Advertisement

சுமதி, தன் கணவருக்கும், மகனுக்கு அழைத்து சொன்னார். சமையல் தனியாக கபாலிக்கு என நடக்க தொடங்கியது. ஜெயந்தினியால் அந்த வாசனைக்கு அமர முடியவில்லை.. மேலே சென்றாள்.

ஆதிகேசவன் வந்துவிட்டார். கபாலியும் அவரும் பேச தொடங்கினர்.

மயூரா மேலே சென்றாள். ஜெயந்தினியும் இவளும் பேசியபடியே அமர்ந்திருந்தனர். ஜெயந்தினி “சண்டை ஏதும் இல்லையே.. கபில் அன்னிக்கு வந்தது பற்றி ஏதாவது சொன்னானா?” என கேட்டு, அறிந்துக் கொண்டாள்.

பின் இயல்பாக பேசினார் இருவரும். கிண்டல் கூட செய்துக் கொண்டனர்.. “என் தம்பி பொறுப்பா பொண்டாட்டியோடு வந்த என்னை பார்க்கிறான்.. தேறிட்ட மயூ.. என் தம்பியையும் தேற்றிட்ட” என ஜெயா மொச்சினாள். ஆக நேரம் இனிமையாக சென்றது.

மதியம் உண்பதற்காகதான் மயூராவும் ஜெயந்தினியும் கீழே வந்தனர். 

ஜெயந்தினியால் உண்ணவே முடியவில்லை.. சற்று தூரமாக சென்று அமர்ந்துக் கொண்டாள். தனியே உண்டாள். எப்படி என்றாலும், உணவு சிறிதுதான் இறங்கியது அவளுக்கு.. உண்டு சீக்கிரமாக மேலே சென்றுவிட்டாள். 

வசீகரன் வந்துவிட்டான் அலுவலகத்திலிருந்து.. தன் மைத்துனனை  வரவேற்றான். “இருங்க, கபில் வரேன்” என சொல்லி மனையாளை சென்று பார்த்துவிட்டு.. அவளுக்கு ஜூஸ் கொடுத்து வந்துதான் அமர்ந்தான்.

அதன்பின்தான் உண்டான்.

கபாலி அதுவரை கவனிக்கவில்லை.. ஆனால், நாலுதரம் தன் அக்காவிற்காக வசீகரன் மாடியேறியது.. உண்ணாமல் அலைந்தது எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தான். மனது.. ஆச்சர்யம் கொண்டது.. எப்படி பொறுமையாக இருக்கிறார்.. என. 

வசீகரன் உண்டு வரும் வரை.. கபாலி இருந்தான். வசீகரன் வரவும் கபாலி.. “அக்காவை ஒருவாரம் அங்க வர சொல்லியிருக்கேன்” என்றான்.

வசீகரன் “உங்க அக்காக்கு மட்டும்தான் அழைப்பா.. எனக்கில்லையா” என்றான்.

கபாலி “இதென்ன.. இப்படி கேட்டுட்டீங்க.. வாங்க ஒருவாராம் தங்கிட்டு போகலாம்” என்றான்.

வசீகரனும் “ம்.. இங்க ரூமிலேயே இருக்கா.. வரோம்.. நாளைக்கு கொண்டு வந்து விடுறேன்..” என்றான்.

பின் தன் தங்கையிடம் வசீகரன் எதோ பேசிக் கொண்டிருந்தான். 

கபாலி டிவியில் முழ்கினான். 

ஆதிகேசவன் “கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை” என்றார்.

கபாலி “இல்ல மாமா இன்னும் கடைக்கு போகவேயில்ல.. மயூவை ட்ரோப் செய்திட்டு கிளம்பனும்..” என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

மயூரா நிமிர்ந்து கணவனை பார்க்கவும், கபாலிக்கு என்ன புரிந்ததோ “போலாமா” என்றான்.

