Advertisement

நான் உன் நிறையன்றோ!

29

மறுநாள், தாமதமாகத்தான் எழுந்தனர் கபாலியும் மயூராவும்.. கபாலிக்கு, எழவே மனதில்லை போல.. அப்படியே மயூராவின் நடமாட்டத்தை கவனித்தபடி படுத்திருந்தான்.

மயூரா வெட்கமாகவும்.. முரைப்பாகவும் “எதுக்கு இப்படி பார்க்கிறீங்க” என கேட்டபடியே.. தலைமுடியை உதறிக் கொண்டிருந்தாள்.

கபாலி பதிலே சொல்லவில்லை.. இதமான மனநிலை அவனுக்கு. அதை பேச்சில் சொல்லி விளங்க வைக்க அவனுக்கு தெரியவில்லை.. அதனால், இன்னும் முனைப்பாக மனையாள், பொட்டு வைத்துக் கொள்வது.. காதில் எதோ தோடு அணிவது.. தலை பின்னுவது.. என அவளின் நளினத்தை ரசித்தபடியே கிடந்தான்.

மகேஸ்வரி, மயூராவை காலை உணவுக்கு அழைத்தார் போனில்
“என்ன கபில் இன்னும் கீழ வரலை.. வாங்க ரெண்டுபேரும் சாப்பிடலாம்.” என்றார்.

மயூரா அப்போதுதான் “நீங்க வாங்க” என கணவனை பார்த்து சொல்லிவிட்டு கீழே கிளம்பினாள்.

கபாலி அதன்பிறகுதான் எழுந்து குளிக்க சென்றான்.

மனதில் ஒரு நிறைவு.. என்னவென தெரியாத ஒரு நிறைவு.. அமைதியாக கிளம்பி.. கீழே வந்தான்.

கணவன் மனைவி இருவரும் உண்டனர். 

கபாலி “வா, ஜெயந்தினி அக்காவை பார்த்துவிட்டு வருவோம்.. நீ ஊருக்கு போயிட்ட அதனால் என்னால் போக முடியலை.. இன்னும் அவளை பார்க்கலை நான்.. இன்னிக்கு நான் கொஞ்சம் ப்ரீயா இருக்கேன்.. வா மயூ” என்றான்.

மகேஸ்வரி “முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல.. நான் ஏதாவது சாப்பிட செய்து தந்திருப்பேன்.. சரி, கடையில் வாங்கிட்டு போடா.. வெறும் கையோட போகாத.. அமைதியா பேசு அவகிட்ட” என்றார்.

கபாலி ஒன்றும் சொல்லவில்லை.

மயூரா, ‘தூங்கலாம்’ என எண்ணியிருந்தாள். இப்போது கணவன் அழைக்கவும்.. சந்தோஷமாக கிளம்பினாள்.

மயூரா “இருங்க.. புடவை மாத்திட்டு வரேன்” என்றாள்.

கபாலி “என்ன இப்போ.. உங்க அம்மா வீட்டுக்குதானே, இந்த ட்ரெஸ் போதும் வா” என்றான். காலர் வைத்தது.. பிஸ்தா கிரீன் காட்டன் குர்த்தா லெக்கின்ஸ்.. சின்ன முத்து வைத்த ப்ளாக் மெட்டல் தோடு.. கையில் ஒற்றை வளையல்.. இடது கையில் வாட்ச். தளர்வாக நான்கு பின்னல் பின்னி இருந்தாள் தன் முடியை.. கண்ணுக்கு தெரியும்படியான சிவப்பு பொட்டு.. நெற்றி வகுட்டில் சிவப்பு நிற குங்குமம்.. கபாலிக்கு எப்போதும் புடவையில் பார்த்தே அவளை பழக்கம், அதனால் இந்த தோற்றம் அவனுக்கு பிடிக்க “பூ வைச்சிட்டு வா, போதும்” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

மயூரா, அவசரமாக.. பூ எடுத்து வைத்துக் கொண்டு.. ஷால் எடுத்து போட்டுக் கொண்டு மகேஸ்வரி கிட்செனில் காபி கலக்க நின்றுக் கொண்டதால்.. தன் அத்தையிடம் வந்து சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

மகேஸ்வரி,  என்ன வாங்கி செல்ல வேண்டும் என சொன்னார்.. அதையெல்லாம் கேட்டுக் கொண்டு தன் கணவனோடு கிளம்பினாள், மயூரா.

