இப்படியுமா ஒருவன் ஏமாறுவான் என்று எண்ணி அந்த கீர்த்தியை தான் உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவளுக்கான நாளைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

     பிளான் படி அடுத்த நாள் தன்னுடைய ஆளை வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து லாரியை அவள் மேல் மோத வைத்தார்.

     தூக்கி எறியப்பட்ட கீர்த்தி அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த ஆட்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு காப்பாற்ற பட்டது அவருக்கு தோல்வி தான். அடுத்த முயற்சியில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி உண்மையிலே சூரத்துக்கு சென்று விட்டார்.

     இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கீர்த்தி ரகுவிடம் போனில் பேசுவாள். இருவரின் பேச்சும் நட்பு ரீதியாக பணம் ரீதியாக மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு நாளும் ரகுவாக அவளை அழைக்க மாட்டான். நான்கு நாட்கள் கடந்தும் கீர்த்தி அழைக்க வில்லை என்றதும் அவளுக்கு அழைத்தான் ரகு.

     அது ஸ்விட்ச் ஆப் என்று வர உடனே அவளது தாய்க்கு அழைத்தான். அதை எடுத்த கீர்த்தியின் அன்னை “சொல்லுங்க தம்பி”, என்றாள்.

     “கீர்த்தி எங்க அத்தை? கால் பண்ணினேன், ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துச்சு?”

     “இதோ கொடுக்குறேன் தம்பி”, என்று சொல்லி கீர்த்தியிடம் கொடுத்தாள்.

     கீர்த்தியின் கைக்கு போன் வர அதை வாங்கி “சொல்லு ரகு, எப்படி இருக்க? என்ன நீயா கால் பண்ணிருக்க?”, என்று கேட்டாள்.

     “ஏன் நாலு நாளா கால் பண்ணலை கீர்த்தி? நல்லா இருக்க தானே?”, என்று கேட்டான்.

     “எனக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு ரகு. இப்ப கூட ஆஸ்பத்திரில தான் இருக்கேன். கொஞ்சம் பணம் மட்டும் போட்டு விடுவியா?”, என்று பணத்திலே நின்றாள்.

     “என்னது ஆக்ஸிடென்ட்டா? பாத்து போக மாட்டியா? அடி பலமா? உனக்கு ஒண்ணும் இல்லையே?”, என்று அக்கறையாக விசாரித்தான்.

     “நான் மெதுவா தான் டா போனேன். ஆனா ஒரு லாரி என்னை அடிச்சிருச்சு. எப்படி நடந்துச்சுன்னே தெரியலை. மீண்டு வந்ததே பெரிய விஷயம். ஹாஸ்பிட்டல் பில் தான் எப்படிக் கட்டன்னே தெரியலை”, என்று அவள் சொல்ல துணுக்குற்றான்.

     “எப்படி இப்படி ஆச்சு கீர்த்தி?”, என்று அவன் ஆக்ஸிடெண்ட் பற்றி விவரம் கேட்க அனைத்தையும் சொன்னாள்.

     “சரி ஹாஸ்பிட்டல் பில் எவ்வளவு?”, என்று கேட்டான்.

     “அடி பட்டதும் அங்கிருந்தவங்க பிரைவேட்ல சேத்துட்டாங்க டா. இங்க ஒரு மணி நேரத்துக்கும் பணம் தான். இப்ப வரைக்கும் ஒரு லட்சம் ஆகிருக்கு ரகு. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம். இந்த மாசம் சம்பளப் பணத்தை அம்மா அப்பாவுக்கு கொடுத்துட்டேன். என்ன பண்ணன்னு தெரியலை”, என்று ஐம்பதாயிரம் பில் தொகையை ஒரு லட்சம் என்று சொன்னாள்.

     “சரி விடு. பணம் போனா போகட்டும். நான் நாளைக்கே பணம் டிரான்ஸ்பர் பண்ணுறேன். நீ சரியானா போதும். இனி கவனமா இரு”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.

