Advertisement

நான் உன் நிறையன்றோ!..

2௦

அன்று முழுவதும் மயூராவும் கபாலியும் அங்கே, மயூ வீட்டில் இருந்தனர். கபாலியின் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் மதியமே உண்டு முடித்து கிளம்பிவிட்டிருந்தனர். 

கபாலி மாலையில் எல்லோருடனும் இயல்பாக பேசினான். வசீகரன் அலுவலகம் கிளம்பிவிட்டான். ஆதிகேசவன் வீட்டில் இருந்தார். மருமகனோடு தனியே பேசிக் கொண்டிருந்தார் நிறைய நேரம்.. ஆதிகேசவனுக்கு, தவிர்க்க முடியாமல் பெண்ணை கொடுத்தோமே என மனது குழம்பியது அவ்வபோது.. ஆனால், கபாலி தொழிலில் முரடாக இருந்தாலும்.. வீட்டில்.. பழக்க வழக்கத்தில் அனுசரிப்பாக இருக்கிறார் என இந்த பேச்சு வார்த்தையில் உணர முடிந்தது, பெண்ணை பெற்றவருக்கு.

இரவு உணவு வசீகரன் கபாலி ஜெயந்தினி மயூரா என நால்வரையும் அமர வைத்து பரிமாறினார் சுமதி. வசீகரன் தன் தங்கையிடம் “நீங்க எப்போது டா..  ட்ரிப் போறீங்க, உன் வீட்டுகாரர் ஒன்னும் சொல்லவே  மாட்டேன்கிறார்..  உனக்கு ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா என்ன” என்றான்.

கபாலி ஏதும் பேசவில்லை.. மயூரா யோசித்துக் கொண்டே இருந்தாள், கணவனை பார்க்கவே தயக்கமாக இருந்தது. கபாலி, இது அவளுக்கான கேள்வி என எண்ணி, உண்ணுவதிலேயே கவனமாயிருந்தான்.

வசீகரன் “என்ன மயூ.. ஏன் ப்ளான் செய்யலையா” என்றான்.

மயூரா “இல்ல அண்ணா, அவருக்கு நிறைய வேலையிருக்கு.. பாரேன் இன்னிக்கு கூடவர லேட்.. அதான். நானும் இப்போதான் நார்மல் ஆகியிருக்கேன்.. கொஞ்சநாள் ஆகட்டுமே..” என்றாள்.

வசீகரன் “ம்.. உன் ரெகுலர் வொர்க் எப்படி டா.. இருக்கு, அகடாமிக்கு ஏதாவது தேவையா.” என வினவினான். வசீகரனுக்கு, தன் தங்கையின் நிலை என்னவென தெரிய ஆசை.. ஜெயந்தினி சொல்லி இருப்பதில், கொஞ்சம் தெளிவு.. கபாலியை பற்றி வந்திருக்கிறது..  அத்தோடு, தன் தங்கை இயல்பாக பேசுவது.. எல்லோரிடமும் சகஜமாக இருப்பது.. கபாலி காலையில் அவளுக்கு பரிசு தந்தது எல்லாம் பார்க்க.. ‘அவ்வளவு ஒன்றும் கபாலி மோசமில்லை’ என தோன்றினாலும்.. ‘ஏன் ஹனிமூன் போகவில்லை’ என கேள்வி எழ தொடங்கிவிட்டது அண்ணனிடத்தில்.. எனவே, ஆராயத் தொடங்கினான்.

இப்போது வசீகரனின் கேள்வியில்  கபாலிக்கு, சட்டென எதோ தோன்றியது.. ‘அதன்ன, இன்னமும் இவர் விசாரிப்பது.. அவள் சம்மந்தபட்ட எதையும் இனி நான்தான் பார்ப்பேன்.. அவர்கள் வைத்துக் கொடுத்த பள்ளி என்றால்.. இவர் கேள்வி கேட்ப்பாரா’ என தோன்ற தன் அக்காவை பார்த்தான் கபாலி.

ஜெயந்தினிக்கு இந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை.. மயூரா இப்போது கணவனை பார்த்தாள்.. அப்படியே “ஸூம்த் ண்ணா..” என்றவள் சட்டென எழுந்துக் கொண்டாள் கை கழுவ.

கபாலியும் கைகழுவ எழுந்துக் கொண்டான்.

