Advertisement

     அவனைப் பார்த்தது நூறு சதவீதம் சந்தோஷம் தான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் கீர்த்தி முகமும் நினைவில் வந்து அவளை சோதித்தது. தன்னுடைய மனதை அடக்க முடியாமல் நவீனை அழைத்து விட்டாள்.

     அதை எடுத்தவன் அருகில் இருந்த விஷ்ணுவை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லு டி”, என்றான்.

     “பக்கத்தில் அண்ணா இருக்கானா?”

     “ஆமா”

     “அப்படின்னா வெளிய வாயேன் நவி. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

     “இரு”, என்றவன் அடுத்த இரண்டு நொடியில் வெளியே வந்து பேசினான். நவீன் போவதை விஷ்ணு பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவனுக்கு தான் தெரியுமே போனில் பேசுவது தனது தங்கை தான் என்று.

     “என்ன ஜானு? இந்நேரம் கால் பண்ணிருக்க? எல்லாம் ஓகே தானே?”, என்று கேட்டான் நவீன்.

     “நான் ஓகே இல்லை டா நவி. பயங்கர டென்ஷன்ல இருக்கேன்”

     “டென்சனா இருக்கியா? என்ன ஆச்சு டி?”

     “இன்னைக்கு ரகுவை பாத்தேன் டா?”

     “வாட்?”

     “ஆமா டா, பாத்தேன். பேசுனேன். அன்னைக்கு பாத்தியே ஆதி அவனோட அப்பா ரகு தான் டா”

     “என்ன ஒரு ட்விஸ்ட்? கடவுள் உன் வாழ்க்கைல மட்டும் ஏன் தான் இப்படி விளையாடுறாரோ? சரி என்ன பேசின?”, என்று அவன் கேட்க நடந்ததைச் சொன்னாள்.

     “அவன் கிட்ட சாதாரணமா பேசிட்டு வந்துட்டேன் நவி. ஆனா அப்புறம் தான் படபடப்பா இருக்கு. அதான் உனக்கு கூப்பிட்டேன்”

     “என்னைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு மீட் பண்ணது நல்லது தான் ஜானு. எத்தனை நாள் புலி வரும் வரும்னு பயந்துட்டு இருப்ப? இன்னைக்கு ஒரு மகனை விட வந்திருக்கான். அடுத்து இன்னொரு பிள்ளையையும் விட வருவான். அதைப் பாத்தே உன் மனசு கூடிய சீக்கிரம் அந்த அங்கிளை விட்டுட்டு இந்த ஹீரோவான என் பக்கம் தாவ வாய்ப்பு இருக்குல்ல?”, என்று சிரிக்க ஜானகிக்கும் சிரிப்பு வந்தது.

     அவன் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு “நீ ஹீரோவா? வேணும்னா சைட் ஹீரோவா வேணா இருப்ப?”, என்றாள்.

     “ஐயையோ, அப்படினா நான் நல்லாவே இல்லையா? நானா தான் இத்தனை நாள் நான் அழகுன்னு நினைச்சிட்டு இருந்தேனா?”, என்று அவன் பதறிய படி கேட்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

     “நீ அழகா தான் இருக்க நவி. ஆனா உன் வெளி அழகை விட உன் மனசு ரொம்ப அழகு டா. அந்த அழகைக் கொண்டாட ஒரு தேவதை வருவா பாரு”

     “பாக்கலாம். சரி நீ இப்ப ஓகே ஆய்ட்டியா?”

