Advertisement

நான் உன் நிறையன்றோ!..

2

முத்துகுமார்.. அவரின் தம்பி என இருவரும்.. இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்கள், எனவே, அன்றிரவே வீடு சென்றுவிட்டனர். மகேஷ்வரியின் அக்கா குடும்பம்.. ரமணனின் அக்கா குடும்பம் மட்டும் இவர்களுக்கு துணை இருந்தது.

மறுநாள் காலையில் ஒரு ஏழுமணி போல.. வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு  வெள்ளை வேட்டி கட்டியவர்கள் இறங்கி வந்தனர்.. கபாலி இன்னும் எழுந்திருக்கவில்லை. வீடே அமைதியாக இருந்தது. 

மகேஷ்வரி, அவரின் நாத்தனார் வீட்டுகாரர் வாசலில் அமர்ந்திருந்தார். இவர்களை பார்த்து..  துக்கம் கேட்க வந்தவர்கள் என தன் மனைவியை அழைத்து ‘கபாலியை எழுப்பு’ என சொல்லி, அவர்களின் வரவை பார்த்து தலையசைத்தார்.

ரமணனின் அக்கா வீட்டுக்காரார்.. தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு பேசத் தொடங்கினார். அவர்களும், தாங்கள் எங்கிருந்து வருகிறோம் என சொல்லி பேசத் தொடங்கினர்.

பின் கபாலி வரவும் கபாலியை அறிமுகம் செய்து வைத்தார்.. அவனின் மாமா. அவர்களும் “உங்களைதான் பார்க்க வந்தோம்..” என்றனர்.

பின் காரிலிருந்து பத்திரம் எதோ எடுத்து வந்தனர். ரமணன், தன் பெயரில் இருந்த.. ஏக்கர் கணக்கிலான நிலத்தை அடமானம் வைத்து கோடியில் பணம் வாங்கி இருந்தார், ஐந்து வருடம் முன்பு. அதற்கு வட்டி சேர்த்து.. இப்போது அத்தனை கோடியும் இரு மடங்காகியிருந்தது. அந்த நிலம் இப்போதும் அவ்வளவு தொகைக்கு போகாது. அதனால்.. அந்த நிலத்தின் விலை போக மற்றதை.. கொடுக்க வேண்டும்.. அதற்கு அக்ரீமென்ட் போட்டு வந்திருக்கிறோம்.. இந்த நேரத்தில் கேட்க கூடாதுதான்.. ஆனால், வேறு வழி எங்களுக்கு இல்லை..’ என ஒரு பத்திரத்தை காட்டினர். பணத்தை கேட்கவில்லை.. ஆனால், ‘அந்த கடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது’ என மகன் மூலம் உறுதி செய்துக் கொள்ள வந்திருந்தனர்.

கபாலிக்கு இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்.. என அதிர்ச்சி. அவனின் மாமாதான் “சரிங்க.. இத எல்லாம் பேசலாம்.. படிக்கிற பையன் அவன், இங்க.. என் மச்சானின் மேனேஜர் வந்திடுவார்.. இருங்க, நாங்களும் செக் செய்திட்டு.. இதை பற்றி பேசறோம்” என்றார் பொறுமையாக. அவர்கள் சொன்ன விவரங்களை எல்லாம் வாங்கிக் கொண்டார்.

வந்தவர்களும்.. தங்களின் கார்ட் கொடுத்துவிட்டு நாளை வருகிறோம்.. இல்லை, நீங்களே அழைத்து சொல்லிவிடுங்க.. இல்லை, எங்களின் நடவடிக்கை வேறுமாதிரி இருக்கும்.. என பொறுமையாக பேசிவிட்டு கிளம்பினர்.

கபாலிக்கு, பொறுமையாக எடுத்து சொன்னார்.. அவனின் அத்தை வீட்டுக்காரர். கபாலிக்கு தன் தந்தை ‘அப்படியா கொடுக்காமல் இருந்திருப்பார்’ என தோன்ற, தன் மாமாவிடம் கேட்டான் “ஏன் மாமா, அப்பா என்ன இத்தனை வருஷமாக வட்டியை கூடவா.. கொடுக்காமல் இருந்திருப்பார்.. எங்க அந்த டாக்குமென்ட்..” என்றான்.

அத்தையின் வீட்டுக்காரர்.. அதை எல்லாம் படித்து பார்த்தார்.. “நாமதான் ஏதாவது ரெசிப்ட் இருக்கான்னு பார்க்கணும்.. எங்க, குமரன்.. வந்தால் செக் பண்ணலாம். நீயும் ஆபீஸ் போயிட்டு வாப்பா.. என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க.. கொஞ்சம் கவனமாக இருப்பா.. என்னமோ தப்பாக படுகிறது”  என்றார் அப்போதே.

