அத்தியாயம் 17

அதிகாலை மூன்று மணிக்கு சிவாவிற்கு எப்போதும் போல் முழிப்பு வர, கண் விழித்தவனுக்கு அப்போது தான் அப்படியே உறங்கிவிட்டது தெரிந்தது. தன் மேல் ஏதோ பாரத்தை உணர்ந்தவனுக்கு, அபி அவன் கையணைப்பிலேயே உறங்கிக் கொண்டிருப்பது புரிந்தது. நடு இரவிற்கு மேல் வீசிய பனிக் காற்றில் அவளுக்கு குளிர் எடுத்திருக்க, தன் பாதி பாரத்தை அவன்மேல் போட்டு அவனுள் புதைந்து போய் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அவள் உடல் சில்லென்று இருப்பதை உணர்ந்தவன்,

‘காத்து சீறு இல்லாம அடிக்குது. இவ நைட்டு முழுக்க இங்கயே தூங்கியிருக்கா, சேராம போயிடுச்சுன்னா என்ன பண்றது’ என்று எண்ணியவன், அவளை எழுப்ப முற்பட்டான்.

“அபி..! குளிர் காத்து அடிக்குது. எழுந்து உள்ள போய் படு அபி” என்றான் மெல்லிய குரலில். அவளோ அசைந்தாள் இல்லை.

“அபி” என்றான் மீண்டும்.

“ம்ம்” என்றவள் அவனுக்குள் மேலும் ஒண்டிக் கொள்ள, அவனுக்குத் தான் அவஸ்தையாகிப் போனது. இரவு ஏதேதோ சிந்தனையில் இருந்த போது அவள் அருகாமையில் தெரியாத உணர்வெல்லாம், இப்போது தெரிந்தது. திருமணத்திற்கு பிறகான முதல் நெருக்கம் அவனைத் தடுமாற வைத்திருந்தது.

மொட்டை மாடி காற்றின் வேகத்திற்கு அவள் கூந்தல் கற்றைகள் சீறின்றி அலங்கோலமாய் கலைந்து கிடக்க, அதை சரி செய்து விட்டவனுக்கு அவள் முகத்தில் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. அவள் முகத்தில் அனைத்து விதமான உணர்வுகளையும் பார்த்திருக்கிறான். ஆனால் இந்த அமைதியை இப்போது தான் பார்க்கிறான்.

ஏதோ ஒரு உணர்வின் தூண்டலில் அவள் நெற்றியில் முத்தமிட்டிருந்தவனுக்கு அவள் முகம் மேலும் அவனை அவளை நோக்கி ஈர்ப்பதைப் போல் தோன்றியது.

‘இது சரியா வராது’ எண்ணியவன்,

“அபி” என்று மீண்டும் எழுப்பினான். அவனின் சில பல முயற்சிகளுக்குப் பிறகே அசைந்தாள் அபி.

“சக்தி” என்றாள் தூக்கக் கலக்கத்தில்.

“உள்ள போய் படு அபி” என்றான் மீண்டும். அவளோ தூக்கக் கலக்கத்தில் தட்டுத் தடுமாறி எழுந்து சென்றாள். பெட்ஷீட்டையும் தலையணையும் எடுத்தவன் கட்டிலில் சென்று போட்டு விட்டு அவளுக்கு போர்த்திவிட,

“எதையும் நினைக்காம தூங்குங்க சக்தி” என்று புலம்பியவளின் முகம் கண்டு அவன் முகம் கனிந்தது.

“ம்ம்..! சரி அபி. நீ தூங்கு” என்றவன், சத்தமின்றி வெளியே வந்துவிட்டான். மொட்டைமாடி இருளில் நின்றவனுக்கு அதற்கு மேல் சுட்டுப் போட்டாலும் தூக்கம் வராது. ஐந்து வருடங்களாய் எழுந்து பழக்கப்பட்ட நேரம் அது. போகப் போக தானாக மாறிவிடும் என்று நினைத்தான்.

கீழே பிரபாகரன் எழுந்து கடைக்கு கிளம்புவது தெரிந்தது. இவன் இருட்டில் நின்றிருந்ததால் பிரபா தம்பியை கவனிக்கவில்லை. ஆனால் சிவா அண்ணனை பார்த்திருந்தான். பிரபாவின் முகத்தில் சோர்வின் சாயல். அவனைச் சொல்லியும் குற்றமில்லை. ஏற்கனவே பைனாஸ் தொழில் செய்து கொண்டிருந்தான் பிரபா. சிறு முதலீட்டில் ஆரம்பித்த தொழிலை நல்ல முறையில் வளர்த்தெடுத்திருந்தான். இந்த பேக்கரி அவன் மாமனாரின் கட்டாயத்தின் பேரில் ஆரம்பித்தது. இத்தனை நாள் சிவா கை கொடுத்தான். இனி அனைத்திற்கும் பிரபாகரன் தான் செல்ல வேண்டும் என்றால் அது கஷ்ட்டம் என்று சிவாவிற்கும் புரிந்திருந்தது.

