Advertisement

நான் உன் நிறையன்றோ!

14

திருமணம் என்பது இரு பெண்களுக்கும் கடமையாகவே முடிந்தது. அதிலும் மயூராவிற்கு, எதற்கு ஏன் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. கபாலியின் முகம் அடிக்கடி அவளின் கண்ணில் வந்து போனாலும், அது காதலை தரவில்லை.. என்னமோ ஒரு கலக்கத்தையே தந்தது. அதை யாரிடமும் காட்டமாட்டாள்.. வாய்  திறந்து பேசவும் மாட்டாள்.. பெண். அவளின் அன்னைதான் வகுப்பிலிருந்து அவள் வந்ததும் சற்று நேரம்.. கபாலியின் குடும்பம் பற்றி பேசுவார்.. பின், ‘அந்த காலத்து கலையாணம்ன்னு நினைச்சிக்க டா, போக.. போக.. உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கும்.. எல்லோரும் சொல்ற வார்த்தைதான், கண்டிப்பாக காலம் மாறும். அவர் ஒன்னும் தப்பானவர் இல்லை.. அதை மட்டும் மனதில் வை.. போதும்’ என பல வார்த்தைகளை சொல்லி தேற்றுவார்.

மயூரா அப்போதெல்லாம் கோவம் கொள்ளமாட்டாள், அவளிற்கு குடும்பம்.. கௌரவம்.. உறவு.. என்பதின் மேல் பற்று உண்டு. தன் குடும்பம் தனக்கு நல்லதுதான் செய்யும் என ஆழமான நம்பிக்கை உண்டு பெண்ணுக்கு. எனவே, தன் அன்னையின் வார்த்தைகளை நம்புகிறாள். ஆனால், நடைமுறை என்ற ஒன்று உண்டே.. ம்.. யாராக இருந்தாலும்.. வீட்டார் சொன்னால், திருமணம் செய்துக் கொள்வேன்.. எனத்தான் இருந்தாள்.. இருக்கிறாள். ஆனால், வானத்திலிருந்து குதித்தவன் போல.. ஒருமாதம் முன் தன் வாழ்வில்.. எங்கிருந்தோ வந்துவிட்டான்.. அந்த அரக்கன். எனக்கு அத்தை பையனோ மாமா பையோ பழகிய வீடு உறவு.. என இருந்தேன்.. இவன், இராட்சன் போல.. எல்லாவற்றையும் மாற்றி.. என் நடு வாழ்வில் குதித்து.. பிரளயம் செய்கிறான்..’ என தோன்றும்.. மனது பதறும். 

“ராமன்னா ராமன்..

ராவணன்னா ராவணன்..

ரெண்டுதேன். .ராம்ன்தேன்

ராவணன்தேன்”

ஆனால், அன்னையின் வார்த்தைகள்.. தந்தையின், மெல்லிய.. ஆறுதலான.. தலை கோதல் எல்லாம்.. ‘ஒன்றுமில்லை.. திருமணம்தான்..’ என அவளை திடப்படுத்துகிறது. அந்த திடத்துடனேயே பென்தாலியும் வாங்கிக் கொண்டாள்.. கபாலியிடமிருந்து.

திருமணம் முடிந்து மாலையில் கபாலியின் வீடு வந்தனர் மணமக்கள். முறையாக விளக்கேற்றுதல்.. பால்பழம் உண்ணுதல் என சம்ப்ரதாயம் எல்லாம் முடிந்தது. அடுத்த ஷணம் தன் கணவனை காணாமல்.. சுற்றிலும் தன் விழிகளை சுழலவிட்டாள் மயூரா. அவனை காணவில்லை,அந்த பெரிய ஹாலில். பெண் தானும் எழுந்துக் கொண்டாள்.. “அண்ணி..” என ஜெயந்தினியை அழைத்தாள்.

ஜெயந்தினி இப்போது வீட்டு பெண்ணாக.. வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள். மயூரா அழைக்கவும் “என்ன வேணும் மயூ. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறியா?.. வா..” என்றாள்.

