Advertisement

நான் உன் நிறையன்றோ!

21

கபாலி, இரவு முழுவதும் அந்த ஒட்காவோடுதான் இருந்தான்.. அதையும் முழுதாக குடிக்கவில்லை.. மொட்டை மாடியில்தான் இருந்தான். ஏனோ, முதல்முறை.. கொஞ்சம் வலித்தது, அது வலி என அவன் உணரவில்லை.. ‘என் கௌரவம் போகிற்று.. நான் தோற்றேன்’ எனதான் சிந்தனை அவனுக்கு.

இவன் கீழே வரவில்லை.. அதனால், அன்னை அந்த அர்த்த ராத்திரியில் அவனின் அறைக்கு வந்தது தெரியாது. இவனை தேடினார்.. கடிந்துக் கொள்வதற்கு. ஆனால், இவன் அங்கே இல்லை.. மருமகள் வேறு கீழே அண்ணனோடு செல்வதற்கு நிற்கிறாள்.. எங்கே செல்லுவது  யாரை சமாதானப்படுத்துவது என தெரியாமல் கீழே ஓடினார்.

மயூரா, அழுதுக் கொண்டே அப்போதே கீழே வந்துவிட்டாள் “அத்த அத்த” என அழைத்து கொண்டு. “அவர் என்னை அடிக்கிறார்.. நான் ஏன் நைட் வீட்டுக்கு வரதில்லைன்னு கேட்டேன், அதற்கு அடிச்சிட்டார்.. வீட்டுக்குள்ளயே.. பாட்டில்” என அழுத்துக் கொண்டே மென் குரலில் மருமகள் தன் அண்ணனின் எதிரில் எல்லாம் சொல்லவும், சுமதி மருமகளை அணைத்துக் கொண்டார்.

சுமதி “சரிம்மா.. காலையில் நான் கேட்க்கிறேன்.. நீ இந்த ராத்தரியில் எங்கும் போகாதடா.. அது சரியாக இருக்காது. மாப்பிள்ளையும் இங்கேயே இருக்கட்டும்.. காலையில் பேசிக்கலாம். அவனின் பெரியப்பா கிட்ட சொல்றேன்.. வேண்டாம் மயூரா, இப்போது கிளம்பாத. அவன் இப்படி இருக்கமாட்டான். மாறிடுவான் டா..” என பேசிக் கொண்டே இருந்தார்.

வசீகரன் கோவமாக “அத்தை.. “ என அதட்டினான். அவனே தொடர்ந்து “காலையில் பேசலாம் அத்தை..” என்றவன் தங்கையின் கையை பிடித்துக் கூட்டிக் கொண்டு சென்றான். மயூராவிற்கு என்னமோ பிடிக்கவில்லை, இந்த இடம் இந்த ஷனத்தில் பிடிக்காமல் போனது.. எங்காவது.. தொலைந்து போக வேண்டும் எனதான் தோன்றியது பெண்ணுக்கு. அதனால்தான் அண்ணனுக்கு அழைத்துவிட்டாள்.

அப்படியே வரவேற்பறையில் அமர்ந்துக் கொண்டார் சுமதி. இப்போது ஜெயந்தினி அழைத்து பேசினாள் தன் அன்னையிடம். “ஒண்ணுமில்ல ம்மா.. சும்மா இரண்டு நாள்.. இங்க இருந்துட்டு வருவா.. அவ குழந்தைம்மா.. நான் பேசிக்கிறேன்.. நீ கவலைபடாத.. உன் பையனை வழிக்கு கொண்டு வரணும்ன்னா.. இப்படி ஏதாவது நடந்தால்தான் உண்டு. நீ தூங்கு.. எல்லாம் அவர் பார்த்துப்பார்.. அழாதம்மா” என சமாதனாம் செய்தாள்.

சுமதிக்கு இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியானது. தன் கணவரின் படத்தை பார்த்துக் கொண்டே, அந்த சோபாவில் படுத்துக்கொண்டார். மகள் தெளிவாக பேசுகிறாள்.. மருமகள் அழுதுக் கொண்டே வெளியே சென்றுவிட்டாள். இவன் கையில் பாட்டிலோடு நின்றானாம்.. என எல்லாவற்றையும் தன் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், மனதோடு.

