Advertisement

சுமதி, எதேதோ பத்து நிமிடம் பேசினார். எதற்கும் அசையவில்லை பெண். கீழே வந்துவிட்டார்.. தன் கணவரிடம் “அவளுக்கு கொஞ்சம் முடியலையாம்.. கிளம்பலை” என்றார்.

கபாலி சங்கடமாக பார்த்தான், பின் “மாமா, நான் மேலே போய் பேசிக்கிறேன், நீங்க கிளம்புங்க” என்றவன் பதிலை எதிர்பாராமல் மேலே சென்றான்.

ஆதிகேசவன் தலையசைக்க.. அதை பார்க்க அவன் அங்கில்லை.

மேலே சென்றான் கபாலி.. அனுமதி வாங்காமல்.. படாரென அவளின் அறை கதவை திறந்தவன் “மயூரா” என்றான் அங்கேயே  நின்று.

மயூரா, கணவன் மேலே வருவான் என எதிர்பார்க்காததால்.. கணவன் அழைத்த சத்தத்தில் திடுக்கிட்டு பார்த்தாள் கணவனை..

கபாலி “என்ன ரிவஞ்சா..” என்றான் ஒருமாதிரி குரலில்.

மயூரா கணவனையே பார்த்திருந்தாள் புதிதாக.. அவளுக்கு அவன் என்ன பேசினாலும் புதிதுதான்.. இப்போதும் அப்படியே.. திருத்தமாக நின்றிருந்தான்.. நேர்த்தியான உடை.. கலையாத சிகை.. கண்ணில் என்னமோ ஒரு ஒளி.. முகம் கிளீன்ஷேவ் செய்து.. பார்வையால் தன்னை முறைத்தபடி கேள்விகேட்க.. மனையாளுக்கு என்னமோ ரசிக்கத்தான் தோன்றியது கணவனை ‘என்ன பிரகாசமா இருக்கார்.. எங்க கல்யாணத்தில் கூட இப்படி என்னை கூர்ந்து பார்க்கவில்லை.. இப்போ எதுக்கு இப்படி பார்க்கிறார்..’ என அவளுள் ஓட.

கபாலி “ம்.. சொல்லு.. விளையாட நேரம் இல்லை, கிளம்பு.. அத்தையும் மாமாவும் கிளம்பிட்டாங்க.. நாமும் போயிடலாம்.. சீக்கிரம் வா.. வரியா.. அப்புறம் பேசிக்கலாம்” என்றான் அழுத்தம் மாறாமல்.

ஆடாத அசையாத அவனின் கருவிழிகள்.. தன்னை மட்டுமே நோக்க.. அவனின் பேச்சுக்கு, தன்போல தலை அசைந்தது ‘சரி’ என்பதாக.

கபாலி “கீழ வெயிட் பண்றேன் கொஞ்சம் சீக்கிரம் வந்திடு” என்றவன் , கீழே சென்றுவிட்டான்.

மயூராவிற்கு தெரியும், தவறிக்க முடியாது என. ஆனாலுமொரு எதிர்பார்ப்புதான்..கணவன் வந்து அழைக்கட்டும் போலாம் என எண்ணியிருந்தாள். அழைத்துவிட்டான்.. என்ன மிரட்டினான். அவன் என்று பேசினான்..’ என மனதில் ஓடியது. கிளம்பினாள் பெண்.

ஆதிகேசவனும் சுமதியும் கிளம்பியிருந்தனர். கபாலி ஹாலில் அமர்ந்திருந்தான். வேலை செய்பவர்.. லெமன் டீ கொண்டு வந்து கொடுத்தார்.

சரியாக பதினைந்து நிமிடத்தில்.. மயூரா கீழே  வந்தாள். லைட் பிங்க் ஜரி இல்லா மென்பட்டு.. அதற்கு தோதாக.. ப்ளாக் மெட்டல் அணிமணிகள்.. என வந்தாள்.. அவள் வருவதை கொலுசும்.. கை நிறைந்த மெட்டல் வளையலின் ஒலியும்.. இதமான வாசனையும் கணவனுக்கு சொல்லியது போல.. அனிச்சையாய் நிமிர்ந்தான் கபாலி.