ஐந்து வருடமாய் ஓடிக் கொண்டிருந்தவனை சட்டென்று பிடித்து நிறுத்தினால் எப்படி இருக்கும்? இப்போது அந்த நிலைமையில் தான் சிவாவும் இருந்தான். ஏதோ செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததைப் போன்ற எண்ணம்.

எதிர்காலத்தைப் பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்து வைத்திருந்தான். இப்போது அதையெல்லாம் செய்ய முடியுமா? சரியா வருமா? என்று அதன் சாதக பாதங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அபர்ணாவோ அன்று வழக்கமாக எழும் நேரத்தைத் தாண்டியும் நல்ல உறக்கத்தில் இருந்தவள் எழுந்த போது நன்றாக விடிந்திருந்தது. நேரம் ஆறு முப்பதைக் காட்ட,

‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்’ என்றவள் எழுந்து சிவாவைத் தேடி வேகமாய் வெளியே வர,  அவனோ துவைத்த துணிகளை காயப் போட்டுக் கொண்டிருந்தான்.

“இதையெல்லாம் நீங்க ஏன் பண்றிங்க சக்தி?” என்று பதறிப் போய் வந்தவளைப் பார்த்து சிரித்தவன்,

“குட் மார்னிங் அபி” என்றான் பளீர் புன்னகையுடன். ஏனோ அன்று வித்தியாசமாய் தெரிந்தான் அவள் கண்களுக்கு.

“கு..குட் மார்னிங் சக்தி” என்றவளுக்கு தான் ‘அய்யோடா’ என்று இருந்தது. அவன் அவள் துணிகளையும் சேர்த்து அல்லவா துவைத்திருந்தான்.

“என்னோட டிரஸ் எல்லாம் ஏன் வாஷ் பண்ணிங்க?” என்றாள் ஒரு சங்கோஜத்துடன்.

“தூக்கம் வரலை. சோ இதையாவது செய்வமேன்னு செஞ்சேன். என்னோட டிரஸ நீ வாஷ் பண்ணும் போது உன்னோட டிரஸ நான் வாஷ் பண்ணா என்ன தப்பு?” என்றவனைப் பார்த்தவள்,

“நான் காயப் போடுறேன்” என்றபடி அவன் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிரஷ் பண்ணிட்டு வா” என்றவள் அவளைத் துரத்தியிருந்தான்.

‘இன்னைக்கு என்ன இவங்க வித்தியாசமா நடந்துக்கிறாங்க’ என்று யோசித்தபடி காலைக் கடன்களை  முடித்தவள் குளித்து முடித்து வெளியே வந்தாள்.

அதற்குள் சிவா துணி துவைத்து காயப் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட சரிதா, அதை சுடச் சுடச் வீட்டில் ஒலிபரப்பு செய்திருந்தாள்.

“சும்மா சொல்லக் கூடாதுக்கா..! வந்து ஒரு மாசத்துலையே புருஷனை துணி துவைக்க விட்டுட்டா? அதுக்கு ஏத்த மாதிரி இப்போ கடைக்கு போற வேலையும் இல்லை. இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ?” என்றாள் சரிதா.

“நிஜமாவ சொல்ற சரிதா?” என்றாள் செல்வி நம்ப மாட்டாமல்.

“அட ஆமாக்கா! நான் கீழ இருந்து பார்த்தேனே? நான் கூட துவைக்கிற சத்தம் கேட்ட உடனே எப்பவும் போல அவ தான் துவைக்கிறான்னு நினைச்சேன். பார்த்தா சிவா வந்து காயப் போட்டுட்டு இருக்காரு” என்றாள் சரிதா.

“வேலை வெட்டி இல்லாதவன் பொண்டாட்டிக்கு துணி தான் துவைப்பான். வேற என்ன செய்வான்?” என்றாள் செல்வி சற்று சத்தமாக. மாமியாரின் காதில் விழ வேண்டும் என்று தான் சொல்லியிருந்தாள்.

கேட்டிருந்த கலையரசிக்கு மனமே ஆறவில்லை. எவ்வளவு நல்ல மாமியாராய் இருந்தாலும் மகன் பொண்டாட்டிக்கு வேலை செய்தால் தான் ஆவதில்லையே. கால் வலியுடன் மாடியேறிருந்தார்.

“இந்தம்மா போகுதே..! போய் ஏதாவது பெர்பார்ம் பண்ணும்னு நினைக்கிற?” என்றாள் செல்வி.

“சந்தேகம் தான்” என்றாள் சரிதா.

“எதுக்கும்மா இப்போ முடியாததோட மாடி ஏறி வர்றீங்க?” என்று கடிந்து கொண்ட சிவா, அவருக்கு சேரை எடுத்துப் போட எதுவும் பேசவில்லை கலையரசி.

குளித்து முடித்து வந்த அபர்ணாவோ அங்கு மாமியாரைக் கண்டு திகைத்தாள். அவள் இந்த வீட்டிற்கு வந்த பிறகு ஒரு நாளும் அவர் மேலே வந்தது இல்லையே.

