Advertisement

நான் உன் நிறையன்றோ!..

4

இருபத்துஓர் வயது கபாலிக்கு. சிறகுகளை இப்போதுதான் விரிக்க தொடங்கியிருக்கிறான். உலகம் என்பது என்ன என அவனுக்கு புரிய தொடங்கும் விதமே.. துரோகமாக இருந்தது.

தந்தை இல்லை.. அவர் எழுப்பிய உயர் கோபுரமும்.. அவனின் கண்ணெதிரே சுரண்டப்படுகிறது. எப்படி நிறுத்துவது தெரியவில்லை.. யாரிடம் கேட்பது.. ஏதும் புரியவில்லை. ஆடிட்டர்க்கு அழைத்து பேசினால், அவர் எதோ வெளியூரில் இருக்கிறார்.. கடந்த ஒருமாதமாக. 

இது இப்படிதான் என அடித்து பேசி.. இவனுக்கு வந்து நிற்க ஆட்களில்லை. தவித்து போனான். எங்கே தொடங்கி.. யாரை கேட்பது, தெரியவில்லை.

கபாலி ‘குவாரிக்கு சென்றால், வரவேற்கிறார்கள்..  டீ கொடுக்கிறார்கள்.. நம்மோடு தமிழ் தெரிந்த ஒரு பணியாளன் நிற்கிறான்.. ஆனால், நான் யார் இங்கு..  கற்களை லாரி லாரியாக ஏற்றிக் கொண்டு எங்கு செல்லுகிறார்கள்.. இந்த மாதத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் நில்.. கம்பெனி யாரின் பொறுப்பில் இருக்கு.. தினமும் வருகிறேன்.. குமரன் வருவதேயில்லை.. ஆனால், வேலைகள் மட்டும் எங்கோ நடக்கிறது.. என்ன நடக்கிறது..’ என தன் அக்காவிடம் புலம்பினான் கபாலி.

ஜெயந்தினிக்கும் ஒன்றும் புரியவில்லை. குமரன் தவிர யாரிடம் கேட்பது.. தம்பியை சமாதானம் செய்கிறாள்.. “என்ன டா, கம்பனியை என்ன செய்ய முடியும்.. அவங்களுக்கும் அப்பா இல்லாதது கஷ்ட்டமாக இருக்குமில்ல.. என்ன செய்வதுன்னு தெரியாமலிருக்குமில்ல. உனக்கு சந்தேகமாக இருந்தால்.. கம்பெனியை உன் பேரில் மாத்திக்க.. அப்போ, எல்லாம் உன் பார்வைக்கு வருமில்ல” என்றாள், தன் படிப்பறிவில்.

இப்போதுதான் வளர்ந்து வரும் இந்த ஆணுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.. அதன் வேலையில் இறங்கினான், கபாலி. ப்பா.. தலை சுற்றி போகிற்று அவனுக்கு. “பத்திரம் அப்பா லாக்கரில் இருக்கு.. ஆனால், அது தேவையில்ல தம்பி.. அப்பா பவர் மேனேஜர்க்கு கொடுத்திருக்காரே.. உங்களுக்கு காலேஜ் பீஸ் கட்டியாச்சு தம்பி.. நீங்க ஜான் செய்து படிங்க.” குமரன்., அக்கறையான குரலில்.

முதல்முறை குமரனை நேருக்கு நேர் முறைத்தான் கபாலி.. “எனக்கு, டாக்குமென்ட்ஸ் பார்க்கணும் எடுங்க..” என்றான் எந்த உறவுமுறையும், சொல்லி அழைக்காமல், பெரியவர் என மரியாதைக்கு சர் என கூட அழைக்காமல் திட்டவட்டமாக பேசினான் இளையவன்.

குமரனும் கொஞ்சம் சங்கடப்பட்டு வெளியே போனார்.

அவ்வளவுதான் மறுநாள் குவாரி அலுவலகம் இரண்டும் ஸ்தம்பித்தது.

மறுநாள், காலையில் நேராக கபாலி அலுவலகம் வந்தான்.. ‘இன்று, பத்திரம் பார்க்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டு வந்தான்.

அலுவலகம் வந்த கபாலிக்கு அதிர்ச்சி. வேலை செய்யும் ஆட்கள் எல்லாம்.. வெளியே கடைக்கு வெளியே நின்றிருந்தனர்.

