Advertisement

நான் உன் நிறையன்றோ!

22

ஜெயந்தினிக்கு, தாலி பெருக்குவிழா நடத்த முடிவெடுத்திருந்தனர். நேற்றே பெரியவர்கள் வசீகரனின் வீட்டில் தங்களுக்குள் பேசி.. ஜோதிடரை பார்த்திருந்தனர்.

அதனால், காலையில் ஆதிகேசவன், கபாலிக்கு அழைத்தார்.

கபாலி,  தன் மாமனார் காலையில்.. ஏழுமணிக்கே அழைக்கவும், நேற்றுதான் மயூராவிடம் பேசியிருந்தானே, அதனால்.. ‘அன்னிக்கு மாதிரி எழறைய கூட்டிட்டாளா?’ என மனையாளை சபித்தபடியே அந்த திரையை பார்த்திருந்தான், கபாலி.

அதே யோசனையோடு அழைப்பை ஏற்றான் கபாலி “ஹலோ மாமா” என்றான் சாதாரணமான குரலில்.

ஆதிகேசவன் “உங்க வீட்டுக்கு வரோம் மாப்பிள்ளை. நீங்க வந்திடுவீங்களா.. இன்னிக்கு” என்றார்.

கபாலிக்கு கொஞ்சம் தடுமாற்றம் வந்தது இப்போதுதான்.. ‘அன்னிக்கே ஏதும் கேட்டாதவர்.. இப்போது எதுக்கு வரார்.. என்ன செய்தாளோ.. சொன்னாளோ..’ என நிமிடங்கள் தயங்கினான். ஆனாலும் ”ம்.. சரி மாமா.. சரி, ஒருமணி நேரத்தில் வந்திடுறேன்.. எனிதிங் வ்ராங்..” என கேட்டேவிட்டான்.

ஆதிகேசவன், மாப்பிள்ளையின் தடுமாற்றத்தை க்ரகித்துக் கொண்டார்.. கொஞ்சம் கபாலியை அதே மனநிலையில் வைக்கவே நினைத்தார் மாமானார். அதனால் “வாங்களேன் மாப்பிள்ளை பேசிக்கலாம்” என்றார். தொடர்ந்து “நாங்களும் ஒருமணி நேரத்தில் வந்திடுவோம்.. சரி வைக்கட்டுங்களா” என்றார்.

கபாலி “சரிங்க” என்றான். மாமனார் வைத்துவிட்டார்.

கபாலி, போனை வைத்த.. அடுத்த இரண்டு  நிமிடம் முழுதாக.. ‘நேற்று தான் என்ன பேசினேன்.. ட்ரிங்க்ஸ் எடுக்காமல்தானே பேசினேன்.. அவளிடம் இயல்பாகதானே பேசினேன்..’ என யோசித்தான். ம்கூம்.. அவனுக்கு ஏதும் சரியாக நினைவில்லை. முயன்றான், ‘ம்.. என்கூட கல்யாணத்துக்கு வான்னு சொன்னேன்’ என தோன்றியது அவ்வளவுதான். அதற்குமேல் ஏதும் தோன்றவில்லை. அதனால், தனக்காக இருந்த சின்ன அறையில் குளிப்பதற்கு சென்றான்.

கபாலி, ஆனந்துக்கு அழைத்தான்.. அலுவலகம் வந்துவிட்டாரா என கேட்க்க.. அவர் வந்து  கொண்டிருப்பதாக சொல்ல.. நேரே பாலீஷ் செய்யும் வேலையை முதலில் பார்க்க பணித்தான்.. அதை தொடர்ந்து சில வேலைகளை சொன்னவன். கிளம்பினான் தன் வீடு நோக்கி.

கபாலி வீடு வந்து சேர்ந்தான். 

மகேஸ்வரி “சாப்பிடு டா.. “ என்றார்.

கபாலி வந்து அமர்ந்தான். அன்னையிடம் கேட்க்க தயக்கம்.. அன்னையின் முகமே சரியில்லை.. மேலும், ‘அம்மா மயூரா பற்றி சொல்லிய எதையும் தான் கேட்கவில்லை.. அதனால், இப்போது எது கேட்டாலும் பதில் வராது.. இன்னும் அவர் வருந்துவார்’ என எண்ணி கபாலி அமைதியாக உண்டான்.

