அத்தியாயம் 12

சிவாவையும் அபர்ணாவையும் அழைத்து வந்திருந்தான் கபிலன். தன் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம் போன நிம்மதியெல்லாம் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வு அபர்ணாவிற்கு. மனதில் இருந்த பாரமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருக்க, பலமாதம் பிரிந்து இருந்தவளைப் போல் சாந்தியை அணைத்துக் கொண்டாள். மகளைப் பரிவுடன் பார்த்திருந்த மூர்த்திக்கும் அப்படி ஒரு மன நிறைவு.

“இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை? ஒரு நாள் தான் மேடம் ஆச்சு?” என்ற கிண்டலுடன் வந்த காயத்ரியைப் பார்த்தவளுக்கு சொல்ல முடியாத உணர்வு.

“கல்யாணம் பண்ணிப் பாரு தெரியும் காயு” என்றவள்,

“உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி” என்றாள்.

“நெக்ஸ்ட் வீக் ஸ்கூல் திறந்துடுவாங்க. அப்பறம் வழக்கம் போல பார்த்துக்கப் போறோம். சோ கவலையை விடு” என்ற காயத்ரிக்கும் அப்படித்தான் இருந்தது.

“எப்படி இருக்கீங்க சிவாண்ணா?” என்றாள் காயத்ரி.

“நானெல்லாம் கண்ணுக்குத் தெரியறேனா காயத்ரி?” என்றான் சிவா சன்னமான சிரிப்புடன்.

“சாரிண்ணா..! இவளைப் பார்த்ததும் ஒரு எக்சைட்மென்ட்ல உங்களை கவனிக்கலை” என்றாள்.

சிவாவையும் அபர்ணாவையும் பார்த்த கபிலனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. காலையில் நடந்த விஷயத்தை அவன் வீட்டில் யாரிடமும் கூறியிருக்கவில்லை. இருவரும் பிரச்சனையை மேற்கொண்டு எடுத்து செல்லவில்லை என்பதை அவர்கள் முகத்தில் இருந்தே உணர்ந்து கொண்டான்.

“நீங்க பேசிட்டு இருங்க தம்பி. நான் போய் சமையலை கவனிக்கிறேன்” என்று சாந்தி சென்று விட, அவரின் புடவையைப் பிடித்துக் கொண்டே பின்னால் சென்றாள் அபி.

“உனக்கு அங்க பிரச்சனை எதுவுமில்லையே அபர்ணா?” என்றார் சாந்தி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா” என்றாள் மேம்போக்காய்.

“அப்பறம் ஏன் அண்ணன் காலையிலேயே உன்னைப் பார்க்க வந்தான்?” என்ற சாந்தியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழித்தாள்.

“கபிலன் வீட்ல யார்கிட்டயும் எதுவும் சொல்லலை. ஆனா எனக்கு புரிஞ்சது” என்றார் சாந்தி.

“அது.. சும்மா..பிரச்சனை எதுவுமில்லைம்மா” என்றாள் அமைதியான குரலில்.

“மாதவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு அபர்ணா” என்றார் குறிப்பால். அதனால் தான் எதுவும் பிரச்சனையோ? என்று யோசிக்கத் தொடங்கியிருந்தார் சாந்தி.

தாயை முறைத்தவள் “அம்மா பிளீஸ்! நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. எனக்கு வயசு இருபத்தி அஞ்சு. எனக்கும் நல்லது கெட்டது தெரியும். இன்னொருத்தி புருஷனை நினைக்கிற அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போயிடலை. இன்னொரு தடவை மாதவன் மாமா பேச்சை எடுக்காதிங்க. அப்பறம் நான் இங்க வர்றதைப் பத்தியே யோசிக்க வேண்டியது வரும்” என்றாள் அமைதியாக, அதே சமயம் அழுத்தமாக.

“நான் எப்போ அப்படி சொன்னேன் அபர்ணா. போனதை நினைச்சு இருக்குற வாழ்க்கையை கெடுத்துக்காதன்னு தான் சொல்ல வந்தேன்” என்றார் சாந்தி.

