Advertisement

நான் உன் நிறையன்றோ!..

1

ஏழு வருடங்களுக்கு முன்பு..

சிலிகான் வேல்லி.. பெங்களூர் நகரம். ஊரின் பெயரே ‘அழகு’ என்ற பொருள் கொண்டதா தெரியவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அந்த நகரம் அழகுதான். அதிலும் கொண்டாட்டத்திற்கான அழகு கொண்டது.

செயற்கை விலக்குகள்.. நல்லிரவையும் பகலாக்கிக் கொண்டிருந்த நேரம்.. அந்த இடமே மின்னியது.. எங்கும் வயது வித்யாசம்.. இல்லாம், ஆண் பெண் பேதமில்லாமல் கூட்டம்.  அப்படி ஜனத்திரளில்.. இன்பமாக தொலைந்துக் கொண்டிருந்தது ஐந்து நபர்களை கொண்ட ஒரு நண்பர்கள் குழாம்.

எல்லோரும் ஒரே கல்லூரி.. எல்லாம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள்.. ஒரு மாணவி. இந்த ஆண்டுக்கான தேர்வின் விடுமுறை நாட்கள், இந்த நான்கு நாட்களும். இந்த ஐவர் தங்களின் ஊர் செல்லாமல்.. இங்கேயே இருந்தனர். படித்தனரா தெரியாது.. ஆகிற்று நாளை மறுதினம் தேர்வு.. எனவே, இன்று ஒன்றாக வெளியே வந்திருந்தனர்.

நகரத்தின் பெரிய டானிக் ஷோவ்ரூம்.. ம்.. உயர்தர மதுபானம் விற்பனையகம். அங்கேதான் ஐவரும் அமர்ந்திருந்தனர்.. நேரம் இரவு பனிரெண்டை கடந்திருந்தது.

உல்லாசமான பேச்சுக்கள்.. ஒருவரை ஒருவர் கேலி செய்துக் கொண்டு.. பேசிக் கொண்டிருந்தனர். அதிலோரு ஜோடி மட்டும்.. கைகளை கோர்த்துக் கொண்டு, இருக்கும் இடம் மறந்து பிதற்றிக் கொண்டிருந்தது. மற்ற மூவரும் அவர்களை கண்டுக் கொள்ளவில்லை. 

எப்படி தேர்வை எதிர்கொள்வது.. நான் படிக்கலை.. நீ எப்படி.. என எதோ போதையில் பேசி தீர்த்தனர், மூவரும்.

அவர்களின் பேச்சில் பயம் இல்லை..  கேலி கிண்டல்தான்.. பார்த்தாலே அவர்களின் வசதி வாய்ப்புகள் புரியும் கண்களுக்கு. அதில் ராம் கையில் சிகரெட்டுடன்.. “நமக்கும் இப்படி ஒரு கேர்ள் ப்ரென்ட் இருந்திருக்கனும் டா.. பாரேன்.. அவன் சேஃப்.. எப்படியும் எக்ஸாம்மில் ஹெல்ப் செய்திடுவா..” என்றான் ஜோடியாக அமர்ந்திருந்த தன் நண்பர்களை பார்த்து.

கபாலி “ம்.. சேச்ச சேச்ச.. இம்சைடா.. பாரேன்.. ஒட்கா அடிக்க முடியுதா அவனால.. வெறும் பீர்தான்.. பாப்பா ஆகிடுவோம் டா.. சரி, கிளம்பலாம்.. அவன் நைட் வருவான் போல தெரியலை.. வாங்க டா” என சொல்லி எழுந்தான்.

மற்ற இருவரும் எழுந்தனர். ஜோடியாக அமர்ந்திருந்த இருவரும் நிமிர்ந்து பார்க்க.. ராம் “நாங்க கிளம்பறோம்.. நீ எப்படி” என்றான்.

கபாலியும் கிருஷ்ணாவும் நடந்தனர் முன்னே..

ஜோடியாக அமர்ந்திருந்த, விபின் கனிஷ்கா இருவரும்  நிமிர்ந்து பார்த்தனர், ராம் முகத்தை. ராம் பதிலுக்காக காத்திருக்க.. விபின் “இவளை ட்ராப்  செய்துட்டு வரேன்” என்றான்.

ராம் “பைய் ..” என சொல்லி கிளம்பினான்.

