மேடையில் மணப்பெண்ணிற்குரிய சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருந்த அபர்ணாவிற்கு நடந்து முடிந்த அனைத்தும் கனவு போல் இருந்து. இதோ இப்போது தான் மூன்று முடிச்சையும் போட்டு அவளை தன்னில் சரி பாதியாக்கியிருந்தான் சிவசக்தி. இப்போது வரை அவன் அபர்ணாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தான் அவளுக்கு மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த யோசனையில் இருந்தவளுக்கு, தங்களுக்கு எதிரில் முன் வரிசையில் மனைவியுடன் அமர்ந்திருந்த மாதவன் கூட இரண்டாம் பட்சமாகிப் போனான்.
மணப்பெண்ணாய் கண்களை நிறைத்தாள் அபர்ணா. அனைவரும் இருவரின் ஜோடிப் பொருத்தத்தைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருக்க, எப்போதும் வம்பு பேசும் வாய்களும் வம்பு பேச்சைப் பேசிக் கொண்டு தான் இருந்தனர்.
யோசனைகளின் பிடியில் இருந்தவள் “சிவா குங்குமத்தை வச்சு விடு” என்ற வார்த்தைகளில் மீண்டிருந்தாள். அவளின் தோளைச் சுற்றி அணைத்தபடி நெற்றியில் குங்குமம் இட்டவனை விழி விரித்துப் பார்த்தவளுக்கு, அவனின் பிடியிலும் அணைப்பிலும் ஒரு அழுத்தம் இருப்பதாக பட்டது.
“இப்ப எதுக்கு சிவாண்ணாவை இப்படி ‘ஆ’ ன்னு பார்த்து வைக்கிற அபர்ணா. எல்லாரும் உன்னைத்தான் பார்க்குறாங்க” என்று காயத்ரி காதோரத்தில் கூறவும், சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள் அபர்ணா.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாதவனுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. ஏதோ அவனுடைய பொருளை சிவா அபகரித்ததைப் போன்ற எண்ணம் மனதிற்குள் தோன்ற திடுக்கிட்டுப் போனான்.
‘வர வர என் புத்தி ஏன் இப்படி போகுது?’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவன், சட்டென்று எழுந்திருந்தான்.
“என்னாச்சு?” என்றாள் அவனின் மனைவி சுஜிதா.
“ஹாங்..!! ஒண்ணுமில்லை” என்றவனுக்கு மனைவியின் முகம் பார்க்கவே முடியாத அளவு குற்ற உணர்வு ஆட்டிப் படைத்தது.
சிவாவும் மாதவனின் நடவடிக்கைகளை புருவம் நெறிய பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்கடுத்து நடந்த அனைத்து சடங்கு சம்பிரதாயங்களையும் இயந்திர கதியில் செய்து முடித்திருந்தாள் அபர்ணா. சிவாவோ ஒவ்வொன்றையும் முழு மனதுடன் செய்து கொண்டிருந்தான்.
“கொஞ்சமாவது சிரி அபர்ணா. அப்பறம் எல்லா போட்டோஸ்லயும் உம்முன்னு தான் தெரிவ” என்றாள் காயத்ரி.
அபர்ணா இயல்பாய் சிரிப்பவளைப் போல் சிரித்து வைக்க,
“இதுக்கு நீ சிரிக்காமயே இருக்கலாம். இதை விட அதுவே பெட்டர்” என்றவளை முறைத்தாள் அபர்ணா.
அவர்களின் திருமணத்திற்கு நகரின் பல முக்கிய புள்ளிகள், பெரிய மனிதர்கள் என அனைவரும் வர, வீட்டினருக்கு ஆச்சர்யம். அதிலும் செல்விக்கு சொல்லவே வேண்டாம்.
“இவங்களை எல்லாம் சிவாவுக்கு எப்படி தெரியும்க்கா?” என்றாள் சரிதா.
“அது தான் எனக்கும் தெரியலை சரிதா. அன்னைக்கு என்னடான்னா எம்எல்ஏ வீட்டுக்கே வந்து அழைக்குறார். இன்னைக்கு இத்தனை பேர் வர்றாங்க. வீட்ல ஊமை கோட்டான் மாதிரி பேசவே காசு கேட்குறவன், எப்படி இத்தனை பேரை பழகி வச்சிருக்கான்?” என்றாள் ஆதங்கத்துடன்.