“இதையே எத்தனை தடவைம்மா சொல்லுவிங்க. கல்யாணத்துக்கு முன்னமே போதும் போதும்ன்ற அளவுக்கு அட்வைஸ் பண்ணிட்டிங்க. நானும் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டுத்தான் சிவா கையால தாலி வாங்கிக்கிட்டேன்” என்றாள் முகம் இறுக.

“விடு அபூ..! அவங்க மனசுக்குள்ள உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்ற தவிப்பு இருக்கப் போய் தான இப்படி பேசுறாங்க. சரின்னு சொல்லிட்டு விடேன்டி” என்றாள் காயத்ரி.

“எப்படி விட சொல்ற காயு. நானே மறக்க முயற்சி பண்ணாலும் இவங்க எல்லாரும் அட்வைஸ்ன்ற பேர்ல அதையே எனக்கு திரும்ப திரும்ப ஞாபகப் படுத்துறாங்க. என்னையப் பார்த்தா அவ்வளவு மோசமான பொண்ணாவா தெரியுது. இல்ல இவங்க அப்படித்தான் என்னை வளர்த்தாங்களா?” என்றாள் அபி கமரிய குரலில்.

“அம்மாவை மன்னிச்சுடு அபர்ணா. மனசுக்குள்ள சின்னதா ஒரு தவிப்பு. அதான் அப்படி கேட்டுட்டேன்” என்றார் சாந்தி.

“பரவாயில்லம்மா” என்றவள் அமைதியாக வெளியே சென்று விட்டாள்.

“என்னம்மா நீங்க? அவளை சொல்லிட்டு நீங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அவ தெளிவா தான் யோசிப்பாம்மா. ஆனா நீங்க யாரும் அவளுக்கு அந்த ஸ்பேஸ குடுக்கவேயில்லை. உடனே வேக வேகமா கல்யாணம். இப்போ அதே மாதிரி எல்லாமே உடனே நடக்கனும்னு எதிர்பார்க்குறிங்க. அது நானாவே இருந்தாலும் முடியாது. இப்பவே கொஞ்சம் தெளிஞ்சுட்டா. இன்னும் கொஞ்ச நாள்ல நல்லாவே தெளிஞ்சுடுவா” என்றாள் காயத்ரி.

சோபாவில் தனக்கருகில் வந்து அமர்ந்தவளின் முகம் பார்த்தவன்,

“என்னாச்சு?” என்றான்.

“ஒன்னுமில்லையே” என்றவள் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

“இல்ல..! உங்க அம்மா பின்னாடி போகும் போது இருந்த ஒரு சந்தோஷம் இப்போ உன் முகத்துல இல்லையே. அதான் கேட்டேன்” என்றான் சிவா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள்,

“நீங்க ரெஸ்ட் எடுக்குறிங்களா? அது தான் என் ரூம்” என்றாள் ஒரு அறையைக் காட்டி.

“இல்ல இப்போதான வந்தோம். இங்கயே கம்பர்ட்டபிளா தான் இருக்கு. நீ ரெஸ்ட் எடுக்கணும்னா எடு அபி” என்றவன் மீண்டும் அலைபேசியை பார்த்தபடி குனிந்து கொண்டான்.

“அப்படி என்னதான் பார்ப்பிங்க மொபைல்ல?” என்றாள்.

“பேக்கரில இன்னைக்கு கேக் ஆர்டர் பண்ணவங்க லிஸ்ட்..டெலிவரி பண்ண வேண்டிய லிஸ்ட் எல்லாத்தையும் செக் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

“ம்ம்” என்றவள் அப்படியே சோபாவில் படுத்துவிட்டாள்.

“அபூ உள்ள போய் ரெஸ்ட் எடுடா” என்றான் கபிலன்.

“அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்றாள் வேண்டுமென்றே.