மகேஸ்வரி, மகனுக்கு பரிமாறிவிட்டு, கிட்சென் சென்றுவிட்டார்.. சம்பந்தி வீடு வருவதால்.. மதிய உணவு இங்கேதான் அவர்களுக்கு. அதனால், அதற்கான சமையலை வேலையாளோடு சேர்ந்து கவனிக்க தொடங்கினார்.

கபாலி ஹாலில் வந்து அமர்ந்துக் கொண்டான்.. இப்போது முழு சிந்தனையும் தன் மனையாளிடம் அப்படி என்ன பேசிவிட்டேன் என்றே இருந்தது கபாலிக்கு.

கபாலியை அதிகம் யோசிக்க வைக்காமல் வந்தனர்.. ஆதிகேசவனும் சுமதியும், வந்து சேர்ந்தனர்.

கபாலி, இன்முகமாக வரவேற்றான். முறையான உபசரிப்புகள் முடிந்து.. ஆதிகேசவன் பேச தொடங்கினார் “ஜெயந்தினிக்கு தாலி பெருக்குவிழா  நடத்த முடிவு செய்திருந்தோம்.. நாள் பார்க்க, கிளம்பும் போதுதான்.. மயூரா வீடு வந்தாள். அதான், நேற்று நாள் பார்த்துட்டு வந்தோம்.. வர புதன் கிழமை நாள் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க.. வந்திடுங்க.. யாரையும் பெருசா கூப்பிடலை.. உங்க பெரியப்பா.. என் அண்ணன் தம்பி அவ்வளவுதான். பெருசா செய்யனும்ன்னுதான் ஆசை..” என சொல்லி நிறுத்திக் கொண்டார் ஆதிகேசவன்.

சுமதி “அண்ணி, முதல்நாளே வந்திடுங்க.. மயூரா என் சார்பாக அத்தையை கூப்பிடுடும்மா’ன்னு சொன்னாள். மாப்பிள்ளை.. உங்க அக்காவின் தாலிபெருக்கு விழா, கண்டிப்பா வந்திடனும்” என்றார்.

கபாலிக்கு.. ஆதிகேசவன் சொல்ல சொல்ல.. நிம்மதி பரவியது.. அவன் மூளை தொடங்கி பாதம் வரை. ‘அன்று.. நேற்று நடந்ததை பேசிடுவாரோ.. எங்கள் திருமண உறவு பிரிந்திடுமோ.. என எண்ணி இருந்தவனுக்கு..’ தன் மாமனாரின் பேச்சு, காதில் தேன் வந்து பாய்ந்தது.

கபாலிக்கு முகம் தெளிய “ம்மா.. என்ன முறை செய்யனும்மா” என உடனே வினவினான்.

இயல்பாக சுமதி பேசினார்.. மகேஸ்வரியும் சொன்னார்.. ஆண்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களின் பேச்சு கவனமாக மயூரா, கபாலியை தவிர்த்து.

நேரம் சென்றது.. சுமதியும் மகேஸ்வரியும்.. தனியாக டைனிங் டேபிளில் அமர்ந்து பேசத் தொடங்கினர்.

ஆதிகேசவன் கபாலியிடம் பேசத் தொடங்கினார் “என்ன மாப்பிள்ளை.. எப்படி போகுது தொழில்” என தொடங்கினார்.

கபாலி “ம்.. அப்படியே போகுது மாமா” என்றான்.

