Advertisement

நான் உன் நிறையன்றோ!

3

மயூரா..

“திரன  தீம்த தனதீம்..

திரன தீம்த தனதீம்..

தீம்த தன தீம்..

தீம்த தன தீம்..

தி..ல்லா..னா…  திர் திர்.. தானா.. தில்லானா..” என இசை ஒலிக்க.. அதற்கு தக்க சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள் மயூரா. அது பெரிய ஹால்.. பாட்டு சத்தம் அவ்வளவாக கேட்கவில்லைதான்.. ஆனால், அவளின் தாளம் தப்பாத பாத சப்தம், அந்த தளத்தில் இனிமையாக கேட்டது. 

இந்த சப்தம், கீழே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த, அவளின் அன்னை சுமதியின் காதில் விழுந்தது.

அன்னை சுமதியும் பொறுமையாக.. ‘இதோ இப்போது முடித்திடுவாள்.. சும்மா பத்து நிமிஷம் ரிலாக்ஸ் பண்றா..’ என எண்ணிக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்.

சுமதியும் கொஞ்சம் சீரியலில் கவனமாகிவிட… ஆகிற்று அரைமணி நேரத்திற்கு மேல்.. இப்போது இன்னமும், அவள் நடனமாடும் சத்தம் “டங்.. டங்..” என கேட்க.. சுமதி கோவமாக எழுந்தார்.

மேலே வந்தார்.. அங்கே பொதுவான ஹாலில்.. போனில், பாடல் ஒலிக்க.. பெண் அழகாக ஆடிக் கொண்டிருந்தாள். 

சுமதி “அம்மு.. இதென்ன நாளைக்கு பப்ளிக் எக்ஸாம் வைச்சிகிட்டு.. இப்படி அசால்ட்டா டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்க..” என்றார்.. குரலில் எவ்வளவு முடியோமோ, அவ்வளவு பொறுமையை கொண்டு வந்து.. கேட்டார் அன்னை.

ஆடிக் கொண்டிருந்தவள் நின்றாள் அப்படியே. அவளின் இமைகள் நீண்ட.. கண்கள், பழைய பாடலில் வருமே.. மாவடு கண்கள், அப்படி அந்த பேசும் மாவடு கண்கள், தவறு செய்ததன் விளைவாக.. தாழ்ந்து தன் அன்னையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் போக.. நிலம் நோக்கினாள் பெண். சிறுபிள்ளையாய்.. உதடுகளை இறுக்கி கொண்டு, கைகளை  கோர்த்துக் கொண்டு நின்றாள்.. பவ்யமாய்.

அதைப் பார்த்ததும் அன்னைக்கு.. கோவம் போய்.. இணக்கம் வந்தது.. “அம்மு, போதும் டா.. போய் படிங்க. போடாம்மா..” என்றார் இறைஞ்சுதலாக.

அன்னையின் கெஞ்சும் குரலை கேட்டவள்.. “ஜல்..ஜல்” என ஓடி.. ‘ஜல்ல்ல்..’ என கால்களை அந்த தரையில் தேய்த்துக் கொண்டு.. அன்னையை வந்து கட்டிக் கொண்டாள் இறுக்கமாக. 

சுமதி “போதும் ஐஸ் வைச்சது.. ஒழுங்கா படிக்கணும்.. நல்ல மார்க்  எடுக்கணும்.. டான்ஸ் முக்கியம், அதைவிட.. படிப்பு ரொம்ப முக்கியம். கண்டிப்பா.. மார்க் வேணும்.” என்றார், கைகள் பெண்ணை அணைத்தாலும்.. கண்டிப்பை காட்டியது, அவரின் மொழி.

மயூரா, தன் உதடுகளை பழிப்பது போல.. கோணலாக வளைத்து.. அன்னையிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டாள் அறைக்கு.

சுமதி பெண்ணை பார்த்து கொஞ்சம் டென்ஷன் ஆனார். இது எப்போதும் நடப்பதுதான். பெண்ணுக்கு நடனம் மட்டுமே பிடிக்கிறது இப்போதெல்லாம், படிப்பை ஓரம் கட்டுகிறாள் என அன்னைக்கு கவலை. அதனால், இப்படி சின்ன சின்ன கண்டிப்பும்.. செல்லம் கொஞ்சலும் நடக்கிறது. அன்னை, பொறுமையாகவே இருக்கிறார்.. பரீட்சை நேரத்தில் அவளை ஏதும் சொல்ல கூடாது என. ஆனால், அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு பெண் படுத்தும் பாடு இருக்கே. இப்படிதான், நாளை பரீட்சையை வைத்துக்கொண்டு, டான்ஸ் ஆடுவது, பொறுப்பில்லாமல். ஆக, அவளும் அன்னையை டென்ஷன் செய்வாள். அதை மறைக்க.. இப்படி அன்னையை கட்டிக் கொண்டு சமாதானம் செய்திடுவாள்.