     “ஆமா டா. ஃபீல் பெட்டர்”

     “சரி அப்புறம் பேசவா? உங்க அண்ணன் குறுகுறுன்னு என்னையே பாக்குறான்”

     “அவன் கிட்ட சொல்லிறாத நவி. ஏற்கனவே நான் ரகுவை மறக்க மாட்டுக்கேன்னு ரகு மேல பயங்கர கோபத்துல இருக்காங்க. அது மட்டும் இல்லாம அப்பா ஜெயிலுக்கு போனதுக்கும் அந்த காதல் தானே காரணம்? அதான்”

     “சரி நான் அவன் கிட்ட சொல்லலை”, என்று அவன் சொல்ல அவளும் “சரி நைட் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

     “இவளுக்கு எப்படியாவது ஒரு நல்ல வழி காட்டு கடவுளே”, என்று எண்ணிக் கொண்டு நவீன் அவனது இருக்கையில் அமர அவனையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவைக் கண்டு “என்ன டா? பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை மாதிரி என்னையே பாத்துட்டே இருக்க? அம்புட்டு அழகாவா இருக்கேன்?”, என்று கேட்டான் நவீன்.

     “வேலை நேரத்துல இப்படியா போன் பேச போவ? அப்படி அம்மா என்ன தான் சொன்னாங்க?”, என்று கேட்டான் விஷ்ணு.

     “போன் பண்ணினது அம்மா இல்லை டா. ஜானு தான்”, என்று உளறி நாக்கைக் கடிக்க “என்னவாம் அவளுக்கு?”, என்று கேட்டான் விஷ்ணு.

     “சும்மா, அவளுக்கு யு.கே.ஜி பாடத்துல ஒரு சந்தேகமாம். அதை கேட்டா”, என்று சொல்ல விஷ்ணுவும் ஒன்றும் கேட்க வில்லை. விஷ்ணுவுக்கு தான் தெரியுமே தங்கை என்ன பேசியிருப்பாள் என்று.

     ஜானகிக்கு நவீனுடன் பேசியதில் மனது கொஞ்சம் தெளிவாக இருந்தது. ஆனாலும் ரகு நினைவு தான். “இனி ரகு அடிக்கடி என் கண்ணு முன்னாடி வருவானா? இன்னைக்கு மாதிரி அவனை என்னால் சாதாரணமா கடக்க முடியுமா? ரகுவை பாத்ததை வீட்ல சொன்னா என்ன நினைப்பாங்க?”, என்று பல கேள்விகள் அவளுக்குள் உதயமானது.

     “இனி ஒரு தரம் அவனைப் பாத்தா வேலையை விட்டு நின்னுறனும். ஆனா இதை வீட்ல மட்டும் சொல்லிறக் கூடாது”, என்று முடிவு எடுத்த பிறகு தான் கொஞ்சம் இயல்பானாள்.

     ஆனால் அவள் ஆதியைப் பார்த்ததை வீட்டில் மறைக்க நினைக்க விஷ்ணு வேறு ஒரு முடிவு எடுத்ததை அவள் அறிய வில்லை.

     அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் ஜானகி. ரகுவைப் பார்த்த விஷயத்தை மறைக்க அவள் கூடுதல் கவனமாக இருக்க முயற்சி செய்ய அதுவே வித்தியாசமாக தான் இருந்தது.

     “என்ன ஆச்சு குட்டி மா? ஒரு மாதிரி இருக்க?”, என்று மோகன் கேட்க “ஒண்ணும் இல்லையே பா”, என்று சொல்லி சமாளித்தாள்.

     தங்கையை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. ஆனால் அவள் அவனைக் கவனிக்க வில்லை. தந்தையைப் பார்த்து புன்னகைத்தவள் அவர் அருகில் சென்று அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

     அவளை இன்னும் சாய்வாக அணைத்து தன்னுடைய தோளில் அவள் தலையை வைத்து விட்டு “தேவி, குட்டிமா வந்துட்டா பாரு. டீ எடுத்துட்டு வா”, என்று குரல் கொடுத்தார் மோகன்.

     அப்போது தான் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அண்ணனை பார்த்தாள். அவன் கண்கள் கூர்மையாக அவளைப் பார்க்க “என்ன அண்ணா?”, என்று கேட்டாள்.

     “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஜானு”, என்று விஷ்ணு சொல்ல அவள் மட்டும் அல்ல மோகனுமே அவனைப் பார்த்தார்.

     “என்ன விஷயம் அண்ணா?”