ரமணனின் தொழில் வியாபாரம் பற்றி.. சொந்தங்களுக்கு  தெரியவில்லை.. புரியவில்லை. சொந்தங்கள் எல்லாம் கவர்மென்ட் வேலை.. சிறிய அளவினான வியாபாரம் எனத்தான் இருந்தனர். வசதி வாய்ப்புக்கு.. குறைவில்லை. ஆனால், ரமணன் போல.. தொழிலதிர்பர்கள்.. இல்லை. எனவே, அதுகுறித்து பேசுவார்களே தவிர, அதன் நெளிவு சுளிவுகள் தெரியாது. இப்போதும் அப்படியே.. ரமணனின் மாமாவிற்கு, ‘என்ன இவ்வளவு கடனா.. என்னதான் செய்தான் ரமணன்.. பாவம், இந்த பையன்.. என்ன செய்வான்.’ என பரிதாபம்தான் தோன்றியது.

ஒருமணி நேரத்தில் முத்து அவரின் குடும்பத்தோடு வந்தார். அப்படியே, அவரின் தம்பியும் வந்தார். எல்லோரிடமும் விஷயத்தை சொன்னார்.. ரமணனின் மாமா.

அன்றும் ஆண்கள் கூடி கூடி பேசினார்.

மறுநாளே நெருங்கிய உறவுகளும் கிளம்பினர். அந்த பெரிய வீடே.. தன் தந்தை இல்லாமல் வெறிச்சோடி போனதாக உணர்ந்தாள் ஜெயந்தினி. எங்கும் தந்தை நிற்பது போலவும்..  அமர்ந்திருப்பது போலவும்.. நடப்பது போலவும் இருந்தது அவளுக்கு. அன்னையிடம் பேச பயம்.. எங்கே அன்னையை தான் பேசி கஷ்ட்டப்படுத்தி விடுவோமோ.. என எண்ணம். அதனால், அன்னையிடம் ஏதும் பேசாமல் இருந்தாள் பெண். தம்பி.. அவன் எப்போதும் ஒதுங்கியே இருக்கிறான். ஏனோ உண்பது கூட தனியாகத்தான்.. முன்பு இருந்த கபில் இல்லை இப்போது என ஜெயந்தினி பேசுவதில்லை அவனிடம். ஆக, அவளின் உலகம் தனியானது.

ஜெயந்தினி CA படிக்கிறாள். கபாலிக்கும் இவளிற்கும் இரண்டு வயதுதான் வித்யாசம். 

கபாலிக்கு நண்பர்கள் அழைத்து பேசினார். யாரும் வந்து அவனை பார்க்க முடியவில்லை. ஆனால், எல்லோரும் ஆறுதலாக.. அழைத்து பேசினர். ஊள்ளூரில் இருந்த பள்ளி தோழன் தந்தையோடு வந்து பார்த்து சென்றான்.

இப்படியே நாட்கள் சென்றது கபாலிக்கு. அவனுக்கு,தன்  தந்தையின் யோசனையே நீண்டது. தன் தந்தையின் குவாரி.. எத்தனை என தெரியாது. தங்களின் ஹோல்சேல் ஷோவ்ரூம் மட்டும் தெரியும். அங்கு செல்லலாமா என யோசித்துக் கொண்டே இருந்தான். அன்று மிரட்டிய கடன்காரர்கள் பற்றி, குமரனிடம் சொல்ல.. அவர் தான்  பார்த்துக் கொள்வதாக சொன்னார் அன்று.

அதன்பின் குமரன் வரவில்லை வீட்டிற்கு. கபாலியும் வீடு,  அம்மாவை தேற்றுவது.. சடங்குகள் செய்வது என இருந்துவிட்டான்.

அடுத்த இரண்டு வாரம் சென்றது.

ரமணனின் பதினாறாம் நாள் காரியம் முடிந்தது, இன்று. மிக நெருங்கிய உறவுகள் மட்டும் கொண்டு எளிமையாக காரியம் செய்துக் கொண்டனர்.

அன்று இரவு.. ஜெயந்தினிக்கு அழைத்தான் வசீகரன். இருவரும் பள்ளியில் சீனியர் ஜூனியர்ஸ். அப்போதே அவளின் மேல் நாட்டம் உண்டு வசிக்கு. தெரியும் ஜெயந்தினி யார்.. அவர்கள் குடும்பம் என்ன.. என எல்லா விவரமும் தெரிந்து வைத்துக் கொள்வான் வசி, இப்போதுவரை.

வசீகரன் இப்போதுதான் இந்த இரண்டு மாதமாகத்தான் தங்களின் பிஸினெஸ் பார்க்கிறான். MBA, ஹைட்ரபாத்’தில் படித்தான். கொஞ்சநாள் வீட்டிலிருந்தான்.. ஊர் சுற்றினான். பின் தானாகவே வந்து தன் தந்தையின் தொழிலில் பங்கெடுத்துக் கொண்டான். அவனுக்கு தெரியும்… எங்கே வேலைக்கு சென்றாலும்.. தங்களின் தொழிலை விட முடியாது என்பது உறுதி. அதனால், இப்போதே அதை பழகலாம்.. என வந்துவிட்டான். 