இன்று ஆதிகேசன் கிளப் செல்லவில்லை போல.. இப்போதே வீடு வந்தார்.

சுமதி, கீழே வந்தார்.. ”என்னங்க.. சீக்கிரம் வந்திட்டீங்க..” என்றார்.

ஆதிகேசவன் “ம்.. நாளைக்கு சென்னை வரை போகனும்.. சில விஷயங்கள் பேசணும்.. வசி வரேன்னு சொல்லியிருகான், அதான்.” என்றார்.

சுமதி கேட்டுக் கொண்டார், ”ஏதாவது குடிக்கிறீங்களா..” என்றார்.

ஆதிகேசவன் “வெந்நீர் கொடு குடிக்க..” என்றார்.

சுமதி உள்ளே சென்றார்.

ஆதிகேசன் சுமதி தம்பதியின், புதல்வன் வசீகரன்.. புதல்வி மயூரா. அளவான குடும்பம். சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருப்பர். ஆதிகேசவன் தன் தந்தை கொடுத்த தொழிலை இனிமையாகவே செய்தார்.. இப்போது மகனுக்கும் பழக்குகிறார்.

ஆதிகேசவனின் குடும்பம் பெரியது. மொத்தம் ஒரு அண்ணன் ஒரு அக்கா ஒரு தம்பி என இவரோடு மொத்தம் நான்கு நபர்கள் உடன்பிறந்தோர். இவர்களின் பூர்வீக தொழிலே.. இந்த க்ரைனைட் குவாரிகள்தான்.  இப்போது, தங்களின் அண்ணன் தம்பிகள் மூவருக்கும் இதுதான் தொழில். ஆதிகேசவன் உடன்பிறப்புகள்தான்.. தொழிலில் சில கட்பாடுகள்.. வரைமுறைகள் என இருபது வருடம் முன்பே.. தன் தந்தை மூலம், தொழிலையும் சங்கத்தையும் ஒழுங்குபடுத்தியது. ஆக, அந்த தொழிலில் அவர்களுக்கு என ஒரு இடமுண்டு. ஆதிகேசவனின் அண்ணன், தம்பி அடுத்தடுத்த தெருவில் வசிக்கிறார்கள். ஆக, தொழிலையும்.. இவர்கள் குடும்பம்.. இது இரண்டையும் அவர்களே, நினைத்தாலும் பிரிக்க முடியாது. குடும்பத்தின் படிக்கும் பசங்கள் எல்லாம், விருப்பு வெறுப்பு பாராமல்.. அந்த தொழிலைதான் செய்தாக வேண்டும்.

வசீகரனுக்கு, பள்ளி படிக்கும் போது மெடிக்கலில் ஈடுபாடு இருந்தது. ஆனால், அப்போதே.. அவனின் தந்தை தெளிவாக சொல்லிவிட்டார்.. “நம்ம குடும்பத்திற்கு இது சரிவராது ப்பா.. அப்படியும் மீறி படிப்பேன் என்றால், படிச்சிக்க.. ஆனால், எனக்கு பின் கண்டிப்பா இந்த தொழிலை நீதான் செய்வாய், அது உறுதி. நம்மை நம்பி.. அத்தனை பேரின் வாழ்வு இருக்கு.. சொன்னால் இப்போது புரியாது,  ஆனால், அப்பா நான் சொல்றேன்.. கஷ்ட்டபடாத.. நம்ம தொழில் சார்ந்து எங்க வேணும்ன்னாலும் போய் படிச்சிக்க.. எவ்வளோ வேணும்னாலும் செலவு பன்றேன்.. அதனால், பிடிவாதம் பிடிக்காதப்பா” என்றார் அப்போதே.

