Advertisement

நான் உன் நிறையன்றோ!

15

தனிமை என்பது நாமாக எடுத்துக் கொண்டால்தானே அமைதியை தரும்.. நம்மை ஒருவர், அதுவும்.. வாழ்நாள் துணை என பற்றிக் கொண்ட ஒருவன்.. நிமிர்ந்தே பார்க்காத போது.. அவமானமாக உணர்ந்தாள் மயூரா. உறக்கமே வரவில்லை, அவளுக்கு. அவன் அருகில் படுத்திருக்கிறான் என்பது.. வெறுப்பாக இருந்தது.. என்னமோ, தோற்றுப்போன உணர்வு. வாய் திறந்து பேசினால்.. சண்டையிடலாம்.. கோவிக்கலாம்.. கல் மண் போல  அமைதியாக இருப்பது.. இப்படி கணவனே ஆனாலும் பேசாமல் இருப்பது..   இந்த நேரம் அவளுக்கு பிடிக்கவில்லை. ம்.. தோற்பது எப்படி பிடிக்கும். 

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தாள். கபாலிக்கும் அதே நிலைதான். ஆனால், இருவரும் பேச வில்லை. இயற்கை, உடல் அசதி எல்லாம் சேர.. மயூரா நன்றாக உறங்கினாள், சற்று நேரத்தில். கபாலிக்கு அவ்வளவு எளிதில் உறக்கம் வரவில்லை. எதோ யோசனை.. ஆனால், எல்லாம் அவள்மயம்தான்.

இயல்பான இரவு நேர வெளிச்சத்தில் அமைதியாக தன்னருகில் உறங்கும் ஜீவனை பார்வையால் வருடினான்.. கபாலி. அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தாள்.. முகம் தெரியவில்லை.. உடலின் எந்த பாகமும் அவன் கண்ணில் படவில்லைதான். அவன் சொல்லுவது போல.. அவனை இம்சிக்கவில்லை அவள். அதனால், இவனும் இம்சையாகவில்லை.

கோவம், வருத்தம், கர்வம் என ஏதுமில்லை அவனிடம் இப்போது.. ‘உறங்கும் போது அவளின் பெரிய கண்கள் எப்படிதான் இருக்கும்.. திறந்தே உறங்குவாளோ.. அவளின் விழிகளை.. முழுவதும் மூடிடுமா இமை..’ என எதோ பெரிய யோசனை தன்போல, கபாலி.

வெகுநேரம் அவளின் மூக்கில் அணிந்த மூக்கு.. அன்று மேலுதடு வேர்க்க நின்றிருந்த நிலை என ஏதேதோ அவளின் எண்ணம்தான் அவனுள். கண்கள் தாமாக மூடிக் கொண்டது.. கனவிலும் அவள் முகம்.. கபாலி அழுத்தமாக இல்லாமல்.. தளர்ந்து உறங்கினான்.

காலை

மணி ஏழு. மகேஸ்வரி நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும் அல்லாட தொடங்கினார். இன்னும் மகனும் மருமகளும் எழுந்து வரவில்லை. போனில் அழைப்பு விடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே அங்கே இருந்த தன்னுடைய நாத்தனார் தம்பதி, தன் கணவருடைய அண்ணன் அண்ணி, ஆக நால்வருக்கும் காபி கொடுத்து பேசி கொண்டிருந்தார்.

மகேஸ்வரியின் நிலை, அங்கிருந்த இரு பெண்களுக்கும் புரிய.. கிட்சென் வந்தனர் பெண்கள் மூவரும். மகேஸ்வரியின் நாத்தனார் “என்ன அண்ணி, என்ன பிரச்சனை.. ஏன் ஒருமாதிரி இருக்கீங்க..” என்றார்.

மகேஸ்வரி “ஒண்ணுமில்லை..”  என்றார்.

மகேஸ்வரியின் ஒர்படி “இன்னும் மகனையும் மருமகளையும் காணோமேன்னு இருக்கும்” என்றார்.

