Advertisement

“ஆமா மாப்பிள்ளை, அவளை சும்மா விடக் கூடாது”, என்று சொன்னவரின் குரலில் வெறி இருந்தது.

ஆனால் விக்ரம் சிங் மனதில் வேறு முடிவு எடுத்து “இனி கீர்த்தி விசயத்துல நீங்க தலையிடாதீங்க. அவளை என்ன பண்ணணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். மிஸ்டர் ரகு இனியாவது ஜானகி கூட நீங்க சந்தோஷமா வாழணும். அப்புறம் மோகன் சார், போதும் நீங்களும் நிறைய கஷ்டப் பட்டுட்டீங்க? என் தம்பி செஞ்சது தப்பு தான். ஆனா அவனை அப்படி செய்ய வச்சது கீர்த்தி. இத்தனை பேரை ஏமாத்தினவ என் தம்பியையும் ஏதோ ஏமாத்திருக்கா. இல்லைன்னா என் தம்பி இப்படி பண்ணுறவன் இல்லை. இனி எல்லாம் நான் பாத்துக்குறேன். ஆனா இனி வாழுற ஒவ்வொரு நிமிசமும் அந்த கீர்த்தி நரக வேதனை அனுபவிப்பா”, என்றான்.

அவர்களும் அவன் பிளானுக்கு சரி என்று சொன்னார்கள். “அப்புறம் ரகு, அம்மா அப்பா ஆதி நினைவுலே இருக்காங்க. கேட்டுட்டே இருக்காங்க. நான் அவனை கூட்டிட்டு போயிட்டு நைட் கூட்டிட்டு வரட்டுமா”, என்று கேட்டான் விக்ரம் சிங்.

“இங்க யாரோட மனநிலையும் சரி இல்லை. அதனால நீங்க ஆதியை கூட்டிட்டு போங்க. ஆனா நைட் கொண்டு வந்து விட்டுருவீங்களா? ஏன்னா ரெண்டு நாள் தான் அவன் எங்க கூட இருப்பான். நான் கூட தாங்கிக்குவேன். ஆனா அம்மா தாங்க மாட்டாங்க. நீங்க ஆதியை கூட்டிட்டு போற வரை அவன் அம்மா கூட இருக்கட்டும். இப்ப கூட்டிட்டு போங்க”, என்று ரகு சொல்ல சரி என்று சொன்ன விக்ரம் ஆதியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். கூடவே தன்னுடைய அலைபேசி எண்ணையும் ரகுவிடம் கொடுத்து கீர்த்தி வந்தால் தனக்கு தகவல் சொல்லும் படி சொல்லி விட்டே சென்றான்.

விக்ரம் சென்றதும் அனைவரும் தளர்ந்து போய் அமர்ந்தார்கள். ஆதி இனி இங்கு இருக்க மாட்டான் என்ற உண்மையை ஏற்க முடியாமல் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தாலும் கீர்த்தி செய்ததே அனைவரின் மனதையும் ஆக்ரமித்தது. நடந்த விசயங்களையும் மூவரும் பேசி புலம்பிக் கொண்டிருக்க அப்போது தான் வந்தாள் கீர்த்தி. அவளைக் கண்டதும் அனைவரின் மனதிலும் எரிமலை குமுறியது. ஆனால் சுதாரித்துக் கொண்டார்கள்.

அவளிடம் கோபத்தைக் காட்டினால் அவள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அவளை சாதாரணமாக வரவேற்றார்கள். ஆனாலும் அனைவரின் முகமும் ஒரு மாதிரி தான் இருந்தது.

கீர்த்திக்கோ தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து விட்டதோ என்ற பயம் இருந்தாலும் அதையும் மீறி அவர்களுக்கு தெரிந்திருக்காது. தெரிஞ்சிருந்தா இப்படி சிரிக்க மாட்டார்களே என்றும் எண்ணிக் கொண்டாள்.

வீட்டுக்குள் வந்தவள் “எப்படி இருக்கீங்க அத்தை?”, என்று நிர்மலாவிடம் கேட்டாள்.