வசீகரனுக்கு கோவமாக வந்தது. வேண்டுமென்றே.. மருத்துவம்தான் படிப்பேன் என சேர்ந்தான்.. தனியார் கல்லூரியில். ஆதிகேசவன் சேர்த்தும் விட்டார்.. ஒருவருடம்.. முழுதாக படித்தான். ஆனால், குடுப்பத்தின் சூழல் அவனுக்கு, சாதகமாக இல்லை. யாரும் பேசவில்லை.. அக்கௌண்டில் பணம் வந்தது.. வேலையாட்கள் ‘சாப்பிடுங்க தம்பி’ என்றனர். தங்கையை கூட அவனால், பார்க்க முடியவில்லை. கண்ணிலே யாரும்  படவில்லை. அப்போது கோவமெல்லாம் போய்.. தன் வீரமெல்லாம் போய்.. தன்னை ஒப்புகொடுத்தான்.. பெரியவர்களின் பேச்சுக்கு வசி.

அடுத்த வருடம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். பெங்களூரிலே பெரிய கல்லூரியில் சேர்த்துவிட்டார் ஆதிகேசவன். அவன் கேட்க்கும் முன்னே கார் வாங்கிக் கொடுத்தார். வீடு எடுத்து தங்க வைத்தார். சமையலுக்கு வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்தார். ஆக, அவனுக்கு, இடையில்.. இந்த பத்து பனிரெண்டு மாதமாக கிடைக்காது போன..    கோல்டன் ஸ்பூன்.. மீண்டும் அவனின் கைகளில் வந்தது. என்ன  கைகள் மட்டும் அப்பாவின் பிடியில் இருக்கும்.

இதுதான் இவர்களின் வாழ்வியல். இது சரியா.. நியாமா என்பதெல்லாம் யோசிக்க முடியாது.. கூடாது. அப்படிதான் பிள்ளைகளுக்கு சொல்லியிருப்பர். பெண்களுக்கும் அப்படிதான்.. சொந்தத்தில்.. இதே தொழில்.. அதில்தான் திருமணம் முடிப்பார். எல்லாம் சொந்தத்தில்தான் முடியும்.. அசல் அதிகம் இதுவரை வந்ததேயில்லை அவர்களின் குடும்பத்தில். ஆக, எல்லாம் பரம்பரை பரம்பரையாக திட்டமிடுப்பட்டது., மாறாதது.

இப்போது, ஆதிகேசவன் பேசி முடித்து.. உண்பதற்காக வந்தனர். ஆதி மகளோடு வந்தார் உண்பதற்கு. மயூரா இயல்பாக தந்தைக்கும் தட்டம் வைத்து பரிமாறினாள். சுமதி எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அமர்ந்துவிட்டார், கணவரோடு. பெண்தான் பரிமாறினாள். இப்படி சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்திடுவார்.. சுமதி.

தந்தை “என்ன டா.. ரெடியாகிட்டியா.. எல்லாவற்றையும் எடுத்து வைச்சிடு இப்போவே.. தனி பாக் வைச்சிக்க.. பென் புதுசு வாங்கிட்டியா..” என்றார்.

மயூரா தலையாட்டி சிரித்தாள்.. 

சுமதி “ப்பா.. போதும், டூவ்ல்த் வந்தாச்சு.. இன்னுமா சொல்லணும்..  அதெல்லாம் பார்த்துப்பா.” என்றார். 

ஆதிகேசவன், ஒருவாய் சப்பாத்தி எடுத்து மகளுக்கு ஊட்ட.. அதை வாங்கிக்கொண்டு.. அன்னையை பார்த்து.. கொக்காணி காட்டினாள் பெண்.

சுமதி முறைத்தாலும்.. உதடுகள் புன்னகைத்தது.

தன் தந்தைக்கு பரிமாறிவிட்டு, தானும் அமர்ந்து உண்டாள்.. மயூரா. சுமதி, மகளுக்கு என்ன வேண்டும் என பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தார்.. அவர் உண்ணவில்லை. மகன் வந்ததும் தான் உண்பார். 

இப்போது அன்னை “சீக்கிரம் தூங்கிடு.. எத்தனை மணிக்கு எழுப்பிவிடட்டும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.

மயூரா ‘ஐந்து..’ என விரல்களை காட்டினாள்.

சுமதி “வாயை திறந்து பேசு.. இங்க யார் இருக்காங்க..” என்றார் அதட்டலாக.

மயூரா கண்களை சுருக்கி.. ‘போம்மா..’ எனும் விதமாக தலையசைத்தவள்.. உண்ணத் தொடங்கினாள்.

