Advertisement

நான் உன் நிறையன்றோ!..

13

இருபது நாளில் முகூர்த்தம். இரண்டு திருமணமும் ஒரே நாளில் வைக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள். அதனால், சேர்ந்தார் போல.. இரண்டு முகூர்த்த நாட்கள் இந்த மாதத்தில் அமையவும். அந்த நாட்களை குறித்துவிட்டனர். ஆதிகேசவன் குடும்பத்தருக்கு, தன் தங்கை மகனுக்கு நிச்சயம் ஆகிவிட்டது என தெரிந்தது முதல்.. மனதில் இனம்புரியாத பயம். அதனால், ஒருமாதத்திற்குள், நாட்கள் நன்றாக இருக்கிறது என தெரியவும்.. எதை பற்றியும் யோசிக்கவில்லை. உடனே திருமணம் என அப்போதே அங்கேயே முடிவெடுத்துவிட்டனர். 

வசீகரனுக்கு இதில்  விருப்பமே இல்லை என எல்லோருக்கும் தெரிந்தது. வீட்டில் வந்தும் வசீகரன் ”மயூவிற்கு பிடிக்க வேண்டாம்மா ப்பா” என்றான்.

ஆதிகேசவனின் அண்ணன் “என்ன வசி, இப்படி பேசற. உனக்கு ஜெயந்தினி பொண்ணோட கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. அது சந்தோஷம் இல்லையா உனக்கு. முகத்தை ஏன் இப்படி வைச்சிருக்க. அங்கிருந்து பாதியில் கிளம்பி வந்துட்ட.. நீ அந்த வீட்டின் மாப்பிள்ளை. இப்படி  பொறுப்பில்லாமல் இருக்காத. இனி நீ யோசிக்க வேண்டியது உங்கள் திருமணத்தை. இதுக்குதானே நீ ஆசைப்பட்ட.. அது நடந்திடுச்சி. அப்புறம் என்ன சந்தோஷமாக இரு.. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.

வசீகரன் விருட்டென மேலே சென்றான். அவனிற்கு, மனதே இல்லை.. தன்னுடைய திருமணம் நிச்சயம் ஆனதில். ‘எனக்காக என் தங்கை கஷ்ட்டபட வேண்டுமா’ என எண்ணம். ‘முறை தவறி நடந்தவனுக்கு எப்படின் தங்கையை கொடுப்பது.. அவனின் அக்காவிற்காக செய்தான் என்றால்.. அவன் செய்தது சரியாகிடுமா.. இவர்களுக்கு எல்லாம் எப்போத்துதான் புரியுமோ.. நாளை அவள் பிரச்சனை என வந்து நின்றாள்.. தெரிந்தே கிணற்றில் தள்ளுகிறார்கள்..’ என கோவம்.. கோவமாக வந்தது. ‘இவர்களுக்கு எப்போதும் இப்படிதான்.. குடும்பம்.. கௌரவம்..  வரைமுறை.. என எதையாவது பிடித்துக் கொண்டு.. மனதை மறந்துவிடுவது.’ என தோன்ற தோன்ற எரிச்சலாக வந்தது இங்கே இருக்கவே பிடிக்கவில்லை.. கீழே வந்தான், வசீகரன்.

அவனின் அன்னை சுமதி “சாப்பிடி டா..” என்றார்.

பதிலே சொல்லவில்லை காரெடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டான், வசீகரன்.

மயூரா அகாடமி சென்றிருந்துக்கிறாள்.. இன்னும் வரவில்லை.

மதியம் இரண்டு மணிக்கு மேல் வீடுவந்தாள், அந்த வீட்டின் பெண்ணரசி மயூரா. எல்லோரும் இவள் வந்ததும்.. ஆசையாக சிரித்தபடி வரவேற்றனர். பார்த்த மயூராவிற்கு, ‘அண்ணனுக்கு நிச்சயம் செய்துவிட்டனர் போல.. அவங்களையும் பிடித்துவிட்டது போல.. அதான் எல்லோரும் ஹாப்பி..’ என எண்ணிக் கொண்டே, கண்களை விரித்து.. புருவம் உயர்த்தி.. ‘என்ன’ என அபிநயம் பிடித்தாள்.

அவளின் பெரியம்மா “வா.. வா சாப்பிடு, உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்” என்றார்.

