அத்தியாயம் 3

துடிக்கும் போதும் 

தவிக்கும் போதும் 

என்னருகில் நீ!!!

ஜானகி ரகு இருக்கும் இடம் தெரியாது என்று சொன்னதும் “உன் கதையைக் கேட்டு எனக்கு கஷ்டமா இருக்கு ஜானு. உன்னோட தியாகம் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா கூட எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்”, என்றான் நவீன். 

“அது தெரிஞ்சிருந்தா அவங்க எப்படி நிம்மதியா இருப்பாங்க? நான் கஷ்டப் படுறேனு அவங்களுக்கு குற்ற உணர்வா தானே இருக்கும்?”

“அதுவும் சரி தான். அப்புறம் இன்னொரு கேள்வி. ரகு உன்னைத் தானே விரும்பினான்? அப்புறம் எப்படி அவளைக் கல்யாணம் பண்ணினான்?”

“தெரியலை. அவங்க வீட்ல போர்ஸ் பண்ணிருக்கலாம். இல்லைன்னா நான் அப்படி பேசினதுனால என் மேல உள்ள கோபத்துல அப்படி பண்ணிருக்கலாம்”, என்று சொன்னவளுக்கு உண்மைக் காரணத்தை நவீனிடம் சொல்ல முடிய வில்லை. அவளால் பெயருக்கு கூட ரகுவை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேச முடியாது. அதனால் தான் மறைத்து பொய்ச் சொன்னாள். அந்த திருமணம் நடப்பதற்கு காரணமே இவள் தான் என்று நவீனிடம் சொல்ல வில்லை. 

“அதுக்கப்புறம் அவன் உன்னை மறந்திருப்பானா ஜானு?”

“இருக்கலாம். என்னை மறக்க முடியும்னு தானே அவளைக் கல்யாணம் பண்ணிருக்கணும்”

“கல்யாணத்துக்கு நீ போனியா?”

“அதை பார்த்து சந்தோஷப் படுற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் பத்தாது நவீன். போகலை”

“ஏன் ஜானு ஒரு வேளை அவங்க கல்யாணம் நின்னுருந்தா? உன்னையே நினைச்சிட்டு ரகுவும் இப்ப காத்துட்டு இருந்தா?”

“ரொம்ப கற்பனை வேண்டாம் நவீன். அவன் கல்யாண போட்டோஸ் பேஸ்புக்ல பசங்க போட்டுருந்தாங்க. அதை பாத்தேன் அழுதேன். மறுபடி மறுபடி பாக்க தைரியம் இல்லாம அக்கவுண்டையே குளோஸ் பண்ணிட்டேன்”, என்று சொல்ல நவீனுக்கு உண்மையிலே வேதனையாக இருந்தது. 

“பேசாம நாம கல்யாணம் பண்ணிக்கலாமா டி? எனக்கு உன்னை விடவே மனசு இல்லை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்று நவீன் உரிமையாக பேச அது ஜானகியை பாதிக்க எல்லாம் செய்ய வில்லை. சிறு புன்னகை தான் உதயமானது. 

“ஹா ஹா பரிதாபமா? ஆனா நம்ம கல்யாணம் நடந்தா நீங்க நல்லா இருக்க மாட்டீங்க நவீன்?”

“ஏன்? ஏன்?”

“இன்னைக்கு தான் நாம கல்யாணம் பத்தியே பேசினோம்? ஆனா அதுக்குள்ள உங்களுக்கு என்னைக் கிஸ் பண்ண ஆசை வந்துருச்சு. அது இருக்க தான் செய்யும். அந்த ஆசை இல்லைன்னா ஹார்மோன்ஸ் வேலை செய்யலைனு அர்த்தம். உங்களால எப்படி காலம் முழுக்க எனக்காக காத்துட்டு இருக்க முடியும்? ஒரு வேளை  நான் மாறணும்னு நினைச்சாலும் இப்ப மாதிரியே நீங்க என் கிட்ட வரும் போது நான் ரகு பேரைச் சொன்னா அதை விட அசிங்கம் வேற இல்லை. நீங்க என்னோட நல்ல ஃபிரண்ட் நவீன். உங்களை அசிங்கப் படுத்த என்னால முடியாது”

“நல்லா பேசுற?”, என்று சொன்னவன் அவள் தலையைப் பிடித்து லேசாக ஆட்ட “ஏய் ஹேர் ஸ்டைலை கலைக்காத”, என்றாள் பட்டென்று. அதற்கு பின்னே அவனை ஒருமையில் அழைத்தது நினைவில் வர “சாரி”, என்றாள்.