“ஏன்டி? இல்ல ஏன்னு கேட்குறேன்? நான் நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா?” என்றான் கபிலன்.

“பிகாஸ்..! நான் நல்லா இல்லையே. அப்போ நீயும் நல்லா இருக்கக் கூடாது” என்றாள் முறைப்புடன்.

“அதுக்கு?” என்ற கபிலன் அவளை சந்தேகமாய் பார்க்க, தன் தலையைத் தூக்கி அவன் மடியில் வைத்தவள்,

“தலை வலிக்குதுண்ணா. கொஞ்சம் பிடிச்சு விடேன்” என்றாள் பாவமாய்.

“முன்னாடியே சொல்றதுக்கு என்ன அபூ?” என்றவன் வேகமாய் தைலத்தை எடுத்து தங்கைக்கு தேய்த்து விட, அவளோ வந்த சிரிப்பை அடக்கியபடி பேசாமல் இருந்தாள்.

சிறிது நேரம் பிடித்து விட்டவன் “இப்போ ஓகே வா அபூ” என்றான் அக்கறையாய்.

“எனக்கு ஓகே தான் அண்ணா. உனக்குத்தான் எப்படின்னு தெரியலை” என்றாள் சிரிப்பை அடக்கி.

“ஏன் எனக்கென்ன?” என்றான் புரியாமல்.

“அப்படியே லெப்ட்ல பாரு” என்றாள்.

கபிலன் புரியாமல் திரும்பி பார்க்க, அங்கே வித்யாவோ முகம் முழுவதும் கடுப்புடன் நின்றிருந்தாள். அவள் முறைத்த முறைப்பில் சட்டென்று எழுந்திருந்தான் கபிலன்.

“எருமை எருமை..!அவளைப் பத்தி தெரிஞ்சுகிட்டே, வச்சு வாங்கிட்டல்ல. உனக்கு உங்க தங்கச்சி தான் பெருசுன்னு ஒரு பக்கத்துக்கு விடாம பேசுவா” என்று அவளை ரெண்டு தட்டு தட்டியவன்,

“ஹேய் வித்யா” என்று வேகமாய் செல்ல,

“இப்போ தான்டா எனக்கு நிம்மதியா இருக்கு” என்றவளை பிடித்துக் கொண்டார் சாந்தி.

“ஏன்டி வந்ததும் வராததுமா ஆரம்பிச்சுட்டியா?” என்றபடி சிவாவிடம் ஜூசை நீட்டியவர், அவளுக்கும் கொடுத்திருந்தார்.

“சும்மா சொல்லக் கூடாதும்மா. உன் பையன் பொண்டாட்டிக்கு என்னமா பயப்படுறான். சேதாரம் இல்லாம திரும்பி வந்தா உன் பையன். இல்லைன்னா?” என்று நிறுத்தினாள்.

“இல்லைன்னா?”

“சேதாரத்தோட வந்தா வித்யா அண்ணி புருஷன்” என்றாள் சிரிப்புடன்.

“ஆமா..ஆமா” என்றாள் காயத்ரி.

சிவா வந்த சிரிப்பை அடக்கியபடி வேலையில் கவனமாய் இருக்க,

“என்ன சேதாரம் இங்க?” என்றபடி வந்தான் கிஷோர்.

“எப்படிடா ஜூஸ் குடிக்கும் போது சரியா மூக்கு வேர்த்து வந்திடுற?” என்றாள் அபர்ணா.

“டெலிபதி ஆபரணம் டெலிபதி” என்ற கிஷோர் அவள் கையில் இருந்த ஜூசை வாங்கி ஒரு மூச்சில் குடித்து முடித்திருந்தான்.

“டேய் மலைமாடே..! அது நான் குடிச்சதுடா” என்றாள் கடுப்புடன்.

“அதான் ஜூஸ்ல பால்டாயில் ஸ்மெல் வந்துச்சா? என்றான் சிரித்தபடி.

“அதெல்லாம் தெரியாது. எனக்கு இப்போ என் ஜூஸ் வந்தாகணும்” என்றாள் அபர்ணா.

