Advertisement

     இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை என்றாலும் பார்வைகள் மட்டும் பின்னிப் பிணைந்தது. இருவர் கண்களிலும் ரசனையும் காதலும் கொட்டிக் கிடக்க அது இருவருக்கும் குழப்பத்தை தான் கொடுத்தது.

     “இவ என்ன, வச்ச கண்ணு எடுக்காம என்னைப் பாக்குறா? எப்பவும் இப்படி பாக்க மாட்டாளே? இல்லை, அவ சாதாரணமா பாக்குறதை நான் தான் தப்பா எடுக்குறேனா? இருக்கும் இருக்கும். நான் தான் இவ மனசுல நான் தான் இருக்கேன்னு நினைச்சு ஏமாந்த முட்டாளாச்சே?”, என்று எண்ணினான் அவன்.

     அவளோ “இவன் என்ன முன்னாடி மாதிரியே லவ் லுக் விடுறான்? அப்ப நான் இவனுக்கு லவ்வர். ஆனா இப்ப இவன் இன்னொருத்தி புருஷன். இப்ப இவன் ஏன் என்னை இப்படி பாக்குறான்? இது சரி இல்லையே? அதான் அப்பாவும் அண்ணனும் எச்சரிச்சாங்களோ? எப்பா இனி இவனைப் பாக்க கூடாதுப்பா”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஆதி வந்து அவள் காலைக் கட்டிக் கொள்ள அவனைத் தூக்கி முத்தமிட்டவள் அவனுடன் கிளாசுக்குள் சென்றாள். அவளையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரகு.

     அவள் முறைத்துப் பார்க்கும் போதே அவ்வளவு ரசிப்பவன் இப்போது சும்மா இருப்பானா என்ன? அவன் மனம் என்னும் குளத்தில் கல்லை விட்டெறிந்தது போல கலங்க ஆரம்பித்தது. தனக்கே ஜானு வேண்டும் என்று அவன் உடலும் மனமும் பரபரக்க ஆரம்பித்தது. நிதர்சனத்துக்கும் ஆசை கொண்ட மனதுக்கும் இடையே அல்லல் பட்ட படியே அங்கிருந்து சென்றான்.

     அவளும் அதே மனநிலையில் இருந்தாள். செய்வது தவறு என்று தெரிந்து ஒரு உறுத்தல் வருமே அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள். மாலை வரை அவள் மனது சரியாகவில்லை. கடவுளிடம் தஞ்சமடைய முடிவு எடுத்தாள். அன்று வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோவிலுக்குச் செல்லலாம் என்று எண்ணி அன்னையை அழைத்து “அம்மா கோவிலுக்கு போயிட்டு நான் லேட்டா தான் வருவேன். அப்பா கிட்ட சொல்லிருங்க”, என்று சொன்னாள்.

     “வீட்டுக்கு வந்துட்டு நாம ரெண்டு பேரும் போகலாம் டி”, என்று தேவகி சொல்ல “வீட்டுப் பக்கத்துல இருக்குற பெருமாள் கோவிலுக்கு நம்ம ரெண்டு பேரும் போகலாம். இப்ப ஸ்கூல் பக்கத்துல இருக்குற சாய்பாபா கோவிலுக்கு போயிட்டு வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் கிளம்பி விட்டாள்.

     ஆனால் கோவிலுக்கு போகும் வழியிலே ஒரு இடத்தில் கூட்டமாக இருக்க வண்டியை ஓரம் நிறுத்தி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கே நிர்மலா மயங்கி கிடக்க பக்கத்தில் ஆதி அழுது கொண்டிருந்தான்.

     அதிர்ந்து போனவள் வேகமாக அவர்களை நெருங்க அவளைக் கண்டதும் “மிஸ், ஆச்சி விழுந்துட்டாங்க”, என்ற படி ஆதி அவளை கட்டிக் கொள்ள அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டவள் தண்ணீர் தெளித்து நிர்மலாவை எழுப்பினாள். நிர்மலாவின் தலையில் ஒரு சின்னக் கல் குத்தி ரத்தம் வேறு வந்து கொண்டிருந்தது.

     நிர்மலா கண் விழித்ததும் அவளுக்கு தண்ணீரைக் கொடுத்தவள் “என்ன ஆச்சு ஆண்ட்டி?”, என்று கேட்டாள். ரகுவின் தாய் என்று தெரிந்து அவளைப் பார்ப்பது இது தான் முதல் முறை.

