Advertisement

நான் உன் நிறையன்றோ!

25

மயூரா வகுப்பிற்கு கிளம்பி சென்றதும், மகேஸ்வரி வேலை செய்பவரிடம் சமையலுக்கான வேலையை சொன்னார். பின்னர் தனது மகனுக்கு அழைத்தார் தொலைபேசியில்.

கபாலி, குடோன் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அன்னையின் அழைப்பை கட் செய்து சைலெண்டில் போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தான். அன்னையும் விடாமல் மகனை அழைத்துக் கொண்டிருந்தார் குறிப்பிட்ட இடைவெளியில்.

அன்னைக்கு பயம் ’வீம்பாக செயின் வாங்கி வந்துவிடுவனோ.. இல்லை, தன் சம்பந்தியிடம் பேசிவிடுவானோ’ என கலக்கம் சூழ்ந்தது.

சொல்லி வைத்தார் போல.. ம், சொல்லித்தான் வைத்தான் கபாலி. ஒருமணி நேரம் சென்று வீட்டிற்கு ஒரு நகைக்கடையின் பெயர் சொல்லி ஒருவர் வந்தார். மகேஸ்வரிக்கு என்ன எது என புரிந்து போனது. மகன் மேல் கண்மண் தெரியாத கோவம் வந்து சேர்ந்தது. ’அப்படி என்ன பிடிவாதம் அவனுக்கு..’ என அப்படியோரு கோவம். கடையிலிருந்து வந்த மனிதர் ஒரு  பெரிய நகைபெட்டியை கொடுத்தார். மகேஸ்வரிக்கு மனதே விட்டு போனது. மீண்டும் மீண்டும்  என் வளர்ப்பு இப்படி போகிற்றே என நொந்து போனார். அதே மனநிலையில் அந்த பெட்டியை வாங்கி பூஜை அறையில் வைத்தார். வந்தவருக்கு ஒருகாபியை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

மகேஸ்வரி அப்படியே அமர்ந்துக் கொண்டார். ஏதும் தோன்றாமல். மயூராவிற்கும் ஏதும் ஓடாததால்.. அவள் தன் அத்தைக்கு அழைத்தால் ‘மதியம் நானே வருகிறேன்’ என சொல்லுவதற்காக.

மயூரா, அழைத்தபின்தான் மகேஸ்வரி மீண்டார். மருமகளிடம் “காலையிலிருந்து, அவனுக்கு கூப்பிட்டுட்டேன் இருக்கேன் மயூ, போனை எடுக்கலை அவன். இப்போ, நகை கடையிலிருந்து செயின்.. செயின்தான் நினைக்கிறேன்.. கொண்டு வந்து கொடுத்திருக்காங்க.. ஏன் மயூ இவன் இப்படி ஆகிட்டான். இப்படி குடும்பத்திற்குள் ஏட்டிக்கு போட்டி செய்து என்ன செய்ய போறான். மாப்பிள்ளை என்ன நினைப்பார்.. அவர் என்கிட்டே சொல்லிட்டாரில்ல.. இவன்கிட்ட சொல்லைன்னா என்ன, அன்று இரவே, நான் அவன் சாப்பிடும் போது சொன்னேன். எனக்கு அப்படிதான் ஞபாகம்.. என்னான்னு தெரியலை. இப்போ.. இது, இப்படி பெருசா எடுப்பான்’னு எனக்கு தெரியலை.” என்றார் கவலையாக.

ஆக, மயூராவிற்கு தோன்றியது ‘அத்தை மறந்துவிட்டார்கள்.. என் அண்ணனும் சொல்லவில்லை.. ஆக, சம்பந்தப்பட்ட யாரும், நான் உற்பட சொல்லவில்லை..  அதனால் கோவம் அவருக்கு’ என கணவனின்  நிலை இப்போதுதான் புரிந்தது மனையாளுக்கு. காலையில் நடந்ததை கணக்கில் கொள்ளாமல் கணவனை நேரில் பார்க்க.. சமாதானம் செய்ய.. என ஆசையாக எண்ணினாள், பெண்.

மயூரா “அத்தை, நான் போன் செய்து பார்க்கிறேன்” என்றாள்.

மகேஸ்வரி “சரி, கூப்பிட்டு பாரு, நாளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் விழா நடக்கணும் மயூ”  என்றார் கவலையாக.

மயூரா “ம்..சரி அத்தை” என்றாள்.

மயூரா கணவனுக்கு அழைக்கவில்லை.. தன் ஓட்டுனரிடம் வண்டியை, தங்களின் அலுவலகம் செல்ல சொன்னாள் மயூரா.