மயூரா, அன்னையை பார்த்தாள்.. அடுத்து தன் பெரியப்பா அப்பா சித்தப்பா என மூவரையும் பார்த்தாள்.. பெண்ணை பார்த்து எல்லோரும் லேசாக சிரித்தனர். பெண் தன் கட்டை விரலை உயர்த்தி தம்சாப் போல காட்டினாள்.

மயூராவின் சித்தப்பா “எல்லாம் ஓகே டா, அருமையான சம்பந்தம்.. நீ வா, உன்கிட்ட பேசனும்.” என்றார்.

சுமதி “போ.. ரெப்ரெஷ்ஷாகி வா..” என்றார்.

மயூரா துள்ளலாக மேலே சென்றாள்.

அதை ஆசையாக பார்த்திருந்தார் அன்னை.

மயூரா பத்து நிமிடத்தில் கீழே வந்தாள்.

மயூவிற்கு பரிமாறினார் அவளின், சித்தி. உண்டு முடித்தாள். அதற்குள், அவரின் பெரியப்பா.. தங்களின் பெற்றோர் பயன்படுத்தும் அறைக்கு, சென்றார் உறங்க..

ஆதிகேசவனும் அப்படியே சென்றார். ஹாலில் யாரும் இல்லை.

பெண்கள் ஆங்காங்கே வேலை என மேலோட்டமாக செய்துக் கொண்டு நின்றனர். 

இப்போது மயூராவின் சித்தப்பா மயூராவிடம் பீடிகையோடு விஷயத்தை ஆரம்பித்தார் “மயூ ம்மா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.” என்றார்.

மயூரா “என்ன எனக்கா..” எனதான் சைகையில் கேட்டாள்.

அவளின் சித்தப்பா “நல்ல இடம்.. ரமணன் அண்ணனை எங்களுக்கு முன்னமே தெரியும்டா.. உங்க அண்ணன், ஜெயந்தி எல்லாம் ஒரே ஸ்கூல்.. நம்ம அப்பா கூட பிஸினெஸ் பார்த்தார் ராம் அண்ணன். அதற்கு பிறகுதான் தனியா தொழில் செய்தார். நம்ம பேர் சொல்லி.. நம்ம கஸ்டமர்கிட்ட பேசுவார். அதெல்லாம் தொழில். நன்றாக வந்தார். அந்த பிள்ளைகள் எல்லாம் நமக்கு பழக்கம்.. அதனால், சம்பந்தம் நல்லபடியாக முடிந்தது” என்றார்  இப்போது.

மயூரா கேட்டுக் கொண்டாள்.. ஏன் சொல்லுகிறார் என புரியவில்லை. ஆனால், அமர வைத்து சொல்லும் போது.. பெண் வீட்டை நாம் ஏதும் நினைக்க கூடாது என சொல்லுகிறார் என எண்ணினாள். தலையாட்டினாள்.

பின் மீண்டும் அவரே “உ..னக்கு இன்னும் அந்த அரவிந்த் மேல்.. ஏதாவது சாஃப்ட் கார்ன் இருக்கா.. இல்ல, இவ்வளோ நடந்த பிறகும், அத்தை.. நம்ம கிட்ட ஏதும் கேட்களை.. அரவிந்த்’க்கு வேறு இடத்தில் அடுத்த வாரம் நிச்சயம்..” என்றார்.

மயூரா எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.. ‘அதனால் என்ன’ என தன் சித்தப்பாவை பார்த்தாள்.

இப்போது திடம் வந்தது மயூராவின் சித்தப்பாவிற்கு.. சின்ன  குரலில்.. ”அந்த கபாலியை பற்றி என்ன நினைக்கிற” என்றார்.

இந்த வீட்டில் பிறந்த பெண்ணுக்கு, இந்த வார்த்தையை கேட்ட பிறகு.. உள்ளுணர்வு இல்லாமலா போகும்.. கண்களை சுருக்கி.. கேள்வியாய், சித்தப்பாவை பார்த்தாள் பெண்.

அவளின் சித்தப்பா சந்தோஷமாக சிரித்தார்.. புன்னகை முகமாக “எல்லாம் நல்ல விஷயம்தான் டா.. கபாலியை உனக்கு கேட்டாங்க.. எங்க எல்லோருக்கும் சந்தோஷம். பெண் கொடுத்து, பெண் எடுப்பதில் எங்களுக்கு சந்தோஷம்.. இப்போ நீ சொல்லு, நாங்க என்ன செய்யட்டும்” என்றார்.

