Advertisement

“உங்க காதல் உயிருக்கு உயிரான காதல் தான். உன் கூட வாழ என் தம்பிக்கு தான் கொடுத்து வைக்கலை. சரி நான் இப்ப என்ன பண்ணனும்?”, என்று கேட்டான் விக்ரம்.

“நீங்க ஆதியை கூட்டிட்டு போகப் போறீங்களாம்? ஆனா எனக்கு என் மகன் வேணும். வேணும்னா என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க. கடைசி வரை சுனில் வீட்ல ஒரு வேலைக்காரியா வாழ்ந்துக்குறேன்”, என்று அவள் சொல்ல அவள் பிளான் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

“அந்த அளவுக்கு மகன் மேல பாசமா? அப்புறம் ஏன் இவ்வளவு வருஷம் அவனை வளக்கலை?”, என்று அவன் கேட்டதும் ஒரு நொடி தடுமாறியவள் “அது ரகுவுக்காக தான். ஆதி ரகு கூட இருந்தா ரகு சந்தோஷப் படுவான்னு தான் விட்டு வச்சேன். இப்ப அவனுக்கு ஜானகி கூட கல்யாணம் ஆகிருச்சு. அதனால நான் ஆதியைக் கூட்டிட்டு போகத் தான் வந்தேன். ரகு தான் உங்க நம்பர் கொடுத்தான்”, என்றாள்.

“ஓ, நீ சொல்ற யோசனை கூட நல்லா தான் இருக்கு. பேசாம நீயும் எங்க கூட வந்துரு. உனக்கும் சுனிலுக்கும் கல்யாணம் முடியலைனாலும் நீ சுனிலோட பொண்டாட்டி தான். நீ எங்க வீட்ல தான் இருக்கணும்”, என்று விக்ரம் சொல்ல கீர்த்தி கண்கள் ஒளிர்ந்தது.

“ஆனா அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கனு தெரியலை. இப்ப ஆதி அம்மா அப்பா கூட தான் வெளிய சென்னையை சுத்திப் பாக்க போயிருக்கான். அவங்க வந்ததும் நான் உன்னைப் பத்தி சொல்றேன்”, என்று விக்ரம் சொன்னதும் கீர்த்தி அவ்வளவு சந்தோஷப் பட்டாள்.

“சரி அது வரைக்கும் நான் ரகு வீட்ல இருக்கேன். தயவு செஞ்சு என்னை உங்க கூட கூட்டிட்டு போயிருங்க அத்தான்”, என்று சொல்லி விட்டு  வெளியே செல்ல “இந்த பொண்ணோட வியர்வை துளில கூட உண்மை இல்லை”, என்று எண்ணிக் கொண்டவன் தன்னுடைய ஆட்களுக்கு அழைத்து அடுத்து செய்ய வேண்டியதைச் சொல்லி விட்டான்.

கீர்த்தி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும் போதே ஒரு காரில் வந்த இரண்டு முகமூடி அணிந்த ஆட்களால் கடத்தப் பட்டாள். அதிர்ந்து அவள் கத்த மயக்க மருந்து கொடுத்தார்கள். அடுத்த நொடி என்ன நடந்தது என்று தெரியாமல் மயங்கிப் போனாள். கார் மும்பையை நோக்கி பயணித்தது.

சொன்னது போலவே அன்று இரவு விக்ரம் சிங் ஆதியை ரகு வீட்டில் வந்து விட்டான். “கீர்த்தி எங்கே? உங்களைப் பாக்க தானே வந்தா?”, என்று ரகு கேட்டதற்கு “இனி நீங்க அவளைப் பார்க்கும் வாய்ப்பு வரவே போறதில்லை”, என்று சிரித்தான் விக்ரம். ரகுவும் வேறு எதுவும் கேட்டுக் கொள்ள வில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம்.

அன்று இரவு அந்த வீட்டில் ஆதியின் குரல் மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தது. இன்று பகல் முழுவதும் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு பிடித்ததை எல்லாம் அனைவரும் வாங்கிக் கொடுத்திருக்க ஆதிக்கு அவ்வளவு சந்தோஷம். நிர்மலா அவனை மடியை விட்டு இறக்கவே இல்லை.

