Advertisement

அத்தியாயம் 20

என் வாழ்வை ஒளி மயமாக்குகிறது 

உன் அன்பெனும் ஜோதி!!!

     கீர்த்தி மயக்கத்தில் இருந்து விழிக்கும் போது ஒரு அறைக்குள் படுத்திருந்தாள். அது எந்த இடம் என்று கூட தெரிய வில்லை. அப்போது தான் தன்னை கடத்தினார்கள் என்ற நினைவே வந்தது. அவசரமாக கதவு அருகே சென்று திறக்க முயற்சி செய்ய அது வெளியே பூட்டப் பட்டிருந்தது. கதவைத் தட்டி தட்டி பார்க்க யாரும் திறக்க வில்லை.

     அடுத்த அரை மணி நேரம் ஒரு வித பயத்திலே அவள் அமர்ந்திருக்க அப்போது வெள்ளை ஜிப்பா வெள்ளை வேஷ்டி அணிந்து ஒருவன் உள்ளே வந்தான். அவள் அவனை திகைத்துப் பார்க்கும் போதே அவன் கதவை உள் தாழ்ப்பாள் போட்டான்.

     “ஹலோ, யாரு நீங்க? எதுக்கு கதவை பூட்டுறீங்க?”, என்று கேட்டவள் கதவை நெருங்க போக அவள் முடியைப் பிடித்து கட்டிலில் தள்ளியவன் ஹிந்தியில் பேச அவளுக்கு புரியவே இல்லை.

     அவன் பேச்சு புரிய வில்லை என்றாலும் அவன் கேவலமான பார்வை புரிய தான் செய்தது. அவனது காமப் பார்வையும் பாக்கு போட்ட வாயால் அவன் சிரித்ததும் அவளுக்கு அருவருப்பான உணர்வைக் கொடுத்தது.

     மீண்டும் அவள் கதவை நோக்கி செல்லப் போக அவளைக் கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்தவன் அவளை ஆக்ரமிக்க ஆரம்பிக்க அவனிடம் இருந்து விடு பட போராடினாள். ஆனால் முடிய வில்லை.

     அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் தன் வேலையிலே குறியாக இருக்க அவளால் அதில் இருந்து மீளவே முடியவில்லை. அவள் சுனிலுடன் வாழ்ந்திருக்கிறாள் தான். அது மட்டுமல்லாமல் வேலை செய்யும் போது சில ஆண்களுடன் ஒன்றாக இருந்திருக்கிறாள் தான். ஆனால் அவர்கள் அவளை இப்படி எல்லாம் வதைத்தது இல்லையே?

     அவனது இச்சையைத் தீர்த்துக் கொண்டு அவன் விலகிச் செல்ல புயலில் சிக்கிய பூங்கொடி போல கிடந்தாள். அவன் சென்றதும் ஒரு பெண்மணி உள்ளே வந்து அவளுக்கு உணவும் வேறு உடையும் கொடுக்க அவளை நிறுத்தி “என்னை விடுங்க”, என்று கத்தினாள். ஆனால் அந்த பெண்ணும் ஏதோ ஹிந்தியில் பேசி விட்டு வெளியே சென்று விட்டாள்.

     ஒன்றும் புரிய வில்லை. எதனால் தன்னை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று கூட தெரிய வில்லை. வேறு வழி இல்லாமல் குளித்து முடித்து அந்த உணவை உண்டு விட்டு அமர அப்போது அந்த பெண் உள்ளே எட்டிப் பார்த்து விட்டுச் சென்றாள். அடுத்த நொடி மற்றொரு ஆள் உள்ளே வந்தான். மீண்டும் அதே நிலைமை தான்.

     அடுத்து வந்த நாட்கள் கீர்த்திக்கு இப்படியே தான் கழிந்தது. நாட்கள் செல்ல செல்ல தான் அவள் தவறான இடத்தில் இருப்பதே தெரிந்தது. அவளால் அங்கிருந்து தப்பிக்கவே முடிய வில்லை. விதவிதமான ஆட்கள் அவளை தேடி வந்தனர். அவள் அழுது முரண்டு பிடித்தால் அடித்து துன்புறுத்தினர். அதனால் இப்போதெல்லாம் முரண்டு பிடிக்காமல் இருந்து கொண்டாள்.

     பொறாமையில் கீர்த்தியை சுனிலிடம் தவறாக நடக்கச் சொன்ன கீர்த்தியிடம் அவளே எதிர் பார்க்காமல் பல ஆண்கள் தவறாக நடக்க கண்ணீரைப் பொழிவதைக் தவிர அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை. ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் இருப்பது போல துடித்துக் கொண்டிருந்தாள்.

     ரகு தன்னுடைய அறையில் கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டிய படி அமர்ந்திருந்தான். அமைதியாக இருந்தாலும் அவன் மனம் எங்கெங்கோ அலை பாய்ந்தது.

     அப்போது உள்ளே வந்த ஜானகி “ரகு, இந்தா பால்”, என்று நீட்டினாள் ஜானகி.

     அதை வாங்கிக் கொண்டவன் “அம்மா படுத்துட்டாங்களா ஜானு?”, என்று கேட்டான்.

     “அத்தை படுத்துட்டாங்க. டேப்லெட் போட்டதைப் பாத்த அப்புறம் தான் வெளிய வந்தேன்”, என்றாள் எச்சரிக்கையோடு. ஏனென்றால் ஆதி ஊருக்கு சென்ற அடுத்த நாள் அனைவரும் சோகத்தில் இருக்க நிர்மலா மாத்திரை போட வில்லை. ரகுவும் ஜானகியும் கூட அதை கவனிக்க வில்லை.