கபாலி “மாமா, அத்தை கிளம்புகிறோம்” என விடைபெற்று கிளம்பினான் தன் மனையாளோடு. 

கபாலி, கருப்பு நிற வேட்டி.. மஸ்டட்நிற ஷர்ட்.. எதோ இன்று முகம் கொஞ்சம் புன்னகையில் இருக்க.. உச்சி முடி லேசாக காற்றில் அசைய.. மயூராவோடு.. “உன்னை வீட்டில் விட்டுட்டு நான் கிளம்பறேன்..” என பேசியபடியே, சென்ற தன் மாப்பிள்ளையை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார், ஆதிகேசவன். ‘கபாலியிடம் எப்போதும் ஒரு கர்வம் இருக்கும்.. இன்று.. எதோ பூரிப்பு தெரிகிறது..  ம்.. என்னமோ மாற்றம்’ என தோன்றியது அவருக்கு.

வசீகரன் “என்ன உங்க மாப்பிள்ளை சிரிக்கிறார்..” என தன் அன்னையிடம் ரகசிய குரலில் கிண்டலாக கேட்கவும் செய்தான்.

சுமதி “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல.. என் பொண்ணு சிரிப்புதான் அதிசயமாக இருக்கு எனக்கு” என்றார்.

வசீகரன் “ம்கூம்.. கபில்தான் சிரித்தான்.. அதான் எதிரொலிதான் உன் பொண்ணு முகத்தில் தெரிந்தது.. நீ கவனிக்கல ம்மா” என்றான் அர்த்தமாக.  

சுமதி “என்னமோ.. அவள் சிரிப்பு நிலைத்து இருக்கனும்” என்றார்.

வசீகரன் சரிதான் என எண்ணிக் கொண்டான்.

நல்லவிதமாக இந்த சந்திப்பு இருந்தது இரு வீட்டாருக்கும். வசீகரனும் பொறுமையாக பேசினான்.. கபாலியும் எல்லாவாற்றையும் கவனித்து பேசி வந்தான்.

மயூராவை வீட்டில் விட்டு, கபாலி அலுவலகம் சென்றான். 

மயூராவிற்கு, கணவனின் புன்னகை முகம் நிம்மதியை தந்திருந்தது. எப்போதும் எல்லோரின் வாழ்விலும் சோகம் நிரந்தரமில்லையே… எங்கேனும் ஒரு நிம்மதியின் சாரல் அவ்வபோது வீசதானே செய்யும்.. அதனால், கபாலி.. மயூராவின் வாழ்விலும் நிம்மதியின் சாரல் வீசியது.

நாட்கள், ஒரு சின்ன படகில்.. இதமான வேகத்தில்.. சலசலவென்ற நீரோடையில்.. ஒரு பௌர்ணமி இரவில்.. செல்லும் ரம்யமான பயணமாக இருந்தது. கபாலி அவளின் சொல் பேச்சு கேட்க்கிறானோ இல்லையோ.. அவளை தன் சொல் பேச்சை கேட்க வைத்தான். ‘நீ என்கூட மோர்னிங் வொர்கௌட் வரணும்’ என தன்னோடு அவளையும் கூட்டி சென்றான்.

மயூரா ‘ஏங்க, என் டான்ஸ் போதும் எனக்கு.. இப்படி.. நடக்கவும் வைக்கிறீங்க. எனக்கு பிட்நெஸ் வேண்டாம் போதும்..” என்பாள்.

ஆனால், கபாலி “வாடி.. என்ன இப்போ.. ரெண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டா.. கலோரிஸ் பேலன்ஸ் ஆகிட போகுது..” என காலையில் தினமும் கொஞ்சி கொஞ்சி அவளை தன்னோடு அழைத்து செல்லுவான். 