     “கிறுகிறுன்னு வருது மா”, என்று நிர்மலா சொல்ல ஒரு ஆட்டோ பிடித்து அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றாள். ஆதியை தன்னுடைய மடியிலே வைத்துக் கொண்டாள்.

     நிர்மலாவை பரிசோதித்த மருத்துவர் பி.பி அதிகமானதால வந்த மயக்கம் தான் என்று சொல்லி ஊசி மூலம் அவளுக்கு மருந்து ஏற்றினார். ஜானகி தான் டாக்டர் பீஸ் கொடுத்து இருவரையும் வெளியே அழைத்து வந்தாள்.

     இருவரும் ஆட்டோவுக்காக காத்திருக்க “ரொம்ப நன்றி மா. நீ மட்டும் இல்லைன்னா என்ன பண்ணிருப்பேனோ தெரியலை? என் பேரனும் நடு ரோட்ல நின்னான். யாராவது அவனைத் தூக்கிட்டு போயிருந்தா?”, என்று பதறினாள் நிர்மலா.

     “அதான் ஒண்ணும் இல்லையே ஆண்ட்டி. விடுங்க. உடம்பு சரியில்லாதவங்க நீங்க ஏன் ஸ்கூல்க்கு வரீங்க? கீர்த்…. வேற யாரையாவது அனுப்பலாம்ல?”, என்று கேட்டாள். கீர்த்தியை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள இப்போது அவள் தயாராக இல்லை.

     “என் மருமக இல்லை மா. மகன் வேலைக்கு போய்ட்டான்”, என்று நிர்மலா சொல்ல கீர்த்தி ஊருக்கு போயிருக்கிறாள் போல என்று எண்ணிக் கொண்டு “சரி வாங்க. உங்களை வீட்ல விட்டுட்டு போறேன்”, என்றாள். கீர்த்தி இருந்திருந்தால் நிச்சயம் அங்கே சென்றிருக்க மாட்டாள். அதுவும் இல்லாமல் ரகுவும் வேலைக்கு சென்றிருப்பான் என்று தெரியுமே. அதனால் தான் தைரியமாக கேட்டாள்.

     “இல்லை மா, நான் போய்க்கிறேன்”, என்று நிர்மலா சொல்ல “இல்லை வாங்க. உங்களை வீட்ல விட்டா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”, என்று சொல்லி ஆட்டோவில் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். நிர்மலா தான் அட்ரஸ் சொன்னாள். ஆட்டோவில் போகும் போதே ஆதி ஜானகி மேலேயே உறங்கி இருந்தான். வீட்டுக்கு வந்ததும் நிர்மலா இறங்கி கதவை திறக்க அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள் ஜானகி.

     வீட்டுக்குள் நுழைந்ததும் “அவனை அந்த ரூம்ல படுக்க வச்சிருமா”, என்று சொல்ல ஜானகியும் உள்ளே சென்று படுக்க வைத்தாள்.

     நிர்மலா அவளுக்கு காபி போடப் போக ஜானகியே எழுந்து சென்று இருவருக்கும் காபி போட்டு வந்தாள். காபி குடிக்கும் போது தான் அங்கிருந்த புகைப்படங்களைப் பார்த்தாள். அங்கே ரகுராமின் தாத்தா, பாட்டி, தந்தை, மற்ற சொந்தங்கள் என பல புகைப்படங்களும் ஆதி மற்றும் ரகுராமின் சிறு வயது புகைப்படங்களும் சேர்த்து வைத்து மாட்டப் பட்டிருந்தது. ரகுவின் தந்தையைக் கண்டவளுக்கு அவருடன் பேசியது நினைவில் வந்தது. கூடவே ரகுராம் கீர்த்தனா திருமணப் புகைப்படங்களும் அங்கே இருந்தது. அதைக் கண்டதும் மனதில் தன்னால் வலி எழுந்தது.

     கீர்த்தியைப் பற்றி கேட்க மனது வந்தாலும் வேண்டாம் என்று விட்டுவிட்டாள். அங்கே சிறிது நேரம் இருந்து விட்டு ஜானகி கோவிலுக்கு செல்லாமல் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். ரகுராம் இருக்கும் வரை இருந்து அவனைக் காண ஆசை தான். அது இருவருக்கும் நல்லது இல்லை என்று புரிய உடனடியாக கிளம்பி விட்டாள்.