வயது பெண்ணிடம் பேசும் கலை, மயூராவின் சித்தப்பாவிற்கு தெரிந்திருந்தது. அதான் பொறுப்பை.. பெண்ணிடமே விட்டார். கல்யாணத்திற்கே நாள் குறித்து வந்துவிட்டனர். இருந்தும் உன் வார்த்தைதான் முக்கியம் என்பது போல.. பெண்ணின் முடிவை இப்போதே கேட்டார்.

மயூரா அமைதியாக சித்தப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘நம்ம வீட்டில் பசங்களை கேட்டு, முடிவெடுக்கும் பழக்கமெல்லாம் இல்லையே.. அண்ணனுக்கே சம்மதம் சொல்லலையே.. அவர் என்னை கூட்டி போய் கார்னர் செய்யவும்தானே.. ஒத்துகிட்டாங்க.. இப்போது மட்டும் என்னிடம் ஏன் கேட்க்கிறாங்க’ எண்ணிக் கொண்டே பார்த்திருந்தாள்.

மயூராவின் சித்தப்பா “என்ன டா.. யோசனை” என்றார்.

மயூரா “எனக்கு என்ன தெரியும் சித்தப்பா.. எல்லாம் நீங்கள் சொல்லுவதுதான்.  ஏன் என்னாச்சு” என்றாள்.. தன் மொழியில்.

மயூராவின் சித்தப்பா “க்கும்.. இந்த நம்பிக்கை போதும் டா.. அப்புறம் நாளைக்கு உன்னை, பெண் பார்க்க வராங்க.. கபாலி வீட்டிலிருந்து. ஈவ்னிங். நீ நாளைக்கு எங்கும் போக வேண்டாம், ரெஸ்ட் எடு.. ம்.. சரியா.. உனக்கு பிடிக்கும். அவன் பாசகார முரடன்.. அவ்வளவுதான். நாளைக்கு, பேசு, அவர்கூட.. ம்.. “ என்றார்.

மயூரா எப்படி உணர்கிறாள் என அவளுக்கே புரியவில்லை.. தன் சித்தப்பாவை விடுத்து.. தன் அன்னையை பார்த்தாள் பெண். அன்னையின் சிரித்த முகம் பார்க்க.. எழுந்துக் கொண்டாள்.. பெண். விருப்பு வெறுப்பு என எந்த உணர்வும் அவளை தாக்கவில்லை. மயூரா “சித்தப்பா, நான் மேலபோறேன்..” என்றவள் மேலே சென்றுவிட்டாள்.

மயூராவின் சித்தப்பா இப்போது தன் அண்ணன்களிடம் பேச சென்றார்.

மயூராவிற்கு படுக்கும் எண்ணமேயில்லை.. அரவிந்த் முகம் இப்போது நினைவிலேயே இல்லை. அரவிந்த்தான் இவளுக்கு மாப்பிள்ளை என சிறுவயதில் பேசியதில்லை. ஆனால், அத்தைகள் இருவருமே.. மயூராவை மருமகளே எனத்தான் அழைப்பர். எப்படி இருந்தாலும், இரண்டு பேரில், யாரோ ஒருவர் வீட்டுக்கு வருவாள்.. என எண்ணம். முதல் அத்தையின் மகனுக்கு.. மயூராவின் நட்சத்திரம் ஒத்துவரவில்லை. அதனால், வேறு இடத்தில் திருமணம் முடித்துவிட்டனர். இரண்டாவது அத்தை மகன்தான் அரவிந்த். அவனுக்கும்.. இவளுக்கும், நட்சத்திர பொருத்தம் இருந்தது.. ஆனால், சேர்ந்து வாழும் பொருத்தம் இல்லை. 

கபாலிக்கும் இவளுக்கும் நட்சத்திர பொருத்தம் கூட பார்க்கவில்லை.. ஆனால், நேரம் காலம் கூடி வந்து நிற்கிறது. 

மயூராவிற்கு முழுத்திரை. அவளிற்கு.. அந்த திரைக்கு பின்னால் இருப்பது கபாலி என தெரியும். ஆனால், அவன் எப்படிப்பட்டவன்.. இதெல்லாம் ஏன் நடக்கிறது.. எதற்கு இந்த அவசரம்.. எனக்கு ஏன் உடனே திருமணம்.. என ஏதும் தெரியவில்லை. ஒருமாதிரி, மயக்கம் தெளிந்த குழப்பத்தில் இருந்தாள்.

