Advertisement

அத்தியாயம் 6

மரணமே இல்லை எனக்கு 

உன் நெஞ்சில் வாழ்வதால்!!!

அன்று ஆர்வமாக பள்ளிக்குச் சென்றாள் ஜானகி. ஆனால் அன்று ஆதி பள்ளிக்கு வரவில்லை என்றதும் அவள் புருவம் உயர்ந்தது. தினமும் அவனைப் பார்த்தால் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் எழும். அதுவும் அவன் ரகுவின் மகன் என்று தெரிந்த பிறகு அந்த சந்தோஷம் அதிகமாக தான் ஆகி இருந்தது.

அதனால் அவன் வரவில்லை என்றதும் ஒரு மாதிரி இருந்தது. அன்று இரவு ரகு அழைக்கும் போது கேட்க வேண்டும் என்று எண்ண அவனோ அவளை அன்று அழைக்கவே இல்லை. அவனது கால் வருமா வருமா என்று காத்திருந்து தூக்கத்தை தொலைத்தாள். அடுத்த நாளும் ஆதி பள்ளிக்கு வரவில்லை என்றதும் மனதை பிசைய உடனே ரகுவை அழைத்து விட்டாள். ஆனால் அவன் எண்ணுக்கு கால் போகாமல் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வர நெஞ்சம் ஏனென்று தெரியாமலே பதறியது.

அன்று மாலையே ரகுவின் வீட்டுக்குச் சென்று விட்டாள். அங்கேயும் பூட்டு தொங்க பக்கத்து வீட்டில் விசாரித்தாள்.

“ஆதியோட டீச்சராமா நீ? ரகு தம்பிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு மா. பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரில தான் சேத்துருக்காங்க. அவங்க அம்மா தான் பேரனையும் பையனையும் கஷ்டப் பட்டு பாத்துக்குறாங்க”, என்று தகவல் கொடுத்ததும் அடுத்த நொடி மருத்துவமனைக்கு பறந்து விட்டாள். மனம் நிலையில்லாமல் தவித்தது. ரகுவுக்கு பெருசா எதுவும் ஆகிருக்க கூடாது என்று அவள் மனது வேண்டிய படியே இருந்தது.

அங்கே அவள் போன போது ஒரு தனியறையில் கை, கால் மற்றும் தலையில் கட்டுப் போட்டு கண்களை மூடி கட்டிலில் ரகு படுத்திருக்க மற்றொரு பக்கம் இருந்த படுக்கையில் ஆதி தூங்கிக் கொண்டிருந்தான்.

ரகுவை அப்படிக் கண்டதும் கண்கள் கலங்கியது ஜானகிக்கு. ஏனோ அவன் காயத்தை தடவிப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற ஆசை எழ “அவன் இன்னொருத்தி புருஷன்”, என்று மனசாட்சி எடுத்து சொன்னது. கூடவே தன்னைப் போன்றவர்கள் இருப்பதால் தான் கள்ளக்காதல் என்ற ஒன்று உருவாகிறதோ என்று எண்ணி தன்னையே கீழாக நினைத்தாள்.

சில நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டவள் “ரகு”, என்று அழைக்க கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். பார்த்தவன் கண்கள் தன்னாலே மலர்ந்தது.

“ஏய் ஜானு, நீ என்ன இங்க? வா வா. வந்து உக்காரு”, என்று தன்னுடைய படுக்கையைக் காட்ட அதில் அமராமல் அவன் அருகே சென்று நின்றவள் “எதுக்கு இப்படி வந்து படுத்து கிடக்க?”, என்று கோபமாக கேட்டாள்.

“ஆத்தாடி, ஒரு நோயாளியைப் பாக்க வர மாதிரியா டி வந்துருக்க? இப்ப தெரியுதா நான் ஏன் உன்னை மிர்ச்சின்னு கூப்பிடுறேன்னு?”, என்று சிரித்தான்.

“ப்ச் பேச்சை வளக்காம பதில் சொல்லு. என்ன ஆச்சு? எங்க போய் உருண்ட?”

“வண்டில போகும் போது விழுந்துட்டேன் டி. ஒரு டர்னிங்ல திரும்பும் போது எதிர்ல லாரி வந்துச்சா. மோதக் கூடாதுன்னு பிரேக் போட்டேன். அது வழுக்கி விட்டு விழுந்துட்டேன்”, என்று அவன் அசால்ட்டாக கதை சொல்ல “பாத்து போகக் கூடாதா ரகு?”, என்று அக்கறையாக கேட்டாள்.