அதற்குள், கிஷ்ணா பார்க்கிங்கில் காரெடுத்து.. வெளியே வர, மூவரும்.. ரூம் வந்து சேர்ந்தனர். 

ஒரு அப்பார்ட்மென்ட். கல்லூரியின் அருகிலேயே நால்வரும் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றனர்.

அளவான போதைதான் எல்லோருக்கும்.. அமைதியாக உறங்கினர்.

அதிகாலை ஐந்து மணிக்கு.. கபாலியின் செல் ஒலிக்க தொடங்கியது. எல்லோருக்கும் ஒருசேர விழிப்பு வந்தது. கபாலி கண்களை கசக்கிக் கொண்டே அழைப்பை ஏற்றான்.

கபாலிக்கு, அவனின் அக்கா அழைத்திருந்தாள். ‘அப்பாக்கு ரொம்ப முடியலை டா.. டாக்டர்ஸ்.. ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை என சொல்லிவிட்டனர்.. நீ வந்திடுறீயா’  என தன் அக்கா ஜெயந்தினி சொன்னால் தன் தம்பியிடம்.

கபாலி “எங்க.. எந்த ஹாஸ்ப்பிட்டல்.. எப்போ வந்தீங்க.. என்ன ஆச்சு “ என்றார்.

ஜெயந்தினி “எப்போதும் பார்கிற பனசாகரியில்தான்.. நேற்று ஈவ்னிங் முடியலை.. கொஞ்சம் நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னார்.. பார்த்துட்டு போலாம்ன்னு இங்கேயே வந்துட்டோம். நல்லாத்தான் இருந்தார் டா.. என்னமோ ரெண்டுமணி நேரம் முன்னாடி.. மூச்சுவிட முடியலை.. இப்போ ஹார்ட் அட்டாக் அப்படின்னு சொல்லிட்டு போறாங்க டாக்டர்ஸ். ஒன்னும் சொல்றதுக்கு இல்லைன்னு சொல்றாங்க.. நீ வா சீக்கிரம்” என்றாள்.

இந்த ஆறுமாதமாக உடல்நலமில்லை அவருக்கு.. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை அவரை தாக்கி இருந்தது. மருத்துவர்கள்.. புகைபிடிக்க கூடாது.. ஆல்கஹால் கூடாது. குவாரிக்கு போக கூடாது ACயில்தான் இருக்க வேண்டும். டஸ்ட் ஆகாவே ஆகாது. சிவியார் கண்டிஷன் என சொல்லித்தான் இருந்தனர்.

ரமணன் எதையும் கேட்கவில்லை.. அப்படி ஓய்வில் இருக்கும் நிலையில், அவரின் தொழில் அவரை விடவில்லை. கடன்கள் கழுத்தை சுற்றிக் கொண்டிருந்தது. அத்தோடு, அவரின் தலைமேல் அமர்ந்திருந்தார் அவர் நம்பிய பார்ட்டனர்.

கபாலி, ஒரு பெருமூச்சு விட்டான்.. பின் “ம்.. கிளம்பறேன்.. எங்க, குமரன் அண்ணா, இருக்காறா..”  என்றான்.

அக்கா “ம்… நீ சீக்கிரம் வா.. அம்மாக்கிட்ட ‘இப்படின்னு’ ஏதும் தெரியாது..” என்றாள், சின்ன குரலில்.

போனை வைத்தான். கபாலிக்கு தலை வலித்தது. என்னமோ ஆறுமாதமாக.. தன் குடும்பத்தின் சூழ்நிலை சரியில்லை என தெரிகிறது அவனுக்கு. ஆனால், அது என்ன என புரியவில்லை. அதை அறிந்து.. அதனை சரி செய்யும் நிலையோ.. வயதோ.. இப்போது இல்லை, கபாலிக்கு. என்னமோ என மனம் பிசைய.. அதனை பற்றி யோசித்தவாறே பரபரப்பாக கிளம்பினான். 

அவனின் நண்பர்கள் ‘உடன் வருகிறோம்’ என்றனர். அவர்களை தவிர்த்தான். உடனே கிளம்பினான். அரைமணி நேரத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

அந்த காலையிலேயே மருத்தவர்கள், கபாலியிடம் எல்லாம் எடுத்து சொல்லினர். பல்ஸ் குறைந்துக் கொண்டே இருக்கிறது. அவரின் நுரையிரல் 9௦சதவீதம் பாதித்துவிட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.. நேர கணக்குதான் என்றனர்.