மகேஸ்வரி நெளிந்தார். அவரின் நாத்தனார் “என்ன அண்ணி, இந்த காலத்தில் இதெல்லாம் பார்த்துகிட்டு.. நாம டிபன் வேலையை பார்ப்போம்.. அடுத்து நம்ம பெண்ணும் மாப்பிளையும் இங்கே விருந்துக்கு வராங்கல்ல.. சமைக்க ஆள் வந்தாச்சா.. வாங்க, வேலை இருக்கு, வாங்க இரண்டு அண்ணியும்” என இழுத்து சென்றார் தன் அண்ணிகளை.

ஆக இன்னும் கபாலியும் மயூராவும் எழுந்து வரவில்லை.

கபாலி, இப்போதுதான் எழுந்துக் கொண்டான்.. குளித்து முடித்தான். தனது உடையை மாற்றிக் கொண்டு.. தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்து பார்த்தான்.. இன்னுமும் மயூரா எழுந்திருக்கவில்லை. அப்படியே கலையாமல் படுத்திருந்தாள் பெண்.

கபாலிக்கு, நேற்று இரவு.. வந்த சந்தேகம் இப்போதும் எழ.. ‘அந்த பெரிய விழிகளை இமை முழுவதும் மூடிடுமா’ என தோன்ற.. கையில் வாட்சி அணிந்துக் கொண்டே.. அவளின் கால்மாட்டில் நின்றான், கட்டிலின் அருகில் கூட இல்லை.. நான்கடி தூரமாக நின்றான். ம்கூம்.. தெரியவில்லை அவளின் முகம்.. 

இப்போது அவளின் அருகில் வந்து பார்த்தான்.. ‘அஹ.. அவனின் இதழ்கள் கர்வமாக விரிந்தது’ ம்.. இங்கும் கர்வம்தான். அஹ.. அவன் எண்ணியது சரியே.. அரை கண் திறந்துதான் இருந்தது.. அந்த பெரிய விழிகளை.. அவளின் இமைகள் முழுவதும் மூடவில்லை. கபாலிக்கு தன் கணிப்பு சரியே என கர்வம் வந்தது. அது இன்னும் அவனின் முகத்தில் ஒளியை தந்ததது. அப்படியே சிரித்துக் கொண்டே.. கதவை சத்தமாக அடித்து சற்றிவிட்டு கீழே இறங்கினான். அவள், எழுந்து கீழே வரவேண்டுமே எனவே, அப்படி அடித்து சாற்றினான்.

அவனின் செய்கை வீண் போகவில்லை. மயூரா எழுந்துக் கொண்டாள். அவள், நேரம் பார்க்க, எட்டு. அடித்து பிடித்து எழுந்தாள் ‘இவ்வளவு நேரமாகவா தூங்குவேன்.. அம்மா ஒரு போன் செய்து எழுப்பி இருக்கலாமில்ல..’  என தன் அன்னையை திட்டியபடியே.. அவசர அவசமாக குளித்து கீழே வந்தாள்.

கீழே பெரியவர்கள் மட்டுமே இருந்தனர். கபாலி வரவேற்பறையில், அமர்ந்து தன் பெரியப்பா மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தான். ‘ஜெயந்தினியும் மாப்பிள்ளைக்கும், இன்று மறுவிருந்து.. அவர்கள் காலை உணவு முடித்து வருவர். நீங்கள் நால்வரும் சென்று, நம்ம குலதெய்வத்தை தரிசித்து வந்திடுங்க.. பிறகு.. பொங்கல் பூஜை எல்லாம் வைச்சிக்கலாம் ப்பா.. நாங்க இங்கே.. பார்த்துக்கிறோம்’ என அவனின் பெரியப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது மயூரா இறங்கி வந்து நின்றாள். பக்கவாட்டில் மனையாளின் வருகை தெரிந்தது.. கபாலிக்கு. சட்டென யாரும் அவளை கவனிக்கவில்லை. அதனால், மயூரா என்ன செய்வது என தெரியாமல் நின்றாள். அங்கிருந்து அவளை நோட்டம்விட்டுக் கொண்டிருந்த கணவனுக்கு.. ‘முதல்முறை ஐயோ நிக்கறாளே.. யாருமே அவளை பார்க்கலையா..’ எனத்தான் முதலில் தோன்றியது.

ஆனாலும், அவனின் அரக்க குணம் உடனேயே ‘நேர உள்ளே போக வேண்டியது தானே.. கையில் காபி வரணுமா’ என எண்ணிக் கொண்டு, மீண்டும் தன் பெரியப்பா பக்கம் பார்வையை திருப்பினான்.

