Advertisement

இங்கு மட்டும் கலாட்டா இல்லை.. இதே நேரத்தில்.. கபாலியின் மெயின் அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஆனால், அங்கே ஆட்கள் இருந்ததால்.. பெரிதாக சேதம் இல்லை.. எல்லோரும் வந்தவர்களை வளைத்து பிடித்துவிட்டனர். எதோ மேசை சேர் உடைந்தது.. சின்ன நெற்றி காயம் இப்படிதான். அதனால், அங்கிருந்தும் ஆனந்த் கபாலிக்கு அழைத்து சொன்னார்.

இப்போது பாதி வழியில் வந்துக் கொண்டிருந்த வசீகரன்.. ஆம்புலன்ஸ்க்கு அழைத்து சொல்லியபடியே அகாடமி வந்து சேர்ந்தான்.

மயூரா கையில் ரத்ததோடு அப்படியே.. ஜன்னலின் கீழே, சரிந்த நிலையில் இருந்தாள். வசீகரனுக்கு உயிரே இல்லை.. தங்கையை இந்த நிலையில் பார்த்தது. பாய்ந்து தூக்கிக் கொண்டான்.. தானே ஆம்புலன்சில் ஏற்றினான். தானும் காரெடுத்து பின் சென்றான்.

யாருக்கும் அழைக்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்து.. அவளுக்கு என்னவென தெரியாமல் அப்படியே நின்றுக் கொண்டான். 

இப்போது கபாலியின் அழைப்பு வந்தது வசீகரனுக்கு. தன் போனை எடுத்து பார்த்தவனின் கைகள் நடுங்கியது.. ‘எனக்கு அழைக்கவே மாட்டான். தெரிந்துவிட்டதா?.. என்ன சொல்லுவேன் இவனுக்கு பதில்’ என கைகள் நடுங்கியது. பேசவில்லை அப்படியே சைலெண்டில் போட்டு.. அடுத்த சேரில் வைத்துவிட்டான்.

இருபது நிமிடத்தில்.. ஆதிகேசவன் சுமதி, ஆனந்த்.. மகேஸ்வரி.. என எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர் மருத்துவமனைக்கு. 

வசீகரன் நிமிர்ந்து பார்த்ததும் அதிர்ந்தான்.. ஆசுவாசம் ஆனான்.

ஆதிகேசவன் மகனை தனியே கூட்டி சென்று.. முகம் கழுவி வர சொன்னார். தண்ணீர் குடித்தான்.. 

பின் வசீகரன் “கபில் வந்து கேட்டால் என்னப்பா சொல்றது.. எப்போதும் நேரமாக போயிடுவேன்.. இன்னிக்குன்னு ஏன் லேட் ஆச்சு..” என சின்ன குரலில் புலம்பத் தொடங்கினான், தன் தந்தையிடம்.

கபாலிதான் அழைத்து தன் மாமனாருக்கு சொல்லி இருந்தான். அத்தோடு, வீட்டுக்கு செக்யூரிட்டி உடனே போட்டுவிட்டான். போலீசுக்கு சொல்லி.. கடைக்கு செக்கியூரிட்டி போட்டு.. வக்கிலிடம் பேசி.. என அடுத்த ஒருமணி நேரம் கபாலி, மருத்துவமனையில் இருக்கும் யாருக்கும் அழைக்கவில்லை.

எல்லா ஏற்பாடுகளும் செய்து. தன் உபயோகத்திற்கு இருக்கும் காரை எடுத்துக் கொண்டு.. கிளம்பிவிட்டான் சென்னையிலிருந்து.

ஆதிகேசவன் மகனை சமாதானம் செய்தார்.

மருத்துவர்கள் மயூராவை பரிசோதித்து வெளியே வந்தனர். கையில் கண்ணாடி நன்றாக இறங்கியதில்.. ரத்தநாளங்கள் சேதமாகி இருந்தது.. ஆங்காங்கே காயம் அடி.. அத்தோடு அதிர்ச்சியில் கீழே விழுந்ததில் அவளின் ஐம்பதுநாள் கரு கலைந்திருந்தது. எனவே, அதை ஆபரேட் செய்ய, கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றனர்.