அவன் இந்த க்ளாசி லுக்’கில் அவள் வருவாள்.. என எதிர்பார்க்கவில்லை.. கூடுதலாக அரைநொடி அவளை ரசித்துவிட்டான் இமைக்காமல் கணவன். 

மயூரா இறங்கி, அவனின் அருகில் வர.. சுதாரித்தவன் “போலாமா“ என்றான். மயூரா தலையசைத்து அவனோடு கிளம்பினாள்.

கபாலிக்கு, மனையாள்.. அழகாக ஏதும் சொல்லாமல்.. சண்டை போடாமல் கிளம்பி வந்தது.. அப்படி ஒரு நிம்மதி.. நிறைவு.. அதுவும் க்ளாசியாக இருக்கவும்.. கண்ணை அவள்புறம் திருப்பாம்மல் வண்டி ஓட்டுவதற்கு சிரமம்மாகதான் இருந்தது, கணவனுக்கு. முயன்று தன்னிலை மாறாமல் டிரைவ் செய்தான், கபாலி.

வரவேற்பிற்கு வந்து சேர்ந்தனர். முறையாக வரிசையில் நின்று.. மணமக்களை பார்த்து.. வாழ்த்தி.. வந்து அமரவே.. ஒருமணி நேரம் எடுத்தது. ஆனால், அருகருகே இருவரும் நின்றனர்.. கபாலிக்கு தொழில்முறையில் நிறைய தெரிந்தவர்கள் இருந்தனர்..  ஆங்காங்கே பார்க்க.. பேச.. மனையாளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்ய.. என என்னமோ ஒரு மாயவலையும்.. தேவ நிமிடங்களும் அவளை  சூழ்ந்துக் கொள்ள.. அந்த ஒருமணி நேரமும் மாயநேரம்தான். முடிவில்.. மணமக்களோடு, ஆளுக்கு ஒரு பக்கமாக..  இருவரும் இன்முகமாக நின்று புகைபடம் எடுத்துக் கொண்டனர். 

கபாலி, MLAவிடம் மேடையில் விடைபெற்று.. கிளம்ப, மயூராவிற்கு, அவர்களின் குடும்பமும் இனிதாக விடைகொடுக்க..  கபாலி, இயல்பாக.. தன் வலது கையை அவள் பக்கம் நீட்டி.. ‘வா..’ என்றபடி.. அவளின் கைபிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். இருவரும் அதை உணராமல்.. உணவு உண்ணும் இடம் வரை வந்து சேர்ந்தனர்.. நல்ல கூட்டம்.. முன்னும் பின்னும் நடந்து.. தெரிந்தவர்களை பார்த்து புன்னகைத்து என பதினைந்து நிமிடங்கள்.. இருவரும் எதையும் உணராமல் கைகள் கோர்த்திருந்தனர்.

இப்போது, உண்டு முடித்து வெளியே வந்த ஆதிகேசவனும் சுமதியும்.. தம் மகள் மருமகனை பார்த்து.. “எப்போ வந்தீங்க.. MLAவை பார்த்தாச்சா” என்றனர்.

கபாலி இப்போதுதான், தன் கையை அனிச்சையாய் உருவிக் கொண்டு.. மாமனாருக்கு பதில் சொன்னான். இரண்டொரு வார்த்தை பேசிக் கொண்டிருந்து விட்டு, உண்பதற்காக சென்றனர் கபாலி தம்பதி.

அங்கும் அப்படியே பேசியபடியே அருகருகே நின்று உண்டனர்.. மயூரா, ஏதும் அவனிடம் பேசவில்லை.. அவன், ‘யார்.. என்ன..’ என அறிமுகம் செய்தவர்களை பார்த்தாள்.. புன்னகைத்தாள்.. அவ்வளவுதான். அவளின் கவனம் எல்லாம்.. தன் கணவன், எப்படி பேசுகிறான், எத்தனை முறை தன்னிடம் திரும்பி பேசினான்.. எத்தனை  முறை தலைகோதினான்.. சொல்ல போனால், எத்தனை முறை கண்சிமிட்டினான் தன் கணவன் என கேட்டால்.. அப்படியே மனபாடம் செய்தது போல.. சொல்லுவாள் பெண்.. அந்த அளவிற்கு, கணவனை தனக்குள் வாங்கிக்கொண்டாள்.. நிரம்ப.

