Advertisement

நான் உன் நிறையன்றோ!

26

கபாலியும் மயூராவும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். பெற்றோர் அன்பாக வரவேற்றனர். சுமதி இருவரின் முகத்தை உற்று உற்று பார்த்தார்.. இருவரின் முகமும் புன்னகையை தொலைத்திருந்தது.

கபாலி, வண்டியில் வரும் போதும் பேசவில்லை.. ஏன் மனையாள் அருகில் வருகிறாள் என்ற ப்பாவம் கூட காட்டவில்லை. காலையில் என்ன முயன்றும் மனையாள் தன் பேச்சை மதிக்கவில்லை.. தன் அண்ணன் செய்கையை ஏற்று நடக்கிறாள்.. என எண்ணம் அவனுக்கு. அந்த எண்ணத்தை அவனால், அவளிடம் வெளிப்படுத்த முடியவில்லை. ஏன், நேற்று மதியம் அவள் சொன்னாளே ’அத்தை, நீங்க அந்த நகையை உள்ளே எடுத்து வைங்கள்’ என. அதை அவனால் மாற்ற முடியவில்லை.. என்னமோ தடுக்கிறது.. அவளின் வார்த்தையை  அவனால் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. நேற்று காலையில் அன்னையும் இதே வார்த்தையைத்தான் சொன்னார், மீறிக் கொண்டு.. போனிலேயே நகையை  ஆர்டர் செய்து வீட்டில் கொடுக்க வைத்தான்.. என்னிடம் ‘வசீகரன் சொல்லவில்லை’ என கோவமாக தன் உரிமையை எடுத்துக் கொண்டான். 

ஆனால், மனையாளிடம் அவளை எதிர்த்துக் கொண்டு ஏதும் செய்ய முடியவில்லை.. அதற்காக அவளோடு ஒத்தும் சொல்ல முடியவில்லை. குழப்பத்தில் இருந்தவனுக்கு.. அவளின் மேல் கோவம்.. அத்தோடு, முதல்முறையாக தன்மீதே கோவம் வந்தது கபாலிக்கு. எப்படி என்னை கட்டி வைத்திருக்கிறாள்.. நானும் ஏன் கட்டுப்பட்டு நிற்கிறேன்.. எனதான் கோவம். எனவே, குழப்பம் என்பதே இதுவரை கொள்ளாதவன்.. குழப்பமான குழப்பத்தில் தவித்துக் கொண்டே அக்காவின் விழாவிற்கு வந்தான்.

விழா இனிமையாக தொடங்கியது. மயூரா கபாலியோடு நிற்கவில்லை.. தன் அண்ணிக்கு செய்முறை செய்ய..  பெண்களோடு நின்றுக் கொண்டாள். கபாலி ஆண்களோடு நின்றாலும்.. அவனின் குழப்பம், மனையாளை அடிக்கடி பார்வையால் தீண்டும் போது.. கோவமாக கண்ணில் மின்னியது,  தன்னவளிடம் மட்டும் ரகசியமாக. 

மயூராவை கணவனின் கோவமான பார்வை தீண்டினாலும்.. அதை காணாமல் இருக்க முயன்றாலும்.. முடியவில்லை அவளால், அடிக்கடி.. தன்னவனின் பார்வையை.. ம்கூம் கோவப் பார்வையை எதிர்கொண்டு ஏந்திக் கொண்டாள்.. மயூரா.

முறையாக, மயூரா கபாலி இருவரும் சேர்ந்து சீர் தட்டை கொடுத்தனர். மயூராவின் முகம் எதோ ஒட்டி வைத்த புன்னகையிலிருக்க, தன் தம்பியின் முகம் ஏனோ கடினமாக இருந்ததாக.. ஜெயந்தினியால் கண்டுக் கொள்ள முடிந்தது.  ஆனால்,  அதை கேட்ட இப்போது நேரம் இல்லையே.. ம்.. கணவனின் பரிசில் தொலைந்தாள் ஜெயந்தினி.