சுமதியும் மகேஸ்வரியும் “பொண்ணு எப்படி இருக்கா.. வேற பிரச்சனை” என தயங்கி தயங்கி நிற்க.

மருத்துவர்கள் “வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை” என்றனர். மற்ற விவரங்கள்.. சொல்லப்படும் என்றனர்.

பெண்களுக்கு என்ன கேட்பது.. எதற்கு அழுவது என தெரியவில்லை. சிசுவிற்காக அழுவதா.. பெண்ணுக்காக அழுவதா என தெரியாமல் அழுகையை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

ஆதிகேசவன் கையெழுத்து இட்டுக் கொடுத்தார். 

ஆதிகேசவன் கபாலிக்கு அழைத்து “மயூராவை பார்த்த டாக்டர் இப்போதான் வந்தனர். ஒண்ணுமில்ல அவளுக்கு. நல்லா இருக்கா.. பயம் கொள்ளும்படி ஒண்ணுமில்ல கபில்.” என்றார்.

கபாலி “அடியா மாமா.. ஆம்புலன்ஸ் வந்ததுன்னு செக்யூரிட்டி சொன்னார்.. என்னாச்சு மாமா.. நான் பேசலாமா.. அவகிட்ட போனை கொடுங்க” என்றான்.

ஆதிகேசவன் “மாப்பிள்ளை.. நாங்க எல்லாம் பார்த்துக்கிறோம்.. லேசா அடிதான். வலி தெரியாமல் இருக்க.. எதோ மருந்து கொடுத்திருக்காங்க.. எழுந்ததும் உங்ககிட்ட பேச வைக்கிறேன். நீங்க பதறாம மெதுவாக வாங்க.. சேலத்தில் நான் வேணும்ன்னா.. டிரைவரை வர சொல்லவா..” என்றார்.

கபாலிக்கு, என்னமோ மனதே ஒப்பவில்லை, தன் மாமனாரின் பதிலை. ஆனாலும், ஏதும் மறுத்து பேசாமல் “வர சொல்லுங்க மாமா.. இப்போ நான் மேல்மருவத்தூர் வந்துட்டேன்.. யாராவது இருந்தால் வரசொல்லுங்க” என்றான் இறுக்கமான குரலில்.

ஆதிகேசவன் மேலும் விளக்கினார் “நான் நம்ம இன்ஸ்பெக்ட்டர் கிட்ட பேசிட்டேன். உங்க ஆனந்த் கம்பெனிக்கு போயிருக்கார்.. அங்கே விசாரிக்க போலீஸ் வந்திருக்கு.. கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம்.” என்றார்.

கபாலி கேட்டுக் கொண்டான்.. ஏதும் பதில் கேள்வி கேட்டகவில்லை. கவனம் முழுவதும் யார் செய்தது.. அவளுக்கு என்ன ஆச்சு என்பதிலேயே இருந்தது.

உண்ணவில்லை வண்டியை விரட்டிக் கொண்டு வந்தான். நடு இரவில் சேலம் வந்தான். டிரைவர் வந்து சேர்ந்தார். கார் கை மாறிவிட்டான். இப்போது ஆனந்துக்கு அழைத்தான்.

ஆனந்த் பிடித்து வைத்திருந்த ஆட்களிடம் விசாரணை செய்ததில்.. எல்லாம் பாஷை தெரியாத ஆட்கள். குவாரியில் வைத்து விசாரித்ததில்.. எதோ அஜென்ட் எனதான் சொல்லினர். அவனை தூக்க ஆட்கள் சென்றிருப்பதாக சொன்னார் ஆனந்த்.

கபாலிக்கு ‘துணிந்து யார் செய்திருப்பர் என கோவம் வந்தது.. குமரன்.. இருக்காது. யார் புதிதாக தொழிலுக்கு வந்தது.. அந்த ப்ரைட். இருக்காது. அவனே நொந்து இருக்கான்.. அவன் காச கொடுத்து.. அடித்து மட்டும் போவானா.. யாராக இருக்கும்..’ என ரௌத்ரமாக வந்துக் கொண்டிருந்தான்.

காலையில் ஆறு மணிக்கு மேல்தான் வந்தான் மருத்துவமனைக்கு கபாலி.

