Advertisement

என்னமோ, அந்த குரலே அவளின் நிலை சொல்லியது போல.. மறுபக்கம் இருந்தவனுக்கு. கரகரப்பான குரலில் வசி “ஹலோ, ஜெயந்தினி.. நா..நான் வசீகரன்.” என்றான்.

ஜெயந்தினி “யாருங்க..”என்றாள்.

வசி தன்னை முறையாக அறிமுகம் செய்துக் கொண்டான்.. பின் “அன்று வந்திருந்தேன்.. அப்போவே பேசனும்ன்னு நினைத்தேன்.. எல்லோர் எதிரிலும் வேண்டாம் என விட்டுவிட்டேன். இன்னும் உங்க குரலே சரி ஆகலை. நீங்க தைரியமானவங்க தானே. நீங்களே இப்படி இருந்தால் எப்படி.. இப்போ எப்படி இருக்கீங்க.. ஏதாவது உதவி தேவைபடுதா..” என்றான்.. ஆதரவான குரலில்.

ஜெயந்தினிக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. ஸ்கூல்’லில்.. அவன் தன்னை பார்ப்பான் என தெரியும். அவ்வபோது தோழிகள் ஏதாவது சொல்லுவது உண்டு.. இவளை கிண்டல் செய்வதும் உண்டு. ஆனால், இப்போது.. இத்தனை வருடங்கள் கடந்து, அவன் தன்னை அழைக்கிறான்.. அதுவும், தன் தந்தை இறந்த துக்கத்தை கேட்க அழைத்திருக்கிறான் எனவும், பயம் வந்தாலும்.. ‘இப்படி அழைக்கும் ஒருவன்’ என மனது தடுமாறவும் செய்தது. ஜெயந்தினி சத்தமில்லாமல் அழுதாள்..

வசி பொறுமையாக இருந்தான். அவள் பேசவில்லை.. ஆனாலும் அழைப்பை துண்டிக்கவில்லை என்பதே அவனுக்கு போதுமானதாக இருந்து.  எனவே, தானே மீண்டும் பேசினான் “உங்க அம்மா எப்படி இருக்காங்க..” என்றான்.

ஜெயந்தினி “ம்.. பரவாயில்ல.” என்றாள்.

வசி “நீங்க CA படிக்கிரீங்கதானே..” என்றான்.. எதையோ கண்டுக் கொண்ட குரலில். 

ஜெயந்தினி “ம்..” என்றாள். அதன்பின் அவனே நிறைய பேசினான். இவள் கல்லூரி, சேலத்தில் எங்கு படித்தாள். இங்கே வந்து எத்தனை நாட்கள் ஆகிற்று.. எந்த நேரத்திற்கு வகுப்பிற்கு செல்லுவாள்.. என கொஞ்சம் அதிக நேரம் பேசினான் வசி.

ஜெயந்தினிக்கு அதை எல்லாம் கேட்க கேட்க.. புல்லாங்குழலுக்கும் மயங்கும் ராதையானாள்.. பெண். 

“இது காதலா.. முதல் காதலா..

ஒரு பெண்ணிடம் உருவானதா..

இது நிலைக்குமா.. நீடிக்குமா.. 

அன்பே..”

நீண்ட நேரம் சென்று.. உணவு உண்ண மகேஷ்வரி அழைத்த பிறகே போனை வைத்தாள், ஜெயந்தினி.

@#@#@#@#@#@#@#@#@#@##@#@#@

நாட்கள் காற்றை போல வேகமாக ஓடியது. 

கபாலி, எக்ஸாம் எழுதவில்லை. அடுத்த சமஸ்ட்டரில் பார்த்துக்கலாம் என எண்ணிக் கொண்டான்.  அவனிற்கு பரிட்சை என்பது, ஜெயந்தினிக்கு கூட நினைவில் இல்லை. யாரும் அதை பற்றி யோசிக்கவில்லை.

கபாலிக்கு, தன் தந்தையை பற்றிய மர்மம் மட்டும் விலகவேயில்லை. காரியம் முடிந்து கபாலி, குமரனிடம் பொறுப்பாக வினவினான் “நம்ம கம்பெனி வேலை எப்படி போகுது அண்ணா.. நீங்க நாளைக்கு போகும் போது என்னை கூட்டி போங்க” என்றான்.