இப்போது கபாலியின் உடல்மொழியில்.. அவனின் பெரியப்பா திரும்பி பார்த்தார்.. அங்கே, மயூரா நிற்கவும் “வா மருமகளே..” என்றார், சத்தமாக.

திடுக்கிட்டு திரும்பினாள் மயூரா.. லேசாக புன்னகைத்தாள். 

பெரியப்பா “குட் மோர்னிங் ம்மா” என்றார்.

மயூராவிற்கு வாய்வரவில்லை எப்போதும் போல. 

கபாலிக்கு, ஈகோ தலை எடுத்தது ’அதென்ன பெரியவர் விஷ் செய்யகிறார்.. அப்படியே நிக்கிறாள்.. ஜஸ்ட் ஏதாவது சொல்லாமில்ல.. அப்படியா பேச வராது..’ என எண்ணி அவளையே முறைத்தான்.

அந்த முறைப்பில்.. மயூரா  ‘எல்லோரின் எதிரிலும் எப்படி முறைக்கிறான்’ என வேகம் வந்தது அவளுக்கு. அவனை பார்க்க கூடாது என எண்ணிக் கொண்டே.. பெரியப்பாவின் வாழ்த்திற்கு, மயூரா தலையசைத்து, அவரின் அருகில் வந்தாள், பெண். 

இப்போது பெரியம்மா வரவும்.. மயூரா, அவரின் அருகில் சென்று நின்றாள்.  அந்த முதிய பெண்மணியும் “உள்ள வாம்மா.. காபியா.. பூஸ்ட் ஏதாவது குடிப்பியா” என வினவியபடியே உள்ளே கூட்டி சென்றார்.

‘அப்படா’ என பெருமூச்சு எழுந்தது மயூராவிற்கு.. சின்ன குரலில் “காபி அத்தை” என்றாள்.

மகேஸ்வரி, தன் மருமகளை லேசாக ஆராய்ந்தார்.. டென்ஷனாக இருப்பதாக தோன்றியது மாமியாருக்கு. ஸ்வீட் செய்துக் கொண்டிருந்தார்.. மகேஸ்வரி. அதனால்,  இயல்பாக அவளை “மயூ, இங்க வா.. பைனாப்பிள் கேசரி.. நெய் போதுமா பாரு.. இனிப்பு திகட்டுதா பாரு..” என ஊதி ஊதி ஒரு ஸ்பூன் இனிப்பை எடுத்து.. மருமகளுக்கு ஊட்டினார், அவளின் கவனத்தை மாற்றும் பொருட்டு.

மயூரா புன்னகை முகமாக வாங்கிக் கொண்டாள்.. மெதுவாக மென்றுவிட்டு அவளின் பெரிய கண்கள்.. அழகாக இன்னும்  விரிந்தது.. ‘சூப்பர்’ என கைகாட்டினாள் பெண். பின் மெதுவாக “அத்தை.. எனக்கு பைனாப்பிள் ப்ளேவர் ரொம்ப பிடிக்கும்.. ஸ்வீட் கரெக்ட்டா இருக்கு..“ என பொறுமையாக பேசினாள். வார்த்தைகள் நிதானித்துதான் வந்தது. ஆனால், குரல் குழந்தையின் குரல் போல.. இருந்தது. கொஞ்சி கொஞ்சி பேசினாள் பெண். அதை கேட்கவே.. ‘இவ திட்டினால் கூட அவனுக்கு உரைக்காது போலவே.. கொஞ்சர மாதிரி இருக்கு’ என எண்ணிக் கொண்டார் மாமியார்.

மயூராவிடம்  காபி கொடுத்தார் அத்தை. அதை அங்கேயே கீழே அமர்ந்து ஊதி ஊதி குடித்தாள் பெண். சட்டென இவள் கீழே அமரவும் எல்லோரும் பார்த்தனர்.. அத்தை “ஏன் ம்மா.. என்னாச்சு.. அங்க, சேரில் உட்கார்” என்றனர்.