சுமதி , தன் மகனை கடிந்துக் கொண்டார் “என்ன வசி.. நீங்க தனியாக பேசிக்கங்க.. இப்படி அவர் எதிரில் உன் தங்கையை கேள்வி கேட்க்காத.   இப்போ எதுக்கு அகடாமி பத்தி பேசற.. அவர் மாப்பிள்ளை. பொதுவாக பேசு..” என்றார்.பெண் சரியாக உண்ணவில்லை,மாப்பிள்ளையும் உடனே எழுந்துக் கொண்டதாக எண்ணம். அதனால், மகனிடம் கடிந்துக் கொண்டார்.

கபாலிக்கு, வசீரகனின் கேள்வி உறுத்த தொடங்கியது.. மயூராவின் நடனப்பள்ளி பற்றி  நாம் கேள்வி கேட்க்க கூடாது என எண்ணிக் கொண்டான்.

கபாலியும் மயூராவும் விடைபெற்று கிளம்பினர். இப்போது இருவர் மட்டும்தான் காரில். மயூரா எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணமிது.. கணவன் தங்களின் அறை தவிர மற்ற இடத்தில்.. தன்னோடு தனித்திருப்பதில்லை என அவளுக்கு ஒரு எண்ணம். கணவனிடம் பேச வேண்டும்.. அவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் எண்ணம் அவளுள். மதியம் நக்கலாக இந்த ஜிமிக்கியை பரிசாக வைத்துக்கொள் என பேசியது நினைவு வந்தது ஆனாலும், ஏனோ தானோ என இருந்தாலும், தன்மீது அக்கறையாக இல்லை என்றாலும்.. ஒருவாய்ப்பு எனக்கு கொடுத்திருக்கிறான் என தோன்றியது, மனையாளுக்கு. தயக்கம் தடுமாற்றம் என மயூராவிற்கே உண்டான அத்தனை  தடைகள் இருந்தாலும் முதல்முதலாக “ஏங்க.. “ என அழைத்தாள் கணவனை.

கபாலி திரும்பி பார்க்கவில்லை கார்’ரை செலுத்திக் கொண்டே “ம்..” என்றான்.

மயூரா “உங்ககிட்ட பேசணும்”  என்றாள் திணறிய குரலில்.

கபாலி திரும்பி பார்த்தான், கேலியாக சிரித்தபடி “ஓ.. பெர்மிஷன் வாங்கிட்டுதான் பேசணுமோ. இந்த மேனர்ஸ் எனக்கு தெரியலையே  அதான், அன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டிங்கிளோ” என்றான் நக்கலாக. 

மயூரா திணறினாள்.. தலையை கவிழ்ந்துக் கொண்டாள்.

கபாலி அவளை திரும்பி பார்த்தான்.. நொடிகளுக்கு முன்னிருந்த கலையான முகம் இப்போது இல்லை.. அது அவனை என்னமோ செய்ய கொஞ்சம் இறங்கி வந்தான் “ஹேய்.. சும்மா சொன்னேன்.. சொல்லுங்க என்ன பேசணும்” என்றான்.

மயூரா வார்த்தைகளை தனக்குள் கோர்க்க தொடங்கினாள்.. எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை.. எது பேசினாலும் ஏதாவது பேசுவான் என தோன்ற அமைதியாக இருந்தாள்.

கபாலி “சீக்கிரம்.. என்ன பேசனும்.. டைம் இல்ல.. உன் வீட்டுக்காரன் ரொம்ப பிஸி.. உன்னை வீட்டில் விட்டுட்டு நான் கம்பெனி போகனும். ஆனந்த் இல்லை.. லோட் நார்த் போகுது.. நான்தான் பார்க்கணும்” என்றான், அவளை பேச வைக்கும் எண்ணத்துடன்.

மயூராவிற்கு அதை கேட்டதும் இன்னும் வார்த்தைகளே வரவில்லை.. சோர்ந்து போனாள்.. கணவன் தன்னை அடிக்கடி பார்ப்பதை உணர்ந்தவள்.. “ஒண்ணுமில்ல சும்மாதான்” என்றாள் திக்கிய குரலில்.

கபாலி “ம்.. சொல்லு” என்றான், குரல் கொஞ்சம் அழுத்தமாக வந்தது.

மயூரா “நீங்க, நம்ம SNR ஸ்கூலிலா படிச்சீங்க..” என்றாள்.

கபாலி “ம்.. “என்றான் கொஞ்சம் அவனின் உடல் இறுகிப்போனது.

