Advertisement

     கீர்த்தியோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். இவன் தான் இவ்வளவு செய்ததா என்று அவளால் நம்பக் கூட முடிய வில்லை.

     “ஏன் இப்படி பண்ணுனீங்க?”, என்று திக்கி திணறி கேட்க “நீ என்ன டி செய்யலை? உன்னால என் தம்பி செத்து, ஜானகி ரகு பிரிஞ்சு, ஆதியை அனாதையாக்கி நீயெல்லாம் ஒரு பொம்பளையா?”, என்று கேட்க மௌனக் கண்ணீர் வடித்தாள் கீர்த்தி.

     “சரி அதை விடு. ரகுவோட அப்பாவுக்கு என்ன ஆச்சு? அவரை என்ன பண்ணின? உன்னைப் பாக்க வந்தப்ப தான் அவர் இறந்திருக்கார். சொல்லு என்ன செஞ்ச?”, என்று  விக்ரம் மிரட்ட ரகுவும் கண்களில் வலியுடன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

     தயக்கத்துடன் கீர்த்தி அன்றைய நாளைப் பற்றியும் மூர்த்தி இறந்ததைப் பற்றியும் தயக்கத்துடன் சொல்ல இரண்டு ஆண்களும் அதிர்ந்து போனார்கள்.

     “விக்ரம் பிளீஸ், நான் கால் கட் பண்ணுறேன். இந்த மாதிரி ஒரு ஜென்மத்தை நான் பாக்க கூட விரும்பலை. ஆனா அப்பா என்னைப் பத்தி நான் எந்த தப்பும் செய்யலைன்னு நிம்மதியா தான் இருந்துருக்காங்க. அது வரைக்கும் எனக்கு சந்தோஷம். இவளை முடிச்சிருங்க”, என்று சொல்லி விட்டு வைத்தான் ரகு.

     “நீ இப்ப உடனே சாகப் போறியா? இல்லை நோய் முற்றி சாகப் போறியான்னு தெரியாது. ஆனா சாகுறதுக்கு முன்னாடி உன் சாவுக்கு யாரு காரணம்னு நீ தெரிஞ்சிக்கிட்டு சாகணும்ல? அதான் நேர்ல வந்து பார்த்தேன். இனி உன்னை தொல்லை பண்ண மாட்டேன். நீ சந்தோசமா இருக்கலாம்”, என்று புன்னகையுடன் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப் விட்டான் விக்ரம். இதற்கு மேல் அவளுக்கு செய்ய ஒன்றுமே இல்லையே? எப்படி என்றாலும் அவள் சாவு உறுதி. செத்த பாம்பை எதுக்கு கொல்லணுமாம்?

     அடுத்த நாள் நீயுஸ் பேப்பரில் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி கொடுமையான நோயை வாங்கியதால் இளம்பெண் வாடகைக்கு இருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் என்று வந்தது.

     அதை ஜானகியிடம் காட்டினான் ரகு. ஆனால் அவளிடம் எந்த உண்மையையும் சொல்ல வில்லை. “எப்படி ரகு? இந்த பொண்ணு எவ்வளவு மோசமா இருந்திருக்கா பாரேன்? நல்ல முடிவு தான். விக்ரம் ஏதாவது செய்யுறதுக்குள்ள இவளே அந்த கடவுள் கிட்ட சிக்கிட்டா. சாகட்டும், இருந்து என்ன சாதிக்கப் போறா? கடவுள் இருக்கார்ல?”, என்ற சொல்லுடன் முடித்துக் கொண்டாள் ஜானகி. இதற்கெல்லாம் காரணம் விக்ரம் என்றெல்லாம் ஜானகிக்கு தெரிய வில்லை. அவளுக்கு தெரியாமல் இருப்பதே நல்லது என்று எண்ணிக் கொண்டவன் மோகனிடம் மட்டுமே அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்.

     அதற்கு அடுத்த நாள் ரகுவை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு வந்த ஜானகி விஷ்ணுவின் திருமணத்தைப் பற்றிய பேச்சை எடுத்தாள்.

     “நாம நீ லவ் பண்ணுற பொண்ணைப் பாக்க போகலாம் அண்ணா. நீ அவங்க வீட்ல கேளு”, என்று ஜானகி சொல்ல விஷ்ணு அதிர்ந்தான்.