     போனை வைத்தவனுக்கு பல குழப்பம். இது உண்மையிலே ஆக்ஸிடெண்ட் தானா? என்று எண்ணும் போதே அவன் சந்தேகம் மோகன் மேல் திரும்பியது.

     “அன்னைக்கு அவ்வளவு வெறியா சொன்னாரே? அப்படின்னா அவர் தான் செஞ்சிருப்பாரா? ஆனா உண்மை தெரியாம சொல்லக் கூடாது”, என்று எண்ணி ஜானகியை அழைத்தான்.

     இத்தனை நாட்களில் அழைக்காதவன் இன்று அழைக்கவும் கொஞ்சம் அவளுக்கு சந்தோஷம் தான். மனதை அடக்கி அதை எடுத்து “சொல்லு ரகு”, என்றாள்.

     “எங்க இருக்க?”

     “வீட்ல?”

     “உங்க அப்பா எங்க?”

     “அப்பாவா? அவரை எதுக்கு கேக்குற?”

     “கேக்குறதுக்கு பதில் சொல்லு டி”, என்று அவன் கத்த “இவன் ஒருத்தன் பொண்டாட்டியை சொல்ற மாதிரி சொல்வான்”, என்று எண்ணிக் கொண்டு “அவர் வேலை விஷயமா சூரத் போயிருக்காரு”, என்று சொல்ல உடனே போனை வைத்து விட்டான்.

     “இவனா கால் பண்ணினான்? இவனே கட் பண்ணிட்டான்? என்னைப் பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்?”, என்று எண்ணிக் கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது ரகுவிடம் இருந்து அவளுக்கு மெஸ்ஸேஜ் வர அதை எடுத்துப் பார்த்தாள்.

     மோகன் போன் நம்பரை கேட்டு அனுப்பி இருந்தான். குழப்பம் இருந்தாலும் தந்தையின் எண்ணை அனுப்பி வைத்தாள். உடனே அந்த எண்ணுக்கு அழைத்தான்.

     “ஹலோ யாரு?”, என்று மோகன் கேட்க “நான் ரகு பேசுறேன்”, என்றான்.

     அவன் மீது அவருக்கு எந்த கோபமும் இல்லையே. அதனால் “சொல்லுப்பா”, என்றார்.

     “கீர்த்தியை கொல்லப் பாத்தீங்களா?”, என்று அவன் நேரடியாக கேட்க அவர் மறுக்க எல்லாம் இல்லை.

     “பரவால்லயே, கண்டு பிடிச்சிட்டியே? புத்திசாலி தான். அதான் என் மக உன்னை விரும்பிருக்கா. ஆனா நீ பாழுங்கிணத்துல விழுந்துட்டியே?”, என்று அவர் சொல்ல அதைக் கண்டு கொள்ளாமல் “எதுக்கு இப்படி பண்ணுனீங்க?”, என்று கேட்டான்.

      “எங்க? அதான் ஒண்ணுமே நடக்கலையே? செத்துருவான்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ். அடுத்த முறை சரியா செய்யணும்”, என்று அவர் சொல்ல அதிர்ந்து போனான்.

     “சார் இது தப்பு. உங்களைப் பத்தி ஜானு சொல்லிக் கேக்கும் போது எனக்கு உண்மையிலே மரியாதை வந்துச்சு. ஆனா இப்ப உங்க செய்கை எல்லாம் எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. கீர்த்தி பாவம். வாழ்க்கைல ரொம்ப கஷ்டப் பட்டுட்டா. அவ அதுல இருந்து மீண்டு வந்ததே பெருசு. அவளை விட்டுருங்க”, என்று கெஞ்சினான்.