மயூரா “இல்ல, என் லக்கேஜ்.. என் ட்ரெஸ்சஸ் எங்க இருக்கு.. எந்த ரூம்.. நான் கொஞ்சம் ட்ரெஸ் மாத்திக்கவா..” என்றாள்.

ஜெயந்தினிக்கும் தெரியவில்லை.. மணி இப்போதே இரவு நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.. சாந்தி முகூர்த்தத்திற்கு வேறு புடவை மாற்ற வேண்டும்.. எனவே பெரியவர்களை..கேட்டு வருவதாக சொல்லி சென்றாள்.

ஜெய்ந்தினியும் தன் பெரியம்மா.. அம்மாவிடம் வந்து கேட்க.. அவர்களும் “சாந்திமுகூர்த்த புடவையை மாற்றிக் கொள்ளட்டும்.. கொஞ்ச நேரம் அங்கேயே இருக்கட்டும்.. துணைக்கு யாராவது பிள்ளைகளை வைத்துவிட்டு, நீ கீழே வா” என்றனர்.

ஜெயந்தினி வந்து தன் அத்தை.. மாமியாரிடம் பொறுப்பாக சொல்லி, மயூரா, மயூராவின் சித்தி இருவரையும் அழைத்துக் கொண்டு.. மேலே சென்றாள்.

கீழே இருந்த கபாலியின் அறை மேலே  மாற்றப்பட்டு விட்டது. புதிதாக சில மாறுதல்கள் செய்துக் கொண்டான் கபாலி.. பாத்ரூம் புதிதாக்கிக் கொண்டான். அதன் அருகில் கொஞ்சம் இடம் விட்டு, தன் மனையாள் உடைமாற்ற ஏதுவாக.. ஒரு ஏற்பாடு செய்துக் கொண்டான். அடுத்து.. பெரிய புது கட்டில்.. அறைக்கு புது வண்ணம்.. மின்விளக்குகள்.. பெரிய டிவி.. என மார்டனாக மாற்றிக் கொண்டான்.

ஜெயந்தினி தன் தம்பியின் அறைக்கு கூட்டி வந்தாள்.. “மயூ, நீ இங்கேயே ரெஸ்ட் எடு.. டின்னெர்க்கு, நான் வந்து கூட்டி போறேன். சரி, சின்ன அத்தை.. பார்த்துக்கோங்க.. நான் கீழே போறேன்” எனசொல்லி கீழே வந்தாள்.

மயூராவிற்கு அந்த அறை குழப்பத்தை தந்தது. ‘ஏன் இந்த அலங்காரம்.. அண்ணன், அவனுக்கு திருமணம் எனும் போது கூட.. புதிதாக அறையை மாற்றிக் கொள்ளவில்லை.. இவனுக்கு இந்த திருமணத்தில் அவ்வளவு ஆர்வமா.. ஏன் இந்த மாற்றம்..’ என குழப்பத்தைத்தான் தந்தது. ‘அந்த அறையை ரசித்து.. இது எங்கள் அறை’ என ஏற்க முடியவில்லை அவளாள்.

மயூராவின் சித்தி.. ஏசியை ஆன் செய்தார்.. “மயூ, குளிச்சிடு” என்றார்.

மயூராவிற்கு அந்த இரவை நினைத்து ஒரு நடுக்கம் வந்தது.. இந்த அறையை பார்த்ததும். அவனின் எண்ணம்தான் என்ன என கேள்வி வந்தது. இப்போது தன் சித்தி வேறு.. இப்படி சொல்லவும், அப்படியே அந்த கட்டிலில் அமர்ந்தாள், கலக்கமாக.