மயூரா பொறுமையாக காபியை தன் பதத்திற்கு ஊதி ஊதி குடித்தாள்.. நடுவில் “இல்ல அத்தை  சூடா இருக்கு.. நீங்க எல்லோரும் இங்க இருக்கீங்க அதான்” என மீண்டும் கொஞ்சி கொஞ்சி பேச.. அத்தைக்கும் மகேஸ்வரிக்கு குழந்தையாக தெரிந்தாள் பெண். பெரியம்மாதான் ‘இதென்ன இப்படி திக்குது.. அதில் கொஞ்சல் வேற.. அய்யேய்யா..’ என எண்ணிக் கொண்டார் மனதிற்குள்.

அவளை பற்றி பெண்மணிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.. இவளும் கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டு, அபிநயம் பிடித்தாள் அதிகம் பேசாமல். 

கபாலி “அம்மா.. சாப்பிடலாமா”  என உள்ளே எட்டிப் பார்க்க.. இவளை ரசித்தபடி தன் அம்மா நிற்பது தெரிந்தது. இவள் எதோ பழகிய வீடு போல.. கால்களை நீட்டி அமர்ந்திப்பதும்.. கதை கேட்பதுமாக இருக்க.. கபாலி இப்போது முறைத்தான் மனையாளை.

மயூரா தன் மாமியாரின் பார்வை சென்ற திக்கை பார்க்க.. அங்கே கணவன் நிற்கவும்.. மயூரா அனிச்சையாக கால்களை  மடக்கி அமர்ந்துக் கொண்டாள்.

கபாலி ‘அந்த பயம் இருக்கனும்’ என எண்ணிக் கொண்டு “அம்மா சாப்பிடலாமா” என்றான்.

எல்லோரும் உண்பதற்கு தேவையானவற்றை கவனித்தனர்.

பெரியவர்கள் “கபாலி மயூ.. இரண்டு பேரும் முதலில் சாப்பிடுங்க” என அமர் வைத்து உணவு பரிமாறினர். மயூரா, ஏதும் சொல்லாமல் கபாலியின் அருகே அமர்ந்தாள்.. நேற்று போல.. தயங்கி எல்லாம் அமரவில்லை. இயல்பாக சட்னி சாப்பிட்டு.. ‘சூப்பர்’ என தனக்கு பரிமாறிய அத்தையிடம் கை காட்டினாள். கேசரி வேண்டும் என கைகாட்டி போட்டுக் கொண்டாள். இப்படி இயல்பாக பெண்களிடம் ஒட்டினாள், பெண்.

கபாலி ‘என்னம்மா.. சீன் போடுறா’ என எண்ணிக் கொண்டு உண்டான். அடிக்கடி அவளை முறைத்தான். அவனுக்கு பரிமாறுவதை விட.. மயூராவை  கவனிப்பதுதான் நிறைய நடந்தது. அதில்தான் கபாலிக்கு கொஞ்சம் காண்டு.

அதன்பின் கபாலி மயூராவின் அருகில் கூட வரவில்லை. மயூராவின் வீட்டில் இருந்து எல்லோரும் பெண்ணை பார்க்க.. மகனின் மறுவிருந்துக்கு என வந்தனர். மயூரா, பொறுப்பாக தன் அன்னை தந்தையை “வாங்க” என வீட்டு மருமகளாக அழைத்தாள். பெற்றோருக்கு அதை பார்க்க ஆனந்தமாக இருந்தாலும்.. பெற்ற பாசத்தில் கண்கள் நனைந்தது. அதை தொடந்து இன்பமான நிகழ்வுகள்தான்.. பேச்சும் சிரிப்புமாக இருந்தது அந்த இடம்.

அடுத்து, நால்வரும் கபாலியின் குலதெய்வக் கோவில் செல்ல கிளம்பினர். வசீகரனுக்கு, கபாலியோடு, காரில் செல்ல பிடித்தமில்லை.. எனவே, “நீங்க உங்க வண்டியில் போங்க.. நாங்க எங்க வண்டியில் வருகிறோம்” என வாசல் வந்து சொன்னவன், நிற்காமல் காரின் அருகில் சென்றுவிட்டான், வசீகரன்.

