“கலை” என்ற நடராஜனின் குரலில் இருவருமே திரும்ப, ஒரு இறுக்கத்துடன் இருந்தார் நடராஜன்.

“உன்னை யாரு இங்க வர சொன்னது? அவங்களா ஒரு முடிவை எடுத்துட்டு பேசுறாங்க. நாம என்ன சொன்னாலும் புரியப் போறது இல்லை. இனி இதைப் பத்தி பேசாத. வா கீழ” என்றார்.

“மூணு பேரும் ஒண்ணா ஒரு வீட்ல இருக்கணும்னு தானங்க ஆசைப்பட்டோம். இப்போ ஒருத்தன் மட்டும் தனியா போனா பார்க்குறவங்க என்ன பேச மாட்டாங்க. வெளிய போய் கஷ்ட்டப்படனும்னு என் பையனுக்கு என்ன தலை எழுத்தா என்ன?” என்றார் கலையரசி.

“அப்போ உள்ள இருந்தே கஷ்ட்டப்படட்டும்னு சொல்றிங்களா? உங்க பையன் மேல என்ன ஒரு அக்கறை உங்களுக்கு?” என்றாள் பட்டென்று.

“அவன் மேல எங்களுக்கு அக்கறையே இல்லாதது மாதிரி பேசாதமா அபர்ணா” என்றார் நடராஜன்.

“உண்மையைத் தான மாமா சொல்றேன். எப்பவும் ஒரு வீட்ல கடைசிப் பிள்ளையைத் தான் அடிக்கடி கடைக்கு அதுக்கு இதுக்குன்னு சில்லறை வேலைக்கெல்லாம் அனுப்புவாங்க. ஆரம்பத்துல இருந்து சக்தியை அப்படியே பழக்கி, கடைசி வரைக்கும் அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்குறதுக்குப் பேரு தான் அக்கறையா மாமா?” என்றாள்.

“நாங்க அப்படி நினைப்போமா அபர்ணா. அவன் எங்க புள்ள” என்றார் நடராஜன்.

“நினைச்சிருக்கிங்களே!” என்றவள்,

“உங்க மத்த ரெண்டு பசங்களும் முதலாளியா இருக்கணும்னு ஆசைப்பட்ட நீங்க, ஏன் சக்தியை மட்டும் கடைசி வரைக்கும் அண்ணன் கிட்ட வேலை செய்ற ஒரு எம்ப்ளாயாவே இருக்கணும்னு நினைக்கிறிங்க? நல்லா படிச்சிருக்க ஒருத்தரை, உங்க மூத்த மகனுக்கு நம்பிக்கையான ஆள் வேணுமன்ற ஒரே காரணத்துக்காக அவரோட கெரியரை ஸ்பாயில் பண்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?

சரி அப்படி தன்னோட கெரியரை விட்டுட்டு இங்கயே கிடந்தவருக்கு உரிய மரியாதையாவது கிடைச்சுதா? அதுவும் கிடையாது. என்னமோ உங்க மூத்த மருமக அவங்க வீட்ல இவர் என்னமோ ஆடு மாடு மேய்க்கிற மாதிரி அவ்வளவு இளக்காரமா பேசுறாங்க? இவ்வளவு ஏன்? நேத்து என்கிட்டயே சொன்னாங்களே, ஒன்னுமில்லாதவனைக் கட்டிட்டு இவ்வளவு ஆட்டம் தேவையான்னு? அப்பல்லாம் உங்களுக்கு கோபமும் ரோஷமும் வரலை. இன்னைக்கு அவர் எனக்கு வீட்டு வேலையில ஹெல்ப் பண்ணிட்டாருன்னு அத்தை அட்வைசை தூக்கிட்டு வர்றாங்க. இது எந்த ஊர் நியாயம் மாமா?” என்றாள் கோபமாய்.

“செல்வி இப்படி பேசுனது எனக்குத் தெரியாது அபர்ணா” என்றார் கலையரசி.

“தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்பிங்க அத்தை? அப்பவும் இதே மாதிரி என்கிட்ட தான் பொறுமையா போக சொல்லியிருப்பிங்க” என்றவள்,

“இங்க பாருங்க அத்தை..! என் புருஷன் ஒன்னுமில்லாதவன் தான். நான் ஒன்னுமில்லாதவன் பொண்டாட்டி தான். ஆனா நீங்க ஒன்னுமில்லாதவருக்கு மட்டும்  அப்பா அம்மா இல்லை. சக்தியை தவிர்த்து உங்க ரெண்டு பசங்களும் நல்ல நிலமையில தான் இருக்காங்க. அதனால நீங்க இதுல வருத்தப்பட எதுவுமில்லை. வருத்தமோ கவலையோ போராட்டமோ அது எங்களுக்குத் தான். அதை நாங்க பார்த்துக்கிறோம். எங்க இருந்தாலும் சக்தி உங்க பிள்ளைன்றது மாறாது. ஒரே வீட்ல இருந்தாத்தான் ஒண்ணா இருக்குறதா அர்த்தமா என்ன?” என்றாள் தீர்க்கமாய்.

காலையில் எழும் போது இருந்த நல்ல மனநிலையே மாறிப் போயிருந்தது அவர்களால். எரிச்சலுடன் திரும்பியவள், மாடிப் படியில் சாய்ந்து நின்றிருந்தவனைப் பார்த்ததும் முறைத்தாள்.

“மாவு பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டிங்களா?” என்றாள். அப்போது தான் பெற்றவர்களும் மகனைப் பார்க்க, அமைதியாய் வந்தவன் வாங்கி வந்திருந்த மாவு பக்கெட்டை அவளிடம் நீட்டியிருந்தான்.

“சிவா”என்றார் கலையரசி.

“அப்பா இதுவரைக்கும் நீங்க வருத்தப்படக் கூடாதுன்னு தான் பொறுமையா இருந்தேன். இப்போ நான் வருத்தப்படக் கூடாதுன்னு நீங்க நினைச்சா மேற்கொண்டு இதைப் பத்தி பேச வேண்டாம். இனியாவது என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்க” என்றான்.

மகனை சில நிமிடங்கள் அமைதியாய் பார்த்தவர்,”உனக்கு எது சரின்னு தோணுதோ அதையே செய் சிவா. எல்லாரையும் பார்த்துட்டு உன்னைப் பார்க்காம விட்டுட்டேன்னு இப்போ தான் புத்திக்கு உறைக்குது” என்றவர்

“வா கலை போகலாம்” என்றபடி சென்றுவிட்டார். கலையரசி தான் மனமே இல்லாமல் சென்றார்.அவர்கள் சென்ற பிறகு முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த அபர்ணாவின் அருகில் சென்றான் சிவா.

“என்ன?” என்றாள் கடுப்புடன்.

“என்ன?” என்றான் அவன் மீண்டும்.

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்க எல்லாருக்கும்? என்னமோ உங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரியும், நான் தான் மயக்கி உங்களை தனிக் குடித்தனம் கூட்டிட்டு போற மாதிரியும் பேசுறாங்க. இதெல்லாம் தேவையா சக்தி எனக்கு? நீங்க ஏன் வேற வீடு பார்க்குறேன்னு சொன்னிங்க? எனக்கு இங்கயே ஓகே தான்” என்றாள் படபடவென்று.

“அபி” என்றான் சிவா.

“நான் கோவமா இருக்கேன் சக்தி” என்றாள் முறைப்புடன்.

“நான் வேணும்னா கட்டிப் பிடிச்சு கோபத்தை கரைய வைக்கவா?” என்றான் சிரிப்பை அடக்கி.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க ஏன் துணியை வாஷ் பண்ணிங்க. அதனால வந்தது தான் இத்தனையும்?” என்றாள்.

“நம்ம வீட்டு வேலையை நாம ஷேர் பண்ணி செய்றதுல என்ன கௌரவம் வேண்டியிருக்கு?” என்றான்.

“இதை நீங்க உங்க அம்மாகிட்ட தான் சொல்லியிருக்கணும்” என்றாள்.

“என்கிட்ட கேட்டிருந்தா கண்டிப்பா இதே பதிலைத் தான் சொல்லியிருப்பேன்” என்று அவன் சொல்ல அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கபிலனிடம் இருந்து அழைப்பு வந்தது அவளுக்கு.