“இப்ப என்ன? உனக்கு ஜூஸ் தான வேணும்?” என்றவன் சிவா குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் கிளாசை வாங்கி அவளின் கையில் திணித்திருந்தான்.

“இப்போ குடி” என்றவனைப் பார்த்து முறைத்தவள், இப்போது முழித்திருந்தாள்.

“இது அவங்க குடிச்சதுடா எருமை” என்றாள் கடுப்புடன்.

சிவா அவள் என்ன தான் செய்வாள் என்று ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வேண்டாம்னா போ..!” என்று கிஷோர் பிடுங்க,

“நான் சொன்னேனா வேண்டாம்னு” என்றவள்,

“உங்களுக்கு?” என்றாள் சிவாவிடம்.

“குடிக்கனும்னா குடி அபி” என்றான் பார்வையை மாற்றாமல். அபர்ணா அடுத்த நிமிடம் அதை குடித்து முடித்திருக்க, கிஷோர் நமட்டுச் சிரிப்புடன் சிவாவைப் பார்த்தான்.

காயத்ரி தான் அபர்ணாவை ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள். ஆனால் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்பறம் காயு? உனக்கு எப்போ கல்யாணம்? காலகாலத்துல எல்லாரும் கல்யாணத்தை பண்ணிட்டு போய் செட்டில் ஆகுங்கடி. எல்லாம் வயசான ஆன்ட்டியா இருக்கிங்க. கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு எங் கேர்ள் கூட இல்லை” என்றவன் ஓடத் தயாராய் இருந்தான்.

“வயசான ஆன்ட்டியா? அடிங்க” என்று அபர்ணா அவனைப் பிடிக்க முயல,

“சரி சரி..! இப்ப என்ன நான் சொன்னது தப்புத்தான். வேணும்னா வயசு இருக்குற ஆன்ட்டின்னு வச்சுக்குவோம்” என்றவனை காயத்ரி முறைக்க, அபர்ணா அவன் தலையில் கொட்டியிருந்தாள்.

தலையைத் தேய்த்துக் கொண்டவன்,

“சிவாண்ணா! பத்து நாளைக்கு முன்னாடி முக்கியமா ஒரு இடத்துக்கு போக வேண்டியிருந்தது. கிளம்பி வெளிய வந்து பார்த்தா ரோடு முழுக்க ஒரே வெள்ளம்” என்றான் கிஷோர்.

“என்ன சொல்ற கிஷோர்?” என்றான் சிவா புரியாமல்.

“இப்ப நீங்க முழிச்ச மாதிரி தான் நானும் முழிச்சேன். என்னடா மழையே பெய்யலையே? ஆனா தெரு முழுக்க எப்படி வெள்ள ஆறு ஓடுதுன்னு ஒரே யோசனை? அப்பறம் தான் தெரிஞ்சது அது தண்ணீர்ல ஓடுன ஆறு இல்லை.. கண்ணீர்ல ஓடுன ஆறுன்னு. எல்லாம் உங்க பொண்டாட்டி உபயம் தான். தேனியோட தண்ணீர் பஞ்சத்தை கண்ணீரால் தீர்த்து வைத்த பெருமை நம்ம ஆபரணத்தை தான் சேரும்” என்றான் சிரிக்காமல்.

சிவாவோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“நீ அவகிட்ட அடி வாங்கி சாகப் போறது உறுதி” என்றாள் காயத்ரி.

அபர்ணா எதுவும் பேசாமல் சட்டென்று அமைதியாகிவிட,

“அம்மா தாயே! மறுபடியும் டேமைத் திறந்துடாத. சும்மா பன் பண்ணேன்” என்றான் கிஷோர்.

“நீ பன் பண்ணன்னு நீ சொன்னதுக்கு அப்பறம் தான்டா தெரியுது” என்றாள் அபி நக்கலாய்.