இறுதியாக என குடும்பத்தை பார்த்தார் ரமணன். மருத்துவ உபகரணங்கள்தான்.. அவரை பிடித்து வைத்திருந்தது போல.. சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

தம் மக்களை பார்த்தார். பேசவெல்லாம் இல்லை.. எதையும் சொல்லவும் முடியவில்லை. கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார், அவ்வளவே. கண்களில் நீர் வழிந்தது.. வலியோ.. இல்லை, தன்னிலை தெரிந்ததால் வந்த கண்ணீரோ.. அசைவேயில்லை அவரிடம். 

மனைவி மகேஸ்வரி, ஜெயந்தினி, மகன் எல்லோரும் கையை பிடித்துக்கொண்டு.. எதோ பேச.. ஒன்றும் பலனில்லை.. கண்களை மிகவும் சிரம்மப்பட்டு.. திறந்து பார்த்தார். அதற்குமேல் முடியவில்லை.. பிள்ளைகள் என்னமோ பேசியது.. மகேஸ்வரி அழுதார்.. தன் கணவரின் கையை பிடித்துக் கொண்டு, கண்களை திறக்கவில்லை ரமணன்.

எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டனர், மருத்துவ உதவியாளர்கள். அதன்பின் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை மருத்துவர்கள்.

கபாலியின் தந்தை ரமணன்.. தாய் மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு.. முதலில் ஜெயந்தினி என்ற பெண். அடுத்துதான் கபாலி. 

கபாலியின் ஆறு வயதில்தான், அவனின் தந்தை, ரமணன் வாழ்வில் மாற்றம் வந்தது. அதுவரையில் வேலை செய்து வந்தவர்.. புதிதாக பார்ட்னர் உடன் சேர்ந்து தொழில் தொடங்கினார். கிரானைட் பிஸினெஸ்தான். தன்னுடைய பூர்வீக வீடு.. நகை என எல்லாவறையும் விற்று.. அதற்கு மேலும் கடன் வாங்கி, தன்  தகுதிக்கு மீறிதான் அந்த தொழிலில் இறங்கினார்.

ஆனால், ரமணன் தோற்கவில்லை.. தன்னுடைய சமார்த்தியத்தால் இரண்டே வருடத்தில் தொழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கத் தொடங்கிவிட்டார். தடைகள் எல்லாம் சாதனைகளாக மாறியது அவருக்கு. அவரின் பெயர் சொன்னாலே தொழில் வட்டத்தில் தெரிய தொடங்கியது. முன்பே, அதாவது அவர் வேலை செய்த போதே.. அந்த முதலாளின் பெயரோடு அதாவது, ஆதிகேசவன் அவர் முதலாளியின் பெயர். அத்தோடு இவரின் பெயரும் சேர்ந்துதான் கேட்க்கும். ம்.. ஆதியும் ரமணாவும் வந்தாச்சா.. என்தான் கேட்பார்கள் அப்போது. அப்படி, தான் வேலை செய்த முதலாளிக்கு வலதுகையாக இருந்தார் ரமணன். எனவே, தொழிலின் நெளிவு சுழிவுகள் தெரியும் அவர்க்கு. அதிலிருந்த பழக்கத்தால்.. தன் தொழிலை திறம்பட செய்ய தொடங்கினார். அதில் வெற்றியும் பெற்றார். 

ஆனால், காலமும் நேரமும் ஒன்று போல இருப்பதில்லையே.. தன் வெற்றியில், தான் முன்பு வேலை செய்துக் கொண்டிருந்த நிறுவனத்தை எதிரியாக எண்ணிக் கொண்டார், ரமணன். அதனால், அவர் தடம் மாறத் தொடங்கினார்.. சில ஆண்டுகளில்.

மற்றபடி ரமணன், தொழில்.. குடும்பம்.. வசதி.. வாய்ப்பு.. என எல்லாம் நல்லபடியாக அமைந்தது. பிள்ளைகளை  நல்ல இடத்தில் படிக்க வைத்தார். புதிதாக ஒன்றுக்கு இரண்டு வீடுக் கட்டினார். நிலபுலங்கள் வாங்கினார். எல்லாம் சிறப்பாக நடந்தது. 

