Advertisement

அத்தியாயம் 2

உந்தன் மடியினில் இருந்தால் 

மரணத்தையும் மண்டியிடுவேன்!!!

தன்னை ஒருவன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் “எல்லாம் வாங்கிட்டீங்களா மா?”, என்று புன்னகையுடன் நிர்மலாவிடம் கேட்டாள் ஜானகி.

“வாங்கிட்டேன் மிஸ்”, என்று நிர்மலா சொல்ல “ஐயோ என்ன நீங்களும் என்னை மிஸ்ன்னு சொல்லிக்கிட்டு? என் பேர் ஜானகி. ஜானகின்னு சொல்லுங்க. ஜானுன்னு சொன்னாக் கூட சந்தோஷம் தான்”, என்றாள்.

“சரி மா ஜானகி, இங்க எதுக்கு இந்நேரம் வந்துருக்க? இருட்டிருச்சே? வயசு பொண்ணு இந்த நேரம் தனியா வரலாமா?”, என்று நிர்மலா அக்கறையாக கேட்க முன்பெல்லாம் இப்படி யாராவது அவளிடம் பேசி இருந்தால் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் உங்க வேலையைப் பாத்துட்டுப் போங்க என்று கண்ட படி பேசியிருப்பாள். ஆனால் இப்போது பல அடிகளை வாழ்க்கையில் பெற்றவளாச்சே.

“ஒரு பிரண்டை… இல்லை இல்லை மாப்பிள்ளை பாக்க வந்தேன் மா”, என்று சொல்லி வேதனையாக புன்னகைத்தாள்.

“என்னது? மாப்பிள்ளையா?”

“அண்ணாவோட ஃபிரண்ட் இப்ப வராங்க. அவங்களைத் தான் எனக்கு கல்யாணத்துக்கு பாத்தாங்க. அதான் பாக்கலாம்னு வந்தேன். வந்துட்டு இருக்காங்க. சரி நீங்க எப்படி போவீங்க?”

“என் மகன் காரை எடுக்க பார்க்கிங் போயிருக்கான் மா. அதான் நிக்குறோம்”, என்று நிர்மலா சொல்லும் போதே “ஹாய்”, என்ற குரல் கேட்டு மூவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அங்கே நவீன் அந்த வயதுக்கே உரிய களையுடன் கண்களில் ஒரு கண்ணாடி அணிந்து புன்னகை முகமாக நின்றிருந்தான். “நவீன்”, என்று அவள் கேள்வியாக இழுக்க “யெஸ், நான் தான். குட்டி யாரு?”, என்று சிரிப்புடன் கேட்டான். அவன் கைகள் தன்னாலே ஆதியின் கன்னத்தை வருடியது.

“என்னோட ஸ்டூடண்ட். பேர் ஆதி. அப்புறம் இது இவனோட பாட்டி”, என்று அறிமுகப் படுத்தியவள் “அம்மா இது நவீன்”, என்று அவனையும் நிர்மலாவுக்கு அறிமுகப் படுத்தினாள். .

“வணக்கம் மா”, என்று நிர்மலாவிடம் கரம் குவித்தவன் “டேய் குட்டி, அங்கிள் கிட்ட வரியா?”, என்று கேட்ட படி ஆதியை நோக்கி கரம் நீட்டினான்.

“மாட்டேன்”, என்னும் விதமாய் தலையசைத்தவன் ஜானகியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். ஆதியின் செய்கை நவீனைக் காயப் படுத்துமோ என்று எண்ணி “புது ஆளுங்க கிட்ட சேர மாட்டான். தப்பா எடுக்காதீங்க தம்பி”, என்று நிர்மலா சொல்ல “இதுல என்ன மா இருக்கு? குழந்தைங்கன்னா அப்படி தான்”, என்று புரிதலுடன் சிரித்தான். அவன் பேச்சில் ஜானகி மற்றும் நிர்மலா இருவருக்குமே அவனைப் பிடித்தது.