தனது உடைமைகள்.. பெட்டி பெட்டியாய் இருந்தது. அங்கே ஒரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தாள் மயூரா. இனம் புரியாத கலக்கம் அவளை சூழ்ந்துக் கொண்டது.. திருமணம் என்றால்.. என்ன நடக்கும்.. என தெரியும் அவளிற்கு. ஆனால், அவனின் பார்வையால் கூட என்னை மதிக்காதவனிடம் எப்படி என்னை  கொடுப்பது, அது கணவனே ஆனாலும்..’ என நடுக்கமாக இருக்கிறது பெண்ணுக்கு.

ம், மயூராவை இன்னும் கபாலி, மரியாதையாக கூட பார்க்கவில்லை. நேற்று தன் அக்காவின் திருமணத்தின் போதும் கூட.. நாளை மனைவியாக போகிறவளை.. நிமிர்ந்து பார்க்காமல் அங்கே மேடையில் நின்றான் கபாலி. மயூரா அடிக்கடி.. கபாலியை பார்த்தாள்.. தன்னை பார்க்கிறானா.. என அடிக்கடி அவனை பார்த்தாள் பெண். ஆனால், தன் அக்காவின் கழுத்தில் தாலி ஏறும் போது அங்கு நின்றான் அவ்வளவுதான். அதன்பின், கீழே இறங்கி சென்றுவிட்டான். தொழில், நட்பு வேலை என அவனின் நேரம் சென்றது.

மயூரா வாடித்தான் போனாள்.. ஆனால், மனதுள்.. ‘அம்மா அப்பா சொல்லுவது போல திருமனமானால் சரியாகிடும்’ என்ற எண்ணம் வந்தது. ஆனால், இன்று, இந்த நொடி.. வரபோகிற முதல் இரவை நினைத்து அவளின் மனம் அல்லாடிக் கொண்டிருக்கிறது.. ‘என் மனம்  அவனை எப்படி ஏற்கும்..’ என தனக்கு தானே கேள்வி கேட்டது.

ஆனால், அவளின் அறிவு ‘தாலி கட்டியாச்சு.. புருஷன்.. இனி என்ன. நீ தயாராகிக்க.. கிட்டே வந்தால், கத்தி வைச்சிடாதே’ என எச்சரித்தது.

கண்கள் நீரை சொரிந்தது. அந்த அறை.. அதன் அலங்காரம்.. அதன் செழிப்பு.. எல்லாம் அவளை மிரட்டியது. அவள், வீடு இதை விட செழிப்பானது. ஆனால், குளிர்ச்சியானது. ம்.. இங்கே  இந்த செழிப்பு ‘படாடோபம்’மாக தெரிந்தது. ஒரு இதமோ.. வாஞ்சையோ..  அன்போ.. இல்லை அந்த அறையில். 

மயூரா நீண்ட நேரம்  அப்படியே அமர்ந்திருந்தாள்.  அவளின் சித்தி, பால்கனியில் நின்று போன் பேசி முடித்து.. வந்து பார்க்க.. பெண் அப்போதும் அதே இடத்தில் அப்படியே இருந்தாள்.

அவளின் சித்தி “மயூ.. போ, டைம் ஆச்சு, இப்போ,இங்க அலங்காரம் செய்ய வந்திடுவாங்க.. நீ ரெடி ஆகு..” என்றார் கொஞ்சம் அதட்டலாக.

அதன்பின் எப்போதும் போல.. பெரியவர்கள் சொன்னதை கேட்டாள் மயூரா. குளித்து மென்பட்டு கட்டி.. இதமான அலங்காரத்தில் கீழே வந்தாள். உண்பதற்காக மணமக்கள் இருவரையும்.. நேற்றைய மணமக்களோடு அமர வைத்தனர். மயூராவிற்கு உணவே இறங்கவில்லை.. தொண்டையிலேயே நின்றது, தண்ணீரை மட்டுமே அதிகம் குடித்தாள். அருகில்.. தன் கணவன் அமர்ந்திருப்பது.. என்னமோ.. பாதித்தது. காலையில் தாலிகட்டும் போது, உணரவில்லை அவனின் அருக்காமையை.. அவனின் உடல்சூட்டை.. இப்போது, தகித்தது அவனின் சூடு. 