உண்ணும் போது அவன் இனிப்பு எடுத்துக் கொள்ளவில்லை.. கவனித்தாள் அவனின் மனையாள்.. அவன் உண்ட உணவுகள் எல்லாம் மிதமாக காரத்தில் இருந்த உணவுகள்.. அதில் நிறைய சார்ட் ஐட்டம்ஸ்.. பன்னீர்.. சீஸ் சார்ட்ஸ்.. கடைசியாக.. ப்ரைட்ரைஸ் உடன் உணவை முடித்தான். அடுத்து.. கேக்.. ஐஸ்கிரீம்.. ஜூஸ்..  பாண்.. என அந்த பக்கம் வரவில்லை.. கபாலி. பேருக்கு ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு நின்றான்.. மயூரா இந்த வகைகளை உண்டாள்.. ஆக, இப்போது பார்ப்பது கணவன் முறையானது.

இருவரும் கிளம்பினர், அமைதியாகத்தான் சென்றது அவர்களின் பயணம்.. வீடு இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு நூறு மீட்டர்.. தூரத்தில் வண்டியை நிறுத்தினான் கபாலி.

மயூரா அமைதியாக அமர்ந்திருந்தாள், கணவனை திரும்பி பார்க்க கூடாது என.

கபாலி “நேற்று என்ன சொன்னேன், ஏன் போனை வைச்சிட்ட” என்றான்.

மயூராவிற்கு, ‘திரும்பவும் முதலிலிருந்தா..’ என தோன்றியது. ‘உங்க வேலை ஆகிடுச்சே.. அப்போ சண்டை போடத்தான் செய்வீங்க..’ என மனதுள் தோன்றியது. கணவன் தன்னையே பார்க்க.. கணவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண்.

கபாலி  “என்ன சொன்னேன்.. ஆமாம், நான் உன்னை கல்யாணத்திற்கு கூப்பிடத்தானே போன் செய்தேன்.. வேறு  ஒன்றுமில்லையே.. அதைதானே சொன்னேன்.. இப்போதுதான் நினைவு வருது..” என்றான் அவள்முகம் பார்த்து.

மயூராவிற்கு ‘இனிய நிகழ்வுகளை கூட விட்டு வைக்க மாட்டான் போல’ என தோன்றியது.. அதனால் அமைதியாக, மறுபக்கம் திரும்பிக்  கொண்டாள்.

கபாலி “இங்க பாரு.. நீயாகத்தானே இங்கே வந்த.. என்கிட்டே சொல்லிட்டு வந்தியா?.. நீயாக தானே, என்னை புரிஞ்சிக்கணும்’ன்னு டைம் கேட்ட.. இப்போ, நான்தான் கெட்டவன் ஆகிட்டேன். நான் அடிக்க.. நீ நைட் வெளியே போக.. ச்ச.. என்னமோ பிரச்சனையாகிடுச்சி” என்றான்  நெற்றியை தட்டிக் கொண்டு.

மயூரா, திரும்பி கணவனை பார்த்தாள், அவனின் பேச்சில். அதிசயமாக பேசுகிறானே.. அதுவும் அமைதியாக.. என எண்ணி பார்த்தாள்.

கபாலி “நான் உண்மையதான் சொன்னேன்” என்றான்.

மயூராவிற்கு அதிர்ச்சிதான், கண்வன் பேசுவது.. அதனால் இமைக்காமல் புன்னகை முகமாக பார்த்தாள் கணவனை.. என்னமோ.. தன்னுடைய பேச்சுக்கு.. விளக்கம் சொல்ல  விழைகிறான் என புரிந்தது மனையாளுக்கு, இப்படி பேசுவான் என எண்ணவேயில்லையே அவள்.. அதனால், என்னமோ தன்னை அவன் யோசிப்பதாக தானே எண்ணி.. புரிந்ததுக் கொண்டாள் காதல் கொண்ட மனையாள். வைத்த கண் எடுக்காமல்.. பார்த்தாள்.

