Advertisement

நான் உன் நிறையன்றோ!..

11

கபாலி, தனது அன்னைக்கு அழைத்தான். தான் பெண்ணை கடத்தி, அழைத்து சென்றது பற்றி ஏதும் சொல்லவில்லை.. ‘நம்ம வீட்டுக்கு ஜெயந்தினியை.. நிச்சயம் செய்ய வராங்க. தயாராகுங்க’ என்றான்.

அன்னைக்கு அத்தனை சந்தோஷம் “நீ பேசினியா டா.. எப்படி திடிரென நடந்தது..” என்றார்.

 மகன் “வந்து சொல்றேன்ம்மா.. பசிக்கிது” என்றான்.

மகேஸ்வரிக்கு சந்தோஷம்.. எதோ  நடந்திருக்கிறது.. மகன்தான் பேசியிருப்பான்.. என எண்ணம். இப்போது பசிக்கிது என சொல்லவும் இன்னும் மகன்மேல் வாஞ்சை வந்தது “சரி, வாப்பா.. தோசை வார்க்கிறேன்.. சாதம் இருக்கு.. வா சாப்பிடு முதலில்” என்றார்.

மகனும் பேசி முடித்து போனை வைத்தான். 

அடுத்து கபாலி தன் பெரியப்பா சித்தப்பாவிற்கு அழைத்து சொன்னான்.. உடனே வீட்டுக்கு வாங்க  “இப்படி ஆதிகேசவன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வராங்க..” என பேசி வைத்தான்.

அவர்களுக்கு என்ன இது மாலை நேரத்தில் உடனே வா என்றால் எப்படி என தோன்றினாலும், ஒருநல்ல காரியம்.. எப்படி செல்லாமல் இருப்பது.  எனவே, தட்ட முடியாமல் கிளம்பினர்.

ஜெயந்தினிக்கு விஷயம் ஏதும் சரியாக தெரியாது. ஆனால், பத்துமுறை வசீகரன் அழைத்து, தன்னிடம் பேசுவதும்.. தங்களுடைய தோட்டத்து வீடு.. கடை பற்றி விசாரிப்பது.. தம்பி பற்றி கேட்பது என இருக்கவும்.. எதோ புரிகிறது.. அதுவும் தம்பி எதோ செய்துவிட்டான் என புரிகிறது.. ஆனால், இப்படி மயூராவை கடத்தியிருப்பான என சத்தியமாக எதிர்பார்கவில்லை ஜெயந்தினி. தம்பி பேசியிருக்கிறான்.. எப்படி.. என்ன செய்தான்.. என தெரியாமல் நின்றாள் பெண்.

கபாலி வீடு வரும் போதே  மாலை ஆறுமணிக்கு  மேல். வந்தவன் தனியாகவும் வரவில்லை.. தன்னுடைனேயே ஒரு பெண்ணை அழைத்து வந்தான்.

மகேஸ்வரி, வேலையாளிடம் பழம்.. இனிப்பு பூ என தேவையானவற்றை வாங்கி வரச் சொல்லியிருந்தார். எனவே, வேலையாள் வாங்கி வந்திருக்கவும் சரிபார்த்துக் கொண்டு இருந்தார்.

கிழக்கு பார்த்த வாசல் அவர்களின் வீடு.. எனவே, உள்ளே வரும் போதே.. எதிரே பூஜை அறை. நான்குநபர்கள் அமர கூடிய அறை.. அவர்களின் குலதெய்வம் அண்ணாமலையார், அந்த படம் அழகாக பெரிதாக இருந்தது. அதை சுற்றி நிறைய படங்கள்.. அதற்கு மஞ்சள் சாமந்தி பூக்களும் செம்பருத்தி பூக்களும் கொண்டு அலாங்காரம் செய்திருந்தனர். அதற்கு கீழ்  க்ரைன்ட் கல் பதித்து திட்டு போல இருந்தது.. அதில் வெள்ளி காமாட்சி விளக்கு.. அழகாக சுடர்விட.. மல்லிகையின் மணம் பரப்பும் அகர்பத்தி.. அங்கு மணந்துக் கொண்டிருந்தது. அதன் மணம் அந்த பெரிய ஹால் வரை வீசியது. அத்தோடு மல்லிகைபூ வெற்றிலை பாக்கு பழம் என அந்த ஹாலும் ஒரு விஷேச வீட்டிற்கான கலையில் இருக்க.. நீண்டநாள் சென்று இப்போதுதான் உற்சாகம் கொண்டிருந்தது, அந்த வீடு.