“சரி சரி..!அதெல்லாம் இருக்கட்டும். ஹனி மூன் பிளான் எங்க?” என்றான் கிஷோர் இருவரையும் பார்த்தபடி.

“மூனுக்கே கூட்டிட்டு போனா தான் நான் ஹனி மூன் போவேன்” என்றாள் அபர்ணா.

“ஏன்? இங்க சுட்ட வடையெல்லாம் பத்தாதுன்னு அங்கயும் போய் வடை சுடப் போறியா?” என்றவன்,

“சிவாண்ணா இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. மாதவனுக்கு உளுந்த வடை பிடிக்கும்னு ஒரு தடவை சொல்லிட்டான். அதுல இருந்து உளுந்த வடையா சுட்டு எங்களை கொன்னுட்டா. டேஸ்ட் நல்லா இருந்ததால தப்பிச்சோம். இல்லைன்னா எங்க நிலையை யோசிச்சு பாருங்க” என்றவன் அப்போது தான் அபர்ணாவின் முகத்தை கவனித்தான். அவளோ சட்டென்று எழுந்து அறைக்குள் சென்று விட,

“என்னாச்சு?” என்றான் புரியாமல்.

“இதுக்குத்தான் வாய் அளவா பேசனும்ன்றது” என்றாள் காயத்ரி.

அப்போது தான் கிஷோருக்கும் தான் பேசிய பேச்சின் சாராம்சம் புரிந்தது.

“சாரி சிவாண்ணா” என்றான் தயக்கத்துடன்.

“டேய் ஓவரா பீல் பண்ணாத. அபி கொஞ்ச நேரத்துல சரியாகிடுவா” என்ற சிவாவிற்கு ஏனோ முதன் முறையாக மனம் வலித்தது. அதை ஒரு மென் சிரிப்புடன் கடந்துவிட்டான்.

மறுநாள் விருந்தை முடித்து அங்கிருந்து கிளம்பும் வரை அபர்ணாவின் முகத்தில் ஒரு இறுக்கம் இருந்ததை சிவா உணர்ந்து கொண்டான். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசி அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

“சீர்வரிசை” என்று கபிலன் ஆரம்பித்த போது கூட,

“இப்போதைக்கு வேண்டாம் கபிலன். தேவைப்படும் போது நாங்களே கேட்டு வாங்கிக்கிறோம்” என்று சொல்லிவிட்டான்.

சாந்தி மகளுக்கான நகைகளைக் கொடுக்க, “அபிகிட்டயே குடுத்திடுங்க அத்தை” என்று சொன்னதுடன் சரி.

அடுத்த நாளில் இருந்து சிவா வழக்கம் போல் பேக்கரிக்கு கிளம்பிவிட்டான். அபர்ணாவிற்கு தான் பொழுது போவேனா என்றது. அதற்கு ஏற்றார் போல், வீட்டில் அவளுக்காகவே வேலைகளை வரிசை கட்டிக் கொண்டு வைத்திருந்தனர் செல்வியும் சரிதாவும்.

பொழுது போகாமல் இருப்பதற்கு இதையாவது செய்வோம் என்று ஆரம்பித்தவளுக்கு அதன் பிறகு தான் புரிந்தது தான் மட்டும் தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதே.

கலையரசி முடிந்த அளவுக்கு அவள் வேலையை குறைக்கப் பார்க்க, செல்வியும் சரிதாவும் முடிந்த அளவுக்கு அவளுக்கு வேலையைக் கூட்டி வைத்தனர்.

சிவா காலையில் எழுந்து மூன்று மணிக்கு மேல் கடைக்கு செல்பவன் திரும்பி வரும் போது இரவு பதினொன்றை தாண்டி விடும். பாதி நாட்கள் அவன் வரும் போது அபர்ணா நல்ல உறக்கத்தில் இருப்பாள். அவள் எழும் முன்னரே அவன் கடைக்கு சென்றிருப்பான்.

