Advertisement

அறையின் கதவு திறந்தே இருந்தது.. மெல்ல போனில் ஒளியில் பாக் வைத்தாள். அறையின் விளக்கை போடவில்லை. உடைமாற்றும் அறைக்கு சென்றாள். பின், அமைதியாக ரெஸ்ட்ரூம் சென்றாள்.. உடைமாற்றிக் கொண்டாள்.. மனம் கொஞ்சம் அமைதியானது, கணவன்  எழவில்லை என. ‘அவர் எழவில்லை.. இப்படியே தூங்கிடனும்’ என உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்து.. அந்த வெளிச்சத்திலேயே கட்டிலில் அமர்ந்தாள், சத்த்மல்லாமல்.

இப்போது கபாலி, கதவை திறந்துக் கொண்டு.. உள்ளே வந்தான். இயல்பாக விளக்கை ஒளிர்வித்தான். திடுக்கிட்டாள் பெண்.

ஷார்ட்ஸ் டி-ஷர்ட்ஸ்சில், அறையின் வாசலை அடைத்துக் கொண்டு ‘நெடுமால்’ போல நின்றான் கபாலி.  

அஹ.. மூச்சடைத்தது பெண்ணுக்கு. அரக்கனை கண்ட அடிமையாக மிரண்டு, அனிச்சையாய் தன்  அருகாமையை பார்த்தாள்.. மயூரா. அங்கே உண்மையாகவே கபாலி இல்லை.  அதான் எதிரில் நிற்கிறானே. பெண்ணவள், என்ன செய்வது என தெரியாமல்.. அமைதியாக அமர்ந்தாள்.

கபாலி கூலாக உள்ளே வந்தான்.. அலட்டாத நடை நடந்து, போனை டேபிள்  மேல் வைத்தான். எதோ இரைக்காக காத்திருக்கும் புலியின் கண்களாக மின்னியது.. அவனின் கண்கள். ஆனால், உடல்மொழி.. எதோ இயல்பாக அமைதியாக இருந்தது. காத்திருந்தான் போல.. இத்தனை நேரம்.

மயூராவிற்கும், நிமிர்ந்து நிற்க வேண்டும்.. எப்படியும் பேசிட வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், அவனின் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

கபாலி, கட்டிலில் அமைதியாக அவளின் எதிரில் அமர்ந்தான்.. இந்த அமைதி அவனுக்கு வராத ஒன்று, ஆனாலும், தன்னை தானே தயார்படுத்திக் கொண்டே இப்போது வந்தான். ம்.. அவனுக்கு தான் தோற்றுவிட கூடாது, அது.. தொழில் என்றாலும் சரி, இந்த திருமணம் என்ற உறவு என்றாலும்  சரி.. தோற்று நிற்க கூடாது. அதில்தான் கவனம்.  எனவே, தொழிலில் அடுத்து என்ன நடக்கும் என யோசிப்பவனாக.. இப்போது இன்று முழுவதும் அவளை எப்படி சரி செய்துக் கொள்வது என யோசித்தான். ‘அவளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம்.. தான் அழகி என திமிர். அது, என்னை கண்டால், அந்த திமிர் அதிகமாக முகத்தில் தெரியும்.. ம்..’ எப்படி சரி செய்வது.. புடவை.. நகை.. அவுட்டிங்.. ம்.. கொஞ்சம் சிரிச்சு சிரிச்சு பேசினால் போதும்.. இந்த உறவை நான் தக்க வைத்துக்கொள்ள முடியும்.. அஹ.. அவ்வளவுதான்.’ என முடிவு செய்துக் கொண்டான். 