கபாலிக்கு இதற்கு மேல்.. என்ன பேசுவது.. அவளிடம் ‘நான் தவறாக எண்ணவில்லை என எப்படி சொல்லுவது’ என தெரியவில்லை.. “நான் சொல்றது.. அஹ.. இங்கேயே இருந்தால் எப்படி என்னை புரிஞ்சிப்ப.. இல்ல, என்னை விடபோறியா..” என சட்ட திட்டமாக ஒரு பெருமூச்சு விட்டு கேட்டேவிட்டான் கணவன்.

மயூரா வாயில் கைவைத்துக் கொண்டாள்.. அவனின் கோவமான பேச்சில்.. கூடவே “எனக்கு பையித்தியம் பிடிக்குது” என்றாள் புன்னகையோடு.

கபாலி தணிந்தான் “எனக்கே நான் எப்போ எப்படி இருப்பேன்னு தெரியாது.. நானே கொஞ்சம் அப்படிதான்.. அப்படியே ப்ளோல போகிடலாம்மில்ல..” என்றான்.

மயூரா “ம்கூம்..” என ரசனையாக ம் கொட்டி.. தனது வலது கையை ஏந்தினாற்போல் கணவனிடம் நீட்டினாள் பெண்.

கபாலிக்கு என்ன செய்யணும் நான் என தெரியவில்லை.. சத்தியமாக அவனுக்கு தெரியவில்லை. முதல்முறை அவளிடம் பாடம் கற்கும் காதலன் பாவனையோடு.. மனையாளின் கண்களை பார்த்தான், கணவன். 

மயூரா கணவனின் பார்வையை உள்வாங்கி “லவ் பண்ணலாமா” என்றாள் திணறல் மொழியில்..

கபாலி இதுவரை கவிதை காதல்காவியம் ஏதும் படித்ததில்லை.. ஏன், கண்ணெதிரே நடந்தால் கூட.. எழுந்து சென்றிடுவான். ஆனால், அதெல்லாம் இருப்பதாக உணர்ந்தான்.. இந்த நொடியில். வெய்யில் இருக்கும் போதே.. மழை தூறும் என உணர்ந்தான்.. சிலநேரம் நட்சத்திரமும் ஒளி கொடுக்கும் என உணர்ந்தான். வெட்கம் பாதி.. காதல் பாதியாக.. கம்பீரமாக உரிமையாக தன்னவளின் கைகளை பற்றிக் கொண்டான். பற்றியவன் விரலோடு சேர்த்து அழுத்த.. முதல் அழுத்தம் முதல் தொடுதல்.. முதல் வலி.. வலித்தது பெண்ணுக்கு.

மயூரா “ஐயோ” என்றாள் துள்ளலாக.

கணவன் “பார்த்துக்கோ.. கஷ்ட்டப்படுத்திட போறேன்..” என்றான், அழுத்தமான குரலில்.

மயூராவிற்கு ஏன் இந்த பேச்சு எனத் தோன்றியது.

கபாலி அமைதியானான்.

மயூரா “ட்ரிங்க்ஸ் கூடவே கூடாது” என்றாள், இறைஞ்சுதலான குரலில்..

மயூராவின் கைகள் நடுங்கியது.. இந்த வார்த்தைகளை சொல்லிய பிறகு.. அனிச்சையாய் பயம் வந்துவிட்டது. 

கணவன் சில்லிட்டிருந்த அவளின் கையை தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான், நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் “தெரியாது.. நடக்குமான்னு.. என் வேலை டென்ஷனானது. பார்க்கலாம்” என்றான்.

இப்போது மயூராவின் போன் அழைத்தது அவளை. இருவரும் தங்களின் உலகிலிருந்து வெளியே வந்தனர். சுமதி  அழைத்திருந்தார்.. இன்னும் காணோமே என. அன்னைக்கு பதில் சொன்னாள் பெண்.

இப்போது கபாலி காரெடுத்தான்.. அவளின் வீட்டை அடைந்தனர் இருவரும்.. மயூரா  மனதேயில்லாமல் இறங்கினாள்.

கபாலி “நாளைக்கு நான் வரவா..” என்றான்.

மயூரா “ம்..” என்றாள். இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர். கபாலிக்கு ‘அப்பாடா..’ என்றானது.

 

Advertisement