இப்போது..

முன்மாலை நான்கு மணிக்கு, அவரின் ஆன்மா அந்த உடலை விட்டு விடைபெற்றது.

மருத்துவமனையின் நடைமுறைகள் எல்லாம் சரியாக செய்து முடித்து.. இரவு எட்டு மணிக்கு ரமணனின் உடலோடு தங்களின் ஊர் வந்தனர், அவரின் குடும்பம்.

சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லியாகிவிட்டது. எனவே, வீட்டில் எல்லா ஏற்பாடுகளும்.. ரமணனின் ஒன்றுவிட்ட அண்ணன், முத்துகுமார் பார்த்துக் கொண்டார். மருத்துவமனைக்கு.. முத்துகுமாரின் தம்பி, வந்து பார்த்து.. அவர்களுடன் துணை நின்று.. எல்லாம் பார்த்து ஊர் வந்து சேர்த்தார்.

கபாலிக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லூரி வந்ததும் தனக்கு எல்லாம் தெரிகிறது.. அப்பாவின் நிலை கூட புரிகிறது என எண்ணி இருந்தவனுக்கு.. அந்த இரவு.. அகோரமாக இருந்தது. வாழ்வின் உண்மையான பக்கத்தை அப்போதுதான் கொஞ்சமாக பார்க்க தொடங்கினான்.. கபாலி. ம்.. இந்த வயதிலேயே தொடங்கிவிட்டான்.

ஊர் வந்து சேர்ந்தனர். ஹோசூர்தான் அவர்களின் சொந்த ஊர். எனவே இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

மறுநாள் காலையில் தொழில்முறை ஆட்கள் எல்லோரும் வந்தனர். கபாலிதான் வாசலில் நின்றான்.. கண்ணில் ஒருதுளி நீரில்லை. அவனின் அக்கா அன்னை அழுதனர். இவன் அழவேயில்லை. காலையிலேயும் ஜெயந்தினி தம்பியை கட்டிக் கொண்டு அழுதாள், ம்கூம்.. தன் அக்காவை கட்டிக் கொண்டு நின்றானே தவிர அழவில்லை.

இப்போது, வந்தவர்கள் யார்யார் என கபாலிக்கு சின்ன அறிமுகம் செய்தார் குமரன். கபாலிக்கு ஒன்றிரண்டு நபர்களை தெரிந்திருந்தது, தன் தந்தையின் நண்பர்கள் என. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால்.. தன் தந்தை ஷெட்டில் விளையாட போகும் போது.. இவனும் செல்லுவான், அப்போது.. அங்கே பார்த்திருக்கிறான். மற்றபடி  தொழில் முறையில் யாரையும் தெரியவில்லை. 

கபாலி கலங்கியபடியே நின்றிருந்தான்.. மனதில் பதியவில்லை யாரும்.. எதுவும். எங்காவது ஒரமாக சென்று அமர்ந்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. உடலும் மனதும் சோர்ந்து இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் கபாலியை ஆறுதலாய் தேற்றிதான் சென்றனர். அணைத்து.. தோளில் தட்டி.. தோளோடு கட்டிக் கொண்டு.. ‘சின்ன பையன்..’ என எல்லோரும் பரிதாபப்பட்டு சென்றனர். 

முத்துகுமார் நின்றார்.. அவரின் வேலையும் நட்பும் வேறு.. அவருக்கும் பெரிதாக யாரையும் தெரியாது. உறவு என முன் நிற்பார் எல்லாவற்றுக்கும் அப்படிதான் இப்போதும் நின்றார்.

குமரன்தான் கபாலியின் அருகிலேயே நின்றார். சொந்தம் யார்.. தொழில்முறை யார்.. நண்பர்கள் யார்.. அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகள் யார் என எல்லாம் காட்டிக் கொண்டிருந்தார். கபாலியும்   மறுத்து ஏதும் கேட்க்காமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். 

அடுத்து, குமரன் அறிமுகம் செய்தார் “தம்பி, இவங்க குயீன் க்ரானைட்ஸ்.. நம்ம ஹோல்சேல் டீலர். நல்ல டீலர்.. அன்புதம்பி..” என்றார் தூரமாக வந்துக் கொண்டிருந்த ஒரு நபரை பார்த்து. கபாலி அப்படியே நின்றான். வந்தவரும் தோள்தட்டி.. உள்ளே சென்றார்.