காலையில் வேகமாக கிளம்பி சென்ற கபாலி, நேராக அலுவலகம் சென்று அமர்ந்துக் கொண்டான். என்னமோ வசீகரன் மேல்தான் கோவம்.. செயின் எல்லாம் அவன் ஆர்டர் செய்யவில்லை.. காலையில் இருந்த கோவத்தில்.. வேண்டுமென்றே அலுவலகம் சென்றது.. தாங்கள் எப்போதும் வாங்கும் கடைக்கு போன் செய்து.. தன் தேவையை சொல்லி ஆர்டர் செய்தான். அதை வீட்டில் கொடுக்கவும் சொல்லிவிட்டான். வீம்பு கபாலி.

மயூரா அரைமணி நேரத்தில் கணவனின் அலுவகலத்தில் இருந்தாள்.. வரவேற்பறையில், கணவனின் அறை எங்கே இருக்கிறது என விசாரித்துக் கொண்டு நடந்தாள் உள்ளே. அங்கிருந்த வரவேற்பு பெண்ணுக்கு.. மயூராவை சட்டென அடையாளம் தெரியவில்லை.. “நீங்க.. இருங்க கேட்டு சொல்றேன்” என்றாள்.

மயூரா “ஆம் மயூராகபாலி, ம்..” என புன்னகைத்தபடியே அந்த பெண்ணை பார்த்து ‘சரியா’  என தலையசைத்தாள். 

பாவம் அந்த பெண்ணுக்கு சட்டென புரியவில்லை.. அடுத்த நொடியில்தான்  புரிய “ஹோ.. மேம்.. சாரி..” என்றார் அந்த பெண்.. தனது இருக்கையிலிருந்து இறங்கி வந்து.. ”வாங்க நான் கூட்டி போறேன்” என்றார்.

மயூரா வழி தெரியாததால் அமைதியாக அந்த பெண்ணின் பின்னால் நடந்தாள். கபாலியின் அறையை காட்டிவிட்டு, வரவேற்பு பெண் தன் வேலையை பார்க்க சென்றார்.

மயூரா, கதவை பார்மலாக தட்டிவிட்டு.. உள்ளே நுழைந்தாள். அங்கே ஆனந்தும் கபாலியும் பேசிக் கொண்டிருந்தனர். மனையாளை பார்த்ததும் கபாலியின் முகம் மென்மையாக அதிர்ந்தது.. சட்டென “மயூ” என்றான்  சின்ன குரலில்.

ஆனந்த் “ஓ.. வாங்க, எப்படி இருக்கீங்க” என வரவேற்று தனது இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டார்.

மயூரா, ஆனந்துக்கு பதில் சொன்னாள் பின் “நீங்க,” என சொல்லி கைகளில் செய்கை செய்தாள், பின் “நான் வெயிட் செய்கிறேன்” என்றாள்.

கபாலிக்கு மனையாள் பேச திணறுவது புரிந்து “இல்ல, முடிஞ்சுது..” என்றான் மனையாளை பார்த்து. அவனே, ஆனந்த் பார்த்து “சரிங்க, போஸ்ட் டேட் செக் வாங்கிடுங்க.. பேசிக்கலாம் ஆனந்த்” என்றான்.

ஆனந்த், புன்னகை முகமாக விடைபெற்றுக் கிளம்பினார்.

கபாலி தலையசைத்து விடைகொடுத்தான். 

அதன்பின் கபாலி, மனையாளையே பார்த்தான் இமைக்காமல்.. அதில் கேள்வி இல்லை.. ‘நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும்’ என்ற பாவம்தான் இருந்தது. அவளே வந்தது.. கணவனுக்கு தொக்காக போக.. இன்னும் பார்வையை மாற்றாமல் பார்த்தான்.

மயூரா, கணவனின் எதிரில் அமர்ந்தாள்.. அழகாக புடவை தலைப்பை கையில் பிடித்துக் கொண்டு.. பொறுமையாக அமர்ந்தாள்.. கபாலி அப்படியே பார்த்திருந்தான்.. என்னமோ மல்லிகை வாசம் அவனை சூழ்ந்தது. கொஞ்சம் மனதும் லேசானது.

மயூரா, நிமிர்ந்து கணவனை பார்க்க..  அவனின் இமைக்கா பார்வைதான் அவளை சிந்திக்க வைத்தது.. ‘இப்படி உற்று எதற்கு பார்க்கிறார்.. என்ன அதிசயம்’ன்னு கேட்ட்பார்ன்னு  பார்த்தால்.. அப்படியே அழுத்தமாக பார்க்கிறார்’ என  எண்ணிக் கொண்டவள் “எ..ன்ன முதலாளி.. பாஸ்.. ஷாக்கில் இருக்கீங்களா.. பார்த்தால் அப்படி தெரியலை, ஏன் வந்தேன்னு கேட்க்கிறார் போல இருக்கு..” என்றாள் தனது கொஞ்சும் தமிழில்.