அப்போது கை அலம்பிக் கொண்டு வந்த அவளின் தந்தை “மயூம்மா.. வீட்டில் பேசுவதற்கு என்ன.. ரெண்டு ரெண்டு வார்த்தையாக பேசி பழகுடா. உனக்கு வரும்..” என்றார் கொஞ்சம் கவலையான குரலில்.

இந்த குரல்.. அதுவும் தந்தையின் குரல்.. அவளுக்கு யாரும் என்னமும் சொல்லாம், ஆனால், தந்தை ஏதும் சொல்லிட கூடாது அவளுக்கு. எனவே, அவரின் குரல்.. பெண்ணை என்னமோ செய்ய.. உண்டு கொண்டிருந்த உணவை அப்படியே வைத்துவிட்டு எழுந்துக்கொண்டள்.. வெடுவெடுவென கை அலம்பாமல் தன்னறைக்கு செல்ல எத்தனித்தாள்.

சுமதி “அம்மு.. இதென்ன.. நில்லு” என்க, காதிலேயே வாங்கவில்லை பெண். மேலே படியேறி சென்றுவிட்டாள்.

மயூராவிற்கு கொஞ்சம் பேசுவதில் குறைபாடு.. கோர்வையாக பேச வராது.. சட்டென வார்த்தைகளை  கோர்த்து பேச வராத. பெரிதாக குறை என இல்லை. சின்ன வயதிலிருந்து அவளுக்கு அதற்கான நிறைய ட்ரீட்மென்ட்  பார்க்கின்றனர்.. குரல்வளை சரியாக வேலை செய்கிறது.. அந்த நரம்புகளில் எதோ.. கொஞ்சம் வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்றனர்.. மருத்துவர்கள், அவளின் ஐந்து வயதில். கேட்க்கும் திறன் சரியாக இருந்தது. எனவே, அதற்கான மருந்து மாத்திரைகள்.. பயிற்ச்சிகள்.. ஸ்பீச் தெரபி.. என எல்லா நடந்தது. பத்து வயதில் குளறியபடியே பேசவும் செய்தாள். 

ஆனால், அப்போதுதான் பிரச்சனையே தொடங்கியது. அந்த வயதில்  திக்கி திக்கி பேச தொடங்கினாள்.  அவள் முன்பு பேசாமல் இருந்ததை   விட.. இப்போது, இவள் பேசி முடிக்கும் வரை.. எல்லோருக்கும் பொறுமை போகிற்று. அதனால் ஆசிரியர்கள்.. தோழிகள் எல்லோரும் அவளிடம் கருணை காட்டினர். அவளின் ஆசிரியர்கள் ‘பரவாயில்ல மயூரா.. நீ இதானே சொல்ல வந்த.. சரி புரியுது’ என்றனர். தோழிகள் ‘ஹேய்.. அவளுக்கு சரியாக பேச வராது.. ஓகே மயூ.. நீ இரு.. நான் சொல்லிக்கிறேன்..’ என இவளுக்காக பேசினர். 

இப்படி ஒருநாள் இரண்டு நாளில்லை.. பலநாட்கள். ‘நீ இவ்வளவு தூரம் பேசுவதே பெரிது.. நீ கஷ்ட்டபடாத நாங்கள் பார்த்துக்கிறோம்’ என்பது போல அவர்கள் சொல்லும் போது, ‘என்னை இவர்கள்.. பொருட்டாக நினைக்கவில்லையோ.. பாவம் பார்க்கின்றனறோ.. பரிதாபம் கொள்கின்றனறோ..’ என குழப்பம் அவளுக்கு. அதனால், அந்த வயதிலும் ஒரு வீம்பு வந்தது அவளுக்கு.

அப்போதிலிருந்து, பேச்சை குறைத்துக் கொண்டாள்.. தன் கண்களாலும்.. முக மாற்றங்களாலும்.. மற்றவர்களிடம் உரையாட தொடங்கினாள். தேவையென்றால்.. அதுவும் மிக முக்கியம் என்றால்.. தன் பேச்சை பொறுமையாக கேட்பர்.. என்றால், பேசுவாள். மற்றபடி வாயே திறப்பதில்லை. 