“அவங்களை எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா ஆதி?”, என்று கேட்டான் ரகு.

“யெஸ் பா”

“அவங்க கூட அவங்க ஊருக்கு போறியா டா?”

“ம்ம்”

“திரும்பி இங்க வர முடியாது டா. அங்க தான் இருக்கணும். அவங்க தான் உன்னைப் பாத்துப்பாங்க. அங்க ஸ்கூல்ல தான் சேப்பாங்க. ஆனா நான் ஆச்சி ஜானும்மா எல்லாரும் உன்னைப் பாக்க அங்க வருவோம்”, என்று சொல்ல தலையசைத்தாலும் ஆதிக்கு ரகு சொன்னது எல்லாம் புரிய வில்லை.

நிர்மலா ஆதியைப் பிரியும் வருத்தத்தில் அழுது கொண்டிருக்க ஜானகி தான் தேற்றினாள். ஜானகிக்கும் ரகுவுக்கும் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது தான். ஆனால் ஆதியின் நினைவால் வேறு எந்த பேச்சு வார்த்தையும் அங்கே நிகழ வில்லை.

இங்கே மோகன் அன்று தான் நிம்மதியாக தூங்கினார் இனியாவது மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எண்ணி. ஆதி போவது ரகுவுக்கு கஷ்டமாக இருந்தாலும் மோகனுக்கு அது திருப்தி தானே? ஆனாலும் அந்த கீர்த்திக்கு என்ன முடிவு வரப் போகிறது என்று தெரிந்தால் தான் அவருக்கு முழு நிம்மதியும்.

அன்று ஆதி மும்பைக்கு கிளம்ப வேண்டிய நாள். குப்தா குடும்பத்தினர் அனைவரும் அவனை அழைக்க ரகு வீட்டுக்கு வந்து விட்டார்கள். நிர்மலா அழுது கொண்டிருக்க ரகுவோ கஷ்டத்தை விழுங்கிக் கொண்டிருந்தான்.

வீட்டினரை தேற்றி அவர்களை வரவேற்று என எல்லாம் செய்தது ஜானகி தான். அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாதே.

“சரி நாங்க கிளம்புறோம்”, என்று சொன்ன விக்ரம் ஆதியை தூக்கிக் கொள்ள அவர்களும் தலையசைத்தார்கள்.

“எப்ப வேணும்னாலும் நீங்க அங்க வாங்க”, என்று சொல்லி விட்டு குப்தா குடும்பம் கிளம்ப அது வரை விக்ரம் தோளில் அமைதியாக இருந்த ஆதி “அப்பா”, என்ற படி ஓடி வந்து ரகுவின் கால்களைக் கட்டிக் கொண்டான்.

ரகு அவனைத் தூக்கிக் கொள்ள அவனை கட்டிக் கொண்டான். ரகு கண்களும் கலங்கியது. இப்போது விக்ரம் தூக்க வர ஆதி ரகுவைக் கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை.

அனைவருக்கும் என்ன செய்ய என்று தெரியாத தடுமாற்றம். ரகுவுக்கு அவர்களைப் பார்க்கவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் ஆதி அவர்கள் குடும்பத்தின் வாரிசு ஆகிற்றே?

“ஆதி இப்ப தூங்கிருவான். அப்புறம் தூக்கிட்டு போங்க. அங்க போய் அழுதாலும் ஏதாவது விளையாட்டு காட்டுங்க. வெளிய கூட்டிட்டு போங்க, சரியாகிருவான்”, என்றவன் “அம்மா இவனைத் தூங்க வைங்க”, என்று சொல்லி நிர்மலாவிடம் கொடுத்தான். நிர்மலாவும் உள்ளே தூக்கிச் சென்றாள்.

ஜானகி மதிய உணவை அனைவருக்கும் செய்ய மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் விக்ரம் “நீங்க கவலைப் படாதீங்க ரகு. ஆதியை நாங்க நல்லா பாத்துக்குவோம்”, என்றான்.