ஜெயந்தினி ‘என்னாச்சு’ என தெரியாமல் தன் தம்பியை பார்த்தாள். அவளுக்கு ‘திருமணத்தின் போது கூட நன்றாகத்தானே இருந்தார் இப்போது என்ன.. என் தம்பியின் முகத்தை பார்க்காமல் கூட போறாங்க..’ என எண்ணிக் கொண்டாள்

கபாலி “அக்கா, ப்ரைவசி க்கா.. எங்களுக்கு கொடுக்கிறார்.. நீ போ.. ஜெய்” என்றான், தம்பியாக அமைதியான குரலில். அவனுக்கு தெரியுமே.. தன்னை பிடிக்காது வசீகரனுக்கு என. அதனால் தானும் சென்று தன் கார் எடுத்தான்.

மயூரா இப்போதுதான் வெளியே வந்தாள். அவளுக்கு, என்ன நடந்தது என தெரியாமல்.. தன் அண்ணனும் அண்ணியும் இருந்த காருக்கு சென்றாள்.. இப்போது கபாலியின் கார் ஹாரன் சத்தம் சின்னதாக கேட்டது.

ஜெயந்தினி “மயூ.. நீ என் தம்பி கூட  வா டா.. அவன் ரெடியாக நிக்கிறான் பாரு” என சிரித்துக் கொண்டு சொன்னாள். வசீகரன், எதையும் கண்டுக் கொள்ளாமல் அமர்ந்துக் கொண்டான். என்னமோ ஜெயந்தினிக்கு.. தன் வசீகரனே புதிதாக தெரிந்தான், இப்போதெல்லாம். தன்னிடம் சிரிக்கிறான்.. பேசுகிறான்.. ஆனால், தன்னை நெருங்கவில்லை. ஆனால், வீட்டாரோடு, அதிகம் பேசுவதில்லை ஒட்டுவதில்லை.. என்னமோ ஒருமாதிரி தெரிகிறான் வசீகரன், ஜெயந்தினிக்கு. இந்த நாட்களில் ஏதும் புரியவில்லை.. இருவருக்கும் பொறுமையாக அளவளாவ.. நேரம் இருக்கவில்லை. தன் கணவனிடம் எதையும் கேட்க்க நேரம் அமையவில்லை. ஆனால், அவனின் மாற்றம் புரிகிறது. அதனால், இப்போதும் சமாளித்தாள்.

வசீகரன் முன்னால் சென்றான்.. அவனுக்கு இடம் தெரியும். எனவே, சென்றான்.

அங்கே, மயூரா தன் கணவனின் காரில் ஏறி அமர்ந்தாள். கபாலி வண்டியை எடுத்தான். வேண்டுமென்றே பொறுமையாக வண்டியை செலுத்தினான். அவனின் மாப்பிள்ளை ஊர்வலம் கூட.. இவ்வளவு பொறுமையாக சென்றிருக்காது போல.. பொறுமையாக சென்றான்.

மயூரா கணவனை பார்த்தாள்.. ‘ஏன் இப்படி போறீங்க’ என கேட்க்கும் விதமாக. 

கபாலி, அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல்.. பொறுமையாக அவளை வெறுப்பேற்றி, கோவிலை அடைந்தனர் இருவரும்.

வசீகரனும் ஜெயந்தினியும் முன்னரே வந்திருந்தனர். கபாலி, காரிலிருந்து இறங்கி.. வேட்டியை இடது கையில் பிடித்துக் கொண்டு.. தன் அக்கா மாமாவை கண்டுக் கொள்ளாமல் நேராக சன்னதி நோக்கி சென்றான்.

பூசாரி வந்தார்.. பூஜைக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வைத்திருந்தார். கபாலியிடம் அனுமதி கேட்டு பூஜையை ஆரம்பித்தார். கபாலி, சுவாமி சன்னதியின் இடது புறம் நிற்க.. மற்ற மூவரும் வலதுபுறம் நின்றனர்.

கபாலி, முதலில் கவனிக்கவில்லை.. கண்மூடி சுவாமியை த்யானித்துக் கொண்டிருந்தான்.  மணி சத்தத்தில் கண் திருந்து பார்த்தவன்.. மனையாள் எதிரில் நிற்பதை பார்த்து, யோசிக்காமல் “மயூரா” என்றான் முதல்முறை, அதிகாரமாக. 

அவளும் நிமிர.. கண்ணால்.. தன் அருகாமையை காட்டினான், கணவன்.