அதனால், இப்போது அவளிடம் பேச வந்தான். ஆனால், அவனின் உடல்மொழியோ அதற்கு ஒத்துழைக்கவில்லை.. கண்கள் வன்ம்மமாகவே அவளை பார்த்தது. மாலையில் அவளுக்கு என நகை.. அழகான மயில் ஜிமிக்கி.. ஆர்டர் செய்திருந்தான். நாளை காலையில் வந்துவிடும்.  அதை சொல்லணும்.. உன் மீது எனக்கு ஒரு அக்கறை உண்டு என சொல்லத்தான் நினைத்து  காத்திருந்தான். ஆனால், இதெல்லாம் அவனின் ஆகசிறந்த புத்தியின் செயல்கள். அந்த புத்தி.. அவனின் நககண்ணில் கூட உண்டு, அதனால், அவனால்.. தன்னை மாற்றிக் கொண்டு நடிக்க முடியவில்லை. வன்ம்மாகவே பார்க்கிறான் ‘நீ என்ன அவ்வளோ பெரிய ரம்பையா’ என. அவனின் விழியில்… காலையில் தோற்றத்தன் வெறிதான் வன்மமாக மின்னுகிறதே தவறிய, காதல் தெரியவே இல்லை.

கபாலி “ஏன் இவ்வளோ லேட்” என்றான் முதல் பேச்சு வார்த்தையை இப்படிதான் கேள்வியாக தொடங்கினான்.

மயூரா “இல்ல, அத்தைகிட்ட சொல்லிட்டுதான் போனேன்” என்றாள்.

கபாலி “ம்.. சரிதான், எங்கிட்டதான் சொல்லலை. இன்னும் எத்தனை நாள் இப்படியே இருப்ப..” என்றான், அமர்த்தலான குரலில்.

மயூரா “என்ன கேட்க்குறீங்க..” என்றாள்.

கபாலி “ஏன் உனக்கு புரியாதா” என்றான்.

மயூரா அமைதியாக இருந்தாள்.

கபாலி இப்போது அவளை பார்த்தான்.. அவளை இதுபோன்ற நைட் உடையில்.. ஒரு த்ரீ ஃபோர்த் பேண்ட்.. டி-ஷர்ட்டில் பார்த்ததில்லை.. எப்போதும் புடவை அல்லது சுடிதான் அவளின் உடை. அதனால், இன்னும் சிறு பெண்ணாக தெரிந்தவளை பார்த்தான்.

மயூராவிற்கு என்னமோ போலானது..  அமைதியாகவே இருந்தாள்.

கபாலி “காலையில் அவசரத்தில் கிளம்பிட்ட போல..” என்றான்.

மயூரா அமைதியாகவே இருந்தாள்.

பெண்ணவளின் அமைதி. கணவனை சாந்த்மாக்கியது.

கபாலி, கைநீட்டி பெண்ணவளின் மடிமீதிருந்த அவளின் கையை பற்றினான்.. விரல்கள் மூடி உள்ளங்கைதான் அவனின் கைகளுக்கு கிடைத்து. தாமரை தண்டென மென்மையாக இருந்தது. அந்த மென்மையில்.. கபாலியின் இறுக்கம் சற்று தளர்ந்தது.

கபாலி, அவளின் விரல்களை பிரித்தான்.. கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.. வேண்டுமென்றே இறுக்கமாக மூடியிருந்தவளின் விரல்கள்.. அவளின் மனதை சொன்னது. ஆனால், மனதின் வார்த்தைகள்.. பற்றியிருந்தவனுக்கு, தேவையாய் இருக்கவில்லை. எனவே, ஒவ்வொரு விரலாக பிரித்தான் அவசரமாக. பெண்ணவளுக்கு தேகம் சிலிர்க்கத் தொடங்கியது. அவனின் இலகு பாவம் பிடித்தது. கணவனை தடுக்க முடியவில்லை.. வெடுக்கென தன் கையை இழுக்க முடியவில்லை அவளால்.. உரிமையான நெருக்கத்தில்.. சகஜமாக தன் கையை பற்றி இருப்பவனை விலக்க.. புத்தி நினைத்தாலும், மனம் விரும்பவில்லை. ‘இது இப்படிதான்.. புரிதல் எல்லாம் தானாக வரும்..’ என அவளின் மனமே அவளுக்கு வகுப்பெடுக்கிறது. ஆக, கணவனின் அலட்சியமான இந்த உறவை.. அவனின் ஆக சிறந்த அலசியத்தை.. நான் ஏற்கிறேன்..’ என  அவள் தன்னுடனேயே போராடிக் கொண்டிருக்க..