ஆதிகேசவன் “ஏன், மாப்பிள்ளை.. ஒரே ஆளாக எல்லாத்தையும் மேனேஜ் செய்றது கஷ்ட்டம்தான். அதுக்காக, யாரையும் நம்பாமல் இருக்க முடியாதே.. ஒருவர் தவறு செய்தால்.. எல்லோரும் அப்படி இருப்பாங்கன்னு இல்லையே.. நம்பிக்கையான ஆட்க்களை  பக்கத்தில் வைச்சிக்கோங்க மாப்பிள்ளை. அவசரம் என்றால், வசியை கூப்பிடுங்க.. தப்பில்லை. மாமா மச்சானால்.. அப்படிதானே இருக்கணும். கொஞ்சம் குடும்பத்தையும் கவனிங்க கபில். இது சுயநலத்திற்காக.. என் பெண்ணு வாழ்க்கைகாக சொல்றேன்னு நினைத்தாலும்.. தப்பில்லைதானே. ஆனாலும், நான் உங்களுக்காகவும் சொல்றேன்.. உங்களை பார்க்கவே நல்லா இல்ல.. தாடியும்.. வளர்ந்த சிகையும்.. நீங்க உங்களை கூட கவனிச்சிக்கறது இல்லைன்னு சொல்லுது. நீங்க ஒரு சாம்ராஜ்யத்தையே காப்பாற்றுறீங்க தெரியும் புரியும் எனக்கு. அதுக்காக.. எல்லா இடத்திலும் நாம் நின்றால்தான் வேலை ஆகுமென்றால்.. என்ன மாதிரியான அமைப்பை கொண்ட நிறுவனம் அது. ம்.. கபில் யாங் அண்ட் ஸ்மார்ட்.. எங்கும் அவனின் ஆளுமை இருக்கணும். என் மருமகன் அப்படி இருக்கனும்ன்னு ஆசை எனக்கு.. என்ன ப்பா நடக்குமா” என்றார் தேர்ந்த தொழிலதிபர்.

கபாலி, எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்துக் கொண்டிருந்தான். அப்பட்டமாக யாரும் அவனின் குறைகளை.. சொன்னதில்லை. நான் சரியாகத்தானே இருக்கிறேன் என எண்ணியிருந்தவனுக்கு.. மாமானார் பொட்டி அடித்தது போல சொல்லவும், அவரை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவனால். அமைதியாக அமர்ந்துக் கொண்டான்.

அடுத்து ஆதிகேசவன், மாப்பிள்ளையிடம் ஏதும் பேசி சங்கடப்படுத்தாமல், போன்பேச தொடங்கி விட்டார்.

கபாலி, எங்கும் எழுந்து செல்லவில்லை.. அவனின் மூளை வேலை செய்யவில்லை.. மாமனார் கேட்ட கேள்வி அவனை கூண்டில் நிறுத்தியது ‘நாம் இருந்தால்தான் வேலை நடக்கும் என்றால்.. அது என்ன மாதிரியான நிறுவன அமைப்பு’ என கேட்டது அவனை வருத்தியது. அமைதியாக அமர்ந்திருந்தான். 

அதன்பின் நல்ல நேரம் எப்போது.. என்ன புடவை.. என்ன விருந்து.. என பேச்சு பெரியவர்களிடம் செல்ல.. இவன் எதோ யோசனையோடு அமைதியாக அமர்ந்திருந்தான். அவ்வபோது, தன் அன்னை கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி, அமர்ந்துக் கொண்டான், கபாலி.

நேரம் சென்றது. எனவே, மதிய உணவு முடித்து அவர்கள் கிளம்பியதும்.. தானும் வெளியே கிளம்பினான். நேற்று, தான் முடிவெட்ட வேண்டும்.. உறங்க வேண்டும்.. வீடு செல்ல வேண்டும்.. எனத்தான் நினைத்தது.. நினைவு வந்தது.. அதனால், பார்லர் சென்றான், கபாலி.

மயூராவிற்கு, காலையிலிருந்து தலைவலி.. உறக்கமில்லை.. அப்படியும் கீழே இறங்கி வந்தாள். சுமதி, தாங்கள் ஜெயந்தினியின் தாலி பெருக்குவிழாவிற்கு அழைக்க செல்லுகிறோம் என மகளிடம் சொன்னார். மயூரா சட்டென கேள்வியாக தன் அன்னையை நோக்கினாள்.. ‘முன்னாலேயே என்கிட்டே சொல்லலை..’ எனத்தான் கேட்டாள்.