கபாலி இன்றுதான் அவளின் குரல்வளத்தை கவனித்தான் கொஞ்சும் தமிழ்.. அவ்வளவாக திக்கவில்லை.. அழுத்தமாக வார்த்தைகள் வந்தது. ஆழகாக கொஞ்சி கொஞ்சி வந்தது.. அதனால் உடனே மனையாளிடம் அதை பகர்ந்தான் “அழகா பேசற..” என்றான் அமர்த்தலான புன்னகையில்.

மயூரா தலை சாய்த்து சிரித்தாள்.. புருவம் உயர்த்தி “தேங்க்ஸ்.. ஆனால், வேற எதோ யோசிக்கிறீங்க” என்றாள்.

கபாலி “என்ன யோசிக்கிறேன்.. சொல்லேன்” என்றான் சுவாரசியமாக,  இப்போது நன்றாக சாய்ந்து அமர்ந்துக்  கொண்டான்.. எதோ கதை கேட்கும் பாணியில்.

மயூராவிற்கு இப்படி கேட்பவனிடம் என்ன பேசுவது என தெரியவில்லை “என்..ன கேட்டுக்கிறீங்க” என்றாள்.

கபாலி “நான் ஒன்னும் கேட்க்கலை, நீதான் சொன்ன” என்றான் விடாகண்டனாக.

மயூரா “நான் கேட்டேன்.. யோசிக்கிறீங்கன்னு” என்றாள்.

கபாலி “அதைதான் நானும் கேட்டேன், என்ன யோசிக்கிறேன்னு சொல்லுன்னு” என்றான்.

மயூரா சரண்டர் ஆனாள் “தெரியலையே.. நா..ன் பாவம்” என்றாள் அவளே.

கபாலி ஏதும் பேசாமல் தலையசைத்தான் ‘இல்லை’ என்பதாக.

மயூரா “ப்ளீஸ்.. ஏதாவது சொல்லுங்க” என்றாள்.

கபாலி சிரித்தான் கிண்டலாக.

மனையாளுக்கு கொவமெட்டி பார்த்தது.. “சரி நான் கிளம்பறேன்.. உங்களை பார்க்க வந்தது தப்புதான்.. பை” என்றாள்.

கபாலி அவள் எழவும் “ஹ.. சும்மா.. சும்மா.. விளையாடினேன், பாரேன் எனக்கு நீ கோவம்படறது  கூட கொஞ்சுறா மாதிரிதான் தெரியுது, அதான் விளையாடினேன்..” என்றான் விளையாட்டாய்.. ரசனையாய்.. மனையாளை நிரப்ப சீண்டும் குரலில் சொன்னான் கணவன்.

மயூரா, திரும்பி முறைத்தாள்.. இன்னும் இன்னும் கோவம்தான் வந்தது.

கபாலி “சரி, சொல்லு” என்றான்.

மயூரா, ஏதும் பேசாமல் கதவை திறந்துக் கொண்டு சென்றாள்

கபாலியும் வேறு வழியில்லாமல்.. தனது போனில், மயூராவின் டிரைவர்க்கு அழைத்தபடியே.. தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு, அவள் பின்னால் “நீங்க கிளம்புங்க ண்ணா, நாங்க வந்திடறோம்..” என டிரைவரிடம் சொல்லியபடியே, கிளம்பினான். 

மயூராவிற்கு, கணவன் இப்படி டிரைவரிடம் சொல்லிக் கொண்டிருப்பது தெரியாதே.. தான் வந்த வண்டியில் ஏற போக.

டிரைவர் “மேடம், சர்.. உங்களை கூட்டி வரேன்னு சொன்னார். என்னை கிளம்ப சொன்னார்” என்றார்.

மயூராவிற்கு ‘இதென்ன வேலை செய்பவரிடம் பேசுவது.. என்னிடம் முதலில் சொல் வேண்டாமா.. உதாசீனப்படுத்துகிறாரா என்னை’ என தோன்றியது.

இப்போது கபாலி, மனையாளின் அருகில் வந்து “வா மயூ” என்றான்.

மயூராவிற்கு ஏதும்  வெளியில் காட்டமுடியாத நிலை.. அமைதியாக கணவனோடு வண்டி ஏறினாள்.