“அண்ணா” என்றவளுக்கு எதிரில் கபிலனின் குரல் சுரத்தையின்றி ஒலித்ததைப் போல் இருந்தது.

“என்னண்ணா?சண்டே எப்பவும் பிரிஸ்க்கா இருப்ப. இன்னைக்கு குரலே டல்லடிக்குது?” என்றாள் யோசனையுடன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அபி” என்றவன் பின் வேறு வழியின்றி அவள் அழுத்திக் கேட்கவும் சொல்லியிருந்தான்.

“மாதவனை நாம கூப்பிட்டு தாய்மாமன் வீட்டு விருந்து வைக்கலையாம். உன்னோட கல்யாண வேலையில அதை மறந்துட்டோம். அதுக்கு அப்பறம் கூப்பிட்டப்போ அவங்க பிசியா இருந்தாங்க. அதை மாமா சொல்லிக் காட்டி, அத்தை வந்து வீட்ல அழுதுட்டு போயிருப்பாங்க போல. அதான் அம்மா இன்னைக்கு மாதவனை விருந்துக்கு அழைச்சிருக்காங்களாம். வித்யாவை கூப்பிட்டா அவ வர மாட்டேன்னு சொல்றா அபி. அம்மா ஒரு ஆள் என்ன பண்ணுவாங்க? எனக்குத் தான் தலையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு. பேசாம கடையில வாங்கிக்கலாம்னு சொன்னா அம்மா கேட்க மாட்டேங்குறாங்க. நீயாவது கொஞ்சம் போன் பண்ணி சொல்லேன் அபி” என்றான் கபிலன்.

சாந்திக்கும் வித்யாவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு கபிலன் படும் அவஸ்தை தான் அவளுக்குத் தெரியுமே.

“அவசியம் விருந்து வச்சே ஆகணுமா?” என்றாள்.

“அது முறை தான அபி. சீர் எல்லாத்தையும் சரியா செஞ்சுட்டு இதை செய்யலைன்னா நல்லா இருக்காது. இதுவே லேட்” என்றான் கபிலன்.

“சரிண்ணா! நான் அம்மாகிட்ட பேசுறேன்” என்றாள்.

“சிவா இருந்தா போனை குடு அபி” என்றான். இவ்வளவு நேரம் அவர்கள் பேசியது காதில் விழுந்தாலும் கேட்காதவன் போல் இருந்து கொண்டான் சிவா. அவள் சிவாவிடம் போனை நீட்ட,

“சொல்லுங்க கபிலன்” என்றான்.

“நீங்க கேட்ட மாதிரி வீடு இப்போதைக்கு ஒன்னு தான் இருக்கு சிவா. ஆனா அது சரிப்பட்டு வராது. அதனால நல்ல வீடா பார்க்க கொஞ்சம் லேட் ஆகும்” என்றான் கபிலன்.

“ஏன் அந்த வீடு செட்டாகாது கபிலன்?” என்றான் சிவா.

“அது சிவா” என்று தயங்கியவன்,

“வீடு நம்ம வீடு இருக்குற ஏரியால இருக்கு. அதுமட்டுமில்லை, அன்னம் அத்தை வீட்டுக்கு எதிர்த்து ரெண்டு வீடு தள்ளி இருக்கு. அதான் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்” என்றான் கபிலன்.

“வீட்டைப் பார்த்துட்டு பேசிக்கலாம் கபிலன்” என்றான் சிவா.

“நீங்க நிஜமா தான் சொல்றிங்களா சிவா? அங்க எப்படி சரிப்பட்டு வரும்? ஆனா வீடு நல்லா இருக்கு” என்றான் கபிலன்.

“ஏன் அங்க இருக்குறதுல என்ன பிரச்சனை? இங்க பக்கத்துலயும் வீடு எதுவும் காலியா இல்லை. நமக்குத் தேவை வீடு. அது எங்க இருந்தா என்ன?” என்றான் சிவா உறுதியான குரலில்.