     “நீ ஒரு முட்டாள் தம்பி. அதுவும் வடி கட்டின முட்டாள். உன்னை தெளிய வைக்கிறது என்னோட வேலை இல்லை. நீ எப்படியும் இரு. ஆனா என் வேலையை தடுக்க நினைக்காத. நான் கண்டிப்பா அவளை கொல்லுவேன். யார் நினைச்சாலும் தடுக்க முடியாது. அந்த கீர்த்தி சாகணும்”

     “நான் போலீஸ்ல கம்ப்லைண்ட் கொடுப்பேன் சார். என் கண்ணு முன்னாடி அநியாயம் நடக்குறதை என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது. அப்புறம் நீங்க கீர்த்தியைக் கொன்னுட்டா நான் உங்க பொண்ணு கூட வாழுவேன்னு நினைக்கிறீங்க? கண்டிப்பா நான் ஜானுவை ஏத்துக்க மாட்டேன்”

     “நீங்க போலீஸ் கம்ப்லைண்ட் கொடுங்க தம்பி. யார் வேண்டாம்னு சொன்னா? அதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். அதே மாதிரி என் பொண்ணு கூட வாழுறதும் வாழாம போறதும் உங்க விருப்பம். ஆனா கீர்த்தியைக் கொல்லுவேன். ஆனா போலீஸ் கண்டு பிடிக்க முடியாது. ஒரு தடவை கொலை செஞ்சிட்டு நானே போய் தான் சரண்டர் ஆனேன். இன்னொரு தடவை அப்படி பண்ண மாட்டேன். மாட்டாத அளவு பிளான் பண்ணி தான் பண்ணுவேன்”

     “இதை எல்லாம் ஏன் பண்ணுறீங்க?”

     “என் பொண்ணுக்காக யா. என் பொண்ணுக்காக மட்டும்”, என்று சொல்லி விட்டு அவர் போனை வைத்து விட தலையைப் பிடித்த படி அமர்ந்தான். சிறிது நேரம் எதை எதையோ யோசித்தவன் “என்ன சொன்னார்? பொண்ணுக்காகவா? ஆமா பொண்ணுக்காகன்னு தானே சொன்னார்? இவர் பொண்ணு என் கூட வாழணும்னு கீர்த்தியை கொல்ல நினைக்கிறாரா? அவ்வளவு பாசம். அதை தான் நான் பயன்படுத்திக்கணும். யாருக்காக இவர் இதை எல்லாம் செய்றாரோ அந்த பொண்ணையே என் வசம் வர வச்சா?”, என்று எண்ணியவன் முடிவு பண்ணி விட்டான் ஜானகியை திருமணம் செய்ய.

     ஆம் மோகனை அடக்க அவரது மகளை தன்னுடைய கைக்குள் கொண்டு வர முடிவு எடுத்து விட்டான். அப்படி முடிவு எடுத்ததும் உடனடியாக ஜானகியை அழைத்தான். அதை எடுத்தவள் “இப்ப என்ன? சொல்லு ரகு”, என்றாள்.

     “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”, என்று அவன் கேட்டதும் மறுபடியும் முதல்ல இருந்தா என்று உள்ளுக்குள் அலறியவள் “என்னைப் பாத்தா உனக்கு லூசு மாதிரி இருக்கா?”, என்று கேட்டாள்.

     “ஏய் நான் உண்மையா தான் டி சொல்றேன். உன்னைப் பாத்தப்ப வந்த காதல் இப்பவும் எனக்குள்ள இருக்கு. என்னால உன்னை மிஸ் பண்ண முடியாது. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

     “ரகு பிளீஸ், நான் உன் காதலை உதாசீனப் படுத்தினேன் தான். அதுக்குன்னு இப்படி திருப்பி திருப்பி பழி வாங்காத. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

     “ஏய் நான் உண்மையா தான் டி சொல்றேன். நான் இப்பவே அம்மா கிட்ட சொல்லப் போறேன். உங்க அப்பா கிட்டயும் பேசப் போறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று உறுதியுடன் சொல்ல அவளுக்கு குழப்பமாக இருந்தது.