Advertisement

     விஷ்ணுவும் ஜானகியும் அங்கே இருந்தே வேலைக்குச் செல்ல மோகனும் மேனேஜரிடம் ஒப்படைத்து இருந்த கார்மெண்ட்ஸ் பேக்டரியில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேவகி எப்போதும் போல இல்லத்தரசியாக இருந்தாலும் கூடிய சீக்கிரம் பிள்ளைகள் திருமணம் விஷயம் பற்றி கணவரிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

     அன்று திங்கள் கிழமை… ஜானகி எப்போதும் வரும் நேரத்தை விட சற்று தாமதமாக பள்ளிக்கு வந்தாள். அவள் ஏற்கனவே வந்திருப்பாள் என்று எண்ணி அவளையும் அவள் வண்டியையும் தேடிய ரகு காரை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தான். ஆதியும் அவன் அருகே நின்றிருந்தான்.

     “நான் உள்ள போகட்டாப்பா?”, என்று ஆதி கேட்க “பொறு டா போகலாம்?”, என்று சொன்ன ரகு உள்ளே அவள் வண்டி இருக்கிறதா என்று ஒவ்வொரு வண்டியாக வெளியே இருந்தே பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

     ஜானகி வரும் போதே ஆதி நிற்பதையும் அவனுக்கு அருகே பெரிய ஆள் ஒருவன் நிற்பதையும் பார்த்தாள். ஆனால் அவன் முதுகுப் பக்கம் மட்டுமே தெரிந்தது. ரகுவும் ஜானகியின் வண்டியை பள்ளிக்கு உள்ளே தேடிக் கொண்டிருந்ததால் பின்னால் திரும்பி பார்க்க வில்லை.

     “ஆதி குட்டி நிக்குறானே? பக்கத்துல நிக்குறது தான் அவனோட அப்பாவா இருக்குமோ? இத்தனை மாசத்துல ஒரு நாள் கூட அவரைப் பாக்கலையே?”, என்று அவள் எண்ண “அவனோட அப்பாவைப் பாத்து நீ என்ன பண்ணப் போற?”, என்று கேள்வி கேட்டது மனசாட்சி.

     “அதானே?”, என்று எண்ணிக் கொண்டு ஆதி அருகே வண்டியை நிறுத்தியவள் “ஆதி குட்டி குட் மார்னிங். உள்ள வரலையாடா? ஏன் வெளியவே நின்னுட்ட?”, என்று கேட்டாள்.

     அவளைக் கண்டு ஆதி சந்தோஷமாக பேச ரகுராமோ “ஐயோ இன்னைக்கு நேருக்கு நேர் சிக்கிட்டோமே? இவ உள்ள இருப்பான்னு நினைச்சா இப்ப தான் வாரா. இப்ப என்ன பண்ணுறது?”, என்று எண்ணி அவளையே பார்க்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாத நிலையில் திகைத்து நின்றான் ரகு.

     எப்படி இருந்தாலும் ஒரு நாள் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்க் கொள்ள வேண்டி வரும் என்று எண்ணி தன்னை இயல்பாக காட்டிக் கொண்டான்.

     “உங்க கூட வரேன் மிஸ். டாட்டா பா”, என்று சொன்ன ஆதி அவளுடைய வண்டியில் ஏறிக் கொள்ள “நான் கூட்டிட்டு போறேன் சார். நீங்க கிளம்…..”, என்று சொல்லிக் கொண்டே அவன் முகம் பார்த்தவள் ஹை வோல்ட் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து போனாள்.

     “இவனா?”, என்று எண்ணி மூச்சு விட மறந்து அவள் அவனையே பார்க்க அவனோ சாதாரணமாக “ஹாய் ஜானகி எப்படி இருக்க? நீ தான் ஆதியோட மிஸ்ஸா?”, என்று கேட்டான்.

     அவன் கேட்டதும் தான் அவனையே ஆவேன்று பார்த்திருப்பது புரிந்து அதிர்ச்சியை மறைத்து வண்டியில் இருந்து இறங்கி வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் “ரொம்ப நாள் ஆச்சா உன்னைப் பாத்து? அதான் ஷாக் ஆகிருச்சு ரகு. ஆதி உன் மகன் தானா? கீர்த்தி எப்படி இருக்கா? அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா? ஆதியை விட வருவாங்களே அவங்க தான் உங்க அம்மாவா?”, என்று திக்கி திணறி பல கேள்விகளை கேட்டாள்.

     அவனைக் கண்டது மனதுக்குள் சந்தோஷத்தை விதைத்ததா இல்லை வலியை தூண்டி விட்டதா என்ற புரியாத நிலையில் நின்ற ஜானகி கேள்வியை கேட்டு தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அவள் கண்கள் ரசனையுடன் அவனை அளவிட்டது. முன்பை விட கம்பீரம் கூடி ஆணழகனாக இருப்பவனை எப்படி ரசிக்காமல் இருக்கவாம்? அப்போதும் “ஏய் அவன் உன் பிரண்டோட புருஷன் டி”, என்று எச்சரித்தது மனசாட்சி.

     இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து விட்டான் விஷ்ணு. இன்று ஜானகி கிளம்ப நேரமானதால் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றாள். அவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்பதற்காக தான் அவள் பின்னேயே வந்தான். அவள் கேட் அருகே வண்டியை நிறுத்தியதும் அவனும் நின்று வியப்பாக பார்த்தான்.

