Advertisement

     “என்ன மிஸ் நான் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவன் கடுப்பேற்ற “என்னோட ஸ்ட்டுடண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னா நான் எப்படி பாத்துட்டு இருப்பேன் ரகு சார்? ஆதி இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இப்படி தான் செஞ்சிருப்பேன் சார். இதை எல்லாம் பெரிய விஷயமா பேசக் கூடாது ரகு சார்”, என்று அவனுக்கு சூடாக பதில் கொடுத்தாள்.

     அவளின் கோபத்தை குரலில் உணர்ந்தவன் “எப்பாடி டீச்சரம்மாவுக்கு என்னமா கோபம் வருது? இன்னும் உன்னை மிஸ்ன்னு சொல்லலை சரியா? நீயும் சார்ன்னு சொல்லாத”, என்று சிரித்தான். ஏனோ அந்த சார் என்ற அழைப்பு அவனுக்கு வெகு அன்னியமாக தெரிந்தது.

     “சரி”, என்று ஜானு சொல்ல “சாப்பிட்டியா ஜானு?”, என்று கேட்டவனின் குரலில் அவ்வளவு அக்கறை.

     “ம்ம், சாப்பிட்டேன். ஆண்ட்டி எப்படி இருக்காங்க? இப்ப பரவால்லயா?”

     “நல்லா இருக்காங்க”

     “இனி அவங்களை தனியா விடாத ரகு”

     “சரி”

     “சரி ரகு வைக்கிறேன்”, என்று சொல்ல ‘”மிர்ச்சி, பேசு டி”, என்று ஆழ்ந்த குரலில் சொன்னான். வெகு நாட்களுக்கு பிறகான அந்த அழைப்பு அவளை மிகவும் பாதித்தது. அந்த குரல், அதில் இருந்த உரிமை அவள் மனதைத் தீண்டியது. உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. தனக்குள் எழுந்த மாற்றத்தை அடக்க முடியாமல் “என்னை அப்படிக் கூப்பிடாதே ரகு”, என்று காரமாக காய்ந்தாள்.

     “இப்படி சுள்ளுன்னு பேசுறதுனால தான் மிர்ச்சி எனக்கு எப்பவும் உன்னை பிடிக்குது”, என்று அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல தாகத்தில் இருந்த அவள் மனதில் லேசான மழைச்சாரல் விழுந்தது போல இருந்தது. அந்த இனம் புரியாத உணர்வினைத் தாங்க இயலாதவளாக அமைதி ஆகி விட்டாள். ஒன்றும் பேச முடிய வில்லை. ஏதோ ஒரு மாய வலையில் சிக்கிய உணர்வு.

     “ஏதாவது பேசேன் ஜானு?”, என்று கேட்டு அவன் பேச்சை வளர்க்க “நாளைக்கு பேசவா?”, என்று கேட்டு அவள் பேச்சை முடிக்கப் பார்த்தாள். இருக்கும் மனநிலையில் அவளால் அவனிடம் கோபத்தைக் காட்டி கூட தப்பிக்க முடிய வில்லை.

     “தூக்கம் வருதா மிர்ச்சி? இன்னும் ஒரு பத்து நிமிஷம் பேசேன். உன் கூட பேசி எவ்வளவு நாள் ஆகுது? பிளீஸ் டி”, என்று ஏக்கமாக சொல்ல அவனது கிசுகிசுப்பான குரல் அவளை எதுவோ செய்தது.

     “இல்லை, எனக்கு கொஞ்சம் தலை வலி. அதான்”, என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தாள்.

     “சரி ஓகே மிர்ச்சி. டேப்லெட் போடு. குட் நைட். நல்லா தூங்கு”, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவன் போனை டேபிளில் வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்தான். அவளுடன் பேசியதை அவன் மனது அசை போட்டது. உதடுகள் சிரிப்பில் விரிந்தது.

     அவளோ மனதுக்குள் குழப்பம் பல இருந்தாலும் வெகு நாட்கள் கழித்து அன்று நன்றாக தூங்கினாள். அவள் மனதில் அப்படி ஒரு அமைதி.

     அடுத்த நாள் காலையில் எப்போதும் போல ஜானு கண் விழிக்க “குட் மார்னிங் மிர்ச்சி”, என்ற குறுந்தகவல் அவளின் உதட்டில் சிறு புன்னகையைக் கொண்டு வந்தது.

     சிறு சிரிப்புடன் எழுந்தவள் குளிக்க சென்றாள். அன்று ரகுவையும் ஆதியையும் எதிர் பார்க்க ஆதியோ பள்ளி வேனில் இருந்து இறங்கினான். “இனி ரகுவை பார்க்க முடியாதா?”, என்று சிறு ஏக்கம் உள்ளுக்குள் எழ அந்த நினைப்பை எண்ணி தலையைப் பிடித்துக் கொண்டாள். தவறு செய்கிறோம் என்று தெரிந்தாலும் அதை தெரிந்தே செய்து கொண்டிருந்தாள் அவள்.