கபாலிக்கு, காலையில் விடியல் ஏன்தான் வருகிறதோ.. என எண்ணம்.. விழித்துக் கொண்டு.. மொட்டை மாடியில் தெரிந்த இளஞ்சூரியனை.. வெறித்துக் கொண்டிருந்தான். ‘அவர்களாக வந்து பெண் கொடுத்தார்கள்.. சரி, நான் அவளை வைத்துக் கொண்டு மிரட்டினேன்.. அதற்காக பெண் கொடுத்தார்கள் சரி, இவள் என்னமோ என்னை நைட் ஏன் வரலைன்னு கேட்க்கிறாள்.. ஏன் குடிக்கிறேன்னு கேட்க்கிறா.. இந்த ராத்திரியில் அவளின் அண்ணன் வந்து அழைத்து செல்லுகிறான்.. ஆமாம்.. எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்னை பற்றி.. எதோ கல்யாணம் ஆகிடுச்சின்னா.. அவர்கள் முன் மண்டியிட்டு.. நின்று காரணம் சொல்ல வேண்டுமா.. கைகட்டிக் கொண்டு.. அவளை சீராட்ட வேண்டுமா.. போங்கடா.. வேண்டாம் டா.. எனக்கு..’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு எழுந்தான்.

குளித்து, கிளம்பி கீழே வந்தான். ஆனால், கபாலிக்கு முடியவில்லை.. தலை வலித்து.. உடலெல்லாம் வலி.. ஏதும் சொல்ல தெரியவில்லை அவனுக்கு. 

அவனின் வரவை உணர்ந்த மகேஸ்வரி.. மகனை முறைத்தார்.

கபாலி, அன்னையை பார்க்காது.. நேரே பூஜை அறைக்கு சென்றான்.. பழக்கமாக. கண்மூடி நின்றான்.. ஏன் என அவனிற்கே தெரியவில்லை. கண்மூடி நின்றான்.. ‘சார், நமக்காக நாம் வேண்டிக் கொள்வது என்ன வாழ்க்கை சார்.. நமக்காக யாராவது வேண்டிக் கொண்டால்.. அது வாழ்க்கை.’ என தன் அன்னை முறைக்கவும்.. அவனின் கொஞ்சம் ஈரமுள்ள மனது சின்ன குரலில் சொல்லியது, அவன் காதில். 

கபாலி கண்களை திறந்துக் கொண்டு.. விபூதியை வைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அன்னை அங்கே உக்ரமாக நின்றார்.. கபாலிக்கு எண்ணம் ‘ஆக, மயூரா போனது இவங்களுக்கு தெரிந்திருக்கு.. ம்.. சொல்லிட்டு போயிருப்பாளோ.. இல்ல, காணோமேன்னு போன் செய்து பேசியிருப்பாங்களோ’ என எண்ணிக் கொண்டே அன்னையை பார்க்காமல் வந்து அமர்ந்தான். 

அன்னை “எங்க டா.. கிளம்பற.. உன் பெண்டாட்டிய அப்படி அடிச்சிருக்க.. காது கன்னமெல்லாம் சிவந்து போச்சுடா.. இதுதான் நான் வளர்த்ததா? என்ன டா இது.. தொழிலை பார்க்க தொடங்கினால், அன்பு பாசம் எல்லாம் மறந்திடனுமா? என்கிட்டையே நின்னு பேசறதில்லை நீ. அந்த பெண் கேட்டதில் என்ன தப்பு.. வீடு தங்குன்னு சொல்றேனில்ல.. இது சரியில்ல கபில். அவளை கூட்டிட்டு வரலாம் வா.. இல்லை, நான் உங்க பெரியப்பாவை கூப்பிடுறேன்.” என பேசிக் கொண்டிருந்தவர் மிரட்ட தொடங்கினார்.

கபாலி அசரவில்லை.. ஏனோ அன்னையின் கலக்கம் அவனுக்கு தெரியவில்லை.. ‘நான் என்ன செய்தேன்.. என் தொழிலை பார்த்தேன்.. அதனால் வரவில்லை.. வந்திருந்தால் மட்டும்..’ என உதடுகள் கிண்டலாக வளைந்தது, கணவனாக. 

