Advertisement

அத்தியாயம் 5

கவிதை போல விண்ணில் 

இரு மேகங்கள் நீயும் நானும்!!!

     “என்னது ரகுவா? அவன் இங்கயா இருக்கான்? என்ன மா இதெல்லாம்?”, என்று மோகன் கேட்க “உண்மையைச் சொல்லு டி, அந்த ரகுவைப் பாத்து பேசுனியா? அவன் கிட்ட ஏன் பேசின? பட்டது எல்லாம் போதாதா?”, என்று கேட்டாள் தேவகி.

     என்ன சொல்ல என்று தெரியாமல் ஜானகி அமைதியாக இருக்க “என்ன நடந்துச்சு குட்டிமா?”, என்று கேட்டார் மோகன்.

     “பா, அது என் கிளாஸ்ல இருக்குற ஆதியோட அப்பாங்குற முறையில தான் பேசினேன். வேற ஒண்ணும் இல்லைப்பா”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.

     “எங்க என் முகத்தைப் பாத்து சொல்லு. உன்னோட மத்த ஸ்டூடண்ட்சோட பேரண்ட்ஸ் கிட்ட நீ அப்படி தான் பேசுவியா?”, என்று விஷ்ணு கேட்க பதில் பேச முடியாமல் தலை குனிந்தாள். ரகுவைக் கண்டதும் எக்ஸைட் ஆனது உண்மை. அவனை ஆர்வமாக ரசித்துப் பார்த்தது உண்மை. மற்றவர்களிடம் அவள் அப்படி பேசுவாளா? நிச்சயம் இல்லையே. அதனால் அமைதியாக இருந்தாள்.

     “அது தப்பு ஜானு மா. அவன் வேற ஒருத்தியோட புருஷன். அதுவும் ஒரு குழந்தைக்கு தகப்பன்”, என்று மோகன் சொல்ல அவள் மௌனமாக தலை குனிந்த படி இருந்தாள்.

     “இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன் ரொம்ப செல்லம் கொடுக்காதீங்கன்னு. இனியும் இப்படியே விட்டா எல்லாரும் கேவலமா பேசுவாங்க. ஏன் டி ஒரு வேளை அவனுக்கு ரெண்டாந்தாரமா போற பிளான்ல இருக்கியோ?”, என்று தேவகி கேட்க அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

     யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் “வேணும்னு பண்ணலை. இன்னைக்கு தான் ரகுவைப் பாத்தேன். அந்த எக்ஸைட்மெண்ட் தான். வேற ஒண்ணும் இல்லை. வேற எந்த கெட்ட எண்ணமும் எனக்குள்ள இல்லை”, என்றாள் ஜானகி.

     “வேற ஒண்ணும் இல்லாம இருக்கணும் ஜானு மா. அது தான் டா எல்லாருக்கும் நல்லது”, என்றார் மோகன்.

     “அப்பா அது என்னோட ஃபிரண்ட் வாழ்க்கை. அதை நான் தட்டி பறிக்க நினைப்பேனா? அது அசிங்கம்னு எனக்கும் தெரியும் பா”, என்று அவள் வேதனையுடன் சொல்ல அவர் மனதில் பல யோசனைகள்.

     “காதல் எல்லா நியாய அநியாயங்களுக்கும் அப்பாற்பட்டது ஜானு மா. உன்னை பேச வேண்டாம்னு சொல்லலை. அளவா பேசுன்னு தான் சொல்றோம்”, என்று மோகன் மகளைப் புரிந்தவராக சொல்ல “சரிப்பா”, என்று சொன்னவள் அறைக்குள் சென்று விட்டாள்.

     அங்கிருந்து தப்பித்து அறைக்கு வந்தாலும் அவளால் இயல்பாக இருக்க முடிய வில்லை. அவள் மனம் குழம்பிக் கிடந்தது. இரவு உணவை பேருக்கு உண்டு முடிப்பதற்குள் அவள் வெகுவாக திணறிப் போனாள். அவள் சமாளிப்பதை எல்லாம் அனைவரும் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தனர்.