(குறிப்பு:- ரமணன் குவாரி.. ரெகுலர் வியாபாரத்திற்கு என கடை.. அங்கேயே பின்பக்கம் கற்களை பாலீஷ் செய்யும் இடம் ஆக, குடோன். குவாரி மட்டும் தொலைவில் இருக்கும்.)

கபாலிக்கு என்னவாக இருக்கும் என யூகிக்க கூட முடியவில்லை. இப்படி, தன்னிடம் வேலை செய்பவர்கள் நடுரோட்டில் என் நிற்கிறார்கள் எனத்தான் அதிர்ந்தான்.

இவன் வந்து இறங்கி நிற்க.. அவசரமாக பணியாளர்கள் வந்து, விவரம் சொல்லினர் “எப்போதும் குடோன் இருப்பதால்.. பூட்டமாட்டங்க சர் கடையை. நாங்க வருவோம்.. செக்யூரிட்டி இருப்பார். இன்னிக்கு, செக்யூரிட்டி இல்லை, லாரி வந்து போகும் பாதையும் லாக் ஆகி இருக்கு.. சாவி கேட்க மேனேஜர்க்கு, போன் செய்தோம்.. ‘சுவிட்ச் ஆப்ன்னு’ வருது. குமரன் சர்க்கு போன் செய்தால்.. அப்படிதான் வருது..” என சொல்லி.. இன்னும் யார் யாரோ அங்கே வேலை செய்யும் இன்சார்ஜ்.. சூப்பெர்வைசர் என இன்னும் இரண்டு நபர்களை சொல்லி யாரின் போனும் எடுக்கவில்லை என்றனர்.

ப்பா… கல்லூரி மாணவனின் மிகசிறந்த காலை பொழுது.. இது. எல்லா விடியலும்.. சுகமானது அல்ல. எல்லா நேரமும் சாதகமானது அல்ல. சில விடியல்.. பாதையை சொல்லும்.. சில நேரம் தோல்வியை சொல்லும். சில விடியல் பயணத்தை தீர்மானிக்கும், சில நேரம் தடம் மாற வைக்கிறது. ஆனால், போராட கற்று தந்துவிடுகிறது, எல்லா இக்கட்டான சூழலும். 

இப்போதும், இவர்கள் சொல்லுவதை கேட்ட கபாலிக்கு, மனதுக்குள் சிரிப்புதான் வந்தது.. ஜாலியானவன்.. இந்த சமஸ்ட்டார் இல்லைன்னா.. அடுத்து என.. போகிற போக்கில், கற்றுக் கொள்ளும் சாதாரணமானவன். அதனாலோ என்னமோ சிரிப்பு வந்தது.  ‘டேய்.. இது, என் அப்பன் கடை டா.. நான் வெளியே நிற்கிறேன்..’ என விதியை நினைத்து ஏகத்தாள சிரிப்புதான் வந்தது, அவனுக்கு.

அசரவெல்லாம் இல்லை.. வேலையாட்களிடம் காசு கொடுத்தான்.. “யார் யார் சாப்பிட்லையோ காபி டீ டிபன் சாப்பிடுங்க..” என்றவன், இந்த ஒருமாதமாக.. தனக்கு தெரிந்த நடுத்தர வயதுடைய துடிப்பான் வேலையாளாக வேலை செய்யும் “ஆனந்த்.. உங்களுக்கு, குமரன் வீடு தெரியமா” என்றான் அவரை பார்த்து.

எல்லோரிடமும் பொதுவாக.. “ஏதாவது அவசரமாக இருக்கும் போயிருப்பாங்க.. நீங்க இங்கேயே இருங்க.. நாங்க வந்திடுறோம்” என்றவன் ஆனந்தோடு காரிலேயே குமரன் வீடு நோக்கி சென்றான்.

இப்போது ஆடிட்டருக்கும் அழைத்தான்..பாரபட்சமே இல்லாமல்.. ஒரே மாதிரியான செய்திதான் வந்தது. 

ஒவ்வொரு வீடாக சென்றான்.. கபாலி. குமரன் வீட்டில்.. “புள்ளைங்களுக்கு லீவ்ன்னு, அவங்க குடும்பம் அப்போவே ஊருக்கு போயிட்டாங்க. சர் மட்டும் இருந்தார்.. இப்போ எங்கேன்னு தெரியலைங்க” என்றனர் அக்கம் பக்கம் இருந்தோர். 