பிரபாகரன் தன் தம்பியிடம் வாய்விட்டு கேட்டே விட்டான்.
“அண்ணா எல்லாரும் நம்ம கஸ்டமர்ஸ் தான். பழக்க வழக்கத்துல இன்விட்டேஷன் வைக்காம இருந்தா நல்லா இருக்காதே. அதான் எல்லாருக்கும் இன்விட்டேஷன் வச்சேன்” என்று சிவா எதார்த்தமாய் முடித்துக் கொள்ள, கேட்டுக் கொண்டிருந்த செல்விக்குத் தான் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“பார்த்திங்களா? கடை என்னமோ நம்ம கடை. ஆனா உங்க தம்பி தான் என்னமோ ஓனர் மாதிரி வந்தவங்க எல்லாரும் அப்படி பேசிட்டு போறாங்க. இதுக்குத்தான் அப்பப்போ கடைக்கு போய் பாருங்கன்னு சொன்னேன். என் பேச்சை கேட்டாத்தான?” என்றாள் செல்வி மனதில் மூண்ட கோபத்துடன்.
‘கடையின் ஓனர் தன்னை யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் தன் தம்பியை தெரிந்திருக்கிறது என்ற விஷயம் பிரபாகரனுக்குக் கூட சற்று உறுத்தலாகப் பட்டது. இதைப் பற்றி சிவாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் பிரபா.
“மாப்பிள்ளை இவர் தான், அவர் போட்டிருக்க பேண்ட் சட்டை என்னதுன்ற மாதிரி தான்க்கா. ஓனர் என்னவோ மாமா தான். ஆனா பேர் வாங்கியிருக்கிறது என்னமோ கொழுந்தனார் தான். வர்றவங்க போறவங்க எல்லாரும் சிவாவை தான் ஏதோ ஓனர் ரேஞ்சுக்கு புகழ்ந்து பேசிட்டு போறாங்க. எதுக்கும் பார்த்துக்கோங்க” என்றாள் சரிதா.
நடராஜனும் கலையரசியும் கடைசி மகனுக்கும் திருமணம் முடிந்த நிம்மதியில் இருக்க, அவர்களிடத்தில் வந்த அன்னம் பேசத் தயங்கியவராய் தயங்கி நின்றார்.
“அது..!அக்கா” என்று கலையின் கையைப் பிடித்துக் கொண்ட அன்னம்,
“அபர்ணா என் அண்ணன் பொண்ணுங்கிறதுக்காக சொல்லலை. நிஜமாவே தங்கமான பொண்ணு. நீங்க தான் அவளை பார்த்துக்கணும்” என்றார்.
“இதெல்லாம் நீ சொல்லனுமா அன்னம். நாங்க பார்த்துக்கிறதை விட சிவா அவளை நல்லா பார்த்துப்பான்” என்றார் கலையரசி.
அன்னத்திற்கும் அது புரிந்து தான் இருந்தது. அவரும் காலையில் இருந்து பார்க்கிறாரே. அவளுக்குத் தேவையான சின்ன சின்ன விஷயங்களை கூட யாரையும் எதிர்பார்க்காமல் அவனே செய்து கொண்டிருந்ததை. அதையெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தவருக்கு, ஒரு நிம்மதி மூச்சு வந்தாலும், நடராஜன் வீட்டு சூழ்நிலையை நினைத்து மனதிற்குள் பயம் இருக்கத்தான் செய்தது.
“ஹேய் ஆபரணம், ஆபரணம் எல்லாம் போட்டு நிஜ பொண்ணு மாதிரி அழகா இருக்கியே?” என்ற கிஷோரை முறைத்தாள் அபர்ணா.
சிவா மனதிற்குள் சிரித்துக் கொள்ள,
“சரி சரி முறைக்காத, அதான் யாரும் வரலையே.ப்ரீயா இருக்கும் போதே வந்து ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்திடுங்க” என்றவன் அவர்களை கையோடு அழைத்துச் சென்றான்.
“எனக்கு பசியில்லை கிஷோர்” என்றாள் அபர்ணா மெதுவாக.
