந்த பக்கம் கூட்டி போ.. என் கண்ணில் படவே கூடாது” என்றான், தன்னருகில் நின்ற ஒருவனிடம்.

அடுத்த இரேண்டு நிமிடத்தில் குமரன் மட்டுமே இருந்தார், அவரும் “வேண்டாம் கபில், அவங்க இங்க வேலை செய்யறவங்க.. இப்படி எல்லாம் செய்யாதே.. எங்களுக்கும் ஆளுங்க இருக்காங்க.. அப்புறம் ரொம்ப அனுபவிப்ப..” என்றார் வன்மமாக.

கபாலி “இருப்பாங்க, என் அப்பன் காசில்ல.. கணக்கில்லாமல் எடுத்து கொடுத்திருப்ப.. இருப்பாங்க.” என்றான், அவனும் நக்கலாக.

குமரன் “ஓ.. உழைப்பு எங்களோடது. இந்த கடையில், எந்த இடத்தில் எக்ஸ்போர்ட் கல்லு இருக்கும்ன்னு கூட உங்க அப்பாக்கு தெரியாது. எல்லாம் நாங்க சொல்லனும். எங்க எவ்வளவு வரவேண்டி இருக்குன்னு கடைசி ஆக ஆக.. தெரியவே இல்ல.. ம்.. ஒன்னு சொல்லவா.. நாளைக்கும் இந்த கடை பூட்டிதான் இருக்கும். முறையா எல்லாம் நடக்கும். ஹா.. ஹா.. பத்திரம் எங்ககிட்ட தம்பி.” என்றான் ஏகமாக நக்கல் செய்து.

கபாலி அதிர்ந்தாலும் வெளியே காட்டவில்லை. இந்த வார்த்தைகளை கேட்டதும் கபாலியின் சத்தியெல்லாம் வடிந்து போனாதாக உணர்ந்தான். ’என்ன பத்திரம்.. என்ன பவர்.. என்ன இருக்கிறது’ என யோசித்தவன் கண்டுக்கொண்டான்.

கபாலி முயன்று சாதாரண குரலில் ”ம்.. அப்படியா, யார் கொடுத்தது.. அப்பாவா” என்றான்.

குமரன், கபாலியின் முகம் பார்த்து இன்னும் சத்தமாக பேசினான்.. “ஆமாம், எங்களுக்குத்தான் கொடுத்தார்.. நீதான் உள்ளே வர கூடாது. நீயாக வெளிய போகிட்டா.. உனக்கு நல்லது. நாளைக்கு வரை காத்திருந்தால்.. உன் மூக்குடைந்து.. இப்படி  இங்கே அத்துமீறி நுழைந்ததுக்கு, குளுத்தை பிடித்து தள்ளுவோம்.” என்றான் அதே நக்கல் குரலில்.

கபாலிக்கு, சினம் சினம் சினம் மட்டுமே. ஆனால், இவன் சொல்லுவதும் உண்மையாக இருக்குமோ என மனம் தடதடக்க தொடங்கியது. என்ன செய்வது என தெரியவில்லை. ‘என்ன ஆனாலும், இந்த இடம் தன்னுடையதாகிற்றே.. என்ன செய்ய முடியும்.. பார்க்கலாம் அதையும்’ என தோன்ற “ம்.. சரி, என்ன பத்திரம்” என்றான் புரியாத பாவனையில்.

குமரன் “நேற்று நீ என்னை முறைச்சிகிட்டே கேட்டியே.. பத்திரம் வேணும்ன்னு, அந்த பத்திரம்தான்.. பார்க்கிறியா” என்றார்.

கபாலி “கண்டிப்பா..” என்றான்.

குமரன் ஒரு சேராக்ஸ் காபி எடுத்து கொடுத்தார்.. அவன் கையில். 

கபாலி அதை பார்க்கவெல்லாம் இல்லை.. “அதான் எல்லாம் உங்கள் கையில் இருக்கே.. பகலிலேயே என்னை வெளியே அனுப்பிவிட்டிருக்கலாமே.. ஏன் கடையை பூட்டி, நீங்க எல்லாம் ஊரை விட்டு ஓடினீங்க.. புரியலையே” என்றான்.

குமரனுக்கு கொஞ்சம் வேர்த்தது “ம்.. என்ன இருந்தாலும்.. க்கும்.. எல்லாம் உன் மரியாதைக்காகத்தான்..” என்றார், கீழே  பார்த்தவாறே.

கபாலிக்கு எப்போடா விடியும், ‘யாரிடம் ப்ரைவேட் டிடக்ட்டிவ் தெரியும்..’ என யோசனை சென்றது. மூளை வேலை செய்துக் கொண்டே இருந்தது.. விடியலின் அறிகுறியாய்.. வெள்ளி முளைத்தது.. வசீகரன் அழைப்பால்.

Advertisement