கபாலி அப்படியே உண்ணும் மேசையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.. பசி. பொங்கல் உண்ண தொடங்கினான்.

அன்னை அவனின் முகபாவனையை பார்த்து இன்னும் கடிந்தார் ”என்ன டா, இப்படி இருக்க.. பெண்ணை அடிக்கிறவன் மனுஷனே இல்ல டா.. கிளம்பு என்னோடு, என்மகன் அப்படி இருக்க கூடாது. பேசி  பெண்ணை அழைத்து வந்திடலாம்” என்றார்.

அதை எல்லாம் காதில் வாங்கினால், அவன் கபாலி அல்லவே.. கிளம்பிவிட்டான் பதில் பேசாமல்.

மகேஸ்வரி என்ன செய்து என தெரியாமல் அமர்ந்துக் கொண்டார்.

காலையில் வசீகரன், தன் தந்தையிடம்.. நேற்று, தங்கை தனக்கு போன் செய்து அழுததையும்.. அதை தொடர்ந்து.. தான் சென்று அழைத்து வந்ததையும் கூறி நியாயம் பேசிக் கொண்டிருந்தான் “இதுக்குதான் சொன்னேன் ப்பா.. மயூ பூ மாதிரிப்பா.. அவனுக்கு போய் கல்யாணம் செய்து வைத்து, இதெல்லாம் நடக்கும் எனத்தான் அப்போதே சொன்னேன்.. நான் சொன்னது போலவே நடக்குது.. எப்படி அவளின் முகமிருக்குன்னு பாருங்க ப்பா.. ஏன், அவன்கிட்ட இப்படி அமைதியா இருக்கீங்க.. பேசிடுங்க.. நம்ம கூடவே மயூ இருக்கட்டும்.. நாங்க பார்த்திக்கிறோம் அவளை.”  என்றான் அடக்கிய கோவத்தில்.

சுமதி மேலே சென்று மகளை பார்த்து வந்தார்.. உறங்கிக் கொண்டிருந்தாள் மயூரா. கன்னம் வீங்கி.. முகமே சிவந்து இருந்தது. அன்னைக்கு பொருக்கவே முடியவில்லை.. “அன்னிக்கு நல்லாதானே இருந்தாங்க.. மாப்பிள்ளை ஆசையாதானே இருந்தார்.. என்னாச்சோ” என்றார் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு.

வசீகரன், தன் மனைவியை பார்த்து முறைத்துவிட்டு “அதான் ம்மா.. அவன் திட்டம் போட்டு எல்லாத்தையும் செய்திருக்கான். இப்போ, எல்லாம் முடிந்ததும்.. தன்னுடைய வேலையை காட்டி இருக்கான். எனக்கு தெரியும் ப்பா.. மயூராவை இனி அங்கே அனுப்ப முடியாது. அவள் எழுந்ததும் யாரும் அவளிடம் ஏதும் கேட்க்க கூடாது. சமரசம் பேசிறேன்.. சமாதானம் செய்கிறேன்னு யாரும், அவங்க வீட்டிலும் பேச கூடாது. ஜெயந்தினி உனக்கும்தான்” என்றான் உறுமலாக.

தந்தை ஆதிகேசவன் “டேய்.. சும்மா இருடா. இதென்ன.. பங்காளி சண்டையா.. மாமியார் மருமகள் சண்டையா?.. புருஷன் பெண்டாட்டி சண்டை டா. நீ எதுக்கு என்கிட்ட சொல்லாமல் நைட் போனாய். நீ போடா, அந்த பக்கம்.. எங்க பெண் வாழ்க்கை நாங்க பார்த்துக்கிறோம். என்னமோ குதிக்கிறான்.” என்றார் கோவமாக.

வசீகரன் இன்னும் பேசினான் “ஏன் நான் பேசக் கூடாது, என்ன ப்பா, தங்கை கூப்பிடுறா, நான் எப்படி போகாமல் இருப்பேன். அவனை ஏதும் சொல்லவே மாட்டீங்களா” என்றான்.