பத்து நாட்களும் இப்படியே சென்று முடிந்திருக்க, பள்ளிகளும் திறந்திருந்தது. மறுநாள் ஸ்கூல் செல்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தவள், புடவையை அயர்ன் செய்து கொண்டிருந்தாள். சிந்தனையோ அவளிடத்தில் இல்லை. அவள் சிவாவை சரியாக பார்த்தே நாட்கள் கடந்திருந்தது. ஏனோ அந்த மொட்டை மாடி அறையில் தான் மட்டும் இருப்பதைப் போன்ற பிரம்மை அவளுக்கு. இப்படியே இருந்தால் கண்டிப்பாய் தனக்கு பைத்தியம் பிடித்து விடும் என்று எண்ணினாள்.

அனைத்தையும் எடுத்து வைத்தவள், யோசனைகளை தள்ளி வைத்து விட்டு கீழே சென்றாள்.

“வாம்மா அபர்ணா!இந்த பூவை வச்சுக்கோ” என்ற கலையரசி அவள் தலையில் பூவை வைத்து விட, செல்வியின் பார்வை அவர்கள் மீது தான்.

“நாளைக்கு இருந்து ஸ்கூல் போகணும் அத்தை. காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்” என்றாள்.

“சரிம்மா! சமைக்கிற வேலையை நாங்க பார்த்துக்கிறோம். மதியத்துக்கு சாப்பாடு வீட்ல இருந்து தான எடுத்துட்டு போவ அபர்ணா?” என்றார்.

“ம்ம்” என்றாள்.

“எட்டுமணிக்குள்ள எழுந்து என்னால  சமைக்க முடியாது அத்தை” என்றாள் செல்வி வேகமாய்.

“பிள்ளைங்களும் நாளைக்கு இருந்து ஸ்கூல் போகணும். அவங்களுக்கு செஞ்சு தான ஆகணும் செல்வி” என்றார் கலையரசி.

“எனக்கு நான் பண்ணிப்பேன் செல்வியக்கா. எல்லாருக்கும் தான் என்னால பண்ண முடியாது. டைம் இருக்காது” என்றாள் அபி.

“நான் வந்து ஹெல்ப் பண்றேன் அபர்ணா” என்றாள் செல்வி. அவளின் உதவி எந்த அளவிற்கு இருக்குமென்று அவளுக்குத் தான் தெரியுமே.

“என்னால முடியாதுக்கா” என்றவள்,

“நைட்டுக்கு என்ன செய்யணும் அத்தை?” என்றாள்.

“சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும்” என்றாள் செல்வி வேகமாய்.

அபர்ணாவிற்கு எரிச்சலாய் வந்தது. முதல் நாள் சிவா சொன்னதை கேட்டிருந்தால் இப்போது அவஸ்தை பட தேவையில்லை என்று எண்ணிக் கொண்டவள், வேகவேகமாய் சமையலை முடித்தாள். சப்பாத்தியை தேய்த்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

“உனக்கு எதுவும் வாங்கனுமா அபர்ணா? சிவாவை வரச் சொல்லி போய் வாங்கிட்டு வாங்கம்மா” என்றார் கலையரசி.

“சிவா இப்போ எப்படி அத்தை வருவார். கடையில ஆள் இல்லையே. கடைக்கு போகணும்னா நான் வர்றேன் அபி” என்றாள் செல்வி.

“இல்ல வேண்டாம். எதுவும் வாங்க வேண்டியது இல்லை” என்றவள் சாப்பிட்டுவிட்டு மேலே சென்றுவிட்டாள். சென்றவளுக்கு ஏனோ அழுகையாய் வந்தது.

‘தனியா இருக்குறதுக்கு நான் ஏன் இங்க இருக்கணும்? ஒருத்தியை கட்டிட்டு வந்தோம்ன்ற அக்கறை கொஞ்சமாவது இருக்கா?எப்ப வர்றாங்க? எப்ப போறாங்கன்னே தெரியலை’ என்று மனதிற்குள் புலம்பியவள்,

“இன்னைக்கு வரட்டும்” என்று ஒரு முடிவோடு அமர்ந்திருந்தாள். பத்துமணி ஆகியும் அவன் வருவதற்கான அறிகுறி தெரியவில்லை. மறுநாள் பள்ளி செல்ல வேண்டும் என்பதால், படுத்து விட்டாள் அபர்ணா.

