மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மாதவனின் வீட்டிற்குள் நுழையும் போதே, பேச்சு சத்தம் வெளியே வரை கேட்டது.
“சின்ன வயசுல இருந்து மாதவனுக்கு அபர்ணா தான்னு சொல்லிட்டு இப்போ போய் எப்படிங்க மாத்தி பேச முடியும்? நீங்க எப்படி மாதவனுக்கு வெளிய பொண்ணு பார்க்கலாம்?” என்றார் அன்னம் கண்ணீர் கலங்கிய குரலில்.
“நான் என்னைக்காவது சொல்லியிருக்கேனா? உன் அண்ணன் மகளை என் பையனுக்கு கட்டி வைக்கிறேன்னு? யார் வீட்டுக்கு யார் மருமகளா வர்றது? என் வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு உன் அண்ணன் மகளுக்கு என்ன தகுதி இருக்கு?” என்ற முத்து மாணிக்கத்தின் குரலில் அதிர்ந்தவள் அப்படியே நின்றுவிட்டாள். கேட்டவை நிஜம் தான் என்று உணரவே அவளுக்கு சில நிமிடங்கள் எடுத்தது.
“அவ என் அண்ணன் பொண்ணுங்க. ஏன் மருமக” என்றார் அன்னம் மீண்டும் அழுத்தமாக.
“அதெல்லாம் ஒரு தகுதியாகிட முடியாது அன்னம். அதுவும் அந்த குடிகாரப் பய மக எனக்கு மருமகளா? ஊருக்குள்ள எனக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. அதை கெடுத்துக்க சொல்றியா?” என்றார் கோபமாய்.
“ஏன் என்னைய கட்டிட்டு வரும் போது இதெல்லாம் தெரியலையா உங்களுக்கு?” என்றார் அன்னம் சூடாக.
“என்ன அன்னம் வாய் நீளுது? உன்னைய கட்டிட்டு வரும் போது நிலைமை வேற. ஆனா இப்போ அப்படியா? எப்பப் பார்த்தாலும் ஒயின்ஷாப்ல தான் இருக்கான் உன் அண்ணன். உன் அண்ணன் மகன் கல்யாணம் முடிஞ்சு முழுசா ஆறு மாசம் ஆகலை. பொண்டாட்டியை கூட்டிட்டு தனிக் குடித்தனம் போயிட்டான். இருக்குற வீட்டைத் தவிர்த்து பெருசா எந்த சொத்து பத்துமில்லை. இந்த லட்சணத்துல நீ நினைக்கிறது உனக்கே அதிகமா தெரியலை?” என்றார் நக்கலுடன்.
“அபர்ணாவுக்கு என்னங்க குறைச்சல்? அழகு இல்லையா? படிப்பு இல்லையா? இல்லை குணம் தான் இல்லையா? நாமளே தேடிப் போனாலும் அவளை மாதிரி ஒரு பொண்ணை நம்மளால பார்க்க முடியுமா?” என்றார் அன்னம்.
“இங்க பார் அன்னம்? நான் எப்ப அபர்ணா நல்ல பொண்ணு இல்லைன்னு சொன்னேன். நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்னு தான் சொன்னேன். நாமளே ஒரு நல்ல பையனா அபர்ணாவுக்கு பார்ப்போம். இதைப் பத்தி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்றார் முத்து மாணிக்கம்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அபர்ணாவின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. துடைக்க துடைக்க அது நிற்பேனா என்று அழிச்சாட்டியம் செய்ய,
“இப்ப எதுக்கு நான் அழறேன்? மாதவன் மாமாவுக்கு இதெல்லாம் தெரியாம இருக்குமா இருக்கும். அவருக்கு தெரிஞ்சா பெரிய மாமாவை இப்படி பேச விடுவாரா?” என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“என்ன மாதவா? அப்பா பேசுறார், நீயும் அமைதியா இருக்க? வாயைத் திறந்து அபர்ணாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுப்பா?” என்றார் அன்னம் மன்றாடும் குரலில். இப்போது இந்த அதிர்ச்சியைத் தான் அபர்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘மாதவன் மாமாவும் இவ்வளவு நேரம் உள்ள தான் இருந்தாங்களா?’ என்று எண்ணியவளுக்கு மூச்சு விடுவதே சிரமமாய் இருந்தது.