குமரனின் முகம்  அதிர்ச்சியை காட்டியதோ.. சட்டென சுதாரித்தவர் “தம்பி, நாங்க எல்லோரும் இருக்கோம்.. படிக்கிற வயதில் அங்க வந்து என்ன செய்ய போறீங்க.. மனச குழப்பிக்காமல் படிங்க கபில், நாங்க பார்த்துக்கிறோம்.” என்றார்.

கபாலிக்கு உண்மையாகவே நிம்மதியாக இருந்தது. கொஞ்சம் தன் படிப்பையும் பார்க்கலாம் என எண்ணிக் கொண்டான். 

கபாலி “லீகல் போர்மலிட்டீஸ் ஏதாவது இருக்கா ண்ணா” என்றான்.

குமரன் சட்டென “அதெல்லாம் இப்போ தேவையில்ல கபாலி, சர்’க்கு உடம்பு முடியாமல் இருந்த போதே.. கம்பெனி பவரை மனேஜர்க்கு கொடுத்திருக்கார். அதனால்.. இந்த பினாஷியல் இயர் முடியட்டும்.. இன்னும் ரெண்டுமாதம் தானே.. அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.

கபாலி “யா..ருக்கு” என்றான். மகன் அல்லவா தெரிந்துக் கொள்ள விழைந்தான்.

குமரன் “எல்லாம் சொல்றேன் கபாலி. நீங்க, கொஞ்சம் இயல்பாகுங்க எல்லாம் பேசலாம். சின்ன வயது தானே.. எல்லாம் தெரிஞ்சுக்கலாம்.. ஒரு வாரம் ஆகட்டும். அப்புறம் இந்த கிரானைட் அசோஷியேஷன்ல நாளைக்கு இரங்கல் கூட்டத்திற்கு கூப்பிட்டிருக்காங்க. க்கும்… இது ஒரு பார்மல் மீட்டிங்தான்.. வேணும்ன்னா.. நாம போகலாம், விருப்பம் இல்லைன்னா.. ஒன்னும் பிரச்சனையில்லை.” என்றார் இளையவனின் முகம் பார்த்து.

கபாலி “கூப்பிட்டிருக்காங்கல்ல.. அப்போ போகணுமே அண்ணா, எனக்கும்..” என எதோ சொல்ல வந்தவன் பேச்சை விடுத்து “எத்தனை மணிக்கு, எங்க..” என தனக்கு தெரிந்த இடமா என கேட்டுக் கொண்டான். 

குமரன் எல்லாம் சொன்னார்.

அடுத்தடுத்த நாட்களில்  தன் தந்தையின் செல் போனை தேடினான். எங்கிருக்கிறது என தெரியவில்லை அவனுக்கு.. குமரனிடம், மருத்துவமனையில் கொடுத்ததாக நினைவு. அவரிடம் கேட்க வேண்டுமே  என எண்ணிக் கொண்டான்.

கபாலி, தன் உள்ளூர் நண்பர்களை பார்க்க கொஞ்சம் வெளியில் சென்றான்.. வந்தான். இன்னும் கம்பெனிக்கு போகவில்லை.. ‘ஏன் தன்னை எதற்கும் அழைக்கவில்லை குமரன்’ என தோன்றிக் கொண்டே இருந்தது. 

கபாலிக்கு, எதையும் சட்டென ஆராய பயமாகவும்.. தயக்கமாகவும் இருந்தது. எதையும் கையிலெடுக்க தயங்கினான். ‘தான் கேட்டு.. அங்கே இயல்பாக நடக்கும் வேலையை, தான் சந்தேகம் கொள்வதாக அவர்கள் எண்ணிக் கொண்டால் என்ன செய்வது..’ என தோன்றியது கபாலிக்கு. ஆனாலும் ‘ஏன் குமரன் என்னிடம் ஏதும் கேட்கவில்லை..’ எனவும் தனக்குள் அடிக்கடி கேட்டுக் கொண்டான், கபில். 