     உணவு உண்டு முடித்து அறைக்குள் அடைந்து கொண்டாள். அவள் கட்டிலில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். விஷ்ணு நின்றிருந்தான்.

     “வா அண்ணா”, என்று அழைக்க அவனும் உள்ளே வந்தவன் தங்கையைக் கூர்மையாக பார்த்தான். அவனை எதிர்க் கொள்ள தைரியம் இல்லாமல் தலை குனிந்தாள்.

     “நவீனை உனக்கு பிடிச்சிருக்கு தானே ஜானு? அப்புறம் ஏன் அவனை வேண்டாம்னு சொன்ன? அவனை கல்யாணம் பண்ணிக்கோ ஜானு. உனக்கும் ஒரு மாற்றம் வரும்”

     “வேண்டாம் அண்ணா, என்னால முடியாது. நான் நவீன் கிட்ட தெளிவா பேசிட்டேன். அவன் எனக்கு நல்ல ஃபிரண்ட்”

     “அப்படின்னா வேற மாப்பிள்ளை….”

     “நானும் முயற்சி செஞ்சேன் அண்ணா. ஆனா என்னால முடியலை. அம்மா அப்பா கிட்ட சொல்ல முடியாததை உன் கிட்ட சொல்றேன். அன்னைக்கு தியேட்டர்ல நவீன் என் கைல கிஸ் பண்ண வந்தான். நான் அதை ரகுன்னு நினைச்சு…. உனக்கு புரியுதா? நவீன் புரிஞ்சிக்கிட்டான். வேற யாரும்னா புரிஞ்சிக்க மாட்டாங்க. ஒரு ஆண் என் கிட்ட நெருக்கமா வந்தா அது ரகுவா தான் எனக்கு தோணுது அண்ணா”, என்று தலை குனிந்த படி சொல்ல அவனுக்கு தங்கையின் மனது புரிந்தது.

     அதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் “சரி தூங்கு யோசிக்கலாம். ஆனா வேற ஏதாவது செஞ்சு எங்களை அசிங்கப் படுத்திறாத. உன்னையும் நாலு பேர் தப்பா பேசுற மாதிரி வச்சிக்காத”, என்று மட்டும் சொல்லிச் சென்றான்.

     அது என்ன அசிங்கம் என்று அவன் சொல்லாமலே அவளுக்கு புரிந்தது. ரகுவிடம் மயங்கி அவனை தனக்கென்று எடுத்துக் கொண்டு ஊர் முன்னிலையில் இன்னொருத்தி புருஷனை அடைஞ்சிருக்கா என்ற பெயரை வாங்கி விடுவாளோ என்பது தான் விஷ்ணு சொன்ன அசிங்கத்தின் அர்த்தம் என்று புரிந்தது. திகைத்துப் போனாள் ஜானகி.

     உயிரை வேண்டும் என்றாலும் விடுவேனே தவிர அதை செய்யவே மாட்டேன் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள். ஆனால் அவளே சென்று ரகுவிடம் என்னைத் திருமணம் செய்து கொள் என்று கெஞ்சுவாள் என்று அவள் எதிர் பார்த்தாளா என்ன?

     அன்று இரவு அவளால் உறங்க முடிய வில்லை. ரகுவைப் பார்த்தது, பெற்றவர்கள் பேசியது, அண்ணனின் வார்த்தைகள் என அனைத்தும் நினைவில் வந்தது.

     வெகு நேரம் தூக்கத்துக்கு போராடி அது முடியாமல் பின் குழந்தைகள் கதைகள் கொண்ட புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முயற்சி செய்தாள். சிறிது நேரத்தில் மன வேதனை மறைந்து அந்த கதைகளுக்குள் ஒன்றிப் போனாள்.