இப்போது சத்தமில்லாமல் இருவர் வந்தனர். இங்கே குமரன் பரபரப்பானார்.. லேசாக தள்ளி நின்றார், கபாலியிடமிருந்து. 

அறுபது வயதில் ஒருவர்.. இருபதுகளில் ஒருவர்.. அவர்கள்தான் முன்பு ரமணன் வேலை செய்த கம்பெனியின் முதலாளி.. பெரியவர் ஆதிகேசவன்.. அவரின் மகன் வசீகரன். இருவரும் வந்தனர். 

கபாலி அமைதியாக நின்றான். வந்தவர்களில், இளையவன் “ப்பா.. இவர்தான் அவர் மகன்..” என சொல்லி.. கபாலியை காட்டினான்.

உடனே பெரியவர், கபாலியின் கை தொட்டார்.. துக்கத்தை பகிர்வது போல. பின் “தைரியமா இரு..” என்றவர்.. வேக நடையோடு உள்ளே சென்றார். வசீகரன், கபாலியை லேசாக அணைத்தான் “தைரியமா இருக்கணும்.. நீதான் பார்க்கணும். எல்லாம் முடியட்டும் மீட் பன்னலம், எந்த உதவியாக இருந்தாலும் கேளு.. எதுக்கும்  நாங்க எல்லோரும் இருக்கோம்..வீட்டில் எல்லோரையும் பார்த்துக்க..” என்றவன் கபாலியை விடுவித்தான்.

கபாலி இத்தனை பேசுபவனை நிமிர்ந்து பார்த்தான்.. ‘யார் இது..’ எனும் விதமாக. யாரும் இவ்வளவு டிட்டைல்லாக பேசவில்லை.. என்னமோ ஒரு ஆதரவு, அந்த அணைப்பில் தெரிய, யாரென பார்த்தான் கபாலி.

வசீகரன், அந்த ஆராச்சி பார்வையை.. தனக்கான பதிலாக எடுத்துக் கொண்டு.. மீண்டும் ஒருமுறை அவனை தோளோடு அணைத்துவிட்டு.. தன் தந்தையோடு சென்றான்.

ஆதி, ரமணனை பார்த்தபடி பத்து நிமிடம் நின்றுக் கொண்டிருந்தார்.

ரமணனின் அண்ணன் முத்து வந்தார்.. ஆதியிடம். அழுதார்.. குடும்ப நபர்களை காட்டினார்.. ரமணனின் மனைவியை தெரியும்.. அந்த ஆதிகேசவனுக்கு.. எனவே கையெடுத்து வணக்கம் சொன்னார்.. மகேஷ்வரி மௌனமாக அழுதார்.. “தைரியமா இருங்க..” என்றார்.

வசீகரனின் கண்கள் ஜெயந்தினியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

பின், வெளியே வந்தார்.. ஆதி. கூடாவே, தன் கால்களை மட்டுமல்லாது.. தன் ஆவியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு.. தன் தந்தையோடு வந்தான் வசீகரன்.

ஆதிகேசவன், கடைசியாக இருந்த சேரில் அமர்ந்துக் கொண்டார். அவர் அமர்ந்ததும்.. வந்திருந்தவர்கள் எல்லோரும்.. யாரின் கருத்தையும் ஈர்க்காமல்.. ஒவ்வொருவராக.. அவர்களின் அருகில் சென்று அமர்ந்தனர். சற்று நேரம் ரமணாவை பற்றி பேசினர். அப்படியே கிளம்பினர்.

இப்போது இருக்கும் புது ஆட்களுக்கு இருவர் பற்றி அவ்வளவாக  தெரியாது. ஆனால், பழைய ஆட்கள் எல்லோருக்கும் ரமணா ஆதியின் நட்பு தெரியும். அதிலும் ஆதி இப்போதெல்லாம், விருந்து விழா என அதிகம் வெளியே வருவதில்லை. எனவே, பார்த்த இடத்தில் சற்று நேரம் வந்து பேசி சென்றனர்.

வசீகரன், அங்கிருந்த நேரமெல்லாம் அவ்வபோது ஜெயந்தினியை பார்க்க தவறவில்லை. அவளுக்கு எந்த ப்ரங்கையும் இல்லை.. தன் தந்தையின் காலடியிலேயே அமர்ந்திருந்தாள்.

