திருமணப் பட்டை உடுத்தி, மிதமான அலங்காரத்தில் தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருந்தவளை அருகில் அமர்ந்து முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
“அழகா இருக்க அபி. நிஜமாவே என் கண்ணு வேற எங்கயும் போக மாட்டேங்குது. நான் என்ன பண்ண?” என்றான் சிரிப்புடன்.
சிவாவின் மொத்தக் குடும்பமும் அவர்களைத் தான் பார்த்திருந்தது.
“ரொம்பத்தான் மினுக்குறா? ஏன் நம்மல்லாம் பிள்ளையே பெக்கலையா என்ன? என்னமோ இவ மட்டும் தான் மாசமா இருக்குற மாதிரி, இவன் மட்டும் தான உலகத்துல இல்லாத பொண்டாட்டி கட்டுன மாதிரி? கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க” என்றாள் செல்வி சரிதாவிடம்.
“நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடி” என்ற பிரபாகரன் இருக்கும் இடம் கருதி பொறுமையை இழுத்துப் பிடித்தான்.
“செல்வி, சரிதா நீங்க ரெண்டு பேரும் வந்து வளையல் போடுங்கம்மா” என்று சாந்தி அழைக்க,
“இப்போ தான் உங்களுக்கு கூப்பிடனும்னு தோணுச்சா” என்று ஒரு ‘இ’க்கன்னா உடன் தான் சென்றாள் செல்வி.
“நீங்கதான் முன்ன இருந்து நடத்தனும் செல்வி. என்ன இருந்தாலும் நீதானம்மா மூத்த மருமக” என்றனர் உறவுக்கார பெண்கள்.
“உங்களுக்குத் தெரியுது. தெரிய வேண்டியவங்களுக்குத் தெரியணுமே?” என்று பதவிசாக உரைத்தவள், அவள் இல்லாமல் அந்த வீட்டில் அணுவும் அசையாது என்ற தோற்றத்துடன் சென்று அபிக்கு வளையலைப் போட்டாள்.
அபியோ அவர்கள் வளையல் போட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்திருந்தாள்.
“என் முகமே அப்படித்தான்”என்றாள் செல்வி. அபி பதில் பேச வாயைத் திறக்க, சிவா அவளின் கையைப் பிடித்து ‘வேண்டாம்’ என்றான் ஜாடையில். அவள் அப்படியே அமைதியாகிவிட்டாள்.
அவர்கள் கீழே சென்ற பின்,
“ஏன் சக்தி பேச வேண்டாம்னு சொன்னிங்க?” என்றாள்.
“அவங்களை எப்பவும் திருத்த முடியாது. ஏன் டென்ஷன் ஆகி நம்ம நிம்மதியை கெடுத்துக்கணும். அவங்க அப்படித்தான். நாம இப்படித்தான். விட்டுத் தள்ளு அபி” என்றான் கூலாக.
“வர வர நீங்க எல்லா விஷயத்தையும் கூலா ஹேண்டில் பண்றிங்க சக்தி” என்றாள்.
“உன்னைக் கூடத்தான் கூலா ஹேண்டில் பண்றேன்” என்றவனைப் பார்த்தவளின் முகம் சிவந்திருந்தது.
“மாப்பிள்ளை இப்போ நீங்க போட்டு விடுங்க” என்று சாந்தி வளையலைக் கையில் கொடுக்க,
அவனோ தான் வாங்கி வைத்திருந்த தங்க வளையலை எடுத்து போட்டிருந்தான். கண்களை விரித்தவள்,
“எப்போ வாங்குனிங்க சக்தி? என்கிட்ட சொல்லவே இல்லை. இப்போ எதுக்கு தேவையில்லாத செலவு” என்று யாருக்கும் கேட்காமல் முனுமுனுத்தாள்.
