Advertisement

ம்.. அப்படிதான் நடந்தது.. மயூரா ஒருநாள், நடனவகுப்பு செல்லவில்லை.. முகம் வீங்கி இருந்ததால்.. அடுத்தநாள் கிளம்பிவிட்டாள். ஆக, மகேஸ்வரியும்.. மதிய உணவோடு.. மருமகளை வந்து பார்த்தார்.  மயூராவிற்கு, அவர் மீது எந்த வருத்தமும் இல்லை.. அதனால், நன்றாக பேசினாள்.

அப்போதெல்லாம் மகேஸ்வரி மகன் குறித்து வருத்தம் கொண்டார்.. ‘அவன் ஒருவாரம் ஆச்சு வீடு வந்தது. கல்யாணத்துக்கு முன் இப்படிதான்.. கண்மண் தெரியாமல் வேலை வேலை என ஓடுவான்.. திரும்பவும் அப்படி ஆகிட்டான்.. சாப்பிட்டானோ என்னமோ, போன் செய்தேன்.. நேற்று எடுத்தான்.. இன்னிக்கு எடுக்கலை.. என்னமோ போ..’ என புலம்பத் தொடங்கினார்.

மயூராவிற்கு இது சங்கடமாக இருந்தாலும்.. அவரை ஒன்னும் சொல்லமாட்டாள்.. ‘சாப்பிடலாம் அத்தை.. நானே இன்னிக்கு பன்னீர் பிரியாணி செய்தேன்..’ என ஏதேனும் பேசி, கொஞ்சம் அவரை.. தன்பக்கம் இழுத்திடுவாள்.

வீட்டில், ஜெயந்தினிக்கும் சங்கடமாகதான் இருந்தது.. மயூரா இங்கு இருப்பதால்.. என்னமோ சொல்ல முடியாத சங்கடம் அவளுக்கு. யாரும் அவளை ஏதும் சொல்லவில்லை.. வசி கூட.. கபாலி பற்றி பேசுவான்.. அதுவும் அடுத்தடுத்த நாட்களில் குறைந்து போகிற்று. ஆக, யாரும் அவளை ஏதும் சொல்லவில்லை.. ஒருபார்வை கூட பார்க்கவில்லை. ஆனால், ஜெயந்தினிக்கு, தன் தம்பியின் செயல்.. வருத்தத்தை தந்தது. ஒரு பெண்ணை அடிப்பது.. அப்படி அடித்து அனுப்பிவிட்டு, வீடு வராமல் இருப்பது. என்னிடம் கூட, ஒருவார்த்தை பேசி, வருத்தம் கொள்ளாமல் இருப்பது.. என எல்லாம் சங்கடத்தையே தந்தது. யாரிடமும் அந்த வருத்தத்தை பகிர முடியவில்லை அவளால்.

அதனால், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனவே, அலுவலகம் சென்றால், இரவு ஏழு மணிக்குதான் வீடு வருகிறாள். சுமதி கூட “ஏன் இவ்வளவு லேட்” என கேட்டால் கூட.. ‘இப்போதானே அத்தை கத்துக்கிறேன்.. அதான்.’ என்பாள்.

மயூராவை, உண்ணும் போது மட்டுமே பார்ப்பாள்.. ஜெயந்தினி. மற்ற நேரம் இவள் கண்ணாமூச்சு ஆடுவாள். காலையில் சீக்கிரமே, தன் கணவனோடு கிளம்பிடுவாள். மதியம் இருவரும் வீடு வருவதில்லை. இரவு உண்ணும் வேளையில் இப்படி பார்த்துக் கொள்வர்.

மயூரா இயல்பாக பேசினாலும், ஜெயந்தினி பதில் மட்டுமே சொல்லி.. வேலையை பார்க்க கிட்சென் சென்றிடுவாள். இப்படி இவளின் ஒதுக்கம் சுமதி கண்ணில் பட.. அவர் அதட்டியே விட்டார்.. “ஜெயந்தி, இதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை. நீ சிலுவை சுமக்காதே.. உன் முகமே சரியில்லை. நீ எப்போதும் போல.. மயூ கிட்ட பேசு.. நேரமாக வீடு வா. மாமாக்கு தெரிந்தால் அவ்வளவுதான்” என அதட்டி, அவளை இயல்பாக்கினார்.