“அவன் என் பையன். நான் சொல்றதை மீற மாட்டான்” என்றார் முத்து மாணிக்கம் பெருமையாக.
அன்னம் கேள்வியாய் மகனைப் பார்க்க, “அப்பா சொல்றதும் சரிதானம்மா. அதுவுமில்லாம எனக்கு அபர்ணா மேல அப்படி எந்த பீலிங்சும் இல்லை. ஒரு நாளும் அபர்ணாவை நான் அந்த கண்ணோட்டத்துல பார்த்ததில்லை. இனி இந்த பேச்சை பேசாதிங்க” என்ற மாதவனின் தெளிவான குரலில் அபர்ணா தெளிவிழந்து போனாள்.
மனதிற்குள் பேரலையாய் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்தும் வழி தெரியாமல் கலங்கி நின்றவள், பித்துப் பிடித்தவள் போல் அப்படியே நின்றிருந்தாள்.
“ஹேய் ஆபரணம்? என்னாச்சு ஏன் வெளியவே நிக்கிற?” என்றபடி அவள் அருகில் வந்தான் கிஷோர். மாதவனின் தம்பி. சட்டென்று கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தவள்,
“ஒன்னும் இல்லடா. சும்மாதான் ஏதோ யோசனை” என்றாள் அபர்ணா. கிஷோருக்கும் அவளுக்கும் ஒரே வயது தான். சொல்லப் போனால் இருவரும் நல்ல நண்பர்கள்.
“அந்த யோசனையை வீட்டுக்குள்ள வந்து பண்ணலாமே?” என்றான் சிரிப்புடன்.
“ஆமா நீ எங்க போயிட்டு வர்ற?” என்றாள் பேச வேண்டுமே என்று. வேதனை தொண்டையை அடைக்க, அவனிடம் காட்டாமல் இருக்க முயன்று சகஜமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“பார்த்தா தெரியலை? பசங்களோட மேட்ச் விளையாடிட்டு வர்றேன்” என்றவன் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
“அண்ணன் வீட்ல இருந்தா மட்டும் தான் மேடம்க்கு இங்க வர வழி தெரியும் போல? அதுவும் ஸ்பெஷல் ஐட்டத்தோட?” என்று அவள் கையில் இருந்த பாத்திரத்தைப் பிடுங்கியவன் வேகமாய் அதைத் திறக்க,
“வாவ்..! சுட சுட உளுந்த வடை” என்று வேகமாய் அதை எடுத்து சாப்பிட, மாதவன் அவனை முறைத்தான்.
“என்ன சொல்லு ஆபரணம், உன் கை பக்குவமே தனி தான்” என்றபடி சாப்பிட, அவளுக்குத் தான் அங்கு நிற்பதே பெரும் அவஸ்தையாய் இருந்தது.
“நீ எப்போடாமா வந்த?” என்றார் அன்னம் ஒரு தவிப்புடன்.
“இ..இப்போதான் வந்தேன் அத்தை” என்று அவள் கூறியவுடன் தான் அவர் ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.
“அப்போ நான் கிளம்புறேன் அத்தை” என்று கிளம்ப முயற்சித்தவளை ஆச்சர்யமாய் பார்த்தான் கிஷோர். பொதுவாக மாதவன் இருக்கும் போது வந்தால் அவ்வளவு சீக்கிரம் கிளம்ப மாட்டாள். கிஷோர் கூட அடிக்கடி ‘நல்லா சுத்துறடி எங்க அண்ணனை” என்று கிண்டல் செய்வான். இப்போது அவள் முகமும் சரியில்லை. வந்தவுடன் கிளம்பும் அவள் செய்கையும் அவனுக்கு புரிபடவில்லை.