     அன்று இரவு உணவு முடிந்ததும் எப்போதும் போல அறைக்குள் சென்று படுத்ததும் அவள் கைகள் தன்னால் மொபைலை எடுத்துப் பார்த்தது.

     எந்த அழைப்பும் இல்லாமல் இருக்க மனதுக்குள் ரகு அழைப்பானா என்று குறுகுறுப்பாக இருந்தது. ஒரு ஏமாற்றத்துடன் அவள் போனை கீழே வைக்க அப்போது அவளது மொபைல் அடித்தது. ரகு தான் அழைத்திருந்தான். அதைக் கண்டதும் அவள் கண்கள் ஒளிர்ந்தது.

     ஆனால் எடுக்கவா வேண்டாமா என்று பட்டிமன்றம் உள்ளுக்குள் எழுந்தது. நியாயத்துக்கும் காதலுக்கும் இடையே போராடியவளின் ஆசை வென்றது. “இன்னைக்கு ஒரு நாள் பேசிக்கலாம். இனி கால் பண்ணக் கூடாதுன்னு தெளிவா சொல்லிறனும்”, என்று எண்ணிக் கொண்டு போனை எடுத்து காதில் வைத்து “ஹலோ யாரு?”, என்று கேட்டாள் வேண்டும் என்றே.

     “ஏய் என் நம்பரை சேவ் பண்ணலையா டி?”, என்று உரிமையாக கோபப் பட்டான் ரகு.

     அவன் உரிமையான பேச்சில் திகைத்தாலும் அதை அடக்கி “நீங்க யாருன்னு தெரியலையே?”, என்றாள்.

     “இவளுக்கு என் குரல் கூட தெரியலையா?”, என்று மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை மறைத்து “நான் ரகு பேசுறேன்”, என்றான்.

     “ஓ ரகுவா? சாரி உன் நம்பரை சேவ் பண்ணலை? என்ன விஷயமா கால் பண்ணின? ஆண்ட்டி ஓகே தானே?”, என்று சாதாரணமாக கேட்க முயன்றாள். ஆனாலும் அவன் டி என்ற அழைப்பு ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது உண்மை. நவீன் அப்படி அழைக்கும் போதெல்லாம் இந்த குறுகுறுப்பு வருவதில்லை என்று அவள் உணர்ந்தே இருந்தாள்.

     “ஒழுங்கா என் நம்பரை சேவ் பண்ணிரு சொல்லிட்டேன்”, என்று அவன் மிரட்ட “பாக்கலாம் பாக்கலாம்”, என்று சொல்லி அவனை வெறுப்பேற்றினாள். மை ஷோல் என்று அவன் எண்ணை ஏற்கனவே பதிந்து வைத்திருந்ததை அவன் அறியவில்லை.

     அவன் அமைதியாக இருக்க “ஆண்ட்டி இப்ப ஓகே தானே?”, என்று மீண்டும் கேட்டாள்.

     “அம்மா நல்லா தான் இருக்காங்க. நான் சும்மா தான் கால் பண்ணினேன்”, என்று அவன் சொல்ல “சும்மாவா?”, என்று வியந்த படி கேட்டாள்.

     “ஆமா நீ தானே நாளைக்கு பேசுறேன்னு நேத்து சொன்ன? அதான் பண்ணினேன். இன்னைக்கு பேசலாமா?”

     “இல்லை…. அது…”

     “என்ன இன்னைக்கும் தலை வலியா மிர்ச்சி உனக்கு?”

     “இல்லை, சொல்லு ரகு. என்ன பேசணும்?”

     “சும்மா நம்மளைப் பத்தி தான்”

     “நம்மளைப் பத்தி பேச என்ன இருக்கு?”

     “நமக்குள்ள ஒண்ணுமே இல்லையா மிர்ச்சி?”, என்று அவன் ஆழ்ந்த குரலில் கேட்க “இவனை…. இப்படி பேசியே என்னை ஒரு வழி பண்ணுறான்”, என்று நினைத்து “உன் வைப் எங்க ரகு? கீர்த்தி எப்படி இருக்கா? ஆண்ட்டி அவ ஊருக்கு போயிருக்காங்கன்னு சொன்னாங்க”, என்று கேட்டாள். கீர்த்தியை நினைவு படுத்தினால் அவன் இப்படி தன்னிடம் பேசாமல் இருப்பான் என்று நம்பினாள்.