ஜெயந்தினியும் இயல்பாக பேசினாள்.

பாவம் மயூரா குழம்பினாள் ‘தன்னை ஏன் யாரும்.. அங்கு போக சொல்லவில்லை.. அவரும் வந்து கேட்கவில்லை.. அத்தை கூட என்னை வாவென அழைக்கவில்லை என ஆயிரம் கேள்வி.. மயூராவிற்கு இருந்தாலும்.. விடை தராத வானமாய்.. கணவன் நிலையான அமைதியில் இருந்தான்..’ அடுத்த பத்து நாளும் சென்றது.

அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் இருக்கும்.. மயூரா தன் அண்ணிக்கு பூரி போட்டுக் கொண்டிருந்தாள். ஜெயந்தினி, மயூராவிற்கு செய்தாள்.. மயூரா உண்டு முடித்துவிட்டாள். அதனால், இப்போது தன் அண்ணிக்கு, தானே செய்வதாக சொல்லி.. வட்டம் சதுரம் ஸ்டார் என பல வடிவில்.. பூரி செய்துக் கொண்டிருந்தாள்.

ஜெயந்தினியும் அந்த வடிவங்களை பற்றி கிண்டல் செய்துக் கொண்டே உண்டுக் கொண்டிருந்தாள். அப்போதுதான் வசீகரன் உண்டு முடித்து எழுந்தான்.

இப்போது உணவு மேசையில் இருந்த மயூராவின் போன்.. ஒலித்தது. எப்போதும் அவளின் நடன பள்ளியிலிருந்து ஏதேனும் அழைப்பு வரும்..  எனவே, மயூரா “யாருன்னு பாருங்க.. அண்ணி, நான் அப்புறம் பேசிக்கிறேன்” என சொல்லி தன் வேலையில் கவனமானாள்.

ஜெயந்தினி அதிர்ச்சியில் நொடி நேரம் அமைதியானாள்.. பின் “கபாலி..”  என்றாள்.. அந்த போன் திரையையே பார்த்துக் கொண்டு. அவர்களின், நிச்சய புகைப்படம்.. மோதிரம் போட்டு.. கைகோர்த்துக் கொண்டிருந்த.. இருவரின் கைகளும், அதில்.. அழகாக அந்த திரையில் மின்னியது. அதை பார்த்த அக்காவிற்கு தொண்டையை அடைத்தது.

ஜெயந்தினியின் பேச்சில்.. வசீகரன் அந்த போனின் அருகில் வந்தான்.. மயூரா கிட்செனிலேயே நின்றாள். போன் அழைத்து ஓய்ந்தது.

சுமதி ஹாலில் அமர்ந்திருந்தார்.. எனவே, இங்கு நடப்பது தெரியாது.

இப்போது மீண்டும் அழைக்க தொடங்கினான் கபாலி. ஜெயந்தினி நிமிர்ந்து பார்த்தாள் மயூராவை. வசீகரன்னும் அப்படியே, இந்த இருவருக்கும் என்ன சொல்லுவது என தெரியவில்லை. ஜெயந்தினிக்கு, கண்ணில் நீர் வந்தது.. எழுந்து சென்றாள்.. தட்டோடு. தட்டம் கழுவி.. கைகழுவிக் கொண்டு.. சென்றுவிட்டாள் அந்தபக்கம். வசீகரனுக்கும் என்ன சொல்லுவது என தெரியாமல்.. அவனும் ஹாலுக்கு சென்றுவிட்டான்.

மயூராவிற்கு, மனது தடதடத்தது.. அடுப்பை ஆஃப் செய்துவிட்டு வந்தாள். போனை பார்த்தாள்.. இப்போது அழைப்பு ஓய்ந்து போனது. மீண்டும் அழைப்பு வரவில்லை. நொடிகள் கடந்தது..  அழைப்பு வரவில்லை. சட்டென.. தொண்டை அடைத்துக் கொண்டது.. காற்றும் செல்ல இடமில்லாமல் போனது. இருமல் வந்தது.. தொண்டையை சரி செய்துக் கொண்டாள்.. போனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் அழைப்பு வரவில்லை.