சுமதி மகளின் நிலை புரிந்து.. “இல்ல டா.. உங்களுக்குள் சரியானதும் செய்துக்க்லாம்ன்னு இருந்தோம்.. ஆனால், ஜோசியர் சீக்கிரம் செய்திட சொல்லிட்டார்.. அதான். உடனே முடிவானதால் சொல்ல முடியலை. ஏன்  உன்முகம் வாடி இருக்கு..” என்றார்.

மகள், அன்னை சொன்னதை கேட்டுக் கொண்டாள்.. பதில் பேசவில்லை.

சுமதி, மீண்டும் மகளிடம் என்னாச்சு என வினவினார். பின் அவளுக்கு உணவு கொடுத்து.. மாத்திரை கொடுத்து.. உறங்க சொன்னார்.. “போ, ரெஸ்ட் எடு… மதியம் போ..” என்றார்.

மயூராவிற்கு, என்னமோ மனது சோர்ந்து இருந்ததால்.. அவரின் அதட்டல் சுகமாக இருந்தது.. இதுதான் சாக்கென மேலே சென்று படுத்துக் கொண்டாள்.. கணவன் மாலையில் கூப்பிட்டானே போவதா வேண்டாமா என யோசித்தாள். இரவும்  யோசனை.. வருத்தம்.. அதிகாலையில் வரை உறங்கவில்லை, அதனால்  கண்கள் தாமாக மூடிக் கொண்டது மாத்திரையின் உதவியால்.

மதியம் இரண்டு  மணிக்குதான் எழுந்தாள்.. வீட்டில் யாரும் இல்லை.. தானே உணவு எடுத்து வைத்து உண்டாள்.. மீண்டும் தனதறைக்கு சென்றுவிட்டாள்.

மயூராவிற்கு மாலை ஐந்து மணி ஆனதும்.. இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. ஆனால், கிளம்பவில்லை பெண்.

சுமதியும் ஆதிகேசவனும்.. இப்போது MLA மகன் திருமண வரவேற்பிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தெரியாது..மாப்பிள்ளை.. தன் மகளை அழைத்திருப்பது. எனவே, இவர்கள் கிளம்பினர்.

கபாலி, சரியாக ஆறுமணிக்கு வந்துவிட்டான், மயூராவை அழைத்து செல்ல. ஆதிகேசவன் தயாராகி அமர்ந்திருந்தவர்.. மருமகனை பார்த்து, இன்பமாக அதிர்ந்து, வரவேற்றார். காலையில் தான் பேசியதை கேட்டு.. அதற்குள் மனம் மாறிவிட்டாரா என அதிர்ந்தார், ஆதிகேசவன்.

சுமதியும் வரவேற்று நிற்க.

கபாலி “எங்க மாமா MLA வீட்டு கல்யாணத்திற்கு தானே.. மயூரா ரெடியா கேளுங்க.. போகலாம்” என்றான், உரிமையாக.

ஆதிகேசவன் முகம் ஒருநொடி வாடினாலும்.. உரிமையாக, மாப்பிள்ளை பெண்ணை அழைத்து செல்ல கேட்கவும்.. அதுவும் சந்தோஷத்தை தர “நீங்க பேசிட்டீங்களா மாப்பிள்ளை.. அவளுக்கு தெரியுமா” என்றார்.

கபாலி “நேற்று நைட் பேசிட்டேன் மாமா..” என சொல்லி.. எப்படி செல்லுவது என இருவரும் பொதுவாக பேசத் தொடங்கினர்.

சுமதி பெண்ணை அழைக்க மேலே சென்றார். மயூரா ஜூலோவில் அமர்ந்துக் கொண்டிருந்தாள் எதோ யோசனையில். அவள் கிளம்பி இருக்கவில்லை. அன்னை “என்ன மயூ.. மாப்பிள்ளை கீழே வந்திருக்கார்.. நீ இன்னும் கிளம்பலை” என்றார்.

மயூரா, கோவமாக அன்னையை பார்த்தாள்.. சுமதிக்கு ஏதும் புரியவில்லை என்றாலும் “நைட் பேசினாராம்” என்றார்.

மயூரா “நீ போம்மா.. நான் வரலை சொல்லிடு” என்றாள்.

Advertisement