“அதெப்படி ஆபரணம் பசிக்காம இருக்கும். இயர்லி மார்னிங்கே எழுப்பியிருப்பாங்க. இப்ப வரைக்கும் நிஜமா உனக்கு பசிக்கலையா? ஒழுங்கா வந்து சாப்பிடு” என்று மிரட்டி சிவாவின் அருகில் அமர வைத்திருந்தான் கிஷோர்.
ஒரு பக்கம் சிவாவும், மறு பக்கம் கிஷோரும் அமர்ந்திருக்க, அவளுக்குத் தான் அவஸ்தையாய் இருந்தது. கிஷோர் எப்போதும் போல் அவளுடன் உரிமை எடுத்துக் கொண்டு பேச, சிவா என்ன நினைப்பானோ என்ற பதட்டம் வேறு அவளுக்கு.
“ஆபரணம் இப்ப எதுக்குடி இப்படி முழிச்சுட்டு இருக்க? அதுவும் சிவாண்ணாவை ஏதோ பேயைப் பார்க்குற எபெக்ட்ல பார்க்குற? பார்க்க ஹேண்ட்சமா தான இருக்காரு. அவ்வளவு கொடூரமாவும் இல்லையே” என்றவனை,
“என் மானத்தை வாங்காம பேசாம வாயை மூடிட்டு சாப்பிடுடா மலைமாடே” என்றாள் பல்லைக் கடித்தபடி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“சிவாண்ணா, இப்போ இவ என்னை அன்பா திட்டினாளே அது உங்களுக்கு கேட்கலை தான?” என்றான் கிஷோர்.
“கேட்கலை” என்பதைப் போல் தலையாட்டிய சிவா, வந்த சிரிப்பை அடக்கியவனாய் தன் இலையைப் பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“மாத்தி மாத்தி நீங்க ஊட்டனும். அதை போட்டோ வீடியோஸ் எல்லாம் எடுக்கணும். அந்த சீன் இங்க இருக்கா இல்லையா?” என்றான் கிஷோர்.
“அதெல்லாம் இஷ்ட்டப்பட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு” என்று முணுமுணுத்தாள் அபர்ணா. அவள் சொல்லி முடித்தது தான் தாமதம், சட்டென்று தன் இலையில் இருந்த இனிப்பை எடுத்து அவள் வாயில் திணித்திருந்தான் சிவா.
அவள் திகைத்துப் போய் பார்க்க,
“நான் இஷ்ட்டப்பட்டு தான் கட்டிகிட்டேன். நீங்க கஷ்ட்டப்பட்டு கட்டிகிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று பட்டென்று கூறியவன், தன் இலையைப் பார்த்து குனிந்து கொண்டான்.
அவன் ஊட்டிய இனிப்பை சாப்பிடவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருந்தவள், கஷ்ட்டப்பட்டு அதை முழுங்கியிருந்தாள்.
“சித்தப்பா” என்று ஓடி வந்த அண்ணன் பிள்ளைகளைக் கண்டு முகம் மலர்ந்தவன்,
“சாப்பிட்டிங்களாடா தங்கம்ஸ்?” என்றான்.
“ம்ம்..!! சாப்பிட்டோம் சித்தப்பா” என்றவர்கள்,
“பாப்பா தான் இன்னும் சாப்பிடலை. சரிதா சித்தி ஊட்டுனாங்க. ஆனா சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம்” என்றனர். தன்னைப் போட்டுக் குடுத்தவர்களை முறைத்துக் கொண்டு நின்றது அந்த சின்ன வாண்டு.
“அப்படியா? ஆனா பாப்பா இந்த சித்தப்பாகிட்ட சமத்தா சாப்பிடுவாங்களே” என்று சின்ன வாண்டைத் தூக்கி தன் இடப்பக்கம் மடியில் அமர்த்திக் கொண்டவன், குழந்தைக்கும் ஊட்டிக் கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தான்.
அபர்ணாவோ இலையில் இருந்ததை பேருக்கு சாப்பிட்டவள், அவன் குழந்தைக்கு உணவூட்டும் அழகைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு பிரச்சனையே இல்லை ஆபரணம், பாரு சிவாண்ணா குழந்தையை எப்படி கேரி பண்ணிக்கிறார்ன்னு” என்றவன் அவள் முறைத்த முறைப்பில் சிரித்து வைத்தான்.