ம்.. கபாலிக்கு, வேறு நேரம் இருக்கவில்லை அவளோடு செலவழிக்க.. காலையில் ஒன்பது மணிக்கே அலுவலகம்.. இரவு பதினோரு மணிக்கு வீடு வருவது.. என நேரம் இருக்கவில்லை. எப்படி.. எங்கே.. நேரத்தை மிச்சம் செய்ய நினைத்தாலும்.. எதோ ஒரு போன் காலிலோ.. சின்ன சந்திப்பிலோ.. திருடபட்டு விடுகிறது அவனின் நேரம். மாலையில் சரியான நேரத்திற்கு அவனால் வீடு வர முடிவதில்லை. இதுதான் எதார்த்தம் என்றாலும்.. மனையாளின் கொஞ்சல் மொழில்.. அதில் அவள் கண்களை உருட்டி.. அதட்டும் அழகு.. இதையெல்லாம் எப்போதாவ பார்க்கும் ஆசையில் கபாலி, காலையில் அவளை இழுத்துக் கொண்டு செல்லுவான் தன்னோடு.

இரவில் அவள் உறங்கும் நேரம்தான் வீடு வருவான்.. மயூரா, அகடாமியில் விழா.. என இருந்தால் அதிகம் அசந்திடுவாள்.. கணவனுக்காக எதிர்பார்க்காமல் உறங்கிடுவாள். 

கபாலியும், தானே வந்து போட்டு உண்டு விடுவான். 

மனைவியின் அருகில் சத்தமில்லாமல்.. வந்து அவளின் உறக்கத்தை கலைத்து “சாப்பிட்டியா.. எத்தனை பூரி சாப்பிட்ட.. ஏன் 10:30 போன் செய்தேன் எடுக்கலை.. என் மேல உனக்கு லவ்வே இல்ல..” என அவளிடம் சண்டையிடுவான்.

மயூரா “ஏங்க.. ப்ளீஸ் தூக்கம் வருது.. காலையில் சீக்கிரமாக நான் கிளம்பனும்..” என முனகினாள். 

கபாலி “சொன்னேனே உனக்கு என்மேல லவ்வே இல்ல..ன்னு” என்றான்.

மயூரா “இப்போவெல்லாம் நீங்க ரொம்ப பேசுறீங்க” என்றாள்.

கபாலி “ம்.. நீயும்தான் அதிகமாக கேள்வி கேட்க்கிற” என்றான்.

மயூரா “ஆமாம்.. எனக்கு  உங்களை தெரிஞ்சிக்கனுமில்ல.. அப்போ கேள்விதான் கேட்கனும். ஆனாலும், எனக்கு உங்களை இன்னும் தெரியலை. 

கபாலி “அஹ.. பொய் சொல்லாதா.. எல்லாம் தெரியும் உனக்கு.. என்னைவிட அதிகமா.. உனக்கு தெரியும்.. என்னை பற்றி. அதானால், தானே.. இதுவரை, என்னை விட்டு, போகாமல் இங்க இருக்க.. அத்தோட இப்போவெல்லாம்.. உனக்கு மட்டும்தான்.. எல்லாம் தெரியும்..” என எல்லாம் என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னான் மிதப்பான குரலில். மனைவியை சீண்டவென சொன்னான்.

மயூரா “நீங்க என்ன சொல்றீங்க..” என சந்தேகமாக கேட்க்க..

கபாலி “நீ என்ன நினைச்ச” என்றான் அவளை இறுக்கிக் கொண்டு.

மயூரா “இல்ல.. நீங்க என்ன சொன்னீங்க” என்றாள்.

கபாலி சிரிக்காமல் “நீ நினைச்சததை தான் சொன்னேன்” என்றான்.

மயூரா கணவனின் அணைப்பில் இருந்தபடியே நிமிர்ந்து பார்க்க.. கணவன் “சத்தியமா நம்புடி.. நீ சரியாதானே நினைப்ப அதான், நான் அதையே சொன்னேன்” என்றான்.

மயூரா, கணவனிடமிருந்து விலக எண்ண.. எங்கே, அவளின் எண்ணமறிந்து.. தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டான், தன்னவளை.

