“கொஞ்சம் வந்து கூட மாட உதவி செய்யலாம்ல அபர்ணா. உங்க அண்ணிக்கு நல்ல காலத்துலயே வேலை செய்ய வராது. நான் ஒரே ஆளா என்ன பண்ண முடியும்?” என்றார் அலுப்புடன்.
“அதான் அண்ணன் கடையில வாங்கிக்கலாம்ன்னு சொன்னான்ல. நீங்க தான் வேண்டாம்னு சொன்னிங்களாம். அப்பறம் இப்போ இப்படி பேசுறிங்க?” என்றாள் கடுப்புடன்.
“ஒருத்தரும் ஒன்னும் செய்ய வேண்டாம்” என்ற சாந்தி அமைதியாய் வேலையை பார்க்க, அதற்கு மேல் அபர்ணாவிற்கு மனசுக் கேட்கவில்லை.
“சரி சரி என்ன செய்யணும்னு சொல்லுங்க” என்றவள் அவர் அடுக்கியதைப் பார்த்து நெஞ்சைப் பிடித்துவிட்டாள்.
“ஏன் அடுத்து ஒரு வாரத்துக்கு அவங்க சாப்பிடவே மாட்டாங்களா?” என்றாள் கிண்டலாய். இருந்தாலும் சாந்தி சொன்ன அனைத்தையும் மனம் குறித்துக் கொண்டது.
“டேய் நல்லவனே! வந்து கடைக்கு போயிட்டு வாடா” என்று கிஷோரை அழைக்க,
“ஆபரணம் நீயா சமைக்க போற?” என்றான் திகைப்புடன்.
“ஏன் வேண்டாமா?” என்றாள்.
“ச்ச்சா..! யாராவது நல்ல சோறு கிடைக்குதுன்னா வேண்டாம்னு சொல்லுவாங்களா?” என்றவன்,
“உன்னைக் கஷ்ட்டப்படுத்தி எதுவும் செய்ய வேண்டாம் ஆபரணம்” என்றான் அவள் மனம் புரிந்தவனாய்.
“உன்னோட சென்ட்டிமென்ட் சீனெல்லாம் அறுந்து போச்சு. போய் இதெல்லாம் வாங்கிட்டு வா” என்று லிஸ்ட்டை கொடுத்தாள்.
காயத்ரியும், சாந்தியும் மற்ற வேலைகளை செய்து குடுக்க, கடகடவென்று சமைத்துக் கொண்டிருந்தாள் அபர்ணா. சமைத்து முடிக்க நான்கு மணி நேரம் பிடித்திருந்தது.
அனைத்தையும் எடுத்து வைத்தவள் “நான் போய் குளிச்சுட்டு வரேன்மா” என்றபடி அவள் அறைக்குள் சென்று விட்டாள். கபிலனும் வித்யாவை அழைத்துக் கொண்டு வர, சிவா மட்டும் தான் அங்கு இல்லை.
அவள் குளித்து முடித்து வெளியே வரும் போது மாதவனின் மொத்தக் குடும்பமும் அங்கு இருந்தது. அதிசயமாக முத்துமாணிக்கமும் ‘ரொம்ப சீக்கிரம் விருந்து வச்சுட்டிங்க’ என்ற முனுமுனுப்புடன் வந்திருந்தார்.
“அபர்ணா எப்படிடா இருக்க?” என்ற அன்னத்தின் பார்வை ஆதூரமாய் அவளை வருடிச் சென்றது.
“நல்லா இருக்கேன் அத்தை” என்றவள் அனைவரையும் பார்த்து பொதுவாக “வாங்க” என்றாள்.
“சாப்பிட வாங்கண்ணா” என்று சாந்தி அழைக்க, மூர்த்தியோ மகளை தன்னிடத்தில் பிடித்து வைத்துக் கொண்டார்.
“நீ எதுவும் பண்ண வேண்டாம்டா. சமைச்ச வரைக்கும் போதும்” என்று சொல்லியிருக்க, அவளும் தந்தையுடன் அமர்ந்து கொண்டாள்.
மாதவனின் மனைவி சுஜிதாவோ யாருடனும் அதிகம் பேசாமல் அமைதியாய் இருக்க, கிஷோரோ பேசிக் கொண்டே இருந்தான்.
“கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன் கிஷோர். காதெல்லாம் வலிக்குது” என்றாள் சுஜிதா பட்டென்று.
“அப்படி சொல்லும்மா! எப்பப் பாரு லொடலொடன்னு பேசிட்டே இருப்பான்” என்று முத்து மாணிக்கமும் மருமகளுக்கு ஒத்து ஊத,
“சாரி அண்ணி” என்றவன் எதுவும் பேசவில்லை. ஆனால் சாப்பிடாமல் அளந்து கொண்டே இருந்தான். மாதவனுக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது.
“பாவம் கிஷோர்” என்றாள் காயத்ரி.
“என்ன திடீர்ன்னு அவன் மேல உனக்கு பாச மழை பொங்குது” என்றாள் அபர்ணா சந்தேகமாய்.
“அவன் நம்ம பிரண்டுடி” என்றாள் காயத்ரி.
“உனக்கு ஞாபகத்துல இருந்தா சரித்தான்” என்றவள்,தந்தையிடம் கண்களால் அனுமதி வாங்கிவிட்டு எழுந்து சென்றிருந்தாள்.
“இப்ப எதுக்கு சாப்பாட்டை அளந்துட்டு இருக்க. உனக்குப் பிடிச்ச பிரியாணி தான. ஒழுங்கா சாப்பிடுற வழியைப் பாருடா மலைமாடே” என்ற அபர்ணா, அவனுக்கு ஒரு லெக் பீசை எடுத்து வைக்க,
“போதும் ஆபரணம்” என்றான்.