“இப்ப ஏன் இப்படி அன்பா பார்க்குற?” என்றான் கிஷோர்.
“மரியாதையா இடத்தை காலி பண்ணிடு. எனக்கு இருக்குற கோபத்துக்கு எதையாவது தூக்கி அடிச்சுடுவேன்” என்றாள்.
“ஹப்பா..! இப்பத்தான் பழைய அபர்ணா பார்ம்க்கு வந்திருக்கா. இப்படி இருக்க வேண்டியது தான? அதை விட்டுட்டு என்னமோ சோகத்துலயே ஜொள்ளு வடிச்சுட்டு இருக்க?” என்றவனின் கூற்றில் அமைதியாகிப் போனாள்.
அதன் பிறகு அனைத்தும் ஓரளவிற்கு முடிந்திருக்க, ஆயாசமாய் அமர்ந்தவளுக்கு அப்படி ஒரு அசதி. விட்டால் அப்படியே தூங்கிவிடும் அளவிற்கு மனமும் உடலும் சோர்ந்து போனது.
“நல்ல நேரத்துலையே பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிட்டு கிளம்புங்க” என்ற குரலில் திகைத்தவள் வேகமாய் கபிலனைத் தேடினாள். அவளின் ஓவ்வொரு செய்கையையும் சிவா கண்டும் காணாதவன் போல் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
மூர்த்தியும் சாந்தியும் மகளின் பிரிவை எண்ணி கண்கள் கலங்கி நின்றிருக்க, எங்கே அவர்களை நிமிர்ந்து பார்த்தாள் அழுது விடுவோமோ என்று தன்னை அடக்கிக் கொண்டு நின்றாள் அபர்ணா. அவளின் மனநிலையை உணர்ந்தவன் போல்,
“நீங்களும் வாங்க கபிலன். வீட்டுக்கு வந்துட்டு அப்பறம் போங்களேன்” என்றான் சிவா.
“அது சிவா” என்று கபிலன் தயங்க,
“பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம் கபிலன். நீங்க வாங்க” என்றான் சிவா.
“கபிலா நீயும் வித்யாவும் அபர்ணா கூட போயிட்டு வாங்க. நாங்க வீட்ல போய் பார்க்குறதை பார்க்குறோம்” என்றார் சாந்தி.
“சரிங்கம்மா” என்றவன் தன் காரிலேயே அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
இருவருக்குமிடையில் அந்த ஒரு அடி இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.
ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் செல்லும் போது மட்டும் மறக்காமல் அவளின் கையைப் பிடித்துக் கொண்டான் சிவா. அவளோ அவர்கள் செய்ய சொன்ன அனைத்தையும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு செய்பவளைப் போல் செய்து முடித்திருந்தாள்.
பூஜையறையில் விளக்கேற்றி, கைகூப்பி நின்றவளின் மனம் ஏனோ அமைதியில்லாமல் அலைப்புறுதலுடன் இருந்தது. ஆனால் நிஜத்தையும் நிதர்சனத்தையும் மீண்டும் மீண்டும் தன் மனதில் பதிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
வீட்டில் சொந்த பந்தங்கள் நிறைந்து போயிருக்க, அதில் பாதிப்பேர் அபர்ணாவிற்கு தெரிந்தவர்கள் தான் என்றாலும் ஏதோ வழி தெரியாத காட்டிற்குள் வந்ததைப் போன்ற உணர்வு எழுந்ததை அவளால் தடுக்க முடியவில்லை.
“அபர்ணா முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வையேன்டி” என்றாள் காயத்ரி.
“இந்த மாலையை சுமந்து பாரு தெரியும். அவ்வளவு வெயிட்டுடி. கழுத்தெல்லாம் வலிக்குது” என்றாள் முனுமுனுப்புடன்.
“இதுக்கே இப்படி சொன்னா எப்படிங்க மேடம்?” என்று நமட்டு சிரிப்பு சிரித்தவளை, முறைக்காமல் பாவமாய் பார்த்திருந்தாள் அபர்ணா.