இப்போது வசீகரன் தான் வாங்கி வந்த புது தாலிசெயினை தன் மனையாளுக்கு எடுத்து கொடுக்க.. ஜெயந்தினி உண்மையாகவே ஆச்சர்யம் கொண்டாள்.. கணவன் தன்னிடம் சொல்லாமல்.. முதல்முதலில் வாங்கியிருக்கிறான்.. அத்தோடு கணவன் எந்த பரிசு தந்தாலும் ஆனந்தமே.. அதிலும் இப்படி ஒரு செண்டிமெட்டான பரிசு ஜெயந்தினியை மிதக்க வைத்தது. கண்கள் பணிக்க.. மெல்ல அந்த தாலி செயினை காதலாக வருடினாள், பெண். 

மயூரா, தன் அண்ணியின் ஸ்தம்பித்த கோலம் கண்டு.. கணவனை அர்த்தமாக பார்த்தாள். கபாலி, அதுவரை மனையாளை முறைத்துக் கொண்டிருந்தவன்.. தன் அக்காவின் பேச்சற்ற நிலையில்.. தன் வரட்டு கௌரவம் அடிவாங்கியதாக உணர்ந்தான். இதுவரை நிமிர்ந்து நின்று, தன் மனையாளை குறைகூறி முறைத்துக் கொண்டிருந்தவன்.. மனையாளின் அர்த்தமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே குனிந்துக் கொண்டான்.

பெரிய சுமங்களில்கள் தாலி உருக்கள் கோர்த்து.. வசீகரனின் கையில் தாலிசெயினை கொடுக்க.. வசீகரன் ஆசையாக  தன்னவளின் கழுத்தில் அணிவித்தான். பின் தம்பதி இருவரும் ஆசீர்வாதம் வாங்கினர் பெரியவர்களிடம். 

குடிப்பதற்கு ஜூஸ் கொடுத்தனர் எல்லோருக்கும். கபாலி அந்த ஜூஸ் குடித்து முடித்து.. கிளம்பினான் அலுவகலத்திற்கு. 

ஜெயந்தினி தன் தம்பியிடம் “என்ன கபில், ஏன் இன்னிக்கு கூட எங்களோட இருக்கமாட்டியா.. இதென்ன இவ்வளோ கீக்கிரமாக  கிளம்பற.. ஏன் ஒருமாதிரி இருக்க..” என்றாள்.

வசீகரன் சின்ன குரலில் “க்கும்.. அவன் முகம் எப்போ நல்லா இருந்திருக்கு..” என கமென்ட் கொடுத்தான் தனக்குள்.

ஆனால், அண்ணனையே கவனித்துக் கொண்டிருந்த, மயூரா திரும்பி பார்த்து முறைத்தாள் தன் அண்ணனை. வசீகரன் அமைதியாகிவிட்டான்.

கபாலி “வேலை நிறைய இருக்கு..” என்றான்.

ஜெயந்தினி “டேய், இன்னும் கொஞ்ச நேரம் சாப்பிட்டு போலாம்.. இரு கபில்”  என கெஞ்சினாள்.

ம்கூம், கபாலியினால் அதற்குமேல்.. தன்னால் அங்கே நிற்க முடியும் என தோன்றவில்லை “இல்ல க்கா, நீங்க பாருங்க, நான் அர்ஜெண்டாக கிளம்பனும்..” என்றவன், மனையாளை எந்த பாவனையும் இல்லாமல்  பார்த்து, கிளம்பிவிட்டான்.

சொந்தங்கள் பேச செய்ய என நேரம் சென்றது. மகேஸ்வரிக்கு, அத்தனை சந்தோஷம்.. மருமகள் இந்த விழாவை அமைதியாக நடத்திவிட்டாள் என. அதனால், ஆனந்தமாக எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தார்.