நேரம் கடந்தது.. 

எல்லோரும் உண்டு முடித்தனர். பெரியவர்கள் மயூராவை வாழ்த்தினர். எல்லோரிடமும் ஆசீர்வாதமும் வாழ்த்தும் பெற்றுக் கொண்டாள் மயூ. மகேஸ்வரி “ஜெயம்மா” என தன் மகளை அழைத்தார்..  தன் மருமகளின் கையை அவளிடம் கொடுத்து.. “விட்டு வா” என்றார்.

மயூராவின் கைகள் சில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தது. ஜெயந்தினி, மயூவின் கையை விட்டாள் “ஏன் டென்ஷன்.. “ என்றாள். ஜெயந்தினிக்கு, என்ன சொல்லி புரிய வைப்பது.. என தெரியவில்லை. வசீகரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட எனக்கே.. நேற்று சற்று பயமாக இருந்தது. இவளுக்கு அதைவிட பயமாகதானே இருக்கும் என புரிகிறது. காதல் வந்துவிட்டாள்.. இந்த நிகழ்வு இன்பமானதாக இருக்கும் என ஜெயந்தினிக்கு புரியும். ஆனால், சொல்ல முடியாதே. இது அவரவர்.. வாழ்வியல். தனிதனி கலை.. தனிதனி சுவை. எனவே, ஜெயந்தினி “மயூ.. தம்பிகிட்ட முதலில் பேசு.. அவன் நல்லா அரட்டையடிப்பான்.. பிடித்தவர்களிடம். அதனால், பயப்படாதே. வேற என்ன சொல்றதுன்னு தெரியலை.. ஆல் தி பெஸ்ட்” என்றாள் சிரிக்க முயன்று.. புன்னகையாக மொழிந்தாள் ஜெயந்தினி.

மயூரா, சிரிக்கவும் முடியாமல்.. அழவும் முடியாமல் தலையசைத்தாள். ஜெயந்தினி விடைபெற்று சென்றாள்.

மயூரா, உள்ளே சென்றாள்.. அந்த ஹாலில் சுவர் முழுவதும் மல்லிகை சரம் தொங்கியது.. கட்டிலில் ரோஜா இதழ்கள்.. என சிம்பிள் டெக்கரேஷன். ஆனால், அப்போது இருந்ததைவிட இப்போது, இன்னும் மிரட்டியது அவளை. மிரட்டுபவன் அங்கே இல்லை. மயூராவின் கண்கள் அந்த பெரிய அறை முழுவதும் தேடியது.. அங்கே மிரட்டலானவன் இல்லை எனவும்.. தன் மேலுதட்டு வேர்வையை தன் விரலால் துடைத்துக் கொண்டாள். என்ன செய்வது  என தெரியவில்லை.. ‘அவன்.. இல்ல, அவர் வருவாரோ..’ என எண்ணி அமர்ந்தாள் அங்கிருந்த சின்ன சோபாவில். இருவர் அமர கூடிய அழகான மரவேலைபாடுகள் கொண்ட சோபா.

போன்.. தன் கையிலிருக்கிறது. அதை பார்க்க தோன்றவில்லை. அமைதியாக, அமைதியில்லாமல் அமர்ந்திருந்தாள், மயூரா.

கபாலி பால்கனியிலிருந்து போன் பேசி முடித்த தோரணையில் உள்ளே வந்தான்.. தன் கணவன் வரும் சத்தம் வர.. மயூராவிற்கு பதட்டம் எழுந்தது.. சோபாவின் இடது கைபிடியை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.. எழுந்து நிற்க.. எத்தனித்தும் விட்டாள். ஆனால், எழவில்லை.. எப்போதும் போல.. நிமிர்ந்து பாரா கபாலியின் அலட்சியம்.. அவளை இறுக்கமாக அப்படியே அமரவைத்தது. இன்னும் அழுத்தமாக அண்ட் பிடியை பற்றிக் கொண்டு அமர்ந்தாள். ‘கணவனே ஆனாலும் நிமிர்ந்து பார்த்து புன்னகை செய்யாதவனுக்கு எதுக்கு நீ மரியாதை தர..’ என தனக்குள் கேட்டுக்  கொண்டாள். அமைதியாக இருப்பது போல காட்டி அமர்ந்திருந்தாள் மயூரா.