“என்னாச்சு அபூ?” என்றாள் காயத்ரி அக்கறையுடன்.
“எனக்கு நிஜமாவே கொஞ்சம் பயமா இருக்கு காயு” என்றாள் மனதை மறைக்காமல்.
“லூசு! அது எல்லாருக்கும் இருக்குறது தான். போகப் போக எல்லாம் சரியாகிடும்” என்றாள்.
“சரியாகிடுமா?” என்றவளின் வார்த்தைகளில் அவளை யோசனையுடன் பார்த்த காயத்ரி,
“பழசு எதையும் மனசுல வச்சுட்டு நீ பேசலை தான?” என்றாள் மெதுவான குரலில்.
“இல்லைங்கிறதை எப்பவோ ஏத்துக்கிட்டேன் காயு. ஆனா அது முன்னாடி எனக்குள்ள இருந்ததைத் தான் மறக்க முடியலை” என்றாள்.
“அதெல்லாம் சிவா அண்ணா மறக்க வச்சிடுவார்” என்றாள் காயத்ரி.
கேட்பது மற்றவர்களுக்கு எதார்த்தமாய் தெரிந்தாலும் அபர்ணாவிற்கு அப்படி படவில்லை. செல்வியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து மட்டும் வைத்தாள்.
“ஹேய் ஆபரணம்! அப்போ நான் கிளம்புறேன்”என்றபடி கிஷோர் கிளம்ப எத்தனிக்க,
“என்ன உடனே கிளம்புற?” என்றாள் அபர்ணா வேகமாய்.
“ஆபரணம் அப்பாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே. இதுக்கே மனுஷன் அங்க ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்திருப்பார். நான் இங்க வந்ததே அவருக்குத் தெரியாதுடி. விஷயம் அவரு காதுக்கு போறதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுறேன்” என்றவன் அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள,
“ம்ம் சரிடா” என்றாள் கண்கள் கலங்க.
“இதென்ன தம்பி இப்படி பேசுற பழக்கம்? முறையை சொல்லி பேசிப் பழகு” என்றாள் செல்வி வெடுக்கென்று.
கிஷோர் அதிர்ந்து போன பார்வையுடன், சட்டென்று அபர்ணாவின் தோளின் மீதிருந்த கையையும் எடுத்திருந்தான்.
“அ..அது.. சாரி அண்ணி..! அபர்ணாவும் நானும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ். அந்த பழக்கத்துல கூப்புட்டுட்டேன்” என்றவனுக்கு ஏனோ வார்த்தைகள் தொண்டைக்குள் அடைத்தது.
“இதுக்கு முன்னாடி எப்படியோ? இனியும் அப்படி கூப்பிட்டா பார்க்குறவங்க ஒரு மாதிரி நினைக்க மாட்டாங்க?” என்றாள் செல்வி.
கிஷோரின் முகத்தைப் பார்த்த காயத்ரிக்கு செல்வி மேல் எரிச்சலாக வந்தது.
‘சொல்றதை இந்தம்மா கொஞ்சம் தன்மையா சொன்னாதான் என்ன?’ என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டாள்.
“கிஷோர்” என்ற அபர்ணா ஒரு தவிப்புடன் அவனைப் பார்க்க,
“டேக் கேர் ஆபரணம்” என்றவன் கிளம்பிவிட்டான். அவனின் பின்னால் வேகமாய் வெளியே வந்த கபிலன்,
“டேய் கிஷோர் அவங்க ஏதோ தெரியாம பட்டுன்னு பேசிட்டாங்க. நீ பீல் பண்ணாத” என்றான்.
“அம்மா சொன்னப்போ எனக்கு புரியலை மாமா. ஆனா இப்போ புரியுது. ஆபரணம் எங்க வீட்டுக்கு அண்ணியா வரலையே? அப்படி வந்திருந்தா அந்த உரிமை வேற தான? என்ன இருந்தாலும் இங்க நான் யாரோ தான் மாமா” என்றவன் வண்டியை எடுக்க,
“அப்போ அண்ணான்னு பேசுறது எல்லாம் வாய் வார்த்தை தான் இல்லையா” என்ற சிவாவின் வார்த்தைகளில் திகைத்து திரும்பி பார்க்க சிவா தான் நின்றிருந்தான்.