கபாலி முன்னேவர.. தயங்கி தயங்கி ஒரு அழகான பெண்.. அவன் பின்னோடு வருவதை பார்த்தார் மகேஸ்வரி. 

கபாலி அன்னையின் பார்வை பேதத்தை கண்டுக்கொள்ளாமல் “ம்மா.. இவங்க என் ப்ரெண்ட்..” என்றான், உள்ளே தனதறை நோக்கி சென்றபடியே.. நிற்கவில்லை மகன்.

மகேஸ்வரிக்கு பயம்.. இவனுக்கு இப்படி ஒரு பெண் தோழியா.. என ஆராய்ச்சிதான், மகன் தங்களிடமே சரியாக பேசமாட்டான்.. தன் அக்காவின் அறைக்கே செல்லமாட்டான். அவள் தொட்டு பேசினால்.. அடித்தால் கூட முறைப்பான். அப்படி ஒரு பிறவி. ம்.. அன்னைக்கு தெரியுமே. இதுவரை அவனின் நண்பர்கள் என நிறையப்பேர் வந்திருக்கின்றனர்.. பேசியிருக்கின்றனர். ஆனால், தோழி என யாரையும் அவன் வீட்டிற்கு கூட்டி வந்ததில்லை.. படிக்கும் காலத்திலேயே. அதனால் அன்னை உடனேயே கேட்டார் “டேய்.. யார் இது” என்றார். 

கபாலி  “அம்மா.. நீ அவங்களை ஜெயந்தினி ரூமுக்கு கூட்டி போம்மா, சும்மா பார்த்தேன் கூட்டி வந்தேன். விவரம் சொல்றேன்.. பசிக்குது. நான் ரெப்ரெஷ்ஷாகி வரேன்..” என பேசி தனதறைக்கு செல்ல எத்தனித்தவன் “அவங்க இன்னும் சாப்பிடல ம்மா.. ஏதாவது கொடு” என்றவன்.. தன்னையே பார்த்துக் கொண்டு வந்ததிலிருந்து ஒரே இடத்தில் நின்றுக் கொண்டிருந்த மயூராவை பார்த்து ‘போ..’ என்பதாக தலையசைத்தான்.

ம்கூம்.. மயூரா நகரவில்லை.. அவனின் சைகைக்கு இன்னும் முறைத்தாள் அவனை. மயூராவிற்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது. மனதிடம் ‘அழாதே அழாதே, யாருக்கும் தெரியாமல் உண்மையை மறைப்பவனுக்கே அவ்வளவு திடம் உனக்கென.. அழாதே.. அழுது உன் பக்க நியாயத்தை ஒன்றுமில்லாமல் செய்திடாதே’ என சொல்லிக் கொண்டாள். பெண்ணுக்கு பசி உணர்வெல்லாம் மறுத்து போகிற்று. 

மயூரா, அவன் போனில் பேசும் போது கேட்டிருந்த வரையில்.. அப்பா எப்படியும் கோவத்தில் கத்தியிருப்பார். அண்ணன் இவன் சொன்னது எல்லாவற்றுக்கும் சம்மதிருப்பான்.. பிறகு எதற்கு இங்கே வரவேண்டும்.. என் வீட்டில்தானே விட வேண்டும் என எண்ணிக் கொண்டே நின்றாள்.