மயூரா “ஓ.. அப்புறம் காலேஜ் எ..எங்க படிச்சீங்க, என்ன படிச்சிருக்கீங்க” என்றாள்.

கபாலி திரும்பி அவளை பார்க்கவில்லை.. “ம்.. என்ன தெரியனும் என்னை பத்தி” என்றான் குரல் அழுத்தமாக வந்திருந்தது.

மயூரா “ஏன்.. டென்ஷன் ஆகுறீங்க..” என முடிக்க கூட இல்லை.

கபாலி “ஏன் உனக்கு கல்யாணத்துக்கு முன் தெரியாதா நான் படிப்பை டிஸ்கண்டினியூ செய்தது.. நான் படிக்கலை.  அப்போ மட்டுமில்ல.. ஸ்கூல் டேஸ்லையும் அப்படித்தான் நான். ஜஸ்ட் பாஸ். உங்க அண்ணன் மாதிரி பாரின் போகல படிக்க.. அப்புறம் வேற என்ன தெரியனும் உனக்கு..” என்றான், சட்டென இறுகி போனவனாக. 

மயூராவிற்கு இன்னும் தடுமாற்றம் வந்தது. ஏன் பதறுகிறான், நான் இவன் படிக்கவில்லையா என கேட்கவில்லையே.. இவனை பற்றி தெரிந்துக் கொள்ளத்தானே கேட்டேன். என தோன்ற.. அவனுக்கு புரிய வைக்க நினைத்தாள், சட்டென வார்த்தைகள் வரவில்லை.. தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது.. மயூரா “ம்கூம்.. இ..” என தடுமாறினாள்.

கபாலி வண்டியை நிறுத்தினான். வீடு வந்திருந்தது. கபாலி “இறங்கு, நான் கம்பெனி போறேன்.. இரண்டுநாள் ஆகும், அம்மாகிட்ட சொல்லிடு” என்றான்.

மயூரா இறங்காமல் அமர்ந்திருந்தாள்.. தன்னை சரி செய்துக்கொண்டு “உங்களை பற்றி தெரிந்துக் கொள்ளத்தான் கேட்டேன். எனக்கு உங்களை பற்றி எதுமே தெரியாது கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி,  இப்பவும் சரி.. சாதரணமாக தான் கேட்டேன்.. என்ன படிச்சிருக்கீங்கன்னு” என்றாள் நிதானமாக ஒவ்வொரு எழுத்தையும் கோர்த்து.. கோர்த்து..

கணவனுக்கு இந்த விளக்கமும் எரிச்சலாக வந்தது, “இன்னும் என்ன தெரியனும் என்னை பற்றி.. உனக்கு” என்றான் எரிச்சலாக.

மயூரா ஒன்றுமில்லை என தலையசைத்தாள். வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டாள்.. விருட்டென கிளம்பினான் கபாலி.

அந்த காரின் சத்தம்.. அவனின் உறுமலாக மனதில் நின்றது, மனையாளுக்கு.

மயூரா, உள்ளே வந்தாள். தனது அத்தையை பார்த்து.. ‘சாப்பிட்டீங்களா அத்தை.. என நலம் விசாரித்து.. தன் கணவன் வர இரண்டுநாள் ஆகும் என அவன் சொல்லியதையும் சொல்லி.. சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு..’ மேலே தங்களின் அறைக்கு வந்தாள்.

ஆக, இப்படிதான் அவளின் நாட்கள் கடந்தது.

வசீகரனும் ஜெயந்தினியும்.. ட்ரிப் கிளம்பி சென்றனர். மயூராவிற்கு, நேரம் சரியாக இருந்தது. காலையில் கிளம்பி வகுப்பிற்கு செல்லுவாள். மதியம் மகேஸ்வரி உணவு எடுத்து வருவார். மருமகளின் நடனத்தை.. அவள் வகுப்பெடுக்கும் அழகை பார்த்துக் கொண்டிருப்பார். மாலையில், மயூராவிற்கு என மதியமே சுண்டல்.. பழம்.. முளைகட்டிய பயறு.. சத்துமாவு உருண்டை என ஏதாவது  எடுத்து வந்திருப்பார். அதை கொடுத்து.. சின்ன கெட்டிலில் பால் சுட வைத்து, காபி கலந்து கொடுத்து விட்டுதான் வீடு செல்வார்.