அடுத்த வாரத்தில்.. மாதந்திர சங்க கூட்டத்தில்.. ரமணனுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.  பெரிய தலைகள் முதல்.. இப்போதுதான் தொழில் தொடங்கியவர்கள் வரை எல்லோரும் வந்திருந்தனர். ரமணனின் குடும்பத்தை அழைத்து கூட்டம் நடத்தினர். தன் குடும்பம்    சார்பாக கபாலி மட்டும் வந்திருந்தான்.  ரமணனை பற்றி பேசினார், எல்லோரும். அவரை கௌரவிக்கும் விதமாக அவரின் வாரிசு என கபாலீஷ்வரனை எல்லோருக்கும் அறிமுகம் செய்து.. அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.. அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அந்த கூட்டம்.. இயல்பான சங்க நடைமுறையின் படி சென்றது.

எல்லாம் முடித்து சிலர் கபாலியிடம் தனியாக வந்து பேசினர். குமரன் இப்போது, ஏதும் கபாலியிடம் பேசவில்லை.. அன்றுபோல ஏதும் சொல்லவில்லை, அமைதியாகிவிட்டார். 

கபாலிக்கு இப்போது குழப்பம்.. யார் இந்த குமரன்.. எனத் தோன்றியது. நல்லதும் கெட்டதும் மாறி மாறி இந்த முப்பது நாட்களாக அவனுக்கு பிடிபடுகிறது. இதில் எதுசரி எது தவறு என யோசிக்க தெரியவில்லை. 

வந்தவர்கள் கபாலியிடம் “என்ன ப்பா… படிப்பு முடிச்சாச்சா..” என இரண்டொரு வார்த்தை பேசி சென்றார்.

அடுத்து யாரோ வர.. குமரன் சிரித்தார் அவர்களை பார்த்து.. அவர்களும், குமரனை பார்த்தனர்.. லேசாக புன்னகைத்தனர். பின் கபாலிடம் கை கொடுத்துவிட்டு.. “குமரன் இருக்க பயம் எதற்கு..” என்றார்,  வந்தவர்   சிரித்தபடியே. குமரனும் நன்றாக இவரோடு பேசினார். கபாலி பார்வையாளன் மட்டுமே.

அப்போது ஆதிகேசவன், கபாலியின் அருகில் வந்தார்.. குமரன் “உங்க அப்பாவின் ஆரம்பகால எதிரி இவர்.. இவர் கிட்டதான் உங்க அப்பா வேலை செய்தார்.. பின்தான், உங்க அப்பா.. தொழில் தொடங்கினார்.. அதானல், கொஞ்சநாள்.. உங்க அப்பாவை தொழில் ரீதியாக நெருக்கினார். அதெல்லாம் ரமணன் சர் சமாளிச்சு ஜெயித்தார்..” என்றார்.

கபாலிக்கு எதிரி என்ற வார்த்தைதான் மனதில் பதிந்தது. ஆதிகேசவனை உற்று பார்த்துக் கொண்டான். 

ஆதி “எப்படி இருக்கப்பா..” என்றார்.

என்னமோ குழப்பத்தில்  இருந்த கபாலிக்கு.. அவரின் அனுசரணை அன்று புரிந்தது போல.. இன்று, புரியவில்லை போல.. தலையசைத்தான்.. அவர் எதோ பேச வருவது புரிய, கபாலி “குமரன் அண்ணா.. போலாமா” என்றவன், ஆதிகேசவனை பார்த்து வணக்கம் என விடைபெரும் விதமாக, வணங்கி கிளம்பிவிட்டான்.

ஆதிகேசவனுக்கு வருத்தமாக போனது. இப்படி ஒரு இளையவன்.. அதிலும், தன் நண்பரின் மகன் செய்வான் என எதிர்பார்க்கவில்லை அவர். முகம் வாடி போனார் ‘நல்லது செய்ய வந்தால்.. என்னமோ போ..’ என தோன்றியது. அமைதியாக  தன் காருக்கு சென்றுவிட்டார்.

Advertisement