அடுத்து மேனேஜர் அவர் கொஞ்சம் வயதானவர்.. ‘அந்த அம்மாக்கு முடியலைன்னு.. பொண்ணு வீட்டில் இருக்கு இரண்டு மாதமாக.. இவர் அங்க போயிருப்பார்..’ என்றனர்.

இவன் தேடி சென்ற ஆட்களின் எந்த வீடுகளிலும் ஆட்கள் இல்லை. இவர்களிருவரின் வீடுகள்தான், டவுன்னில் இருந்தது.. மற்ற இருவரின் வீடும் வேறு திசைகள். கபாலி  யோசிக்க எண்ணினான்.

எனவே, கபாலி காரை நிறுத்தினான் ஒரு டீ கடையில். பொதுவான மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் கடையில் நிறுத்தினான். பளபளவென ஒரு கார் கடையின் எதிரே நிற்கவும்.. எல்லோரும் சற்று உறுபார்த்தனர். இருவரும் இறங்கவில்லை.

ஆனந்த் “சர்.. நா.. நாம பேசாமல் போலீசுக்கு போயிடலாமா” என்றான்.

கபாலி யோசனையோடு அமர்ந்திருந்தான்.. ஏதும் பேச முடியவில்லை, அவனால். கபாலிக்கு எல்லாமே புரிந்துவிட்ட நிலை. ஆனால், ‘எப்படி ஒரே நாளில் எதோ நடந்துவிடும்.. நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன்.. ஒருமாதமாக இங்கே வருகிறேன்.. எந்த மாற்றமும் எனக்கு தெரியவில்லையா.. இடியட்’ என தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தான்.

பத்து நிமிடம் எதும் பேசாமலிருந்தான். 

பின்தான் அருகில் ஒருவர் இருப்பது புரிய “நீங்க டீ குடிங்க..” என்றான். 

ஆனந்த் “உங்களுக்கு தம்பி” என்றார். 

கபாலி, அந்த கடையை பார்த்தான். இதுவரை.. அவன் இதுபோன்ற கடைகளுக்கு வந்ததேயில்லை. அதனாலோ என்னமோ, தன்போல அவனின் முகம் ஒரு ஒவ்வாமையை காட்டிவிட்டது அனிச்சையாய்.

ஆனந்த் அதை உணர்ந்து.. “சரிங்க தம்பி, நான் குடிச்சிட்டு வரேன்.. உங்களுக்கு வேறு, அங்க இருக்கு ஹோட்டல்.. பார்சல் வாங்கி வரவா” என்றார்.

கபாலி “இல்ல.. இல்ல.. அப்படி இல்ல.. எனக்கு இப்போ ஏதும் வேண்டாம்..” என்றான், எந்த பாவமும் இல்லாமல். பின் அவனே “அங்க நம்ம கடைகிட்ட இருக்கறவங்களை வீட்டுக்கு போக சொல்லிடுங்க.. “ என்றான் இயலாமையான குரலில்.

ஆனந்த் ‘சரிங்க சர்..’ என சொல்லி இறங்கி சென்றார்.

கபாலிக்கு, காரில் ஏசியிலும் வேர்க்க தொடங்கியது. நம்முடையது.. என் அப்பா எனக்கு கொடுத்து சென்றது.. என இந்த நாட்களில், தன் கம்பெனியோடு மனதளவில் நெருங்கி இருந்தான் கபாலி. அத்தோடு ஒரு ஆராய்ச்சி வேறு எப்போதும் அவன் கண்களில்.. ஏதாவது தப்பாக நடக்கிறதோ.. என்ற ஆராய்ச்சிதான் அது. ஆனாலும், ‘என்னை மீறி எது நடந்திடும்’ என்ற எதார்த்த எண்ணம் ஒரு அலட்சியத்தை தந்துவிட்டதோ எனக்கு’ என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அதெல்லாவற்றையும் விட ‘அத்தனை வேலையாட்கள் வெளியே நிற்கிறார்கள்’ என தோன்ற.. அப்படி ஒரு அவமானமாக இருந்தது, கபாலிக்கு. அதை அவனால் தாங்கவே முடியவில்லை.