மயூரா, ஏழு மணிக்கு மேல்தான் வீடு வருவாள். அவள் வந்ததும்.. ஏதேனும் கொறிக்க கொடுப்பார். இரவு கபாலி வருவானா இல்லையா என மயூரா கேட்டு சொல்ல.. அதற்கு தக்க உணவு தயாராகும். ஆக, மாமியாரும் மருமகளும்தான் இப்போது நெருங்கி இருந்தனர்.

பதினைந்து நாட்கள் சென்றுதான் வசீகரனும் ஜெயந்தினியும் சொந்த ஊர் வந்தனர். வந்த அன்று, தங்களின் வீட்டிற்கு வந்தாள் ஜெயந்தினி. மாலையில் வசீகரன் வந்தான்.. இரவு உணவு உண்டு, மனையாளோடு வீடு சென்றான். கபாலி அன்று வரவில்லை.. குவாரியில் இருந்தான். தன் அக்காவிடமும் மாமாவிடமும் போனில் பேசினான். மயூரா அன்று மாலையில் நேரமாக வந்தாள். தன் அண்ணன் அண்ணியோடு பேசிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அழகாக சென்றது அவளுக்கு.

மகேஸ்வரிக்கு, கண்முன் தெரிந்தது.. தன் மகன் மருமகளின் வாழ்க்கை. கபாலி வாரத்தில் இரண்டுநாள் தான் வீடு வருகிறான். அதுவும் தாமதமாக. மருமகள் இன்னமும் தன் பின்னாலேயே சுற்றுகிறாள்.. என்ன சொல்லுவது எப்படி கேட்பது.. என ஏதும் புரியவில்லை.

இன்றும் அதேபோல.. இப்போதுதான் வந்தாள் மயூரா. தன் கணவனின் கார் வெளியே நின்றிருந்தது.. பெண்ணவளின் முகத்தில் லேசான புன்னகை வந்தது.. நைட் தானே வருவான்.. என்ன அதிசையம்.. என எண்ணிக் கொண்டே உள்ளே வந்தாள்.

மயூரா உள்ளே வரவும், கபாலி தன் அறையிலிருந்து  கீழேறங்கி வரவும் சரியாக இருந்தது.. மயூரா புன்னகைத்தாள் கணவனை பார்த்து. கபாலி, அதை கண்டுக் கொண்டதாக கூட தெரியவில்லை.. “பத்திர்க்கை கொடுக்க.. MLA பெண்ணும் மாப்பிள்ளையும் வராங்க.. இங்கேயே இரு” என்றவன்.. போன் பேச தொடங்கிவிட்டான்.

மயூரா, முகம் கழுவி வரலாம் என மேலே செல்ல எத்தனிக்க.. அதைப் பார்த்துவிட்டு, கணவன் போனை காதிலிருந்து எடுத்துவிட்டு.. “எங்க போற.. இப்போ வந்திடுவாங்க..” என்றான்.

மயூரா ஒன்றும் பேசாமல் கிட்சென் சென்று.. சிங்கிள் முகத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவினாள், தன் மாமியார் நீட்டிய புடவை தலைப்பில்.. முகத்தை துடைத்துக் கொண்டாள். 

சுமதி வேலையாளிடம் சிற்றுண்டியை எடுத்து கொடுக்க சொன்னார். தன் மருமகளிடம் “நீ சாப்பிடு.. அவங்க வந்தால், நான் கூப்பிடுறேன்” என்றவர் ஹாலுக்கு சென்றார்.

கபாலி “அம்மா.. எங்க அவ” என்றான்.

மயூராவிற்கு சத்தம் கேட்கவும்.. கை கழுவிக் கொண்டு எழுந்து சென்றாள்.. தானும் கணவனுமாக அவர்களை போர்ட்டிகோ வரை சென்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தனர். MLA பையனுக்கு திருமணம்.. எனவே, அவரின் மகளும் மாப்பிள்ளையும் வந்து அழைத்தனர். காபி, சிற்றுண்டி என உண்டு.. சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர்.

அதன்பின் நேரம் சென்றது. உண்டு தம்பதி இருவரும் மேலே வந்தனர். மயூரா, கணவன் பால்கனியில் நிற்பதை பார்த்தாள்.. “என்ன அதிசயம்.. உங்க சின்ன வீட்டை தனியா விட்டுட்டு இவ்வளோ நேரம் இங்க இருக்கீங்க” என்றாள் விளையாட்டாய்.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கணவனும் “ம்.. என்ன செய்ய என் தகுதிக்கு சின்ன வீடுதானே செட் ஆகுது. பெரிய வீடு.. பெரிய்ய்ய.. வீடாவே இருக்கு.” என்றான், தனக்கே உண்டான நக்கல் த்வனியில்.

மனையாளுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. அமைதியாகிவிட்டாள்.

கணவன்.. மனையாளின் அமைதி பார்த்தான். கொஞ்சம் நொந்து போனான். அவனுக்கு சட்டென வந்துவிடுகிறது வார்த்தைகள்.. அவளை தாக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், தானும் புண்பட்டிருக்கிறேன் என முகத்தில் அடித்தார் போல பேசிவிடுகிறான். மனையாளின் வாடிய முகம் எதோ  செய்ய.. சற்று  நேரம் என்ன செய்வது என யோசித்தான். ம்கூம்.. அவனுக்கு இப்படி அவளை தன்பக்கம் திருப்ப தெரிந்திருந்தால்.. இந்நேரம்.. கதையே வேறல்லவா. எப்போதும் போல தப்பாக பேசி.. அவளை ஒடுங்க வைத்துவிட்டான். உறங்க சென்றால்.. உறக்கம் வரும்போல தோன்றவில்லை.. எனவே கபாலி, கீழிறங்கி சென்றான்.. பத்து நிமிடம் சென்று மேலே வந்தான்.

அறையின் உள்ளே வந்ததும் கையில் ஒட்கா பாட்டில்.. பளிச்சிட்டது. மயூரா கணவனின் வரவை உணர்ந்து பார்த்தவளின் பார்வை அதிர்ந்தது “ஐயோ.. என்ன இது” என்றாள்.

கபாலி ஒன்றும் சொல்லாமல்.. தன்னுடைய கபோர்ட்டில் இருந்து கிளாஸ் எடுத்தான்.. ஐஸ் கியூப்ஸ் எடுத்து வர..  திரும்ப..

மயூரா “ஐயோ.. நீங்க குடிப்பீங்களா” என்றாள்.

கபாலிக்கு, அவள் எது கேட்டாலும் குற்றமாகவே தெரிந்தது.. இப்போதும் இந்த கேள்வியில் திரும்பி நின்று முறைத்தான்.. “ஏன், உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் குடிச்சதே இல்லையா.. என்னமோ நான் மட்டும்தான் குடிக்கிறா மாதிரி பார்க்கிற” என்றான்.

மயூராவிற்கு உண்மையாகவே தன் அப்பா அண்ணன் எல்லாம் குடிப்பார்கள் என தெரியாது.. அதனால் கணவனின் கேள்விக்கு “இல்லையே எங்க வீட்டில்.. அப்படி எல்லாம் கிடையாது.. ஐயோ வீட்டிலேயே குடிக்கிறீங்க.. இதை முதலில் தூக்கி போடுங்க..” என்றவள், “எடுங்க.. தூக்கி போடுங்க” என்றாள்.

கணவனோ அழுத்தமாக நின்றான்.. “உனக்கு ஒன்னும் புரியலை.. நீ என்ன வேற்று கிரக்கத்தில் இருந்தா வந்திருக்க.. புதுசா  கேட்க்கிற எல்லாவற்றையும். என்ன இப்போ.. ஆமாம், நான் குடிப்பேன்..” என்றான் அழுத்தமாக, ஆர்பாட்டமாக.

மயூராவிற்கு அழுகையாக வர “நீங்க ஏன் இப்படி இருக்கீங்க.. கொஞ்சம் கூட டீசெண்டா இருக்கமாடீங்களா.. என்னை கடத்தி, கல்யாணம் செய்து.. நைட் வீடு வரதில்ல.. குடிக்கிறீங்க.. ஐயோ.. என் அண்ணன் கேட்டாங்க.. எனக்கு கல்யாணமே வேண்டாம்.. இந்த கபாலி உனக்கு வேண்டாம்ன்னு சொன்னாங்க.. செய்யறதெல்லாம் தப்பாகவே தெரியலையா உங்களுக்கு..” என மனதிலிருந்த எல்லாவற்றையும் திக்கி திணறி.. அவள் கொட்டி தீர்க்க.. வசீகரன் பேச்சை எடுத்ததும் தன்னை மீறியிருந்தான் கபாலி.. பேசிவளின் கன்னத்தில் “சப்..” என ஒரு அறை வைத்திருந்தான், கபாலி.