கபாலி தனது அலுவலக கேட் தாண்டவில்லை மயூரா ஒரு விரல் நீட்டி “நீங்க வெரி டேன்ஜரஸ்.. சாதரணமா பேச வந்தேன்.. முதல் தடவ ஆபீஸ் வந்தேன், என்னை.. என்னை.. இப்படி இப்படி பண்றீங்க.. இதெல்லாம் சுத்தமா சரியில்ல.. ” என்றாள்.

கபாலிக்கு சத்தியமாக அவளின் பேச்சு கேட்க கேட்க சீண்ட வேண்டும் என்றே தோன்றியது.. “யாரு நான் டேஞ்சர்.. நல்லா இருக்கே.. என்ன சரியில்லை நான், சொல்லு..” என சொல்லி ரோட்டை பார்த்துக் கொண்டே.. வினவினான் நிதானக் குரலில்.

மயூரா அமைதியானாள் அவளுக்கு ’என்ன அசால்ட்டாக கேட்க்கிறார்’ எனத்தான் தோன்றியது. அதனால், அமைதியானாள்.

வீடு வந்து சேர்ந்தனர் அமைதியாகவே.. மயூராவிற்கு அத்தை முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது.

மகேஸ்வரி “மயூரா என்ன சொல்றான்  உன் புருஷன்.. புரிய வைச்சிட்டியா” என்றார்.

கபாலி, இப்போது இன்னும் நக்கலாக பார்த்தான் தன் மனையாளை.  

மயூரா “அத்த” என்றவள் “நீங்களே பேசுங்க” என்றுவிட்டு, கிட்சென் சென்றாள் ‘என்னமோ செய்ங்க எனக்கென்ன.. ஏதாவது பேச வந்தால் கேட்கனும்.. திரும்ப திரும்ப வேணும்ன்னே பேசி, என்னை பேசவிடாமல் செய்தால்’ என எண்ணிக் கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டாள்.

மகேஸ்வரி “கபில்.. என்ன ஆச்சு” என மருமகளை காட்டி கேட்டார்.. தொடர்ந்து “என்ன சொன்ன அவளை.. “ என்றார் அதட்டலாக.

கபாலி நேரே மனையாளிடம் சென்றான்.. இன்னொரு சேரில் அமர்ந்தான் “சொல்லு..” என்றான் ஸீரியஸ்சானக் குரலில்.

மயூராவிற்கு கோவமாகவும் அழுகையாகவும் வந்தது.. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். ‘காலையில் எப்படி என்னை விட்டு எழுந்து போனான்.. அதெல்லாம் கூட எண்ணாமல் நான் வந்து அவன் அலுவலகதத்தில் நின்றால்.. என்னை பேசி பேசியே டார்ச்சர் செய்கிறான்.’ என எண்ணிக் கொண்டே அவனை பார்த்து முறைத்தாள்.

மகேஸ்வரி ஹாலிலேயே நின்றுக் கொண்டார்.. கணவன் மனைவியின்  சம்பாஷணையை பார்த்து.

மயூரா ஏதும் பேசவில்லை.. கபாலி “என்ன மயூ சும்மா விளையாடினேன்.. சொல்லு” என்றான்.

மயூராவிற்கு இன்னும் கோவம் தீரவில்லை, எனவே நல்லா கெஞ்சட்டும் என எண்ணிக் கொண்டு.. எழுந்து ஹாலுக்கு வந்தாள்.. தன் அத்தையை பார்த்து “அத்தை, அவர் ஆர்டர் செய்த செயின் வந்திடுச்சா.. அ..தை.. அண்ணிக்கு சீராக இப்போது கொடுக்க வேண்டாம்.. அப்புறமாக கொடுத்துக்கலாம்.. அதை நீங்க அப்படியே உள்ளே எடுத்து வைங்க..” என்றவள் கணவனை அர்த்தமாக பார்த்தாள்.. நிதானமாக.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மகேஸ்வரி “ஆமாம் டா, அப்புறமாக கொடுத்துக்கலம்.. நான் அன்னிக்கு நைட் சொன்னேன்.. நீ காதில் வாங்கலை போல.. மாப்பிள்ளை சொல்லிட்டாரு டா. என்கிட்டே தானே சொன்னார். அதில் தப்பு இல்லையே.. விடு டா.. தப்பா போயிட கூடாதுல்ல” என்றார், இறைஞ்சுதலானக்குரலில்..

கபாலி, பின்னால் கையை கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றான் “ஓ.. நானும் நாளைக்கு, எங்க வீட்டில் விழான்னு, அத்தையிடமும் ஜெயாவிடமும் மட்டும் சொல்லிட்டு வந்திடுறேன்.. என்னமோ செய்ங்க” என்றவன் மேலே சென்றான்.