“இந்த தம்பி தான் மாப்பிள்ளையா மா?”, என்று நிர்மலா கேட்க “ஆமா மா”, என்று சொன்னாள் ஜானகி.

“மாப்பிள்ளை தம்பி ரொம்ப அழகா இருக்கார் மா. உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தமா இருக்கும். சரி நீங்க உள்ள போய் பேசுங்க”, என்று சொன்ன நிர்மலா “ஆதி ஆச்சி கிட்ட வா”, என்று சொல்ல அவனும் பாட்டியிடம் வந்தான்.

“நாங்க வரோம் மா”, என்று இருவரும் நிர்மலாவிடம் சொல்லி விட்டு மாலுக்குள் நுழைய இந்த காட்சிகளை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்கள் உள்ளே சென்றதும் நிர்மலாவையும் ஆதியையும் நோக்கி வந்தான். அவன் தான் ரகுராம். ஜானகி மறக்கத் துடிக்கும் அவளது ரகு.

அவனைக் கண்டதும் “அப்பா”, என்ற படி ஆதி அவன் கைகளில் தாவ அவனை வாங்கிக் கொண்டே “யாரும்மா அவங்க?”, என்று கேட்டான்.

“குட்டியோட மிஸ். பேரு ஜானகி. ரொம்ப நல்ல பொண்ணு பா”

“ஏது நல்ல பொண்ணா?”, என்று அவன் நக்கலாக கேட்க அவனை ஒரு மார்கமாக பார்த்தவர் “உண்மைலே நல்ல பொண்ணு டா. சிரிக்க சிரிக்க பேசும். அந்த பையன் அந்த பொண்ணுக்கு பாத்திருக்க மாப்பிள்ளையாம்”, என்றார்.

“ஓஹோ. மாப்பிள்ளை பேர் என்னவாம்?”, என்று கேட்டவனின் குரலில் வலி இருந்ததோ?

“பேர் நவீன். பையனும் நல்லா இருக்கான். ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம்”

“அப்ப உங்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு கல்யாண சாப்பாடு இருக்குன்னு சொல்லுங்க”, என்று சொன்னவனின் குரலில் இருந்தது ஆதங்கமா, ஏக்கமா, இல்லை ஏமாற்றமா என்று புரியாத ஒரு உணர்வு.

“சே சே, அந்த பொண்ணு நம்மளை எல்லாம் எப்படி கல்யாணத்துக்கு கூப்பிடும்? சரி சரி கார் எங்க? வா போகலாம்”, என்று நடக்க மாலின் உள்ளே தலையைத் திருப்பி பார்த்தான். அவர்கள் கண்ணுக்கு தெரிய வில்லை என்றதும் ஒரு பெருமூச்சோடு காருக்குச் சென்றான்.

இத்தனை நாட்கள் கழித்து அவன் மனம் கலங்கியது. ஆனால் அன்னைக்காக மறைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் மனதில் குழப்பம். ஜானகி ஏன் இப்படி இருக்கிறாள்? அவளுடைய கார்மெண்ட்ஸ் பேக்டரி என்னவாயிற்று? இன்ஜினியரிங் முடித்தவள் சிறு குழந்தைகளுக்கு டீச்சராக எப்படி பணி புரிய வந்தாள்?  அவளது ஆசையே பாரினில் வேலை பார்க்க வேண்டும் என்பது தானே?

அது மட்டும் அல்லாமல் அவளது இந்த மாற்றம் எப்படி வந்தது? அவளது கோபம், தெனாவெட்டு, திமிர் எல்லாம் எங்கே போயிற்று? அது மட்டுமில்லாமல் இத்தனை வருடம் திருமணமும் செய்து கொள்ள வில்லையா என்று பல கேள்விகள் அவனுக்குள் எழுந்தது.