மயூரா, கணவன் அடித்த வேகத்தில்.. அருகில் இருந்த சுவரில் மோதினாள்.. லேசாக. 

கபாலி “என்னடி, என்ன.. ஆமாம் நான் இப்படிதான்..  என்ன செய்ய போற.. ஆமாம்.. கடத்தினேன்.. உன்னை ஆசைபட்டுன்னு தப்பாக நினைச்சிக்காத.. எங்க அக்கா கல்யாணத்துக்காக. அப்புறம் நான் குடிப்பேன்.. என்ன செய்வ.. படிக்கலை.. நான், எனக்கு டிசன்ட் தெரியாது. என்ன செய்ய போற.. இதுக்குதானே, என்கிட்டேயிருந்து உன்னை காப்பாத்திக்கிட்டிருந்த.. போ.. அப்படியே போயிடு..” என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல்.. ஒட்காவோடு.. மெட்டை மாடிக்கு சென்றான்.

மயூரா சுருண்டு அமர்ந்திருந்தாள். அவளிற்கு, அவர்கள் வீட்டு ஆண்கள் ட்ரிங்க்ஸ் எடுப்பார்கள் என்பதே தெரியாது, அதைவிட, அவர்கள் யாரும் இப்படி பேசியோ.. சத்தம் போட்டோ பார்த்ததில்லை அவள். எல்லா கட்டுபாடுகளும் உண்டு.. அதே சமயம் தளர்வுகளும் உண்டு. இந்த சிறுபெண்ணின் கண்ணில் ஏதும் தென்பட்டதே இல்லை.. அடித்து, கத்தி ஆர்ப்பாட்டமாய்.. ஏதும் அவள் கண்ணெதிரே நடந்ததில்லை. அவள் சிறுபெண்.. அங்கே. 

இங்கே, இவள் தலைவி. தலைவனுக்கான தலைவி. அங்குதான் பிழை.. ம்.. தலைவி என்றால்.. இங்கே நிறைய இலக்கணங்கள் உண்டு. அந்த இலக்கணங்கள் எல்லாம் இவளிடம் பொருந்தி நிற்கிறது.. ஆனால், தலைவனின் தலைவியாக இவளின் இலக்கணங்கள்.. அஹ.. திருத்துதல்.. அவனை அனுசரித்து போதல்தானே. அஹ.. அப்படிதானே மாறுகிறது, திருமண பந்தத்தில். அதில் ஒன்றும் இவளிடம் இல்லையே.. பிழை துரத்துகிறது அவளை.

கபாலிக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை.  ’என்ன இப்போ குடிக்க கூடாதா.. அதென்ன அவ்வளோ பெரிய குற்றமோ.. இவள் எப்படி என்னை கேள்வி கேட்க்கலாம். இத்தனைநாள்.. நான் இப்படிதானே இருந்தேன்.. புதுசா கேட்க்கிறா.. இவள் வந்துட்டால்.. பார்த்துட்டா, ஒருநாள் பேசிட்டா நான் பின்னாடியே போகிடனும்மா.. என்னமோ ஊரு உலகத்தில் இல்லாதத செய்தா மாதிரி கேட்க்கிறா..” என எண்ணிக் கொண்டே தன் போனை எடுத்தான்.. ப்ரென்ட் கேமரா ஆன் செய்து.. அந்த இருளில் தன் முகத்தை ஆராய்ந்தான்.. ‘நான் என்ன அவ்வளோ மோசமாகவா இருக்கேன்.. நல்லாதானே இருக்கேன்.. இவள் வந்து நின்னா கேள்வி கேட்டால்.. என எதோ தோன்ற.. கார் சத்தம் அவனின் சிந்தனையை கலைத்தது.

கார் ஒன்று அவர்களின் கேட்டில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.. வாட்ச்மேன்..   அந்த காரை பார்த்துவிட்டு, உள்ளே அனுப்பினார்.

ஐந்து நிமிடத்தில்.. மயூராவும் அவளின் அண்ணனும் அந்த காரில் கிளம்பி சென்றிருந்தனர்.

கபாலிக்கு கையறு நிலை.. எதையும் தவற விட்டிராதவன்.. தன் வாழ்க்கையையே தவறவிட்டான்.. கண்முன்.

“மழைதானே யாசித்தோம்..

கண்ணீர் துளிகளை

தந்தது யார்..

பூக்கள்தானே யாசித்தோம்

கூலங்கற்களை எரிந்தது

யார்..”

Advertisement