கபாலி, போனை அங்கிருந்த பக்கவாட்டு மேசையில் வைத்தவன்.. நிமிர்ந்து மயூராவை பார்த்தான். மனைவியென காதலாக பார்க்கவில்லை..  ஆராய்ச்சியாக பார்த்தான் ‘என்ன செய்கிறாள்’ என. மீண்டும் தன் பார்வையை மாற்றிக் கொண்டவன்.. தனது கபோர்ட் திருந்து உடைகளை எடுத்தான். பின், அங்கிருந்த தடுப்பின் பக்கம் சென்று மாற்றிக் கொண்டு வந்தான்.. 

மயூரா அமர்ந்தே இருந்தாள் சங்கடமாக. எதிர்த்துக்  கொண்டு தன் போக்கில் செல்லும் பெண்ணல்ல அவள். பேசமாட்டாள்.. தன் கருத்தை சட்டென சொல்லமாட்டாள். ஆனால், இயல்பாக முதலிரவில் கணவனின் அன்பை எதிர்பார்க்கும் சராசரி பெண். இப்படி தன்னை பார்த்த கணவன்.. ஒரு வார்த்தை பேசாமல் செல்லுவது அவளை தாக்கியது. அமர்ந்தே இருந்தாள் சங்கடமாக.

கபாலி வந்தான்,  கட்டிலின் அருகே நின்றான் “ஏதாவது பேசணுமா மயூரா” என்றான் சரளமாக.

மயூரா ‘பேசிட்டனா’ எனத்தான் முதலில் நிமிர்ந்து பார்த்தாள். ஆனால், கணவனின் பார்வையில் தன்னை ஏதும் தாக்கவில்லை.. தன்னை  மலர செய்யவில்லை.. என உணர்ந்தாள் பெண். அதைவிட உணர்ச்சியே இல்லாத அவனின் கண்களை பார்த்தாள்.

கபாலிக்கு, அவளின்.. அந்த மாவடு கண்கள்.. தாக்கியது. என்னமோ உறுத்தியது.. எதுவென தெரியவில்லை.. எதோ உறுத்துகிறது. பெண்ணவளின் அதிர்ந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பிக் கொண்டான். தன் தலை கோதிக் கொண்டான்.

அவனிற்கும், அவன் ஈகோக்கும்  நடுவிலேயே போராட்டம் தொடங்கியது, மீண்டும். ம்.. இந்த போராட்டம், அவளை பார்த்த நாள்முதல் அவனிடம் உண்டு. ஆனால், அதை அவன் ஆராய்ந்து உணர்ந்து செயல்பட.. ஆதிகேசவன் என்ற மனிதர் விடவில்லை. அத்தோடு வசீகரன், என்பவனும்தான்.

அப்போது, கபாலியிடம், அவனின் திருமணத்திற்கு என சொல்லப்பட்ட காரணம் கூட ‘இது உனக்கு தண்டனை’ எனும் விதமாகத்தான் சொல்லப்பட்டது பெரியவர்களால். இல்லை, குதர்க்கங்கள் நிறைந்த இவன் அப்படி எடுத்துக் கொண்டானா தெரியாது.