கபாலி “நான் உனக்கு, ஒரு தோடு ஆர்டர் செய்திருக்கேன்.. நாளைக்கு காலையில் வந்திடும்.. ம்.. சின்ன கிப்ட்” என்றான்.

ப்பா.. பெண் வெடுக்கென கையை இழுத்துக் கொண்டாள் கணவனிடமிருந்து. 

சட்டென கபாலி கொதிநிலை கொண்டான் உடனே “ஹேய்.. என்ன” என்றான்.

மயூராவிற்கு இன்னும் வேர்த்தது.. “அஹ.. அ..து.. கொஞ்சம் பேசி.. புரிஞ்சு..” என அவள் திணறி திணறி பேசவும்.. 

கபாலி, பொறுமையாக இருந்தான்.. என்னமோ அதிசையமாக.. அவள் பேசி முடிக்கும்வரை ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தான். அவனுக்கே அதிசியம். ஆனால், அவள் பேசி முடித்தும்  கபாலி கோவம்தான் கொண்டான்.

கபாலி “என்ன புரியணும்.. “ என்றான் அவளின் ஐந்து நிமிட பதிலுக்கு.. சின்ன கேள்வியை எரிச்சலாக கேட்டான், கணவன்.

மயூரா “இல்ல, எனக்கு உங்களை புரிஞ்சிக்க முடியலை.. உங்களுக்கு நான் மேச் ஆகுவேனா.. நீங்க என்னை, இப்படி..  ஒருத்தியை ஏத்துப்பீங்களா..  நமக்குள்.. ஒத்து  போவது.. ஒத்து போகாதது.. பிடித்தது பிடிக்காதது.. எல்லாம் தெரியனுமில்ல.. அதான், ஒரு த்ரீ  மன்த்..” என  சொல்லி கணவனின் முகம் பார்த்தாள், பெண்.

கபாலி, கோவமே என்றாலும்.. அந்த மாவடு கண்கள் தன்னை பார்க்கையில்.. அது இன்னும் தனகில்லை என்கையில்.. கோவம் வந்தது..  “என்ன புரிஞ்சிக்கனும், சேர்ந்து வாழத்தானே போறோம். அதைவிட புரிஞ்சிகிட்டா பிரச்சனைதான். நீ ஏன் லேட்.. என்னை ஏன் ஷாப்பிங் கூட்டி போகலை.. எனக்கு டைம் கொடுக்கலை அப்படின்னு.. சண்டைதான் வரும். அதனால், இப்போது இருக்கு பாரு ஒருநிலை.. அதான், நீ உன்வேலையை பார்.. என் வேலையை.. நான் பார்க்கிறேன்.. எங்காவது வருஷத்துக்கு ஒரு தரம் ட்ரிப் போயிட்டு டைம் ஸ்பென் செய்துட்டு வந்திடுவோம்.. ஏதாவது வேணும்ன்னா.. கார்டு தரேன்.. வாங்கிக்க.. எனக்கும் தோணும் போது.. இந்த மாதிரி, நேத்து ஆர்டர் செய்த்தது போல.. ஆர்டர் செய்றேன் சிம்பிள்.. வேற என்ன புரியணும்.. இன்னும் உனக்கு” என்றான் மாறாத அலட்சிய பாவமானக் குரலில்.

மயூராவிற்கு புத்தியும் மனதும் நிசப்தம் கொண்டது.. சற்று  நேரம். கண்மூடிக் கொண்டாள் பெண். ‘எனக்கு திருமணத்தின்போது இதுதானே எண்ணம்.. எப்போது மாறியது.. இப்படி வேறாய்’ என அடுத்த ஷனம் தோன்றியது பெண்ணுக்கு.

கபாலி “இங்கபாரு மயூரா, ஈசியான வாழ்க்கையை காம்ப்ளிகேட் செய்துக்காத.. நமக்கு இந்த குடும்பம்.. பெரியவங்க.. எல்லாம் முக்கியம் என்பதால்தான் இந்த திருமணம் நடந்தது. அவங்களுக்காகதானே நடந்தது. அது தோற்க கூடாதில்ல.. நாமும் சரியாக இருக்கணும், வாழனும்.” என்றான் அக்கறையாக.