“கண்டிப்பா நல்லா பாத்துக்குவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா என்னைக்கா இருந்தாலும் ஆதிக்கு அம்மா அப்பா இல்லைன்னு தெரியும் தானே? இங்க இருந்தா நானும் ஜானகியும் அம்மா அப்பாவா இருப்போம்”, என்றான் ரகு.

“நீங்க சொல்ல வரது புரியுது. என்னைக்குமே ஆதிக்கு அம்மா அப்பா இல்லைன்னு தெரிய வராது. நாங்க தெரிய விட மாட்டோம். இன்னைல இருந்து ஆதி தான் எங்களோட மூத்த மகன். இனி ஆதியோட அப்பா பெயர் விக்ரம், அம்மா பேர் பூஜா. பூஜா என்னோட அத்தை பொண்ணு தான். அவளும் ஆதியை ஏத்துகிட்டா”, என்று விக்ரம் சொன்ன பிறகு ஓரளவு தெளிந்தான் ரகு. பூஜாவும் சுனிலின் மகனை தன் மகனாக ஏற்றுக் கொண்டதாக போனில் ரகுவிடம் பேசினாள்.

சமையல் முடித்து அனைவரையும் ஜானகி சாப்பிட அழைத்தாள். அங்கே தான் சாப்பிட்டார்கள். வெகு நேரம் அழுது கொண்டிருந்த ஆதி தூங்க ஆரம்பிக்க அவனைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டார்கள் குப்தா குடும்பத்தினர்.

நிர்மலா அழுத படியே அறைக்குள் சென்று விட ரகு தளர்ந்து போய் அமர்ந்தான். அவன் கையை இறுக்கி பற்றிய படி அவன் அருகே அமர்ந்த ஜானகி எந்த ஆறுதலும் கூற வில்லை. என்ன ஆறுதல் சொன்னாலும் இந்த கஷ்டத்தை தாங்கித் தானே ஆக வேண்டும்.

மும்பைக்கு சென்றதும் ஆதி ரகு, நிர்மலாவைக் கேட்டு கேட்டு அழ அவர்கள் சமாதானப் படுத்த முயன்றார்கள். ஆனால் அவன் சமாதானம் ஆக வில்லை என்றதும் விக்ரம் ரகுவுக்கு வீடியோ காலில் அழைத்து விட்டான். ரகு, ஜானகி, நிர்மலா மூவரையும் திரையில் பார்த்த பிறகு தான் ஆதியின் அழுகை நின்றது. ஆனால் அவர்களிடம் போக அவன் அடம் பிடிக்க ரகு தான் சமாதானப் படுத்தினான்.

அதற்கு பின் ஆதி அங்கே ஈசியாக ஒட்டிக் கொண்டான். ஆனால் அவ்வப்போது அவன் தேடும் போதெல்லாம் விக்ரம் ரகுவுக்கு அழைத்து விட ஆதியும் அங்கே பொருந்தி போனான். தூரம் இருந்தாலும் பிரிய வில்லை என்று அந்த குழந்தைக்கு உணர்த்த முயன்றனர்.

நினைத்த நேரம் தந்தையை பார்க்க முடியும் என்ற நிம்மதியில் அங்கே விளையாட ஆரம்பித்தான் ஆதி. விக்ரம்க்கு இரண்டு வயதில் மகள் இருக்க அவள் ஆதியின் விளையாட்டு பொம்மையானாள். ஆதி அங்கே கொஞ்சம் கொஞ்சமாக பொருந்திப் போனான். விக்ரமை டேடி என்றும் பூஜாவை மம்மி என்றும் அழைக்க ஆரம்பித்தான். அப்படி தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனால் ரகுவிடம் பேசும் போது அப்பா என்றும் ஜானகியை ஜானும்மா என்றும் நிம்மி ஆச்சி என்று நிர்மலாவை அழைப்பதையும் அவன் மாற்றவே இல்லை. ஆதி அங்கே இயல்பாக மாற மாற இங்கே ரகு வீட்டினரும் எதார்த்ததை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போது வரை ரகு ஜானகி இருவருக்கும் இடையே எந்த தனிப் பட்ட பேச்சு வார்தைகளும் இல்லை.

காதல் தொடரும்….

Advertisement