வசீகரன், கம்பனிக்கு செல்ல வேண்டும். எனவே, தான் தனி கார் வர சொல்லி, கிளம்பினான். முன்பு தாங்கள்  வந்த காரின் டிரைவரை.. தன் அப்பாவிற்கு துணைக்கு இருத்திவிட்டு கிளம்பினான்.

ஆதிகேசனுக்கு பழைய நினைவுகள் வந்தது. அவர்களின் ஈடு நட்புகள் நான்கு பேர் அமர்ந்திருந்தனர் ஒன்றாக. 

ரமணனின் இறுதி யாத்திரை தொடங்கியது. ஆதியும் பழைய நண்பர்களும் காடு வரை சென்றனர். விட்டு தான் தத்தமது வீடு சென்றனர்.

கபாலி குளித்து வந்தவனுக்கு ஒன்றும் முடியவில்லை, உணவு இல்லை.. துக்கம் வேறு அப்படியே அமர்ந்தான் சோபாவில்.

ஜெயந்தினி இன்னும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள். 

நட்புகள் உறவுகள் என சிலர் உண்டு கிளம்பினர்.

ரமணனுக்கு பெரிதாக வயோதிகம் இல்லை.. அறுபதை கூட தொடவில்லை. நன்றாகத்தான் தொழில் செய்துக் கொண்டிருந்தார். எங்கே சறுக்கியது என முத்து.. அவரின் தம்பி.. மகேஷ்வரியின் அண்ணன், அவரின் அக்கா கணவர் என எல்லா ஆண்களும் பேசிக் கொண்டிருந்தனர்.

கபாலியிடம் அவனின் அத்தை உறவில் ஒருவர் வந்து.. ரசம் சாதம் பிசைந்து அவனின் கையில் கொடுத்தார்.. ”சாப்பிடு கபில்..” என்றார். அதை வாங்கி டிபாய் மேலே வைத்தான். பின் அமைதியாக தன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து அமர்ந்துக் கொண்டான்.அந்த அத்தைக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. அமைதியாக சென்றுவிட்டார்.

வாசலில் ஆண்கள் பேசும் சத்தம் இப்போது கபாலியின் காதுகளை வந்து சேர்ந்தது.. அதிராமல்.. அமைதியாக ஒரு ஆண்குரல் “பார்ட்னர்ஷிப்தானே.. மச்சானுடையது. அந்த சுந்தரமூர்த்தியின் பினாமிதானே. அத்தோட இருந்தவரை நல்லாத்தான் இருந்தது. இவர் தனியா பத்து வருஷத்துக்கு முன்னே பிரிச்சிகிட்டு வந்ததிலிருந்து கொஞ்சம் பிரச்சனைதான். ஏன் முத்து மாமா உங்களுக்கு தெரியாதா..” என்றார். 

முத்து “இல்ல ப்பா.. அவனின் தொழில் தெரியும்.. உள்விவகாரம் எல்லாம் தெரியாது ப்பா” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால், அதன்பின் முத்துவின் தம்பியும்.. மகேஷ்வரியின், அக்கா கணவரும் வெகு நேரம் குசுகுசுவென எதோ பேசினர். அதெல்லாம் கபாலியின் காதில் விழவில்லை. ஆனால், முதல்முதலில் எதோ பயம் எழுந்தது அவனுள்.

ஜெயந்தினி வந்து தம்பியின் தோள் சாய்ந்து அமர்ந்தாள்.. அக்காவை பார்த்தான்.. அவளின் கண்ணீர் அவனை என்னமோ செய்தது. ஜெயந்தினி “ஏன் டா, அழமாட்டியா நீ” என்றாள்.

கபாலி ஏதும் பேசவில்லை.

ஜெயந்தினி “அழுடா.. நீ என்ன அவ்வளோ பெரிய அளா.. அழுடா.. அப்பா மேல உனக்கு பாசமே இல்ல.. போடா..” என்றாள் குழந்தையாக  அழுதபடியே.. தம்பியை எப்படியாவது அழ வைக்க வேண்டும் என.

கபாலி ஏதும் பேசவில்லை, அமைதியாக இருந்தான்.

“இதுதான் பாதை.. இதுதான் பயணம்..

என்பது யாருக்கும் தெரியாது..”

Advertisement