ஜெயந்தினி, தனியாக மயூராவை பிடித்தாள்.. “என்ன மயூ.. உங்களுக்குள் சண்டையா, கபாலிக்கு என்ன ஆச்சு.. சொல்லு. அந்த சண்டையெல்லாம் சரியாகிடுச்சிதானே.. நீ.. நீங்க சந்தோஷமாக இருக்கீங்க தானே” என்றாள், கவலையான குரலில்.

மயூராவிற்கு அண்ணி கேட்க்கும் போது சொல்லுவதா.. இல்லை, வேண்டாமா என குழப்பம். அமைதியாக இருந்தாள். ஜெயந்தினிக்கு, இந்த அமைதி பயத்ததைதான் தந்தது. இரண்டாம் முறை அழுத்தி கேட்டாள்.

மயூரா தன் அண்ணனிடம் பேச வேண்டும் என எண்ணியிருந்தவள், இப்போது அண்ணி, கேட்கவும் அண்ணனை அழைத்தாள் போனில். ஆக, சந்தேகத்தில் இருந்த ஜெயந்தினிக்கு.. எதோ பிரச்சனை என உறுதியாக தெரிந்தது. என்ன வரபோகிறதோ என கணவன் வரும் வரை காத்திருந்தாள்.

மூவரும் மேலே, வசீகரனின் அறையில்தான் இருந்தனர். வசீகரன் மேலே வந்தான். ஜெயந்தினி பதறி “சொல்லு மயூ” என்றாள்.

மயூரா “அண்ணி, அண்ணன் எதுமே அவர்கிட்ட சொல்லல.. அதான்” என தொடங்கி நடந்தவைகளை சொன்னாள் பெண். பின், தன் அண்ணனிடம் மிகவும் தயங்கி தயங்கி “அண்ணா, நீங்க, வீட்டுக்கு வந்த போது, நான் பேசிக்கிறேன்னு சொன்னீங்க, அதனால், நாங்க இருவரும் ஏதும் அவர்கிட்ட சொல்லல.. நீ சொல்லி இருக்கணும் ண்ணா, அவர்.. அப்படிதான் அண்ணா, எப்படி சொல்றதுன்னு தெரியலை.. அவருக்கு, அவருடைய கடமைகள்.. உறவுகள்.. மரியாதை.. அப்படி எல்லாம் பார்கிறார். சாரி ண்ணா, நான் அப்செட்.. நீ அவரை..” என எதோ சொல்ல வந்தவள்.. அண்ணன் முகம் பார்த்து அமைதியாகினாள்.

ஜெயந்தியும் வசீகரனும் ஒருசேர.. மயூராவின் கையை பிடித்தனர்.

வசீகரன் “மயூ, இல்ல டா.. சின்ன மிஸ்அண்டர்ஸ்டண்டிங்,  உன்னை ஏதாவது சொல்லிட்டானா..” என்றான் வருத்தமாகவும், கோவமாகவும்.

மயூ “அண்ணா” என்றாள்.

வசீகரன் “என்ன சொல்லிட்டாரா”  என்றான் மரியாதையாக.

மயூரா “இல்ல, சொல்ல போனால், நகையை ஆர்டர் செய்துட்டார். நான் வேண்டாம் சொன்னதும்.. அப்படியே ஏதும் சொல்லாமல் பணத்தை கொடுத்துட்டார். சொல்லுங்க க்கா, அவர் அப்படி இருப்பாரா.. அமைதியாக”  என தன் அண்ணியிடம் கேள்வி கேட்டாள்.

ஜெயந்தினிக்கு யார் பக்கம் பேசுவது என தெரியவில்லை.. ஆக தம்பியின் வாட்டத்திற்கு காரணம் இதுதானா.. என தோன்றினாலும், ஏதும் பேச முடியவில்லை.. ஒருபக்கம் கணவன், ஒருபக்கம் தம்பி அமைதியாக அமர்ந்துக் கொண்டாள், பெண்.