மயூரா எழுந்துக் கொண்டாள் “ம்.. ஆனால், எனக்கு உங்ககூட ஒத்துவருமா தெரியலையே.. திடீர்ன்னு என்னை கூட்டிட்டு போயிட்டீங்க, திடீர்ன்னு கல்யாணம் உங்ககூட. நடுவில் நீங்க என்கூட பேசவேயில்லை. என்னை நீங்க பார்க்க கூட இல்லை. நான் உங்க வீட்டுக்கு, கல்யாணம் செய்து  வந்திருக்கேன்.. அப்போது கூட.. என்கிட்டே பேசவேயில்லை நீங்க. இப்படி ஒன்னுக்கு ஒன்னு ஓட்டவேமாட்டேங்குது.” என்றாள் கவலையாக.

கபாலி “அதனால..” என்றான்.

மயூரா “இருங்க..” என்றவள் தொடர்ந்தாள் “பெரியவங்களுக்காக கல்யாணம் செய்துகிட்டீங்க.. அதெல்லாம் சரிதான். இந்த காரணங்கள் எத்தனை வருடம் இருக்கும். என.. எனக்கு என்னமோ உங்க நிலையில்லாத செயல்கள்.. நீங்க இயல்பானவர் இல்லைன்னு என்  மனது சொல்லுது.. உங்க மேல.. பயம்தான் வருது. அதாவது, உண்மையை சொல்லனும்ன்னா.. ஒரு இயல்பான நமபிக்கையையும்.. பாதுக்காப்பையும் உங்கிட்ட நான் பார்க்கலை.. அதனால்” என பெண்ணவள் எழுந்துக் கொண்டாள் 

கபாலி, அலட்சியமாக சிரித்தான் “அஹ.. தப்பிக்க காரணம்.” என்றான் நக்கலாக.

மயூரா அமைதியாக அவனை பார்த்தாள். வலிதான் அவனின் பேச்சு.. மனையாளுக்கு.

கபாலிக்கு, அந்த மாவடு கண்கள் சுருங்கி விரிந்ததில்.. என்னமோ செய்ய   “மூணு மாசத்தில் என்னை பற்றி தெரிஞ்சிடுமா உனக்கு. அப்படி நான் சரியில்லைன்னா.. விட்டுட்டு போயிடுவியா, இல்லை, திருத்த போறியா” என்றான், எங்கோ பார்த்துக் கொண்டு, அலட்சிய சிரிப்போடு கேட்டான்..

மயூரா தடுமாறி போனாள்.. கணவனின் அலட்சியத்தில். ஆக, அவன் அன்புக்காக நிற்க போவதில்லை.. என புரிந்தது. அமைதியாக நின்றாள்.

கபாலி அலட்சிய குரலில் “என்ன இப்போ.. த்ரீ மன்த் டைம் கேட்க்கிற.. உன்னை நீ ஷேர் செய்துக்க. அவ்வளவுதானே. டேக் இட்.. பொதுவாக, கபாலி யாருக்கும் எதையும் விட்டே கொடுக்கமாட்டான். எடுத்துக் கொண்டுதான் பழக்கம். ஆனால், இந்தமுறை நீ என்னமோ கேட்கிற.. எதோ சொல்ற. இதெல்லாம் சரிவராது. ஆனால், என்மேலும் தப்பிருக்கு,   அதனால் விட்டு தரன். ஒன்திங்.. எப்படி இருந்தாலும்.. நீ என்னை விட்டு போக முடியாது என் கௌரவம் முக்கியம் எனக்கு. ம்.. நீ என்னை எப்படி புரிஞ்சிக்கிற பார்க்கிறேன்.” என்றான் முடிக்கும் போது தனக்கே உண்டான அழுத்தமான குரலில்.

“பறவையின் சிறகுகள் 

விரிந்தால்தான் வானத்தில்..

அது பறக்கும்.. காத்திருந்தால்தான் 

இருவருக்கும் காதல் 

அதிகரிக்கும்..”

Advertisement