“உனக்கு என்னாச்சு அபர்ணா? நீ இப்படி இல்லையே? இப்ப ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குற? அப்படி என்னதான் பிரச்சனை?” என்றான் கபிலன்.

“ஒண்ணுமில்ல” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,

“சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்றான் வேண்டுமென்றே.

“கொஞ்ச நேரம் இருண்ணா. எல்லாரும் எழுந்ததுக்கு அப்பறம் சொல்லிட்டு போவோம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முனுமுனுத்தவன், அப்போது தான் அந்த அறையைப் பார்த்தான்.

“இது தான் சிவா ரூமா?” என்றான் உள்ளே போன குரலில்.

“ஆமா” என்றாள்.

“எப்படிடா இருந்த? திங்க்ஸ் எதுவும் இல்லை.ஏசியும் இல்லையே?” என்றான் கபிலன்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை” என்றாள்.

“சரி நாளைக்கு உனக்கு பர்னிச்சர் எல்லாம் வாங்கும் போது என்னென்ன தேவைன்னு சொல்லு, வாங்கிடலாம்” என்றான் கபிலன்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ண்ணா” என்ற தங்கையை புரியாமல் பார்த்திருந்தான்.

கீழே சென்ற சிவாவிற்கோ ஆத்திரமாக வந்தது. அவள் துணியை அலசிக் கொண்டிருந்த இடைவெளியில் கீழே வந்து காபி போட்டு எடுத்துச் சென்றிருந்தான். அதற்குள் கடையில் இருந்து மணி போன் செய்து லிஸ்ட் கேட்கவும் அதை டைப் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவளோ அதற்குள் கபிலனுக்கு போன் செய்து என்னென்னவோ பேசி என்று அனைத்தையும் சொதப்பி விட்டாள்.

மீண்டும் மேலே வந்த சிவாவின் முகத்தில் கொஞ்சம் கூட மலர்ச்சியில்லை.

நடந்ததை அறியாத கபிலனோ,

“சிவா இங்க ரூம்ல எதுவுமே இல்லை?” என்று கபிலன் பேசி முடிக்கும் முன் வெடித்திருந்தான் சிவா.

“எதுவுமில்லைன்னு கல்யாணத்துக்கு முன்னமே சொல்லிட்டேன் கபிலன். ஏதோ உங்க சிஸ்ட்டரை நான் கூட்டிட்டு வந்து கொடுமை படுத்துற மாதிரி அவளும், அது சரிதான்ற மாதிரி நீங்களும் பேசிட்டு இருக்கீங்க?” என்றான் கோபமாய்.

“நான் அப்படி சொல்ல வரலை சிவா. பிளீஸ் கோபப்படாதிங்க” என்றான் கபிலன் பொறுமையாய்.

சிவாவால் அப்படி இருக்க முடியவில்லை. அதிலும் அபர்ணா பேசியது அவனுக்கு மீண்டும் மீண்டும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.

“நீங்க உங்க தங்கையை அழைச்சுட்டு போங்க கபிலன். நான் வேற வீடு எல்லாம் பார்த்துட்டு வந்து கூப்பிட்டுக்கிறேன்” என்றான். குரலில் வெறுமை இருந்தாலும் ஏனோ சிவாவின் கண்கள் கலங்கியிருந்ததைப் போல் இருந்தது கபிலனுக்கு. அபர்ணாவிற்கும் அது புரிந்திருக்க வேண்டும்.

“சா..சாரி” என்றாள் உள்ளே போன குரலில்.

ஏதோ பிரச்சனை என்று புரிந்தது கபிலனுக்கு. தான் இங்கு உடனே கிளம்பி வந்தது அதிகப்படி என்றும் தோன்றியது.

“நீங்க கிளம்பிட்டு கால் பண்ணுங்க சிவா. நான் வந்து அழைச்சுட்டு போறேன். இப்போ கிளம்புறேன்” என்றான்.

“உங்களுக்குத் தான் அலைச்சல். இருந்து கூட்டிட்டே போங்க” என்றான் சிவா.

“ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ். இதெல்லாம் ஒரு அலைச்சலா சிவா” என்றவன்,

“சாரி, நானும் அபூ கால் பண்ண உடனே யோசிக்காம கிளம்பி வந்துட்டேன்” என்றவன் வந்த வேகத்தில் கிளம்பியிருந்தான்.

‘கொஞ்ச நேரத்துல என்னெல்லாம் பேசிட்ட அபர்ணா. சிவா சொன்ன மாதிரி அன்னைக்கே வந்து உள்ள நிலவரத்தை சொல்லிட்டான் தான? எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பிகேவ் பண்ணா என்ன அர்த்தம்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவளுக்கு அவனிடம் சென்று பேசும் தைரியம் மட்டும் வரவேயில்லை.

சிவாவைத் தவிர்த்து அந்த வீட்டில் ஒரு அன்பான பார்வையும் அனுசரணையும் இல்லாமல் போனது தான் அவளுடைய மன அழுத்தத்திற்கு காரணம் என்பதை அவள் அறியவில்லை. சிவாவாவது அவளிடம் கொஞ்சம் சகஜமாய் பேசி அவளுக்கு புரிய வைத்திருந்தால் தெளிந்திருப்பாளோ என்னவோ?

அவளுக்காக அனைத்தையும் செய்தவன், அது அவளுடைய இடம் என்பதை உணர வைக்க மறந்துவிட்டான். அவளும் அது தனக்கான இடம் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

காபியை அவனுக்கும் தனக்கும் ஊற்றி எடுத்துக் கொண்டவள் அவனிடம் சென்று நீட்ட,

“எனக்கு வேணாம். நீ குடி” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

“ப்ளீஸ்! இல்லைன்னா எனக்கும் வேண்டாம்” என்றாள்.

“இந்த பிளாக்மெயில் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். ஒழுங்கா குடி. உனக்காகத் தான் போய் போட்டு எடுத்துட்டு வந்தேன்” என்றான்.

அவளுக்கும் அப்போது அதற்கு மேல் பேசத் தெம்பில்லை. அவளுடைய அசதிக்கும் தலை பாரத்திற்கும் பிடிவாதம் பிடிக்கும் எண்ணமெல்லாம் அறவே இல்லை அவளுக்கு.

சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தவளுக்கு அந்த சூடான காபி தேவாமிர்தமாய் உள்ளுக்குள் இறங்கியது. அவள் காபி குடிப்பதையும், அவள் முக பாவனைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவன்,

“பசிக்குதா அபி” என்றான்.

“ம்ம்! ரொம்ப” என்றாள்.

“சிக்ஸ் தேர்ட்டி தான் ஆகுது. நான் போய் சூடா டிபன் ஏதாவது வாங்கிட்டு வரவா?” என்றான்.

“இல்ல, காபி குடிச்சதும் ஓகேவா இருக்கு” என்றாள்.

“இங்க என்னென்ன வாங்கனும்னு லிஸ்ட் போட்டு குடு. நான் வாங்கிட்டு வந்திடுறேன்” என்றான்.

“புரியலை” என்றாள்.

“பேசிக் நீட் தவிர இங்க உனக்குத் தேவையானது என்னென்னன்னு எனக்குத் தெரியாது. நீ சொன்னா மட்டும் தான் எனக்குத் தெரியும்” என்றான்.

“ம்ம்”

“அப்பறம் ஒரு விஷயம் அபி” என்று நிறுத்தியவன்,

“இங்க நீ மட்டும் தனியா இருக்குற மாதிரி இருக்குன்னு உன் அண்ணாகிட்ட சொன்ன தான? சொல்லப் போனா இத்தனை நாள் தனியா இருந்த எனக்கு துணையா தான் இப்போ நீ இருக்க. அப்படி நினைச்சுப் பாரு உனக்கு வேற மாதிரி தோணாது. நான் கீழ போறேன். நீ மெதுவா வா அபி” என்றவன் மேற்கொண்டு அவள் முகம் பார்க்காமல் சென்று விட்டான்.