“என்னாச்சு ஆபரணம்? ஏன் உடனே கிளம்புற?” என்றான் புரியாமல்.
“அது இன்னைக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு கிஷோர், அதான்” என்றவள் யாரையும் பார்க்காது வாசற் கதவு வரை சென்று விட்டாள். ஒரு நிமிடம் நின்று நிதானித்தவள், ஒரு நிமிர்வுடன் திரும்பி வந்தாள். வந்தவள் நேராக மாதவனுக்கு முன் சென்று அவன் முன் கையை நீட்ட, புரியாமல் பார்த்த மாதவன்,
“என்னப்பா?” என்றபடி தானும் கையை நீட்டினான்.
“உங்க கல்யாண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் மாமா” என்றாள் அவன் கண் பார்த்து. அவளின் வாழ்த்தில் மாதவன் சற்று அதிர்ந்து பார்க்க, அனைவருக்கும் புரிந்து போனது, தாங்கள் பேசியதை அபர்ணா கேட்டுவிட்டாள் என்று.
“அபர்ணா அது வந்துப்பா” என்று மாதவன் தயங்க,
“நோ வொர்ரிஸ் மாமா. என்ன இருந்தாலும் உங்களைக் கட்டிக்க ஒரு தகுதி தராதரம் வேணும். உங்க தகுதிக்கும் தராதரத்துக்கும் ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணைத் தான் மாமா உங்களுக்குப் பார்த்திருப்பார். அது தான் சரியும் கூட. இதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறிங்க?” என்று விரக்தி சிரிப்புடன் கேட்டவளைப் பார்த்த கிஷோர் அதிர்ந்து நின்றான். அவனுக்குத் தான் தெரியுமே மாதவன் என்றால் அவளுக்கு எவ்வளவு பிரியம் என்று.
“ஹேய் ஆபரணம் நீ என்ன சொல்ற? அண்ணனுக்கு வேற பொண்ணா? என்ன விளையாடுறியா நீ?” என்றவன் தன் குடும்பத்தினரை கோபத்துடன் பார்க்க, அவர்கள் முகத்தில் இருந்த பாவனை அவனுக்கு எதையோ உணர்த்தியது. தான் உள்ளே வரும் போது உணர்வற்று நின்றிருந்த அபர்ணாவின் முகமும் இப்போது கண் முன் வந்து போனது. அதற்கு மேல் புரியாமல் இருப்பதற்கு அவன் ஒன்றும் சின்னப் பையன் இல்லையே?
“நான் வர்றேன்” என்று எல்லோருக்கும் பொதுவாய் சொன்னவள் அங்கிருந்து சட்டென்று கிளம்பிவிட்டாள். அவள் வீடு செல்லும் வரை கண்ணீருடன் கண்களை துடைத்துக் கொண்டே சென்றவளை போவோர் வருவோர் எல்லாம் விசித்திரமாய் பார்த்துக் கொண்டு செல்ல, அதெல்லாம் அவள் கருத்தில் படவில்லை.
போன வேகத்தில் திரும்பி வந்த மகளையும், அழுது வீங்கியிருந்த அவள் முகத்தையும் பார்த்த சாந்திக்கு புரிந்து போனது, தனக்குத் தெரிய வந்த விஷயம் மகளுக்கும் தெரிந்து விட்டதென்று.
“ம்மா” என்றவளுக்கு ஏனோ தாயைக் கண்டவுடன் அடக்க முடியாமல் அழுகை வர, அவரைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்துவிட்டாள்.
“அம்மாடி அழாதடா” என்ற சாந்திக்கு என்ன சொல்லி மகளைத் தேற்றுவது என்று தெரியவில்லை. காலையில் விஷயத்தை கேள்விப் பட்டதில் இருந்து அவரும் ஒரு நிலையில் இல்லையே. அவருக்கே உள்ளுக்குள் அவ்வளவு துடித்தது. மகளின் மனம் என்ன பாடுபடும் என்று கலங்கித் தவித்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது அவளின் கண்ணீரைப் பார்த்து செய்வதறியாது கலங்கி நின்றார்.