     அவள் பேச்சை மாற்றுவது புரிந்து அவனுக்கு கடுப்பாக இருந்தது. அந்த கடுப்பில் “கீர்த்தியா? அவ ரெண்டாவது குழந்தைக்கு மாசமா இருக்கா. அதான் ரெஸ்ட் எடுக்க அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா”, என்று அசால்ட்டாக அவன் சொல்ல அணுகுண்டு விழுந்தது போல உள்ளுக்குள் ஏதோ துடித்தது ஜானகிக்கு.

     அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. றெக்கை முறிந்து ரத்தம் கசிந்து குத்துயிராக கிடக்கும் பறவை போல உள்ளுக்குள் வலி பரவியது. ஏற்கனவே சூடாக இருக்கும் மணலில் தாகத்தோடு அமர்ந்திருப்பது போல இருக்கும் அவளை இப்படி துன்புறுத்தினால் அவளும் தான் என்ன செய்வாள்?

     அவள் அமைதியாக இருக்க “மிர்ச்சி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா டி?”, என்று கேட்டு அவளுக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான் அவளது நாயகன். அவன் கேள்வியில் அதிர்ந்து போனாள். இதயம் முழுக்க மத்தளம் கொட்டியது. ஏற்கனவே இரண்டாவது குழந்தைக்கு மாசமாக இருக்கிறாள் என்று சொன்னதே அதிர்ச்சி என்றால் திருமணம் பற்றி பேசியது இடியாக இருந்தது.

     சாதாரண அதிர்ச்சி கூட இல்லை. பேரதிர்ச்சி என்று சொல்லலாம். கூடவே கோபமும் பீறிட்டு வந்தது. “இவன் என்னைப் பத்தி என்ன நினைச்சான்? வம்பிழுக்க நான் தான் கிடைச்சேனா?”, என்று எண்ணியவள் “என் கிட்ட இப்படிக் கேட்க உனக்கு வெக்கமா இல்லையா ரகு?”, என்று எரிந்து விழுந்தாள்.

     “இதுல என்ன வெக்கம்? நான் உன்னை லவ் பண்ணுறேன். அதான் கேட்டேன். ஒகேன்னா ஓகேன்னு சொல்லு. இல்லைன்னா வேண்டாம்னு சொல்லு”, என்று அவன் சொல்ல “நான் உன்னை லவ் பண்ணலை. இனி இப்படி பேசாதே”, என்றாள்.

     “ஓகே பேபி, உனக்கும் என் மேல லவ் வந்த பிறகு சொல்லு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று சொல்ல இவனை இந்த லிஸ்ட்டில் சேர்க்க என்று குழம்பினாள்.

     அடுத்து அவன் ஏதோ பேச வர “எனக்கு தலை வலிக்குது ரகு”, என்றாள்.

     “ஓகே பை மிர்ச்சி பேபி. குட் நைட்”, என்று சொல்லி போனை வைக்க அவள் கரம் நடுங்கியது. அதுவும் அந்த பேபி என்ற வார்த்தை அவளை நிலை குலைய வைத்தது.

     “என்ன நினைச்சு இவன் இப்படி பேசுறான்? பொண்டாட்டி பக்கத்துல இல்லைன்னா இவன் என் கிட்ட இப்படி எல்லாம் கடலை போடுவானா? இது எல்லாம் நான் வச்சிக்கிட்ட வரிசை தான். சகஜமா பேசினது என் தப்பு. ஒரு பிள்ளையை கையில வச்சிக்கிட்டு இன்னொரு பிள்ளையை பொண்டாட்டி வயித்துல லோட் பண்ணிட்டு என் கிட்ட பேசுற பேச்சைப் பாரு. விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா இவனுக்கு?”, என்று எண்ணினாள்.

     ஆனால் என்ன தான் அவன் கேட்டதில் கோபம் எழுந்தாலும் அடி மனதில் ஒரு ஏக்கம் எழுந்து அவளை அமைதி இழக்க வைத்தது மட்டும் உண்மை. அவன் கேட்டது உண்மையிலே அவளுக்கு சந்தோசம் தான் என்ற உண்மையை ஒத்துக் கொள்ள தான் அவளால் முடிய வில்லை.

     மிகப் பெரிய தவறை அவள் மனது செய்கிறது என்ற உண்மை புரிய கூனி கூறுகிப் போனாள். காதல் கொண்ட மனது மூளையையும் அறிவையும் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது. இதை முளையிலே கிள்ளி விட வேண்டும் என்று முடிவு எடுத்தாள். ஆனால் அவள் வாழ்க்கையை பந்தாட விதி காத்திருக்கையில் அவளால் என்ன செய்ய முடியுமாம்?

காதல் தொடரும்…..

Advertisement