மார்கெட் சென்றனர். பழக்கடை.. பூக்கடை.. இறுதியாக ஸ்வீட் வாங்க. அங்கேயே அமர்ந்து பாதம் பால் ரசமலாய். சமோசா.. என உண்டனர் பேசியபடியே இருவரும். 

கபாலி “நீ இங்கதான் படிச்சியா.. உங்க அண்ணனை தெரியும் எனக்கு,   பார்த்துக் கூட இருக்கிறேன்.. ஆனால், உன்னை ஞாபகம் இல்லையே” என்றான்.

மயூரா “எனக்கும் உங்களை தெரியாது.. பார்த்ததில்லை..” என்றாள், ரசமலாய்யில் கவனமாக.

கபாலி “நான் 9thக்கு.. நாமக்கல் போயிட்டேன், அங்கதான் படிச்சேன். பார்த்திருக்க மாட்ட.. சின்ன பெண்ணா இருந்திருப்ப” என்றான்.. சீண்டும் குரலில்.

மயூரா முறைத்தபடியே கணவனை பார்த்து சிரித்தாள்.. 

கபாலி “என்ன சிரிப்பு” என்றான்.

மயூரா “இல்ல.. தெரிஞ்சிசிருந்தா அப்போவே கடத்தியிருப்பீங்க போல” என்றாள், புன்னகை முகமாக.

கபாலி “ஹைய்.. என்னை பார்த்தால் அப்படியா தெரியுது.. அப்போவெல்லாம் பொண்ணுங்களை பார்க்கமாட்டேன் நான்..” என்ற படியே, மனையாளின் கையிலிருந்த ரசமலாய் கிண்ணத்தை வாங்கி, தான் உண்டான். 

மயூரா ஏதும் சொல்லாமல் பார்த்திருந்தாள்.. எப்படி பேசுகிறார் இன்று.. என ஆச்சர்யம் அவளுக்கு.. கண்கள் அதை சொன்னது போல.. கணவன் “என்ன அப்படி பார்க்கிற” என்றான்.. 

மயூரா ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.. கபாலிக்கு எதோ இருக்கு என தெரிய அமைதியாக எழுந்தனர் இருவரும், பில் செலுத்தி வெளியே வந்தனர்.

காரில் ஏறினார்.. கையில் வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் சரியாக வைத்து வண்டியை நகர்த்தினான் கபாலி.

மயூரா முகம் மலர.. “அவ்வளோ நல்லவர் மாதிரி தெரியலையே.. இப்போவே.. ஊருக்குள்.. ஏன், எங்க அண்ணனே உங்களை ரவுடின்னு தான் சொல்றான்.. பொண்ணுகளை பார்த்ததில்லையா.. நீங்க. ம்.. ராம்’மா நீங்க..” என்றாள், கணவனை நம்பாத பார்வை பார்த்து.. விளையாட்டாக..

கபாலி “நம்புதா ஊரு?.. அப்படி ரவுடியாவே இருந்திட்டு போறேன்.. ஆனால், ஒன்னு சொல்லவா.. காலேஜ்ஜில் கூட பெருசா கலர்ஸ் பார்த்ததில்லை..” என மிர்ரில் தன் முகத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான் அவளவன். 

மயூராவிற்கு ‘என்ன கலர்ஸ்..சா..” என தோன்றினாலும், கணவனை இடைமறிக்கவில்லை. 

கபாலி “அப்போவே.. பீயர்.. ஸ்மோக் உண்டு. ஆனால், அந்த பக்கம் போனதில்லை.. அதான் போல.. எனக்கு, அப்போது உன்கிட்ட நெருங்க முடியலை..  

பொன் கொண்டதுண்டு.. பெண் கொண்டதில்லை.. 

அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை..” என எதோ கவிதை பேசினான் அவளின் கணவன்.

மயூரா “என்ன க்..கவிதையா..” என்றாள் கண்கள் விரிய..

கபாலி “இல்ல.. இல்ல” என தனது மற்றொரு கையால் தாடியை நீவிக் கொண்டான். பின், சிரித்த முகமாக தனது போனில் “ஒட்டகத்த கட்டிக்கோ” என்ற பாடலை தேடி எடுத்து போட்டான். 

அந்த வரிகள் வரும் வரை.. மயூரா கணவனையே இமைக்காமல் பார்க்க.. கபாலி கண்டுக் கொள்ளாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

பின், கபாலி “என்னடி.. நான் கொஞ்சம் நல்லவன்தானே” என்றபடி கண்சிமிட்டினான் மனையாளை பார்த்து.