மாலையில் அகாடமி  கிளம்பினாள் மயூரா. யாரிடமும் ஏதும் பேசவில்லை. அவள் செல்லும் போது, அவளின் தந்தை பார்த்தார்.. மயூரா சைகையில் கிளம்புகிறேன் என சொல்லி கிளம்பிவிட்டாள்.

!@@!@!@!@!@!@!@!@!@!@!@

வசீகரன் வீட்டார், பேசி முடித்து செல்லவும்.. மயூராவை பெண் கேட்க என முறையாக கபாலியின் வீட்டார் வந்தனர். மயூராவின் வீட்டார் ”ஏன் இந்த பார்மாலிட்டீஸ்.. ஒருவருக்கு ஒருவர் தெரிந்த குடும்பம்தானே.. அ..அவர்களும் முன்னமே பார்த்துக் கொண்டார்களே..” என்றார்கள்.

ரமணனின் பெரியப்பா “நாங்கள் பெண்ணை பார்க்க வேண்டும்.. எங்கள் குடும்பம் பற்றி பெண்ணும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு சங்கடம் நிகழ்ந்துவிட்டது. எங்கள் பையன் அப்படி ஒன்றும் முரடன் இல்லை.. நாங்கள் வருகிறோம், பெண்ணும் பார்க்கட்டும். இது முறைதானே” என பிடிவாதமாக கபாலியோடு சென்று பெண் பார்த்தனர் அவர்கள் வீட்டார்.

ஆதிகேசவனுக்கும், அவரின் அண்ணனுக்கும் திரும்ப திரும்ப சந்தோஷம். ரமணனின் மீது நல்ல ப்ரியம் அபிமானம் கொண்டவர்கள்தான் இவர்கள். ஆனால், கபாலியின் மீது இதுவரையில் அப்படி ஒரு நல்ல எண்ணம்  வந்ததேயில்லை. ஆனால், ரமணனின் குடும்பத்தார் மீது, இந்த நிகழ்வால்.. நல்ல எண்ணம் வந்து சேர்ந்தது பெண்ணை பெற்றவர்களுக்கு.

ஜெயந்தினி வரவில்லை. கபாலி பெண் பார்க்க வந்திருந்தான். எந்த குற்றவுணர்வும் இல்லை அவனுக்கு. நிமிர்ந்தே வந்தான். அன்றுபோல.. இன்று வேட்டி இல்லை, ஒரு சாப்ட் காட்டன் ப்ரௌவுன் பேண்ட்.. சாண்டல் நிறத்தில் ஒயிட் நிற ஸ்டைஃப் த்ரெட் வொர்க் செய்த ஷர்ட்.. நான்தான் மாப்பிள்ளை என வந்து நின்றான் நடு ஹாலில்.

ஆதிகேசவனுக்கு உள்ளுக்குள் கோவம்.. தாங்கல்.. ‘என்ன திமிர்.. கொஞ்சமாவது, தப்பு செய்தவன் மாதிரியா இருக்கான்’ என தோன்றியது. ஆனாலும், வருங்கால.. இல்லையில்லை, மாப்பிள்ளை ஆகிற்றே “வாங்க மாப்பிள்ளை” என்றார் தன்மையாக.

கபாலி, சிரித்த முகமாக.. ஏற்றுக் கொண்டான் “எப்படி இருக்கீங்க” என்றான் அதிராத அன்பு குரலில். அங்கிருந்த எல்லோரையும் பார்த்து வணக்கம் என மரியாதை நிமிர்ந்த்தமாக கைகூப்பினான். வசீகரனை பார்த்து “மாமா எப்படி இருக்கீங்க..” என முறையாக விசாரித்து, வசீகரனின் அருகில் சென்று நின்றான்.

வசீகரனுக்கு வெடித்து சிதறும் நிலை. அங்கிருக்கும் எல்லோருக்கும், கபாலி என்ன செய்தான்  என தெரியுமே. அதனால், அதிர்ச்சி.. எப்படி நடிக்கிறான் பாரு’ எனத்தான் முதலில் தோன்றியது.