மயூரா தன் அண்ணனையே பார்த்தாள்.

வசீகரன் “அதான், சாப்பிடாமல் போகிட்டாறா.. உங்க தம்பி” என தன் மனையாளை பார்த்து கிண்டலடித்தான்.

ஜெயந்தினிக்கு அழுகை வந்தது. வசீகரன் “சரி டி, நான் போய் காலில் விழுந்தாவது உன் தம்பியை கூட்டி வரேன்.. முகத்தை இரேண்டுபேரும் அப்படி வைக்காதீங்க.” என்றான் பல்லை கடித்துக் கொண்டான்.

மயூரா ஜெயந்தினி இருவருமே அமைதியாக இருந்தனர். விளையாடுகிறானோ வசீகரன் என தோன்றியது. நீண்ட பெருமூச்சு வந்தது இரு பெண்களுக்கும்.

ஜெயந்தினிக்கு தன் தம்பி தனக்காக செயின் வாங்கியிருக்கிறான் என்பது சந்தோஷமே.. அவன் என்னை விட்டே கொடுக்கவில்லை என சந்தோஷம்.. ஒருமாதிரி இதமான மனநிலை.. தனியாக சென்று நின்றுக் கொண்டாள்.

வசீகரன் மனையாளின் அருகில் வந்தான் “நான் அவன் ஆபீஸ் போயிட்டு வரேன்” என சொல்லி சென்றான்.

மயூரா “அண்ணி, என்ன அண்ணி..” என்றாள்.

ஜெயந்தினி திரும்பி பார்த்து “தேங்க்ஸ் மயூ.. எங்களை விட, அவனை நல்லா தெரிஞ்சிவைச்சிருக்க.. அவன் ரொம்ப லக்கி.” என்றாள்.

மயூரா தன்னையே நொந்துக் கொண்டாள் இந்த வார்த்தையில் ‘யாரு, நான் லக்கி..’ என சலிப்பாக தோன்றியது.

இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கீழே இறங்கி வந்தனர்.

வசீகரன் தவிர்க்க முடியாமல், கபாலியை அழைக்க சென்றான். கபாலி என்பவன் தங்களின் வாழ்வில் தவிர்க்க முடியாதவன் என போனஷனம் வரை உணரவில்லை. ஆனால், அவனின் எல்லாம் என்னையும் பாதிக்கும் என உணர்ந்தான் இப்போது. அதனால், யோசித்துக் கொண்டே சென்றான் எப்படி கபாலியிடம் பேசுவது என. ம்.. மிகவும் சங்கடமான தருணமாக உணர்ந்தான் வசீகரன்.

கபாலியின் அலுவலகம் சென்றான்.. கபாலியின் அறைக்கு வர.. கபாலி, வசீகரனை பார்த்து எழுந்து நின்றான் அனிச்சையாய்.

வசீகரன் தயங்கினான்.

கபாலி “வாங்க” என்றான்.

வசீகரன் லேசாக சிரித்து “கபில், பெர்பஸ்சாக எதுவும் சொல்ல கூடாதுன்னு இல்லை கபில். ஜெயாவை சர்ப்ரைஸ் செய்ய நினைத்தேன்.. அவ்வளவுதான்.” என சொல்லி தயங்கியபடியே நின்றான் வசீகரன்.

கபாலிக்கு, வசீகரன் வந்ததே போதுமானதாக இருந்தது. ம்.. கபாலிக்கு தேவை, அவனை யாரும் ஏனோதானோவென எண்ணிவிட கூடாது.. தக்க இடத்தில்.. தக்க மரியாதை.. அவனுக்கு வேண்டும். அது இப்போது தேடி வந்துவிட்டதாக உணர்ந்தான். தன் மாமா தயங்கியபடியே நிற்பதை பார்த்து.. கபாலி “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. நீங்க உட்காருங்க” என்றான், இயல்பாக.