ஆனந்த் வந்து சேர்ந்தார்.. மீண்டும் ‘போலீசுக்கு போகலாமா’ என்றார். கபாலி “அந்த சூப்பெர்வைசர் வீடு சொல்லுங்க” என வண்டியை எடுத்தான்.

மீண்டும் அமைதியான பயணம்.. எப்போதும் போல இரண்டு வீடுகளிலும் ஆட்கள் இல்லை.

கபாலி.. நெடுஞ்சாலையை அடைந்து வண்டியை விரட்டினான் கோவத்தில்.. அவனிற்கு தான் ஏமாந்த விதம் அப்படி ஒரு அவமானத்தை கொடுத்தது. வண்டி நூற்று இருப்பதை  தாண்டி பறக்கிறது அவன் கைகளில். ஆனந்துக்கு பேசவே பயமாக இருந்தது.

பத்து நிமிடம் சென்று “சர்..” என்றார்.

கபாலி காரின் விண்டோவை இறக்கிவிட்டான்.. மீண்டும் வேகம். ஆனந்த் அமைதியாக அமர்ந்துக் கொண்டார். அந்த மனிதர் பாவம் மிரண்டு போய்விட்டார். 

கார் லவகமாக வளைந்து வளைந்து அழகாக செல்லுகிறது. தேவையான இடத்தில் வேகத்தை குறைத்துக் கொண்டு செல்லுகிறதுதான்.. ஆக, நிதானம் தப்பவில்லை. ஆனால், அதை ரசிக்கும் நிலையில் இல்லையே ஆனந்த். எனவே, மிரண்டு போய் அமர்ந்திருந்தார்.

கபாலி அறுபது கிலோமீட்டர் வந்த பிறகே.. கொஞ்சம் சுதாரித்தான். மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தியபடியே.. “ஆனந்த்.. நம்ம குவாரியில்.. யாரு.. நம்ம பேச்சை கேட்ப்பாங்க..” என்றான்.

ஆனந்த் “எல்லோரும் சர்.. அப்பாக்கு விஸ்வாசமான ஆட்கள் நிறையப் பேர் இருக்காங்க..” என்றார்.

கபாலி “கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆட்களாக ஒரு ஐந்தாறு நபர்களை வர சொல்லுங்க.” என்றான்.

ஆனந்த நிமிர்ந்து பார்த்தார்.. கபாலி “சொல்லுங்க ஆனந்த்” என்றான். ஆனந்துக்கு பயமோ பயம். ஆனாலும் கேள்வியே கேட்க முடியவில்லை.. நடப்பவை அணைத்து தெரியும். எனவே, பாதிப்பு பற்றியும் தெரியும், அதனால்.. ஏதும் பேசாமல்.. கபாலியின் பெயர் சொல்லி.. தயாராக இருக்க சொன்னார்.

வண்டி மீண்டும் நகரத்தில்.. மேனேஜரின் வீடு நோக்கி சென்றது. மதிய நேரம் கபாலி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அவர்களின் பெண் வீடு எங்கே என விசாரிக்கத் தொடங்கினர். அவர்களின் எண் இருக்கிறதா என விசாரிக்க தொடங்கினர். எந்த பலனும் இல்லை. எல்லாம் தஞ்சாவூர் பக்கம்.. போன் எடுக்கவில்லை என்றுவிட்டனர்.

அடுத்து குமரன் மாமியார் வீடு எங்கே என அக்கம் பக்கத்தில் விசாரிக்க.. அவர்கள் பர்கூர் என பதில் சொல்லினர். குத்து மதிப்பாக தெரு பெயர்..  மாமனாரின் கடை பெயர் சரியாக சொல்லிவிட்டனர். அதனால், பிடித்துக் கொண்டு கிளம்பினான் கபாலி. 

அங்கே சென்று சேரும் போது மணி மாலை நான்கு.

அந்த கடையை கண்டுபிடித்து விட்டனர். மெதுவாக சென்று ஆனந்த் விசாரித்தார்.. வெளியூரிலிருந்து வருகிறேன்.. குமரன் சொன்னார்.. ஹோல்சேல் விலை என.. குமரன் பேர் சொல்லி விசாரிக்க தொடங்கினார்.  கடையின் முதாளியான குமரனின் மாமனார் வந்தார். ஒண்ணுமில்ல.. என் நண்பர் காரில் இருக்கார்.. அவரால் முடியாது என எளிதாக, அவரை காருக்கு அழைத்து வந்து விட்டனர்.. அழகான மாலை வேளையில்.. பேசியபடியே.. காரிலேறிக் கொண்டு ஹோசூர் நோக்கி விரைந்தனர், கபாலியும் ஆனந்தும்.