     முதலில் ஆட்டோ பிடித்து வண்டி இருக்கும் இடம் வந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போனாள். “எதற்கு இவ்வளவு நேரம்?”, என்று கேட்ட பெற்றோரிடம் கோவிலில் கூட்டம் என்று சொல்லி சமாளித்தாள். ரகுவின் தாயாருக்கு உதவி செய்தது தெரிந்தால் பெற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்தது. காதலில் கள்ளமும் ஒரு அங்கம் தானோ?

     அன்று இரவு உணவு முடிந்து அறைக்கு வந்தவளின் மனதில் பெரிய அழுத்தம். தாய் தந்தையிடம் கூட உரையாடாமல் அறைக்குள் அடைந்து கொண்டாள். படுக்கையில் விழுந்தவள் பழைய நினைவுகளை நினைக்க கூடாது என்று தன்னைக் கட்டுப் படுத்தி வைத்தாலும் இன்று அந்த கட்டுபாடு தகர்ந்து தான் போனது. ரகுவும் கீர்த்தனாவும் மணக்கோலத்தில் இருந்த பிம்பமே அவளின் நினைவில்.

     ரகு மேல் கோபமாக வந்தது. அவளை இப்படி அணு அணுவாய்க் கொல்லத் தான் அவளிடம் வந்து காதலைச் சொன்னானா? அவள் மனதையும் சலனப் படுத்தினானா? மீண்டும் அவனை ஏன் பார்த்தோம் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

     கண்களில் கண்ணீர் பொங்கியது. அவளைத் தேற்ற ஒருவரும் இல்லை. அது கூட சந்தோஷம் தான். நிம்மதியாக அழத் துவங்கினாள். அதே நேரம் ரகுவும் அவனது அறையில் அவள் நினைவில் தான் இருந்தான். வீட்டுக்கு வந்ததும் தாய் அன்று நடந்ததைச் சொல்ல இனி ஆதியை ஸ்கூல் வேனில் அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்தான். கூடவே ஜானகியிடம் பேச ஆசை மலையளவு வந்தது. ஆனால் என்ன சொல்லி பேச என்று தயக்கமாக இருந்தது.

     அவளிடம் பேச காரணத்தை தேடினான். தாயைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற காரணம் கிடைக்க அதை பயன் படுத்திக் கொண்டான்.

     அவளது எண்ணை ஆதியின் டைரியில் இருந்து எடுத்துக் கொண்டவன் மிர்ச்சி என்று ஏற்கனவே போனில் சேவ் செய்து வைத்திருந்தான். அந்த எண்ணை எடுத்துக் கொண்டு அவளை அழைக்கவா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தினான் ரகு.

     கடைசியில் ஆசை வெற்றி கொள்ள அவளை அழைத்து விட்டான். புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் குழப்பத்துடன் அதை எடுத்து “ஹலோ?”, என்றாள் ஜானகி. ஆனாலும் அழுததால் குரல் நமநமவென்று தான் இருந்தது. அதை அவன் உணரவில்லை.

     “ஹலோ மிஸ் நான் ஆதியோட அப்பா ரகுராம் பேசுறேன். இன்னைக்கு அம்மாவுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கீங்க? அதுக்கு நன்றி சொல்ல தான் கூப்பிட்டேன்”, என்று அவன் பேசிக் கொண்டே செல்ல அழைத்தது யாரென்று தெரிய ஜானகிக்கு ஒரு பய படபடப்பு.

     அவசரமாக எழுந்து சென்று கதவை தாள் போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்தாள். இதயத் துடிப்பு வேகமாக இருந்தது.

     “மிஸ் மிஸ் கேக்குதா?”, என்று கேட்க அப்போது தான் இயல்பானாள். அவன் மிஸ் என்று அழைத்தது அவளுக்கு எரிச்சலாக வந்தது.

     ஆனாலும் அவன் பேசியதும் இது வரை மனதில் அழுத்திய பாரம் குறைவது போல உணர்ந்தாள். கண்களில் கண்ணீர் கூட நின்றிருந்தது. அவன் குரலுக்கு இவ்வளவு சக்தியா என்று அவளுக்கே வியப்பாக தான் இருந்தது.

Advertisement