அவள் அக்கறை மனதை தொட “நீ என்னைக் கல்யாணம் பண்ணி தினமும் பக்கத்துல இருந்து பாத்து போ ரகுனு சொல்லு. நான் தினமும் பாத்து போறேன்”, என்று சொல்லி வம்பிழுக்க “விளையாடாத ரகு”, என்று கடுப்புடன் சொன்னாள்.

“சரி நீ எப்படி இங்க வந்த?”

“ஆதி ஸ்கூல்க்கு வரலைன்னு உனக்கு கால் பண்ணினேன். ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துச்சு. அப்புறம் உங்க வீட்டுக்கு போனேன். பக்கத்து வீட்ல உள்ளவங்க தான் சொன்னாங்க. ஆண்ட்டி எங்க?”

“மெடிசன் வாங்கப் போனாங்க”

“ஓ, ஆமா கேக்கணும்னு நினைச்சேன். உங்க அப்பா எங்க? ஆளையே பாக்கலை”

“அவர் இறந்து மூணு வருஷம் ஆகுது”

“என்னது? என்ன ஆச்சு? அவர் ரிட்டயர்ட் கூட ஆகலை தானே?”, என்று கேட்டாள். உண்மையிலே அவள் அதை எதிர் பார்க்க வில்லை. ஏனென்றால் நிர்மலா நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். பொட்டை எடுக்க கூடாது என்று ரகு சொன்னதால் தான் நிர்மலா வைத்திருக்கிறாள் என்று ஜானகிக்கு தெரியாதே.

“அது ஹார்ட் அட்டாக். அவர் விதி முடிஞ்சது அவ்வளவு தான். அதை விடு. ஆதி ஸ்கூல்க்கு வரலைன்னு தான் தேடுனியா? நான் கூட நான் கால் பண்ணலைன்னு தேடுனியோன்னு நினைச்சேன்”, என்று சொன்னவனை முறைத்தவள் “உன் போன் எங்க?”, என்று கேட்டாள்.

“அது டிஸ்ப்ளே போயிருச்சு. கடைல கொடுக்கணும்”, என்று சொன்னவன் அதைக் காட்ட அதை வாங்கிக் கொண்டவள் “நான் கடைல கொடுத்துறேன்”, என்று சொல்லி தன்னுடைய பையில் வைத்துக் கொண்டாள். தோளைக் குலுக்கிக் கொண்டவன் வேறு ஒன்றும் சொல்ல வில்லை.

“ஆண்ட்டி எப்ப வருவாங்க?”, என்று அவள் கேட்கும் போதே அங்கு வந்தாள் நிர்மலா. ஜானகியைக் கண்டதும் “வா மா, எப்படி இருக்க?”, என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேன் ஆண்ட்டி. ஆதி ரெண்டு நாள் ஸ்கூல்க்கு வரலையா? அதான் உங்க வீட்டுக்கு தேடிப் போனேன். பக்கத்து வீட்ல சொன்னாங்க”

“ஓ அப்படியா மா. அப்புறம் இவன் என் பையன் ரகு மா. ஆதியோட அப்பா. ஆக்ஸிடெண்ட் ஆகி படுத்திருக்கான், இவனைப் பாத்துக்கிட்டு ஆதியை ஸ்கூல்க்கு அனுப்ப முடியலை. நாங்க ரெண்டு நாளா ஆஸ்பத்திரில தான் தங்கி இருக்கோம்”

“ஐயோ, குழந்தையை ஆஸ்பத்திரில வச்சா என்ன ஆகும்? ஏதாவது இன்ஸ்பெக்ஷன் வந்துறப் போகுது”, என்று சொன்ன ஜானகி ஒரு நொடி யோசித்து விட்டு “ஆண்ட்டி சனி ஞாயிறு ஸ்கூல் லீவ் தான். நான் எங்க வீட்டுக்கு அவனைக் கூட்டிட்டு போகட்டுமா?”, என்று கேட்டாள்.

நிர்மலா ரகுவைப் பார்க்க அவன் சம்மதம் என்று தலையசைத்தான். நிர்மலாவுக்கு வியப்பாக இருந்தது. ஒரு பள்ளி ஆசிரியரை நம்பி ஒருவன் தன்னுடைய மகனை அனுப்புவானா என்று வியந்து போனவள் “கூட்டிட்டு போ மா. உன் கிட்ட சமத்தா இருந்துக்குவான்”, என்றாள்.