அவர்களின் நேரங்கள் எல்லாம் வண்ணம் பூசிக் கொண்டது.. ஒவ்வொரு நொடியும் வாசனையோடு.. அவர்களின் ரசனைக்கு உள்ளாகிதான் கடந்தது, அவர்களை. அதை உணர்ந்து இருவரும் அனுபவித்து.. மகிழ்ந்தனர்.

மகேஸ்வரி இப்போதெல்லாம் மருமகளை உண்ண வா என அழைப்பதில்லை. அவர்களே வந்து உண்டுக் கொள்ளட்டும் என விட்டுவிடுவார். 

ஜெயந்தினிக்கு ஐந்தாம் மாதம் சீர் கொண்டு சென்றனர். இந்த முறை கபாலி.. அதிகம் பேசவில்லை. தன் அன்னையிடம் “எது எப்படி செய்யணுமோ செய்திடும்மா.. மயூவிற்கும் சொல்லி கொடுத்திடு.. எப்போது வரணும்ன்னு சொல்லு, நான் வரேன்..” என்று சொல்லி அமைதியாகிவிட்டான்.

மகேஸ்வரிக்கு நிம்மதி. தானாகவே ஏற்பாடு செய்தார். தன் சொந்தங்களோடு ஜெயந்தியை சென்று பார்த்து வந்தார். ஜெயந்தினி இப்போது கொஞ்சம் தேறி இருந்தாள்.. வாமிட்டிங் இல்லை.. சுகர் மட்டும் இருந்தது. டையட்.. டேப்லெட்.. என இப்போது நன்றாகவே இருந்தாள்.

கபாலி புன்னகை முகமாக நின்றான். எல்லோரிடமும் இதமாக பேசினான்.. அமைதியாக நடந்துக் கொண்டான். 

ஆதிகேசவன் இந்த கபாலியை பார்த்து கொஞ்சம் பயந்தார்.. கர்வம் மட்டுமே தெரிந்த அவன் முகத்தில்.. கர்வத்தோடு சேர்ந்து மின்னும் இந்த சாந்தம் பயம் கொள்ள செய்தது, பெண்ணை கொடுத்தவருக்கு.

எல்லோரும் உண்டு.. கிளம்பினர். 

ஆதிகேசவன் கபாலியிடம் “எப்படி போகுது தொழில் மாப்பிள்ளை. அந்த குமரன் டையில்ஸ் ஷோரூம் போட்டுட்டானாமே. ஏதும்.. முன்ன மாதிரி ஏதும் தொல்லை இல்லையே” என இரண்டு மூன்று நபர்களின் பெயர் சொல்லி விசாரித்துக் கொண்டார்.

கபாலி உரிய பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆதிகேசவன் “என்ன.. நம்ம ப்ரைட் கம்பனி கேஸ் முடிஞ்சிதா.. அவங்க மாப்பிள்ளை எதோ புதிதாக தொழிலுக்கு வந்திருக்கான் போல மாப்பிள்ளை” என்றார்.. அப்படியே கபாலியை கூர்ந்து கவனித்தார்.

கபாலி, அலட்டாமல் “கேஸ் இன்னும் இழுக்குது.. முடிக்கும் வழி தெரியலை மாமா.. கொஞ்சம் பொறுத்து செய்யலாம்ன்னு இருகேன் ” என்றான்.

ஆதிகேசவன் “நல்லதுதான் மாப்பிள்ளை.. அவங்களே வருவான்னுங்க.. எதுக்கும் சங்கத்திற்கு அடிக்கடி வந்து போங்க.. ஆட்களை பழகிக்கலாமில்ல” என்றார்.

கபாலி “நமக்கு.. அதெல்லாம் செட்டாகுது மாமா.. சரி, கிளம்புகிறோம்” என விடைபெற்று கிளம்பினர் கபாலியின் குடும்பத்தார்.

Advertisement