அவன் பேசியதை கேட்ட அவளுக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது.

“நீ ஓவர் ரியாக்ட் பண்ணிட்ட அபி” என்றது ஒரு மனம்.

“நான் எங்க ஓவர் ரியாக்ட் பண்ணேன்.  அவன் தலையெழுத்து மொட்டை மாடியில காலம் தள்ளுறான். என்னையும் கூட்டிட்டு வந்து அதே மாதிரி இருன்னு சொன்னா எப்படி இருக்க முடியும்? இல்ல ஒரே நாள்ல எப்படி அடாப்ட் ஆக முடியும். இப்படி ஒவ்வொன்னுக்கும் எத்தனை தடவை கீழ போயிட்டு போயிட்டு வர்றது. ஆரம்பத்துலையே பேசிடு அபி. அது தான் உனக்கு நல்லது” என்று அவள் உள் மனம் தீர்மானமாய் உரைத்தது.

அவன் கூறியதைப் போல் மெதுவாகவே கீழே சென்றாள். பூஜையறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு வந்தவளை பிடித்துக் கொண்டாள் செல்வி.

“என்ன அபர்ணா? நல்ல தூக்கமா? முதல் நாளே கீழ வர்றதுக்கு எட்டு மணி ஆகிடுச்சு” என்றாள்.

“நான் நாலு மணிக்கே எழுந்துட்டேன்க்கா. கீழ வந்து பார்த்தேன், நீங்க யாரும் எழுந்துக்கிற மாதிரி தெரியலை. அதான் திரும்பவும் போயிட்டேன்” என்றாள் பட்டென்று.

“அது..! நேத்தெல்லாம் ஒரே வேலை. அதான் டயர்ட்ல தூங்கிட்டோம்” என்றாள் சரிதா.

“நேத்து எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?” என்ற செல்வியின் கேள்வி ஹாலில் பேப்பரை படித்துக் கொண்டிருந்த சிவாவிற்கும் கேட்டது.

“எல்லாம் நல்ல படியா முடிஞ்சதுக்கா” என்றாள்.

“நிஜமாவா?” என்ற சரிதாவுக்கு நம்பவே முடியவில்லை.

“ஏன்? எல்லாம் நடக்கனும்னு தான அலங்காரம் எல்லாம் பண்ணி வச்சிருந்திங்க. அதுவும் அவ்வளவு பூ எல்லாம் வாங்கி” என்றாள் வேண்டுமென்றே.

“பூ கதையை விடு. அதெப்படி? நீ தான் மாதவனைக் கட்டணும்னு இருந்தியே. எப்படி நேத்து சிவா கூட” என்ற செல்வி ஆரம்பிக்கும் போதே, கோபத்துடன் எழுந்திருந்தான் சிவா. பிரபாவின் குழந்தைகள் எழுந்து வரவும் கோபத்தை அடக்கியவனாய் அமர்ந்துவிட்டான்.

செல்வியின் வார்த்தைகள் அபர்ணாவின் மனதை  பதம் பார்த்தது என்னவோ உண்மை தான். ஆனால் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“நீங்க கூடத்தான் காலேஜ் படிக்கும் போது யாரையோ லவ் பண்ணதா கேள்விப் பட்டேன். நீங்க பிரபா மாமாவை கல்யாணம் பண்ணலையா? அவர் கூட சந்தோஷமா வாழலையா? இல்ல, குழந்தைங்க தான் பெத்துக்கலையா?” என்றாள் சிரித்துக் கொண்டே.

“அதெப்படி உனக்குத் தெரியும்?” என்றாள் செல்வி உள்ளே சென்ற குரலில்.

‘அப்போ  நிஜமாவே அப்படி ஒரு கதை இருக்கா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,

“எல்லாருக்குமே ஒரு பாஸ்ட் இருக்கத்தான் செய்யும்க்கா. அதுக்காக அதையே நினைச்சுட்டு இருக்க முடியுமா?” என்றாள்.