மகேஸ்வரி இல்லை.. பெண்ணை பார்த்துக் கொள்ள வீடு சென்றிருந்தார். சுமதியும் ஆதிகேசவன் வசீகரன் என மூவரும் ஐசியூ முன் நின்றிருந்தனர்.

கபாலி, வரவும் எல்லோரும் நிமிர்ந்து நின்றனர். கபாலியின் முகம் எந்த பாவத்தையும் காட்டவில்லை. வசீகரனை கடந்து, தன் மாமனாரின் அருகில் வந்தான்.

ஆதிகேசவன் “உட்காருங்க மாப்பிள்ளை.. “ என்றார்.

கபாலி காய்ந்திருந்த தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு அமர்ந்தான்.. ஆதிகேசவன் அருகில் அமர்ந்தார்.. மெல்லிய குரலில்.. “வலது கையில் கண்ணாடி இறங்கி இருக்கு.. அழமாக. பனிரெண்டு தையல். அப்புறம்.. அப்புறம்.. க்கும், பாப்பா, மயூ..  அது கன்சீவாக இருந்திருக்க.. ஐம்பதுநாள்.. அது.. க்கும்..” என நிறுத்தி, கபாலியின் கையை பற்றிக் கொண்டார்.

கபாலியின் கைகள் லேசாக நடுங்கியது அந்த ஷனம்.. அடுத்த நொடி “அவ.. எப்படி இருக்கா..” என்றான் சின்ன குரலில்.

ஆதிகேசவன் “ம்.. நாங்க இரண்டு மணி நேரம் முன்னாடிதான் பார்த்து வந்தோம். மயக்கமாக இருக்கா.. இன்னும் விழிக்களை. எட்டு மணிக்கு ரூமுக்கு மாத்திடுவாங்கலாம். நீங்க போய் பார்த்திட்டு வாங்க மாப்பிள்ளை.. போங்க” என்றார்.

கபாலி “ம்..” என சொல்லி எழாமல் அமர்ந்திருந்தான்.

பத்து நிமிடம் சென்று.. எழுந்தான். தன் மாமாவிடம் எதோ கேட்டான். அவர் அங்கிருந்த அறையை காட்ட.. அதற்குள் சென்றான். பதினைந்து நிமிடம் சென்று வெளியே வந்தான்.

அங்கிருந்தோரிடம் கேட்டுக் கொண்டு.. மயூராவை பார்க்க சென்றான்.

இதுதான் மயூரா என அவனிற்கே.. அவனவளை அடையாளம் காட்டினர் செவிலியர். காலையில் பார்த்தவள் எங்கே.. என தேடினான் அவளிடமே. உருட்டி உருட்டி மிரட்டும் அந்த கண்கள் ஆடாமல் அசையாமல் மூடி இருந்தது. உடல் ஏதும் தெரியாமல் போர்வையால் மூடி இருந்தனர்.. மெல்ல அவளின் போர்வையை விளக்கி பார்க்க.. வலது கையில் ‘ப்பா.. பெரிய பேண்ட்எய்டு’. மீண்டும் தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான்.. நெற்றியில் காயம்.. தோள்பட்டையில் எதோ காயம்.. இன்னும் எங்கே என பார்த்தான்.. அப்போதுதான் நினைவு வந்தது குழந்தை என. அமைதியாக நின்றான்.. மனம் அமைதியில்லாமல் இருந்தது. என்னமோ, வெறுமையும்.. குழப்பமும் சேர்ந்தே பயணித்தது அவனுள். 

“கீச்சு கீச்சு என்றது..

கிட்ட வா என்றது..

பேச்சு ஏதுமின்றி.. 

பிரியமா என்றது..”

நர்ஸ் வந்து வெளியே வர சொல்ல.. வெளியே வந்தான் கபாலி. அமைதியாக அமர்ந்துக் கொண்டான். ஆனந்த் அழைத்தார். 

தன் மாமனாரிடம் எதோ சொன்னான். அவரும் எதோ சொல்ல.. இருவரும் கிளம்பிவிட்டனர்.. வசீகரனை இங்கே, பார்க்க சொல்லி கிளம்பினர்.

Advertisement