“அப்போ இன்னைக்கு வந்திங்கன்னா பார்த்திடலாம். நாளைக்குன்னா நான் ஆபீஸ் போய்டுவேன்” என்றான் கபிலன்.

“பிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு வர்றோம் கபிலன்” என்ற சிவாவை தயக்கத்துடன் பார்த்தாள் அபர்ணா.

“என்னாச்சு அபி?” என்றான் புரியாமல்.

“நாம இந்த ஸ்ட்ரீட்லையே  ஏதாவது நல்ல வீடா பார்க்கலாம் சக்தி. அங்க வேண்டாம்” என்றாள். ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.

“அங்க என்ன பிரச்சனை? நல்ல ஏரியா. உங்க அம்மா வீடும் பக்கம். எல்லா வகையிலும் பாதுகாப்பான ஏரியா. வேற என்ன?” என்றான் புரியாமல்.

“யாராவது ஏதாவது பேசுவாங்க சக்தி” என்றாள் கமரிய குரலில். ஏனோ அவன் விஷயத்தில் தைரியமாய் பேசுபவளுக்கு அவள் என்று வரும் போது தைரியம் சற்று பின் வாங்கியது.

“மத்தவங்க பேசுறதுக்காக நாம வாழ முடியாது அபி. நமக்குத் தான் நம்ம. நீ எப்படின்னு எனக்கும் நான் எப்படின்னு உனக்கும் தெரிஞ்சா போதும்” என்றான் பட்டென்று.

அவளோ அமைதியாய் நிற்க,

“சாப்பிட்டு கிளம்பனும் அபி. அங்க வந்து வீட்டை பார்த்துட்டு, உன்னை உங்க அம்மா வீட்ல விட்டுட்டு நான் பேக்கரிக்கு போகணும்” என்றான்.

“அம்மா வீட்டுக்கெல்லாம் வேண்டாம்” என்றாள் வேகமாய்.

“ஏன்??” என்றான் முறைப்பாய்.

“அண்ணா பேசுனதை நீங்களும் கேட்டிங்க தானே. நான் எப்படி போக முடியும்?” என்று கோபமாய் ஆரம்பித்தவளின் குரல் முடிக்கும் போதே உள்ளே சென்றிருந்தது.

“உன் அம்மா வீட்டுக்கு போறதுக்கு உனக்கு என்ன தயக்கம்?” என்றவன், அவளை இழுத்து தன் கைவளைவில் நிறுத்தியிருந்தான்.

“இங்க பாரு அபி..! மாதவன் உன் சொந்த அத்தை பையன். இனி  நல்லது கெட்டது எதுலயும் அவனை அவாய்ட் பண்ண முடியாது. எதையுமே பேஸ் பண்ணித்தான் பழகிக்கணும். எல்லாரும் ஒரு ஊருக்குள்ள தான் இருக்குறோம். அதை மறந்திடாத” என்றான் பொறுமையாய்.

“ம்ம்” என்றவளுக்கு குரலே வெளி வரவில்லை.

அடுத்த அரைமணி நேரத்தில் அவளைக் கிளப்பிக் கொண்டு அழைத்துச் சென்றவனைத் தான் செல்வியும், சரிதாவும் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கபிலனுடன் சேர்ந்து இரண்டு மூன்று வீடுகளைப் பார்க்க, எதுவுமே சிவாவிற்கு பிடிக்கவில்லை. இறுதியாக கபிலன் சொன்ன வீடு தான் சிவாவிற்கும் பிடித்திருந்தது. அளவான தனி வீடு, அழகாகவும் இருந்தது.

“இந்த வீடு ஓகே கபிலன்” என்றான் சிவா.

“சிவா எதுக்கும் ஒரு தடவை யோசிச்சுக்கோங்க” என்றான் கபிலன்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு கபிலன். ஓகே தான்” என்றான் முடிவாய்.

“அம்பதாயிரம் அட்வான்ஸ், பத்தாயிரம் வாடகை” என்றான் கபிலன்.

“ஓகே கபிலன் குடுத்துடலாம்”  என்றவன்,

“நீங்க அபியை உங்க வீட்ல விட்ருங்க. நான் கடைக்கு கிளம்புறேன்” என்றவன் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.