இப்போது மயூரா, போனோடு மேலே சென்றுவிட்டாள். இவளின் இந்த செய்கையை எல்லாம்.. ஹாலில் அமைதியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டே.. கவனித்துக் கொண்டிருந்தனர். மயூ மேலே செல்லவும். வசீகரனும், ஜெயந்தியும்.. தோட்டத்தில் நடக்க சென்றனர்.

அரைமணி நேரம் சென்று, மீண்டும் அவளை அழைத்தான்.. கபாலி. இந்தமுறையும் எடுக்க்வில்லை பெண். என்னமோ தயக்கம்.. வந்து சேர்ந்தது. விடாமல் அழைத்தான் கபாலி.. இந்தமுறை கணவனின் அழைப்பை ஏற்றாள் பெண்.

கணவன் கபாலி பதட்டமே இல்லாமல்.. கொஞ்சம் தழைந்த குரலில் “ஹலோ.. மயூரா” என்றான்.

மயூராவிற்கு, அவனின் போன் வழி குரல் பிடிக்கும், அத்தோடு.. இப்போது நீண்டநாள் சென்று கேட்க்கும் கணவனின் குரலில் அவளுக்கு கேவள் எழுந்தது.. முயன்று, தன்னை நிதானித்துக் கொண்டு.. “ம்..” என்றாள்.

கபாலி “என்ன இருக்கியா” என்றான் அதட்டலாக.

மயூரா தொண்டையை சரி செய்துக் கொண்டு “சொல்லுங்க” என்றாள்.

கபாலி “MLA பையன் கல்யாணம் ஞாபகம் இருக்கா.. பத்திரிக்கை கொண்டு வந்து கொடுத்தாங்களே..” என்றான்.

மயூரா “அஹ..ன்.. ம்..” என்றாள்.

கபாலி “நாளை மாலையில் வரவேற்பு.. போகணும். ஆறு மணிக்கு, உங்க வீட்டுக்கு வரேன்.. கிளம்பி தயாராக இரு. போயிட்டு வந்திடலாம்.” என்றான்.

மயூராவிற்கு அவனின் அதிகாரத்தில் சட்டென சிரிப்பு வந்தது.. உதடுகள் புன்னகையில் வளைய.. கண்கள் கண்ணீரில் மிதந்தது “ம்கூம்.. நான் எதுக்கு.. நீங்க மட்டும் போயிட்டு வாங்க..” என்றாள், திமிராக.

கபாலி “என்ன நக்கலா.. இவ்வளவு தூரம் சொல்றேன்.. கிண்டலா உனக்கு.” என்றான் குரல் மீண்டிருந்தது, அவனுக்கு.

மயூராவிற்கு சட்டென வார்த்தைகள் கோர்க்க வரவில்லை.. “இ..ல்..” என தொடங்கினாள்.

கபாலி “என்ன இல்ல.. “ என்றான் குரலில் இப்போது வேகம் வந்திருந்தது.

மயூரா ஏதும் பேசவில்லை.

கபாலி அங்கே தலையை பிடித்துக் கொண்டு.. அமர்ந்தான். இப்போது   கம்பெனியில்தான் இருந்தான்.. ‘வீடு செல்ல வேண்டும் இன்று.. நன்றாக உறங்கி.. எழ வேண்டும். நாளை காலையில், ஹேர் கட் செய்ய வேண்டும்.. இவளோடு செல்ல வேண்டும்.. திருமணம் ஆனதால்தான் வீட்டில் பத்திரிக்கை கொண்டு வந்து கொடுத்தனர்.. இவளிடம் பேசி, வர வைக்க வேண்டும்..’ என இந்த பத்துநாள் சன்யாசி வாழ்க்கையில்.. முகமெல்லாம் கவலையும் தாடியும்தான் சேர்ந்திருந்தது. எனவே, அந்த தாடியை நீவியபடியே.. பொறுமையாக பேசினான் மனையாளோடு.

மனையாளின் அமைதியில்.. மீண்டும் கபாலியே “எத்தனை மணிக்கு வர” என்றான்.. ஒன்றுமே நடவாத குரலில்.

மயூராவிற்கு இப்போது வார்த்தைகள் சேர்ந்திருந்தது  “அதெப்படி, ஒண்ணுமே நடக்காத மாதிரி கூப்பிடுறீங்க” என்றாள்.