     அவள் வண்டியில் ஆதியை ஏற்றிக் கொண்டு உள்ளே சென்றிருந்தால் விஷ்ணுவும் சென்றிருப்பான். ஆனால் அவள் ரகுவைக் கண்டதும் வண்டியில் இருந்து இறங்கி அதிர்ச்சியாகி ஏக்கமாக ரகுவைப் பார்த்து புன்னகை முகமாக பேச விஷ்ணுவுக்கு அதிர்ச்சி.

     “எல்லாரும் நல்லா இருக்காங்க ஜானகி. உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”, என்று அவன் கேட்க அவனுடைய மிர்ச்சி என்ற அழைப்புக்காக அவள் மனம் ஏங்கியது. அவனுமே அவளிடம் எந்த உண்மையையும் உரைக்க வில்லை.

     அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தவள் அது தவறு என்று உரைக்க “எல்லாரும் நல்லா இருக்காங்க ரகு. உன்னைப் பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ எப்படி சென்னைக்கு?”, என்று கேட்டாள்.

     “இங்க டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு”

     “எங்க வொர்க் பன்ற?”

     “*** பேங்க்ல மேனேஜரா இருக்கேன்”

     “சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஜாபா? பரவால்லயே”

     “என்ன பண்ண? உங்க அப்பா மாதிரி எங்க அப்பா பணக்காரர் இல்லையே? சாதாரண பஸ் டிரைவர் தான். அதான் நான் படிச்சு வேலை வாங்கிட்டேன். ஆமா நீ என்ன இங்க டீச்சரா இருக்க? பாரின்ல வேலைக்கு போகலையா?”, என்று அவன் சாதாரணமாக கேட்க அவளுக்கு தான் அவன் குத்திக் காட்டுவது போல இருந்தது.

     “இல்லை போகலை. இங்க இருக்க தோணுச்சு அதான். நாம நினைக்கிறது எல்லாம் நடக்காது தானே?”

     “கண்டிப்பா உண்மை தான். நாம நினைக்கிறதும் ஆசை படுறதும் என்னைக்கும் நமக்கு கிடைக்காது”, என்று அவன் சொல்ல அவன் தன்னைத் தான் சொல்கிறான் என்று புரிந்து அமைதியாக இருந்தாள்.

     “அதை விடு, எப்படி இருக்க? நல்லா இருக்க தானே? மேரேஜ்… ஆகலையா? அம்மா சொன்னாங்க ஏதோ ஜானகின்னு நினைச்சிட்டேன். ஏன் கல்யாணம் பண்ணாம இருக்க?”, என்று கேட்டான்.

     “இன்னும் ஒண்ணும் சரியா வரலை. பாத்துட்டு இருக்காங்க? சரி ரகு… கீர்த்தியை கேட்டேன்னு சொல்லு. எனக்கு நேரம் ஆச்சு”, என்று அவனிடம் சொன்னவள் “குட்டி போகலாமா?”, என்று ஆதியிடம் கேட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று விட்டாள். தப்பித்து செல்வது போல தான் அவள் ஓடினாள். இங்கே நின்று ஏதாவது பேசி மேலும் காயத்தைக் கீறிக் கொள்ள அவள் தயாராக இல்லை.

     அவள் திரும்பிப் பார்ப்பாள் என்று எண்ணி அவன் அவளையே பார்க்க அவளோ அவன் புறம் திரும்பவே இல்லை என்றாலும் வண்டி கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு அவனை விட்டு பார்வையைத் திருப்பத் தான் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் முன்பை விட அவன் அவ்வளவு அழகாக இருந்தான்.

     “ஏன் டா இப்படி இருக்க? வயசு கூட கூட தான் பசங்க அழகா இருப்பாங்களோ? கடவுளே உன்னை ஏன் பாத்தேன்?”, என்று எண்ணிக் கொண்டே வண்டியை பார்க்கிங்கில் விட்டவள் ஆதியை அங்கே வைத்து தூக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

     “நீ கீர்த்தி பையனாடா? அதை விட என்னோட ரகுவோட பையன்”, என்ற நினைவே அவன் மேல் இன்னும் அதிக அன்பை விதைத்தது.

     தன்னை திரும்பிப் பார்க்காமல் சென்றவளை எண்ணி கடுப்பில் நின்றான் ரகு. அவளை நினைத்ததும் மனதுக்குள் வெறுமை படர்ந்தது. ஏமாற்றம் கவிழ்ந்தது, அவனது ஏமாற்றமும் அவள் கொடுத்த அவமானமும் நினைவில் வந்து அவன் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக கிளறி விட்டது. அதே நேரம் அவன் மனதில் சிறு ஏக்கமும் எழாமல் இல்லை. மொத்தத்தில் கோபம், வெறுப்பு, காதல், ஏக்கம், ஏமாற்றம் போன்ற கலவையான உணர்வுகளுடன் வீட்டுக்கு கிளம்பினான். ரகு சென்ற பின்னர் தான் விஷ்ணு அலுவலகம் கிளம்பினான். அவன் மனதில் பல போராட்டம்.

     தன்னுடைய சீட்டில் அமர்ந்த ஜானகி அன்று முழுவதுமே அவளாக இல்லை. இத்தனை வருட ஏக்கத்தின் மொத்த உருவமாக கண் முன் நின்ற ரகுவையும் அவனிடம் பேசிய அந்த நொடிகளையும் எப்போதும் காதலாக பார்க்கும் அவன் கண்கள் வெறுமையாக பார்த்ததையும் அவளால் மறக்கவே முடிய வில்லை.

Advertisement