மகேஸ்வரி “உன் பேரென்ன ம்மா” என்றார் இப்போது.

கபாலி, ஒன்றும் சொல்லாமல் தப்பிப்பவன் போல உள்ளே சென்றுவிட்டான்.

மயூரா ஏதும் பேசாமல் நின்றாள்.

மகேஸ்வரி “கைகால் கழுவிக்கோம்மா.. சாப்பிடலாம்.” என்றார், அதற்கும் பதில் சொல்லவில்லை மயூரா.

மகேஸ்வரி தன் மகளை அழைக்க உள்ளே சென்றார். ஜெயந்தினி புடவை கட்டிக் கொண்டிருந்தாள், ஆசையாக. 

அன்னை “இங்க பாரு.. கபிலோட ப்ரெண்ட் பொண்ணு வந்திருக்கு.. வந்து பாரு.. பேசவே மாட்டேங்கிறா..” என்றார்.

ஜெயந்தினிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி “யாரும்மா.. பொண்ணா.. ப்ரிண்ட்டா..” என அவசராவசரமாக புடவையை  கட்டிக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.

ஜெயந்தினி, மயூராவை பார்த்ததும்  அதிர்ந்தாள்.. “மயூரா… நீ.. எங்க இங்க” என தயங்கிய குரலிலேயே கேட்டாள்.

மயூரா நின்றிருந்த நிலையம்.. அவளின் வாடிய.. முகமும்.. முறைத்த கண்களும், ஜெயந்தினிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஜெயந்தினிக்கு கைகால்கள் நடுங்க தொடங்கியது. 

மயூராவின் அருகில் வந்தாள் ஜெயந்தினி “என்ன ஆச்சு ம்மா.. மயூரா சொல்லு..” என கிட்ட தட்ட கெஞ்சத் தொடங்கினாள்.

மயூரா அப்படியே நின்றாள்.

மகேஸ்வரி “என்னடி என்ன ஜெயா, யாரு” என்றார்.

ஜெயந்தினி “ம்மா.. கூப்பிடு மா அவனை.. எங்க அவன்.. இவளை எப்படி தெரியும் அவனுக்கு. கூப்பிடும்மா அவனை.. என்ன செய்தானோ.. சொல்லு மயூரா” என எல்லா பக்கமும் பதட்டமாக பார்த்தாள், பெண்.

கபாலியின் காதில் எல்லாம் விழுகிறது.. அவனும் தனதறையில் ஸ்தம்பித்து நின்றான்.  தலை வலிக்கிறது அவனுக்கு.. யோசிக்காமல்  செய்யவில்லை.. அதன் விளைவுகள் புரிகிறது.. ஆனால், ‘அவர்கள் எத்தனை வருடம் ஆனாலும்.. என் அக்காவை திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் அந்த வசீகரனுக்கு. அவன் அப்படியே இருப்பான்.. என் அக்காவும் அப்படியே இருப்பாள்..’ என எண்ணிக் கொண்டே தன் முகத்தை அழுந்த.. மென் துண்டால் துடைத்த படியே நின்றிருந்தான்.

ஜெயந்தினி “ம்மா.. வசியோட சிஸ்டர்.. தங்கச்சி ம்மா மயூரா.. இவ எப்படி ம்மா, இவன்கூட.. என்னமோ செய்திருக்கான்.. சொல்லு மயூரா” என்றாள் அன்னையிடமும் மயூராவிடமும் பதில் சொல்லி.. கேள்வி கேட்டு என கோவமாக நின்றாள் பெண்.

கபாலி வெளியே வரவேயில்லை.

மகேஸ்வரி, என்ன செய்வது என தெரியாமல் நின்றார்.