ஆதிகேசவன் தணிந்தார்.. இப்போது, வயது பொறுமையை கொடுத்தது அவருக்கு. ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டார் பின் “டேய்.. எல்லோருடைய வாழக்கையும் ஒரே மாதிரி இருக்காது டா.. உங்க ரெண்டு பேர்க்கும் முன்னமே தெரியும் புரியும். ஆனால், அவங்க வாழ்க்கை அப்படியல்ல டா.. நீ போ உனக்கு புரியாது” என்றார்.

வசீகரன் ”நீங்க என்ன அவனுக்கு சப்போர்ட் செய்யறீங்க..” என்றான்.

ஆதிகேசவன் “வசி புரியாமல் பேசாதே.. சப்போர்ட் இல்ல.. உண்மை. எங்களுக்கு கல்யாணம் ஆன புதிதில் உங்க அம்மா பத்துநாளில்.. வீட்டில் யார்கிட்டவும் சொல்லாமல்.. அவங்க அம்மா வீடு போயிட்டா.. என்ன ஏதுன்னு எனக்கு புரியவேயில்ல.. இப்போ வரைக்கும்.” என்றார் தன் மனைவியை பார்த்துக் கொண்டே சங்கடமான குரலில்.

மீண்டும் தந்தையே “நானும் கோவத்தில் பத்துநாள் அங்க போகலை.. அப்புறம், என் அய்யன் தான்.. என்கிட்டே பேசி.. என் பொண்டாட்டியை கூப்பிட்டு வர சொன்னார். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிடிப்பு வந்தது.. இதெல்லாம் உனக்கு புரியாதுடா.. போ.. நீ தங்கைக்கு செய்துட்ட.. இனி, மாப்பிள்ளைகிட்ட ஏதும் நீ பேசாத.. ஜெயந்தி நீதான் பொறுப்பு.” என்றார்.

வசீகரன் முறைத்துக் கொண்டே நின்றான்.

பின் தன் மனைவியை  பார்த்தார் ஆதிகேசவன் “நீ போய் மயூராவை பாரு. நான் அசோஷியேஷன் வரை போயிட்டு வரேன். ஜெயந்தி நீ அம்மகிட்ட பேசிடு, நான் மாப்பிள்ளைகிட்ட பேசறேன்னு சொல்லிடு..”  என்றார்.

ஆதிகேசவன் மகனை பார்த்து “போலாமா, என்னை டிராப் செய்திடு” என்றவர் முன்னே நடந்தார். 

மகன் காரேடுக்க அமர்ந்தார்.

வசீகரன் பேசவேயில்லை.

ஆதிகேசவன் “வசி, என்ன ப்பா.. கோவம். பொறுமையாக இருப்பா.. கபாலி, பொறுப்பானவன்தான்.. அதெல்லாம் பயப்படாத நீ. எவ்வளவு பொறுப்பா.. கல்யாணம் செய்து வைத்தான் தன் அக்காவிற்கு. இந்த பழக்க வழக்கமெல்லாம் மாறிடும் டா.. அவனுக்கு வழி சொல்ல யாருமில்ல.. அதான். மயூ என்ன சொல்றா” என கேட்டார்.

மகன் முறுக்கினால்.. இரவு நடந்ததை.. தங்கை சொன்னதை சொன்னான்.

ஆக, ஆதிகேசவனுக்கு, கபாலியின் வேலைப்பளு.. அவனின் இரவு நேர பழக்கம் புரிந்தது. யோசிக்கத் தொடங்கினார்.. மருமகனை எப்படி நேர்செய்வது என. இருவரும் அடுத்து ஏதும் பேசவில்லை. ஆதிகேசவன், தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், மகனிடம் விடை பெற்றுக் கொண்டு இறங்கினார்.

மயூராவிடம் பேசி, அன்னை சுமதி விவரம் கேட்டுக்கொண்டார்..  ’மகளின் கேள்வி, சண்டை எல்லாம் சரிதான்’ என தோன்றியது அன்னைக்கு. ஆதிகேசவனும் சுமதியும்..சம்பந்தியிடம் பேசினார் ’கொஞ்சநாள் ஆகட்டும் சம்பந்தி.. நீங்க எப்போதும் போல.. உங்க  மருமகளை, வந்து பாருங்க.. நாங்க பார்த்துக்கிறோம்.’ என்றனர்,

 

Advertisement