இப்போது, ‘மாப்பிள்ளை’ என அழைத்து, அவர்கள் அமர சொல்ல.. நடுநாயகமாக அமர்ந்துக் கொண்டான், கபாலி. எல்லோருக்கும்.. அவனின்  தன்மையை ஏற்க கொஞ்சம் நேரம் ஆனது.. இதை எதிர்பார்க்கவில்லை அவர்கள்.. என முகமே சொன்னது, சின்ன அமைதி அங்கு. 

இப்போது மயூராவின் பெரியப்பா “டீ காபி சாப்பிடலாங்க” என்றார், தன் வீட்டு பெண்மணிகளிடம் எடுத்து வரசொன்னார்.

ரமணனின் அண்ணன் பொதுவாக பேசத் தொடங்கினார். கபாலி எந்த இடத்திலும் கலந்துக் கொள்ளவில்லை.. கேட்டவர்களுக்கு பதில் சொன்னான்.

மயூரா வந்து நின்றாள்.. சம்பர்தாயமாக. கபாலி ஒரு ஷணம் அவளின் கண்களை பார்த்தான்.. அது நிலம் நோக்கி இருந்தது. உதடுகளை பார்த்தான்.. இறுகி இல்லை.. கீழுதடு லேசாக வளைந்து இருந்தது.. கபாலி அதில் என்ன கண்டானோ.. அவளிடமிருந்து தன்னை மீட்டுக் கொண்டான். காபியை பருகும் சாக்கில்.. தன் அம்மாவோடு பேச தொடங்கி விட்டான்.

இப்போது மீண்டும் லக்னபத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதை தொடந்து.. தட்டு மாற்றிக் கொண்டனர் பெரியவர்கள். மயூரா உள்ளே சென்றாள்.

பத்திரிக்கை மண்டபம் என பேச்சு சென்றது. கபாலியின் பெரியப்பா பேசினார். ஆனால், கபாலி காதில் சொல்லிக் கொண்டிருந்தான் எல்லாம். கல்யாணம் பொண்ணு வீட்டு செலவு என்றனர்.. கபாலி பெரியப்பாவிடம் சரி என்றான்.  பத்திரிக்கை இருவீட்டார் அழைப்பு என்றனர்.. இப்படி எல்லாவற்றுக்கும் கபாலி ஒத்துக் கொண்டான். 

இன்று.. மயூராவின் கழுத்தில் ஏதும் போடவில்லை. அவர்கள் ஜெயந்தினிக்கு தங்களின் பாரம்பரிய வளையல் என ஒன்றை போட்டுவிட்டனர். எனவே கபாலி இப்போது “புடவை எடுக்கும் போது.. அ..வங்களுக்கு பிடித்தா மாதிரி.. நகை வாங்கிடுங்க பெரியப்பா.. வைரம் பிடிக்கும்ன்னா.. வாங்கிடுங்க..” என்றான் சபையிலேயே.. நாங்கள் அன்று போடுவோம் என்பதாக சொல்லிவிட்டான். தன் அன்னையை திரும்பி பார்த்தான்.. மகேஸ்வரி சிரித்தார், ஏதும் சொல்லவில்லை.

அமைதியாக விழா முடிந்தது. அன்று வசீகரன் வீட்டார் உண்ணவில்லை, சந்தர்பம் சரியாக இல்லை.. நாள் குறிக்க உடனே ஜோதிடர் வந்தார். பேச்சு நிறைய இருந்தது. எனவே, நேரம் அமையவில்லை. இன்று கபாலி வீட்டாரை நிச்சயம் முடிந்ததன் காரணமாக கை நனைக்க சொல்லி அப்போதே அழைத்துவிட்டனர். எனவே, பந்தி நடந்தது. கபாலி அமைதியாக உண்டு.. ஆதிகேசவன் மற்றும் ஆண்களிடம் வந்து.. “என்ன செய்யணும்.. சொல்லுங்க.. அக்காவிற்கு நீங்க நினைக்கும் எல்லாம் செய்வேன்.. அதை தவிர வேறு என்றாலும் சொல்லுங்க.. செய்திடறேன். மண்டபம் நானும் பார்க்கிறேன்.. நீங்களும் பாருங்க.. எல்லாவற்றுக்கும் பெரியப்பாவிடம் கலந்துக் கொள்ளுங்கள்.. எதற்கும் தயங்காமல் என்னை  அழைக்கலாம் மாமா” என சொல்லி விடைபெற்று சென்றான்.

வேலைகள் மடமடவென நடந்தது.