ஜெயந்தினியும், அவன் அழைப்பில் கண் திறந்து விட்டிருந்தாள். அதனால், தம்பியின் கண் ஜாடை புரிய.. அவளும் “மயூ.. போ..” என்றாள்.

மயூரா, கணவனின் அருகில் வந்து பதுமையாக நின்றாள். 

திவ்யமாக தீபாராதனை தரிசனம் முடிந்தது. வெளியே வந்து மாலை மரியாதை எல்லாம் நடந்தது, முறையாக. 

கோவிலில் அமர்ந்தனர்.. சின்ன திட்டு போன்ற ஒரு இடத்தில். கபாலி போனை எடுத்துக் கொண்டு.. அந்தபக்கம் சென்றுவிட்டான். 

இப்போது மூவருக்குள்ளும் பேச்சு சென்றது.. ஆரம்பத்தில் வசீகரன் ‘இடம் பழகிடுச்சா..  பேசு டா.. தயங்காதே..’ என ஆரம்பித்து சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜெயந்தினி “போதும் உங்க அட்வைஸ்.. இது அவள் வீடு.. சொல்லு.. எப்படி பேசறான் என் தம்பி” என்றாள்.

மயூரா, தலையை குனிந்துக் கொண்டாள்.

வசீகரன் “இது மட்டும் என்னவாம்.. இதுவும் போர்தான்” என்றான் இரு பொருள்பட.

அதில் மயூரா சிரித்தாள்.. ஜெயந்தினிக்கு தன் கணவன் மேல் கோவம் வந்தது, முறைத்தாள்.

வசீகரன் மனையாளின் முறைப்பை பார்த்து.. “பாருடா.. கோவத்தை.. உங்க அண்ணி, இன்னிக்கு ஒருவேளை பார்த்தாள்” என நமுட்டு சிரிப்போடு ஆரம்பித்தான்.

மயூரா என்னவென கண்களை விரித்து கேட்க.. வசீகரன் சொல்ல தொடங்கினான்  “பெரியப்பாக்கு, ப்ளாக் காபின்னு தெரியாமல்.. பாலில் காபி கொடுத்துட்டா.. அவரும் மருமகள் முதல் தரம் கொடுத்திருக்காளேன்னு குடிச்சிட்டார். அதிலிருந்து ஏப்பம்.. பெரிய பெரிய ஏப்பம்.. பெரியம்மா பயந்து போய்.. சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.. உங்க அண்ணி முகத்தை பார்க்கணுமே.. அழுதிருப்பா..” என சொல்லி சிரித்தான்.

மயூராவும்.. சிரித்தாள். அருகில் வந்துக் கொண்டிருந்த கபாலிக்கு, மனையாளின் சிரிப்பு என்னமோ செய்தது,  அங்கேயே நின்றான். 

மயூரா, தன் அண்ணன் பேச பேச, சிரித்தாள்.. அப்படியே புன்னகைமுகமாக அமர்ந்துக் கொண்டிருந்தாள். ஜரிகை இல்லாத மெஜந்தா வண்ண பட்டு.. பெரிய ஜிமிக்கைகள்.. கண்களில் அளவான மை.. உதடுகளில் மலர்ந்த சிரிப்பு..  அந்த சிரிப்பு நளினமாக.. அது, அவளை இன்னமும் அழகாக காட்ட.. கணவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. ‘ப்பா.. அழகிதான்’ என  இன்றே தனக்குள் சொல்லிக் கொண்டான்.

கபாலியின் மனது அவனையே பாராட்டிக் கொண்டது சட்டென ‘நல்லவேலை டா.. இவளை கடத்தின.. இல்லை, இவ மிஸ் ஆகியிருப்பா..’ என தனக்கு தானே பாராட்டு பத்திரம் எழுதிக் கொண்டது, அரக்கனாய்.

“அவள் கடந்திடும் போது.. 

தலை அனிச்சையாய் திரும்பும்..

நிச்சயமாய்.. அவள் புறமாய்..” 

என அவனுள் பாடல் ஓடியது.

இப்போது மயூரா “பெரியப்பா பயங்கரமா ஏப்பம் விடுவார்.. பயமாகத்தான் இருக்கும்.. அவருக்கு பால் தயிர் ஒத்துக்காது.. “ என சொல்லி இன்னும் புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள்.

Advertisement