வசீகரன் “இல்ல கபில், அந்த மயூவும் ஜெயாவும் டென்ஷனில் இருக்காங்க. வாங்க சாப்பிடாமல் கூட வந்துட்டீங்க, வாங்க போலாம்” என்றான்.

கபாலி “ஓ.. சரி, நீங்க கிளம்புங்க, நான் ஆனந்திடம் சொல்லிட்டு வரேன்” என்றான்.

வசீகரன் அமர்ந்துக் கொண்டான் “நீங்க பேசிட்டு வாங்க சேர்ந்து போலாம்” என்றான்.

கபாலி, போனில் ஆனந்திடம் பேசி, விவரங்கள் சொன்னான். பின் மாமன் மச்சான் இருவரும் கிளம்பினர் வீடு நோக்கி.

நேராக  கபாலியும் வசீகரனும் வீட்டிற்கு வர, ஆதிகேசவன் கண்ணில்தான் முதலில் இவர்கள் இருவரும் பட்டனர். ஆதிகேசவன் என்னவோ நடந்திருக்கு என யோசித்தார்.

அதிகம் பேசிக் கொள்ளவில்லை கபாலியும் வசீகரனும், அருகருகே அமர்ந்தனர். 

ஆதிகேசவன் “மாப்பிள்ளை, போங்க நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு, நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க” என்றார்.

வசீகரனின் பெரியப்பா ”வசி, எப்படியோ மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்துட்ட.. போங்க போங்க.. சாப்பிடுங்க” என்றார். 

வசீகரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

கபாலியின் கண்கள் மனையாளை தேடியது, உரிமையாய். ‘அவள்தான் அவளின் அண்ணனிடம் சொல்லியிருப்பாள்..’ என எண்ணிக் கொண்டான் கபாலி. அதனால் தேடினான்.

மயூரா, மாடிப்படியில் அமர்ந்திருந்தாள் போனை பார்த்துக் கொண்டு.. இப்போது கணவனும் அண்ணனும் அமர்ந்திருப்பதை நிறைவாக பார்த்தாள். கணவன் கண்கள் தன்னை தேடுவதை அவளால் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. எழுந்து முன்னால் வரவில்லை.

இப்போது, கபாலி உண்பதற்கு வந்துவிட்டதாக செய்தி பெண்களிடம் சென்றது. சுமதி ஜெயந்தினி வந்தனர் கபாலியை உண்பதற்கு அழைக்க. 

சுமதி “வாங்க மாப்பிள்ளை.. சாப்பிடலாம் வாங்க.. வசி வா” என இயல்பாக அழைத்து சென்றனர்.

பெரியவர்கள்.. ஆண்கள் உண்டு முடித்திருந்தனர். அதனால், பெண்மாப்பிள்ளை.. மகன் மருமகள்.. என அமர வைத்து பரிமாறினார் சுமதி.

எதையும் முகத்தில் காட்டாமல் உண்டனர் கபாலியும் மயூராவும். ஜெயந்தினிதான் ‘என்ன உருகி உருகி பேசினாள்.. என்னிடமும் வசியிடமும்.. இவளா பேசினால்.. எப்படி இப்படி கோவமே இல்லாமல் உணர்ச்சியே இல்லாமல்.. என் தம்பியை கண்டுக்கவே இல்லாமல்.. இருக்கிறாள்’ என யோசனையோடே மயூராவை பார்த்தாள் ஜெயந்தினி.

உணவு முடிந்தது எழுந்தனர் நால்வரும்.

கபாலி சற்று நேரம் அமர்ந்திருந்தான். பின், மேலே தன் மனையாளின் அறைக்கு சென்றான் உறங்குவதற்கு. வசீகரனும் ரெஸ்ட் எடுக்க சென்றுவிட்டான்.

ஜெயந்திக்கு உண்டதிலிருந்து என்னமோ போலிருக்க.. தன் அன்னையின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். 