“இப்படி சொல்லுவன்னு தான் அபி சொல்லலை. இருந்த நகையெல்லாம் என்கிட்ட தூக்கிக் கொடுத்துட்ட. இதுவரைக்கும் நான் பொட்டுத் தங்கம் வாங்கித் தரலை. இப்பவும் வாங்கித் தரலைன்னா நான் என்னடி புருஷன்?” என்றான் அவனும் யாருக்கும் கேட்காதபடி.
“கொழுந்தனார் பொண்டாட்டிக்கு தங்க வளையல் எல்லாம் வாங்கிப் போடுறார்க்கா” என்றாள் சரிதா.
“அது தான் சரிதா எனக்கும் புரியலை. கடையில கொஞ்சம் வருமானம் வந்த உடனே ஓவரா ஆடுறாங்களோ? எத்தனை நாளைக்கு?” என்றாள் செல்வி.
“அதை நீ சொல்ற பார்த்தியா? அதைத்தான்டி என்னால தாங்க முடியலை. ஆடுறதைப் பத்தி யார் பேசுறதுன்னு விவஸ்தை இல்லாம போய்டுச்சு.நீ ஆடாத ஆட்டமா?” என்றான் பிரபாகரன்.
“நீங்க வாங்கிக் குடுத்து ஒன்னும் நான் ஆடலையே. என் அப்பா வாங்கிக் கொடுத்தது தான?” என்றாள் படக்கென்று.
“உங்கப்பன் நல்லதைத் தான் வாங்கிக் குடுத்திருக்காரு. எங்கப்பன் வாங்கிக் கொடுத்தது தான் சரியில்லை” என்றான் பிரபா நக்கலுடன்.
“உங்கப்பா என்ன வாங்கிக் குடுத்தாரு?” என்றாள்.
“எல்லாம் உன்னையத்தான். பிளளைங்களுக்காக பார்க்குறேன். இல்லை, நல்ல வக்கீலா பார்த்திடுவேன். ஒழுங்கு மரியாதையா வாயை அடக்கிட்டு இருக்குறதுன்னா இரு. அப்பன் பெருமை தான் பேசணும்னா அவர் வீட்லயே போய் இருந்துக்க. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்றான் பட்டென்று.
“அண்ணா இங்க வந்துமா? கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன். அண்ணி நீங்களும் அமைதியா இருங்க” என்று சத்யா சொல்லவும் தான் இருவரும் வாயை மூடினர்.
மாதவனுடன் சுஜிதாவும் வந்திருந்தாள் தன் பத்துமாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு.
“எல்லாருக்கும் சொல்லிட்டு அத்தை வீட்டுக்கு சொல்லாம எப்படி அபர்ணா?” என்றார் சாந்தி.
மாதவனோ எந்த சஞ்சலமும் இல்லாமல் சிவாவைப் பார்த்திருந்தான். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. குழந்தையை அவன் வைத்திருக்க, அபர்ணாவிற்கு வளையல் போட்ட சுஜிதாவோ,
“உங்களுக்கும் என் பாப்பா மாதிரியே பாப்பா பிறக்க வாழ்த்துக்கள் அபர்ணா” என்றாள்.
பல்லைக் கடித்த அபி “ஒரு நிமிஷம் சுஜிதா..! உங்க குழந்தை மாதிரி எனக்கு ஏன் குழந்தை பிறக்கணும். எனக்கு என் புருஷனை மாதிரி குழந்தை பிறந்தா போதும்” என்றாள் பட்டென்று.
“ஹேய் அபர்ணா..! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. இதோ என் பாப்பா மாதிரி உங்களுக்கும் க்யூட்டா பாப்பா பிறக்க வாழ்த்துக்கள்னு சொன்னேன்” என்றாள்.
“நீங்க எப்போ எப்படி பேசுவிங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் சுஜிதா. இதெல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்கோங்க” என்று அபர்ணா பட்டென்று சொல்லிவிட, முகத்தில் எதையும் காட்டாமல் சென்றாள் சுஜிதா.