சிறு சிரிப்புடன் நேராக அமர்ந்தவன் “அதை விடு. இனி நாம பிரண்ட்ஸ். நீ என்னை வாடா போடான்னு கூட கூப்பிட்டுக்கோ”, என்றான். 

உடனேயே “சரி டா”, என்று சொல்லி விட்டு அவள் சிரிக்க அவனுக்கும் சிரிப்பு வந்தது. 

“உன் அண்ணா கேட்டா என்ன சொல்லட்டும் ஜானு?”, என்று கேட்டான். 

“அதான் தெரியலை. அவன் பாவம். எனக்காக அவன் லைபை ஸ்பாயில் பண்ணிக்கிறான். என்ன சொல்லி அவன் மனசை மாத்தன்னே எனக்கு தெரியலை”

“நீ கல்யாணம் பண்ணி அண்ணி கூட சேந்து என்னை வாழ்த்தினா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லு”

“அதெல்லாம் சொல்லியாச்சு. காதுலே வாங்கிக்க மாட்டான்”

“அப்படின்னா அவன் கிட்ட மனசு விட்டு பேசி உண்மையை சொல்லு. அவன் புரிஞ்சிப்பான்”

“அடுத்த வாரம் இந்தியா வறேன்னு சொன்னான். அதை தான் செய்யணும்”

“ஏன் ஜானு இப்படி செஞ்சா என்ன?”

“எப்படி?”

“அந்த ரகு அட்ரச கண்டு பிடிச்சு நேர்ல போய் நிக்கலாம். அங்க போன அப்புறம் அவன் கைல ஒரு குழந்தை, மடில ஒரு குழந்தை, அவன் பொண்டாட்டி வயித்துல ஒரு குழந்தைன்னு சந்தோஷமா வாழுறதைப் பாத்து உன் மனசு மாற வாய்ப்பு இருக்கு தானே? அதை டிரை பண்ணுவோமா?”

“இல்லை. என் கண்ணு பட்டா அவங்க நிம்மதியா இருக்க மாட்டாங்க. அது நான் இருக்க வேண்டிய இடம்னு அவ மேல பொறாமைப் படுவேன். என் கண்ணுல காதலை ரகு பாத்துட்டா அவன் எப்படி அங்க சந்தோஷமா இருப்பான்”

“எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்க அப்படி தானே?”

“இல்லை, எனக்கு நானே இதெல்லாம் அலசி ஆராய்ஞ்சது. அண்ணனுக்காக கல்யாணம் பண்ணணும்னு முடிவு பண்ணினப்பவே இதையெல்லாம் யோசிச்சிட்டேன்”

“ஒரு வேளை அவனே உன் முன்னாடி வந்தா?”

“அப்படி ஒரு சூழ்நிலை வரவே கூடாது. அப்படியே பாத்தாலும் அவன் என் காதலைக் கண்டு பிடிச்சிறக் கூடாது. அது அவன் வாழ்க்கைக்கு ஆபத்து”

“கடைசி வரை இப்படியே இருக்க போறியா டி?”

“அம்மா இருக்குற வர தனிமை இல்லை. அப்புறம் அப்பா…. கூடிய சீக்கிரம் வருவார்…. அதை விடு… அண்ணா சொல்லிருப்பானே….. அம்மா அப்பாவுக்கு பிறகு என் கூட அண்ணன் அண்ணி இருப்பாங்க. நட்புன்னு நீ இருக்குற, அப்புறம் உன் பொண்டாட்டி பிள்ளைங்க வருவாங்க. அப்புறம் அண்ணன் குழந்தைங்க இருப்பாங்க. முதல்ல அண்ணாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்”

“நீ இவ்வளவு பேசினதுனால உனக்காக ஒரு நல்ல விஷயம் சொல்றேன்”

“என்ன நவீன்? உனக்குன்னு உன் கிராமத்துல அர்கானி ஏதாவது இருக்காளா?”