அதற்காக இவள் பேசவேமாட்டாள் என்றில்லை. தனக்கு பிடித்தவர்களிடம்.. தன் பேச்சை பொறுமையாக கேட்பர் என்பவர்களிடம்.. ஆசையாக பேசுவாள் பெண். அந்த லிஸ்ட்டில்.. அன்னை அப்பா அண்ணன்.. பெரியப்பா.. சித்தப்பா பையன்.. அத்தை மகள்.. தன் உயிர் தோழி.. அடுத்து அவளின் வளர்ப்பு புறாக்கள்.. என இத்தனை உறவுகள் உண்டு. ஆனால், அவள் நினைக்கும் போதுதான் பேசுவாள்.. சட்டென்றோ, இயல்பாகவோ அவர்களிடம் கூட பேசி சிரித்திடமாட்டாள். ஆக, மயூரா.. எல்லோரின் பார்வைக்கு வனப்பான வாய்பேசா வஞ்சை குமரியாக தெரிந்தாலும்.. மனதால், பிடிவாதமும் அழுத்தமும் நிறைந்த ‘அம்மாயி’ அவள். அவளின் அண்ணன் எப்போதாவது.. அப்படி அழைப்பதுண்டு. 

இப்போது அவளை, ஆதிகேசவன்.. சமாதானம் செய்தார்.. மேலேறி, அவளின் அறைக்கு சென்று.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

ஆகிற்று ஒருமாதம்.

ஜெயந்தினி கொஞ்சம் சமநிலைக்கு வந்தாள். அன்னை, அழுவது.. அதில் அவருக்கு BB குறைவது.. மருத்துவமனைக்கு செல்லுவதுமாக இருக்க.. மகளுக்கு இப்போதுதான் கொஞ்சம் புரிந்தது வாழ்வின் எதார்த்தம்.

அன்னையை மிரட்டி.. அவரின் அழுகையை நிறுத்தினாள்.. சற்று, தோட்டத்தின் பக்கம் அவரின் கவனத்தை திருப்பினாள். நிறைய பேசினாள்.. அன்னையையும் பேசவைத்தாள். அவரும் பேசி தீர்த்தார்.. தன் கணவரை பற்றி. ‘எவ்வளோ தைரியமா.. இந்த தொழிலை ஆரம்பித்தார்..’ என அந்த கதை எல்லாம் ஒருநாள் சொல்லுவார், மகளிடம். மற்றொரு நாள் ‘ஓடிட்டே இருந்துட்டார்.. உடம்பை பார்த்துக்கலை’ என நிற்காமல் தன் கணவர் உழைத்ததை.. சொல்லுவார். இப்படி பேசி தீர்த்துக் கொண்டார், தன் வருத்தத்தை.

இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ கபாலியின் காதில் விழுந்ததுக் கொண்டே இருந்தது. அதனாலோ என்னமோ வீட்டில் அமர பிடிக்காமல்.. குமரன் வந்து அழைத்து போவார் என காத்திருக்காமல் தானே அலுவலகம் செல்ல முடிவெடுத்தான், கபாலி.

ஆனால், ஏதும் தெரியவில்லை அவனுக்கு. குமரன் தன் தந்தையின் அலைபேசியை கொடுக்கவில்லை என்பதிலேயே.. அவனுக்கு குமரன் மேல் முதல்முறை சந்தேகம் வர தொடங்கியது. அதனால், அவரிடம் தன் தொழில் பற்றி கேட்க  தோன்றவில்லை. தன் தமக்கைக்கு ஏதேனும் விவரம் தெரியுமோ என கேட்டான். 

அது பலனை தந்தது.. ஜெயந்தினி “நாம கடைக்கு போலாம்.. நீ காரெடு” என்றாள். நிற்காமல் கிளம்பத் தொடங்கினாள்.

காலையிலேயே கிளம்பினர் இருவரும். காரில் செல்லும் போதே, தனக்கு தேவையான விவரங்கள் கேட்டுக் கொண்டான், கபாலி “உனக்கு, நம்ம  ஆடிட்டர் தெரியுமா.. குமரன் தவிர வேறு யார் இன்சார்ஜ்..” என,  அக்காவை கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

ஜெயந்தினியும் ஆடிட்டர் எண் கொடுத்தாள்.. தனக்கு தெரிந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.. அலுவலகத்தில். 

குமரன் அலுவலகத்தில் இல்லை, இவர்கள் சென்றபோது. எனவே, அங்கிருந்த மூத்த ஊழியர்கள் சில விஷயங்கள் பேச வேண்டும் என்றனர்.. கபாலியிடம்.