     அதனால் நிர்மலாவுக்கு ரத்தம் அழுத்தம் கூடி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரி செய்து வருவதற்குள் கொஞ்சம் திண்டாடிப் போனார்கள். அதனால் தான் ஜானகி கூடுதல் கவனத்துடன் இருந்தாள்.

     “இங்க உக்கார் ஜானு, கொஞ்சம் பேசலாம்”, என்று ரகு அழைக்க “வேண்டாம் ரகு. என்ன பேசினாலும் மன வருத்தம் தான் மிஞ்சும்”, என்றாள் ஜானகி.

     “என்னைக்குனாலும் பேசி தான் ஆகணும் ஜானு”

     “ம்ம்”, என்று அவள் முணுமுணுக்கும் போதே ரகுவுக்கு அழைப்பு வர இரண்டு பேரும் யார் என்று பார்த்தார்கள். விக்ரம் தான் அழைத்து பேசினான். கூடவே ஆதியும் பேசினான். “அப்பா, ஜானும்மா நான் நாளைல இருந்து புது ஸ்கூல்க்கு போக போறேன்”, என்று சந்தோஷமாக சொன்னவன் “நீங்க எப்ப வருவீங்க?”, என்றும் கேட்டான்.

     “நீ நல்லா படி ஆதி குட்டி. நான் கண்டிப்பா ஆச்சியையும் ஜானும்மாவையும் கூட்டிட்டு அங்க வரேன்”, என்று சொல்லி சமாளித்தான் ரகு. ஆனால் அங்கே செல்லக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அங்கே சென்றால் ஆதி ரகுவுடன் வருவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்ய? அவன் அங்கேயே கொஞ்சம் பொருந்திப் போகட்டும் என்று எண்ணிக் கொண்டான்.

     ஆதி பேசி முடித்ததும் ரகு அமைதியாக இருக்க “என்ன யோசிக்கிற ரகு?”, என்று கேட்டாள் ஜானகி.

     “என்னத்த யோசிக்க? பழசை நினைக்க நினைக்க மனசு அறுக்குது. அதுல இருந்து வெளிய வரவே முடியலை. எப்படி ஏமாந்துருக்கேன் பாரேன்”

     “நானும் தான் ரகு”

     “ஏன் ஜானு நமக்கு இந்த நிலைமை? யாருக்கு என்ன துரோகம் செஞ்சோம்?”

     “விதி ரகு, வேற என்ன சொல்ல? அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட்ல நீ உன் சட்டையைக் கழட்டிக் கொடுத்தியே, அப்பவே நீ எனக்குள்ள வந்துட்ட? நான் உன்னை அவ்வளவு லவ் பண்ணினேன். நீயும் என்னை விரும்புறேன்னு தெரிஞ்சிக்கிட்டேன். நீ என் கிட்ட வந்து காதலைச் சொல்லும் அந்த சந்தர்ப்பத்துக்காக அவ்வளவு வெயிட் பண்ணுனேன். ஆனா எல்லாம் மாறிருச்சு. அப்பப்பா அதுக்கப்புறம் எவ்வளவு கஷ்டம்? அந்த கீர்த்திக்கு ஏன் என் மேல அப்படி ஒரு வன்மம்? நினைச்சாலே பத்திக்கிட்டு வருது ரகு”

     “எனக்கு மட்டும் அவ கம்மியாவா செஞ்சிருக்கா? ஒரு பிரண்டா அவளுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன் தெரியுமா? ஆனா என்னை நாயை விட கீழா நினைச்சிட்டாளே?”

     “விடு ரகு, அவளைப் பத்தி பேசி நம்மளை நாமே கஷ்டப் படுத்திக்க வேண்டாம். ஆனா அவளுக்கு ஏதாவது பெருசா நடக்கணும். அப்ப தான் என் மனசு ஆறும்”

     “கண்டிப்பா நடக்கும் ஜானு. அதான் விக்ரம் சொல்லிருக்காரே. அப்புறம் கீர்த்தியோட அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணி கீர்த்தியை பாத்தீங்களா தம்பின்னு கேட்டாங்க ஜானு. எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன். அவங்க போலீஸ் கம்ப்லைண்ட் கொடுக்கப் போறாங்களாம். தாராளமா கொடுங்க. ஆனா என் பேரை எதுவும் சொல்ல வேண்டாம், எனக்கும் குடும்பம் இருக்குன்னு சொல்லிட்டேன். ஏன் இப்படி கோபப் படுறீங்க தம்பின்னு கேட்டாங்க. நான் கீர்த்தி நமக்கு செஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவங்களும் ஒரே அழுகை அப்படின்னா ஆதி உங்க மகன் இல்லையா இல்லையான்னு கேட்டு குற்றஉணர்ச்சில மன்னிப்பு கேட்டுட்டு வச்சிட்டாங்க. போலீஸ் விசாரிச்சா நம்ம கிட்டயும் கேப்பாங்க ஜானு. கவனமா பேசணும்”, என்றான் ரகு.

     “ம்ம் சரி”, என்று ஜானகி சொல்ல அப்போது மீண்டும் அழைத்த விக்ரம் போலீஸ் விசாரணை எதுவும் நடக்காது என்றும் அதற்கு செய்ய வேண்டியதை செய்து விட்டதாகவும் கவலைப் பட வேண்டாம் என்றும் சொல்லி விட்டு வைத்தான்.

Advertisement