ஜெயந்தினி தன் போனை தேடி தன் அறைக்கு சென்றாள்.. போனில் வசீகரனுக்கு அழைத்தபடியே வெளியே வந்தாள்.. ஹால் தாண்டி வராண்டாவிற்கு சென்றாள்.. அங்கே டிரைவர் நிற்பதை பார்த்தவள் “அண்ணா காரெடுங்க” என்றாள்.

ஜெயந்தினி தன் அன்னையிடம் “ம்மா.. நான் வசி வீட்டுக்கு போயிட்டு வரேன்..” என்றவள்,  மயூராவின் கைபிடித்து அழைத்து சென்றாள் வெளியே.

மயூரா ஒன்றும் சொல்லாமல் ஜெயந்தினியோடு சென்றாள்.

ஜெயந்தினி மயூராவோடு காரேறி சென்றாள்.. வசீகரனின் வீட்டிற்கு.

வசீகரன், ஜெயந்தினியின் அழைப்பை ஏற்கவில்லை. அவனுக்கு கோவம்.. வருத்தம்.. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருந்தான். இப்போது தன்னவள் அழைக்கவும் இன்னும் இன்னும் கோவம்தான் வந்தது அவனுக்கு. ‘தம்பி போன் செய்து சொல்லியிருப்பான், சந்தோஷத்தில் என்னை அழைக்கிறாள்.. இன்னும் அவளுக்கு என்ன நடக்கிறது என தெரியாது.. போடி.. எப்படி நாம் நிம்மதியாக வாழ முடியும். இப்படியா நம் நிலை மாற வேண்டும்..’ என எண்ணிக் கொண்டே, அவளின் அழைப்பை திரையில் பார்த்திருந்தான் எடுக்கவில்லை.

அங்கே வசீகரன் வீட்டில்..

இப்போது எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். வசீகரனை வரவேண்டாம் என்றுவிட்டனர் பெரியவர்கள்.. ஏதாவது இளையவர்கள் பேச போக ரசாபாசம் ஆகுமென எண்ணம். அதனால் அவனை விடுத்து,  ஆதிகேசவன் சுமதி.. வசியின் பெரியப்பா பெரியம்மா.. வசியின் சித்தி சித்தப்பா என அறுவர்  தயாராகி வாசல் வந்தனர். சரியாக அந்த நேரம் ஜெயந்தினியின் கார் உள்ளே வந்தது.

ஜெயந்தினி அவசரமாக காரிலிருந்து இறங்கினாள். மயூராவும் இறங்கி நின்றாள். பெரியவர்கள் எல்லோருக்கும் தங்கள் பெண்ணை பார்த்ததும்தான் நிம்மதி.

மயூராவும் தன் அன்னையிடம் சென்றாள் அமைதியாக. 

ஜெயந்தினி “மயூரா சாரி ம்மா.. எனக்கு உணமையாகவே தெரியாது. சாரி ம்மா” என்றாள்.

பின் பெரியவர்களை பொதுவாக பார்த்து “மன்னிச்சிடுங்க சர், என்ன நடந்துதுன்னு உண்மையாகவே எனக்கு இப்போது வரை தெரியாது. ஆனால், என்னமோ என் தம்பி தப்பாக செய்திட்டான்னு தெரியுது. நீங்க.. நீங்க அங்க வரீங்கன்னு சொன்னான். அவன் வரும் போது மயூராவும் வந்துட்டா.. எனக்கு என்னமோ நடந்திருக்குன்னு புரியுது. நீ..நீங்க ம்.. மயூராகிட்ட கேளுங்க.. க்கும்..” என தொண்டையை கனைத்துக் கொண்டாள்.

பின் அவளே ”தம்பி தப்பா ஏதும் நடந்திருக்க மாட்டான். க்கும்.. இ..னி நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி.” என்றவள் கைகூப்பி விட்டு, கார் நோக்கி சென்றாள்.