பின் ஜானகி புறம் திரும்பி “வாழ்த்துக்கள் ஜானகி. கங்கிராட்ஸ் ரகு. என் கிட்ட உங்க கல்யாணம் விசயம் எப்படி சொல்லனு குற்ற உணர்ச்சில தானே எல்லாரும் இருக்கீங்க? பரவால்ல எனக்கு சந்தோஷம் தான். நான் உங்க ரெண்டு பேருக்கும் இடைல வர மாட்டேன். ஆனா ரகு எனக்கு ஒரு உதவி செய்யணும்”, என்று நல்லவள் போல கீர்த்தி பேச இப்போது அவள் நடிப்பு அனைவருக்கும் நன்கு புரிந்தது.

அவளே என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று பொறுத்திருந்தார்கள். ஆனால் ஜானகிக்கோ “இவ கிட்ட போய் ஏமாந்துருக்கோமே?”, என்று உள்ளுக்குள் குமுறியது. அவள் தலை முடியை பிடித்து வெளுக்க வேண்டும் என்று அவ்வளவு ஆசை.

“உனக்கு நாங்க செய்யாம யார் செய்வா கீர்த்தி? சொல்லு என்ன செய்யணும்?”, என்று கேட்டான் ரகு.

“வேற என்ன கேப்பேன்? எனக்கு ஒரு பத்து லட்சம் பணம் வேணும். என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும். கொஞ்சம் கொடுக்குறியா ரகு?”, என்று கேட்டாள்.

“இவ்வளவு நாள் எவ்வளவு பணம் கொடுத்து ஏமாந்துருக்கேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டான் ரகு. “எப்படி இவளால் வாய் கூசாமல் கேட்க முடிகிறது?”, என்று வியப்பாக பார்த்தார்கள் மோகனும் நிர்மலாவும்.

“கண்டிப்பா ரகு தருவான் கீர்த்தி. அவன் தரலைனாலும் நானே கொடுப்பேன். எனக்கே உன் கிட்ட எப்படி மன்னிப்பு கேக்கன்னு இருக்கு? உன் வாழ்க்கையை எடுத்துக் கிட்டோமேன்னு குற்ற உணர்வா இருக்கு”, என்று வருந்துவது போல ஜானகி பேச ரகு யாருக்கும் தெரியாமல் ஜானகியை முறைத்தான்.

“சே சே, என்ன ஜானு? அதெல்லாம் ஒண்ணும் இல்லை விடு. நாங்க பிரிஞ்சதுனால தானே நீ ரகுவை கல்யாணம் பண்ணிருக்க? அதனால நான் எதுவும் நினைக்கலை. இனி நீ ரகு கூட சந்தோஷமா இரு”, என்று கீர்த்தி புன்னகை அரசியாக சொல்ல அனைவரும் உள்ளுக்குள் பல்லைக் கடித்தார்கள்.

“சரி கீர்த்தி, பணம் ரெடி பண்ணிட்டு நான் உனக்கு தகவல் சொல்றேன். சரி சாப்பிடுறியா?”, என்று கேட்டான் ரகு.

“இல்லை ரகு நான் உடனே கிளம்பனும். அதான் உங்களை எல்லாம் பாத்துட்டேன்ல? நான் வரேன்”, என்று சொன்னவள் அப்படியே கிளம்ப போக “ஏமா கீர்த்தி, வந்ததுல இருந்து ஆதியை நீ கேக்கவே இல்லையே? நீ தானே மா அவனைப் பெத்த? உனக்கு அவன் மேல பாசமே இல்லையா?”, என்று தாங்க முடியாமல் கேட்டு விட்டாள் நிர்மலா.

“அப்படி எல்லாம் இல்லை அத்தை. என் மகனை என்னை விட நீங்க நல்லா பாத்துக்குவீங்க? இப்ப ஜானகி வேற இருக்கா? எனக்கு என்ன கவலை? அவன் நல்லா தான் இருப்பான். நான் வரேன்”, என்று சொல்ல “நீ எங்கயும் போக முடியாது கீர்த்தி”, என்றான் ரகு.

அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க “ஒரு சின்ன பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு கீர்த்தி. ஆதியை வேற ஒரு குடும்பம் கேக்குறாங்க. அதனால நான் ஒரு கம்ப்லைண்ட் கொடுக்கணும். அதுக்கு நீ இருக்கணும். நீ தானே அவனுக்கு அம்மா?”, என்று கேட்டான்.

“என்னது ஆதியையா? யாரு? எதுக்கு?”, என்று அவள் குழப்பமாக கேட்க “சுனில் வீட்ல இருந்து வந்தவங்க கேக்குறாங்க. இப்ப கூட அவங்க தான் தூக்கிட்டு போயிருக்காங்க. அவங்களுக்கு எப்படியோ உண்மை தெரிஞ்சிருக்கு”, என்று ரகு சொல்ல அதிர்ந்து போனாள். அவசரமாக அவள் ஜானகியை திரும்பிப் பார்க்க ஜானகியோ ரகு ஏன் இப்படி பேசுகிறான் என்று புரியாதது போல நின்றாள்.

கீர்த்தி ரகுவைப் பார்க்க “ஜானகிக்கு எதுவும் தெரியாது”, என்று சைகை செய்தான். அப்போது தான் கீர்த்திக்கு நிம்மதி வந்தது.

மனதுக்குள் பல விஷயங்கள் ஓடியது. “ரகு கிட்ட இருந்து பத்து லட்சம் தான் கிடைக்கும். இதுவே மகனுடன் சுனில் வீட்டுக்கு சென்றால் ஆஸ்தி அந்தஸ்து எல்லாம் கிடைக்கும்”, என்று மனதுக்குள் ஆசைப் பட்டவள் “நான் அவங்க கிட்ட பேசுறேன் ரகு? அவங்க நம்பர் இருந்தா சொல்லு. அவங்க கிட்ட பேசி ஆதியை நான் வாங்கித் தரேன். கோர்ட் கேஸ் எல்லாம் வேண்டாம்”, என்றாள்.

“ரொம்ப சந்தோஷம் கீர்த்தி. எப்படியாவது அவங்க கிட்ட பேசி ஆதியை வாங்கித் தா. இதோ அவர் நம்பர்”, என்று விக்ரம் சிங் நம்பரைக் கொடுத்தான்.

“சரி நான் பேசிட்டு ஆதியைக் கையோட கூட்டிட்டு வரேன்”, என்று சொன்ன கீர்த்தி தன்னுடைய பையை அங்கேயே வைத்து விட்டு சென்று விட்டாள்.

கீர்த்தி விக்ரமிடம் பேசுவதற்குள் ரகு அவனை அழைத்து கீர்த்தி அவனைப் பார்க்க வரப் போகும் தகவலை சொல்ல எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்ன விக்ரம் சிங் தன்னுடைய ஆட்களை வைத்து கீர்த்திக்கு மிகப் பெரிய தண்டனையை முடிவு செய்து விட்டான்.

கீர்த்தி அழைத்ததும் அதை எடுத்து யாரென்று கேட்டவன் அவள் சொல்லவும் அவளை தன்னுடைய வீட்டுக்கு வரச் சொன்னான். அவளுக்கு தான் தெரியுமே சுனிலின் வீடு. கீர்த்தியும் அங்கே சென்றாள். அவளை நல்ல முறையாக வரவேற்று பேசினான் விக்ரம் சிங்.

அவன் பிளான் தெரியாமல் “நீங்க சுனிலோட அண்ணனா?”, என்று கேட்டாள்.

“ஆமா, உனக்கும் சுனிலுக்கும் எப்படி பழக்கம்?”, என்று கேட்க எல்லாவற்றையும் சொன்னாள். அதுவும் சுனிலை அவள் உயிருக்கு உயிராக விரும்பியதாகவும் அவளை வீட்டில் கட்டாயப் படுத்தி ரகுவுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும் கூசாமல் பொய் சொன்னாள். அதற்கு பின் சுனிலை மறக்க முடியாமல் ரகுவிடம் டைவர்ஸ் வாங்கி விட்டு சுனிலையே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கதை சொன்னாள். அவள் கதையை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம்.

Advertisement