செல்வியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதைப் போல் தெரிந்தாலும், அவள் குத்திக் கொண்டிருக்கிறாள் என்று சரிதாவிற்கு புரிந்தது. வெளியே இருந்த சிவாவோ  வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

‘டீச்சர் வேலையை சரியா செய்றா. பக்கம் பக்கமா பாடம் எடுப்பா போலயே’ என்று நினைத்துக் கொண்டான் சிவா.

செல்வியும் சரிதாவும் பேசிக்கொண்டே இருந்தார்களே தவிர, சமைப்பதற்கான வழியைக் காணவில்லை.

‘நீங்க எப்போ சமைச்சு? நான் எப்போ சாப்பிட்டு?’ என்றவளுக்கு ஆயாசமாய் வந்தது.

“சமைக்கலையாக்கா?” என்று கேட்டே விட்டாள்.

“அது அத்தை தான் வந்து சமைப்பாங்க அபர்ணா. எங்களுக்கு இத்தனை பேருக்கு சமைக்க அளவெல்லாம் தெரியாது” என்றாள் சரிதா.

‘என் பசிக்கு நானே சமைச்சா தான் ஆச்சு போல’ என்று எண்ணியவள்,

“இன்னைக்கு நானே சமைக்கிறேன். என்ன செய்யணும்னு சொல்லுங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அதெல்லாம் வேண்டாம் அபி. நீ கிளம்பு. இன்னும் கொஞ்ச நேரத்துல கபிலன் வந்திடுவார். இங்க யாருக்கும் முடியலைன்னா கடையில சொல்லிக்கலாம்” என்றான் சிவா பின்னோடு வந்து.

“என்ன கொழுந்தனாரே? பொண்டாட்டி சமைக்கிறேன்னு சொன்னதுக்கே வேகமா வர்றீங்க? ஒரு நாள் சமைக்கிறதுல என்ன ஆகப் போகுது? புது மருமக வேற? அபர்ணா கைப்பக்குவத்தை நாங்களும் தெரிஞ்சுக்கணும் தான?” என்ற செல்வி,

“நீ ஸ்டார்ட் பண்ணு அபர்ணா. திங்க்ஸ் எல்லாம் நான் எடுத்துத் தர்றேன்” என்றாள். சிவாவோ மனைவியை முறைத்துவிட்டு சென்றான்.

அவள் பாதி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கலையரசியும் வந்துவிட்டார்.

“நான் வந்து செஞ்சிருப்பேன்ல அபர்ணா. நீ எதுக்குமா இன்னைக்கே சமையல்கட்டுக்கு வந்த?” என்றார் பரிவுடன்.

கலையரசி வந்தவுடன் செல்வியும் சரிதாவும் அவ்விடத்திலிருந்து ஜூட் விட்டிருக்க,

“பரவாயில்லை அத்தை. உங்களுக்கும் டயர்டா இருக்கும் தானே?” என்றவள் அவருடன் பேசிக்கொண்டே சமைத்து முடித்திருந்தவள், தனக்குத் தேவையான அத்தனை தகவலையும் அவர் வாயிலிருந்து கறந்திருந்தாள்.

வேலையை முடித்து வெளியே வந்தவளைப் பார்த்த செல்வி,

“அதுக்குள்ளே முடிச்சுட்டியா அபர்ணா?” என்றாள் ஆச்சர்யமாய்.

“முடிஞ்சதுக்கா!” என்றவளை,

“நீ மேல போ அபி. நான் வர்றேன்” என்றான் சிவா.

“இல்ல, நான்” என்று அவள் ஆரம்பிக்கும் போதே,

“உன்னை மேல போன்னு சொன்னேன் அபி” என்றான் சற்று குரலை உயர்த்தி. அவள் எதுவும் பேசாமல் சென்று விட,

“என்னாச்சு சிவா? எதுக்கு அபர்ணாகிட்ட இப்படி கோபமா பேசுற?” என்றார் கலையரசி.