“வாங்க அத்தை!” என்றவள் காபி போட போக, அவளுக்கு முன்பாக ஆவி பறக்கும் காபியை நீட்டியிருந்தான் சிவா.

“நீங்க ஏன் போட்டிங்க?” என்றாள் சிறு முறைப்புடன்.

“ஏன் நான் போட்டா குடிக்க மாட்டியா?” என்றவன் கலையரசிக்கும் காபியை நீட்ட, அவரும் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

அவர் அமைதியாய் இருப்பதைக் கண்ட அபர்ணாவிற்கு எதோ தவறாய் பட்டது. ஆனால் அவரே வாயைத் திறக்கட்டும் என்று எண்ணியவளாய் அமைதியாய் காபியை குடித்து முடித்தாள்.

“சக்தி..! மாவு பாக்கெட் வாங்கிட்டு வர்றீங்களா?” என்றவளிடம்,

“வேற எதுவும் வாங்கனுமா?” என்றான்.

“இல்ல, மாவு பாக்கெட் மட்டும் போதும்” என்றாள்.

“எதுக்கு கடையில வாங்கணும்? கீழ பிரிட்ஜ்ல மாவு இருக்கு அபர்ணா” என்றார் கலையரசி.

“வேண்டாம்மா” என்றவன் கிளம்பிவிட்டான். அவன் கிளம்பும் வரை அமைதியாக இருந்தவர்,

“இதெல்லாம் சரியில்லை அபர்ணா” என்றார்.

“எதெல்லாம் அத்தை?” என்றாள் புரியாமல்.

“இப்படி என் பையன் உனக்கு துணி துவைச்சு போடுறதும், சமைச்சு போடுறதும் தான். இதுக்குத்தான் தனிக் குடித்தனும் போகணும்னு சொல்றியாமா?” என்றார்.

‘நான் அமைதியா இருந்தாலும் விட மாட்டாங்க போலயே?’ என்று எண்ணிக் கொண்டவள்,

“அது எப்படி அத்தை இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு எடுபிடி வேலையில இருந்து எல்லா வேலையும் சிவா செஞ்சப்போ வராத கோபம், கட்டின பொண்டாட்டிக்கு  வேலை செஞ்ச உடனே உங்களுக்கு வருது” என்றாள் இடக்குடன்.

“அதுக்குன்னு அவனை துணி துவைக்க வைப்பியா?” என்றார்.

“இங்க பாருங்க..! அவர் வாஷ் பண்ணதே எனக்குத் தெரியாது. நான் ஒன்னும் அவரை செய்ய சொல்லலை. நீங்க நம்பலைன்னாலும் அது தான் நிஜம்” என்றவளுக்கு எரிச்சலாய் வந்தது.

“அதான் இங்க தனியா சமைச்சு சாப்பிடுறதுன்னு முடிவு பண்ணிட்டிங்கல்ல? அப்பறம் எதுக்கு தனி வீடெல்லாம்? இங்கயே இருக்குறதுக்கு வழியைப் பாருங்க. என் பையனைப் பார்க்காம எங்களால இருக்க முடியாது” என்றார் கலையரசி.

“அந்த முடிவும் என்னோடது இல்லை. இதை பத்தி பேசணும்னா உங்க பையன்கிட்ட தான் பேசணும்” என்றாள் அபர்ணா.

“இங்க பாருமா அபர்ணா, நான் உன்னை ரொம்ப பொறுமையான பொறுப்பான பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா இப்படி பட்டுப்பட்டுன்னு பதில் பேசிட்டு இருக்க. செல்விக்கு கொஞ்சம் குணம் பத்தலைன்னாலும் இதுவரைக்கும் தனியா போறேன்னு ஒரு நாளும் சொன்னதில்லை. சரிதாவும் அப்படித்தான்” என்றார் கலையரசி.

“எப்படி போவாங்க? ஆக்கிப் போடுறதுக்கு ஒரு ஆள், பிள்ளைங்களை பார்த்துக்கிறதுக்கு ஒரு ஆள், இளிச்சவாயன் மாதிரி எல்லா வேலையும் செய்யுறதுக்கு கொழுந்தன் இப்படியெல்லாம் இருந்தா தனியா போகணும்னு எண்ணம் எப்படி வரும்?” என்றவளை கலையரசி அதிர்ந்து பார்த்தார்.

“என்ன பார்க்குறிங்க அத்தை? உங்களுக்கு ஒரு விஷயம் பேசணும்னா அதை சக்திகிட்ட நேரா பேசுங்க. இந்த ஜாடையா சொல்றது, நான் வந்து தான் குடும்பத்தை பிரிச்சேன்ற மாதிரி பேசுறது இந்த வேலையெல்லாம் வேண்டாம். அப்பறம் தயவு செஞ்சு உங்க மூத்த மருமகளுங்களோட என்னை கம்பேர் பண்ணாதிங்க. எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு” என்றாள்.