மயூரா “நம்ப முடியலை..” என்றாள்.

கபாலி “எப்போதும் ஸ்போர்ட்ஸ் தான் எனக்கு. புட்பால் அவ்வளோ பிடிக்கும்.. அதானல.. இதிலெல்லாம் இண்டரஸ்ட் இல்ல எனக்கு.. அத்தோட வேற பழக்கம் எல்லாம் இருந்ததில் இதை கண்டுக்கலை. ஆனால், இந்த ஒருவாரமாக.. நீ மட்டும்தான் தெரியுற.. கல்யாணம் ஆனதிலிருந்து கோவமாகவேனும் உன்னை அடிக்கடி நினைப்பேன்.. ஒரு பெண் என்னில் உலவினால் என்றால் அது நீதான்..” என்றான்.. ரசனையாக ரோட்டில் கவனம் வைத்துக் கொண்டு.. பேசி கொண்டிருந்தான், தன்னவளை பார்த்து இதையெல்லாம் சொல்ல வெட்கம் அவனுக்கு.

மயூரா, காதலாக கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. என்னமோ தன் காத்திருப்பு.. என்னை இவன் கடத்தியது.. ஏனோதானோவென திருமணம் முடித்தது.. எல்லாம், இந்த நொடியில்.. கணவனின்.. இந்த வார்த்தையில் காணாமல் போனதாக தோன்றியது பெண்ணுக்கு. இருவருக்குள்ளும் மௌனம். அழகான மௌனம். 

வீடு வந்து சேர்ந்தனர். போன் ஏதும் செய்திருக்கவில்லை. எனவே, தம்பி வருவான் என ஜெயந்தினி எண்ணவில்லை. மகள் வருவாள் என சுமதியும் எண்ணவில்லை, அதனால்.. இரு பெண்களும் அதிர்ந்தனர். இன்பமாக வரவேற்றனர். 

ஜெயந்தினி இளைத்து இருந்தாள்.. கண்ணெல்லாம் உள்ளே போய்.. கன்னம் வற்றி பொலிவிழந்து இருந்தாள்.

கபாலி “ஏன் க்கா.. உடம்பு எப்படி இருக்கு.. நல்லா இருக்கியா. டாக்டர் கிட்ட போனியா.. ஏன் டல்லா இருக்க” என்றான் வாய்திருந்து சேர்ந்தார் போல பேசினான்.

ஜெயந்தினி “டேய் அப்படியா இருக்கேன்.. வாமிட், எனக்கு எந்த ஸ்மெல்லும் ஒத்துக்கலை.. தாளிப்பு நெய்.. பால்.. பருப்பு. ஏன், பவுடர்.. சென்ட்.. பூ.. எதுவும் ஆகலை.. லெமன் தான் வைச்சிருக்கேன். அதான், ஒத்துக்குது.. சாப்பிடவே தோணலை.. ஒருமாசம் ஆகுமாம்.” என்றாள், சோர்ந்த சிரிப்பான குரலில்.

கபாலிக்கு இப்படி எல்லாம் இருக்குமா என தோன்றியது. ஆனால், அக்காவின் தோற்றம்.. அயர்வான சிரிப்பை பார்க்கவும்.. பாவமாக இருந்தது.

கபாலிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை “வேற டாக்டர் யாரையாவது பார்க்கலாமா” என்றான்.

மயூராவிற்கு, ஜெயந்தினியை  பார்க்க ஒருமாதிரி பயமும் கலக்கமும் வந்தது.

சுமதி, அனைவருக்கும் ஜூஸ் எடுத்து வந்தார். “இல்ல மாப்பிள்ளை.. இவங்களே பெரிய ராசியான டாக்டர் தான்.. சரியாகிடும்.. உப்பு ஓரப்பா சாப்பிட்டா சரியாகிடும்.. வாமிட் சிலருக்கு அப்படிதான் இருக்கும்.. சரியாகிடும்.. நான் பார்த்துக்கிறேன்.. “ என்றார்.

மயூரா பயமாக இதை  எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கபாலி “அங்க வந்து இருக்கட்டுமே அத்தை..“ என்றான்.

சுமதி “ஓ.. இருக்கட்டும்.. வசி வரட்டும் கூட்டி வந்து விட சொல்றேன்” என்றார்.

கபாலிக்கு சந்தோஷம்.. “நீ வா க்கா.. அங்க வந்து ரெஸ்ட் எடு” என்றான்.

Advertisement