கபாலி அக்காவை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். சரியாக அந்த நேரம் குமரன் வந்து நின்றார்.. “வா ப்பா… கபில்.. சொல்லவேயில்ல” என்றார் ஒரு மாதிரி குரலில்.

கபாலி சிரித்தான் அவ்வளவுதான். இப்போது கபாலியை பார்க்க நின்ற ஊழியர்கள் எல்லோரும் கலைந்தனர். குமரன், ரமணன் இருக்கையை காட்டினார். “உட்காருப்பா.. முக்கியமான லோட் அனுப்ப வேண்டி இருக்கு, நான் பார்த்துட்டு, வந்திடுறேன்” என்றவர்..  உள்ளே பட்டறை சென்றார்.

கபாலியும் எழுந்து பட்டறை பார்க்க சென்றான்.

க்ரீச் க்ரீச் என பெரிய பாறைகளை வெட்டிக் கொண்டிருந்த சத்தம்தான் கேட்டது..பேச்சுகள் அதிகம் கேட்கவில்லை. மெஷின்கள் உதவியோடு.. டன் கணக்கிலான கிரானைட் கற்களை வெட்டி.. அதன் தரத்தை சோதித்து.. அதன்பின் தேவையான பாலீஷ் போட்டு அடுக்கி வைப்பார். ஆர்டர்களுக்கு ஏற்பவான அளவுகளில் வெட்டி அனுப்புவர் விற்பனைக்கு.

இப்போது கபாலி அதனை நின்று கவனித்தான். நிறைய முறை சிறுவயதில் வந்திருக்கிறான்.. அந்த கற்களை தொட்டு.. இது என்ன என அங்கே இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டிருக்கிறான். ஆனால், வளர்ந்தபின்.. ஏதேனும் வேலை என்றால் வருவான்.. தந்தையை பார்ப்பான்.. பேசுவான் கிளம்பிவிடுவான். சிறுவயதில் நின்று பார்த்தது போல, நின்று பார்க்க மாட்டான் அப்போதெல்லாம். 

இன்று என்னமோ சின்ன வயது ஞாபகம் வந்தது.. அத்தோடு அப்பாவின் நிழலும் அங்கே இருப்பதாக தோன்றியது கபாலிக்கு. குமரனை காணவில்லை. அதை பற்றி கபாலியும் கண்டுக் கொள்ளவில்லை.. பொறுமையாக நின்று பார்த்தான் சற்று நேரம். பரந்த திடல் போன்ற இடத்தில்.. இரும்பு சீட் உயரமாக போட்டு.. ஆட்கள் மேலும் கீழுமாக நிற்க.. கற்களை இஞ்சு கணக்கில் வெட்டிக் கொண்டிருந்தது மெஷின்கள். திடலில் ஆங்காங்கே கற்கள் நிற்க.. அருகே தந்தையின் நிழல்.. கபாலி சட்டென தன்னை மீட்டுக்கொண்டான்.

இப்போது ஒரமாக நின்று இவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்த்தான்.. “வாங்க தாத்தா” என்றான்.

அந்த பெரியவர் “உன் அப்பா பார்த்து பார்த்து உருவாக்கிய இடம் இது. நீங்க சின்ன பையன்னு.. இப்போதீக்கு, இங்க வரமாட்ட.. படிக்க போயிட்டேன்னு சொன்னாங்க. நீ வந்துட்டியா”என்றார் வாஞ்சையாய். 

பின் அவரே..  சின்ன குரலில் “கொஞ்சம் கவனமா இருப்பா.. அங்க பாரு.. அந்த பக்கம் பூராவும் காலியா கிடக்கு.. பாரு.. கல்லு எல்லாம் காணோம். கஸ்ட்டமர்ஸ் யாரையும் காணோம்.. உனக்கு  தெரியுமா, எங்க முதலாளி இருந்தவரை.. நின்னு பேச நேரமிருக்காது யாருக்கும். இந்த இடமே அவ்வளவு பிஸியாக இருக்கும்..” என்றார். அவ்வளவுதான் அதன்பின் ஏதும் பேசவில்லை அவர். கபாலிக்கு டீ கொடுத்துவிட்டு,யாரையோ பார்த்துவிட்டதன் அறிகுறியாக அந்த பக்கம் நகர்ந்துக் கொண்டார்.

கபாலிக்கு, இருந்த சந்தேகம் உறுதியானது இந்த இரண்டு நிமிட பேச்சில்.

Advertisement