பின் என்ன நினைத்தாளோ கண்ணில் நீர் இறங்க, சுமதியை பார்த்து “அ..அவர்கிட்ட சாரி சொல்லிடுங்க..” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.. மீண்டும் அவளே “எனக்கு எதுவும் தெரியாது.. அ..அவர் என் போனை அட்டென் செய்யலை.. சாரி வசி” என்றவள் யாரின் முகத்தையும் பார்க்காமல் கிளம்பினாள்.

யாரும் அவளை தடுக்கவில்லை..  அழாதே என சொல்லவில்லை. மகனை அழைக்கவில்லை, மகளையும் விசாரிக்கவில்லை. எல்லோரும், ஜெயந்தினி சென்றதும் உள்ளே வந்தனர். யாரை குற்றம் சொல்லுவது   எனத்தான் தான் தோன்றியது. ஓய்ந்து போக்கினர். 

மயூராவை சுமதி அழைத்துக் கொண்டு, மகளின் அறைக்கு சென்றார். மயூரா மெதுவான குரலில் எல்லாம் சொல்லி முடித்தாள்.. அவன் தன்னோடு பேசியது, காது கேட்க்குமா என கேட்டது.. பின் ஒருவார்த்தை கூட தன்னிடம் பேசாதது  என எல்லாம் முடித்தாள்.

சுமதி ”அ..அவன் உன்னை..” என எதோ கேட்கவர.

மகளே இடைபுகுந்து “இல்ல.. அப்படி ஒருபார்வை கூட பார்க்கல..” என்றவள் வீம்பாக குளிக்க சென்றாள்.

கீழே அண்ணன் தம்பி மூவரும் சுமதியின் வரவை எதிர்பார்த்து இருந்தனர். சுமதி வந்து மகள் சொன்னதையும் அங்கே நடந்த பேச்சு வார்த்தையையும் சொன்னார். இது எவ்வளவு பெரிய தர்மசங்கடம் என அங்கிருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு, வயது பெண்ணிடம் என்னவென கேட்பது.. இப்படி ஒரு அவளை பிடித்து வைத்திருக்க.. ஆண்கள் எல்லாம் அமைதியாக இருப்பது என்பதெல்லாம் எவ்வளவு கொடுமையான நிகழ்வு என அனுபவிப்பவற்கே தெரியும். 

காலம் சிலசமயம் நம் கண்களை கட்டிவிடுகிறது. நெடுந்தூரம் சென்றுதான் கண்கட்டுகளை அவிழ்க்கிறது.. எங்கிருக்கிறோம்.. எந்த வழி வந்தோம்.. எங்கு செல்வோம்.. எப்படி செல்வோம்.. என எதுவுமே புரியாதே.. அந்த பாதிதூர வனாந்திரத்தில்.. அப்படியோரு நிலை இப்போது இரு குடும்பத்திற்கும்.

இங்கே, மகேஸ்வரி.. மகனின் அறைக்கு சென்றார். கபாலி அப்படியே அமர்ந்திருந்தான். அன்னை “டேய் என்ன டா செய்த” என்றார் ஓய்ந்த குரலில்.

மகன் வாய் திறக்கவில்லை.

அன்னை “டேய் என்ன டா இது, எங்க வளர்ப்பு அவ்வளவுதானா டா.. இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்துதான் அவர் என்னை விட்டுட்டு போயிட்டாரோ..” என அழுகை.

கபாலி ஏதும் பேசாமல் அன்னையை தாண்டிக் கொண்டு சென்றான்.. தன் கார் நோக்கி. முகமும் மனமும் இறுகிக் கொண்டது. தொழில்.. வளர்ச்சி.. அதன்மூலம் கிடைத்த பெயர் என கர்வம் கொண்டு, குடும்பத்தினரிடமிருந்து ஒதுங்கியிருந்தவன் மனதில்.. அன்னையின் வார்த்தைகளும், தான் செய்த செயலும்.. ‘குற்றம் செய்தவன்’ என்ற பிம்பத்தை தர.. காற்றும் புக முடியாத இறுக்கத்தில் அவன், இப்போது.