     அதே நேரம் அன்று இரவு தன்னுடைய அறைக்கு வந்த ரகுவின் நிலையும் அதுவே. ஆதி எப்போதும் நிர்மலாவுடன் தான் தூங்குவான் என்பதால் அந்த அறையில் இருந்த தனிமை அவனை பாடாய்ப் படுத்தியது. அவனது மனக் கண்ணில் ஜானகியின் முகமே மின்னியது. அவ்வளவு அருகில் அவளைப் பார்த்ததும் அவளிடம் பேசியதும் கனவு போல இருந்தது. அந்த காட்சிகள் அவனை விட்டு நீங்கவே இல்லை. “ஏன் டி உனக்கு என்னைப் பிடிக்கலை?”, என்று மானசீகமாக அவளிடம் கேட்டான். இருவரும் அன்றைய தூக்கத்தை மறந்தனர்.

     அடுத்த நாள் என்றும் இல்லாத பரபரப்புடன் பள்ளிக்கு கிளம்பினாள் ஜானகி. அந்த பரபரப்பை அடக்குவதற்குள் வெகுவாக திணறினாள். “இன்றும் வருவானா? வந்தால் பேசுவானா?”, என்ற கேள்வியே அவளுக்குள் சிறு உற்சாகத்தை விதைத்தது. அவளது உற்சாகம் மற்றவர்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும் பயமாகவும் இருந்தது.

     அவள் உற்சாகத்துக்கு காரணம் ரகு என்று அவர்களுக்கு தெரியுமே? ஆனால் எதுவும் கேட்டு அவளைக் காயப் படுத்த ஒருவருக்கும் மனதில்லை. விஷ்ணுவுக்கு தான் எங்கே தங்கை தவறான பாதையில் அடி எடுத்து வைத்து விடுவாளோ என்று கவலையாக இருந்தது. மோகனோ வேறு ஒரு யோசனையில் இருந்தார். அதை யாருமே கவனிக்க வில்லை.

     எப்போதும் போகும் நேரத்துக்கு முன்னேயே வீட்டில் இருந்து கிளம்பி விட்டாள். அன்று வெகு சீக்கிரமே பள்ளிக்கு வந்து ஆதியை தேடி அவனது கிளாசுக்கு சென்றாள். அவன் இன்னும் வராததால் மீண்டும் பார்க்கிங் சென்று அவளது வண்டியில் சாய்ந்து நின்ற படி மொபைலைக் குடைந்து கொண்டிருந்தாள். அவளது கண்கள் போனில் பதிந்திருந்தாலும் அவ்வப்போது ரகுவைத் தேடிய படி தான் இருந்தது.

     அவளுடன் பணிபுரிபவர்கள் இருவர் “என்ன மிஸ் இங்கயே நின்னுட்டீங்க? ஸ்டாப் ரூம் வரலையா?”, என்று கூட கேட்டு விட்டார்கள். “ஒரு முக்கியமான கால் வரணும்”, என்று சொல்லி சமாளித்தவள் போனைப் பார்த்தாலும் அவள் கவனம் கேட் வாசலிலே இருந்தது. அவளைப் போல ரகுவும் எதிர் பார்ப்புடன் தான் பள்ளிக்கு வந்தான். எப்போதும் அவன் அவளைப் பார்ப்பான் தான். இன்றோ அவள் தன்னுடன் பேசுவாளா என்ற எதிர் பார்ப்பு அதிகமாக இருந்தது.

     பள்ளி முன்பு காரை நிறுத்தியவன் கீழே இறங்கி மகனை கையில் ஏந்திக் கொண்டாலும் அவளைத் தான் அவனது கண்கள் தேடின. அவனை முதலில் பார்த்தது ஜானகி தான். ரசனையுடன் அவனை அளவிட்டாள்.

     முன்பை விட கம்பீரம் கூடி செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம் போல ஆதியை தூக்கி வைத்து அவன் நின்றிருந்த அழகு அவளை அவ்வளவு கவர்ந்தது. அப்போது தான் அவனும் அவளைப் பார்த்தான். அவனது மிர்ச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி தான். இன்று அவள் அழகு இன்னும் அதிகரித்திருந்தது. அவள் முகத்திலே அவன் பார்வை நிலைகுத்தி நின்றது. ஆனால் அவன் பள்ளிக்கு வெளியே நிற்க அவள் உள்ளே நின்றாள்.

Advertisement