     “இல்லை ஜானு வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும்”, என்று அவன் தயங்க “இல்லை இல்லை, நீ நம்பர் சொல்லு. அப்பா பேசுவாங்க”, என்றாள்.

     “வேண்டாம் டா”

     “ஏன்?”

     “அவளுக்கு வேற ஒரு பையன் கூட கல்யாணம் ஆகிருச்சு”, என்று அவன் சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்து போனாள்.

     “ஆமா, முன்னாடியே என் கிட்ட அவ அவசரப் படுத்தினா. நான் உன் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொன்னேன். அவ வீட்ல கட்டாயப் படுத்தினதுனால சரின்னு சொல்லி அந்த பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா”, என்று சொல்ல ஜானகி ஏங்கி ஏங்கி ஆழ ஆரம்பித்தாள்.

     “ரகுவும் மோகனும் அவளைத் தேற்ற “என்னால தான் அண்ணாவோட வாழ்க்கை போச்சு”, என்று அவள் அழ “ஜானு, அதை விடு. பெரிய விஷயம் எல்லாம் இல்லை. வேற நல்ல பொண்ணை பாரு. நான் கல்யாணம்  பண்ணிக்கிறேன்”, என்று விஷ்ணு சொன்ன பிறகு தான் நிம்மதியானாள். ஆனாலும் நவீனை அழைத்து இந்த உண்மையை ஏன் சொல்ல வில்லை என்று அவ்வளவு திட்டு திட்டினாள். விஷ்ணு சொல்லக் கூடாது என்று சொல்லி இருந்ததால் தான் சொல்ல வில்லை என்று சொன்னான் அவன். அடுத்து ஜானகி நிர்மலாவுடன் சேர்ந்து அண்ணனுக்கு தீவிரமாக பெண் தேட ஆரம்பித்தாள்.

     இரண்டு வருடம் கழித்து…. ரகுராமின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. அன்று இரண்டு விழாக்கள். ஒன்று அந்த வீட்டின் கிரகபிரேவேசம். ரகுராம் சென்னையிலே அந்த புது வீட்டை வாங்கி இருந்தான். அந்த வீட்டை வாங்க மோகனிடம் தான் உதவி கேட்டான். அதுவும் கடனாக தான்.

     மற்றொன்று ரகுராம் ஜானகியின் மைந்தனுக்கு பெயர் சூட்டும் விழா அன்று. சொந்தங்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என அனைவரும் வந்திருந்தனர். நிர்மலா, தேவகி இருவரும் விழா ஏற்பாடுகளை கவனிக்க மோகன் பேரனுடனே இருந்தார். நவீன் விஷ்ணு இருவரும் தங்களின் குடும்பங்களுடன் வந்திருந்தனர்.

     . இருவருக்கும் அக்கா தங்கை இருவரை தான் மணம் முடித்து வைத்திருந்தார்கள். நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது சகலைகளாக மாறி விட ஜானகி தான் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

     விக்ரம் தன்னுடைய மனைவி, மகன், மகள் என அனைவரையும் அழைத்து வந்திருந்தான். அவனது மகன் இப்போது ஆதித்யா விக்ரம்.

     இங்கே வந்ததும் ஆதி ஓடி வந்து ரகுவைக் கட்டிக் கொள்ள ரகுவுக்கு அவ்வளவு சந்தோஷம். அதே போல நிர்மலா ஜானகியையும் கட்டிக் கொள்ள சந்தோசத்தில் கண்கள் கலங்கினாலும் அதை அடக்கிக் கொண்டார்கள். ஆனால் ரகுவின் மகனுக்கு ஆதி நினைவாக ஆதி தேவ் என்று பெயரிட்டிருந்தார்கள். அதில் ஆதித்யாவுக்கு அவ்வளவு சந்தோஷம். ஐ என் தம்பி பேரும் ஆதி என்று அவ்வளவு ஆர்ப்பரித்தான்.

     மோகன் பேரனுக்கு என்று செயின், கம்மல், கொலுசு, பிரேஸ்லெட் என அனைத்தும் தங்கத்தில் போட்டு அசத்தி இருந்தார். விழா நல்ல படியாக முடிந்தது. விக்ரம் குடும்பம் கிளம்பும் போது ஆதி ரகுவைப் பார்த்து அழுவானோ என்று நினைக்க அழுதான் தான். ஆனால் விக்ரமுடன் செல்ல மாட்டேன் என்றெல்லாம் சொல்ல வில்லை. அதுவே மற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. அன்று இரவு மகன், மருமகள், பேரன் மூவருக்கும் திஷ்டி கழித்தே அவர்களை தூங்க அனுப்பினாள் நிர்மலா.