“அப்படி எல்லாம் இல்லை டி, இனி தான் வேற பொண்ணைப் பாக்கணும். நான் இப்ப சொல்ல வந்தது உன் அண்ணனைப் பத்தி”

“அண்ணா பத்தி என்ன?”

“உன் அண்ணன் எங்க ஆபீஸ்ல வேலை செய்யுற வைஷுவை விரும்புறான். டபுள் சைட் லவ் தான்”

“வாட்?”

“யெஸ், அந்த பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு நெருக்குறாங்க. விஷ்ணு உனக்காக யோசிக்கிறான். நீ தெளிவா பேசு. அவனாவது கல்யாணம் பண்ணட்டும்”

“இது போதும். நான் அண்ணா கிட்ட பேசுறேன்”

“நான் சொன்னேன்னு சொல்லாத டி. கொன்னுறுவான்”

“நான் அதைச் சொன்னாலே அது நீ எனக்கு சொன்னதா தான் அவன் நினைப்பான். நான் அதைப் பத்தி பேசாமலே அவனை சம்மதிக்க வைக்கிறேன் போதுமா?”

“சரிங்க மேடம். உன்னை வீட்ல விட்டுறவா?”

“ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுறியா நவீன்”

“என்ன டி சொல்லு?”

“என்னை பீச்க்கு கூட்டிட்டு போறியா? தனியா போனா நல்லா இருக்காதுன்னு நான் போகவே இல்லை. இப்ப நீ இருக்குற கம்பெனிக்கு. அதான் கேக்குறேன். போகலாமா?”

“இன்னைக்கு முழுக்க உன் கூட தான். எனக்கும் நேரம் போகும்ல? ஆனா இப்ப பீச்க்கு போனா வெயில் மண்டையை உடைக்கும். முதல்ல ஏதாவது சாப்பிட்டு ஷாப்பிங் போயிட்டு அப்புறம் பீச்க்கு போகலாம்”

“நிஜமாவா? சூப்பர்”, என்று அவள் குதூகலிக்க “இப்ப நீ வெளிய போறது இல்லையா?”, என்று கேட்டான்.

“தனியா எங்க போக? அம்மாவைக் கூப்பிட்டா வர முடியாதுன்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு எப்பவும் அப்பா நினைவு தான்”

“உன் பிரண்ட்ஸோட போகலாம்ல?”

“என் கூட படிச்ச யார் கூடவும் இப்ப காண்டேக்ட் இல்லை டா. நான் அவங்க கிட்ட பேசினா ரகு பத்தி பேசுவாங்க. அதான்”

“அவனுக்காக பயந்து ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கியா?’

“அவனைப் பாத்து எனக்கு என்ன பயம்? ஆனா என் மனசாட்சிக்கு பயந்து ஒளியுறேன்”, என்று சொல்ல வேதனையாக சிரித்தவன் படம் முடிந்ததும் ஹோட்டலை நோக்கி வண்டியை விட்டான். 

சாப்பாடு, ஷாப்பிங் முடிந்து மாலையில் அவளை பீச்சுக்கு அழைத்துச் சென்றான் நவீன். வெகு நாட்கள் கழித்து சந்தோஷமாக அவன் கையைப் பற்றிய படி தண்ணீரில் கால் நனைத்த படி நின்றாள் ஜானு. ஆனால் அவர்களையே பார்த்துக் கொண்டு சற்று தள்ளி மகனுடன் அமர்ந்திருந்த ரகுவை அவர்கள் கவனிக்க வில்லை.

அவர்கள் இருவரும் கை பற்றிய படி கடலலையில் நிற்க ரகுவுக்கு மனதை ஏதோ செய்தது. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னை ஏன் அவளுக்கு பிடிக்க வில்லை என்ற எண்ணமும் சேர்ந்து வந்து அவனைப் பந்தாடியது. அவர்களையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் அங்கே இருந்து போன பிறகு தான் அவனும் மகனுடன் வீட்டுக்கு வந்தான். 

திங்கள் கிழமை காலையில் ஆதி பள்ளி சீருடை அணிந்து புது ஸ்கூல் பேக் போட்டு தயாராகி அமர்ந்திருக்க பள்ளிக்கு போவதற்காக வேறு புடவை அணிந்து வெளியே வந்தாள் நிர்மலா. இதை எல்லாம் நியூஸ் பேப்பரை வைத்துக் கொண்டு படிப்பது போல அமர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ரகு.