“இதற்கு எல்லாம் நீ விடை தேட ஆரம்பிச்ச உன்னோட நிம்மதி துளி கூட உன் கிட்ட இருக்காது ரகு. உன் வேலையைப் பார். அது தான் உனக்கு நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது. அவளைப் பற்றி விசாரிக்கிறதும் உனக்கு அவசியம் இல்லாதது”, என்று சொன்னது மனசாட்சி. ஆனாலும் மனம் சண்டித் தனம் செய்தது. அவள் அவனுடைய முதல் காதல் அல்லவா? ஒரு காலத்தில் அவனுடைய கனவு தேவதை. அவனுடைய மிர்ச்சி.

அவன் காதலைச் சொன்ன போது “டேய் ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போய்ரு. யார் கிட்ட வந்து காதல்ன்னு பினாத்திக்கிட்டு இருக்க? நான் யார்னு தெரியுமா? உன் மண்டை உடையுறதுக்குள்ள இங்க இருந்து போயிடு. ஆளையும் மண்டையும் பாரு. நீயெல்லாம் எனக்கு இணையா? எங்க அப்பா எனக்கு உன்னை விட பணக்கார மாப்பிள்ளையா தான் பாப்பார். அதுவும் உன்னை விட அழகான மாப்பிள்ளை தான் பாப்பார்”, என்று அவள் சொன்னது இன்றும் அவன் மனதில் நின்றது.

இப்போது ரகுவும் கொஞ்சம் பணக்காரன் தான். நிச்சயம் அவள் அழகுக்கு முன் அவன் இணையில்லை தான். ஆனால் இப்போது பார்த்த நவீனை விட ரகு அழகு தான்.

“இவன் தான் மாப்பிள்ளையா? ஆனா என்னை விட இவன் சுமாரா தானே இருக்கான்? என்னை விட இவன் எப்படி அவள் கண்களுக்கு அழகாக தெரிகிறான்?”, என்று எண்ண மிட்ட படியே காரை ஓட்டினான்.

ரகுராம் ஆறடிக்கும் மேல் உயரம்… வசீகரமான முகம்… கம்பீரமான மீசை… அகலமான தோள்கள்… எங்கும் கூடுதல் சதை இல்லாமல் திடகாத்திரமான உடல்…. ஆனால் நவீன் சாதாரணமாக இருந்தான். கண்களில் கண்ணாடி வேறு. அதனால் தான் தன்னை விட அவன் எந்த விதத்தில் அழகு என்று அவன் மனம் சிந்தித்தது.

ஆனால் மனது நிலையில்லாமல் தவிக்க “நினைக்காத டா. எல்லாமே முடிஞ்சு போச்சு. முடிஞ்சு போன விஷயத்தை நினைச்சு உன் மனசை வதைக்காத. அது அமைதியா இருக்கட்டும், ஆதிக்காக”, என்று மீண்டும் மனசாட்சி சொல்ல தன்னையே சமாளித்துக் கொண்டான். ஆனாலும் உள்ளுக்குள் சிறு வலி எழவே செய்தது. ரகுராம் இப்போது இன்னொரு பெண்ணுக்கு கணவன். ஆனாலும் அவனின் முதல் காதல் ஜானகி அல்லவா? அவனது ஹார்மோன் மாற்றத்துக்கு சொந்தக்காரி அவள் அல்லவா?

“ரகு, நைட்டுக்கு கொஞ்சம் சாதம் இருக்கு. ஏதாவது டிபன் வாங்கிட்டு போகலாம். சமைக்க சோம்பேறியா இருக்கு டா”, என்று சொன்ன நிர்மலாவின் குரலில் நடப்புக்கு வந்தவன் சிறு சிரிப்புடன் “சரி மா”, என்று சொன்னான்.

அதற்கு பின் அவன் கவனம் எல்லாம் மகன் மற்றும் அன்னையின் மீது இருந்தாலும் ஜானகியும் நவீனும் என்ன பேசிக் கொள்வார்கள்? ஜானுவுக்கு எப்போது திருமணம் என்றெல்லாம் அவன் மனம் சிந்தித்தது.

Advertisement