          அடுத்த இரண்டு வருடம் கழித்து தன்னுடைய மகனை மடியில் போட்டு கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஜானகி. ஆப்போது மும்பையில் இருந்து ஆதி ரகுராமை அழைத்திருந்தான். “அப்பா எப்படி இருக்கீங்க?”, என்று கேட்ட ஆதி நன்றாக வளர்ந்திருந்தான்.

     “நல்லா இருக்கேன் கண்ணா? பெரிய பையனா ஆகிட்டியே? நல்லா படிக்கிறியா?”, என்று வாஞ்சையுடன் வந்தது ரகுவின் குரல்.

     “சூப்பரா படிக்கிறேன் பா. டேடி நல்லா சொல்லித் தருவாங்க. சரி எங்க குட்டி ஆதி? ஜானும்மா கிட்ட இருக்கானா?”

     “ஆமா, இதோ கொடுக்குறேன்”, என்று சொன்ன ரகு ஜானகியிடம் கொடுக்க அவளும் ஆதியிடம் பேசினாள். நிர்மலாவும் ஆதியிடம் அதே பாசத்துடன் பேசினாள்.

     ஆதிக்கு இப்போது விவரம் தெரிந்தாலும் இப்போது வரை அவனது பெற்றவர்கள் விக்ரம் பூஜா என்றும் நான்கு வயது வரை வளர்த்த பெற்றவர்கள் ரகுராம் ஜானகி என்றும் தான் நம்பிக் கொண்டிருக்கிறான். அப்படித் தான் நம்ப வைத்திருந்தனர். சுனில் கீர்த்தி பற்றி எதுவுமே அவனுக்கு தெரியாது. இனியும் தெரியாது.

     ரகுராமின் மைந்தனோ இப்போது இரு வீட்டினருக்கும் இளவரசனாக இருந்தான். நிர்மலா, தேவகி, மோகன் மூவரும் பேரனை தங்கத் தட்டில் வைத்து தாங்காத குறை தான். ரகுராம் ஜானகிக்கும் மகன் என்றால் உயிர்.

     அதே போல விஷ்ணு நவீன் மனைவிகளுடன் வாரத்தில் ஒரு முறை குட்டி ஆதியை பார்க்க வந்து விடுவார்கள். முன்பு இழந்த அத்தனை சந்தோசங்களையும் ஈடுகட்டும் வகையில் இருந்தது இப்போதைய அனைவரின் வாழ்க்கையும்.

     அன்று இரவு அறைக்குள் மகன் இல்லாமல் ஜானகி வர “குட்டியை எங்க டி அம்மா வச்சிருக்காங்களா?”, என்று கேட்டான் ரகு.

     “ஆமா ரகு, அழுதா கூப்பிடுறேன்னு சொல்லிட்டாங்க”

     “அப்படின்னா இன்னைக்கு மிர்ச்சி எனக்கா?”, என்று கண்கள் மின்ன கேட்டவன் அவள் கை பற்றி இழுக்க அவன் மடியில் விழுந்தாள்.

     “என்ன பண்ணுற ரகு விடு?”, என்று அவள் சிணுங்க “ஏய் அதெல்லாம் முடியாது. இன்னைக்கு வேற குளிர் ஓவரா இருக்கு”, என்று சொல்லியவன் அவளை இறுக அணைக்க “மேனேஜருக்கு என்ன வேணுமாம்?”, என்று கேட்டாள்.

     “கொடுக்க வேண்டியதைக் கொடுத்தா போதும்”

     “என்னமோ வாங்காம இருக்குற மாதிரி தான்”, என்றவள் அவனுடன் இழைய அவளை இறுக்கி அணைத்தவன் அவள் வாசனையை ஆழ்ந்து அனுபவிக்க அவன் அடாவடியில் திணறித் தான் போனாள். அந்த இரவு முழுக்க அவன் அவளை தூங்க விடாமல் செய்ய அவனது உலகுக்குள் விருப்பத்துடன் சரணடைந்து விட்டாள். அவளது தாகம் தீர்க்கும் நந்தவனம் அவனல்லவா?

……முற்றும்…..

Advertisement