மயூராவின் சித்தி பெரியம்மா, கபாலியின் அத்தை பெரியப்பா குடும்பம் எல்லாம் கிளம்பினர்.

மயூரா எதோ படம் பார்த்துக் கொண்டிருந்தாள், ஹாலில். மேலே கணவனிடம் சென்று பேசுவதுற்கு மனதில்லை.. கண்கள் சொக்கியது.. கால்நீட்டில், சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள், கண்கள் திறந்து படத்தை பார்த்தாலும்.. மனம் கணவனிடமே இருந்தது ‘கிட்டக்க வந்து நிற்ககூட இல்லை.. எப்படி எல்லாம் முறைத்தார்.. காலையில். ஒருவார்த்தை, என்ன சொன்ன உங்க அண்ணாகிட்ட என கேட்டால் குறைந்திடுவரா.. சரியான அழுத்தம் ப்பா.. வரட்டும் அவரே.. பேசட்டும் அவரே.. காலையில் பக்கத்தில் போனதற்கு.. எப்படி சொன்னார்’ என தனக்குள் கணவனை மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள் பெண்.

கபாலி, மேலே அவளின் அறையில்.. இதமான ஏசியில் படுத்துக் கொண்டிருந்தான்.. அவள் மேலே வருவாள் என எண்ணியிருந்தான். நேரம் செல்லசெல்ல.. அவள் வருவது போல் தெரியவில்லை.. மனது சலித்து போனது.. அவள் சொல்லித்தான் எதோ நடந்திருக்கிறது என தெரிந்தாலும் புரிந்தாலும்.. ‘அதற்கென்ன இப்போ.. உங்க அண்ணன் செய்தது, அதான் நீ சாவேல் பண்ண, நீதானே வந்து பேசணும், இன்னும் மேலே வரலை.. நானென்ன நடு கூடத்திலா கேட்க முடியும், என்ன ஆச்சுன்னு’ என எண்ணிக் கொண்டே உறங்க முற்பட்டான் அவளவன். 

சுமதியும் மகேஸ்வரியும்.. அப்படியே அமர்ந்துக் கொண்டிருக்க, ஜெயந்தினி எதோ அவஸ்த்தையில் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தாள்.. சற்று நேரத்தில் ஜெயந்தினி வாந்தி எடுத்தாள்.  அவளுக்கு என்ன ஆச்சு என மகேஸ்வரியும் சுமதியும் பதறி, பழசாறு.. வெந்நீர் என கொடுத்து அவளை கவனித்து,  விவரம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஜெயந்தினி விவரம் சொன்னாள்.. அன்னைகள் இருவருக்கும் சந்தோஷம்தான் “மாலையில் மருத்துவரை பார்க்கலாம் இப்போது போய் உறங்கு” என்றனர்.

இப்படியே நேரம் செல்ல,

மாலை 4:30க்கு கபாலி எழுந்து வந்தான். எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.. சத்தமில்லாமல் மனையாளை தேடினான்.. சோபாவில் அவள் உறங்குவது தெரிய.. அவளின் தோள் தொட்டு எழுப்பினான் மெதுவாக.. “நான் கிளம்புகிறேன்” என சைகை செய்தான்.

மயூரா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.. கணவன் எழுப்பியதால்.. திருதிருவென விழித்தாள். 

கபாலி ஆதூரமாக அவளின் கன்னம் தட்டி “நான் கிளம்புகிறேன்” எனுமாறு செய்கை செய்தான்.

மயூரா “ம்..” என்றாள்.

கணவன் “சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க ரெண்டுபேரும்..”என்றான்.

மயூரா தலையசைத்தாள்..

கபாலி, மீண்டும் ஒருமுறை அவளின் கன்னத்தை தட்டுகிறேன்.. என இதமாக வருடி.. விடைபெற்று சென்றான் கபாலி. மயூரா இதமாக மீண்டும் உறங்கினாள்.

 

Advertisement