     “வேற என்ன பேசப் போறோம்? உன் கல்யாண விஷயம் தான். உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்துருக்கேன்”, என்று சொன்ன விஷ்ணு அவளையே கூர்மையாக பார்க்க அவள் உடல் இறுகியதை மோகனால் உணர முடிந்தது. தேவகி டீ கொடுக்க நடுக்கத்துடன் டம்ளரை வாங்கினாள். ஏற்கனவே பெரியவர்கள் திருமண விஷயம் பேச வேண்டும் என்று முடிவில் இருக்க விஷ்ணு ஆரம்பித்ததும் சந்தோஷமாக இருந்தது.

     “நானே இதைப் பத்தி பேசணும்னு நினைச்சேன். விஷ்ணுவே ஆரம்பிச்சிட்டான். இப்ப தான் உங்க அப்பாவும் வந்துட்டாங்களே. சீக்கிரம் கல்யாணம் பண்ணனும். ஜானு சரின்னு சொல்லு”, என்றாள் தேவகி.

     மோகன் மற்றும் தேவகி இருவரும் எதிர்பார்ப்புடன் மகளைப் பார்த்தார்கள் என்றால் விஷ்ணு அவளை ஆராய்ச்சியாக பார்த்தான். ஒரு மிடறு டீயை விழுங்கியவள் “வேண்டாம் அண்ணா, இனி அந்த பேச்சே வேண்டாம். நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை”, என்றாள் தீர்மானமாக.

     “ஏன்?”

     “என்னால முடியலை. என்னால வேற ஒருத்தரை ஏத்துக்க முடியாது. நான் இப்படியே இருந்துட்டு போறேன். எனக்கு எந்த புது உறவும் வேண்டாம்“, என்று அவ்வளவு உறுதியாக வந்தது அவள் குரல்.

     பெரியவர்கள் முகம் வாடிப் போனது. ஆனால் அவர்களுக்காக கூட அவளால் திருமணம் செய்ய முடியாது. அதுவும் ரகுவை நேரில் கண்ட பிறகு அவனைப் பற்றிய எண்ணங்கள் அவளுக்குள் அதிகமாக தான் ஆனது.

     “புது உறவு வேண்டாம்னு சொல்றது சரி ஜானு. ஆனா முடிஞ்சு போன உறவை புதுப்பிக்க நினைக்கிறது சரியா மா?”, என்று விஷ்ணு கேட்க பெரியவர்கள் குழப்பத்துடன் பார்த்தார்கள்.

     “அண்ணா”, என்று அதிர்வாக அழைத்தாள் ஜானகி.

     “நீ படிச்ச பொண்ணு, இன்னும் சொல்லப் போனா என்னை விட விவரம் அதிகம் தெரிஞ்சவ. நீ இப்படி பண்ணலாமா ஜானு?  வேண்டாம்னு ஒதுக்கி மத்தவங்களுக்கு கொடுத்த பொருளை திரும்பி பாக்க கூடாது ஜானு மா. அதுவும் அவங்க பயன் படுத்தின பிறகு அதை திருப்பி வாங்கிக்க நினைக்கிறது தப்பு டா”, என்று விஷ்ணு கேட்க அதிர்வாக அவனைப் பார்த்தாள். அவள் அப்படி எல்லாம் நினைக்க வில்லை தான். ஆனால் ஏனோ வேறொருத்தியின் கணவனை நினைத்துக் கொண்டிருப்பது அவளுக்கே குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது.

     “என்ன நடக்குது இங்க? விஷ்ணு நீ என்ன கேக்குற? எங்களுக்கு ஒண்ணுமே புரியலை”, என்று கேட்டார் மோகன்.

     “இன்னைக்கு ஜானு அந்த ரகு கூட பேசிட்டு இருந்ததைப் பாத்தேன் பா. அதுவும் அவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருக்கா. எனக்கு அது சரியாப் படலை”, என்று அவன் விஷயத்தைப் போட்டு உடைக்க அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

காதல் தொடரும்….

Advertisement