“சரியான பைத்தியம் போல சக்தி” என்றாள் கடுப்பில்.
“சரியாகாத பைத்தியம். நாம ஒன்னும் செய்ய முடியாது” என்று சொன்னவனின் தொனியில் சிரிப்பு வந்திருந்தது அவளுக்கு.
வளைகாப்பு முடிந்து சாந்தியும் மூர்த்தியும் அவளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல.. சக்தியோ கடுப்பில் இருந்தான்.
“கூடப் போகக் கூடாது சிவா. கொஞ்ச நேரம் கழிச்சு போ” என்றார் கலையரசி.
“சரிங்கம்மா” என்றவன்,
நடராஜனின் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்திருந்தான்.
“இப்போ எங்களுக்கு எதுக்குத் தம்பி பணம்?” என்றார் நடராஜன்.
“வைங்கப்பா..! உங்களுக்கும் தேவைப்படும்” என்பதோடு முடித்துக் கொண்டான். வீட்டை விட்டு சென்றாலும் மறக்காமல் அவ்வப்போது அவன் கடமையை ஏதாவது ஒரு வகையில் செய்து விடுவான் சிவா. தங்களுடன் வந்து இருக்குமாறு கூட அழைத்துப் பார்த்தான். அவர்கள் தான் வரவில்லை. அவர்கள் வர விருப்பப்பட்டாலும் செல்வி விடமாட்டாள் என்று அவர்களுக்குத் தெரியும். சிவாவும் அவர்களின் விருப்பம் என்று விட்டுவிட்டான்.
வீட்டில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த அபர்ணாவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் சாந்தி.
“அபர்ணா, வந்து ரெண்டு மணி நேரம் கூட ஆகலை. அதுக்கு இந்த அக்கப் போறா? திரும்புடி இந்த ஜடை அலங்காரத்தையாவது கலைச்சு விடுறேன். எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப?” என்றார்.
“ஒன்னும் வேண்டாம்மா..! கல்யாணம் முடிஞ்சு அப்படியே விட்டுட்டு போனிங்க தான? அன்னைக்கு நீங்களா வந்து ஹெல்ப் பண்ணிங்க. அன்னைக்கு பண்ணவரே இன்னைக்கும் வந்து பண்ணுவார்” என்ற தங்கையின் பேச்சில் கபிலன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“மாமா இவளுக்கு முத்திடுச்சு” என்றான் கிஷோர்.
“உனக்கும் தெரிஞ்சுடுச்சா?” என்றான் கபிலன்.
அபர்ணா அவர்களை முறைத்துக் கொண்டிருக்கும் போதே சிவாவும் வந்து விட்டான்.
“என்ன அபி? இன்னும் ட்ரஸ் சேன்ஜ் பண்ணலையா?” என்று கடிந்து கொண்டவன், அவள் சொல்லாமலேயே தலையலங்காரத்தை கலைக்க, வீட்டினர் அனைவரும் ‘ஆ’ வென்று பார்த்திருந்தனர். அவன் பொறுமையாக ஒவ்வொன்றையும் எடுத்து முடித்தவன், இன்று நகைகளையும் அவனே கழற்றி இருந்தான்.
“ரெண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி தான் மாமா” என்றான் கிஷோர்.
அவள் குளித்து விட்டு வர,
“அப்போ நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா?” என்றான் சிவா.
“இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கலாமே சிவா” என்றான் கபிலன்.
“நாங்க நாளைக்கு வரோம் கபிலன். பக்கத்துக்கு ஸ்ட்ரீட்ல தான இருக்கோம். பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்கு” என்றவன் அவளை கையோடு அழைத்து சென்று விட்டான்.
அவர்களின் வீட்டில்..
“எப்படி இருக்கு சக்தி?” என்று வளையல்களை ஆட்டி சின்னப் பிள்ளைப் போல் கேட்டுக் கொண்டிருந்தவளைப் பார்க்க தெவிட்டவில்லை சிவாவிற்கு.