மகேஸ்வரி “அப்படி சொல்லாத டா..” என்றார். அதை கேட்க்க அவன் அங்கே இல்லை.. மேலே சென்றுவிட்டான்.

மயூராவும் செல்லும் கணவனையே பார்த்திருந்தாள்.. அவனிடம் இளகித்தான் சென்றாள்.. ஆனால், கணவன் ஏனோ கோவப்படவும்.. கோவமாக வந்தது.. ‘அதென்ன எப்போதும் ஏட்டிக்கு போட்டி என நிற்பது.. அடுத்தவர் சொல்லுவதை கேட்பதில்லை என்ன தான் செய்திடுவார்’ என தோன்ற.. பேசிவிட்டாள் பெண். இப்போது கணவன் மேலே உண்ணாமல் சென்றது என்னமோ போலதான் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்.. என எண்ணிக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

மகேஸ்வரி “சாப்பிட்டு, அவனுக்கும் எடுத்து போடா” என்றார்.

மயூராவிற்கு உணவு இறங்கும் போல தெரியவில்லை. ஆனாலும் அத்தை சாப்பிட வேண்டுமே எனவே, உண்பதற்கு அமர்ந்தாள்.. ரசம் சாதம் உண்டு எழுந்துக் கொண்டாள்.

மகேஸ்வரி, மருமகள் உண்பதற்குள்.. மகனுக்கு உணவை சின்ன கிண்ணங்களில் பிசைந்து எடுத்து கொடுத்தார். மயூரா ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டு.. மேலே சென்றாள்.

கபாலி உடையை மாற்றிக் கொண்டு.. கட்டிலில் சாய்ந்திருந்தான்.. உறங்கவில்லை.

மயூரா உணவு கிண்ணங்களை.. டேபிளில் வைத்தாள்.. “என்னங்க சாப்பிடுங்க.. அத்தை கொடுத்துவிட்டாங்க” என்றாள்.

கபாலி விருட்டென எழுந்து சென்றான், அடுத்த அறைக்கு.

மயூராவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எப்படி பேசுவது.. மீண்டும் மீண்டும் சென்று அவனின் கோவத்தை கிளற.. பயமாக இருந்தது.. நாளை விழா முடியட்டும் பேசிக்கலாம் என தானும் அமைதியாக இருந்துவிட்டாள்.

அன்று அப்படியே நகர்ந்தது.

மறுநாள் காலையில்.. மகேஸ்வரியின் பரபரப்பில், வீடு லேசாக விழித்துக் கொண்டது. என்ன வேலையிருந்தாலும் அதிகாலையில் எழுந்துக் கொள்ளும் கபாலி, இன்று எட்டாகியும் கீழே வரவில்லை.

கபாலியின் பெரிப்பா, அத்தை குடும்பம் வந்தாகிற்று.. மயூரா அவர்களை கவனித்தாள் பொறுப்பாக. மகேஸ்வரி, தேவையானவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். 

எல்லோருக்கும் வசீகரனின் வீட்டில்தான்  காலை உணவு.. எனவே பெரியவர்கள் எல்லோரும் கிளம்பினர்.. மயூராவையும் கபாலியையும் விட்டு. 

மகேஸ்வரி “கபிலோடு சீக்கிரம் வந்திடுடா” என சொல்லி கிளம்பிவிட்டார் அவர்களோடு.

மயூராகண்ணை கட்டியது.. மேலே சென்றாள்.

கபாலி அப்படியே அமர்ந்திருந்தான்.

மயூரா “டைம் ஆச்சுங்க” என்றாள் சின்ன குரலில்.

கபாலி மனையாளை பார்த்தான்.

மயூரா “மணியாச்சு..” என்றாள்.

கபாலி “ஆக, என்னை விட்டுகொடுத்துதான் அங்க நிக்கணும் நீ..” என்றான்.

மயூரா “யார் அப்படி சொன்னது.. நீங்க வாங்க” என கணவனின் அருகில் சமாதானம் செய்ய..  வந்தாள் பெண்.

கபாலி “நீ போ.. நான் வரேன்” என்றவன்.. குளிப்பதற்கு சென்றான்.

மயூரா என்னமோ கணவன் தன்னை மீண்டும் மீண்டும் உதாசீனப்படுத்துவதாகவே தோன்றியது.. கண்கள் கலங்குவது போலானது.. அமைதியாக கீழே சென்றுவிட்டாள்.

Advertisement