அவனின் பெரியப்பா.. கபாலியிடம் திருமணத்திற்கு பேசும் போது  ‘ஒரு பெண்ணை கட்த்திகிட்டு போயிட்ட.. எப்படி அவளை இன்னொருத்தனுக்கு கொடுக்கிறது. அவங்க வீட்டில் வாழ போகும், நம்ம  பொண்ணு  மட்டும் எப்படி நிம்மதியாக வாழ முடியும். அதனால், அவளின் பேரை ‘இப்படி’ செய்த நீதான் அவளை கட்டிக்கணும். நீ தப்பு செய்திருக்க. அதனால், அதை சரி செய்.. அந்த வீடு நிம்மதியாகும்.. நம்ம பெண்ணுக்கும் நல்லது நடக்கும். உங்க அக்கா சந்தோஷமாக இருக்கனும்ன்னு நினைத்தால்.. இந்த கல்யாணமும் நடக்கணும்..’ எனதான் அவனின் பெரியப்பா சொன்னார்.

கபாலிக்கு உண்மையாகவே தெரியவில்லை ‘நானென்ன அவ்வளவு பெரிய தவறா செய்துவிட்டேன்’ என கோவம்தான் வந்தது. ‘இதென்ன இந்த காலத்தில்.. காரில் கூட்டி போயிட்டு கொண்டு வந்து விட்டுட்டேன்.. அதுக்கு, கல்யாணமே செய்துக்கனுமா.. அந்த பெண்ணுக்கு சரியாக பேச வராதாமே  அதான்,  நம்மகிட்ட கேட்க்கிறாங்க. அத்தோடு, அக்காவின் திருமணத்திற்கு நான் செய்த வேலை.. இப்படி ஒரு இக்கட்டில் நிற்கிறது. அது எதோ தப்புபோலிருக்கு.. அவங்க பெரிய இடமாச்சே.. அதனால் நம்மை கார்னர் செய்யறாங்க.  எப்படியோ அக்கா ஹாப்பி, கல்யாணம்தானே செய்துக்கலாம்..’ எனத்தான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னான். ஆனால், ஆழ்மனதில் அவளின் நடனம்.. அந்த கண்கள் மேல் ஒரு ஈர்ப்பு அவனுக்கு உண்டு. ஆனால், அதை அவன் உணரவில்லை. உணர அவனின் ஈகோ இன்னமும் இடம் தரவில்லை.

இப்போதும் ‘இந்த ரூம் எப்படி இருக்கு..’ அவனுக்கு கேட்க வேண்டும் போல இருந்தது.. ஆனால், கேட்க முடியவில்லை.. அவன் அன்பால் கேட்க நினைக்கவில்லை. அதனால், பெண்ணின் அதிர்ந்த பார்வை, அவனை தாக்க ஏதும் கேட்க முடியவில்லை அவனால். போனை சார்ஜ் போட அந்த பக்கம் நகர்ந்தான்.

இந்த அறையின் பிரமாண்ட அலங்காரம் அவளுக்காக.. செய்தான் கபாலி. ப்ரியப்பட்டு.. ‘அவளுக்கு இது பிடிக்குமா’ என  தயங்கி எல்லாம் செய்யவில்லை. ‘உங்க வீடு போலதான்.. இங்கேயும். உனக்கு என் வீடும்.. என் அறையும்  பிடித்தே ஆகவேண்டும்.. நான் செய்தால் உனக்கு பிடிக்கும்.. நானும் நிகரானவன்’ என தன்னை தானே நிருப்பிக்க.. அவளிடம்.. தன்னை நிருப்பிக்க செய்திருந்தான் இதெல்லாம்.

மயூராவிற்கு, தான் எதோ பணியாள் போல இருப்பது பிடிக்கவில்லை. எழுந்தாள்.. அந்த பெரிய கட்டிலில் கொட்டி இருந்த.. ரோஜா மலரை.. தன் மலர் கரத்தால்.. கீழே தள்ளினாள். அமைதியாக, படுத்துக் கொண்டாள்.

கபாலி, திரும்பி பார்த்தான். ‘அவளை படுக்க சொல்லாம்’ என பார்க்க.. மயூரா படுத்திருந்தாள். ‘என்னமோ தான் சொல்லாமல் உறங்கமாட்டாள்’ என நினைத்திருந்தவன்.. தானும் வேகமாக, சென்று கட்டிலின் மறுப்பக்கம் படுத்துக் கொண்டான்.

Advertisement