“அழகா இருக்கு அபி” என்றான்.
“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்” என்றாள்.
“நீதான ஆசைப்பட்ட அபி..! நீ ஆசைப்பட்டதை நடத்திக் குடுக்கத் தான நான் இருக்கேன்” என்றான் நமட்டு சிரிப்புடன்.
“ஆமா ஆமா..! நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது எனக்கு” என்றவளுக்கு முகத்தில் சிறு வெட்கத்தின் சாயல்.
“அபி ஹேப்பி தான?” என்றான் அவள் வயிற்றை வருடியபடி.
“ஹேப்பியோ ஹேப்பி தான்” என்றாள்.
அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்,”நான் நினைச்சுக் கூட பார்க்கலை அபி. நடக்குறது எல்லாமே ஏதோ கனவு மாதிரி இருக்கு” என்றான்.
“ஏன் அப்படி இருக்கு?” என்றாள் அபி புரியாமல்.
“கல்யாணம் முடிஞ்சப்போ நீ எப்படி இருந்தான்னு உனக்கே தெரியும் தான அபி. அதோட நானும் எந்த நிலையில இருந்தேன்னு எனக்கும் தெரியும். அப்பல்லாம் ஒரே யோசனையா இருக்கும். உன்னை சரிகட்டி நான் சரியாகி லைப் எப்படி மூவ் ஆகப் போகுதுன்னு யோசிச்சுட்டேன் இருப்பேன். ஆனா இவ்வளவு அழகா மூவ் ஆகும்னு அன்னைக்கு யாராவது சொல்லியிருந்தா சத்தியமா நம்பியிருக்க மாட்டேன் அபி” என்றான்.
“நீங்க தான் காரணம் சக்தி” என்றாள்.
“நானா?”
“ஆமா நீங்களும், உங்க அன்பும் தான் காரணம். கணவன் மனைவிக்குள்ள அன்பும் அண்டர்ஸ்டேன்டிங்கும் இருக்கணும்னு நீங்க தான் தெளிவா உணர வச்சிங்க. என்னோட பாதிக் காயம் பாதியிலயே ஆறுனதுக்கு உங்க புரிதல் தான் காரணம். தேங்க்ஸ் சக்தி” என்றாள்.
“தேங்க்ஸ் வேண்டாம் … தேங்க்ஸ் சொன்ன அபி தான் வேணும்” என்று காதோரத்தில் கேட்டவனின் குரலில் சிலிர்த்தவள், விரும்பியே அவனுக்குள் அடைக்கலமாகியிருந்தாள்.
பத்தாவது மாதத்தின் தொடக்கத்திலேயே அபர்ணாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவள் குழந்தையை பெற்றெடுக்கும் முன் சிவா தான் ஒரு வழியாகியிருந்தான்.
மனைவியையும் குழந்தையையும் நல்ல முறையில் பார்க்கும் வரை அவன் உயிர் அவனிடத்தில் இல்லை.
வயிற்றில் இருக்கும் போது அதிகம் படுத்தி எடுக்காத மகன் பிறக்கும் போது சற்று சிக்கலாகி, அனைவரையும் டென்ஷன் படுத்திவிட்டுத் தான் பூமியைப் பார்த்திருந்தான்.
தன் ரத்தத்தில் உதித்த மகவைக் கையில் வாங்கும் போது தனக்குள் ஓடிய சிலிர்ப்பை தானே உணர்ந்து கொண்ட தருணம் அது.
கண் விழித்தவள் கண்டது கணவனையும் அவன் கையில் இருந்த குழந்தையையும் தான்.
அவனைப் பார்த்தவள் கையை நீட்ட,
“அபி” என்று அவன் சொன்னது தான் மாயம், அபர்ணா அழ ஆரம்பித்திருந்தாள்.