கபாலி “என்ன நடந்தது.. என்ன“ என்றான் கால்களை எதிர் சேரில் போட்டுக் கொண்டு, கதை கேட்டான் கணவன்.

மயூரா அமைதியானாள். கணவனும் அமைதியானான் போனை இருவரும் வைக்கவில்லை. மௌனம் களைக்கும் வார்த்திகளை தேடினாள் பெண்.

கபாலி “பசிக்குது.. இரு, இட்லி வாங்கி வர சொல்லுறேன்” என்றவன் போனை வைக்காமல்.. வேலை செய்பவரிடம்.. காசு கொடுத்து, தன் தேவையை சொல்லி அனுப்பினான்.

மயூராவிற்கு, அதுவே இதமாக இருந்தது.. “சரி, சாப்பிடுங்க.. நான் வரலை நீங்க போயிட்டு வாங்க.. நான் எப்படி வரது” என்றாள், சின்ன குரலில்.

கபாலி பேசும் எண்ணத்தில் இருந்தான் போல.. “உன்னை வர சொன்னேன். எப்படி வரதுன்னா.. புரியலை.” என்றான்.

மயூரா “எ..ன்ன புரியலை.. என்னை அடித்தது புரியலையா.. இப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி வான்னு கூப்பிடுறது புரியலையா எது புரியலை” என்றாள் மெல்லிய குரலில் அழுத்தமாக.

கபாலி “நான் என்ன சும்மா அடிச்சனா.. பொழுது போகாமல்.. நீ என்ன பேசினேன்னு சொல்லு” என்றான்.

மயூரா அமைதியாகினாள் பின் “நான் கேட்டது தப்பில்ல..” என்றாள்.

கபாலி “தப்புதான். வேலை வேலை.. வேலை தவிர எனக்கு ஒண்ணுமே தெரியாது.. லேசா ட்ரிங்க்ஸ் அவ்வளோதான். அதான் படிப்பில்ல சொல்லிட்டேன். எப்படி என்னை நீ அப்படி எல்லாம் பேசலாம்.. என்ன சொன்ன.. அஹ.. நைட் வீட்டுக்கு வரதில்ல.. அதெல்லாம் பிடிபட்டிருந்தா.. நான்   ஏன், இன்னும் அப்படியே இருக்கேன்.. என்கிட்டே என்ன எதிர்பார்க்கிற தெரியலை..” என, அப்பட்டமாக குற்றம் சொன்னது கணவனின் குரல்.அடுக்கினான் கேள்வியை.

மயூராவிற்கு, அவனின் கேள்விகள் எதுவும் கசக்கவில்லை.. இனிதாக ஒருவலி உடல்முழுதும் பரவியது. என்னவென தெரியவில்லை.. கணவன் என்னிடம் பேசுகிறான்.. அதுவும்.. என்னமோ ரகசியம் பேசுகிறான்.. எனக்கு மட்டுமான ரகசியம் என ஒரு அதிர்வு அவளுள் ஓட. 

“என்னோடு நீ உன்னோடு நான்..

ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்..

என்னோடு நீ.. உன்னோடு  நான் 

ஒன்றாகும் நாள்..”

பெண்ணுக்கு சட்டென ஒரு தாக்கம் “நீங்க.. என்னை கல்யாணத்துக்கு கூட்டிட்டு போகத்தானே இவ்வளோ நேரம் பேசறீங்க” என வினவினாள் பெண்.

கபாலி இங்கே கண்ணை விரித்தான்.. அவனுக்கு இதுவரை என்ன பேசிவிட்டேன் என புரியவில்லை.. “ஆமாம்.. அதுக்குதானே உன்னை கூப்பிடுறேன்” என்றான் தயங்காமல்.

மயூரா இந்த பத்து நிமிடத்தில் எழுப்பி இருந்த கோட்டைகள்.. இந்த வார்த்தையில்.. தகர்ந்து தவிடு பொடியானது.

போனை வைத்துவிட்டாள்.

கபாலி, மீண்டும் அவளை அழைத்தான். எடுக்கவில்லை பெண். மெசேஜ் செய்தான்.

Advertisement