விஷயம் எதையும் அறியாத மூர்த்தியோ வழக்கம் போல் குடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரை வாயிலில் கண்டவள் சட்டென்று எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டாள்.
“என்னாச்சு அபர்ணாவுக்கு? புள்ள எதுக்கு என்னைய பார்த்த உடனே உள்ள போய் கதவை மூடுது?” என்றார் குழறலுடன்.
‘சொன்ன மட்டும் கேட்குற நிலைமையிலையா இருக்கீங்க?’ என்று நொந்து கொண்ட சாந்தி மேற்கொண்டு அவரிடம் எதுவும் பேசவில்லை. அந்த நிலைமையில் பேசினாலும் சரியாக இருக்காது என்று எண்ணிக் கொண்டார்.
அறைக்குள் சென்று கதவை அடைத்த அபர்ணாவோ ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கொண்டிருந்தாள். அவர்கள் முன்பு எதையும் காட்டாமல் வந்தவளுக்கு தனி அறையில் அப்படி இருக்க முடியவில்லை. மனமெல்லாம் ரணமாக வலித்தது. அவளுடைய பொருளை யாரோ சட்டென்று கையில் இருந்து பிடுங்கி விட்டார் போன்ற உணர்வு. இத்தனை நாள் தனக்கென்று எண்ணியிருந்த ஒன்று இப்போது வெகு தூரம் சென்று விட்ட உணர்வு. அவளின் வலியை கடத்தும் வழி தெரியாமல் இருந்தவளுக்கு அடுத்த நிமிடத்தை கடக்க முடியுமென்று தோன்றவில்லை. அளவின்றி தேக்கி வைத்திருந்த நேசம் நெஞ்சை உடைத்திருந்தது.
வெளியே பரிதவிப்புடன் அவள் அறையை பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு மனம் முழுவதும் பயம் அப்பிக் கொண்டது. எங்கே அவள் தவறான முடிவு எதுவும் எடுத்து விடுவாளோ? என்று.
“அம்மாடி கதவைத் திறம்மா” என்று பலமுறைத் தட்டிவிட்டார். நேரம் ஆக ஆக அவருக்கு பதட்டம் கூடிக் கொண்டே போனது. மூர்த்தியோ மழு போதையில் இருந்தார்.
‘கபிலனை வரச் சொல்லலாம்’ என்று எண்ணியவர், அவனுக்கு அழைக்க முற்படும் போதே கதவைத் திறந்திருந்தாள் அபர்ணா.
மீண்டும் கட்டிலில் சென்று கால்களில் முகம் புதைத்துக் கொண்டவளை தன் வயிறோடு அணைத்துப் பிடித்துக் கொண்டார் சாந்தி.
“அம்மாடி, நானும் அப்பாவும் நாளைக்கு அத்தை வீட்டுக்கு போய் பேசிட்டு வர்றோம்மா. அதெப்படி அவங்க வெளிய பொண்ணு பார்க்க போச்சு? நீ கவலைப் படாதடா” என்ற சாந்திக்கும் தெரியும், அபர்ணாவிற்கும் தெரியும் இது ஆறுதல் பேச்சு என்று. அன்னத்தின் கணவர் முத்து மாணிக்கம் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது என்று அவர்களுக்குத் தான் தெளிவாக தெரியுமே.
“அங்க யாரும் போக வேண்டாம்மா. நீங்க பயப்படுற மாதிரி நான் தப்பான முடிவெல்லாம் எடுக்க மாட்டேன்” என்று முயன்று தாய்க்கு ஆறுதல் சொன்னவள், அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.
“கொஞ்சம் சாப்பிட்டு படுமா. ஸ்கூல் விட்டு வந்து எதுவுமே சாப்பிடலையே?” என்ற சாந்திக்கு,
“பசிக்கலைம்மா” என்ற கமரிய குரல் தான் பதிலாக வந்தது.
நேசமும் ஆசையும் அடியோடு அறுக்கப்பட்ட அவள் மனமோ இருட்டை வெறித்திருந்தது.