“டேய் ஓவரா சீனைக் கூட்டாத? சமைக்கும் போது எதையெல்லாம் சாப்பிடனும்னு சொன்னியோ அதையெல்லாம் இப்ப சாப்பிடுற” என்றவள் அவன் தட்டை நிறைத்திருந்தாள்.
“அப்படியெல்லாம் இல்லையே?” என்றவள் அவர்கள் அனைவருக்கும் தேவைப்பட்டதை பார்த்துப் பார்த்து பரிமாற, அன்னம் தான் கலங்கிய கண்களை கீழே குனிந்து துடைத்துக் கொண்டார்.
“என்ன பார்க்குறிங்க? இவருக்கு முதல்ல உங்களைத் தான் மேரேஜ் பண்றதா இருந்ததாமே. உங்களுக்கும் கூட விருப்பம்ன்னு சொன்னாங்க” என்றாள் சுஜிதா.
“யார் சொன்னா?” என்றாள் உணர்வற்ற குரலில்.
“பெரிய மாமா தான் சொன்னாங்க” என்று முத்து மாணிக்கத்தை கை காட்டினாள் சுஜிதா.
“ஹோ” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. சட்டென்று ஏனோ சிவாவின் ஞாபகம் வந்தது அவளுக்கு. அவன் இப்போது இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றிய தன் எண்ணத்தைக் கண்டு திகைத்தாள்.
கணவனைப் பற்றிய நினைப்பில் இருந்தவளை “என்னங்க பழைய மெம்மரிஸ்க்கு போயிட்டிங்களா?” என்ற சுஜிதாவின் பேச்சு அங்கிருந்த யாருக்கும் பிடிக்கவில்லை,முத்து மாணிக்கத்தைத் தவிர.
“பழைய மெம்மரிஸ்ன்னு ஒரு மண்ணும் இல்லைங்க. மெம்மரிஸ்ல வச்சுக்கிற அளவுக்கு அது எனக்கு அவ்வளவு முக்கியமானதும் கிடையாது. நான் என் புருஷனைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன், வேற ஒண்ணுமில்லை” என்றவள் மேற்கொண்டு அவளிடம் பேச்சை வளர்க்கவில்லை. மாதவனின் பார்வை தான் ஒரு தர்ம சங்கடத்துடன் அபர்ணாவைப் பார்த்தது.
“ஹோ..! நீங்க மிஸ்டர் சிவாவை சொல்றிங்களா? அவரைப் பத்தி எங்கப்பா நிறைய சொல்லியிருக்கார். ரொம்ப நல்ல மாதிரி, திறமையானவரும் கூடன்னு அடிக்கடி சொல்லுவார்” என்றாள் சுஜிதா.
“ஆமாமா..! ரொம்பத் திறமை தான். அதான் படிச்சுட்டு பேக்கரியில வேலை பார்த்துட்டு இருக்கான்” என்றார் முத்து மாணிக்கம்.
“எங்க வேலை பார்த்தா என்ன மாமா? உழைச்சு தான சம்பாதிக்குறார். அவங்கப்பா சேர்த்து வச்ச சொத்துல உட்கார்ந்து தின்னுட்டு ஊரைச் சுத்திட்டு இல்லையே?” என்றாள் அபர்ணா வேகமாய். ஒரு நாளும் அவரை எதிர்த்து பேசியதில்லை அவள். இன்று சிவாவை சொல்லவும் எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ அவளுக்கு.
“அதுக்கு முதல்ல அவங்கப்பன் சேர்த்து வச்சிருக்கணும்மா. ” என்றார் முத்து மாணிக்கம்.
“தான் பசங்களுக்கு திறமை இருக்குன்னு நினைச்சு தான் என் மாமனார் சேர்த்து வைக்கலையா என்னவோ? வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடுவாரு நடராஜன் மாமா. உங்க அண்ணன் தான மாமா? உங்களுக்குத் தெரியாம இருக்குமா?” என்றாள் அபர்ணா விடாமல். அவளுக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும் முத்து மாணிக்கத்தின் முன்பு அவர்களை விட்டுக் கொடுத்து பேச மனம் ஒப்பவில்லை.
“எப்படியோ ரெண்டு பெரும் சரியாத்தான் ஒன்னு சேர்ந்திருக்கிங்க?” என்ற முத்து மாணிக்கத்திற்கு எரிச்சலாய் வந்தது. அபர்ணா தன்னை பேசியதை யாரும் கேட்காதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்னத்தை முறைத்தவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார்.
அபர்ணாவும் மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பவில்லை. மீறி பேசினால் அந்த கோபத்தை அன்னம் அத்தையிடம் தான் காட்டுவார் என்று அவளுக்குத் தெரியும்.“நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன்” என்ற அபர்ணா எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட, அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, உள்ளே தனியாய் இருந்த அபர்ணாவிற்கு சுஜிதா பேசியதே மீண்டும் மீண்டும் மனதிற்குள் வந்து போனது.
அனைவரின் முன்னால் அவள் அப்படி பேசுவாள் என்று அபர்ணா எதிர்பார்த்திருக்கவில்லை.ஆனால் எந்த நிலையிலும் அவள் மாதவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. மனம் என்னவோ சிவாவைத் தான் தேடியது.
‘இதையெல்லாம் கடந்து தான் வரணும் அபி’ என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்வதைப் போல் தோன்ற, ஏனோ அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அவளுக்குள்.