முதல்நாள், வசீகரன் ஜெயந்தினி திருமணம்.. மறுநாள் கபாலி மயூரா திருமணம் என இரண்டுநாள் விழாவாக, அவர்களின் திருமணம் நடந்தது. சற்று தங்கள் ஊரிலிருந்து தள்ளி இருந்த மண்டபம். இப்போதுதான் கட்டி முடித்திருந்தனர். கபாலிக்கு தெரிந்தவர்கள். எனவே, அவசர அவசரமாக.. திறப்புவிழா நடத்தினர், இவனிற்காக. முதல் முகூர்த்தம்  இவர்களுடையதுதான். அப்படிதான்..  இந்த குறுகிய காலத்தில், இரு திருமணமும் சேர்ந்து நடக்க மண்டபம் கிடைத்தது.

புடவை எடுப்பது.. பெண்களுக்கு நகை எடுப்பது எல்லாம் பெரியவர்கள்.. ஆதிகேசவனின் குடும்பம் பொறுப்பாக இருவீட்டாரையும், அழைத்து கொண்டு சென்று.. பார்த்து வாங்கி வந்தனர்.

பத்திரிக்கை, சாப்பாடு, மண்டபம் அலங்காரம் எல்லாம் கபாலி பார்த்தான் இருவீட்டார் சார்பாக. அவ்வபோது அலங்கார வேலைகளுக்கு எல்லாம் வசீகரனை அழைத்து கேட்டுக் கொண்டான். ஆதிகேசவனுக்கு அழைத்தும் பேசினான். 

திருமண நாளும் வந்தது.. வசீகரன் இன்றுதான் கொஞ்சம் இளகி இருந்தான். ஜெய்ந்தினிக்கு புடவை எடுக்க செல்லும் போது வரவில்லை, ஏன் போன் கூட பேசவில்லை. இன்றுதான் அவளை சிவப்பு வண்ண பட்டில் மணபெண்ணாய் தனக்கானவளாக பார்க்கவும்.. கொஞ்சம் இளகினான்.

எத்தனை வருத்தம்.. துக்கம்.. கோவம்.. இருந்தாலும்.. இந்த நாள்.. கனவுகள் கைகூடும் நாள்தானே.. காதலர்களின் கனவுகள் எப்போதும் இனிமையானவை.. ரகசியமானவைதானே.. இன்று அந்த ரகசியங்களுக்கு விடை கிடைக்கும் நாளாகிற்றே.. காதலாக அவளை பார்த்தான் வசீகரன். ஜெயந்தினி அருகில் அமரும் சாக்கில்.. தன்னவனை பார்க்க.. காதலனின் பார்வை வறண்ட நிலத்தில் மழையாய் குளிர்ச்சியை தந்தது அவளுக்கு. முகம் செம்மையாக கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள் பெண்.

முதல் ஜோடியின் திருமணம் காதல் கைகூடிய குதூகலத்தில் இருந்தது,

“நெடுநாள் திருத்தோள்

ஏங்கும் நீ கொஞ்ச..

அன்பே நீயே அழகின் அமுதே..”

மறுநாள், கபாலீஸ்வரன் மயூராவின் திருமணம். கபாலி பட்டு வேட்டியில்.. வந்தவர்களை பார்த்து சிரித்தபடியே அமர்ந்திருந்தான். மயூரா சிவப்பு பட்டில் அவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.. இதமாக. கபாலி அப்போதுதான் தன் மும்பை பையரை பார்த்து வரவேற்றுக் கொண்டிருந்தான். மயூரா நல்லவேலை திரும்பி பார்க்கவில்லை.

அய்யர் மங்களநாண், எடுத்து கபாலியின் கையில் கொடுக்க.. சிரித்த முகமாக மயூராவிற்கு சூட்டினான். அவளை பார்க்கவில்லை.. போட்டோவை பார்த்துக் கொண்டு. 

மயூரா தன் குலதெய்வத்தின் நாமத்தை சொல்லியபடியே.. கண்களில் நீர் ததும்ப, வாங்கிக் கொண்டாள் அவனின் பொன்தாலியை.

“ஆஹா.. ஆஹா.. கல்யாணம்..

ஆ.. ஆ.. கல்யாணம்..

ஆச நூறு..

ஆஹா.. ஆஹா.. கல்யாணம்

ஆ..ஆ.. கல்யாணம்

கூத்த பாரு..”

.

Advertisement