“ஒண்ணுமில்லம்மா. எங்களுக்கு ஹாட் பாக்ஸில் வச்சுக் குடுங்க. மேல எடுத்துட்டு போய் சாப்பிட்டுக்கிறோம்” என்றவன் கலையரசியை எதிர்பார்க்காது உணவை எடுத்துக் கொண்டு சென்றான்.

“அவளை இன்னைக்கு சமைக்க விட்ட கடுப்பு கொழுந்தனாருக்கு” என்றாள் சரிதா.

“எப்படி? சொன்ன மாதிரி முதல் நாளே அவளை சமைக்க விட்டேனா? இந்த செல்விகிட்டையே வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசுறா. இவளை ஆரம்பத்துலையே கொஞ்சம் அடக்கி வைக்கணும் சரிதா” என்றாள் செல்வி.

“இதெல்லாம் நடக்குற காரியமா? அவ என்ன நம்மளை மாதிரியா? ஸ்கூல் டீச்சர் வேற? நம்ம பருப்பு அவகிட்ட வேகும்னு எனக்கு நம்பிக்கையில்லை” என்றாள் சரிதா.

“வேக வைக்கிறேனா இல்லையான்னு பாரு” என்றாள் செல்வி.

உணவுடன் மேலே வந்தவனைப் பார்த்து முறைத்த அபர்ணா,

“இதை கீழயே சாப்பிட்டிருக்கலாமே?” என்றாள்.

“அறிவு இருக்கா இல்லையா அபி?” என்றான் எடுத்த எடுப்பில்.

அவனின் கோபத்தில் திடுக்கிட்டவள்,

“நான் என்ன பண்ணேன்?” என்றாள்.

“நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல. உன்னை யாரு சமைக்க சொன்னா? இதை அட்வான்ட்டேஜா எடுத்துகிட்டு டெய்லி உன்னையே சமைக்க சொல்லுவாங்க. ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை. பத்து பேருக்கு சமைக்கணும். இதெல்லாம் தேவையா உனக்கு?” என்றான்.

“யாராவது ஒருத்தர் சமைச்சு தான ஆகணும். இவங்க எப்ப சமைச்சு நான் எப்ப சாப்பிடுறது. எனக்கு பசிச்சது, நான் சமைச்சேன்” என்றாள் கடுப்புடன்.

“அச்சோ சாரி அபி. வந்து முதல்ல சாப்பிடு” என்றவன், அவளுக்கு பரிமாறித் தர,

“உங்களுக்கு?”

“நீ முதல்ல சாப்பிடு” என்றான்.

மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தவளுக்கு அப்போது தான் புரிந்தது தனக்கிருந்த பசியின் அளவு. சாப்பிட்டுக் கொண்டிருந்தவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் சிவா.

ஓரளவிற்கு அவள் வயிறு நிரம்பிய பிறகு தான் அங்கு ஒருத்தன் இருக்கிறான் என்பதைப் போல் நிமிர்ந்து பார்த்தாள்.

“சாரி அபி” என்றவன் உள்ளுக்குள் ஏதோ போல் உணர்ந்தான்.

“பரவாயில்லை..! நேத்து முழுக்க சரியா சாப்பிடலையா, அதான். இப்போ தான் கண்ணே தெரியுது” என்றாள்.

“பார்த்தாலே தெரியுது” என்றான் சன்ன சிரிப்புடன்.

“நீங்களும் சாப்பிடுங்க” என்றவள் அவனுக்கு பரிமாறித் தர, கலையரசிக்கு பிறகு, அபர்ணாவின் உபயத்தில் திருப்தியாக சாப்பிட்டு முடித்தான்.

ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அபர்ணா.

“இவ்வளவு டேஸ்ட்டா சமைக்காத அபி. உன்னை முழு சமையல்காரியா மாத்திடுவாங்க. என் அண்ணிங்க லேசுப் பட்டவங்க இல்லை” என்றவனைப் பார்த்தவளுக்கு, அவன் ஒரு புரியாத புதிரைப் போல் தெரிந்தான்.