யார் முகத்திலும் விழிக்க விரும்பாதவன் காரெடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். அவளின் போன்.. அவனின் காரில்தான் இன்னமும் இருக்கிறது.

ஆக, இரு பெண்களுக்கும் அனுமானம்தான் என்ன நடந்திருக்கும் என.. ‘மகன் பெண்ணை இங்கே கூட்டி வந்திருப்பான்.. நீங்க திருமணம் முடித்தால் பெண்’ணை விடுவிப்பேன் என சொல்லியிருப்பான்..’ என எண்ணினர். அது ஓரளவுக்கு சரியும் கூட. ஆனால், உண்மை அதுவல்லவே.

ஜெயந்தினி வீடு வந்தாள். 

ஹாலின் மத்தியில்.. பூ பழம் இனிப்பு தாங்கிய தட்டுக்கள்.. ஜெயந்தினியை வரவேற்றது. அமைதியாக வந்தவளது மனது.. அலைபாய்ந்தது. தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள்.. அழகாக அவன் வாங்கிக் கொடுத்த லாவெண்டர் நிற மென்பட்டு.. கட்டியிருந்தாள் இப்போது. 

வலி இதயம் முழுவதும் வலி.. கண்ணுக்கு முன்.. கைநழுவி போகும் காதலின் வலி.. கொடுமைதானே. கண்களை மூடிக் கொண்டாள்.. எதையோ பார்க்கமாட்டேன் என்பவள் போல.. பூனை கண்களை மூடிக் கொண்டாள் பூலோகம் இருண்டிடுமா என்ன.. அடுத்த அடி எடுத்து வைக்க கண்களை திறந்துதானே ஆக வேண்டும்.. அவள் கண் திறந்த போது.. அன்னையின் ஓய்ந்த முகம் தெரிந்தது பெண்ணுக்கு.

வீடு மீண்டும் கலையிழந்து போனது.

மகேஸ்வரி “வா.. பெண்ணை அவங்ககிட்ட விட்டுட்டியா.. மன்னிப்பு கேட்டியா.. போதும் அவனால் நீ பட்டது எல்லாம். வேறு ஊரில் வேலை தேடு.. எங்கையாவது போயிடலாம் நாம்..” என திடமாக சொன்னார். 

பின் அவரே “காபி தரேன் குடி.. நான் நாளைக்கு அவங்ககிட்ட பேசி மன்னிப்பு கேட்டிடறேன்” என்றபடி உள்ளே சென்றார். யாரேனும் ஒருவர் திடமாக இருக்க வேண்டுமே.. என எண்ணி அன்னை, மகளிடம் திடமாக பேசினார்.

பெண் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

“தொடுவானம் இன்று..

நெடுவானம் ஆகி..

தொடும் நேரம் தொலைவாகுதே..” 

அங்கே வசீகரனின் வீட்டில் குழப்பம் இன்னும் நீண்டது. ஆண்கள் என்ன செய்வது என தெரியாமல் நின்றனர். வசீகரன் குறித்து கவலையில்லை, ம்.. கவலைப்படவில்லை பெரியவர்கள். ஒருமுடிவுக்கு வந்திருந்தனர் போல.. ஆதிகேசவனின் அண்ணன் ஒரு முடிவு எடுத்திருந்தார்.. வந்து நின்று, மன்னிப்பு கேட்டு சென்ற பெண்ணை பார்த்து.

ஆனால், மயூரா குறித்து கவலைதான் எல்லோருக்கும். தங்களின் தங்கைக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. அவளிடம் விஷயத்தை சொல்லலாம் என்றாலும்.. தன் தங்கை அழைப்பை ஏற்காததால்.. ஏதும் செய்ய முடியாமல் அமைதியாக நின்றனர் எல்லோரும்.

Advertisement