அடுத்த நொடியே அந்த முதியவருக்கு தெரிந்து போனது, தான் எதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டோம் என. திக்கி திணறி “என்ன ப்பா.. யாருப்பா நீங்க” என்றார்.

ஆனந்த் “உங்க பெண் நம்பர் கொடுங்க” என்றார்.

அவரும் “அவங்க எல்லாம் கேரளா போயிருக்காங்களே ப்பா.. என்னாச்சு” என்றார்.

இவரிடம் என்ன விளக்கம் சொல்லுவது.. கபாலி பாவம் பார்க்கவில்லை.. “உங்க பையன் நம்பர் கொடுங்க” என்றான்.

அந்த எண் கொடுத்தார் பெரியவர்.

ஆனந்த் கபாலியின் சொல்படி பேசினார். “உடனே, குமரன் பேச வேண்டும்.. இல்லை, குவாரியில் கொன்னு புதைச்சிடுவோம்.. இரண்டுமணி நேரம்தான்” என திட்டவட்டமாக மிரட்டினர்.

கபாலி வேகமெடுத்தான்.. குவாரி ஆட்களை கடைக்கு வர சொல்லினர்.  வண்டி கடைக்கு சென்றது.

ஆனந்த், வரும் வழியிலேயே.. பூட்டை உடைக்க தேவையான பொருட்களை வாங்கி வந்தார். அதனால், தங்கள் அலுவலகத்தின் பூட்டை தாங்களே உடைத்தனர்.. விதி, யாரை விட்டது.

கபாலி காரை உள்ளே செலுத்த..  ஆட்கள் உள்ளே வந்தனர்.

கபாலி “உள்ள கட்டி போடுங்க.. நல்லா.. நகர முடியாத படி கட்டி போடுங்க.. ஈவு இரக்கமே பார்க்காதீங்க.” என்றான்.

நொடிகளை, தன் ஆவேசமான நடையால்.. நகர்த்திக் கொண்டிருந்தான் கபாலி.

எவ்வளவு பெரிய கோட்டை என்னுடையது.. என் அம்மா அப்பா பட்ட கஷ்ட்டம் எவ்வளவு.. அப்பா போன ஒரு மாதத்தில்.. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன்.. என்ன மகன் நான்.. அவ்வளவுதானா நான்.. என நடந்துக் கொண்டிருந்தான். நிலையில்லா மூளை.. உணவில்லா உடல்.. அவமானத்தை சுமந்த இளமனம்.. எவ்வளவு ஆபத்தானது. அதுதான் இங்கே நடந்துக் கொண்டிருந்தது.

வேலையாட்கள்.. கபாலி சொன்னது போல.. வாட்டசாட்டமாக இருந்தனர்.  கேள்வியாக ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.. தன் முதலாளியை.. சொன்னதை செய்தனர். இத்தனைக்கும், கபாலி இளையமுதலாளி, ரமணனின் மகன்.. என மட்டும்தான் தெரியும் அவ்வளவுதான். குவாரிக்கு வாரத்திற்கு இரண்டுமுறை மட்டுமே வருவார்.. என அவ்வளவுதான் தெரியும். 

ஆனந்த்தான் “இல்ல.. சேர் போடுங்க..உட்காருங்க சர்..” என மரியாதையாக நடத்தினார். முதலாளி கோவபடலாம்.. ஆனால், பாவம் இந்த வயதானவர் என்ன செய்வார்.. நாம் ஒன்றும் இதையே வேலையாக கொண்டவர்கள் இல்லையே.. ஆடியாட்கள் இல்லையே. நம் பாதிப்பை.. சரி செய்ய நினைக்கும் பாதிக்கபட்டவர்கள்தானே.. அதனால், கொஞ்சம் மரியாதையாக நடத்தினார்.

கபாலிக்கும் எல்லாம் தெரியும்.. அதனால், எதோ.. இந்த மனிதர் இங்கே இருந்தால்தான் குமரன் அழைப்பான் என அமைதியாக இருந்தான். 

குமரன் அழைத்துவிட்டான்.. கபாலிக்கு.

 

Advertisement