வசீகரனுக்கு, பள்ளி பருவத்திலிருந்து ஜெயந்திநிதான் மனதிலிருந்தாள். அதை அவனால், உதற முடியவில்லை. அத்தோடு.. நம்ம ஊர் பெண்.. அப்பாவின் நண்பர் பெண்.. எப்படி இருந்தாலும்.. என் விருப்பம் நிறைவேறும்.. என உறுதியாக அவன் நம்பினான். அதனால், இயல்பாய் வேறு யாரும் அவனின் கவனத்தை ஈர்க்கவில்லை போல.

என்னமோ வசிக்கு, தன்மீதே ஒரு ப்ரமிப்பு. எப்படி பள்ளியில்  தொடங்கிய ஒரு ஈர்ப்பு இத்தனை  வருடம் என்னுள் இருக்கிறது.. என பிரமிப்புதான். இப்போதெல்லாம், அடிக்கடி அவளை பார்ப்பான்.. வசி. கல்லூரி படிப்பை.. அவள் சேலத்தில் படித்தாள். அது முடிந்ததும் CA கிளாஸ் இங்கேதான் சேர்ந்திருந்தாள். அதனால், அவள் செல்லும் வகுப்பின் நேரம் தெரிந்துக் கொண்டு.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூரத்திலிருந்து ஒருமுறை பார்த்து செல்வான்.

மேலும் அவளின் போன் நம்பர் வாங்கி இருந்தான்.. பள்ளி FB ப்ரெண்ட்ஸ் மூலம். ஆனால், பேசும் தைரியமும் இல்லை. ஒரு காரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆனால், அன்று பார்த்த அழுகை முகம் அவன் மனதில் இருந்தது. ‘அவள் அந்த நிலையில் வேறு எப்படிடா.. இருப்பா’ என காதல் கொண்ட இன்னொரு மனம் எதிர்த்து கேள்வி கேட்டது. ‘ம்..’எனாவ்த்துக் கொண்டான் வசி.

என்னமோ ஜெயந்தினி, தைரியமானவள் என்ற பிம்பம்தான் அவன் மனதில். ஆனால், அன்று தந்தையின் மரணத்தில், அவளின் அனாதரவான நிலை.. வசீகரனை தாக்கியது.

பள்ளி பருவத்தில்.. அவளின் தைரியம் தான், அவனை நெருங்க விடாமல் செய்திருந்தது.  அதனால், அப்போது எதையும் பகிரும் தைரியம் இல்லை அவனுக்கு. அவள் ஸ்கூல் டாப்பர். எல்லாவற்றுக்கும் முன் நிற்பாள். அவள் படிப்பை.. புத்திசாலித்தனத்தை.. பிடிக்கும் என்பதை விட அவள் விளையாடுவது.. மிகவும் பிடிக்கும், வசீகரனுக்கு. 

அவள் கோகோ விளையாடும்  போது.. தன் வகுப்பிலிருந்து திருட்டுதனமாக பார்ப்பான். இவனிற்கு விளையாட்டு என்றால்.. பயம். அவள் கண்கள், ஒடுபவரை குறிவைத்து.. காலில் வேகம் கொண்டு துறத்தும் அந்த வீறுகொண்ட  முகம் அவனுக்கு பிடிக்கும். படிப்பிலும்.. அவள்  செர்டிபிகேட் வாங்கிக் கொண்டே இருப்பாள்.. எந்த போட்டி என்றாலும்.. அவள் பெயர்.. முதல் அல்லது இரண்டாமிடத்தில் ஒலிக்கும். அந்த பரிசை வாங்க வருவாள். அப்போது அவளின் முகத்தில் சந்தோஷமோ.. பெருமையோ ஏதும் இருக்காது. கொடுப்பவரை பார்த்துக் கொண்டு ‘தேங்க்ஸ் சர்..’ என சொல்லிவிட்டு.. அலட்டிக்காமல் சென்றுவிடுவாள். அப்படி ஒரு திமிர் பிடித்தவள்.. இல்ல, தைரியம் பிடித்தவள் என செல்லமாக சொல்லிக் கொள்வான்.. அதனால், இப்போது அவளின் அழுகையான சோக முகம் அவனை சங்கடப்படுத்தியது. எப்படியோ.. அவள் ‘எனக்கானவளா தெரியாது..’ ஆனால், அவளின் துக்கத்தை கூட நான் பகிர்ந்துக் கொள்ள வேண்டாமா என தைரியம் வந்துவிட்டது வசிக்கு.

இப்போது, இவன் அழைத்ததும் யாரென தெரியாமல் எடுத்தாள் ஜெயந்தினி “ஹலோ..“ என்றாள், மெல்லிய குரலில்.

Advertisement