“சரி ஆண்ட்டி, அப்புறம் நீங்க வேணும்னா வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வாங்க. நான் கொஞ்ச நேரம் இங்க இருக்குறேன்”, என்று சொல்ல “உனக்கு ஏன் மா கஷ்டம்?”, என்று கேட்டாள் நிர்மலா.

“இதுல ஒரு கஷ்டமும் இல்லை ஆண்ட்டி. எப்படியும் ஆதி எழுந்ததும் தான் போக முடியும். அதனால நான் இருக்கேன்”, என்று அவள் சொல்ல இப்போதும் நிர்மலா மகன் முகத்தை தான் பார்த்தாள். அவனோ ஜானகியை தான் சைட் அடித்துக் கொண்டிருந்தான். நிர்மலாவுக்கு எதுவோ புரிவது போல இருந்தது. நல்லது நடந்தால் சரி தான் என்று எண்ணிக் கொண்டாள்.

“சரி மா. நான் வீட்டுக்கு போய் குட்டிக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துறேன்”, என்று அவளிடம் சொன்ன நிர்மலா மகன் புறம் திரும்பி “உனக்கு ஏதாவது செய்யணுமா டா?”, என்று கேட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம் மா. நீங்க பாத்து போயிட்டு வாங்க. நடந்து போக வேண்டாம். ஆட்டோல போங்க”

“சரி டா, வரேன் மா”, என்று சொல்லிச் செல்ல அவளும் அவனும் மட்டும் அந்த அறையில். ஆதி நல்ல உறக்கத்தில் இருந்தான்.

அங்கிருந்த அமைதி ஏதோ செய்ய “தேங்க்ஸ் எனக்காக கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்னு சொன்னதுக்கு”, என்று ரகு அமைதியைக் கலைத்தான்.

“எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? அப்புறம் நான் ஒண்ணும் உனக்காக பண்ணலை. ஆதிக்காக தான்”, என்றாள் அவள்.

“நானும் அதுக்கு தான் மிர்ச்சி தேங்க்ஸ் சொல்றேன். நீயாவது எனக்குன்னு ஏதாவது பண்ணுறதாவது? உனக்கு நான் எப்பவுமே ரெண்டாம் பச்சம் தானே?”, என்று கடுப்புடன் சொன்னான்.

அவள் அவனை முறைத்துப் பார்க்க “சும்மா சும்மா முறைக்காத டி. இங்க வா. இங்க வந்து உக்காரு. கொஞ்ச நேரம் பேசலாம்”, என்று சொல்ல தயக்கத்துடன் என்றாலும் அவன் அருகே சென்று அமர்ந்தவள் அவனது அடி பட்ட கையை லேசாக வருடி விட்டு “வலிக்குதா?”, என்றாள். அவன் உடல் சிலிர்த்தது அவள் தொடுகையில்.

அவள் தொடுகை இன்னும் வேண்டும் என்று அவன் உடல் எல்லாம் ஏங்கியது. “கை கால்ல வலி இல்லை டி. தலை தான் லேசா வலிக்குது”, என்றான் கள்ளத்தனமாக.

அதை உண்மை என்று நம்பி அவன் தலையை வருடி “வேற பெருசா ஒண்ணும் இல்லை தானே? டாக்டர் ஸ்கேன் எடுத்தாங்களா?”, என்று கேட்டவளின் விரல்கள் அவன் சிகையை கோத ரகுவுக்கோ வெளியே சொல்ல முடியாத உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட்டது.

அவளது அருகாமையில் அவன் தான் தடுமாறிப் போனான். அவளது தொடுகையும் அவள் மேல் எழுந்த வாசனையும் அவனை நிலை குலைய வைத்தது. இவள் எனக்கு மட்டும் சொந்தமானவள். இந்த அழகு மொத்தமும் எனக்கே சொந்தம் என்ற எண்ணம் மேல் எழுந்து அவனை உசுப்பேற்றியது. அவள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள அவன் உடலும் மனமும் ஆவல் கொண்டது. இருவருக்கும் இடையே நடந்த பல இனிமையான தருணங்கள் நினைவில் வந்து அவனை இம்சித்தது.

Advertisement