பன்னிரண்டு மணி போல், தூக்கம் கலைந்தவள் வேகமாய் வெளியே வந்து பார்க்க, சிவா இன்னமும் வந்திருக்கவில்லை.

“என்ன இன்னும் காணோம்?” என்றவளுக்கு தாகம் எடுக்க, அப்போது தான் ஏதோ நினைப்பில் தண்ணீர் எடுக்காமல் வந்தது புரிந்தது அவளுக்கு. பாட்டிலை எடுத்துக் கொண்டு கீழே சென்றவள் கதவு திறந்திருக்கவும் ஒரு யோசனையுடன் சென்றாள்.

சிவாவோ அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆள் வரும் சத்தத்தில் திரும்பியவன்,

“என்ன அபி இந்த நேரத்துல?” என்றான்.

“தண்ணி எடுத்துட்டு போக மறந்துட்டேன்” என்றவள் பாட்டிலை நிரப்பிக் கொண்டு திரும்ப, அப்போது தான் அவன் சாப்பிடுவதை கவனித்தாள்.

“தினமும் இந்த நேரத்துக்குத் தான் வந்து சாப்பிடுறிங்களா?” என்றாள் கேள்வியாய்.

“இல்ல, இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எப்பவும் பதினோரு மணிக்கெல்லாம் வந்துடுவேன்” என்றான்.

“ஏன் இந்த நேரத்துல சாப்பாடு சாப்பிடுறிங்க? அது மதியம் வச்சது” என்றாள் புரியாமல்.

“இது தான் இருந்தது” என்றவன் சாப்பிட்டு முடித்திருந்தான். அபர்ணாவிற்கு ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு தொண்டைக்குள் அடைத்தது. கால் கடுக்க நின்று சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் செய்தவள் அவள் தானே. கூடவே கோபமும் வந்தது.

அவனை முறைத்தவள் வேகமாய் சென்று விட, காரணம் புரியாதவனோ அதே பாவனையுடன் மேலே சென்றான்.

“என்னாச்சு அபி? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றான்.

“ஹோ..! நான் ஒருத்தி இந்த வீட்ல இருக்குறது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியுதா என்ன?” என்றாள் நக்கலாய்.

“வேலை முடிஞ்சு வர லேட் ஆகிடுது. வந்து பார்த்தா நீ நல்லா தூங்கிட்டு இருப்ப. எழுப்ப வேண்டாமேன்னு நினைச்சு நானும் உன்னை தொந்தரவு பண்றதில்லை” என்றான்.

“ஏன் ஒரு போன் பண்ணக் கூட உங்களுக்கு நேரமில்லை?” என்றாள் கடுப்புடன்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,

“இதே கேள்வியை நானும் கேட்கலாம் இல்லையா?” என்றான் நிதானமாய்.

“அது” என்று வார்த்தைகளின்றி நின்றாள் அபர்ணா.

“மனசைப் போட்டு குழப்பாம தூங்கு அபி” என்றவன், வழக்கம் போல் வெளியே சென்று விரித்து படுத்துவிட்டான். படுத்த நிமிடத்தில் உறங்கியும் விட்டான். காலையில் இருந்து வேலை செய்த அலுப்பு அவனுக்கு. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் புத்தியில் உரைத்தது.

‘அவங்க சொன்ன மாதிரி நானாவது கால் பண்ணி பேசியிருக்கலாம்’ என்று எண்ணியவளுக்கு சற்று நேரத்திற்கு முன்பு அவன் சாப்பிட்டது கண் முன் வந்து போனது. அவனையே பார்த்துக் கொண்டு நின்றவளுக்கு அவனின் மறுபக்கம் அன்று தான் புரிந்தது.